Thursday, September 11, 2014

ஆண்டாள்கிளியின் கண்கள் -2

                                         

சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். அசோக் குளிர்ந்த நீரை   சையதின் முகத்தில் அடித்து  எழுப்பி உட்கார வைத்தான். என்ன ஆச்சு என்று ஆள் ஆளுக்கு கேட்க , சையது பதில் சொல்லவில்லை அவன் கையில் இருந்து தெரித்து விழுந்த செல்பேசியை எடுத்துக் கொடுத்த அசோக், ஏதாவது மரண செய்தியா என்று  கேட்க,  இல்லை என்பதுப் போல தலையை ஆட்டினான்.

வெறித்த பார்வையில் அமர்ந்திருந்தவனின்,  தோளைத் தட்டி தன் அறைக்கு வருமாறு அழைத்தான் அசோக்.

அறை கதவை தாளிட்டுவிட்டு, “என்ன பிரச்சனை” என்றதும், சையது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். அவன் அழட்டும் என்று  பேசாமல் இருந்தான் அசோக்.

 சையது, தன்னை சமாளித்துக் கொண்டு, “ என் மனைவியை தப்பாக பேசுகிறார்கள் சாரே!” என்றான் மலையாளத்தில்.

“யார் சொன்னது?”

“என் அம்மாவும் அக்காவும்! சுபேதா படிச்ச பொண்ணு  சார். இதுவரை ஆசப்பட்டு இது வாங்கி வா, அது வாங்கிவான்னு ஒரு நாளும் கேட்டது இல்லே. நிக்கா முடிஞ்சி, ஒரு மாசத்துல நான் இங்க வந்துட்டேன்.  மூணு வயசு குழந்தை முகத்தைக் கூட இன்னும் நான் பார்க்கலை. அவ எங்க  போறா வரா ன்னே தெரியலன்னு அம்மாவே சொல்ராங்க சார்!” என்றுச் சொல்லி தலை தலையாய் அடித்துக் கொண்டான்.

அதற்குள் அறை கதவு தட்டும் ஒலி.

“சையது! இதை யாருக்கிட்டையும் டிஸ்கஸ் செய்யாதே! கேட்டா குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிடு “ அசோக் எச்சரித்தான்.

மேனேஜரிடம் இருந்து  சையதுக்கு அழைப்பு. அவன் வெளியேறியதும்,  சையதை எப்படியாவது ஊருக்கு அனுப்ப வேண்டும், என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

“சாரே” என்று பரபரப்பாய்  உள்ளே வந்த சையது, “மேனேஜர் ஒரு மாசம் லீவும், லீவ் சாலரி, டிக்கெட் எல்லாம் தரேன்னு சொல்லிட்டார்.  ஆனா இந்த சம்மர் சீசன்ல டிக்கெட் கெடைக்கிறது கஷ்டமே சார்” என்றதும், மீண்டும்  டிராவல்ஸ் கோபாலனுக்கு போன் அடித்தான் அசோக்.

“கேரளாவுல எந்த ஊருக்கும் டிக்கெட் கிடைக்காது.  ஒரு நிமிஷம் இரு. சென்னைக்கு இருக்கும்ன்னு நினைக்கிறேன். பார்த்து சொல்கிறேன் என்றவன், சில நிமிடங்களில், “ஜூலை மூணாம் தேதி டிக்கெட் இருக்கு, போட்டுடவா?” என்றதும், பிளாக் செய்ய சொன்னான் அசோக்.

“சையது! அதே  பிளைட்டுல, ஜூலை மூணாம் தேதிதான் நானும் சென்னைக்கு போகிறேன். சென்னையில இருந்து டிரெயின்ல திருச்சூர் போயிடலாம்” என்றவனிடம், இல்லே சாரே, ஊர்ல இருந்து கார் வந்துடும். லக்கேஜ் எடுத்துக் கொண்டு டிரெயினில் போவது கஷ்டம் என்றான்.

துபாயில் இருந்து திரும்புகிறவன் ரயிலில் வந்திறங்கினால்  பிரஸ்டீஜ் பிரச்சனை . அசோக் மெல்லிய புன்னகையுடன்,  “சாயந்தரம் முதல்ல  போய் டிக்கேட் எடுத்துடு . ஜூலை எண்டுல   ரிட்டன் டிக்கெட் கிடைச்சிடும். காசு கைல இல்லைனா சொல்லு நான் தாரேன்” என்றான்.

