Friday, October 14, 2005

கடவுள் என்னும் வியாபார பொருள்!

சென்னையில் இருந்தப் பொழுது இலவச யோகா வகுப்பு என்ற விளம்பரத்தைப் பார்த்து நானும், என் கணவரும் சென்றிருந்தோம். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து சென்று வந்தோம். பிறகு அந்தபக்கம் கும்பிடு. பிறகு பிரபல பத்திரிக்கை புகழ் இன்னொரு யோகா மையத்துக்கு முதல் நாள் இலவச வகுப்புக்கு போய் வந்தோம். என் கணவர் உடல் இளைக்க ஏதாவது அதிசயம் நடக்குமா என்றும் நான் வழக்கப்படி நான் வேடிக்கை பார்க்க மற்றும் கம்பனி கொடுக்க!

இப்ப இங்க கொஞ்சம் வெயிட்டீஸ்!

துபாயிலிருந்து இந்தியா வந்ததும், நேராக குஜராத் போனோம். சென்ற அன்றே, ஊர் சுற்றும் போது வழியில் ஒரு கோவிலை பார்த்து விட்டு கோவிலுக்கு போய் எவ்வளவு நாள் ஆச்சு என்று பக்தி பரவசத்துடன் என் கணவர் உள்ளே செல்ல, நாங்கள் மூவரும் கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்தியம்பிவிட்டு, படியில் உட்கார்ந்து விட்டோம். வேறு ஒன்றுமில்லை, சின்ன கோவில், சோம்பல்தான்! எனக்கு பழைய
கோவில்தான் பார்க்கப் பிடிக்கும்.

போன வேகத்தில் திரும்பி வந்தவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே? என்ன என்று கேட்டால், யாரோ சாமியார் கோவில் போல இருக்கு அவரோட பிரமாண்ட சிலை மட்டும்தான் உள்ளே இருந்ததாம். வேறு சாமியே இல்லையாம். அக்ஷர்தாம் ஞாபகம் இருக்கா? ரெண்டு வருடம் முன்பு, தாக்குதல் நடந்ததே, அங்கும் அதே கதைதான்! இவைகளை கோவில் என்று சொல்ல முடியாது.

மவுண்ட் அபுவில் பிரம்மகுமாரிகள் சங்கம் மற்றும் சென்னையின் யோகா வகுப்பு. அனைத்திலும் கண்ட காட்சிகள், பதினெட்டு வயதில் இருந்து ஆரம்பித்து சிறு வயது ஆண்களும் பெண்களும் அனைத்து வேலையும் செய்கிறார்கள். கழுத்தில் துளசி மாலை அல்லது ருத்திராட்சம், நன்கு எண்ணை அல்லது ஜெல் தடவி வாரிய தலை முடி. தூய வெள்ளையுடை. மெல்லிய மெஸ்மரிச குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் சரளமான ஆங்கிலம். இந்த தகுதியை அனைத்து இடத்திலும் கவனிக்க முடிந்தது.

ஞானம் தேடியா அல்லது படிப்பு மற்றும் குடும்ப பொறுப்பு மற்றும் வேலைகளை தட்டி கழிக்க எடுத்த முடிவா? கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயிறு எப்படி எரியும்? சென்னையில் கண்ட யோக மைய நிறுவனர் இப்படி இளைஞர்களை தன் வயப்படுத்துகிறார் என்ற குற்றசாட்டு ஒருமுறை ஜூ.வியில் வந்தது.

பல ஆன்மீக செண்டரிலும் அனைத்து எடுபிடி வேலைகளை செய்வது இளைஞ, இளைஞிகள்தான். இதைவிட கொடுமை இந்த ஆன்மிக குருக்கள் காலில் விழும் பக்தர்கள். காவியுடையில் ஜூனியர் சாமியார்கள் நடந்து வர, வயதானவர்கள் முட்டி போட்டுக் கொண்டு அவர்களின் கால்களை தொட்டு கும்பிடுவது, பார்க்க அருவருப்பாய் இருந்தது. அதை வேண்டாம் என்று சாஸ்திரத்திற்கு சொல்ல கூட அந்த ஆன்மீக குஞ்சுகள் தயாராய் இல்லை.

