Monday, July 03, 2006

மரணம் அழகானதா?

அவர் பெயர் எனக்கு தெரியாது. புவனா பாட்டி அதாவது புவனாவின் பாட்டி என்றுக் குறிப்பிடுவோம். ஏழெட்டு வருடத்திற்கு முன்பு அடுத்த அடுத்த பிளாட்டில் வாசம். மூன்றாவது மாடியென்பதால் மாலையானால் மொட்டைமாடியில் சந்திப்போம். பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டு இருப்பார். பிறகு அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டதால், வருடமொரு முறை அங்கு போகும் பொழுது குசலம் விசாரித்து விட்டு வருவேன்.

இன்று ஞாயிற்று கிழமையாததால் எல்லாரும் வீட்டில் இருப்பார்கள் என்று காலை அங்கு சென்றிருந்தேன். அவரை விசாரித்தப் பொழுது மூச்சு விட முடியவில்லை என்று முதல் நாள் இரவு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் சொன்னார்கள். பக்கத்தில் ஆஸ்பத்திரி என்பதால் அவர்களுடன் போனேன்.

ஆறு பிள்ளைகள், இரண்டு பெண்கள். பேரன், பேத்தி உறவினர் என்று சுற்றிலும் கும்பல். பெண் வயிற்று பேத்தியும், கொள்ளு பேத்தியும் அந்த சமயம் ஊரில் இருந்து வந்தார்கள். அந்த குழந்தையைக் கண்டதும் கிழவியின் முகம் பூவாய் மலர்ந்தது.

எல்லாரையும் பார்த்துக் கொண்டேயிருந்தவர் கண்கள் ஒரு மாதிரி சுழண்டு மேலே சொருகிக் கொண்டது. டாக்டரை அழைத்ததும், வந்துப் பார்த்து எல்லாம் முடிந்தது என்றார். மரணம் என்ற நிகழ்வை நேரடியாய் பார்ப்பது இதுத்தான் முதல் தடவை. ஒரு மரணம் இவ்வளவு சுலபமா என்று ஆச்சரியமாய் இருந்தது. அனைத்து வாரிசுகளும் சூழ்ந்திருக்க மரணம் அங்கு கொடுமையாய் இல்லாமல், வெகு இயல்பான நிகழ்ச்சியாய் இருந்தது. எல்லோரும் சூழ்ந்திருக்க அவர் மரணித்ததைப் பார்க்கும் பொழுது, பெரிய ஆலமரம் வீழ்ந்திருந்ததுப் போல இருந்தது. டாக்டர் முதல் நர்ஸ்கள் வரை வந்து தெய்வம், நல்ல சாவு என்று கையைக் கூப்பிவிட்டு சென்றுக் கொண்டு இருந்தார்கள். இத்தகைய மரணம் கிடைப்பதுக்கூட ஒரு வரம்தானோ? அழுகி நாற்றமெடுக்காமல், காய்ந்த சருகுப் போல, அமைதியாய் மெல்ல மெல்ல நிலத்தில் வீழ்ந்து, அங்கேயே உரமாவது போலதானா இதுவும்?

அங்கு அவர் இறந்ததைப் பார்த்த அனைவருக்குமே இறந்து விட்டார் என்று துக்கமிருந்தாலும், அங்கு நிலவிய ஒருவகையான அமைதி எல்லார் மனதில் நிறைவுவையே தந்தது. இதைத்தான் கல்யாண சாவு என்பார்கள் போல! வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவு மரணத்திலும்
எதிரொலித்திருக்குமோ? லேசாய் கசியும் கண்ணீருடன் அவரை நினைத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி பயணத்திற்கான செலவை அவர் அணிந்திருந்த இரண்டு வளையல்கள், ஒரு மெல்லிய செயின், கம்மலை விற்று செய்ய வேண்டும் என்று அதற்கும் வழிமுறை சொல்லிவிட்டே சென்றிருந்தார்.

