அம்மா- வாழ்வதின் பெயர் வாழ்க்கை
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)
டோண்டு அவர்களை சமீபத்தில் (இந்த வார்த்தை என்னைப் போன்ற மூத்தபதிவர்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுக்க டோண்டு நினைக்க வைத்து விடும். )ஐந்துமாதங்களுக்கு முன்பு துளசி வீட்டு விசேஷத்தில் சந்தித்தேன், துளசிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை, டோண்டு என்றதும், என்ன ஆச்சு இவருக்கு என்று மாய்ந்துப் போனார். என்ன சார் உடம்புக்கு என்றதும் கேன்சர்! ஆபரேஷன் ஆயாச்சு, நான்கு லட்சம் ரூபாய் இதுவரை செலவாகியிருக்கு, ஆனால் ஆபரேஷனுக்கு பிறகான ரேடியேஷனும், கீமோதொரபியும் கொடுமையாய் இருக்கு என்றார் அவரால் அதிகம் பேச முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தவர், “ உங்க தைரியத்தை பாராட்டுகிறேன்” என்று ஆரம்பித்தார். நான் கொஞ்சம் முழிக்க, “ போலி டோண்டு பிரச்சனையில் கடைசியில் அவன் மன்னிப்பு கேட்டதும், மன்னிக்க மாட்டேன் என்றீர்களே அதைச் சொன்னேன் " என்றார். சட்டென்று மனசுக்குள் ஒரு ஆயாசம் . எத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் அந்த குப்பைகளை மனசில் போட்டு உழப்பிக் கொண்டு இருக்கிறாரே என்று தோன்றியது. அன்றைய மனநிலையில்,” சிலவற்றை என்றைக்கும் மன்னிக்க முடியாது என்று டோண்டு பதிவில் பதில் சொல்லியிருந்தேனாம். எனக்கு அவர் சொல்லும்பொழுதுகூட நினைவுக்கு வரவில்லை. அந்த ஆபாச தாக்குதலில் பெரும்பாலான பதிவர்கள் பாதிக்கப்பட்டனர். நானும் உட்பட அன்றைய பெண் பதிவர்கள் பெயரில் ஆபாச பதிவுகள் தொடங்கப்பட்டன. ஓரிரு பெண்பதிவர்கள் இணையத்தில் இருந்து விலகினர். மற்றவர்கள் வேதனைப் பட்டோமே தவிர, அதை பெரியதாய் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் டோண்டு சாரால் அதை மறக்கமுடியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னிடம் அதே விஷயத்தைஆரம்பிக்கிறார் என்றால், எவ்வளவு மனசில் போட்டு குழப்பிக் கொண்டு இருந்திருக்க வேண்டும்? ஓவர் ஸ்ரெஸ் புற்று நோய்க்கு ஒரு காரணமாக சொல்லுகிறார்கள். அறுபதுகளில் இருந்தவருக்கு மரணம் சீக்கிரம்தான். பல விஷயங்களை போகிற போக்கில் , தனக்கு சரி என்று தோன்றுவதை பட்டவர்த்தமாய் சொல்லிக் கொண்டு இருந்தவர், விவாதங்களுக்கு சளைக்காதவர், தடம் மாறினால் போடா ஜாட்டன் என்று சொல்லியதை இந்த விஷயத்திலும் மனப்பூர்வமாய் சொல்லியிருந்தால், இன்னும் வாழ்ந்திருக்கலாமோ என்று மனசு அங்கலாய்க்கிறது. மனித மனம் விசித்திரமானது, தமிழ் இணைய வாசகர் வட்டம் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறது டோண்டு சார் :-(
1 shop.co.in சென்ற மாதக்கடைசியில் ஒரு நாள் நாழிதழுடன் ஒரு விளம்பர துண்டு சீட்டு. நீங்கள் எப்படி பொருள்களை வாங்குகிறீர்கள் என்று. அதில் இருந்ததுதான் இந்த தலைப்பு. முயற்சி செய்துப் பார்க்கலாமே என்றுப் பார்த்தால், மாச மளிகை சாமான்களை வாங்க மிக மிக செளகரியமாய் இருக்கிறது இந்த இணைய மளிகை கடை 1 shop.co.in அந்த இணைய முகவரியில் பதிவு செய்ததும், பின் கோட் வைத்து, வீட்டு அருகில் இருக்கும் பெரிய கடையுடன் லிங்க் செய்து விடுகிறது. எனக்கு கிடைத்தது நீல்கீரீஸ்” நான் அந்த பக்கம் போகும்பொழுது அங்கும் சாமான் வாங்குவது உண்டு. அதனால் அங்கு விற்கும் பொருள்களின் தரம் பற்றி தெரியும், விலை நாம் வாங்கும்பொழுது பட்டியலில் வருவதால் அதைக் குறித்தும் குழப்பமில்லை. இதில் மிக மிக நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பொருளுக்கும், பல பிராண்டுகளின் விலைப்பட்டியலும் கணிணி திரையில் வருகிறது. நாம் விலையையும், தரமான பிராண்டையும் பார்த்து தேர்வு செய்யலாம். நாம் கடையில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்ப்பது இயலாத காரியம். வீட்டில் இருந்தே கணிணி மூலம் ஆர்டர் செய்யும்பொழுது, நேரமும் மிச்சமாகிறது. வேலையும் சுலபமாகிறது. வேறு ஏதாவது தேவையா என்று கடையில் இருந்து தொலைபேசியும் வருகிறது. அவர்களின் பட்டியலில் இல்லாததை அப்பொழுது சொல்லிக் கொள்ளலாம், நீங்களும் முயற்சி செய்துப் பாருங்களேன்.
