Sunday, July 02, 2006

ஒரு சம்பவம்- ஒரு கேள்வி

http://masivakumar.blogspot.com/2006/07/blog-post_02.html இன்று காலையில் இந்த பதிவைப் பார்த்ததும் நினைவில்வந்த ஒரு சம்பவம்.

வழக்கப்படி விடுமுறைக்கு ஊருக்கு செல்ல டிக்கெட் பிளாக் செய்து வைத்திருந்தாலும், மிக அவசரமாய் முன்பே செல்ல வேண்டிய இருந்தது. விடுமுறை காலம் என்பதால் சென்னைக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் சென்னைக்கு நேராக செல்லாமல், இறங்கி மறுநாள் சென்னைக்கு செல்ல கனெக்ஷன் பிளைட்டில் டிக்கெட் கிடைத்தது. வழக்கப்படி கூட மகனும் மகளும்! ( இந்திய நகரம் ஒன்றின் பெயரை சொல்லாமல் விட்டு வைக்கிறேன்)

இணையம் மூலமாய் நல்ல ஹோட்டலில் அறை புக் செய்து ஒரு நாள் தங்கிவிட்டு, மறு நாள் மாலை கிளம்பிவிடுமாறு என் கணவர் கூறினார். ஹோட்டலில் சொல்லிவிட்டால், ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துப் போவார்கள் என்று சொன்னாலும், தெரியாத ஊர் எப்படி
என்று உள்ளூர ஒரு கலக்கம். பொதுவாய் இத்தகைய குழப்பங்களை என் கணவர் கண்டுக் கொள்ள மாட்டார். கேட்டால் ஊருக்கு போவதாய் இருந்தால் இப்படித்தான், இல்லை என்றால் போகாதே என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டார்.

இரண்டு நாளில் கிளம்ப வேண்டும். அந்த ஊரில் சுற்றம் நட்பு என்று யாரும் இல்லை. குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளை ஆபத்பாந்தவனாய் ஒரு நண்பர் வந்தார். அவர் உறவினர், கணவன் மனைவி இருவரும் இந்திய அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், ஏர்போர்ட் அருகில் வீடு, மற்றும் காரும் டிரைவரும் இருப்பதால் அவர்கள் அழைத்து சென்று விடுவார்கள். செளகரியமாய் அவர்கள் வீட்டில் தங்கலாம் என்று வற்புறுத்தியே கூறினார்.

எனக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று. அதே போல அவர் வீட்டு டிரைவர் காத்திருந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். வீடா அது அரண்மனை. வாசலிலேயே வந்து தம்பதியர் உள்ளே அழைத்துப் போனார்கள். விருந்தினர் அறை என்று எங்களுக்கு ஒரு
அறை தரப்பட்டது. வீட்டின் மூலை முடுக்கிலும் தென்படும் செல்வ செழிப்பும், வீட்டில் அங்கங்கு கண்ணில் பட்ட வேலைக்காரர்களும் அரசாங்கத்தில் இவ்வளவு சம்பளம் தருகிறார்களா அல்லது பரம்பரை பணக்காரர்களா என்ற எண்ணம் எழாமல் போகவில்லை. வீட்டில் வயதான தந்தை தாயார் அவர்களும் நல்ல உபசாரம் செய்தார்கள். அத்தனை பெரிய அதிகாரியாய் இருந்தாலும் எந்த பந்தா இல்லாமல் பழகினர் அந்த தம்பதியரும், அவர்களின் இரு மகள்களும்.

ஒரு பெண் கல்லூரியில் இன்னொருவள் பள்ளியில் இறுதி வகுப்பு.

முதல் நாள் இரவு தூக்கம் கெட்டதால், நல்ல சாப்பாடு என்பதாலும் நானும் என் பிள்ளைகளும் நன்றாக தூங்கி எழுந்தோம். மாலை மணி நான்கிற்கு விழிப்பு வந்தது. பிள்ளைகளையும் எழுப்பினேன். மதியம் சாப்பிடும்பொழுதே மாலையில் எங்களுக்கு ஊரை சுற்றி காட்டுவதாய் அந்த இரண்டு பெண்களும் சொல்லியிருந்தார்கள்.

டிரைவர் வண்டி ஓட்ட, அந்த பெண்களும் புதியவள் என்று இல்லாமல் சாதாரணமாய் பேசிக் கொண்டு வந்தார்கள். நல்ல குணம் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.

பெரிய ஷாப்பிங் ஒன்றும் இல்லை. அப்படியே சுற்றி வரும்பொழுது, "ஆண்ட்டி டின்னர் வெளியே சாப்பிடலாம்" என்றாள் ஒருத்தி. ஒன்றரை நாள் முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் தங்குகிறோமே என்று நினைத்து, நம்முடைய டிரீட்டாய் இருக்கட்டும் என்று
தலையை ஆட்டினேன்.

வண்டி நின்ற இடம் மிக பிரபல நட்சத்திர ஹோட்டல். மொத்தம் ஐந்து டிக்கெட்டுகள். எப்படியும் பில் சில ஆயிரங்கள் வந்துவிடும். நல்லவங்க மாதிரி நடித்து, இந்த பொண்ணுங்க இப்படி கவுத்துடுச்சுங்களே என்று மனதில் புலம்பிக் கொண்டே பின்னால் போனேன்.

"இங்க பா·பே ரொம்ப நல்லா இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே சென்றவளின் பின்னால் போனால், ஸ்வீட்டில் பத்துவகை. கேக்கில் ஏழெட்டு, ஐஸ்கீரீம்கள் வகை, வகையாய் எண்ணவே முடியவில்லை. அதை தவிர சைவ, அசைவம் தனி தனியே! அடிப்பாவிகளே என்று மனம் அலற, எதையும் சாப்பிட தோன்றவில்லை.

