கொனாரக் மகாலஷ்மி - சிறுகதை
வலம் 3-2017 இதழில் வெளியான சிறுகதை
கொனாரக் மகாலஷ்மி
ஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு நாள் பயணம் என்பதால் லக்கேஜ்
அதிகமில்லை. சின்ன சூட்கேசை சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு நிமிரும்பொழுது,
“ எதுக்கு தனியாய் டிரெயின்ல போகணும், பேசாம பிளைட்டுலேயே போயிருக்கலாம் என்று முணுமுணுத்தவரை
பார்த்து,. “ நானூத்தி நாற்பத்தி நாலாவது தடவை இந்த ஒரு வாரத்தில் சொல்லியாச்சு” நான் சிரித்துக்கொண்டே
சொன்னதைக் கேட்டு ஒரு முறை முறைத்தார்.
யாரோ அழைப்பது கேட்டு
திரும்பினால் ஓய்வுப் பெற்ற அலுவலக சகா அசோக்.
‘” என்ன மேடம் எங்க
பயணம்” என்றவரை கணவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, புவனேஸ்வர்ல ஒரு கான்ஸ்பரன்ஸ். அதுதான் “ நான் முடிக்கும் முன்பு
“ நீங்க பிளைட்டுலேயே போயிருக்கலாமே, எலிஜீபிலிட்டி இருக்குமே” என்றதும், “ இவளுக்கு
ரெயில் ஜேர்ன்னிதான் பிடிக்கும் …” என்று ஆரம்பித்த
கணவரை , “ நீங்க கெளம்புங்க, “ என்றேன்.
சரி வரேன். ரொம்ப
சுத்தாதே, பார்த்து ஜாக்கிரதை என்று சொல்லி இறங்கவும், ரயில் கிளம்பியது.
எதிர் சீட்டிலேயே
திரு, திருமதி அசோக். சாப்பாட்டு மூட்டையை
ஜன்னல் ஓரத்தில் இரண்டு சீட்டுக்கும் நடுவில் இருந்த சின்ன மேடையில் வைக்க போனேன்.
அங்க வைக்காதீங்க.
ஸ்வாமி வைத்திருக்கேன், எங்க போனாலும் பூஜையை விட மாட்டேன் என்றார் திருமதி அசோக்.
அழகாய் டவல் விரித்து
வானிட்டி பேக் மாதிரி ஒன்று உட்கார்ந்திருந்தது. நான் என் சாப்பாட்டு மூட்டையை சீட்டில்
வைத்தேன்.
“ நா பிளைட்டுல போகலாம்ன்னு எவ்வளவோ சொன்னேன் இவர்
கேட்கல’ புலம்பலாய் ஆரம்பித்தாள் திருமதி அசோக்.
“இல்லே மேடம், குரூப்பா
புவனேஸ்வர், கல்கத்தா போறோம். நாம மட்டும் பிளைட்டுல போனா நல்லா இருக்குமா? இன்னைக்கு
நைட்டு கிளம்பினா நாளைக்கு நைட்டு போய் சேர்ந்திடலாம்”
கொஞ்ச நேரம் பழைய
நண்பர்களை பற்றி பேசிவிட்டு படுக்கையை பிரித்துப் போட ஆரம்பித்தனர்.
நான் ஜன்னல் வழியாக
பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். காதில் எம் பி 3 பிளேயரில் இளையராஜா.
திருமதி. அசோக் ஏதோ சொல்வதுப் போல் இருந்தது, ஹெட்
போனை எடுத்ததும்,
“ அது என்ன டிரெயின்ல
போவது ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க? திரும்ப
திரும்ப என்ன வர போகுது ‘ என்றவளிடம், “ பச்சை பசேல்ன்னு ஆந்திரா நெல்லு வயல், கோதாவரி,
சில்கா ஏரின்னு எனக்கு எத்தனை பார்த்தாலும் அலுக்காது” என்றேன்.
என்னமோ சரி என்பதைப்
போல தலை அசைந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், “கோதாவரின்னு ஒரு தெலுங்கு
படம். அதை பார்த்துல இருந்து கோதாவரி நதி இன்னும் பிடிச்சிப் போச்சு”
“ பக்தி படம் தானே?
