Monday, July 31, 2006

போகிற போக்கில் 30-7- 2006

தலைக்கு மேல் வேலைகள் குவிந்துக்கிடக்கின்றன. போட்டவைகள் போட்டப்படி இருக்கின்றன. இத்தனை குழப்பங்களிலும் வழக்கப்படி எதுக்கு குழப்பிக்கிறாய் என்று சிரிக்கும்பொழுது, டென்ஷன் இல்லாத ஆசாமியைப் பார்த்தால் இன்னும் டென்ஷன் அதிகரிக்கிறது.

வளைக்குடாவாசிகள் அனைவருக்குமே இந்த குழப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் எட்டாம் வகுப்பு வந்துவிட்டால், என்ன செய்வது படிப்பு இங்கேயா அல்லது ஊரில் போட்டுவிடலாமா என்று! இங்கு பிள்ளைகள் படிப்பு என்று அதிக மெனக்கெடுதல் ஒன்றும் இல்லை.
ஆனால் மார்க் ஓரளவு வாங்கிவிடுவார்கள். எண்பது சதவீகிதங்களில், சிபி எஸ்சி சிலபசில் வாங்குவது எங்களுக்கெல்லாம் மிக நல்ல மார்க்குகள்! ஆனால் நம் ஊருக்கு இது போதுமா? போதாதற்கு இங்கு ஜாலியாய் பள்ளிக்கூடத்திற்கு போய் வந்துக் கொண்டு
இருந்தவர்களுக்கு, நம் ஊரில் நடக்கும் கூத்துகள் புரியாது. நினைக்க நினைக்க, தலைப்பாரம் அதிகமாகி, மனதை மாற்ற எழுத ஆரம்பிக்கிறேன்.

இணையத்தில் அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பாடி கார்ட் மூனீஸ்- பொட்டீ கடை எழுதியதும், மகேந்திரனின் எனது நூலகமும் இந்த வாரத்தில் படித்தவைகளில் சிறந்தவையாய் தெரிகிறது. வே. ஆனைமுத்து என்ற பெயர் கேள்விப்பட்ட பெயராய்
இருக்கிறதே தவிர, மேற்கொண்டு எந்த செய்தியும் நினைவில் வரவில்லை. சிவபாலன் நூலகம் பற்றி எல்லாரும் எழுத வேண்டும் என்ற பொது அழைப்பைப் பார்த்து ஆசை வந்தாலும், எழுத மனம் ஒத்து வரவில்லை.

இந்த வார நட்சத்திரம் செல்வநாயகி. செல்வராஜ், தங்கமணி, இராமகி எழுத்துப்போல, சல் என்ற நடை இருக்கும். ஊரில் இருந்து வந்து படிக்க வேண்டும்.

சென்ற வார நட்சத்திரம் கார்த்திக்ராம்ஸ் எழுதிய விதவைகள் இல்லாத கிராமம் கன்ணில் விழுந்தது. இந்தியா முழுவதிலும் பலகிராம சமூக அமைப்புகளில் அறுத்து கட்டுதல் (டிவோர்ஸ்), விதவை மறுமணம் போன்றவைகள் உள்ளன.

ஏதோ ஒரு ஹிந்தி படம். ஹேமா மாலினி உருப்படியாய் நடித்த வெகு சிலதில் ஒன்று.
( லால்பத்தர் ஞாபகம் வருகிறது.) பெயர் நினைவில்லை. அண்ணி ஹேமா மாலினி, கொழுந்தன் ரிஷி கபூர். அண்ணன் இறந்ததும் தாய் போல பாவித்த அண்ணிக்கு, சமூக வழக்கம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாய் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள். பஞ்சாப்பை சேர்ந்த கிராம கதை.

நேற்று காப்பி வித் கரண் நிகழ்ச்சியில் ஹேமா மாலினி மற்றும் ஜீனத் அமன். மேக்கப், சரியான தலை அலங்காரம், உடை தேர்ந்தெடுத்தல் சிலருக்குக்குதான் கைவந்த கலையாய் இருக்கிறது. பெரும்பாலோருக்கு இத்தகைய அலங்காரங்கள், இன்னும் அலங்கோலமாய் மாற்றிவிடுகின்றன என்றே தோன்றும். உதாரணத்துக்கு சமீபத்து பத்மினி, வைஜெயந்திமாலா. கிழட்டு
முகத்தில் பட்டை பட்டையாய் கண் மையும், லிப்ஸ்டிக்கும், நகைகளும், கன்னங்கரேல் என்று சாயம் ஏற்றிய முடியும், பார்க்க பயமாய் இருந்தது.

