Thursday, July 20, 2006

புத்தக உலகில் நான்

இந்த தலைப்பு சரியா என்ற சந்தேகத்துடனேயே ஆரம்பிக்கிறேன். அதீத படிப்பு ஆர்வம் காரணம், புத்தகங்களை (வேறு என்ன கதை புத்தங்களைத்தான் சொல்கிறேன்) தேடி தேடி படித்துக் கொண்டிருந்த எனக்கு, அவைகளை எழுதும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாது. தெரிந்த பெயர்கள் எல்லாம் ஆவி, குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் எழுதும் வெகுஜன எழுத்தாளர்கள் பற்றிய விவரம் மட்டுமே! சுஜாதா வளர்க்கும் நாய்குட்டியின் பெயர், விமலாரமணி எங்கு பட்டுபுடைவை வாங்குவார் போன்ற பொது அறிவுவை வளர்க்கும் விஷயங்கள் அவ்வப்பொழுது கண்ணில் படும்.

சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் நுழைந்ததும், பல எழுத்தாளர்களின் பெயர்கள் அறிமுகமாயின. பாக்கியம் ராமசாமிக்கும், சுந்தர ராமசாமிக்கும் வித்தியாசம் தெரிந்தாலும். என்றோ படித்த "ஒரு புளியமரத்தின் கதை" புத்தகத்தை எழுதியது சா. கந்தசாமி என்று நினைத்திருந்தேன். காரணம் சா.க எழுதிய "சாயாவனம்" புத்தகத்திலும் புளியமரம் வரும் . வண்ணதாசன், வண்ணநிலவன் வேறு வேறு. வ.தாசன் எந்த புனைப்பெயரில் கட்டுரை எழுதுகிறார், கவிதைகள் படைக்கிறார் போன்ற விஷயங்களும் தெரிய வந்தன.

இப்படி இருக்க, புத்தகங்களின் ஒருபக்கம் முதல் ஏழெட்டுப்பக்கம்வரை போகும் முன்னுரை என்று உண்டல்லவா! அதையெல்லாம் இவ்வளவு நாட்கள் கண்டுக்காதவள், பெயர் அறிமுகக்காரணத்தால், யார் முன்னுரை எழுதுகிறார்கள் என்றுப் பார்த்து, அவைகளை ஊன்றி படிக்க ஆரம்பித்தேன். அதில் தெரியும் அரசியல் சுவையாயிருக்க, (பாலிடிக்ஸ்) சில சமயம் புத்தகத்தின் ஊள்ளீட்டை விட இவை நன்றாக இருந்தன.

சரி கதைக்கு வரேன். ஒருமுறை இணையத்தில் சிலாகிக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு ஒன்று கிடைத்தது. படிக்க ஆரம்பித்ததும் ஆச்சரியத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஆனால் சில நாளிலேயே, இவருக்கு அவர் அதே மாதிரி எழுதியதைப் படித்ததும் எல்லாமே புரிந்துப் போனது.

பிறகு எந்த புத்தகம் கிடைத்தாலும், முதலில் முன்னுரை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. ஏறக்குறைய ஒரு ஆராய்ச்சியைப் போல முன்னுரையைப் படிக்க ஆரம்பித்ததில் பல விஷயங்கள் தெளிவாய் தெரிய வந்தன. ஓரளவு வளர்ந்துக் கொண்டு இருக்கும் என்னைப் போல, பல வளரும் எழுத்தாளர்களும் நாளை தங்கள் படைப்புகளை புத்தகமாய் கொண்டு வர முயற்சிக்கலாம். அவர்களுக்கு ஒரு கையேடு போல என் ஆராய்ச்சியின் முடிவை சுருக்கமாய் சொல்கிறேன்.