நம்ப மாதிரி கிடையாது. ஆந்திரால பக்தி அதிகம்.
கோதாவரி நதிக்கரை கோவில்கள் ன்னு பக்தி மலர்ல
படிச்சிருக்கேன்.
“இல்லே இல்லே இது
சும்மா ஃபீல் குட் மூவி. கதை முழுக்க கோதாவரி நதியில் நடக்கும்.” என்றவள், அங்கத்தான்
ஹீரோவை மீட் பண்ணுவா என்பதை சொல்லாமல் விட்டு விட்டேன்.
“ சினிமா எல்லாம்
போறதேயில்லை. . என்னமோ இன்னைக்கு சிவராத்திரிதான்’
என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார் அந்த அம்மையார்.
விளக்குக்கள் அணைந்தன. ஜன்னல் ஓர இருக்கை. இருட்டில் தூரத்தில் தெரியும்
வெளிச்ச புள்ளிகள். இதமான ஏசி குளிர். காதில் எஸ்.பி.பி “ இது மெளனமான நேரம்’ என்று
குழைய ஆரம்பித்தார்.
தாலாட்டு போல ரயில்
ஆட்டத்தில் நல்ல தூக்கம். ஏதோ கோவில் மணி சத்தம் , பாட்டு சத்தம் கேட்டது,
கண்விழுத்துப் பார்த்தால்
நடு நாயகமாய் திருமதி. அசோக், வானிட்டி பேகுக்கு தீபாரதனை காட்டிக்கொண்டு இருந்தாள், சுற்றிலும் ஏழெட்டு
பேர்கள்.
மெல்ல எழுந்து பல்
தேய்த்துவிட்டு வந்தால், உலர் பழங்கள் பிரசாதமாய் கிடைத்தன.
“ பர்ஸ்ட் ஏசில
குளிக்க நல்ல வசதி. டவல், சோப் எல்லாம் தராங்க. எங்க குரூப் ஆளுங்க அங்கேயும் ரெண்டு
பேர் இருக்காங்க, குளிச்சதால் பூஜை பண்ண முடிந்தது” என்றார் மாமி பெருமையாய்!
மூன்றாம் வகுப்பு ஏசியில் பஜனை நடக்கிறது என்று கிளம்பி போனவர் ஒரு
மணி நேரத்தில், ஒரு நாலைந்து பேருடன் வந்தார்.
ஒரு வர் கையில்
இருந்த லேப் டாப்பை சீட்டில் வைத்தார். ஜன்னல்
சீலைகள், பர்த் சீலைகள் இழுக்கப்பட்டு இருட்டாக்கப்பட்டது.
முந்தின நாள் சீரியல்கள் ஓட தொடங்கின. நல்லவேளையாய்
சைட் பர்த் ஆசாமியும் எட்டிப் பார்க்க , அவரை
என் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு, வெளியே
அவர் இடத்தில் அமர்ந்தேன்.
நானும் ஜன்னல் ஓர காட்சிகளில் , இளையராஜாவுடன் ஐக்கியம்
ஆனேன்.
மறுநாள் முழுக்க
கான்ஸ்பரன்ஸ் ஓடியது. அடுத்த நாள் காலை பத்து
மணிவாக்கில் பல நாள் கனவான கொனாரக் போய் சேர்ந்தேன். முன் மண்டபம் தாண்டி போனதும் திரை
விரிந்தது போல பிரமாண்டம். அப்படியே வாய் அடைத்துப் போனேன். முன் மண்டபம் முழுக்க நாட்டிய நங்கைகள். வித வித
போஸ்கள். மெயின் சூர்ய தேவன் கோவில் முழுக்க
திருக்குறளின் மூன்றாவது பால். கொனாரக்கின் பிரபல சூரிய சக்கரங்கள்.
எது கை, கால் என்று தெரியாமல் ஒரு அற்புத சிலை.
பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது, எப்படி மேடம் இருக்கீங்கன்னு திருமதி.அசோக் அருகில் வந்து சிலையை கூர்ந்து நோக்கியவள், மகா
லஷ்மி என்று தொட்டு கும்பிட்டாள்.
