Thursday, July 27, 2006

அவள்விகடனுக்கு விஷயதானம்!

மணிக்கொடி காலம் என்ற புத்தகத்தில்தான் "விஷயதானம்" என்ற சொல்லை முதல் முதலாய் தெரிந்துக் கொண்டேன். அதாவது இப்பொழுது இணணய இதழ்களில் நம் ஆக்கங்கள் வந்தால் அவை விஷயதானம். பிறகு இலக்கிய இதழ்களில் வெளியானவைகளுக்கு சன்மானம் கிடையாது என்பதும், கதைகள் வெளியானப்பொழுது தெரிந்துக் கொண்டேன். ஆனால் கதை வந்ததற்கு சான்றாய், இலவசமாய் சிறுகதை வந்த கணையாழி இதழ்கள் கிடைத்தன.

இப்படி இருக்க, சில மாதங்களுக்கு முன்பு இணையம் மூலமாய் கட்டுரை ஒன்றை அவள் விகடனுக்கு அனுப்பி, மறந்துப் போனேன். இன்று அவள் விகடனைப் பார்த்தப்பொழுது, அதில் ஜூன் மாதம் வெளியான "வேண்டாமே தொட்டார்சிணுங்கிதனம்" என்ற கட்டுரைக்கு பாலோ- அப் என்று ஒருவரின் அனுபவம் வந்துள்ளது. என்னடா நாம் அனுப்பின தலைப்பாயிற்றே
என்று சுவடுகளைப் பிடித்துக் கொண்டுப் போனால், மம்மிஸ்கிளப் என்பதில் எடிட் செய்யப்பட்ட கட்டுரை, என் பெயரில்!

ஐயா, அவள் விகடன் ஆசிரியர் குழுவைச் சார்ந்தவர்களே, கட்டுரை இணையம் மூலமாக அனுப்பட்டது, அதை வெளியிடுகிறோம் என்று ஒற்றை வரி ஒரு மெயில் அனுப்பக்கூடாதுங்களா?
படைப்புக்கு சன்மானம் கேட்கவில்லை, இலவசமாய் பத்திரிக்கை கேட்கவில்லை, வெளியாகியுள்ளது என்ற செய்தி அனுப்பினால், நாங்களே வாங்கிப் பார்த்துக்கொள்வோம் இல்லையா? இதோ அந்த கட்டுரை!


வேண்டாமே தொட்டாச்சிணுங்கித்தனம்!

தற்கொலைக்கு முயன்று, தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டாள், எனக்குத் தெரிந்த வீட்டுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், "தொட்டதுக்கெல்லாம் இந்த மாதிரியான முடிவைத் தேடுறது முட்டாள்தனம்" என்று அவளுக்கு அறிவுரை சொல்ல.. நடுவே குறுக்கிட்ட அவளின் தாய், "என்ன டாக்டர் செய்றது? எம் பொண்ணு ஒரு சொல் தாங்க மாட்டா.. அவளை அப்பிடி வளர்த்துட்டேன்" என்று பெருமையுடன் சொல்ல.. "உங்களாலதான் உங்க பொண்ணு இந்த நிலையில இருக்கறா" என்று தாயைத் திட்டித் தீர்த்துவிட்டார் மருத்துவர்.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நம்மில் எத்தனை அம்மாக்கள் மகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதாக நினைத்துக் கொண்டு, இந்த கவரிமான் பரம்பரை வசனத்தை பிறரிடம் சொல்கிறோம்.. ஆனால், யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது மாதிரி, இந்த வசனம் நம் குழந்தையை எத்தனை பெரிய அதல பாதாளத்துக்குள் தள்ளுகிறது என்பதை நாம் உணருவதே இல்லை.

ஒரு பெண் எப்பொழுது சமையலறையை விட்டு, வெளியுலகில் காலடி எடுத்து வைக்கிறாளோ.. அப்பொழுதே, பிறர் சொல்லும் விமர்சனங்களை அலட்சியப்படுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அதில் ஜெயித்திருப்பவர்கள் பல சோதனைகளையும் வேதனை களையும் தாண்டி வந்தவர்கள்தான். பலவிதமான சொல்லடிகளுக்கும் விமரிசனங் களுக்கும் அஞ்சி, தங்கள் லட் சியப் பாதையை விட்டு விலகி, முடங்கிப் போகும் பெண்கள், அப்படி பேசியவர்களின் எண்ணத்தை வெற்றி கொள்ளச் செய்கிறார்கள்.

இன்று பாருங்கள்.. எத்தனை பெண்கள் இதைப் போன்ற சொல்லடிகளுக்கு பயந்து, யாருடனும் ஒட்டாமல் நத்தையைப் போல கூட்டுக்குள் ஒடுங்குகிறர்கள். தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்! புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எறியப்படும் சொல்லடிகளைக் கேட்டு அந்நேரம் மனம் நோகத்தான் செய்யும். கோபத்தில் ரத்தம் கொதிக்கும் தான். ஆனால், அந்தப் பெண்களின் தாய் அவர்களின் சின்ன வயதில், உன்னைப் பற்றிப் பிறர் பேசுவதை நீ கண்டு கொள்ளாதே. இத்தகைய பேச்சுக்கள் பொறாமையின் வெளிப்பாடே! அவர்களை வெற்றி கொள்வது என்பது இந்தப் பேச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான் என்று சொல்லி வளர்த்திருந்தால், அவர்களெல்லாரும் இன்று அந்தப் பேச்சுக்களை புறம்தள்ளி, சிகரங்களை எட்டியிருக்க மாட்டார்களா?

