Thursday, October 30, 2014

ஆண்டாள் கிளியின் கண்கள்-4

                                                                               4
  பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்த  மிக பிரமாண்டமான  துபாய் ஏர்போர்ட்டில்  எல்லா சோதனைகளும் முடிந்து, உள்ளே சென்று  அமர்ந்தனர் அசோக்கும் லதாவும். நேரத்திலேயே வந்துவிட்டதால், விமானம் வர  நேரமிருந்தது.

 மடி கணிணியை எடுத்தான் அசோக்

“ஆரம்பிச்சாச்சா?   ஏதாவது பேசுங்களேன்” லதா நல்ல மூட்டில் கேட்டாள்.

‘நானே உன்கிட்ட பேசணும்ன்னு இருந்தேன் லதா, அடுத்த மாசத்துல இருந்து  வீட்டு லோன் கட்ட ஆரம்பிக்கணும். இனி மேலே உன் சாலரியும் தந்தாதான் என்னல சமாளிக்க முடியும்”

கணவன் கேட்பான் என்று முன்பே எதிர்ப்பார்த்திருந்த லதாவுக்கு  நளினாவிடன்  வாங்கிய கடனும் நினைவுக்கு வர, “எனக்கும் லீவ் சாலரி, ட்யூஷன் எதுவும் இந்த ரெண்டு மாசம் கிடைக்காது. செப்டம்பர்ல இருந்து மாசம் ரெண்டாயிரம் திராம்ஸ் தந்துடரேன். என்னால அவ்வளவுதான் முடியும்” என்றாள்..

ஏதோ இவ்வளவுக்கு மனசு இறங்கினாளே என்ற நிம்மதியுடன்,  கணிணியில் படிக்கத் தொடங்கினான்.
“அப்படி என்ன விழுந்து விழுந்து படிக்கிறீங்க?” லதா கையை இடித்ததும்,”சொல்றேன் கேளு! ஸ்வரூப்புக்கு மைக்கா பத்தி தேடும்போது, இந்த இன்ட்ரஸ்டிங் விஷயம் கண்ணுல பட்டுச்சு. மைக்காக்கு  தமிழ்ல காக்கா பொன்னு . ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஆண்டாள் கைல  தினமும் ஒரு கிளி  பொம்மை செஞ்சி வைப்பாங்களாம்.  வெற்றிலைய பனை ஓலையில சுருட்டி வாழ நார்ல கட்டி செய்வாங்களாம்.

 கிளிக்கு மூக்கு மாதுளம் பூ. .  நந்தியாவெட்டை இலை இறக்கை. செவ்வரளி பூ அலங்காரத்துக்கு ,அந்த கிளிக்கு கண்  காக்காபொன்ல! அந்த கிளிய பரம்பரையா ஒரு பேமிலி  தினமும் கோவிலுக்கு செஞ்சிக்குடுத்துக்கிட்டு இருக்காங்களாம்.

காக்கா பொன் மேலே  வெளிச்சம் பட்டா, தங்கம் மாதிரி பள பளன்னு மின்னும், ஆனா கிட்ட போய் பார்த்தா தகரம் மாதிரி இருக்கும். சன் லைட் பட்டா, நீலம், பச்சை, சிகப்புன்னு மின்னுமாம்.
 “ ஸ்வரூப்!  நீ லீவ் முடிஞ்சி வரப்போ,  படம் எல்லாம் ஒட்டி சார்ட் பண்ணி வெச்சிடுவேன்.  அத்தன இன்பர்மேஷனும் நெட்டுல   கிடைக்குது.  நீ  செவத் வந்ததும், நெட் பார்க்க சொல்லித்தரேன்.   இப்ப  ஸ்டோரி புக்சும் படி.  பாடம் மட்டும் படிச்சா போதாது”

ஸ்வரூப், “அப்பா, போன  வெகேஷன்ல, ரெண்டு காமிக்ஸ் வாங்கி தந்தியே,  த்ரீ டைம்ஸ் படிச்சேன்” மூன்று விரலைக் காட்டி குழந்தைச் சொன்னதும்,

 “வேற என்ன என்ன படிச்சே? “ ஆவலுடன் கேட்டான்.

“ஸ்கூல் லைப்ரரில இருந்து  எனிட் பிளைட்டன் ஃபேமஸ்  பைஃவ்,மெடிட்டில்டா குழந்தை யோசித்து யோசித்து விரலை விட்டுக் கொண்டு இருந்தான்.

“ஸ்வரூப்!  இந்த முறை நிறைய புக்ஸ் வாங்கி தரேன். அதுக்காக எப்போதும் ஸ்டோரி புக்ஸ் படிச்சிக்கிட்டு இருக்கக்கூடாது.  படிச்சிட்டு என்ன படிச்சேன்னு, ஒரு நோட்டுல எழுதி எனக்கு காட்டணும். நல்ல மார்க்  வாங்கினா, அம்மா ஸ்டோரி புக் படிச்சா ஒண்ணும் சொல்ல மாட்டா. சரிதானே லதா??”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்,   டைம் வேஸ்ட்.  சும்மா அவனையும் கெடுக்காதீங்க. நம்ம ரூம்ல  உங்க குப்பையே எக்கசக்கம். அதுக்கே எடத்த  காணோம்”  லதா தலையை ஆட்டிப் பேசும் பொழுது, காது தொங்கட்டான் புதுசுப் போல தோனறியது. கையிலும் கழுத்திலும்  போட்டிருப்பதும் முன்பு பார்க்காததுப் போல இருக்கே என்று நினைத்தவன், “ரூபி செட் வாங்கினேன்னு சொன்னீயே லதா, இப்ப போட்டு இருக்கிறதும் புதுசு போல இருக்கே?” கேட்டதும்,  லேசா தலை ஆட்டிய லதா, “ பழச எக்சேஜ் செஞ்சி இத வாங்கினேன்.