மகா லஷ்மிக்கும்
இந்த போஸ்க்கும் ஒரு ஒற்றுமை கூட என் கண்ணில் படவில்லை. முணங்கலாய், ‘ இது மகா லஷ்மி
இல்லேயே” என்று சொன்னேன்.
‘’ நீங்க வெளி மண்டப
சிற்பங்கள் பார்த்தீங்களா, ரெண்டு கை , ரெண்டு கால் இருக்கும். அதெல்லாம் நம்ம மாதிரி
சாதாரண மனுஷனுங்க. இங்கப்பாருங்க, நாலு கை , சுவாமி சிலைன்னா இப்படித்தான் கைங்க இருக்கும்”
என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது அவங்க குரூப் ஆளுங்க போல நாலைந்து பேர் வர , திருமதி அசோக்
,” மகா லஷ்மி” சிலையை காட்டினாள். சில பெண்கள்
பக்தியுடன் தொட்டு கும்பிட ஒரு மாமா மட்டும்
டவுட் கேட்க, அதிக கையிருந்தால் ஸ்வாமி சிலை என்று எடுத்துச் சொன்னாலும், அந்த மாமா
எந்த உணர்வும் காட்டாத முக பாவத்துடன் சட்டென்று இடத்தை விட்டு நகர்ந்தார்.
அதே சமயம், நாலு
வட நாட்டு பெண்மணிகள் வந்ததும், அதே மகாலஷ்மி புராணம் ஓட்டை ஹிந்தியில் சொல்லப்பட்டது.
பய பக்தியுடன் கைகளை உயர தூக்கி அவங்க பாணியில் வணங்க தொடங்க, வெடித்து வரும் சிரிப்பை
கஷ்டப்பட்டு வேகமாய் இடத்தை விட்டு அகர்ந்தேன்.
செல் அடித்தது. எடுத்தவுடன் சிரிக்க தொடங்கினேன்.
என்ன விஷயம் என்றுக்
கேட்டவரிடம் “இங்கே ஒரு
Erotic pose. கை எது கால் எங்கேன்னு தெரியலை எங்கூட டிரெயினில் வந்தாளே, மிஸஸ் அசோக், அவ வந்து
ஒரு சிலையை பார்த்து மகா லஷ்மின்னு கன்னத்துல
போட்டுக்கிறா, அதுக்கு ஒரு எக்ஸ்பிளனேஷன் தந்தா பாருங்க,… முடிக்க முடியாமல் சிரிக்க
தொடங்கினேன்.
நீ சொல்லுவது எதுவும்
புரியலை. ஒண்ணு சிரிச்சிட்டு சொல்லு, இல்லே சொல்லிட்டு சிரி’ என்றார்.
விளக்கமாய் சொன்னதும்,
பாவம் விடு, ‘ Ignorance is bliss.என்றார்.
ஆமாம், இந்த இன்னெசெண்டும்
அழகுதான். எந்த வித கேள்வியும் மனசுல வராம அப்படியே ஏத்துக்குவதும் ஒரு கிப்ட்தான். தொந்தரவு இல்லை பாருங்க”
உன்ன மாதிரியா கண்டதையும்
படிச்சிட்டு மூளைய குழப்பிக்க வேண்டியது, சரி சரி கிளம்பு,
மணியாச்சு, இப்ப கிளம்பினா சரியா இருக்கும்,’
என்றவரிடம்,
வாட்ஸ் அப்புல அந்த
படம் அனுப்புறேன், பாருங்களேன்.
வேணா வேணாம், கேமிரா கொண்டு போனே இல்லே, அந்த மகாலஷ்மி நானும்
தரிசிக்கிறேன். குளோசப் நாலு எடுத்துக்கிட்டு
வா, கை கால் எங்கேன்னு கண்டுப்பிடிக்கலாம், நாமும் டிரை பண்ணலாம் “ என்றதும்,
“ அய்யே போதுமே,
வைங்க போனை ‘ என்றேன்
****************************
ராமசந்திரன் உஷா
சென்னை
0 பின்னூட்டங்கள்:
Post a Comment
<< இல்லம்