முதல்வகை - மிக பிரபலமானவர்களிடமிருந்து முன்னுரை வாங்குதல். இது சுலபமான காரியம் இல்லை. ஏதோ பல காரணங்களால் அவர் முன்னுரை எழுதிதந்தாலும், அது தரும் தாக்கத்தின் பலன் விபரீதமாக இருக்கவும் நேரிடலாம். வேறு என்ன? புத்தக விளம்பரத்தில் இன்னார் எழுதிய முன்னுரை என்று விளம்பரப்படுத்தினால், அனைவரும் முதலில் முன்னுரையைப் படித்துவிட்டு, மேற்கொண்டு முன்னேறுவார்களா என்று யோசித்துப் பார்க்கவும். அதைத் தவிர தன் சொந்த கதையை எழுதிவிட்டு, கடைசியில் ஒருவரி உங்களை பற்றி இருக்கும். கவனிக்க, உங்க எழுத்தைப் பற்றி அல்ல. பாவம் அவரும் என்ன செய்வார்? தினம் நாலு பேர்கள் இப்படி உபத்திரவம் செய்தால்? ஆனால் ஒன்று உங்கள் படைப்புகளை நீங்கள் யாருக்கு (வேறு என்ன ஓசியில்தான்), இன்னார் முன்னுரை வழங்கியிருக்கிறார் என்று சொல்லிவிட்டுக் கொடுத்தால், உங்கள் படைப்புகளைப் படிக்காமலேயே உங்களின் மீது அவர் வைத்த மதிப்பு உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இரண்டாவது வகை - ஓரளவு பிரபலம் ஆனவர். இவர் பரவாயில்லை. பொதுவாய் சில வழிமுறைகளை அவர் கையாளுவார். சமீபத்தில் எந்த எந்த வெளிநாட்டில் நடந்த மாநாட்டில் கலந்துக் கொண்டதில் இருந்து, தனக்கு இவ்வருடம் கிடைத்த விருதுகள் போன்ற சுயபுராணங்களைப் பாடி விட்டு, கடைசி பாராவில் உங்களைப் பார்த்ததும் உங்கள் அறிவின் விலாசம் புரிந்தது. இத்தகைய தமிழின் பால் ஆர்வமுள்ள இளைய தலைமுறை தமிழ் இலக்கிய உலகிற்கு அவசியம் என்று நான்கு வரிகள் எழுதியிருப்பார். கவனிக்க உங்கள் எழுத்தை பற்றி எதுவும் இருக்காது என்பது பூடகமான உண்மை.

மூன்றாவது வகை - இது நீங்கள் புதுமுகம் என்றால் உங்களைவிட ஒரு படி மேலே இருப்பவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். சும்மா சொல்லக்கூடாது, உங்கள் எழுத்தின் வீச்சை, ஒவ்வொரு வரியில் நீங்கள் சொல்லிய, அதாவது சொல்லியதாய் அவரே கண்டறிந்து அதை விலாவாரியாய் விளக்கியிருப்பார். நீங்களே அசந்துப்போகும்படி முன்னுரை பின்னியிருப்பார். உங்களின் எழுத்து ஆளுமையைப் பற்றிய புதிய புரிதல் உங்களுக்கே ஏற்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதில் இன்னொரு செளகரியமும் உண்டு. ஒருவேளை புத்தகத்தை விலைக் கொடுத்து வாங்கி படித்தவருக்கு, நீங்கள் எழுதியவைகள் மீது அவருக்கு உண்டாகும் தாக்கத்தைவிட, முன்னுரை எழுதினாரே அவர் மீதுதான் அதிகம் வரும். இதிலும் ஓரே ஒரு பிரச்சனை. நாளை இதேப் போல அவரின் அமரகாவியத்துக்கு நீங்கள் முன்னுரையோ அல்லது விமர்சனமோ எழுத வேண்டிய நிலைமை வரும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

இவை முக்கியமான உதாரணங்கள். இன்றைய உலகில் சரக்கின் மதிப்பு, விளம்பரத்தாலேயே கூடுகிறது என்பதையும் யாரும் மறந்து விடாதீர்கள்.

http://www.tamiloviam.com/unicode/main.asp

8 பின்னூட்டங்கள்:

At Thursday, 20 July, 2006, சொல்வது...

