Saturday, July 02, 2016

பேலியோ பேலீயோ சொக்க வைக்கும் பேலியோ- கல்கி சிறுகதை

 தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்த பைகளை ஓரமாய் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டு உட்கார்ந்த கணவனை பார்த்த ஏகாம்பரி ஓடி சென்று பைகளை ஆராய்ந்தாள் ,

அத்தனையும் பழங்கள் காய்கறிகள், இன்னும் ஒரு பையில் பார்த்தால் பாதாம் பிஸ்தா என்று கிலோகணக்கில் இருந்ததைப் பார்த்து , எப்படியும் ஐந்தாயிரம் ஆயிருக்கும் என்ற மன கணக்கு சொல்ல, என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு என்று லேசான பயத்துடன் பார்த்தாள்.

 கொஞ்சம் ஸ்தூல சரீரம் என்பதால் வேர்த்து வழிய, தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்ட, ஓடி சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தாள்.

 பேலியோவுக்கு  மாறப்போகிறேன் என்றதும், போலீயோவா சந்தேகத்துடன் கணவனின் காலைப் பார்த்தாள்.

போலீயோ இல்லை. இது பேலியோ ஒரு வகையான டயட். நிறைய காய்கறிங்க, நட்ஸ் எல்லாம் சாப்பிட்டா வெயிட் குறையும் என்று இதை படி என்று கணிணியை எடுத்து காட்டினார்.

 நாம சுத்த சைவம். அதனால சைவ பேலீயோ, பாதாம் பிஸ்தா, காய்கறி, வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர், சில பழங்க சாப்பிட்டா உடம்பு இளைக்கும், நா டிரை பண்ணலாம்ன்னு இருக்கேன்

, அதுக்குத்தான் இதெல்லாம் வாங்கிட்டு வந்தேன்.. பாதாம ஒரு நாள் முழுக்க ஊறவிட்டு, நாலு வாட்டி கழுவி, நெய்ல வறுத்து வெச்சிடு, அதுதான் பிரேக்பாஸ்ட், மத்தியானம் காலி பிளவரை சின்னதா நறுக்கி ஸ்ட்டீம்ல வேக வெச்சா ரைஸ்க்கு பதில் , எல்லா காயும் போட்டு நெய்விட்டு பிரை பண்ணிடு. நைட்டு பன்னீர் டிக்கா.

இன்னும் நிறைய ரெசீபீஸ் இருக்கு, மாத்தி மாத்தி செஞ்சா எனக்கும் போர் அடிக்காமல் இருக்குமில்லே?” ஆர்வத்துடன் கேட்ட கணவனை யோசனையுடன் பார்த்த ஏகாம்பரி,

 எப்படியோ வெயிட்டு குறைஞ்சா சரி என்றவாறு எல்லாம் காய்கறி , பழங்களை பிரித்து வைத்து ப்ரீஜ்ஜில் வைத்து விட்டு, நட்ஸ்களை பாதுக்காப்பாய் எடுத்து வைத்துவிட்டு, நிமிர்ந்தவளுக்கு லேசாய் முதுகு வலித்தது.

 ராத்திரி இட்லி தோசை எல்லாம் வேண்டாம், காய்கறி பன்னீர் ப்ரை பண்ணி கொடு என்றார்.

 கலர் கலராய் குடை மிளகாய், கேரட், முள்ளங்கி, காலிபிளவர் என்று வகைவகையாய் நறுக்கி, நெய்யில் வதக்கி பன்னீரும் சேர்த்து கொடுக்கும்பொழுது, நாலு இட்லியோ ரெண்டு தோசை சட்னின்னா வேலை எப்பொழுதோ முடிந்திருக்கும் என்று ஏகாம்பரியின் மனம் அலுத்துக்கொண்டது.

 அரை கிலோ பாதாம்பருப்பை ஊற வைத்துவிட்டு படுத்தவள் எப்படியோ உடம்பு குறைந்தால் சரி என்று அலுத்துக்கொண்ட உடம்பையும் மனதையும் சமாதானப்படுத்தினாள். .

நூறு பாதாமை எண்ணி கிண்ணத்தில் போட்டு கணவனை சாப்பிட சொல்லிவிட்டு, கல்லூரியில் படிக்கும் மகனுக்கு மகளுக்கு தோசை சட்னி மதிய சாப்பாடு பேக்கிங், மாமியாருக்கு ஓட்ஸ் கஞ்சி என்று பரபபரப்பாய் இருக்கும் காலை வேளை.

அய்யயோ குறையுது என்ற அலறலைக் கேட்டு என்ன ஆச்சு என்று எல்லாரும் ஓடி வந்தனர். நூறு பாதாம் இல்லை குறையுது என்ற தந்தையைப் பார்த்து, நா நாலே நாலுதான் எடுத்தேன் என்றனர்

மகனும் மகளும்! நானும் ரெண்டே ரெண்டுதான் என்றார் மாமியார்.

எண்ணிப் பார்த்தால் அறுபத்தி ஆறு இருந்தது. அந்த ஆறை கொடுங்கள் என்று வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள் ஏகாம்பரி.

 அழைப்பு மணி அடித்தது.

