Thursday, October 30, 2014

ஆண்டாள் கிளியின் கண்கள்-3


மதியம் இரண்டு மணிக்கு, பள்ளியில் இருந்து  திரும்பிய லதா,  காலையில் செய்து வைத்திருந்த குழம்பையும், பொரியலையும் சூடாக்கி , ஸ்வருபுக்கு கொடுத்தாள். “பீன்ஸ் பொரியலா?” என்று முணங்கியவன் கையில்,   சிப்ஸ் பேக்கட்டை தந்துவிட்டு, தானும் சாப்பிட்டு விட்டு, கிரகப்பிரவேச கணக்குப் போட ஆரம்பித்தாள்.

 ஆசிரியை சம்பளம் ,  ட்யூஷன் பணம்,  ரூபாய் கணக்கில்  சுமார்  ஐந்து லட்சம்  சேர்ந்து இருந்தது.
ரூபி செட்டுக்கு இது போதும், ஆனால் இன்னும் ஒரு கோல்ட் செட்டு வாங்கணுமே? பழைய நகையை மாற்றினால்?

 இன்னும்  ஒரு ஐந்தாயிரம் திராம்ஸ் இருந்தால் போதும், இன்னைக்கு  ரேட்டு, ஒரு திராம்ஸ்  பதினாறு ரூபாய் அறுபத்தி ஐந்து பைசா.  அப்ப எண்பத்தி அஞ்ஞாயிரம் அளவுக்கு வரும். ரெண்டு பட்டுப் புடவைக்கும் , கோல்ட் செட்டு வாங்கவும்  ஆகும்.

தோழி நளினாவுக்கு செல் அடித்து பணம் கேட்டாள். ஊரில் இருந்து வந்ததும்,  மாசம் ஆயிரம் திராம்ஸ்ஸாக  திருப்பி தந்துவிடுவதாக சொன்னதும், “அதுக்கு என்ன லதா! தரேன்.  வட்டி 12% என்றதும், சே கைமாத்து இல்லையா என்று ஒரு நொடி யோசித்த லதா சரி என்றவள் “ என் அக்கவுண்ட் நம்பர் எஸ் எம் எஸ்ஸில் அனுப்புகிறேன். பாங்க் டிரான்ஸ்பர் செஞ்சிடு என்றாள்

அம்மாவுக்கு போன் செய்து,  கிருகப்பிரவேசம் செய்ய சென்னை வருவதாக சொன்னாள்.  என்ன எப்படி செய்ய வேண்டும் என்று பேச்சு ஓடியது.

அம்மாவிடம், தனக்கு  பட்டு புடவையும், மகனுக்கும், கணவனுக்கு நல்ல ரெடிமேட் டிரஸ்ஸூம், வெள்ளி குத்து விளக்கும் அண்ணன் எடுத்துத் தர வேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லி  செல்லை வைத்தாள்.

மணியைப் பார்த்தாள் ஐந்து!, இன்று பள்ளி கடைசி நாள் என்பதால் ட்யூஷன் படிக்கும் பிள்ளைகளுக்கு நேற்றிலிருந்து விடுமுறை சொல்லியாயிற்று.

அலாரம் அடித்தது.  பொது வாஷிங் மெஷினில் , அவர்களுக்கான துணி போடும் நேரம்.
அலுப்பாய் இருந்தது, நாளை சேர்த்துப் போட்டுக் கொள்ளலாம் ! கணிணியில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்வரூப் கண்ணில் பட்டான்.

எட்டு வயதுக்கு கொஞ்சம் குண்டுதான்.  உடல் கொஞ்சம் அதிகம் வெளுத்து இருப்பதுப் போல தோன்றியது. மெல்ல பெருமூச்சு விட்டாள்.

பதினாலுக்கு பதினாறு  அளவில் அறை. அதற்குள்ளேயே  சாப்பாடு, தூக்கம் எல்லாம். சின்ன  ஃரீஜ், அதன் மேல் ஒரு  மைக்ரோ வேவ் ஓவன்.  சாப்பாட்டு படிப்பு உட்பட அனைத்துக்குமான ஒரு  சின்ன மேஜை, இரண்டு நாற்காலிகள். மூலையில் ஒரு அலமாரி.  ஒரு  இரட்டை கட்டில்.  கொஞ்சம் தள்ளி ஒரு திவான், அதுவே மகன் படுக்கை.

சமையலறை,  கழிவறை பொது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் பதினெட்டு ஆயிரம்.  துபாயில் கரோமா  எனப்படும் இடம் வசதியானது . அவளுக்கும்  பள்ளிக்கு செல்ல மெட்ரோ ஸ்டேஷன் மிக அருகில்,  அசோக் அலுவலகமும் கொஞ்சம் அருகில்தான்!

 அந்த வீட்டை  வாடகைக்கு  எடுத்திருக்கும் இருக்கும்  தம்பதிகளுக்கு ஒரு குழந்தை. ஹால் எனப்படுவதே, அறைப் போல கதவுடன் மூடி இருப்பதால் அது அவர்களுக்கு.

