Thursday, September 06, 2012

ரா.கி. ரங்கராஜன் படைப்புகளில் என் நினைவலைகள்


எங்கள் வீட்டு பரணில் இருந்த பைண்ட் புத்தகங்களில் ஒன்று மோகினி எழுதிய “அடிமையின் காதலி” இந்த மோகினி தான் குமுதம் புகழ் ரா.கி.ரங்கராஜன் என்று பின்பு தெரிந்தது. எனக்கு தமிழ் வாசிக்க தெரிந்த நாளில் இருந்து பல முறை படித்ததால் ஏறக்குறைய வரிக்கு வரி மனப்பாடம்  ஆனால் இப்புத்தகம் காணாமல் போயே வருட கணக்காகிவிட்டது. ஐம்பது கடைசி அல்லது அறுபதுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கல்கி , போடு போடு என்றுப் போட்டுக்கொண்டு இருந்தப்பொழுது, குமுதம் எஸ்.ஏ.பி “நீரும் சரித்திர தொடர் எழுதேன் என்று சொன்னதும், தொடர்கதையின் தலைப்பையும் அவரே சொன்னாராம், பிறகே கதை எழுதப்பட்டதாம், எங்கோ ரா.கி.ரா சொன்னதாய் நினைவு. கொஞ்சம் பொன்னியின் செல்வன் வந்தியதேவன் பாணியில் நாயகன் காஞ்சிபுரத்தான், (கடைசி வரையில் அவன் காஞ்சிபுரத்தானே- பெயர் கிடையாது) அவன் காதலி அடிமை பெண் தாமரை. சென்னை/ அதாவது சென்னப்பட்டினம் ஆங்கிலயர்களின் ஆட்சி மெல்ல விரிவரைய ஆரம்பித்த காலம். அடிமை வியாபாரம் செய்யும் பெரிய பெத்து, அவர் மகள் தெய்வநாயகி. பச்சோந்தி வளர்க்கும் பாதிரியார், அதன் பெயர் மோசஸ் என்று நினைவு. செஞ்சி கோட்டை, திருமலை நாயகர் காலத்து மூக்கறு யுத்தம் பற்றிய குறிப்பு என்று போகும், ஆனால் மிக மிக சுவாரசியமாய், அந்த கால சென்னை/ சென்னப் பட்டின விவரங்கள் சரியாய் இருக்கும். ஆனால் தமிழில் வெளியான சரித்திர நாவல்கள் லிஸ்ட் போடும் இலக்கியவாதிகள் என்றும் இப்புதினத்தைச் சேர்த்ததாய் எனக்கு தெரிந்து இல்லை  அடுத்து கிருஷ்ணகுமார் என்ற பெயரில் ரா.கி.ரா எழுதிய புரபசர் மித்ரா,மற்றும் மீண்டும் தேவகி படித்த நினைவு. இதில் மீண்டும் தேவகி, மிக த்ரிலீங்காய் இருக்கும். ஓசோ தாத்தா என்ற கேரக்டர். குட்டி சாத்தான் மாதிரி. இருட்டு அரையில் தேவாங்கு போல, சில நூறுவருடமாய் வாழும் ஒரு மாந்தீரிகவாதி. இதை இங்கு பதியும்பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது, நகைச்சுவையா, ஆங்கில மொழிப்பெயர்ப்பா (ஷிட்னி ஷெல்டன் கதைகள், பட்டாம்பூச்சி இத்தியாதிகள்) வினோத்தின் செம்ம ஸ்மார்ட்டாய் சினிமா செய்தி தரும் பாணி, (அப்போது எனக்கு டீன் ஏஜ்) சரித்திர நாவல்கள், (நான் கிருஷ்ணதேவராய் , நான் படித்ததில்லை), அமானுஷ்ய கதைகளா அல்லது சினிமாவின் அவரின் பங்களிப்பு என்ற இந்த அஷ்டவாதிக்கு அவர் வாழ்நாளின் என்ன அங்கீகாரம் கிடைத்தது? புரபசர் மித்ரா மற்றும் என் கடைசி வரிகளின் அங்கலாய்ப்பு இதோ இங்கும்.

9 பின்னூட்டங்கள்:

At Thursday, 06 September, 2012, சொல்வது...

கல்கி , போடு போடு என்றுப் போட்டுக்கொண்டு இருந்தப்பொழுது, குமுதம் எஸ்.ஏ.பி “நீரும் சரித்திர தொடர் எழுதேன் என்று சொன்னதும், தொடர்கதையின் தலைப்பையும் அவரே சொன்னாராம்//

உஷா, எஸ் ஏபி சரித்திர நாவல் எழுதச் சொல்லி ராகிரா. எழுதியது என்னவோ உண்மை. ஆனால் கல்கி அப்போது உயிருடன் இல்லை. அவர் இறந்து பல வருடங்கள் கழித்தே அடிமையின் காதலி எழுதப்பட்டதாக நினைவு. குமுதத்தில் தொடராக வந்தபோதே நான் படித்திருக்கிறேன். கல்கி இறந்தது எப்போனு சரியாத் தெரியலை. ஆனால் ஐம்பதுகளில் என நினைக்கிறேன். இந்தக் கதை அறுபதுகளில் வந்த நினைவு. ஒருவேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். எதுக்கும் செக் செய்து கொள்ளுங்கள்.