சமீப காலமாய் தீடீரென்று தலை முடி நரைத்து வருகிறது. பார்க்கிறவர்கள் எல்லாம் டை போட சொல்லி அட்வைஸ். பிள்ளைகளைப் பார்த்தால் என் வயது தெரியாதா என்ன? அது ஒரு வேலை என்ற சோம்பலா? இருந்துவிட்டு போகட்டுமே என்ற அலட்சியமா?
எல்லாம் சேர்ந்து நோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நரை முடியின் அழகு "Nafisa Ali" அவர்களைப் பார்த்ததும் தெரிந்துக் கொண்டது. பழைய மிஸ். இந்தியா, காட்டன் புடைவையில், ஒற்றை மூக்குத்தி ஒளிர, எந்த வித மேக்கப்பும் இல்லாமல், அலட்சியமாய் இருப்பது அழகா தன்நம்பிக்கை தரும் தைரியமா?

நேற்று பாதியில் பார்க்க ஆரம்பித்த oprah Winfrey show நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிறு பெண் குழந்தைகளை விபசாரத்துக்கு உட்படுத்துவது சம்மந்தமான நிகழ்ச்சி. உலகின் பழைய தொழில் என்று சொல்லப்படுவது. ஒவ்வொரு முறையும் இதைப் பற்றி பார்க்கும்பொழுது, பேசும்பொழுது, படிக்கும்பொழுது மனம் துக்கத்தில் ஆழ்ந்துவிடும். சிறு பெண் குழந்தைகள் அரைகுறை உடையில் நிற்பதைப் பார்க்கும்பொழுது, ஒருவித அவமான உணர்வு ஏற்படும்.

இதை எல்லாம் தொழில் என்று சொல்வதே கேவலம், அதிலும் சட்டப்படி ஆக்க வேண்டும் என்று சொன்னால், கோபம் தலைக்குமேல் ஏறுகிறது. ஆன்மாவை விற்கும் செயல், இதையும் தொழில் என்பவர்கள் தங்கள் வீட்டு பெண்களை அனுப்புவார்களா?

பதினைந்து வயது மகனுடன் எந்த சப்ஜெட்டையும் பேசலாம் என்பதே மனதுக்கு நிறைவாய் இருக்கிறது. அந்த காலத்தில் அம்மா இப்படிதான் பேசுவார்கள். மறுநாள் தோழிகளிடம் சொன்னால், அம்மாவிடம் இதையெல்லாம் சொல்வாயா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்பது, இன்றும் அதே வசனத்தை தன் வகுப்பு பிள்ளைகள் சொல்வதாய் மகளும் மகனும் சொல்வது வருத்தமாய் இருக்கிறது.

எயிட்ஸ் விளம்பரம் வந்ததும், மகனையும் மகளையும் எழுந்துக் கொள்ள வைக்க அப்பா செய்யும் செயல்கள் பார்த்திருப்பீர்கள். காலம் மாறுகிறது. இவை எல்லாம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும், தொலைக்காட்சி நடு வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு பல்வேறு முறையில்
அரைகுறை செக்ஸ் அறிவை தந்துக் கொண்டு இருக்கிறது. இது இன்னும் ஆபத்தான் விஷயம். இவை எல்லாம் பிள்ளைகளிடம் பேச கூடாது என்ற ஹிப்போகிரஸி பெற்றோர்களிடம் இன்னும் இருக்கிறது.

நிகழ்ச்சியில் விருந்தினராய் வந்திருந்த ரிக்கி மார்ட்டீன் சுனாமியால் பாதித்தவருக்கு வீடு கட்டிக் கொடுத்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். ஏனோ ரஜினிகாந்த் நினைவு வந்தது. எப்பொழுதோ படித்த செய்தி, சம்பளம் வாங்குவதில் ஆசியாவில் ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாராம். எனக்கு தெரிந்து மறைந்த நடிகர் ஜெய்சங்கர் நிறைய செய்துள்ளார்.