“இந்த  ஹெல்ப் போதும் சாரே” என்றவன் கண்கள் கலங்கின.  அசோக் எழுந்து அவன் முதுகைத் தட்டி, “ சாயந்தரம், கரோமா பார்க்குக்கு போகலாம், அங்க பேசலாம்  தைரியமா இரு. அம்மாவானாலும்  மகனுக்கு கல்யாணம் ஆயிட்டா மாறிடராங்க. இப்ப ஊருக்கு போன் செய்யாதே என்றான்.

ஐந்து மணிவாக்கில் மேனேஜர் கிளம்பியதும், அசோக், , சையதைப் பார்த்து ஜாடை காட்டிவிட்டு,  தன் காரை  எடுத்துக் கொண்ட் கரோமா பார்க்கை அடைந்தான்.

சையதுக்கு ஆபீஸ் அசிஸ்டெண்ட் வேலை ! டிரைவரும் அவனே.  ஆபிசுக்கு  தேவையான சாமான் வாங்கி வருவது அலுவலகத்தை யும் கழிவறைகளையும் சுத்தம் செய்வது,  டீ போட்டு கொடுப்பது  போல வேலைகள்.

சையது வேகமாய் வருவதைப் பார்த்த அசோக் கையை ஆட்டினான்.

 “ சுபேதா இப்ப விளிச்சி பறஞ்சதைக் கேட்டு தலைசுத்துத்து சாரே!” என்றான்.

 சுபேதா, கணவன் அனுப்பிய பணத்தைத் தொடாமல் அப்படியே சேமித்து இருக்கிறாள். அவள் செய்யும் தையல் , எம்பிராயிடரி வேலையில் கிடைக்கும் பணம் மட்டுமே குடும்ப செலவுக்கு ! அவளுக்கு தெரிந்தவர்கள்,  தங்கள் மகளின் கல்யாண செலவுக்கு அவர்களுக்கு சொந்தமான வீடுகளில் ஒன்றை விற்கப் போகிறார்களாம். கல்யாண சமயம்   வீட்டை விற்பதால்,  யாருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். அடுத்த வாரம் ரிஜிஸ்ட்ரேஷனாம்!

, “நல்லவேளை  உன் பொண்டாட்டிக்கிட்ட எதுவும் கேக்காம போனீயே?” என்றான் அசோக்.

 “இல்லை சாரே! அவ குணம் எனக்கு தெரியும். சொந்தக்கார பொண்ணுதான். சின்ன  வயசுல  இருந்தே, ரொம்ப பொறுப்பு! ஏழப்பட்ட குடும்பம், எங்க வீட்டூல வேணாம்ன்னு சொல்லியும், பிடிவாதமாய் கட்டிக்கிட்டேன். அக்கா ஏதோ பணம் கேட்டு இருக்கு. சுபேதா இல்லேன்னு சொல்லிட்டு, விஷயத்தை சொல்லாமே இங்கே அங்க அலைஞ்சது அவுங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு. வீட்டுக்கும் போன் செஞ்சி பொதுவா வீடு வாங்க பார்க்கிறான்னு சொல்லிட்டேன்” என்றான்.

“ மெயின் ரோடுக்கு பக்கத்துலையே வீடு. வீட்டுக்கு முன்னாடி எடம் இருக்காம். பங்ஷ்ன்களுக்கு பாத்திரம், மத்த சாமான்கள்  சப்ளை செய்கிற பிசினசும் ஆரம்பிச்சிடலாம். டிரைவிங் லைனன்ஸ்சும்  இருக்கிறதாலே, ஒரு வண்டி  வாங்கி நானே சப்ளையும் பண்ணிடலாம். இன்னும் ரெண்டே வருஷம்  ஊரிலேயே செட்டில் ஆயிடணும்ன்னு சுபேதா சொல்லிட்டா.” உற்சாகமாய் சொல்லியவன் முதுகைத் தட்டி, “இங்க வருகிறவங்க சொல்லுகிறே அதே டயலாக். ஆனா அப்படி ஊர் பார்த்து போனவங்களை நான் பார்த்ததில்லை” என்றான் அசோக்.

“ இன்ஷா அல்லா!  வாங்க சார், சரவண பவன்ல ஸ்வீட்டும், காபியும் என் ட்ரீட்டு” உற்சாகமாய் அழைத்தான் சையது.
(தொடரும்)


 

1 பின்னூட்டங்கள்:

At Wednesday, 29 October, 2014, சொல்வது...

ஆண்டாள் கிளியின் கண்கள் என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்?

இரு பாகங்களும் அருமை.. என்னைபோல 12 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் சுற்றுவோருக்கு நெருக்கமாக இருக்கிறது.

வணக்கம்.

 

Post a Comment

<< இல்லம்