இதை படித்தபிறகு - முன்னுரையே இல்லாமல் ஒரு புத்தகம் போட்டால் என்ன என்று தோன்றுகிறது...

:))

 
At Thursday, 20 July, 2006, சொல்வது...

ரவி, நையாண்டி/ நகைச்சுவைக்கு எழுதப்பட்டது. ஒரு நாவல், அதை வைத்து பி.எச்.டி செய்வர் செய்த ஆய்வறிக்கை, முப்பது பக்கம் இருக்கும் முன்னுரையாய் போட்டிருந்தார்கள். ஆனால் சுஜாதாவின் நாவல்களில் முன்னுரை பெரியதாய் இருக்காது என்று பார்த்த நினைவு. ஆங்கிலத்தில் இப்படி செய்வதில்லை இல்லையா?

 
At Thursday, 20 July, 2006, சொல்வது...

உஷாக்கா நான் நல்லா முன்னுரை எழுதுவேன் -:))), நீங்க எப்ப புத்தகம் எழுதுறீங்க??

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

மனசு, புத்தகம் வெளியிட போகிறீர்களா வாழ்த்துக்கள் :-)

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

முன்னுரையா அப்படினா?
அப்படினு ஒரு காலத்தில கேட்டதுண்டு
கொஞ்சம் விவரம் தெரிஞ்சி படிக்கும்போது எட்டி பார்த்துட்டு புரியற மாதிரி இல்லைனா அப்படியே தாவி கதைக்குள்ள குதிச்சிடறது இனிமேலாவது முழுமையா படிக்கணும் னு இந்த பதிவை படிச்சிட்டு நினைச்சா என்னோட அலமாரில குமுதம், விகடனை தவிர வேறு எதுவும் இல்லை. ஊர்லருந்துதான் வரவழைக்கணும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

அன்புடன்
தம்பி

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

உஷா!
என்னதான் சொல்லுங்க! ஜெயகாந்தன் தன் புத்தகத்துக்கு எழுதும் நீண்ட "என்னுரை" எனக்கு நன்கு பிடிக்கும். முன்னுரை,பின்னுரை,அணிந்துரை எல்லாம் சம்பிரதாயம் தான்!- பரிகாரி ,பூனைக்குட்டி கட்டிய கதைதான்.
யோகன் பாரிஸ்

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

உஷஅ,

முன்னுரையில் இத்தனை வகையா.
ராமாயணத்திற்கு முன்னுரை நான்கு,ஐந்து பேர் எழுதினால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசிக்கிறேன்.!
வால்மீகி,கம்பனுக்கெல்லாம் அந்தக் கஷ்டம் வந்து இருக்காது.
சுஜாதா(சாரின் மனைவி)வளர்த்த நாய்க்குட்டி இப்போ இல்லை.

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

தம்பி, எனக்கும் இது சமீபத்து பழக்கம் என்று தெளிவாய் சொல்லியிருக்கேனே ,
இனி நீங்களும் ஆழ்ந்து படிப்பீங்க என்று நம்புகிறேன் :-)

யோகன், நீங்கள் சொல்வது என்னுரை. கையில் எஸ்.ராவின் சிறுகதை தொகுப்பு இருக்கு, அதிலும்
என்னுரை! எங்க பாட்டி கதை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு, சின்னதாய் ஒரு முன்னோட்டம் விடுவாங்க,
அதே போல, நம் அருகில் உட்கார்ந்து சொல்வதைப் போல,
முன்- என்னுரையிலே வாசகர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார்.

மனு, பொது அறிவு கேள்வி- பதிலுக்கு நன்றி :-)

 

Post a Comment

<< இல்லம்