 
At Thursday, 06 September, 2012, சொல்வது...

நன்றி கீதா, ஆக, அது சாண்டில்யனா? ஆனால் சாண்டில்யன் குமுதத்தில் எழுபதுகளில் எழுத
வந்ததாய் நினைவு. கெஜசிற்பியன், விக்கிரமன் போன்றோரும் சரித்திர கதைகளில் கலக்கிக்
கொண்டு இருந்தார்கள்.

 
At Thursday, 06 September, 2012, சொல்வது...

சாண்டில்யன் நான் பிறக்கறதுக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சிருக்கார். அவரோட மன்னன் மகள், கன்னி மாடம் எல்லாம் வந்தப்போ குமுதம் ஆரம்பிச்ச புதுசுனு என் அம்மா சொல்வா. ஆகவே கல்கியோட போட்டிக்கு வந்தது சாண்டில்யனாத் தான் இருக்கணும். :))))))) ஜெகசிற்பியன் அதிகம் ஆனந்தவிகடன், கல்கியில் எழுதுவார். விக்ரமன் கலைமகள், அமுதசுரபி போன்றவற்றில் எழுதுவார்.

 
At Thursday, 06 September, 2012, சொல்வது...

கீதா, எனக்கு தெரியாத தகவல்களுக்கு மீண்டும் நன்றி. ஆக, சகலகலாவல்லவரை
சரித்திர கதையும் எழுத முடியுமான்னு எஸ்.ஏ.பி உசுப்பேத்தியிருக்க வேண்டும்.

 
At Friday, 07 September, 2012, சொல்வது...

கல்கி மறைந்தது டிசம்பர் ஐந்து, 1954 என்கிறார் விக்கி. மோகினி பெயரில் கதைகள் எங்கள் கலெக்ஷனில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு நான் மதுரை சென்று அலச வேண்டும்!! எழுதும் சப்ஜெக்டுக்குத் தகுந்த பெயர் தெரிவு செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள் அவர்! லிங்க்குக்கு நன்றி.

 
At Friday, 07 September, 2012, சொல்வது...

அகழ்வாராய்ச்சி போல இருக்கே!!!!

நீங்க சொல்லும் கதைகள் எதுவுமே படித்த நினைவில்லை.

நம்ம வீட்டில் கல்கி விகடன் மட்டுமே வாங்குவாங்க.

சின்னக்காதான் பொன்விலங்கு, கல்கி ராஜேந்திரன் எழுதிய இன்னொரு நாவல் ( அதுலே ஒரு நர்ஸ் கேரக்ட்டர் உண்டு) அப்புறம் வேறென்னன்னு இப்போ நினைவில் இல்லை பைண்ட் செஞ்சு வச்சுருந்தாங்க.

எங்க வாழ்க்கையில் நாங்க குமுதம் வாசிக்க ஆரம்பிச்சுருந்தோம். சாண்டில்யன் எல்லாம் கோபால்தான் படிப்பார்.

இப்போ..... சுத்தம். நோ வாராந்தரி:-)

 
At Friday, 07 September, 2012, சொல்வது...

//ஆக, அது சாண்டில்யனா? //
சாண்டில்யன் தான். குமுதத்தில் அவர்தான் தொடர்ந்து சரித்திரக்கதைகளாக எழுதிக்கொண்டிருந்தார். ஒரு பிரேக் எடுத்த சமயத்தில் ராகிர இதனைத் தொடங்கினார். இது பற்றி ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’ என்ற அஞ்சலி நூலில் ராகிரவே எழுதியிருக்கிறார்.
தகவல் ஒரு புறமிருக்க, இந்த ஒரு வரி மாமி டச் கூட இல்லாவிட்டால் பதிவு எப்படி சிறக்கும்? ;-)

 
At Sunday, 09 September, 2012, சொல்வது...

குமுதம் எப்போ ஆரம்பிச்சது? கீதா எனக்கே பதினாலு,பன்னிரண்டு வயதில் மன்னன் மகள் படித்த நினைவு.
ஜகத்சிற்பியன் தானெ ஏழிசைவல்லபியின் சிற்பி?

 
At Sunday, 14 October, 2012, சொல்வது...

ஆமாம் வல்லி, விகடனில் ஜெகசிற்பியன் எழுதிய திருச்சிற்றம்பலம், ஆலவாய் அழகன் இரு நாவல்களும் பள்ளிநாட்களில் நான் மிகவும் ரசித்துப் படித்தவை.

 

Post a Comment

<< இல்லம்