Friday, March 08, 2013

அம்மா- வாழ்வதின் பெயர் வாழ்க்கை


எல்லாரும் சொன்னோம் ஆனால் அம்மா கேட்கவில்லை. திரும்ப திரும்ப ஓரே பல்லவி. எனக்கு ஆபரேஷன் வேண்டாம், அதற்கு பிறகு ரேடியேஷன், கீமோதொரபி பற்றிக் கேள்வியும்பட்டிருக்கிறேன், எல்லாம் ஆண்டு அனுபவித்தாச்சு, இனியும் ஆபரேஷன் செஞ்சி அறைகுறையாய் ஏழு எட்டுஆண்டுகள் வாழ்வதைவிட, என் இஷ்டம்போல் ரெண்டு மூணு வருஷங்கள் வாழ்ந்துவிட்டு போய் சேருகிறேன், அப்பாவையும் வைத்துக்கொண்டு உங்களுக்கு எல்லாம் கஷ்டம் “ என்றார். மார்பக புற்றுநோய், இரண்டாம் நிலை. எங்களாய் எதுவும் பேச முடியவில்லை, அம்மாவை நினைத்து நினைத்து தூக்கம் வர மறுத்தது. என்ன செய்வது? அங்கங்கு விசாரித்ததில் ஆபரேஷன் பண்ணிட்டு வாங்க, மேற்கொண்டு பரவாம இருக்க, ஆயுர்வேதம், சித்த வைத்தியம் செய்கிறோம் என்றார்கள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. இப்படியே ஒரு வாரம் போனது. சென்னை கேன்சர் இன்ஸ்ட்டீயூட் சாந்தா அவர்களை பார்த்தாகிவிட்டது. ஆபரேஷன் ஓரே தீர்வு என்று சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் எல்லா டெஸ்டும் எடுத்தாகிவிட்டது. இப்ப வேண்டாம் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது? பேசாமல் இருந்தால் சரியில்லை, இப்படியே விட முடியாது. நாளைக்கு திரும்ப அதே மருத்துவமனைக்கு சென்று மீண்டும் ஆரம்பிப்போம் என்றார் என் கணவர். இதை அம்மாவிடம் சொன்னதும், கண்ணை இருட்டிக்கிட்டு வருது என்று அப்படியே படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் கண்முழித்தவர், “என்னை இப்படியே விட்டு விடுங்கள்” என்று கதறிவிட்டார். எனக்கு என்ன செய்து என்றே தெரியவில்லை. துளசியிடம் சொல்லி என்பெயர் குறிக்காமல், விஷயத்தை எழுதுங்கள், ஏதாவது வெளிச்சம் கிடைக்குமான்னு பார்ப்போம் என்றேன். அது இது தான். அதே நேரம் என் அத்தை (அப்பாவின் சின்ன தங்கை) போன் செய்தார். மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் வெங்கட்நாராயணா ஆயுர்வைத்தியசாலை இருக்கு, அங்கு இப்படி ஒரு பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் தந்தாங்களாம். விசாரித்து பார்” என்றார். கூகுளின் உதவியால் போன் நம்பர் பிடித்து, போன் செய்து டாக்டரிடம் பேச வேண்டும் என்றேன். விஷயத்தைச் சொன்னதும், அவர் பேஷ்ண்டை அழைத்து வர வேண்டாம், அவருடைய ரெகார்ட்ஸ் மட்டும் கொண்டு வாங்க, நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நான் கிளம்பும்பொழுது, அம்மா நானும் வருகிறேன் என்று அடமாய் வண்டியில் ஏறிக் கொண்டார். எங்கள் நேரம் வந்ததும் உள்ளே போனோம். அம்மாவின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நான் சொன்னது அனைத்தையும் கேட்டார். சரி செய்திடலாம் என்று ஒற்றை வார்த்தை சொன்னார். அம்மாவின் முகம் மலர்ந்தது. நோயைப் பற்றி நினைக்க வேண்டாம், சாதாரணமாய் உங்கள் வேலைகளைப் பாருங்கள், அதற்காக ஸ்ரெயினும் பண்ணிக்காதீங்க, பழம், காய், கீரை சாப்பிடுங்கள், காய்,கீரை வேகவைத்து, புளி அதிகமில்லாமல் சாப்பிடுங்கள். மனசை ரிலாக்சாய் வைத்துக் கொள்ளுங்கள் கோவில் குளம் என்று