இவ்வளவு நேரத்திற்கு எல்லாம் முடிந்திருக்கும். சில மணிநேரத்திற்கு முன்பு இருந்த அவரின் உடலும், உயிரும் இப்பொழுது இல்லை. அந்த எண்ணங்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்? கண்களை மூடினால் அவர் முகமே வருகிறது. அவர் சிறிய வயதில் கணவனை விபத்தில்
பறிக் கொடுத்து, பிள்ளைகளை வளர்த்த கதை, இன்னும் அவர் பகிர்ந்துக் கொண்ட அந்தரங்க விஷயங்கள் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்துக் கொண்டேயிருக்கிறது. காரியம் ஆகும் வரை ஆன்மா சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். இதை தட்டச்சு செய்யும் பொழுது தோள் வழியே எட்டிப் பார்க்குமா? கொஞ்சம் குறுகுறுப்பாய் இருக்கிறது.

அடுத்தமுறை அவர்கள் வீட்டாரை சந்தித்தால் அவர் பெயரைக் கேட்க வேண்டும்.

part-2

விபத்தில் அவர் கணவன் இறக்கும்பொழுது, முப்பது வயதின் ஆரம்பத்தில் இருந்தவருக்கு நண்டும் சிண்டுமாய் எட்டு பிள்ளைகள். அறையில் அடைந்து அழுதுக் கொண்டிருந்தவரை பெற்றோர் தேற்றினர் என்றாலும் மூத்த மகன் நான் இருக்கேன் என்று தந்த தைரியம்தான் தன்னை எழ வைத்தது என்றார். கீழ் மத்திய வர்க்கம். பெற்றோர், கூட பிறந்தவர்கள் உதவ குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்தனர்.

"இப்ப கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, எல்லாரும் சேர்ந்துண்டு, ஒட்டுர பொட்டு எல்லாரும் வெச்சிக்கிறாங்க, நீயும் வெச்சிக்க பாட்டின்னு சொல்லி பொட்டு வெச்சிக்க ஆரம்பிச்சேன். பதினாலு வயசுல கல்யாணம், மறு வருஷம் பெரியவன் பொறந்துட்டான். முப்பது வயசுல எல்லாம் முடிஞ்சிப் போச்சு"

எட்டு பிள்ளைகளும் இன்று நல்ல நிலைமைக்கு வர மூத்த மகந்தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் சிறிது மெளனம் காத்தார்.

ஏதோ விஷயம் இருக்கிறது என்று நானும் பேசாமல் இருந்தேன்.

"அவர் போகும்போது முத்தவனுக்கு பதினாறு வயசிருக்கும். எஸ்எல்சி முடிச்சிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சான். மொதல்ல தெரியலை. ஏதோ வேலை அதிகமுன்னு இருந்துட்டேன். மரியாதைக் குறைவா பேசலை, ஆனா கேட்டதுக்கு மட்டும் பதில், அதுவும் ஒத்தவார்த்தை. நின்னு என்னன்னு கவனிக்கக் கூட எனக்கு அப்ப நேரமில்லை. மனச உறுத்தும்போது அவன் ரொம்ப தூரத்துக்குப் போயிட்டா மாதிரி தோணித்து. எத்தனையோ முறை வாய் விட்டுக் கேட்டுடலாம்ன்னு தோணும். ஏதாவது சொல்லிட்டா" அந்த பயத்துல நானும் பாராட்டாம இருந்துட்டேன். மத்தவங்களை விட என்னோட கஷ்டங்களை கூட இருந்துப் பார்த்தவன் இவந்தான். எல்லாரைவிட அம்மாவை நல்லா வெச்சிக்கணும்னு இவனுக்குதானே இருக்கணும்? அப்புறம் அவனுக்கும் கல்யாணம், கொழந்தைங்கன்னு ஆச்சு. போனா எங்க வந்தேன்னு கேக்க மாட்டான். போயிட்டு வரேன்னா சரின்னு ஒரு தலையாட்டல். யாரோ என்னவோ சொல்லியிருக்கா, ஆனா சொல்லுகிறவா சொன்னாலும், இவனுக்கு தெரியாதா, பெத்தவள பத்தி? நா என்ன தப்பு பண்ணினேன்னு யோசிச்சி யோசிச்சிப் பார்ப்பேன். ஏதோ தப்பி பண்ணியிருக்கேன், வார்த்தையா எதாவது சொல்லியிருப்பேன்" என்னிடம் பேசுவதுப் போல இல்லாமல் தனக்கே சொல்லுவதுப் போல எந்த உணர்வும் இல்லாமல் முடித்தார்.

