ரெளத்திரம் பழகு
நேற்றைய தினமலரின் , வாரமலரில் என்னுடைய சிறுகதை "ரெளத்திரம் பழகு" எடிட் செய்து, அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வரிசையில் வந்துள்ளது. சேலம், ஈரோடு, திருச்சி, வேலூர் பதிப்புகளில் மட்டும் கதை வந்துள்ளது. கதையின் மைய கருவை ஹை லைட் செய்திருப்பது மகிழ்ச்சி.
போன மாசம் சினிமாக்குப் போனோமே, அங்க ஒருத்தன் உன் காலை மிதித்துவிட்டான்னு சண்டைக்குப் போனீயே நினைவிருக்கா?” சந்தியா குழப்பத்துடன் தலையை ஆட்டினாள்.
அன்னைக்கு அவன் உன் காலை மிதிச்சான். நீ அவனைப் பார்த்து சத்தம் போட்டே. அதோட அது முடிஞ்சது. எல்லாமே நம் உடம்பு பாகங்கள் தானே. இதுக்கு மட்டும் ஏன் இப்படி முக்கியத்துவம் தரணும்?”
ரெளத்திரம் பழகு
மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டு இருந்தது. மதியம் ஒரு மணிக்கு, நாத்தனார் சுஜாதாவுடன் சென்ற மகள் சந்தியா , இன்னும் வீடு திரும்பவில்லை.
அலுவலக வேலையாய் கோவை சென்றிருந்த கணவர், மகள் வந்தாச்சா என்று தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்க, மகளுக்கும் நாத்தனாருக்கும் செல் அடித்தால் இருவரும் எடுக்கவில்லை.
பொறுமை இல்லாமல் தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தவள் கண்ணில். பத்துவயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் “உணர்வுப்பூர்வமாய்” காதல் பாட்டுக்கு ஆடுவதைப் பார்த்து எப்படி பெற்றோர்கள் இதை அனுமதிக்கிறார்கள், தொலைக்காட்சிகளுக்கு சமூக அக்கறை வேண்டாமா , நடு வீட்டில் இந்த ஆபாசங்களை மக்கள் குடும்பத்துடன் எப்படி பார்க்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் ,
செல் அடித்தது.
சுஜாதா! “ சாரி அண்ணி! பயங்கர டிராபிக் ஜாம். இன்னும் பத்தே நிமிஷத்துல வந்துடுவோம்.. வாசல்லே சந்தியாவை இறக்கிட்டுப் போரேன். உள்ளே வர நேரமில்லை” என்று படபடத்த சுஜாதாவிடம், “ நல்லா சுத்துனீங்க” என்று ஆரம்பித்த உமாவிடம்,” அண்ணி! நாங்க டின்னர் சாப்பிட்டாச்சு. சந்தியாதான் தலைவலின்னு சரியா சாப்பிடலை. கீரீன் சிக்னல் விழுந்துடுச்சு” பேச்சு கட் ஆனது.
சமையலறையை சுத்தம் செய்துவிட்டு, விளக்கை அணைக்கும்பொழுது கார் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வாசல் கதவை திறக்கும்பொழுது, கார் கண்ணாடி வழியாய், கையை ஆட்டிக் கொண்டே, சுஜாதா காரை வேகமாக கிளப்பிக் கொண்டுப் போனாள்.
இரண்டு கை நிறைய பைகளுடன் வீட்டின் உள்ளே நுழைந்த சந்தியா அவைகளை சோபாவின் மீது வைத்துவிட்டு, நேராக கழிவறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டாள்.
ஷவரில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் சுஜாதா இவளுக்கு தலைவலி என்றாளே, பச்சை தண்ணியில் குளிக்கிறாளே என்ற ஆதங்கத்துடன், கதவை தட்டினாள் உமா.
பதில் வரவில்லை. தண்ணீர் விழும் ஒலி மட்டும் கேட்டது.