உங்களை எங்கேஜ் செய்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொன்னார வாசலில் தன்வந்திரி கோவில், அம்மா சுற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, டாக்டர் அறைக்கு நான் மட்டும் சென்றேன். அவர், “ ஆரம்ப கட்டம் என்பதால் ஆபரேஷனுக்கு நானும் சிபாரிசு செய்கிறேன். ஆனால் இப்படி பயப்படுவதால், அதுவே அவருக்கு கேடாக ஆகலாம், பார்க்கலாம் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொன்னது நவம்பர், 2011 அன்று. ஆயிற்று கிட்டதட்ட பதினைந்து மாதங்களுக்கு மேல். அம்மா நன்றாக இருக்கிறார். கட்டியும் நன்கு கரைந்து உள்ளது. மருந்து பாதி, அம்மாவின் எதற்கும் அலட்டிக்காத விசேஷ குணம் பாதி. இதோ அம்மாவின் ஒரு நாள் :-) காலை சின்ன சின்ன வேலைகள், பூஜை, சுலோகம், துளசிக்கு தண்ணி விடுதல் போன்று! காலை சாப்பிடும் முன்பு ஒரு கவளம் சாதம். காக்கா , குருவிக்கு!. குருவி மட்டுமில்லை, இங்கு விதவிதமாய் பறவைகள் வருகின்றன. அம்மாவுக்காக காலை எட்டு மணிக்கு ரெடியாய் காத்திருக்கும். பிறகு தினமலர் படித்தல் வாரமலர் குறுக்கெழுத்து புதிர்கட்டம் நிரப்புதல், குரோஷா போன்று கைவேலைகள். இப்பொழுது துண்டுதுணிகள், ஒரு பெரிய பை நிறைய இங்கிருக்கும் ஒரு டெயிலரம்மாவை பிடித்து வாங்கி வந்து சின்ன சின்னதாய் கட் பண்ணி பேட்ச் ஓர்க் பண்ணுகிறாராம், இப்பதான் ஆரம்பித்துள்ளார். பிறகு ஏதாவது பத்திரிக்கை படித்துக் கொண்டே ஒரு சின்ன தூக்கம். மதியம் இரண்டு சீரியல்கள். மாலை வீட்டு எதிரிலேயே பார்க்கில் நாலு ரவுண்டு. பிறகு தன் வயதொத்த பெண்களுடன் கொஞ்சம் அரட்டை. பிறகு அங்கேயே இருக்கும் வேதபுரீஸ்வருக்கு ஒரு ஹலோ! நாய் என்றால் அலறி ஓடும் அம்மாவை ஃபூவும், இனியும் மயக்கிவிட்டன. தங்களை தடவிக் கொடுக்காமல் தாண்டி போகவிடாது. போதாக்குறைக்கு “ஜில்லிக்கா” என்ற பூனை காலை மாலை பாலுக்கு வந்துவிடும். அம்மாவின் புடவை நுனியை இழுத்து ஏதாவது போடேன் என்றளவுக்கு பெட். தான் தொட்டியில் வைத்த புதினாவை ஆய்ந்து என்னிடம் தந்து, நாளைக்கு சட்னி அரைத்துவிடு என்று ஒரு ஆர்டர். மாலை, இருக்கும் பூவை எல்லாம் பறித்து வேதபுரீஸ்வரருக்கு ஒரு மாலை. சனிக்கிழமைகளில் துளசியை பறித்து அனுமாருக்கு மாலை. காம்பவுண்ட் வால் கிட்ட ஒரு சின்ன சிமிட்டு தொட்டி இருந்தால் நல்லா இருக்கும், மாடுங்க தண்ணிக்கு அலையுதுங்க. என்னால சின்ன பக்கெட்டில்தான் தண்ணி வைக்க முடியுது என்று எங்களிடம் ஒரு அங்கலாயிப்பு. கோவில் இருந்து, ஆறரை மணிக்கு வீட்டு வந்தால் என்னிடம் பேசிவிட்டு, சீரியல் பார்க்க ஆரம்பித்தால், ஒன்பதரை வரை ஓடும். சாமிபடம் பக்கத்தில் பெரிது பெரிதாய் ரெண்டு கவர்கள் என்னமா இது என்றால் சிவராத்திரி வருதில்லே, இந்த வீபூதியை, சின்ன சின்ன ஜிப் பேக்கில் போட்டு குடுன்னு குருக்கள் சொன்னார் என்றார். என்னமோ செய் என்று ஆசிர்வதித்தேன். ************** இன்று மகளிர்தினம், வயதானப்பிறகு எப்படி வாழ வேண்டும், நோயை எதிர்க்கும் மனபக்குவம் , தைரியம், வாழ்வை ரசித்தல், சுறுசுறுப்பு என்று அம்மாவிடம் இருக்கும் நல்லவைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