மா.சிவகுமாரின் பதிவைப் பார்த்ததும் விரிவாய் பேசலாம் என்று எழுத ஆரம்பித்து, விஷயம் வேறுமாதிரி போய்விட்டது. பொதுவில் எழுதியதால் சில கருத்துக்கள். கணவன், மனைவி விவகாரத்தில் பிறர் தலையிட முடியாது. இருவரும் உட்கார்ந்து பேசலாம், ஆனால்
இதே அட்வைஸ் என் தோழி ஒருத்திக்கு சொன்னப் பொழுது, மனைவியுடன் உட்கார்ந்து பேசுவது என்று உண்டு என்பதே தெரியாதவனிடம் என்ன சொல்வது? உட்கார்ந்து பேசினால் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு பிரச்சனையே வராது என்றாள்.

பாட்டி காலத்தில் தாத்தா பேச்சுக்கு பாட்டி மறு பேச்சு பேசமாட்டார். தாத்தா வெள்ளை காக்கை பறக்கிறது என்றால் ஆமாம் என்பார். ஆனால் இக்காலத்தில் பிரச்சனைக்கு காரணம் இருபக்கமும்தான். மனைவிக்கு ஒரு கருத்து இருக்கும் என்பதையே கணவன்
எண்ண மறுக்கிறார். எங்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டால், நான் எதுவும்பேசுவதில்லை, எந்த கருத்தையும் கூறுவதில்லை என்று வைத்திருக்கிறேன். எப்படியும் நான் சொல்வது கேட்க போவதில்லை, ஏன் சொல்லி என் எனர்ஜியை வீண்டித்துக் கொள்ள வேண்டும்? இது மிக கஷ்டமான கொள்கைதான். ஆனால் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், மன அழுத்தம் குறையும்.

மற்றப்படி எல்லாரிடமும் நான் பார்ப்பது ஒரு திருப்தி இல்லாத நிலையும், மற்றவர்களுடன் கம்பேர் செய்வதும். மனைவி புத்திசாலி, தைரியசாலி, வேலைகளை செய்வதில் வல்லவள் என்றால், கணவனுக்கு பழைய கால பத்தினி தெய்வம் போன்ற மனைவி இல்லையே என்று
வருந்துவான். மனைவிக்கோ ஒன்று தெரியாது, கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்பவள் என்றால், கணவன் போகிற வருகிறவர்களிடமெல்லாம் மனைவி ஒரு மக்கு என்று சொல்லிக்கொண்டு இருப்பான்.

பல பெண்களிடம் நான் காணும் தவறான குணம், முழுக்க முழுக்க கணவன் தன் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பது. ஒருவகை சர்வாதிகார தன்மை. இதை சில ஆண்கள் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டாலும், சிலரால் முடியாது. இங்கு விட்டுக் கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா! இரண்டு பேரூமே தங்கள் சிந்தனைகள், எண்ணங்கள் , ரசனைகள் வேறு வேறு என்பதை உணர்ந்து, அதை பிறர் மீது திணிக்காதவரையில் வாழ்க்கை ஓடும்.

பி.கு தேன்கூடு போட்டில் என் கதைக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றிகள்

18 பின்னூட்டங்கள்:

At Monday, 31 July, 2006, சொல்வது...

பல பதிவுகளுக்கான விஷயங்களை ஒருசேர கொட்டியிருக்கிறீர்கள்.

தங்கள் மன ஓட்டத்தை தெளிவாக வரைந்துள்ளீர்கள்.

பல விஷயங்களில் தங்கள் எண்ண ஓட்டம் பிரதிகூலமாக இருந்தாலும் தங்கள் தெளிவு வியப்பை தருகிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையில் முயற்சிகளும் கவலைகளும் வேறு வேறு.

தங்கள் நிலையில் என்னை நிறுத்தி தங்கள் விசாரங்களை என்னையே கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு இந்தியாவில் நல்வரவு. தாயகத்தில் தங்கள் பார்த்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களை மனப்பேழையில் கசங்காமல், சிதறாமல் எடுத்து வந்து கூடிய விரைவில் மீண்டும் தமிழ்மணத்தை மணக்க செய்ய வேண்டும்.

