Friday, July 25, 2014

ஆண்டாள்கிளியின் கண்கள்-1

தினகரன் தினசரியின் ஞாயிறு இணைப்பான வசந்தம் இதழில் நான் எழுதிய  நாலுவார குறுந்தொடர் வெளியாகியுள்ளது. வார்த்தைகள் வாரா வாரம் ஐநூறு என்றதாலும், நாலு வாரத் தொடர் என்பதாலும் சொல்ல வந்ததை எப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.
இதோ!

ஆண்டாள்கிளியின் கண்கள்-1

அலுவலகத்தின் ஆல் இன் ஆல் ஆன   மேனேஜர்   எகிப்தியன்  நஜீம்   தன் அறை கதவைத் திறந்துக் கொண்டு வெளியேறுவதைப் பார்த்த அசோக், கணிணியில் தான் பார்த்துக் கொண்டிருந்த அலுவலக வேலையை “சேமி” என்று கிளிக்கியப்பின்,  கூகுளுக்கு சென்று “மைக்கா” என்று டைப் அடித்தான்.
துபாயின் ஜூன் மாத  வெய்யில், ஏசி அறையின் ஜன்னலைத் தாண்டி சுள் என்று அடித்தது. எழுந்து திரை சீலையை இழுத்துவிட்டான் அசோக்.

ஜூலை, ஆகஸ்டில் பள்ளி கோடை  விடுமுறை. விடுமுறை பாடமாக  “மைக்கா” வைப்பற்றி பிராஜெக்ட் ஓர்க் நான்காவது படிக்கும்  மகன் ஸ்வரூப்புக்கு! மைக்காவிற்கு  தமிழில் என்னவென்றுப் பார்த்தால் காக்கா பொன் என்றது கணிணி.

காக்காபொன் ! எடப்பாடியில்  தெருவில் அங்கங்கு கிடைக்கும்.  சின்ன வயதில் முழு பரிட்சை முடிந்ததும்  விடுமுறைக்கு முதலில்  சேலம் தாத்தா  வீட்டுக்கு, பிறகு  அங்கிருந்து எடப்பாடி அத்தை வீட்டுக்கும் பத்தாவது வரை போனது . அத்தை பிள்ளைகள் ப்ரியாவும் பிரபாக்கரையும் பார்த்து எவ்வளவு  வருடங்கள் இருக்கும்?

செல் அடித்தது. லதா!  எடுத்ததும், “என்ன உங்க மேனேஜர் கிட்ட லீவ்க்கு சொன்னீங்களா?  நிறைய வேலை இருக்குபா” பட படவென்று பேசிக் கொண்டே போன மனைவியை இடைமறித்து, “ இன்னைக்கு என்னவோ அவன் ரொம்ப பிசியாய் இருக்கான். இப்ப வெளியே போயிருக்கிறான், இப்பவும் சொல்லறேன் லதா !கொஞ்சம் யோசி, உன் ஆசைக்காக, நம்ம சக்தியை மீறி லோன் போட்டு  த்ரி பெட்ரூம் ப்ளாட் சென்னையில  வாங்கியிருக்கோம்.  எங்க அம்மா, அப்பா வைத்து சிம்பிளாய் கிருகப்பிரவேசம் செஞ்சிடலாம்.

லதா, நா வேலை செய்யறது   ஆயில் கம்பனி இல்லை. லோக்கல் அரபி நடத்துகிற  சின்ன கம்பனி. ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை டிக்கெட்டுக்கு காசு,  லீவ், லீவ் சாலரி  கொடுக்கவே அவன் மூக்கால் அழுகிறான்.  அதுக்கூட எல்லாருக்கும் கிடைக்காது. ஆபீஸ் அசிஸ்டெண்ட் சையது  ஊருக்குப் போயி நாலு வருஷம் ஆச்சு.  கல்யாணம் ஆகி, ஒரு மாசத்துல வந்தவனுக்கு, இப்ப மூணு வயசுல குழந்தை இருக்கு, அதன் முகத்தைக் கூட இன்னும் பார்க்கலைன்னு அவன் புலம்பாத நாளே இல்லே. போன வருஷம் நாம ஊருக்கு போயிட்டு வந்தோம். இப்ப லீவ் கேட்டா கிடைக்குமான்னு டவுட்டுத்தான்”
லதா, “ டிக்கெட்டுக்கு பணம் கேக்கலையே! லீவ் மட்டும்தானே? உங்களுக்கு ஒரு வாரம் போதுமே!” கேட்டதும், , “ மூணு பேருக்கு டிக்கெட், மத்த செலவுங்க., சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் லதா” என்றதும், “ அப்ப செலவு செய்ய உங்களுக்கு மனசு இல்லே, லீவு கிடைக்கலைன்னு கத வுடுறீங்க” என்று கோபத்துடன் செல்லை கட் செய்தாள்.

