Tuesday, May 24, 2016

முக நூல் போராளி ஏகாம்பரி- கல்கி 29-5-2016

                         முகநூல் போராளி ஏகாம்பரி

அலாரம் அடித்ததும் கண்களை திறக்காமல் செல் பேசியை தேடி எடுத்த ஏகாம்பரி சத்தத்தை  நிறுத்திவிட்டு, மெயில் பாக்சை திறந்து பார்த்தாள்.  மெயில் எதுவும் இல்லை. வாட்ஸ் அப் அக்கப் போர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து   முகநூலை திறந்தாள்.

 நூத்தி அறுபத்தி எட்டு லைக்ஸ். ஐம்பத்தி ஐந்து கமெண்டுகள்.  நான்கு ஷேர்கள். தூக்க கலக்கத்தில் அப்படி என்னத்த போட்டோம் என்று ஒரு நொடி குழம்பியவளுக்கு உடனே நினைவு வந்தது.
 நேற்று டிபார்மெண்ட் ஸ்டோரில் நடந்ததை கொஞ்சம் மசாலா சேர்த்து எழுதியதற்கு இவ்வளவு புகழா?

அதற்குள் லைக்ஸ் நூற்றி எண்பத்தி இரண்டை எட்டியிருந்தது.
ஒவ்வொரு கமெண்டாய் படிக்க ஆரம்பித்தாள்.
ஏகாம்பரியின் கணவன் என்ன காப்பி போடலை என ஆரம்பிக்க, ஆசிர்வாதம் செய்வதுப் போல கையை காட்டினாள்.

விஷயம் இதுதான் நேற்று டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சாமான் வாங்கும்பொழுது மூலையில் அங்கு வேலை செய்யும் பெண் அழுதுக்கொண்டு இருப்பதைப் பார்த்து கவலைப்படாதேமா, எல்லாம் சரியாயிடும் என்று ஆறுதலாய் ரெண்டு வார்த்தை சொல்லியதை அங்கங்கு மானே தேனே எல்லாம் போட்டு தன் பக்கத்தில் எழுதியதற்கு இத்தனை பாராட்டுகள்.
வாழ்த்துக்கள் மேடம்.

உங்களை நினைச்சால் பெருமையாய் இருக்கு. உங்க நட்பு கிடைத்தற்கு நான் பெருமை படுகிறேன்.
3 – தம்ஸ் அப் படங்கள்,பூ ங்கொத்துக்கள்
இவை அதிகம் இருந்தாலும் நாலைந்து வரிகளில் உங்களை போன்றோரே இன்றைய சமூகத்திற்கு அவசியம். தலை வணங்குகிறேன் தோழி  என்று பல புல்லரிப்புகள்.

‘’ காப்பி  போட்டுட்டேன்.  குளிச்சிட்டு வந்து குக்கர் வெச்சி,  காய்கறி  நறுக்கி வெச்சிருடரேன்” வீயாரஸ் வாங்கிய கணவர் யதார்த்தமாய் சொன்னார்.

ஹூம் என்று யோசனையுடன் சொன்னவள், காலைக்கடன்களை முடித்துவிட்டு, காபி கலந்து குடித்துக்கொண்டே மீண்டும் முக நூலுக்கு வந்தாள்.

ஒரு மணி நேரத்தில் லைக்ஸ் நானூத்தி பத்தை எட்டியிருந்தது.  புதிய கமெண்டுகளை படிக்க தொடங்கினாள். பெரும்பாலும் ஓரே மாதிரி வாழ்த்துக்கள், பூங்கொத்து, தம்ஸ் அப் படங்கள். அப்படியே பார்த்துக்கொண்டு வந்தவள் ஒரு கமெண்ட் பார்த்ததும் திக் என்று ஆனது அவளுக்கு.

“ மேடம், எந்த டிபார்ட்மெண்ட் கடை? இப்பொழுதே போய் அந்த பெண்ணுக்கு வேண்டிய உதவி செய்யலாம். பெரிய பிரச்சனை என்றால் என் அக்கா கணவர் சென்னை காவல் துறையில் இருக்கிறார். அவர் உதவியை நாடலாம்’ என்று இருந்தது.
அதுக்கு கீழே தோ நானும் கிளம்பிட்டேன் என்று நாலு ஆர்வ கோளாறு கேஸ்கள்.

இது ஏதடா வம்புன்னு யோசித்துக்கொண்டே குளிக்க சென்றாள். குளித்து வந்தவள்,  இட்லிக்கு சட்னி அரைக்க ஆரம்பித்தாள்.
  அவள் முகத்தைப் பார்த்து என்ன ஆச்சு?” என்று கேட்ட கணவரை பார்த்து ஒண்ணுமில்லை, லேசா மைக்ரேன்  என்றாள். . ஏதாவது சொல்லப் போய் இதெல்லாம் தேவையில்லாத விஷயம், இந்த முகநூல் அடிக்டிட் ஆயிட்டே என்றெல்லாம் அட்வைஸ் வரும்ன்னு அவளுக்கு தெரியாதா என்ன?

காலை டிபன் ஒப்பேத்தி முடித்ததும்  கணவரும் வெளியே கிளம்பினார். தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் முகநூலில் நுழைந்தாள் ஏகாம்பரி.