நன்றி

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

வே.ஆனைமுத்து அவர்கள் பற்றி எனக்கு தெரிந்த தகவல்கள்:
மார்கஸீய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் நிருவணர், சிந்தனையாளன் - தமிழ் மற்றும் பெரியார் எரா எனும் ஆங்கில மாத இதழ்களின் ஆசிரியர். இவரின் சில புத்தகங்களை எனது புத்தக பட்டியலில் இட்டுள்ளேன். மண்டல் கமிஷன் அமல்படுத்தப் பட்டதில் இவரின் பங்கும் உண்டு
திரு.வே.ஆனைமுத்து அவர்கள் எனது உறவினர். நான் பிறந்தது கிழுமத்தூரில் அவர் பிறந்த ஊர் கிழுமத்தூர் மற்றும் எறையூர் சர்க்கரை ஆலை இடையே இருக்கும் முருக்கன்குடி எனும் சிறு கிராமம். அவரின் சிறுவயதில் எனது தாத்தாவே படிப்பதற்க்கான பொருளுதவிகள் செய்ததாக சொல்வார். அவரோடு எனது குடும்பத்துக்கான நட்பு மிக நீண்டது. அவர் முதலில் திருச்சியில் இருக்கும் போது அவர் தலைமையில் எனது தந்தையின் திருமணம் நடந்தது. எனது தாத்தா இறந்து போனபோது அவர் (வே.ஆனைமுத்து) பட்ட வேதை சொல்லவியலாது. அவரின் ஒரு தம்பியும் இன்று முருக்கன்குடியில் இருக்கிறார். அவரை முதன் முதலில் விபரம் தெரிந்த பிறகு 1995 ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் சக்தி திருமண மண்டம் அருகில் அவரின் இல்லத்தில் சந்தித்தேன். எனது இரண்டாவது சகோதரியின் திருமண அழைப்பு கொடுக்க அதன் பின் எனது திருமணமும் அவர் தலைமையில் நடைபெற்றது. சிந்தனையாளன் எனும் மாத இதழும் பெரியார் எரா எனும் ஆங்கில மாத இதழும் அவரின் திருவல்லிக்கேணி முருகப்பா தெருவில் இருக்கும் சிந்தனையாளன் பதிப்பகத்தில் இருந்து வருகின்றன. இன்றுவறை தனது பயனச் செலவுகளுக்காக அழைப்பாளர்களிடம் இருந்து எதுவும் பெறுவதில்லை அப்படி யாரும் வற்புறுத்தினால் சிந்தனையாளன் இதழுக்கு சந்தாவாக செலுத்த சொல்லுவார்.
முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங்குடன் அவர் நல்ல நெருக்கம் கொண்டவர். பெரியாரின் கடைசிக் காலங்களில் அவருடனே இருக்கும் சந்தர்பம் பெற்றவர்களுள் இவரும் ஒருவர். மண்டல் அமுல்படுத்தப்பட்ட போது டெல்லியில் மிக நீண்ட காலம் தங்க வேண்டி வந்ததில் தனது சில பூர்வீக சொத்துக்களை இழந்தவர். உண்மையில் சொல்லவேண்டுமானால் பிரபலமாகாத பெரியாரின் வாரிசு. இவர் பற்றிய தனிப் பதிவு விரைவில் வரும் சில கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை எனது குடும்பம் மறுப்பதற்கு இவரும் ஒரு காரணம் அனது உறவினர் இவர் என்பதில் எனக்கு பெருமைதான். எங்கள் வீட்டின் எல்லா விழாக்களுக்கும் இவர் நிரந்தரத் தலைமை உண்டு

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

//சமீப காலமாய் தீடீரென்று தலை முடி நரைத்து வருகிறது//

வயசாயிட்டாலே இந்தப் பிரச்சனையெல்லாம் வரும், ஹிஹி, ஒரு தடவை எங்க அக்கா, அப்பா டை அடிச்சிட்டு வந்ததைப் பார்த்து, பப்பூன் மாதிரி இருக்குன்னு சொல்லிட அப்பா, மூணு நாளைக்கு மூஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டு உக்காந்திருந்தது நினைவில் இருக்கு. நானும் அம்மாவும் சொல்லிச்சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.

அப்புறம் பழக்கமாயிடுத்து. இதெல்லாம் மனசைப் பொறுத்ததுங்க.