எரிச்சலுடன் தன் செல்பேசியை அணைத்தவன், கணிணியில் கையிருப்பு, லோனுக்கு கட்ட வேண்டிய தொகை, என்று கணக்குப் போட ஆரம்பித்தான். கொஞ்சம் சிக்கனமாய் செலவழித்தால், சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் லதாவை அழைத்தான்.
 கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். அரைமணி நேரம் கழித்தது அழைக்கிறேன் என்ற குறுந்தகவல் வந்தது.

   உன் விருப்பம் போல செய்யலாம் என்று அசோக் பதில் அனுப்பினான். பதிலாய் ஒரு ஸ்மைல்லி  வந்தது அந்நேரம்  மேனேஜர்  உள்ளே நுழைந்ததைப்  பார்த்ததும், அவசரமாய் அலுவலக பணியை ஆரம்பித்தான் அசோக். கதவு பக்கம்  ஆபீஸ் அசிஸ்டெண்ட் சையதைப் பார்த்ததும், மூட் எப்படி என்று சைகைக் காட்டியதும், கட்டை விரலைக் காட்டினான் சையது

மெல்ல மேனேஜரின் அறை கதவை தட்டியதும், “வரு வரு அசோக்” என்று ஆர்ப்பாட்டமாய் அழைத்தான். அவன் அகராதியில் இந்தியாவில் இரண்டே மொழிகள் ஒன்று ஹிந்தி, மற்றொன்று மலையாளம். அவனுக்கு தெரிந்த ஒன்றிரண்டு ஹிந்தி, மலையாள வார்த்தைகளைப் பேசினால் அவன் மூட் நன்றாக இருக்கிறது என்று பொருள்.

“ஜூலை முதல் வாரம் ஊருக்கு போக லீவ் வேணும்.. ஊர்ல கொஞ்சம் அவசர வேலை” ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும்," இந்த ஜூலை, ஆகஸ்டு வந்தால் ஸ்கூலுக்கு லீவ் விட்டு விடுகிறார்கள்.எல்லோரும் கிளம்பிடுறீங்க! டேனியலும் லீவ் அப்ளை பண்ணியிருக்கான்.  நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுங்க. உனக்கு லீவ்  ஒரு வாரம்ன்னா சாலரி தரேன் அதுக்கு மேலேன்னா சாலரி கட். ஆனா டிக்கெட் கிடையாது” என்றதும், இது போதுமே என்று  நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அசோக்.

சீட்டில் உட்கார்ந்ததும், டேனியல் ப்ரீயாய் இருக்கிறானா என்று சையதைப் பார்க்க சொன்னான்.. அதற்குள் டேனியலே அவனை தேடி உள்ளே வந்தான்.

கிருகப்பிரவேசத்துக்கு ஆங்கிலத்தில் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்த அசோக்” ஹவுஸ் வார்மிங் செரிமனி டேனியல். ப்ளீஸ் ஓரே வாரம் நான் வந்ததும்  நீ கிளம்புகிறாயா? “ என்றுக் கேட்டதும், அதுக்கு என்ன சார், ஆனால் டிக்கெட்டை . போஸ்ட் போன் செய்ய முடியுமான்னு தெரியலையே என்றான்.

" நம்ம ஆபீஸ்ல வழக்கமா புக் பண்ணுகிற டிராவல்ஸ் தானே? அங்க கோபாலன்னு ஒரு  பிரண்டு  இருக்கான். அவன கேட்கிறேன்  என்ற   அசோக். அவன் முன்னாலேயே கோபாலை அழைத்து விவரம் சொன்னதும், ப்ரீ போன் தான் கஷ்டம்,  போஸ்ட் போர்ன் செய்யலாம் என்று உறுதிக் கொடுத்தான்.
அதற்குள் லதாவின்  அழைப்புகள்.

டேனியல் நகர்ந்ததும், “எல்லாம் வீட்டுக்கு வந்து விவரமாய் சொல்கிறேன். . ஆனா திரும்ப சொல்கிறேன். ஊரையே கூப்பிட்டு ஆடம்பரமாய் வேண்டாம். ஒரு அம்பதாயிரம் பட்ஜட் அது தாண்ட கூடாது”  என்று கண்டிப்பாய் சொன்னான்.

 ஏதோ பெரிய சத்தம் கேட்டு,  அதிர்ச்சியுடன் திரும்பியவன் கண்ணில், உடல் ஒரு மாதிரியாய் விரைக்க,  அறை கதவை இடித்துக் கொண்டு  சையது  மயங்கி  விழுவதைப் பார்த்தான்.
(தொடரும்)
                                                                    
 

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்