 மேடம் நாங்க ஆர். ஆர். பழமுதிர் நிலையத்துல இருந்து வரேன். பிரான்சைஸஸ் எடுத்து நடத்த உங்களுக்கு விருப்பமா, , எனக்கு கால் பண்ணிங்க” விசிட்டிங் கார்ட் கொடுத்துவிட்டு சென்ற ஆளை பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே போன் அடித்தது. ‘” நாங்க நட்ஸ் அண்டு நட்ஸ்ல இருந்து கால் பண்ணுகிறோம், இந்த மாசம் இன்னும் மூணாயிரத்துக்கு நட்ஸ் வாங்கினா, ஐநூறு ரூபாய்க்கு கிப்ட் கூப்பன் கிடைக்கும்” அழகாய் பேசியது ஒரு குரல்.

யாரும் எதிவும் பேசவில்லை.

 நாலு நாட்கள் பெண்டு நிமிர்ந்தாலும் கணவன் ரெண்டு கிலோ குறைந்திருக்கு என்ற நல்ல செய்தியைக் கேட்டதும் மிக சந்தோஷமாய் இரவு உணவுக்கு காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்
ஏகாம்பரி.

 “என்ன விசேஷம், நாளைக்கு அவியலா” என்றுக் கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த நாத்தனாரையும் அவள் கணவரையும் வரவேற்று பேலியோ மகிமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தனர்.

 “ஓண்ணு செய்யி, இன்னைக்கு டின்னருக்கு எங்களுக்கும் இதையே பண்ணிடு. உடம்பு ஏறிக்கிட்டே போகுது, நானும் என்ன என்னவோ செஞ்சிப் பார்த்துட்டேன்’ பெருமூச்சு விட்டவள், நாழி ஆச்சு, குல தெய்வம் போடு, நாங்க சாப்பிட்டுட்டு, வம்சம் பார்த்துவிட்டு கிளம்புகிறோம்” என்றாள் நாத்தனார்.

 நல்லவேளை காலை டிபனுக்கு வந்திருந்தாலும் பாதாமும் பிஸ்தாவும் போயிருக்கும் என்று தன்னை தானே சமாளித்துக்கொண்டு அவர்களுக்கு சேர்த்து காய்கறிகளை நறுக்கினாள், நறுக்கினாள், .............நறுக்கிக்கொண்டே இருந்தாள்.

வம்சம் முடிந்து சமையலறையை எட்டிப் பார்த்த நாத்தனாருக்கும் அவள் கணவருக்கும், தன் கணவருக்கும் பரிமாறிக்கொண்டே, இருந்த மாவில் தனக்கு நாலு இட்லியை குக்கரில் வைத்தாள்.

 சாப்பிட்டு முடித்துவிட்டு இட்லியா, வெறும் காய்கறி சாப்பிட்டா மாதிரியே இல்லை, ரெண்டு வெய்யி என்ற நாத்தனாருக்கு,ம் ஆமாம் போட்ட அவள் கணவருக்கும் இட்லியை தாரை வார்த்துவிட்டு, மதியம் மிஞ்சி இருந்த ஒரு கரண்டி சாதத்தில் ரெண்டு கிளாஸ் மோர் ஊற்றி கலந்து குடித்தாள் கண் கலங்க.

 அவர்கள் கிளம்பியதும், “ இதோ பாருங்க இனி மேலே யாராவது சாப்பிடும்போது வந்தா அவங்களுக்கும் இட்லி, தோசை தான். உங்களுக்கும் அதே. இல்லாட்டி இன்னைக்கு விரதம்ன்னு பேசாம இருந்துடுங்க, மூணு பேருக்கு மூணு கிலோ காய்கறி. என்னால முடியாதுபா” ஏகாம்பரியின் குரல் தீர்மானமாய் ஒலித்தது.

 அஞ்சு கிலோ குறைச்சிட்டேன், இன்னைக்கு மட்டும் பூரி கிழங்கு சாப்பிடுகிறேன். ஓரே ஒரு அல்வா, நாலே நாலு காரா பூந்தி என்று அவ்வப்பொழுது பேலீயோ விரதம் மீறப்பட்டாலும், ஏகாம்பரி விடாமல் கணவனின் டயட்டுக்கு போராடிக்கொண்டு இருந்தாள்.

 அன்று சொந்தத்தில் ஒரு கல்யாணம். ட்ரீம்மாய் வந்து நின்ற கணவனைப் பார்த்து இன்னைக்கு எத்தனை பேர் கேட்ட போறாங்க பாருங்க என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே கிளம்பினாள்.

 உள்ளே நுழையும்பொழுதே வாசலில் சொந்த பந்த கூட்டம் ஆரவாரத்துடன் வரவேற்றது.

 என்ன ஆச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா, இப்படி இளைச்சிட்டே, சித்தி கேட்க, டெல்லி பெரியம்மா பெண் , வாவ் என்ன டயட், ரெண்டு மாசம் முன்ன பார்த்ததுக்கும் இப்ப சிக் க்குன்னு அழகா ஆயிட்டியே என்று ஆச்சரியப்பட, தன்னை சூழ்ந்துக்கொண்டு சொந்த பந்தங்கள் கேட்பது கேட்டு, லேசாய் மயக்கம் வருவதுப் போல இருந்தது, ஏகாம்பரிக்கு! **********************

 கல்கி 10 ஜூலை 2016

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்