--------------------

திடீரென்று வந்தால் பரவாயில்லை தீடீரென்று வருவதாக சொன்னதால் நான் சொன்னதைப் பற்றி யோசித்தவாறே பின்னூட்டமிடுகிறேன்.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

அப்புறம் ஒரு விஷயம், பின்னூட்டமிட்டுவிட்டு, நீங்கள் எழுதியதை விமர்சிக்காவிட்டால் தவறாகிவிடும்,

//இதையும் தொழில் என்பவர்கள் தங்கள் வீட்டு பெண்களை அனுப்புவார்களா? //

இதை வன்மையாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரத்தைப் பற்றி நான் பேச எதுவும் இல்லாவிட்டாலும், இது தவறு.

ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரியாக இருக்கும், அதற்காக கருத்து சொல்பவர்களின் குடும்பத்தை சந்திக்கு இழுப்பதைக் கண்டிக்கிறேன். உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆனால் கண்டிப்பதற்கு முறை இருக்கிறதாகப் படுகிறது எனக்கு. அந்த முறை நிச்சயமாக இது இல்லை.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

ஜயராமன் சார், கட்டாயம் எழுதுவேன், பிளாக் ஆரம்பித்தது வேறு எதற்கு :-)

மகேந்திரன் நன்றி. இங்குப் போட்டதையும் உங்கள் பதிவில் ஏற்றுவிடுங்கள். மிக விரிவாய் உள்ளதால் சொல்கிறேன்.

//மோகன்தாஸ் said...
அப்புறம் ஒரு விஷயம், பின்னூட்டமிட்டுவிட்டு, நீங்கள் எழுதியதை விமர்சிக்காவிட்டால் தவறாகிவிடும்//


ஒரு கொள்கை, கருத்து சொன்னால், அதை சொல்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லையா? அந்த பெண்களையும், நம் வீட்டு பெண்ணாய் நினைத்தால் இப்படி சொல்ல முடியுமா? அவர்களுக்கும் நம் போல அனைத்து உணர்ச்சிகளும் இருக்குமில்லையா? அதைவிட, தாய்லாந்து அரசின் வருமானத்தின் பெரும்பங்கு, சுற்றுலா மூலமாக வருகிறதாம்.
பத்துவயதில் இருந்து சிறுமிகள், எவ்வளவு கட்டணம் என்று போர்ட்டு மாட்டிக்கொண்டு இருப்பார்களாம். அங்கு எல்லாம் சட்டப்படி நடக்குதாம். இதைக்குறித்து உங்க கருத்து என்ன?

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

//அதற்காக கருத்து சொல்பவர்களின் குடும்பத்தை சந்திக்கு இழுப்பதைக் கண்டிக்கிறேன்//

//ஒரு கொள்கை, கருத்து சொன்னால், அதை சொல்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லையா?//

இந்தப் பதிவுக்குப் போகிற போக்கில்னு ஏன் தலைப்பு வச்சீங்கன்னு இப்போ தான் புரியுது.. :)

ஏதோ நம்மால் ஆனது.. =>

" Bon Voyage.. "

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

அடி பின்னுறீங்க மேடம் :)

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

மேடம் அப்பா செய்த தவறிற்கு பிள்ளைகளுக்கு தண்டனை என்றால் அது எத்தனை தலைமுறை முன்னும் பின்னும் செல்லும் என்ற வரையறையைச் சொல்ல முடியுமா.

என்னப்பொறுத்தவரை தனிமனித உரிமையை மதிக்கிறேன், என் அப்பா தவறு செய்தால் அதைப் பார்த்து வருத்தப்படமுடியும், முடியுமானால் திருத்துவதற்கான முயற்சி மட்டுமே, அதை விடுத்து என் அப்பாவின் தவறுகளுக்கு எனக்கு தண்டனை என்றால் இதென்ன ராஜராஜசோழ காலமா, இல்லை ஜனநாயக காலமா தெரியவில்லை.

அப்பா, அம்மா, அக்கா இருந்தாலும் நாங்கள் தனித்தனி மனிதர்கள் இல்லையா, அவரவர்களின் தவறுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு. இந்த வாதத்தில் உள்ள சிறுபிள்ளைத்தனம் உங்களுக்கு நன்றாகவேப் புரியும் என்று நினைக்கிறேன்.