9 பின்னூட்டங்கள்:

At Friday, 08 March, 2013, சொல்வது...

போன முறைப் போல இம்முறையும் பத்தி பிரித்துப் போட்டது இப்படி மொத்தமாய் வந்துவிட்டது.
விஷயம் தெரிந்தவர்கள் உதவி ப்ளீஸ்

 
At Friday, 08 March, 2013, சொல்வது...

கூகிளார் சமயத்தில் இப்படித் தான் காலை வாருவார். உங்கள் அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள். பெண்கள் தினத்துக்கு அருமையான பகிர்வு. அது என்னமோ இன்று காலையிலிருந்து எனக்கும் என் அம்மாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. இங்கே வந்து பார்த்தால் உங்கள் அம்மா குறித்த பதிவு. வாழ்த்துகளையும், நமஸ்காரங்களையும் தெரிவியுங்கள்.

 
At Friday, 08 March, 2013, சொல்வது...

அம்மா நன்றாக இருப்பார். இத்தனை ஆக்டிவிடி என்னால கூட முடியாது:)

மகளிர்தின வாழ்த்துகள் உஷா. நமஸ்காரங்கள் அம்மாவுக்கு.
இந்தத் திடம் எப்பவும் நிலைக்கட்டும்.

 
At Friday, 08 March, 2013, சொல்வது...

படிக்கும் போதே என்னடா பத்தி இப்படி இருக்கே என்று யோசித்தேன்.Preview வில் பார்க்கும் போது எப்படி உள்ளது?
புதிய template க்கு மாறி பாருங்கள்.

 
At Friday, 08 March, 2013, சொல்வது...

ஹைய்யோ!!!!!

மனசுக்கு ரொம்பவே நிம்மதியாவும் மகிழ்ச்சியாவுமிருக்கு!

அதுலேயும் செல்லங்களுடன் பழகுவதுதான் சூப்பர். நமக்கு எத்தனை மன அழுத்தம் கவலை இருந்தாலும் அதுகளைப் பார்த்தாலே மனம் லேசாகிரும்.

கடவுள் பக்தி , கடவுளிடம் அன்பு என்று சொல்றோமே அதெல்லாம் மனசுக்கு நிறைவைத்தரும் சமாச்சாரங்கள் உஷா.

சின்ன மாலை ஒன்னு கட்டி சாமிக்குச் சாற்றும்போதும் அழகா இருக்குலே ன்று நினைத்து ரசிக்ககும்போதும் ஒரு சந்தோஷம் மனசுலே ஓடும் பாருங்க.... ஆஹா விவரிச்சுச் சொல்லமுடியலை என்னால்!

எல்லாத்துக்கும் மேலே எப்ப காலம் முடியுதோ அப்பப்போயிடலாமுன்னு மனசை சமாதானப்படுக்கிறது. இதுக்கு மனோ தைரியம் மிகத்தேவை.

எல்லாம் அம்மாவிடம் பூரணமா நிறைஞ்சுருக்கு!

இருக்கும் காலம் வரை தே மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ வாழ்த்துகின்றேன்!

 
At Saturday, 09 March, 2013, சொல்வது...

அம்மா உடல் நலம் பெற முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

சில நேரங்களில் பெரியவர்கள் அடம் பிடிப்பது தாங்கள் படுத்த படுக்கையாகி மற்றவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்றுதான்..!

இந்த வயதிலும் பிள்ளைகளுக்காக ஒரு தியாகம்..!

 
At Saturday, 09 March, 2013, சொல்வது...

உங்க அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்.

html ல்ல பேஸ்ட் பண்ணறீங்களா? அப்படி செஞ்சா அப்புறமா திருப்பியும் compose mode க்கு போய் பத்தி பிரிக்கணும். இல்லை நேரடியா compose mode ல பேஸ்ட் பண்ணுங்க!

 
At Sunday, 10 March, 2013, சொல்வது...

'சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து' என்று நாங்கள் கொஞ்ச நாள் முன்பு பகிர்ந்து கொண்ட பதிவொன்றில் இப்போது ஹுஸைனம்மா மறுபடி வந்து இந்த லிங்க் கொடுத்திருந்தார். அதைப் பிடித்து வந்தேன்.

கேட்க சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் வீட்டிலும் ஒரு பேஷன்ட் உண்டு. ஆபரேஷன் செய்து கொண்ட பேஷன்ட். இவரைப் பரிந்துரைக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் எங்கள் பதிவையும் ஒருமுறைப் படித்துப் பாருங்களேன்.

அம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

 
At Monday, 11 March, 2013, சொல்வது...

/வயதானப்பிறகு எப்படி வாழ வேண்டும், நோயை எதிர்க்கும் மனபக்குவம் , தைரியம், வாழ்வை ரசித்தல், சுறுசுறுப்பு /

அம்மாவுக்கு என் வணக்கங்கள். அவருக்கும் தங்களுக்கும் என் மகளிர்தின வாழ்த்துகள்.

 

Post a Comment

<< இல்லம்