இதற்கு முழு காரணம் நம் வணிக பத்திரிக்கைகள் என்று குற்றம் சாட்டுவேன். இன்று அனைத்து பத்திரிக்கைகளும் இந்தகைய ஹைடெக் சாமியார்களுக்கு விளம்பரம் தருகிறார்கள்- இலவசமாகவா என்றால் எனக்கு தெரியாது. இப்படியும் ஒரு சாமியார் இருக்கிறார், அவர் இருக்கும் இடம், அவரால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்று எல்லாம் விலாவாரியாய் சொல்லப்படுகிறது.

பிறகு அவரால் நன்மை அடைந்தவர்கள், தங்கள் பெற்ற பலன்களை அடுக்குவதால், எத்தை தின்றால் பித்தம் தெளியும், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் மறந்துவிட்டு என்று ஓடுகிறார்கள்.

ஆன்மீகம் இன்று நாட்டில் தழைத்து ஓங்கி வளர்ந்துள்ளது என்று யாரோ சொன்னார்கள். இவை உண்மையில் ஆன்மீகம் வளர்க்கிறார்களா கடவுள் என்ற பண்டத்தை விற்று காசாக்குகிறார்களா?

இந்த இடத்தில் திருநெல்வேவி படத்தில் விவேக் சொன்ன வசனத்தை ஞாபப்படுத்திக் கொள்ளுங்கள்.

12 பின்னூட்டங்கள்:

At Friday, 14 October, 2005, சொல்வது...

உங்க வலைப்பதிவிற்கு பொருத்தமா 'நுனிப்புல்' பெயர் வச்சிருக்கீங்க.

 
At Friday, 14 October, 2005, சொல்வது...

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமரன்

 
At Saturday, 15 October, 2005, சொல்வது...

குமரனுக்கு என்ன கோபம் இந்த பதிவைப் பொறுத்தவரை? புரியவில்லையே...! ஏதும் மடாதிபதி இல்லையே?

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

தருமி, நான் சொல்ல வந்தது இளம் வயதினரின் உழைப்பை, ஆன்மீகப் போர்வையில் இலவசமாய் பெறுகிறார்கள் என்றேன். நான் ஆதாரத்துடன் சொல்கிறேன். இல்லை என்கிறாரா குமரன்? ஆன்மீகம் என்பது இள வயதினருக்கு பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்ளும் வழியாய் நான் பார்த்தேன்.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

"இலவச யோகா வகுப்பு என்ற விளம்பரத்தைப் பார்த்து நானும், என் கணவரும் சென்றிருந்தோம். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து சென்று வந்தோம். பிறகு அந்தபக்கம் கும்பிடு"

கோவிக்காதீர்கள் சகோதரி....எங்கயோ இடிக்கிறதே....இலவச உழைப்பு சுரண்டலை பற்றி ஆதங்கப்படுவதற்கு முன் நீங்கள் கொஞ்சம் சுய சோதனை செய்து கொண்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

நாங்கள் சென்றது யோகாவைப் பற்றி தெரிந்துக் கொள்ள மட்டுமே! ஆனால் அங்கு வேலை செய்யவோ, மன்றத்தில் இணைந்து சொந்த வேலைகளைப் பொறுப்புகளை மறக்க அல்லவே? எனக்கு நாத்திக கொள்கையில் நம்பிக்கையிருந்தாலும், ஆஸ்திக சம்மந்தமான புத்தகங்களையும் தேடி படிக்கிறேன்.
இங்கு நான் என்றும் கடவுள் நம்பிக்கையையும், ஆன்மீகத்தை அறிந்துக் கொள்வதையும் தவறு என்று சொல்லவில்லை.
சில மடங்களில் கல்யாணம் ஆகி, லெளகீத வாழ்க்கையை அனுபவித்தவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள். பொறுப்பில் இருந்து விடுபட ஆன்மீகம் இல்லை. குறிப்பாய் படிக்கும் வயதில் இருப்பவர்களை பார்த்தப் பொழுது எழுந்த எண்ணம் இது.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

