Tuesday, December 03, 2013

ஒரு எழுத்துக்காரி தோட்டக்காரி ஆன கதை!

இவ்வாறாக என்னுடைய தோட்ட முயற்சிகள் எல்லாம் சொல்லும்படி இல்லாமல் போனது. நன்கு பூத்த மல்லிகை வாடிப் போனது. கீரைகள் ஏனோ தானோ என்று இருந்தது. அந்நேரம் தமிழக வேளாண் கழகத்தில் ஒரு நாள்  வீட்டு/ மாடி தோட்ட வகுப்பு நடக்கும் விளம்பரம் கண்டு அதில் சேர்ந்தேன். பல விஷயங்கள் புரிந்தது. பத்திரிக்கைகள் ,இணையம் இவைகளில் தேடித் தேடி பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

முதலில் பயந்து அல்லது அனைவரும் பயமுறுத்தியது. தரை ஒழுக ஆரம்பிக்கும் என்று! அப்பொழுது ஒரு இடத்தில் பார்த்த ஐடியா!
இந்த பெயிண்ட் டப்பாக்கள் வாங்கி அதன் மேல் தொட்டியை வைத்தால் தண்ணீர் தேங்காமல் அப்படியே வழிந்து ஓடிவிடும். என்ன இந்த டப்பாக்களுக்கு மிகுந்த டிமாண்டு. பழைய பேப்பர் கடைகள், தெரிந்த பெயிண்டர்களை பிடித்து வாங்கியவைகளிலேயே செடிகளை வைத்துள்ளேன். செங்கல் வேண்டாம் செடிகளில் இருந்து வெளியேறும்  தண்ணீர் ஊறிக் கொள்கிறது

கற்றுகொண்ட பாடங்கள்
தரையில் வளரும் செடிகளை விட தொட்டி செடிகளுக்கு பராமரிப்பு அவசியம். நாமே செய்வதால் உடல் பயிற்சியும் ஆயிற்று.
 நாளுக்கு ஒரு மணி நேர வேலை இருக்கும். தொட்டி மண்ணில் இருக்கும் ஈர பதத்தைப் பார்த்துவிட்டு தண்ணீர் விட வேண்டும். காலை நேரமே தண்ணீர் பாய்ச்ச சரியான பொழுது.  வைட்டமின் டி யும் காலை சூரிய வெளிச்சத்தில் கிடைக்கும் என்பது நமக்கும் நல்ல விஷயம் தானே!

முதலில் நாலைந்து தொட்டிகளில் மண்ணிலேயே செடி  வைத்தேன். அப்பொழுது இந்து நாளிதழில் தேங்காய் நார் கழிவு, மண்ணிற்கு
மாற்று என்ற செய்தி கண்டேன். இது மாற்று என்றாலும் இதில் செடிக்கு தேவையான எந்த சத்தும் கிடையாது. ஒரு பங்கு தே. நா. க, 1/2 பங்கு மண், கொஞ்சம் உரம். உரம் என்பது கடையில் வாங்கும் மண்புழு உரம் மற்றும் என் சொந்த தயாரிப்பு.( இதைப் பற்றி விரிவாகச்
சொல்கிறேன்)

இந்த தே நா.க வில் வைக்கப்படும் செடிகள் அற்புதமாய் வளருகின்றன. முதல் நல்ல விஷயம்- தொட்டி பாரம் இல்லாமல் வெகு லகுவாய் இருப்பதால், இடம் மாற்றுவது மிக செளகரியம். பொதுவாய் பார்த்தால், மண் தொட்டியில் மேல் பக்கம் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் மண் காய்ந்து இறுகி இருக்கும். ஆனால் தே. நா.க தொட்டி மண் அப்படி இருப்பதில்லை. பொல பொலவென்று இருக்கிறது. மேலும் ஈர பதம் வெகு நேரம் - இரண்டு நாட்கள் வரை நீடிக்கிறது.

சென்னையில் இரண்டு இடங்களில் தேங்காய் நார் கழிவுகள், செங்கல் போல் இறுக்கப்பட்டு கிடைக்கின்றன. அவைகளை பெரிய வாளி அல்லது டப்பில் தண்ணீர்  ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு பொத பொதவென்று உப்பி மேலே வந்து விடும்.
 