9/11 அட்டாக்கைக் கூட நான் தனிமனித உயிரின் மகத்துவம் தெரியாத பயங்கரவாதமாகத்தான் பார்க்கிறேன் நான்.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

மோகன் தாஸ், உங்கள் உதாரணம் எனக்கு புரியவில்லை. பொதுவாய் இதை தொழில் என்றும், அதை சட்டப்படி ஆக்க வேண்டும் என்றும் சொல்லப்படுவதை பல இடங்கில் பார்த்திருக்கிறேன். இங்கு எந்த தனிப்பட்ட மனிதரையும் சொல்லவில்லை.
என்னுடை எதிர்ப்பு எதற்கு என்றால், பெண் ஆணுக்கு போக பொருள் இல்லை, அவர்கள் யூஸ் அண்டு த்ரோவாக ஆண் சமூகம் கருதுவதையும் எதிர்க்கிறேன்.
மேலும் இதில் ஈடுபடுபவர்கள், மனநிலை எப்படி பாதிக்கப்படும், பிற்காலத்தில் சமூகத்தில் அவர்கள் அந்தஸ்து என்ன? அவர்களுக்கு
குழந்தை பிறந்தால் அதற்கும் சமூக அந்தஸ்து எப்படி இருக்கும் என்பதே என் கேள்வி.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

மேடம் நான் உங்களின் அந்த ஒரு வரிக்கான விமர்சனத்தை மட்டும் தான் வைத்தேன். அவர்கள் வீட்டு பெண்களை அனுப்புவார்களா என்ற கேள்வி எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் கோபத்தை.

சரி உங்கள் வார்த்தைகளுக்கே வருகிறேன், அப்படி ஒருவர் தொழில் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அதற்காக அவருடைய வீட்டை பெண்களை நீங்கள் இழுக்கலாமா அது சரியா? அதை மட்டும் தான் நான் கேட்கிறேன்.

அந்த மனிதனைத் தாண்டியவர்கள் தானே அந்த வீட்டுப் பெண்கள் நீங்களே இப்படி சொல்வது வருத்தமாகவேயிருக்கிறது.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

தாஸ்,
அப்படிப் பார்த்தால், இந்த மாதிரி பாதிக்கப் படும் பெண்களும் இன்னொரு entity தானே? அவர்களைப் பற்றி எந்தக் கருத்தை வேண்டுமானாலும் அள்ளி வீச யார் கொடுத்தது சுதந்திரம்?

தன் வீட்டுப் பெண் என்றது தைக்கிறதே!! இப்போ மட்டும் பெண்களுக்குத் தனி உணர்வு, தனி மனம்.. தனிக் கருத்து.. !! விந்தையாக இருக்கிறது..

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

அப்படி ஒருவர் தொழில் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அதற்காக அவருடைய வீட்டை பெண்களை நீங்கள் இழுக்கலாமா அது சரியா? அதை மட்டும் தான் நான் கேட்கிறேன்//

மோகன் தாஸ், ஜெயமோகன் எழுதிய "ஏழாவது உலகம்" படித்தீர்களா? அதில் அவர் செய்யும் தொழில் பிச்சை எடுக்க ஊனமுற்றவர்களை பிடிப்பது. பச்சை குழந்தையை வெய்யில், சிமிட்டு தரையில் போட்டு அதை கதறி துடிக்க செய்து அனுதாபத்தில் காசு பார்ப்பார். ஆனால் அது ஒரு ஊனமுற்ற அனாதையின், ஊன முற்ற குழந்தை. ஆனால், அவர் பெற்ற குழந்தையை அப்படி செய்ய அவருக்கு மனம் வருமா? காரணம், அவர் தொழிலுக்கு அந்த பெண்ணும் குழந்தையும்
வியாபர பொருள். அவர்களை அவர் மனித ஜென்மமாகவே பார்க்கவில்லை.
உங்கள் கோபத்தை கொஞ்சம் தள்ளிப் போட்டுவிட்டு, மேலே எழுதியதைப் படியுங்கள்.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

ஒரு வார்த்தை, ஆகா கூட்டு சேர்ந்துட்டாங்க,

உஷா நீங்க வவாசவில் இல்லைன்னு நினைச்சேன், மறைமுக ஆதரவா? 500 தேறுமா? இடையில் இந்தியா வேற வரணுமே, நான் வரலை இந்த விளையாட்டுக்கு.