 “பழசா? உன் கிட்ட பழசு  ஒண்ணுமில்லையே? வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க,  உன் நகைங்கள   பாங்குல வெச்சி லோன்  வாங்கிட்டோமே!, ரெண்டு வளையலும், ஒரு ஹாரம் மட்டும்தானே  உன் கிட்ட இருந்துச்ச்சு.?” அசோக்கின்  புரியாமல் கேட்டான்.

“அந்த ஹாரத்தைத்தான்ஸ லதா இழுத்தவுடன், அசோக் முகம் மாறியது, “என்ன முட்டாள்தனம் இது?  ஒன்றரை வருஷம் இருக்குமா அத வாங்கி? ரெண்டு தடவை போட்டு இருப்பீயா? அதுக்கு குடுத்த கூலி  பழைய தங்கம்னு எடைய குறைச்சியிருப்பான். அத்தனையும் நஷ்டம்தானே? புதுசு புதுசா  போட்டுக்கிட்டு, ஊர்ல மினுக்கணும் உனக்கு” அதற்கு மேல் பொது இடத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல்  முகம் சிவந்தான்.

  “இதோ பாருங்க, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். நீங்க இதுல தலையிடாதீங்க”  மெல்ல பதிலளித்தாள் லதா.

 ஸ்வரூப் ஓடி வந்து, “அப்பா  பிளைட் வந்துடுச்சு. க்யூல நிக்கலாம்  .அம்மா எழுந்திரும்மா “  பரபரத்தான்..

 கொஞ்சம் க்யூ போகட்டும்,  நாங்க வரோம்.. நீ போய் க்யூல நில்லு,இந்தா உன் போர்டிங் பாஸ்” எடுத்து அவன் கையில் கொடுத்ததும், ஸ்வரூப் ஓடினான்.

  தண்ணீரை பாட்டிலை எடுத்து குடிக்கும் பொழுது, பின்னால்  மலையாளத்தில்   பெரிய குரலில் பேச்சு,  சையது!    “லக்கேஜ் அதிகம் பெரிய வண்டி கொண்டு வா என்றவன், “ , எங்க முதலாளிக்கு நான் தான் எல்லாம். ஒரு  பெரிய அஞ்சு ரூபா அரேஜ் பண்ணிடு. விசா  எடுத்து, வேலை வாங்கித் தர நான் கேரண்டி” என்று யாரிடமோ செல்பேசியில் சவடால்  விட்டுக் கொண்டு இருந்தான்.

“லதா!  நா  சொல்றது எதையும் நீ கேக்கப்போவதில்லை. ஆனா என்னால சொல்லாம இருக்க முடியலே! பணம் பணம்ன்னு ஏன் இப்படி பறக்கரே? இந்த வெட்டி ஆடம்பரம் நம்மை அழிச்சிடும். நா படிக்கிறதை கேலி பேசுவியே நல்ல வாசிப்பு எப்படி வாழணும்ன்னு கத்துக் கொடுக்கும்.  என் குழந்தையாவது அதைக் கத்துக்கட்டும்   காக்காபொன் பத்தி  சொன்னேனே , பளபளன்னு மின்னும், கிட்ட போனா  தகரமாய் இளிக்கும்னு.  நம்ம வாழ்க்கையும்  அந்த லட்சணத்தில்தான் இருக்கு”  கைப்பையை எடுத்துக் கொண்டு வரிசையை நோக்கி சென்றான்.
                                                           (முற்றும்)
 

1 பின்னூட்டங்கள்:

At Thursday, 30 October, 2014, சொல்வது...

அருமை உஷா ராமச்சந்திரன் ஜி. பெருவாரியான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. எனக்கு வாய்த்த இல்லத்தரசி சையது மனைவியைப்போல. :) வீட்டுக்காரம்மா வந்ததும்தான் நான் நிமிர்ந்தேன், இத்தனைக்கும் என்னுடன் கத்தாரிலும், குவைத்திலுமாக ஆறு ஆண்டுகள் சேர்ந்திருந்தோம். அதற்குப் பிறகும் மிச்சம் பிடித்து நிறைய சேமித்தார்.

துரதிருஷ்டவசமாக அசோக் வாழ்க்கைதான் நிறைய பேருக்கு ..

//“லதா! நா சொல்றது எதையும் நீ கேக்கப்போவதில்லை. ஆனா என்னால சொல்லாம இருக்க முடியலே! பணம் பணம்ன்னு ஏன் இப்படி பறக்கரே? இந்த வெட்டி ஆடம்பரம் நம்மை அழிச்சிடும். நா படிக்கிறதை கேலி பேசுவியே நல்ல வாசிப்பு எப்படி வாழணும்ன்னு கத்துக் கொடுக்கும். என் குழந்தையாவது அதைக் கத்துக்கட்டும் காக்காபொன் பத்தி சொன்னேனே , பளபளன்னு மின்னும், கிட்ட போனா தகரமாய் இளிக்கும்னு. நம்ம வாழ்க்கையும் அந்த லட்சணத்தில்தான் இருக்கு” // :)

உண்மையில் ஆண்டாள்கிளியின் கண்களை வைத்தும் இப்படி ஒரு அருமையான கதை சொல்ல முடியும் என காட்டியிருக்கிறீர்கள்.. :) உண்மையில் ரசித்து படித்தேன்.

 

Post a Comment

<< இல்லம்