இப்பொழுது கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை :-)

முதலில் என் தோல்வியைச் சொல்லி விடுகிறேன். வீட்டில் இருக்கும் நிலத்தில் குழி நோண்டி கழிவுகளைப் போட்டு வந்தேன். கொஞ்சம் நாற்றம், ஈ, கொசு தொல்லை பிறகு மழை தண்ணீர் தேங்கி ஓரே அழுகல் நாற்றம். கழிவுகளை மண் புழு தேடி வரும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தது எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

பழைய பிளாஸ்டிக் டிரம்கள் இரண்டு வாங்கி, கீழ் பக்கம்,(8) பக்க வாட்டுகளில், (16) துளைகள் போட்டேன். மேல் மூடியில் கிடையாது.
மழை தண்ணீர் உள்ளே போகக்கூடாது என்பதால்.
,காய்கறி, பழத் தோல்கள் , முட்டை ஓடுகள் - (அக்கம் பக்கம், வூட்டு வேலைக்காரம்மா உபயம்), காய்ந்த இலைகள், சாம்பல், பேப்பர் அட்டைமிஞ்சிய காபி தூள், டீ தூள், (நான் பேப்பர் துணுக்குக்கள் போடுவதில்லை), பூஜை சாமான் கடையில் வாங்கிய வறட்டி (உடைத்துப் போட வேண்டும்). மூடி மேல் கொஞ்சம் வைத்திருக்கிறேன், உங்கள் பார்வைக்கு

எப்படியும் நான்கு மாதம் ஆகின்றன முழுவதும் தயாராக. ஒவ்வொரு முறையும் முற்றிலும் தயாரானது நமக்கே ஆச்சரியமாய் இருக்கும், கலர்கலராய் நாம் போட்டவை எப்படி இப்படி கருப்பாய் ஆகின்றன என்று! இதற்கு கருப்பு தங்கம் என்று பெயராம் :-)
மீந்த சாப்பாடு, எண்ணை பொருட்கள், இவைகளை தவர்க்க வேண்டும்.

கழிவுகள் அழுகத் தொடங்கும்பொழுது, கருப்பாய் லீக் ஆகும், நான் இரண்டு செங்கல் வைத்து, நடுவில் ஒரு தட்டு வைத்திருக்கிறேன்.
லீக் ஆவது அதில் சேகரம் ஆகும், அதையும் செடிக்கு விடலாம்.

ஒரு நோட்டு புத்தகம் போட்டுக் கொள்ளுங்கள். எந்த செடிக்கு என்று உரம் வைத்தீர்கள், பூச்சி மருந்து அடித்தீர்கள் போன்ற குறிப்பும்,
எங்காவது கண்ணில் படும் டிப்ஸ்களை எழுதவும் உதவும்.
டிப்ஸ்,
1- காலை நேரமே தண்ணீர் பாய்ச்ச சரியான நேரம்
2- எறும்பு தொட்டிகளில் காணப்பட்டால் பட்டை பொடி அல்லது டால்கம் பவுடரை தூவுங்கள். ஓடிவிடும்.
3-உரம் தயாரிப்பொழுது ஈ வர ஆரம்பிக்கும். கொஞ்சம் சக்கரையை லிக்விட் சோப் ஒரு ஸ்பூன் கலந்து சின்ன கிண்ணத்தில் உள்ளே
வைத்தால், ஈக்கள் ஓடிவிடும்.
4- வேப்பெண்ணையுடன் லிக்வுட் சோப் கலந்து செடிகளுக்கு அடித்தால், பூச்சிகள் கட்டுப்படும்.
5- உரம் வைத்தப் பிறகு தண்ணீர் ஊற்ற வேண்டும், தண்ணீர் ஊற்றியப்பிறகு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.
இப்பொழுது என் வீட்டில் எழுபதுக்கும் மேலான செடிகள் இருக்கின்றன. கீரைகள் வாங்குவதே இல்லை.வாருங்கள் இயற்கை காய்கறிகளையும், கண்களுக்கு இனிய அழகிய பூக்களை பெறவும் மாடி தோட்டம் போடுவோம்.

11 பின்னூட்டங்கள்:

At Tuesday, 03 December, 2013, சொல்வது...

Super. Going to start soon at my home too. Are you in Chennai

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

Are you in Chennai? I want to start this at my home soon.

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

For follow up

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

ஆஹா .... அந்த மொட்டை மாடி இப்படி ஆயிடிச்சா? :-) சூப்பர். பாடங்களை கொஞ்சம் கொஞ்சமாக படிக்கிறேன் உஷா.....அப்பப்போ ரெஃபர் பண்ணிக்க வசதி...:-) தாங்க்யூ !

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

அட்டகாஷம் :)

முன்மாதிரி தோட்டமாக்கிக்கொண்டுவிட்டேன்.

இனி வாய்ப்புகள் கிடைக்கும்போது இதை செயல்படுத்தவேண்டும் என்ற நினைப்புதான்! நன்றி :)))

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

மிக அருமை. அம்பத்தூரில் இருக்கையில் நாங்களும் போட நினைச்சோம். நீங்க சொல்றாப்போல் தண்ணீர் ஒழுகும் என்பதால் யோசனையாக இருந்தது. சரியான வழிகாட்டிகளும் அப்போது கிடைக்கவில்லை. இங்கே போடவே முடியாது. :))) குடியிருப்பு வளாகம் என்பதோடு வாடகை வீடு! அருமையாகப் பராமரிக்கிறீர்கள். வாழ்த்துகள். தோட்டத்துச் செடிகளோடு இரண்டு மணி நேரம் செலவிட்டாலே மனம் லேசாகிடும்.

