Saturday, October 15, 2005

சுந்தர ராமசாமியும் என் வீட்டு பெண்களும்!

அந்த அம்மாளுக்கு அறுபது கடந்திருக்கும், மற்ற இரண்டு பெண்கள் முப்பதுகளில் இருந்தனர். பொது நூலகத்தில் இருந்துக் கொண்டு வந்த அந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு வரி வரியாய் படித்து அலசிக் கொண்டிருந்தனர். நகைச்சுவை பகுதியை வாய்விட்டு படித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

எழுதியவர் யார் என்று அறிந்துக் கொள்ள அவர்கள் முயற்சிக்கவில்லை. அவர்கள் சாதாரணமாய் வீட்டில் அடங்கி கிடக்கும் பெண் வர்க்கம். எழுத்தாளர் யார் என்று பார்த்து எழுத்தை விமர்சிக்கும் அறிவுஜீவிகள் இல்லை. அவர்கள் என் பாட்டி, என் அம்மா,என் சின்ன அத்தை. என்றாவது என் அப்பா மனம் உவந்து செண்ட்ரல் லைப்ரரி என்று அழைக்கப்பட்ட "தேவநேயபாவாணர்" என்ற மத்திய நூலகத்தில் இருந்து கையில் கிடைக்கும் தமிழ் நாவலை கொண்டு வருவார்.

அவர்கள் அதிசயித்து, பாராட்டி பேசிய ஒவ்வொரு வரிகளும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது எனக்கு கோகுலம், ரத்தினபாலா, முத்துகாமிக்ஸ் படிக்கும் வயது. பிறகு அந்த புத்தகத்தை தேடிப் படித்து வியந்தப் பொழுதும், எனக்கும் எழுத்தாளரை அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழவில்லை. பொது நூலகத்தில் கிடைக்கும் புத்தகம் மட்டுமே படிக்க முடியும்.

எழுத்தாளர் பெயர் சொல்லி வேறு புத்தகம் இருக்கிறதா என்றுக் கேட்டால், நூலகரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். காசு கொடுத்து புத்தகம் வாங்குவது எல்லாம் பழக்கம் இல்லை. கதை ஞாபகம் இருந்ததே தவிர எழுத்தாளர் பெயர் சுத்தமாய் மறந்து விட்டேன்.

இணைய நட்பு உருவாகி, சில படிப்பாளிகளின் அறிமுகமும் கிடைத்தப் பிறகு புத்தகங்களைப் பற்றி அவர்கள்
கதைக்க, எனக்கு படித்த ஞாபகம் வந்தது. அதிலும் குழப்பம்! ஒரு புளிய மரத்தின் கதை என்ற பெயரைக் கேட்டதும், சா. கந்தசாமி எழுதிய புளியமரங்களை வெட்டும் சாயாவனம்- அதுதான் ஒரு புளியமரத்தின் கதை என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகுதான் தெரிந்தது வாசிக்க மட்டும் தெரிந்த அந்த பெண்கள் படித்து பாராட்டியது சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய "ஒரு புளிய மரத்தின் கதை" என்ற நாவலை!

ஜே.ஜே.சில குறிப்புகள் வாங்கி வைத்தேனே தவிர, பத்து பக்கங்களுக்கு மேல் உள்ளே என்னை சுந்தர ராமசாமி அனுமதிக்க மறுத்துவிட்டார். அப்பொழுது இராமு, மதியும் புத்தகவாசம் ஆரம்பித்து, நாவலை படிக்க வைத்தார்கள். இவ்விரண்டு புத்தகம் போல் இல்லாமல் "ஆண்கள், பெண்கள், குழந்தைகள்" நாவல் -ஒரு குடும்பத்தின் கதை. ஒரு புளிய மரத்தின் கதை ஒருவிதமாய் எழுதப்பட்டது என்றால் ஜே.ஜே.சில குறிப்புகள் இன்னொரு வகை. "அ. பெ. கு" படிக்க சாதாரண வாசிப்பு அனுபவம் போதும். இதைத் தவிர சிறுகதை தொகுப்பு. அதில் உள்ள சில கதைகள் நாவலில் சம்பவமாய் வருகிறது.

தமிழ் படிப்பவர்கள் இருக்கும் வரை திரு.சுந்தர ராமசாமி இவ்வுலகில் வாழ்ந்துக் கொண்டு இருப்பார்.

பி.கு எழுத்தாளரின் மரண செய்தி, என் இறந்துப் போன புத்தக புழுவான பாட்டியின் நினைவையும் சேர்த்து துக்கத்தில் ஆழ்த்திவிட்டது.

2 பின்னூட்டங்கள்:

At Saturday, 15 October, 2005, சொல்வது...

நானும் இவரது புத்தகங்கள் ஒண்ணும் இதுவரை படிக்கலை உஷா.

இனிமேத்தான் தேடணும்.

ஆனால் இங்கே( தமிழ்மணம்) வந்தபிறகு கொஞ்சம் அவரைப் பத்தித் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

 
At Sunday, 16 October, 2005, சொல்வது...

துளசி, "ஒரு புளியமரத்தின் கதை" முதலில் படித்துப் பாருங்கள். தங்கமணி, சுந்தரமூர்த்தியின் பதிவுகளைப் பார்த்த பிறகுதான் சு.ராவின் கட்டுரைகளை வாங்க வேண்டும் என்பது தெரிந்தது.

 

Post a Comment

<< இல்லம்