எனக்கு எந்த கோபமும் இல்லை. இடுகையின் தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு அநியாயத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த இடுகை எழுதியிருக்கிறாரோ என்று எண்ணி இங்கு வந்தால் மேலோட்டமாக ஏதோ ஒன்றை எழுதியிருக்கிறார். அப்போது தற்செயலாய் பதிவின் தலைப்பு 'நுனிப்புல்' என்று இருப்பதைப் பார்த்தவுடன் நகைச்சுவையாய் இருந்தது...அதான் அந்த கருத்தை (பின்னூட்டத்தை) எழுதினேன்.

தருமி, நான் இன்னும் மடாதிபதி ஆகவில்லை. அப்படி ஆனால் முதலில் நம்ம ஊர்க்காரரான உங்களை குட்டி மடாதிபதியாய் சேர்த்துக் கொள்கிறேன்.

சதயம் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன்.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

சகோதரி தன் எண்ணங்களைப் பற்றி எழுதியுருக்கிறார். அது அவர் உரிமை. என் கருத்து அதை தாக்குவதாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

சகோதரி தன் எண்ணங்களைப் பற்றி எழுதியுருக்கிறார். அது அவர் உரிமை. என் கருத்து அதை தாக்குவதாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

வசூல் ராஜா MBBSல ஒரு வசனம்:

"கடவுள் இருக்குன்றான் பாரு அவனை நம்பலாம்.

கடவுளே இல்லைன்றான் பாரு, அவனையும் நம்பலாம்.

ஆனா நான் தான் கடவுள்ன்றான் பாரு, அவனை மட்டும் நம்பவே நம்பாதே."

இது மட்டும் தெளிவாயிட்டா, ஆன்மிகத்துல பிரச்சனையே இல்லை. ஆனா அதை மக்களுக்கு தெளியவெக்கறதுதான் தண்ணில விழுந்த வத்திப்பெட்டில நெருப்புக்குச்சி கிழிக்கற மாதிரி கஷ்டமா இருக்கு. அது தெளியறவரைக்கும் மக்கள் அடுத்த மனுஷன் கால்ல விழுந்துகிட்டே தான் இருப்பாங்க. :(

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

சுந்தரின் பதிவில் ' சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' பற்றிய கடைசி பாரா மிகவும் பிடித்திருந்தது. அந்த வரிகள் இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

http://mynose.blogspot.com/2005/10/blog-post_15.html

>>>>>>
" துறவு என்பது எல்லாவற்றையும் விட்டு விலகி ஓடுவதல்ல. எல்லாவற்றையும் அணைத்துக் கொள்வது என்றார் சுவாமி. அவன் தடேரென்று காலில் விழுந்தான் '' என்று மாலன் எழுதின கதையின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன படத்திதை பார்த்து விட்டு.
>>>>>>>>.

- அலெக்ஸ்

 
At Tuesday, 18 October, 2005, சொல்வது...

ஜெயஸ்ரீ, முதல் போன வகுப்பில் நடுத்தரவயது குரு(!) காவியுடையிலும், பட்டுபுடைவையில் மனைவியுடன் வந்திருந்தார். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அவர் காலில் விழுந்தார்கள். அவரும் எல்லாருக்கும் ஆசி கூறினார்.
அடுத்த வகுப்பு, முதல்நாள் இலவசமே தவிர பதினைந்து நாள் கட்டணம் வகுப்பு. ஆனால் அதுவும் உபயோகம் இருப்பதுப் போல தோன்றவில்லை. ஆனால் இன்னும் ஒழுங்காய் யோகா, ஆசனங்கள் கற்றுக் கொள்ள விருப்பம்தான்.
அலெக்ஸ், தருமி, குமரன், சதாயம், ஜெயஸ்ரீ, அலெக்ஸ் வருகைக்கு நன்றி
இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் இளவயதினரை மூளைசலவை செய்யும் ஆன்மீக இயக்கங்களின் சுயநல போக்கு.

 

Post a Comment

<< இல்லம்