முன் கேட்டையும், வாசல் கதவையும் பூட்டி விட்டு, மற்ற எல்லா கதவுகளும் மூடி இருக்கிறதா என்று சோதித்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு, படுக்க போன உமா காதில் இன்னும் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
சந்தியா சந்தியா என்று கழிவறை கதவை தட்டினாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு கதவு திறந்தது.
என்ன ஆச்சு இவளுக்கு அத்தையுடன் ஏதாவது மன கசப்பா? அதற்கு வாய்ப்பே இல்லையே! குழப்பத்துடன், மகள் அறையிலேயே உட்கார்ந்திருந்தவளை சந்தியா நிமிர்ந்தும் பார்க்காமல், நேராக படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
ஏதோ நடந்திருக்கிறது! மெல்ல என்ன ஆச்சு சந்தியா என்று முகத்தில் கை வைக்கும்பொழுது, தூக்கம் வருது என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
விளக்கை அணைத்துவிட்டு, படுத்த உமாவின் கண்கள் சொக்கின. ஆனால் தூங்காமல் சந்தியா படுக்கையில் புரள்வது தெரிந்தது. சட்டென்று எழுந்த உமா, விளக்கைப் போட்டாள். சந்தியா முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.
“என்னடா கண்ணு” என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.
அப்படியே தாயின் மடியில் முகம் புதைத்து கேவத் தொடங்கினாள் சந்தியா. அழுதால் மனசு சமாதானம் ஆகும் என்று பேசாமல் மகள் முதுகைத் தடவிக் கொண்டு இருந்தாள் உமா.
“என்ன ஆச்சு கண்ணு? அத்தை ஏதாவது சொன்னாளா?” இல்லை என்பதுப் போல தலையை ஆட்டியவள்,
ஒண்ணுமில்லே மா! தலையை வலிக்குது” என்றாள். ஏதோ மறைக்கிறாள் என்று நன்கு தெரிந்தும், அவ்வளவுதானே , தைலம் தடவரேன், அப்படியே தூங்கு” என்றவாறு தலைமாட்டில் வைத்திருந்த தைல குப்பியை எடுத்தாள்.
கை தைலத்தை தடவினாலும், மனம் கேட்கவில்லை. “சந்தியா, என்னோ மறைக்கிறே, என்ன ஆச்சு” என்றாள் மெல்ல.
எழுந்து உட்கார்ந்த சந்தியா பதில் சொல்லவில்லை.
சில நொடிகளுக்கு பின்பு, “அத்தை கார் எடுக்கப் போனாங்க, என் ரெண்டு கையிலும் ஷாப்பிங் பேக்ஸ், அப்ப எதிரிலே வந்த ஒருவன்ஸ “ அதற்கு மேல் அவள் பேசவில்லை. மெளனமாய் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
உமா அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். உடல் நடுங்கியது. வயிறு கலங்கியது. பொங்க தொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். தொண்டையை செறுமிக் கொண்டு, “சந்தியா” என்று அழைத்தவள் குரல் தெளிவாய் இருந்தத
“நல்லவேளை, மனசுலேயே போட்டு உழப்பிக்காம, என்கிட்ட சொன்னீயே” என்றவள், “சந்தியா, ஒரு பக்கம் பெண்கள் வாழ்க்கையில முன்னேறிக்கிட்டு இருக்காங்க, இன்னொரு பக்கம் பெண்களை உடல் ரீதியாய் கேவலப்படுத்துகிற ஆண்கள் கூட்டமும் அதிகமாயிட்டு இருக்கு. அடுத்த வருஷம் நீ காலேஜ் போகணும், . தனியா , ஹாஸ்டல்ல இருக்கப் போகிறே! இதை எல்லாம் எதிர் கொள்ள உனக்கு தைரியம் வரணும். வண்டி ஓட்டும்பொழுது அலார்ட்டா இருக்கிற மாதிரி, வெளியே போகும்பொழுதும் அலார்ட்டா இரு. எவனாவது வம்பு பண்ணின்னா, நல்லா சத்தம் போடு. இந்த பொறுக்கிங்க எல்லாம் வெறும் கோழைங்க, இது கிரிமினல் குற்றம் தெரியுமா? ஆளை பிடிச்சி போலீஸ்ல ஒப்படைக்கணும் . உனக்கு வேண்டியது மன தைரியம் கண்ணூ!” தழு தழுத்த குரலில் முடித்தாள் உமா.