அதற்குள்  லைக்ஸ் ஐநூறை எட்டியிருந்தது. கமெண்டுகளை பார்த்துக்கொண்டே வந்தவள், கண்கள் அப்படியே நின்றுவிட்டது.
ஒரு பெண்ணியவாதி “ இது பாலியல் தொல்லைத்தான். இவர்களை சும்மா விட கூடாது. இனியும் பெண்கள் வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்  என்பதை தகர்க்க நாம் முன் வர வேண்டும் என்று அறைக்கூவல் விட்டிருக்க, , வரிசையாய் நிறைய ஆண்கள் அட்டனஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடுவதுப் போல ஆமாம் போட்டிருந்தனர்.

ஏகாம்பரிக்கு வெள்ளம் தலைக்கு மேல் போகிறதோ என்று தோன்றியது. அடுத்து இன்னும் ஒரு கமெண்ட்,
“ அந்த பெண்ணுக்கு ஏதாவது செய்யணும் மேடம். நண்பர்களே  உங்களால் முடிந்த தொகையை மேடம் அக்கவுண்டுக்கோ அல்லது என் அக்கவுண்டுக்கோ அனுப்பலாம். மேல் விவரங்களுக்கு இன் பாக்சில் தொடர்ப்பு கொள்ளவும்” என்று இருந்தது.

கீழே பார்த்தால் ‘’ நல்ல முயற்சி, வாழ்த்துக்கள், உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்கன்னு மூணு பேர் மட்டுமே பதில் சொல்லியிருந்தார்கள். பணம் காசுன்னா எல்லாரும் உஷாராக மாட்டாங்களா என்ன என்று நினைத்துக்கொண்டே,  மீண்டும்   முதல் நாள் தான் எழுதியதை படித்தாள்.

நல்ல வேளையாய், டிபார்ட்மெண்ட் கடையின்  பெயரையோ இடத்தையோ குறிப்பிடவில்லை என்று தன்னையே மெச்சிக்கொண்டு, நன்கு யோசித்து  “ அனைவருக்கு நன்றி நண்பர்களே, இன்று மீண்டும் நேரில் சென்று அந்த பெண்ணின் நிலையை விசாரித்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.  அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியதை செய்வோம் “ என்று போட்டு விட்டு, செகண்ட் டோஸ் காப்பி கலந்து குடிக்க எழுந்தாள்.

அவளுக்கு தெரியாதா என்ன?  முகநூல் விஷயங்களுக்கு எல்லாம் ஆயுள் மிக குறைவு என்று? அடுத்து வேறு ஒரு சுவாரசியமான விஷயம் ஆரம்பித்தால் அத்தனை கும்பலும் அங்கு ஷிப்ட் ஆயிடும் என்று?

என்ன சொல்லலாம் என்று யோசித்தவள், அந்த பெண்ணை காணவில்லை  என்று சொல்லலாமா அல்லது தனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லலாமா என்று லேசாய்  மண்டையை குழப்பிக்கொண்டவள்,  விசாரித்ததில் அந்த பெண்ணின் தாயோ தந்தையோ திடீரென்று மண்டையை போட்டு விட்டதால் அந்த பெண் கிளம்பி போய்விட்டது என்று சொல்லி சாப்டரை குளோஸ் பண்ணிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தவள் நிம்மதியாய்  சமையலை ஆரம்பித்தாள்.

ஒரு பிளாஷ் பேக் – 24 மணிநேரத்துக்கு முன்பு

ஏகாம்பரி பரிவாய்  பேசியது புரியாமல் முழித்துக்கொண்டிருந்தவளிடம் , “ என்ன செல்வா, அந்தம்மா சொல்லிட்டு போகுது” என்று கேட்டாள் சக பெண்.

“மேலே இருந்து டிஷ்யூ பாக்ஸ் எடுக்கும்போது, கண்ணுல டஸ்ட்டு விழுந்துடுச்சு. நா கண்ண கசக்கிட்டு இருக்க சொல்ல, இந்தம்மா, இன்னாமோ எல்லாம் நல்லா ஆயிடும், கவலப்படாதேன்னு சொல்லிச்சு”

அதற்குள் மேலும் நாலு விற்பனை பெண்கள் சூழ்ந்துக்கொள்ள, மேலாளர்  மரகதம் , “இன்னா கூட்டம் இங்கே? இன்னா செல்வா என்ன ஆச்சு/” என்றவளிடம் விஷயத்தை விளக்க ஆரம்பிக்க, “ எங்கூர்ல இப்படித்தான் அன்பா பேசி அவுங்க கூட்டத்துக்கு இழுத்துப்பாங்க” பீதியுடன் சொன்னாள் சகாய மேரி.

‘’ சரி எல்லாரும் வேலைய பாருங்க. செல்வா அடுத்த தபா அந்தம்மா வந்து ஏதாவது பேசினா என்னாண்டா  சொல்லு.  கவுண்டராண்ட கஸ்டமரு  அச்சு வெல்லம் இருக்கான்னு  கேக்காராரு. எடுத்து குடு” அவள் சொல்ல சொல்ல எல்லாரும் அவரவர் இடத்துக்கு சென்றனர்.
                                             ************************************

கல்கி - 29 மே 2016














0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்