 உள் வாடகையில், இரண்டு படுக்கையறைகளில்  இவர்களுக்கு ஒன்று. இன்னும் ஒன்று  கொஞ்சம் சிறியது, அதில் இரண்டு நர்சுகள் குடியிருக்கிறார்கள். அவரவருக்கு ஒத்துக்கப்பட்ட நேரத்தில் சமையல், குளியல், வாஷிங் மெஷினில் துணி துவைப்பு எல்லாம்!

இரவு  சமையல் வேண்டாம், பார்சல் கொண்டு வந்துவிடுகிறேன் என்ற குறுஞ்செய்தி அசோக்கிடமிருந்து.

நண்பிகள் அனைவருக்கும்  போன் செய்து சுய பெருமை ஒவ்வொருவிடமும் சொல்லி, செல்லை  கட் செய்யவும், அசோக் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது

பார்சலை பிரித்து, தாயும் மகனும் சாப்பிட்டு விட்டு, பேச ஆரம்பித்தனர்.

அப்பா, “மைக்கா!” என்றான் மகன்.

“கண்ணு! எனக்கு ஒரு வாரம்தான் லீவ். நீங்க ரெண்ட் பேரும் ஆகஸ்ட் கடைசியில துபாய் திரும்பும்பொழுது, நான் சார்ட் செஞ்சி வெச்சிருக்கேன். இன்னைக்குக்கூட கூகுள்ள தேடிக்கிட்டு இருந்தேன். மைக்கான்னா காக்காபொன்! உனக்கு தெரியுமா லதா?”

“அத விடுங்க! இன்னும் ஊருக்கு கிளம்ப நாலே நாள் தான் இருக்கு. எவ்வளவு வேலை இருக்கு! “லதா படபடத்தாள்
.
“என்ன வேலை? சிம்பிளாகத்தானே செய்யப் போகிறோம் பங்ஷனை மொத்த காண்ட்ராக்ட் விட்டுடலாம். கன்னுக்குட்டி மாடுல இருந்து, வாழ மரம் வரை எல்லாம் அவங்க ஏற்பாடு.அக்காவுக்கும், உங்க அண்ணனுக்கும் போன் செய்யறேன், யாரை கூப்பிடணும்ன்னு லிஸ்ட் போடு,  ஊருக்குப் போய் போன்லையே அழைச்சிடலாம். அழைப்பிதழ் எல்லாம் வேண்டாம்” என்றவன், தன் செல்லை எடுக்கும்பொழுது, “உங்கக்கா கிட்ட சிம்பிளாதான் செய்யறோம்ன்னு நல்லா அழுத்தமா சொல்லுங்க” லதா சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது,

.“ ரொம்ப  சிம்பிளாத்தான் செய்யரோம்..ஜவுளி அது இதுன்னு நீங்க ஒண்ணும் இழுத்துக்காதீங்க.’ அவன் சொல்ல சொல்லத்தான் , பேசுவது அவளின் அண்ணனுடன் என்பது தெரிந்து லதா கோபமாய் அவனைப் பார்த்தாள்.

செல்லை வைத்ததும் பொரிந்து தள்ளியவளிடம்“பிறத்தியார்க்கிட்ட எதிர்ப்பார்ப்பது அசிங்கம் லதா.  அவனுக்கு பிசினஸ் டல்லு நம்மால இப்ப உதவ முடியலே, ஆனா தொந்தரவு செய்யாம இருக்கலாம் இல்லையா?” பக்கத்து அறையில் கேட்குமோ என்று  மெல்ல  சொன்னான் அசோக்.

கோபத்துடன் மீண்டும் பேச லதா வாய் திறக்கும் முன்பு,  “ எனக்கு தெரியாம உங்கம்மாக்கிட்ட சொல்லி, ஏதாவது பாலிடிக்ஸ் செஞ்சா நா சும்மா இருக்க மாட்டேன்” முகம் சிவக்க, அடித் தொண்டையில் அசோக் உறுமினான்.

 செல் சிணுங்கியது. நளினா! இப்ப இவன் காதில் விஷயம் விழுந்தாஅவ்வளவுதான் என்று, பால்கனிக்கு சென்று பேச தொடங்கினாள்

அவனுக்கு சையதின் மனைவி சுபேதாவின் குரல் நினைவுக்கு வந்தது. அதிகம் படிப்பறிவு இல்லாவிட்டாலும், எத்தனை விவேகமான பெண்! பெருமூச்சு விட்டான் அசோக்.
( தொடரும்)
 

1 பின்னூட்டங்கள்:

At Thursday, 30 October, 2014, சொல்வது...

நன்றாக சுற்றுப்புறத்தை கவனித்திருக்கிறீர்கள். :) வட்டிக்கு கொடுப்பார்கள் எனத்தெரியும், ஆனால் 12% வட்டி என்பது துபாயில் அநியாயம்தான். பேங்கில் லோன் வாங்கினாலே 6%க்கு மேல் வராது.

அடுத்த பகுதியையும் இடவும்.

 

Post a Comment

<< இல்லம்