வார்த்தைகளில் எந்த வருத்தமோ, பிள்ளை மீது கோபமோ தெரியவில்லை. அப்படி வளர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று பட்டியலிட்டோ, சாபமோ தரவில்லை.

இதேப் போல உறவுகளில் பேச்சு இல்லாமல் இருக்கும் பலரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். துளசிகூட அவர் குடும்பத்து விஷயம் ஒன்று மரத்தடி குழுவில் எழுதியிருந்தார். சில அல்ப விஷயங்களுக்காக மன கசப்பை வளர்த்து, இதில் உறவினர்கள் தூபம் போட பேச்சு வார்த்தை முற்றிலும் நின்றுவிடுகிறது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை சில சமயம் மறந்துதான் போகிறோம்.

புவனாபாட்டி இறக்கும்பொழுது அவர் மூத்தமகன் அருகில் இருந்தாரா? விடை தெரியாத கேள்விக்கு பதில் இறப்பதற்கு முன்பாவது கிடைத்ததா? தாய்க்கு கொள்ளி வைக்கும்பொழுது, மகன் மனம், தான் இத்தனை வருடம் தாய்க்கு தந்த தண்டனையை நினைத்தாவதுப் பார்த்திருக்குமா? இல்லை விஷயமே ஒன்றுமில்லாமல் வயதானவளை செய்யும் சாதாரண அலட்சியமா? இதுவாகத்தான் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

*****


தோழியர் கூட்டு வலைப்பதிவில் எழுதியது. தேன்கூடு "மரணம்" என்ற தலைப்புக்கு பொருந்திவந்ததால் எடுத்துப் போட்டேன். போட்டிக்கு அல்ல!

12 பின்னூட்டங்கள்:

At Monday, 03 July, 2006, சொல்வது...

//இல்லை விஷயமே ஒன்றுமில்லாமல் வயதானவளை செய்யும் சாதாரண அலட்சியமா? இதுவாகத்தான் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.//


இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.

 
At Monday, 03 July, 2006, சொல்வது...

மனதை பிசைகிறது, நீங்கள் அளித்த பிரியாவிடையைப் படிக்க!!

//இத்தகைய மரணம் கிடைப்பதுக்கூட ஒரு வரம்தானோ?//

புவனாப் பாட்டி புண்ணியம் நிறைய செய்திருக்கிறார்கள். சுற்றம் சூழ பிறப்பு அடிக்கடி நடந்ததாக கேள்விப்பட்டதுண்டு!! இறப்பைப் பற்றி இதுதான் முதல்முறை.

 
At Monday, 03 July, 2006, சொல்வது...

உங்கள் 'பழையது' மிக உருசியாக இருக்கிறதே! புவனா பாட்டிகளை ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்.
//போட்டிக்கு அல்ல!// போதுமென்ற மனமா? :)

 
At Tuesday, 04 July, 2006, சொல்வது...

எப்படிங்க இது ஒரு வீட்டுல வருஷக் கணக்கா மனசில ஒண்ணை வச்சிட்டுக் கேக்காம மருகி மருகி... படிக்கும் போதே கனக்குது! எனக்குச் சாப்பிடாம இருந்தாக் கூடப் பரவாயில்லை, விரோதியானாலும் சண்டை போடுற சாக்கிலயாச்சும் போயி மனசில இருக்கிறதைக் கொட்டிருவேன்.

அந்தப் பாட்டி ஆத்மா சாந்தி அடைஞ்சதோ இல்லையோ, அதுக்காக மனமார பிரார்த்திக்கிறேன். இந்த உலக ஆசைகளைத் தாண்டி எனக்கும் இருக்கிற மிகப் பெரிய ஆசை பின்னால எனக்கும் சரி வேற யாருக்கும் சரி, தொந்தரவு இல்லாம சட்டுனு போயிச் சேந்துரணும்.

எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, "நாம செத்தப்புறம் யாரும் ஐயையோ போயிட்டானேன்னு வருந்தி அழலைன்னாலும் பரவாயில்லை, ஆனா ஒருத்தர் கூட நல்ல வேளை போயிட்டான்னு சொல்லிறக் கூடாது. அப்பத்தான் நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு மட்டுமில்லை, நீ செத்த சாவுக்கும் மதிப்பு"ன்னு சொல்லிட்டுப் போனாரு!!