பொன்ஸிற்கு பதில் கிடையாது! :@

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

//ஒரு வார்த்தை, ஆகா கூட்டு சேர்ந்துட்டாங்க//
இதைச் சொல்லிடப் போறீங்களேன்னு தான் கொஞ்சம் சைலன்டா இருந்தேன்.. என்ன செய்ய..எனக்கும் வேலை இல்லையா.. அதான்.. ஹி ஹி..

தாஸ், நான் வேணா ஒதுங்கிக்கிறேன்.. நீங்களாச்சு உங்க மேடம் ஆச்சு... ;)

பை த பை, வ.வா.சன்னு சொன்னாலே நான் மட்டும் தான்னு நினைச்சிட்டீங்களா, இல்லை, வ.வா. சங்கத்தினருக்கு மட்டும் தான் நான் பின்னூட்டம் போடுவேன்னு எண்ணமா? (அங்கயும் எல்லாம் தனித் தனி entity தாங்க ;) )

 
At Tuesday, 01 August, 2006, சொல்வது...

விபசாரத்தைத் தொழிலாக்குவது என்று சொல்வது வேறுதளத்தில். விருப்பப்பட்ட மாதரோ மனிதரோ( male pro) இதில் சட்ட விரோதமாக இரகசியமாக ஈடுபடுவதால் அவர்களுக்கு உடல்ரீதியான, உளவியல்ரீதியான பாதுகாப்பு கொடுக்க முடியாதிருப்பது குறித்ததது. தவிர்க்கவேண்டிய தொழில் என்றாலும் இன்றைய நிதர்சனமாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இம்மாந்தருக்கு கட்டுப்படுத்தப்பட்ட வேலைநேரங்கள், சுரண்டலிலிருந்து பாதுகாப்பு, உடல்நல சோதனைகள் முதலியன கொடுப்பதற்கு இதனை தொழிலாக அறிவிக்க வேண்டும் என்பது கோரிக்கை.

தாஸ் சொல்வதுபோல் ஒருவரின் செயல்/சொற்களுக்கு அவரது குடும்பத்தினரை அழைப்பது நாகரீகமான செயலன்று. இரண்டாவதாக குடும்பத்தின் ஆணுக்கு பெண்களின் மேல் ஆளுமை உண்டு என்ற கருத்து பெண்ணியத்திற்கு எதிரானது.

 
At Tuesday, 01 August, 2006, சொல்வது...

மணிகண்டன், நன்றி

மோகன் தாஸ், அது என்ன புதுசா மேடம்? தலை நரைக்கிறது என்றதும் மரியாதையா :-)
நான் வா.வா, போ.போ சங்கம் எதிலும் மெம்பர் இல்லை. :-)))))))))


பொன்ஸ், நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். பெண் என்றால் எல்லாரும் பெண்கள்தானே?

மணியன், நிங்கள் வியாதிக்கு மருந்து சொல்கிறீர்கள், நான் நோயே வராமல் பார்த்துக்கொள்ளக்கூடாதா
என்கிறேன். இது தொழில் என்று பல நூற்றாண்டாய் ஆண் மனதில் ஊறிவிட்டது. அதை அவ்வளவு
சுலபமாய் மாற்ற முடியாது. தொழில் என்பதும், சட்டப்படி ஆக்க வேண்டும் என்பதும் இதில் உழலுபவர்களுக்கு ஓரளவு நன்மை ஏற்பட்டாலும், இதில் ஈடுப்படுத்த கடத்தப்படும் சிறுமிகளின்
எண்ணிக்கை, புள்ளிவிவர கணக்கு பயத்தை ஊட்டுகிறது.
ஆண்கள் ஈடுப்படுவது குறித்தும் பேசலாம். அதிலும் சிறுவர்களை வலுக்காட்டாயமாய்
ஈடுப்படுத்துவது, இதற்காக சுற்றுலா பெயரில் கோவா, கோவள கடற்கரைகளில் வரும் வெளிநாட்டினர்.
இவை எல்லாம் பேச ஆரம்பித்தால் இப்பொழுது முடியாது. மீண்டும் வருகிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி

 
At Tuesday, 29 August, 2006, சொல்வது...

என்ன ஒரு ஆழமான பதிவுங்க! புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)

 
At Friday, 01 September, 2006, சொல்வது...

சீக்கிரமா அடுத்த பதிவு போடுங்க மேடம்..

 

Post a Comment

<< இல்லம்