“எப்படிமா இப்படி நடந்துக்க முடியுது? அப்படி என்ன நான் அசிங்கமாவா டிரஸ் பண்ணிக்கிறேன்? “ அவள் குரல் நடுங்கியது.
“இல்ல கண்ணு!, அப்பாவியான பொண்ணுங்கத்தான் அவனுங்களுக்கு டார்கெட். . நீயாவது என் கிட்ட மறைக்காம விஷயத்த சொன்னியே, எத்தன பொண்ணுங்க, புரியாம , வீட்டுலையும் சொல்ல முடியாம தவிச்சிப் போயிருப்பாங்க. பெத்தவங்க கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. உனக்குன்னு இல்லே கண்ணு, இந்த மாதிரி சம்பவம், வேற யாருக்காச்சும் நடந்து நீ அங்க இருந்தா சும்மா இருக்காதே”
“சரிமா”
“ இதையே நினைச்சி மனச குழப்பிக்காதே! போன மாசம் சினிமாக்குப் போனோமே, அங்க ஒருத்தன் உன் காலை மிதித்துவிட்டான்னு சண்டைக்குப் போனீயே நினைவிருக்கா?” சந்தியா குழப்பத்துடன் தலையை ஆட்டினாள்.
அன்னைக்கு அவன் உன் காலை மிதிச்சான். நீ அவனைப் பார்த்து சத்தம் போட்டே. அதோட அது முடிஞ்சது. எல்லாமே நம் உடம்பு பாகங்கள் தானே. இதுக்கு மட்டும் ஏன் இப்படி முக்கியத்துவம் தரணும்?”
“அம்மா!” அவள் குரல் தழும்பியது.”, ஏன் பெண்ணாய் பிறந்தேன்னு அசிங்கமா இருக்குமா” குரல் உடைந்து சந்தியா சொல்லும்பொழுது, “இல்லே கண்ணு, உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம். இதுல உன் தவறு ஒண்ணுமில்லே. சாணில காலு வெச்சா காலை வெட்டிக் கொள்ள போவதில்லை. அதுப் போலதான் இதுவும். மனச போட்டுக் குழப்பிக்காம படுத்து தூங்கு” என்றுச் சொல்லி மகள் தலையை கோதிவிட ஆரம்பித்தாள்.
“! பாரதியார் . நூறு வருஷத்துக்கு முன்னாடியே ரெளத்திரம் பழகுன்னார். ரெளத்திரம்ன்னா என்ன தெரியுமா? அவரே சொல்லரார். பாதகம் செய்பவரைக் கண்டால், நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிந்து விடு பாப்பா”
அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு “ சின்னஞ்சிறு கிளியே பாடுமா” கேட்டாள் மகள்.
அப்படியே அவளை மடியில் சாய்த்துக் கொண்டு, பாட ஆரம்பித்தாள் உமா.
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா! என் உயிர் நின்னதன்றோ” முடிக்கும்பொழுது சீராய் மூச்சு விட்டு தூங்கும் மகளின் கள்ளங்கபடம் இல்லாத குழந்தை முகம் கண்ணில் பட்டது. கேவலாய் அடி வயிற்றில் இருந்து கிளம்பிய அழுகையை, இரு கைகளால் வாயை இறுக மூடி உள்ளே தள்ளினாள்.
மகளின் தலையை மெல்ல தூக்கி பக்கத்தில் படுக்க வைத்தாள். தலைகாணியில் தலையை சாய்த்தவளின் கண்களில் கலங்கின. அவளுக்கு அன்று தூக்கம் வரவில்லை.
******************
1 பின்னூட்டங்கள்:
ரொம்பச் சரி.
இவனுங்களை........... ச்சீ
Post a Comment
<< இல்லம்