அதை இன்னைக்கும் நினைச்சுப் பாக்க உங்க பதிவு உதவுச்சுங்க, நன்றி!

 
At Tuesday, 04 July, 2006, சொல்வது...

மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.அதில் ஒன்று குறை இல்லாமல் போவது.
அந்தப் பிள்ளை இப்போ கட்டாயம் அழுது கொண்டிருப்பார்.அம்மா, உன்னை விட்டு விட்டேனே என்று.

 
At Tuesday, 04 July, 2006, சொல்வது...

இந்தப் பதிவைப் படித்தவுடம் பள்ளியில் பாடத்தில் படித்த ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. இடுகைக்கு முழுவதுமாக சம்பந்தம் இல்லாவிட்டாலும் தலைப்பை கண்டதும் எனக்கு நினைவுக்கு வந்தது ஆகையால் அதன் சாராம்சத்தை நான் இங்கு கொடுக்கிறேன்.

மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறான். மரணத்தால் தான் இழக்கப் போகும் அனைத்தையும் நினைத்து வருந்துகிறான். இந்த உலகம் எவ்வளவு அழகானது அதனை விட்டு நாம் செல்கிறோமே என்று வருந்துகிறான். அப்பொழுது அவனுக்கு தான் இந்த உலகில் ஒவ்வொரு புது விசயங்களையும்முதன் முதலில் சந்தித்த பொழுது உண்டான பயத்தை எண்ணிப் பார்க்கிறான். முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சமயம் உண்டான பயத்தை எண்ணிப் பார்க்கிறான் முதன் முதலில் பள்ளி செல்லும் சமயம் தான் இழந்ததை எண்ணிப் பார்க்கிறான் ஆனால் இழந்ததை விட தனக்கு கிடைத்ததே அதிகம் என்பதை உணர்கிறான் இப்படி அனைத்தையும் யோசிக்கும் அவன் மரணமும் தான் கண்டு பயந்த ஆனால் பிறகு நன்றாக முடிந்த பல விசயங்களைப் போலவே அமையும் என்று எண்ணி மரண பயத்தை விடுகிறான், அமைதியாக மரிக்கிறான் என்று முடியும்.

அதில் ஆசிரியர் நாம் பயம் கொள்வது மரணத்தை எண்ணி அல்ல தெரியாததை எண்ணி என்று முடித்திருப்பார்( we are not afraid of unknown more than death ). இந்த இடுகையோடு முழுக்க சம்பந்தம் இல்லா விட்டாலும் எதோ தோன்றியது எழுதி விட்டேன். பதிவாளர் மன்னிக்கவும்.

 
At Tuesday, 04 July, 2006, சொல்வது...

டச்சிங்கா இருந்தது...

 
At Wednesday, 06 February, 2008, சொல்வது...

இவ்வளவு அமைதியான அழகான மரணம் எல்லோருக்கும் நிகழ்வதில்லைதான்..
________

முகம் தெரியாத ஒரு முதியவரின் மரணம் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவுமிருந்தாலும் ஒரு விநாடியாவது வெறுமையில் நம்மை மொளணிக்க வைத்துவிடுகிறது..

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

ஆம்,இன்று 9-2-2008ல் உங்கள் பின்னுட்டம் பார்த்ததும் வெறுமை என்பதே சரி என்று எனக்கும் தெரிகிறது.

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

ரொம்ப அழுத்தமான மேட்டர். மனசு கணக்குது.

தனியாக எட்டுபிள்ளைகளை வளர்த்த அந்த புவனா பாட்டிக்கு ஒரு சல்யூட்.

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

ம.சிவா! சரிதான். பதிவுக்கு புனர்ஜென்மமா :-)

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

அடடா பதிவிட்ட தேதியை கவனிக்கவில்லை. தமிழ்மணத்தில் நேற்று இருந்தது. நான் புதிய பதிவு என நினைத்தேன்.

நல்ல பதிவு எப்போது படிவிட்டதாக இருந்தால் என்ன?

 

Post a Comment

<< இல்லம்