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

சிறில் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆச்சு. உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள்.

ஆயில், வாழ்த்துக்கள் கனவு நனவாக :-)

அருணா, ஆரம்பிங்க!

கீதா, அப்பார்ட்மெண்ட் என்றால் மற்றவர்கள் ஆட்சேபம் கிளப்புவார்கள் :-( நீங்க சொன்னாமாதிரி மனசுக்கு ரொம்ப ரிலாக்சாகவும், மனசுக்கு திருப்தியாகவும் இருக்கு

 
At Wednesday, 05 February, 2014, சொல்வது...

Wow!. Happy to see that you have started growing plants on the terrace . All the best.

I am sure your posts will be more interesting and informative , enlightening many readers. Thanks.

Http://www.gardenerat60.wordpress.com

 
At Wednesday, 12 March, 2014, சொல்வது...

அக்கா, நானும் காய்கறீ குப்பைகளை(மட்டுமே) நீங்கள் செய்வதுபோலவே பிளாஸ்டிக் ட்ரம்மில் சேர்த்து வருகிறேன். கீழே துளை போட்டு, நீரும் வடிகீறது. ஆனால், சின்னச் சின்னப் புழுக்கள் நிறைய நிற்கின்றன. மண்புழு என்றால் பிரவுன் நிறத்திலல்லவா இருக்கும்? இவை சுத்த வெள்ளை நிறமாக இருக்கின்றன. நீங்கள் சொன்ன அதே முறைதான். ஆனால் என்ன தப்பு என்று புரியவில்லை.

//சக்கரையை லிக்விட் சோப் ஒரு ஸ்பூன் கலந்து//
இதில் சர்க்கரை என்பது சீனிதானே? அல்லது வெல்லம்/ கருப்பட்டியா?

 
At Wednesday, 12 March, 2014, சொல்வது...

ஹூசேன்னம்மா, குப்பைகளில் அழுகும் குப்பை, டிரை குப்பை என்று இரண்டு உண்டு, காய்கறி தோல்கள் மட்டும் போட்டால் அழுகி நாற்றம் அடிக்கும், வெள்ளை புழு வரும், அதுக்கு இணையாய் காய்ந்த இலை தழைகள் போடவும், அவ்வப்பொழுது கொஞ்சம் காய்ந்த மண்ணையும் போடவும். குச்சிகள் கிடைத்தால் அதை எரித்து அந்த சாம்பலைப் போடவும். காபி, டீ தூள் பொடிகளை (உபயோகித்தது) காய வைத்து கலக்கவும். அழுகும் குப்பைகளுடன் இவை சேரும் பொழுது அவை மக்கத் தொடங்கும். மஞ்சள் பொடி கொஞ்சம் சேர்க்கவும் அவை நாற்றத்தை குறைக்கும். மண்புழு தானே டிரம்மில் உண்டாகாது. ஆனால் கருப்பு நிறத்தில் நீளமாய் புழுக்கள் உருவாகும், ஆனால் அவையும் சில வாரங்களில் குப்பையுடன் மக்கிவிடும்.ஈக்களை விரட்ட, சக்கரை/ சீனியை சொன்னேன்.
டிரமில் முக்கால் பாகம் மட்டுமே குப்பை சேர்க்கவும், காற்றோட்டத்துக்கு டிரம்மின் சைட்டிலும் நாலைந்து துளைப் போடவும். ஆனால் மூடியில் வேண்டாம், மூடி வைக்கவும். வேறு என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கவும். ஆரம்பத்தில் நானும் மிக கஷ்டப்பட்டேன், இப்ப மிக சுலபமாய் வருகிறது.

 
At Wednesday, 12 March, 2014, சொல்வது...

ரொம்ப நன்றி அக்கா. என் ஏரியாவில் தொட்டிச் செடிகள் மட்டுமே என்பதால், காய்ந்த சருகு, மண் எல்லாம் கிடைபப்து கஷ்டம். Potting soil-ம் காம்போஸ்டில் போடக்கூடாதாம். நீங்க சொன்ன மாதிரி, டீத்தூள், மஞ்சள் பொடி போட்டுப் பார்க்கிறேன்க்கா. ரொம்ப நன்றிக்கா.

இன்னொரு சந்தேகம். நான் டீத்தூளோடு ஏலக்காய், இஞ்சி சேர்த்து டீ போடுவேன். அதோட டீத்தூளைப் போடலாமா?

 

Post a Comment

<< இல்லம்