அந்த பெண்கள் கையில் பர்ஸ் எதுவும் கொண்டு வரவில்லை. ஆக நாந்தான் தர வேண்டும். பர்சில் கேஷ் அதிகமில்லை, கிரடிட் கார்ட் இருக்கிறதா என்று பார்க்க பர்சை திறந்தேன்.

(தொடரும்)

கதைகளிலும் கற்பனையில் வராத சம்பவங்கள் வாழ்க்கையில் கண்கூடாய் பார்க்கலாம். கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு திருப்பங்களும், மர்மங்களும் கொண்ட சுவாரசியமான நிகழ்வுகள் நடக்கும்.

இதன் முடிவை படிப்பவர்கள் உகிக்க வேண்டும். .பார்க்கலாம் யார் என்ன சொல்லப்போகிறார்கள் என்று!

15 பின்னூட்டங்கள்:

At Sunday, 02 July, 2006, சொல்வது...

அட ஆரம்பமே விறுவிறுப்பா இருக்கே.

ஊருக்குப் போனா கொஞ்சம் செலவு செய்யத்தான் வேண்டும் இதுக்கெல்லாம் சுணங்கினால் முடியுமா?

எப்படியோ ஒரு நல்ல திரில்லர் நமக்கு கிடைக்குது.

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு பில்லே கொடுக்கவில்லை....பணம் செலுத்தவேண்டிய சூழ்நிலையே
உங்களுக்கு ஏற்படவில்லை...சரியா?

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

It was pre arranged or they own the hotel. So you did not have to pay.

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

மஞ்சூர் ராஜா, நாமாக விரும்பி செய்வது வேறு, வலுக்கட்டாயமாய் நம்மை தண்ட செலவு செய்ய வைப்பது வேறு
இல்லையா?

சிவஞானம்ஜி, பொறுங்க, ராசா வேறு த்ரில்லர் என்று சொல்லிவிட்டார், அடுத்து பகுதி எழுதிப் போடுகிறேன்.

பத்மா, அதைவிட பயங்க்ர டுவீஸ்ட்

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

//அதைவிட பயங்க்ர டுவீஸ்ட் //

ஏதாவது குத்தம் கண்டு பிடிச்சு, சண்டை போட்டு.... (கமல்-Y.G-ஜெய்சங்கர் படம். பேரு நியாபகம் வரல்ல)

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

அப்புறம் என்ன ஆச்சு?
அடுத்த பகுதி எப்போ வெளியீடு?
நல்ல ஃபேமிலி த்ரில்லர் பதிவு.

வலைப்பதிவுலகுக்கு நான் புதுசு.
எமது தளத்திற்கு வருகை தரவும்.
http://harimakesh.blogspot.com

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

ஐயய்யோ இப்படி தொடரும் போட்டீங்களே! நியாயமா? சீக்கிரம் சொல்லுங்க

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

அரசு அதிகாரிகள் என்று சொல்லி விட்டீர்கள்! லூடன் வடிவமைத்த நகரில் அவர்கள் ஹோட்டல் பில் எல்லாம் செலுத்த வேண்டுமா என்ன?

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

மஞ்சூர் ராஜ, சிவஞானம்ஜி,தேண் துளி பிறகு உங்க பதில்..அதில் பத்மா னு ஆரம்பிக்கிறீங்க....பத்மா போட்ட பின்னூட்டம் எங்கே?
பயங்கர ட்விஸ்ட்னு வேற பயமுறுத்திறீங்க

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

பர்சில் க்ரெடிட் கார்டு இருந்தது.

ஆனால், பில்லை நீங்கள் தரவேண்டிய நிலை ஏற்படவில்லை.

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

ரொம்ப சஸ்பென்சா இருக்கிறதே? (என்னால் அனுமானிக்க முடியவில்லை; நான் ராஜேஷ் குமார் கதைகளிலும் முடிவை கண்டுபிடித்தவன் இல்லை :-)

 
At Sunday, 02 July, 2006, சொல்வது...

அவங்களும் ஏற்கனவே இதே மாதிரி,இங்கே நிறுத்திவைக்கப்பட்டவர்கள?

 
At Monday, 03 July, 2006, சொல்வது...

உஷா,
ஹோட்டலில் ஏதோ பிரச்சினை ஆகி, ஹோட்டல்காரங்களே பில் பணம் தர வேண்டாம்னுட்டு சொல்லிட்டாங்களோ ??? சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க :)
என்றென்றும் அன்புடன்
பாலா

 
At Monday, 03 July, 2006, சொல்வது...

அட அந்த ஓட்டலே அவங்கதா? இல்ல...அந்த ஓட்டலுக்கும் அவங்களுக்கும் ஏதாவது அண்டர் ஸ்டேண்டிங் இருக்குதா? இப்பிடி நடுவுல நிப்பாட்டுறது சரியில்லீங்க.

 
At Monday, 03 July, 2006, சொல்வது...

சிவஞானம்ஜி, தேன் துளி என்ற பெயரில் எழுதுவது பத்மா.

ஒரளவு எல்லாருமே, பாதி விடையை சரியாய் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். அதாவது அரசு அதிகாரிகல், சாப்பிட்டுவிட்டு பணம் எல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று :-))

சஸ்பென்ஸ் உடைத்துவிட்டேன், பார்க்கவும் ஒரு சம்பவம்- முடிவு

 

Post a Comment

<< இல்லம்