Sunday, February 26, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 11
30-1-17 இன்று பயணத்தின் கடைசி நாள்.
அதிகாலை குளிரில் கடற்கரையில் உலாவ சென்றேன்.
ஒரு செல்லக்குட்டி ஓடி வந்து மேலே விழுந்து, நமஸ்காரம் எல்லாம் பண்ணியது.
பெயர் என்னவென்றதற்கு ஓஜூ மாதிரி சொன்னார். நான் பீஜூ வா என்றதும் பதறி அடித்துக்கொண்டு இல்லே இல்லேன்னு அலறினார்.
அவர் அலறியதற்கு காரணம் சில நொடிகளில் புரிந்தது ;-)
காலை நேராய் கொனாரக் போய் சேர்ந்தோம். முன் மண்டபம் முழுக்க, நாட்டிய தாரகைகளின் வித விதமான சிலைகள்.
அப்படியே பார்த்துக்கொண்டு வந்தவள், எதிரில் தெரிந்த சூரிய கோவிலைப் பார்த்து அப்படியே நின்று விட்டேன்.
இப்படி ஒரு பிரமாண்டம், அழகு நான் எதிர்ப்பார்க்கவில்லை. சில நிமிடங்கள் எதுவுமே தோணாமல் அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
24 சக்கரங்கள் எண்ணற்ற பாலியல் சிற்பங்கள் , விசித்திரமான கோணங்களில், பார்த்துக்கொண்டு வந்ததில் இந்த சிலை கண்ணில் பட்டது.
புருஷன் சாமியாராய் போகிறான் போல, முதல் மனைவி போகாதே என்று கெஞ்சுகிறாள். சின்ன வீடு, வேட்டியை பிடித்து இழுக்கிறது- இது என் புரிதல் :-)
பன்னிரெண்டரை வரை அங்கேயே இருந்தோம்.
அங்கிருந்து மதிய உணவு முடிந்து பூரி ஜெகந்நாதரை தரிசிக்க மீண்டும் கிளம்பினோம். அங்கு தினமும் மாலை கொடியேற்றுவார்களாம் அதைப் பார்க்க.
நான் உள்ளே சந்நதிக்கு செல்லவில்லை ;-)
மெயின் கோபுரம் 214 அடி.எட்டு அங்குல உயரம். எந்த வித பிடிமானமும் இல்லாமல், நாளும் ஒரு ஆள் ஏறி பழைய கொடியை எடுத்துவிட்டு புது கொடியை ஏற்றுவானாம்.
என்னமோ மனம் முழுக்க பதைப்பதைப்பு. இதெல்லாம் தேவையா என்று. ஒரிசா புயலுக்கும், அதீத மழைக்கும் பிரபலம். அந்நேரம் என்ன செய்வார்கள்? வழுக்கி விழுந்தால் என்ன ஆகும்?
இன்சூரன்ஸ் எல்லாம் இருக்குமா என்று ஒரு வித ஒவ்வாமையுடன் பார்த்துக்கொண்டு பக்கத்தில் மாட்டியவர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்.
இன்னும் ஒரு ஆள் ஏறிக்கொண்டு இருந்தான். அவன் இடுப்பிலும் மூட்டை. முதலில் ஏறிய ஆள், ஏற்றியது பெரிய கொடிகள்.
இரண்டாவது ஆள், இடுப்பில் மூட்டையுடன் ஏறி அதே மூட்டையுடன் இறங்கினான். அந்த கொடியை வீட்டில் வைத்தால் மிக நல்லது, செல்வம் பெரும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா.....
ஒரிஜினல் கொடி, அரசியல், செல்வாக்கானவர்கள் வீடுகளுக்கு போகும், இந்த முக்கால் அடி டூப்ளிகேட் ( மத அபிமானிகள் மன்னிக்க) நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அங்கிருந்து கிளம்பி புவனேஸ்வர் வந்து, ரயில் பிடிக்க சென்றோம்.
24ம் தேதி இரவு கிளம்பி, 31 மாலை வீடு வந்தாச்சு. சில புதிய நண்பர்களை மறக்கவே முடியாது. தினமும் பஸ்ஸில் ஓரே சீட்டில் வந்த உஷா, சின்ன பிள்ளைகள் மாதிரி ஓர சீட்டுக்கு சண்டை, ஓடி வந்து ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, இடத்தை பிடித்தது. வயது மறந்துப் போனது.
நேரத்துக்கு நேரம் ஸ்னாக்ஸ் சப்ளை செய்த ராஜாராமன், என் ரூம் மேட் வசந்தா மேடம் என்று
சொல்லிக்கொண்டே போகலாம்.
மீண்டும் ரயிலில் சுவாமிநாதன் அவர்களின் குடும்பத்துடன் நன்கு பொழுது போனது.
யுக புருஷன் என்று புத்தனை சொன்னப்பொழுது,
மாமல்ல புரம் குகைக்கோவிலான ஆதி வராக மண்டப கல்வெட்டில் புத்தன் ஒன்பதாவது அவதாரமாய் குறிப்பிட்டு இருக்கிறது என்றார்.
தியாகராஜர், தினமும் பாடும் தீன ஜனாவன திவ்ய ராம கீர்த்தனையில் புத்தரும் வரார் என்று மாமி - திருமதி . சுவாமிநாதன் சொன்னார்.
31ம் தேதி பயணம் இனிதாய் முடிந்தது. கல்வெட்டு, தொல்லியல் எல்லாம் எனக்கு புதிய சப்ஜெட்டுகள். எனக்கு தந்த கையேட்டில் இருந்து மொழிப்பெயர்த்து போடுவதில் எனக்கு விருப்பமில்லை. அடுத்த பயணத்தில் ஒழுங்காய் நானே குறிப்பெடுத்து எழுத முயலுகிறேன். இன் ஷா அல்லா ;-)
- முற்றும்-

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்