நம் ஊருக்கு திரும்பியதும் நான் செய்ய நினைத்த வேலைகளில் ஒன்று, ஒரு டிரான்சிஸ்டர் வாங்க வேண்டும் என்பது. வழக்கமாய் தரமான, நியாயமான விலை கடை என்றால் என்னுடைய தேர்வு “விவேக்” தான். சரி வாங்கிடலாம் என்றுப் போனால், டிரான்சிஸ்டர் எல்லாம் வருவதே இல்லை மேடம் என்று வாயால் சொல்லிவிட்டு, எம் பி 3 பிளேயர், ஐபாட் என்று உலகமே முன்னேறிக்கிட்டு இருக்கு, இப்ப போய் டிரான்சிஸ்டராம் என்று கண்ணால் சொல்லி முடித்தான். சைனா மேக் கிடைக்கும் மேடம்என்று அவன் தந்த மேலாதிக்க தகவலை ஓரே வரியில் நிராகித்தேன். நாங்க எல்லாம் சைனா பொருள்களை வாங்குவதில்லை என்றேன் உறுதியுடன். டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டர் என்று அலைந்ததில், ஒரு மின்னணு கடையில், சோனி இம்போர்டட் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் ஆகும்என்றார். அங்கிங்கு சுற்றியதில் ஒன்றும் தேறவில்லை. சரி, அந்த சோனியே வாங்கி தொலைக்கலாம் என்று திரும்ப அந்த கடைக்கு நுழையும்பொழுதும் ஞானோதயம் ஏற்பட்டது, தானிக்கு தீனீக்கு பேர் ஏமி என்று இத பாருங்க மேடம், நூத்தி முப்பது ரூபாய் சைனா மேக் என்று அழகாய் கையடக்கமாய் காட்டிய ஒன்றை மீண்டும் தேடிப் பிடித்து கொள்கையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, அதே டிரான்சிஸ்டரை எடுத்து வந்தேன். ஆயிற்று, கடந்த ஒரு வருடமாய் இரவு காதோரம் பண்பலை 98.3 ரேடியோ மீர்ச்சியில் “நீங்க நான் ராஜா சார்” கேட்டுக் கொண்டே தான் தூக்கம். மற்ற அலைவரிசைகள் என்ன நிகழ்ச்சிகள் என்றுக்கூட பார்க்க தோன்றுவதில்லை. பதினென் வயதுகளில் மனம் கவர்ந்த பாடல்கள், அதை தாண்டி அன்றைய எம்.எஸவி க்கோ இன்றைய ஹாரீஸ், ரகுமான் இசையிலோ மனம் ஒன்ற மறுக்கிறது. நிகழ்ச்சி நடத்தும் செந்தில் அதீதஆங்கிலமும், அலட்டலும் இல்லாமல் இயல்பான பேசுவது நன்றாக இருக்கிறது. அதே சரவணன் மீனாட்சி ஈரோ! பல அற்புத பாடல்களை இன்று கேட்டும்பொழுது, ராஜா , மலேஷியா வாசுதேவனுக்கு பல அருமையான பாடல்களை பாட வாய்ப்பு தந்திருக்கிறார். போன வாரம் (23-8-2012)நண்டு படத்தில் வரும் “அள்ளி தந்த பூமி அன்னையல்லவா” கேட்டதும் மனசு அப்படியே பின்னோக்கி ஓடியது. இதைவிட அமைதியான , சுகமான தூக்கத்துக்கு மருந்து இருக்கா என்ன? வளையோசை கல கல வென என்று எஸ்பிபி ஆரம்பிக்க, “கொஞ்சம் பெரிசாய் வையேன்” என்று பக்கத்தில் குரல் கேட்டது. அமலா அந்தகால மனம் கவர்ந்தவ நாயகி, மலரும் நினைவு வந்திருக்கும் “ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு” லதா பாட அடிசக்கை பாடல் யாரு நம்ம வாலியாக்கும் பி.கு இளையராஜா ஸ்பெஷல் வானொலி இணையத்தில் கேட்க http://tunein.com/station/?stationId=166196 இணைப்பு அனுப்பிய பாலராஜன் கீதாவுக்கு நன்றி