ஆம்! ஒரு பெண்ணுக்கு எதையும் தாங்குகிற மனப்பான்மையை அவளின் வீடுதான்.. முக்கியமாக தாய்தான் கற்றுத் தர முடியும். இப்படி பழக்கப்படுத்த வேண்டிய தாயே "என் மகள் ஒரு பேச்சு தாங்க மாட் டாள்" என்று சொல்லி, கோழையாக வளர்க்கலாமா?

யோசிப்போமா கொஞ்சம்?

& ராமச்சந்திரன் உஷா, துபாய்.


பி.கு இந்திய பயணம் ஆகஸ்டு இரண்டாம்தேதிதான். இம்முறை நேராய் மும்பைக்கு! சொந்த வேலைகள் காரணமாய் இணையத்தின் பக்கம் அதிகம் வரமுடியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

17 பின்னூட்டங்கள்:

At Thursday, 27 July, 2006, சொல்வது...

"படைப்புக்கு சன்மானம் கேட்கவில்லை,"

ஏன் கேட்கக்கூடாது? விகடனிடம் பணமாயில்லை? ஆசிரியர் ஸ்ரீக்கு எழுதவும். படைப்பு திருட்டு என்பது சீரியஸ் மேட்டர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

ரொம்ப நல்ல கட்டுரை. ரொம்ப நல்ல பாயிண்டும் கூட..
//எம் பொண்ணு ஒரு சொல் தாங்க மாட்டா.. அவளை அப்பிடி வளர்த்துட்டேன்// இந்த வார்த்தையை ச்சின்ன வயதில் அக்கம் பக்கம் நிறைய கேட்டிருக்கேன்.

"சொல்லு தாங்க மாட்டா" என்பதற்கு "அழ ஆரம்பித்து விடுவாள்.." "மூலையில் முடங்கிவிடுவாள்" என்பன போனர் அர்த்தங்கள் தான் இது வரை நினைத்திருந்தேன்.
தற்கொலை வரைப் போவதென்பது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இதற்கு இந்நாளைய சினிமாக்களும் ஒரு காரணம். வஞ்சகத்தனமாக தற்கொலை விதையை மனிதர்களின் மனதில் விதைத்து விடுகின்றன.

ஒவ்வொரு முறை பத்தாவது மட்டும் பனிரெண்டாவது தேர்வு முடிவுகள் வரும் பொழுது .. ஆண்டவனை ரொம்ப வேண்டிக் கேட்டுக்கொள்வேன்..."இந்த முறையாவது யாரும் ஃபெயிலாகிவிட்டோமென்று தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென்று.

நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்,
அன்புடன்,
சீமாச்சு

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

டோண்டு சார்,
என் பெயரில்தான் வந்துள்ளது. அதனால் திருட்டு என்றெல்லாம் சொல்ல முடியாது. என் வருத்தம் எல்லாம் ஒரு வரி
மெயில் அனுப்பியிருக்கலாம், உள்ளூர் முகவரியில் ஒரு காப்பி அனுப்பியிருக்கலாம் என்பதுதான்! நீங்கள் சொல்வதுப் போல
ஐம்பதோ, நூறோ எழுத்தாளரின் எழுத்துக்கு கொடுக்கப்படும் அங்கிகாரம் மற்றும் மரியாதை. ஏதோ இங்கு பொதுவில்
போட்டுவிட்டேன், விகடன் ஆசிரியர் குழு கண்ணில் விழுந்து இனியாவது இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

என்னைப் பொறுத்த வரையில் விகடனிடமிருந்து சன்மானம் சரியாகவே வந்து விடும்.

உங்கள் லோக்கல் முகவரி கொடுத்திருந்தீர்களா?!

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

இது பெண்களுக்கு மட்டுமென்றில்லை, ஆண்பிள்ளைகளை வளர்ப்பதிலும் உண்டு. கோழை என்றில்லை, நடைமுறைஉலகம் தெரியாமல் protectedஆக வளர்த்தல்.

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

சீமாச்சு,மணியன்! சினிமா, டீவி சீரியல் இவைகளின் தாக்கம் எல்லாம் இல்லை. அந்தகாலத்தில் இருந்து இன்னும் வழக்கில் இருக்கும் சொல் இது :-(

பையன்களை, பெற்றவள் எம் பையனுக்கு ஒண்ணுமே தெரியாது போன்ற டயலாக் விடுவாள். ஆனால்
அதுவோ எல்லா வேலைகளையும் கமுக்கமாய் செய்துக் கொண்டு இருக்கும். ஆனால் பெண்ணுக்கு
அச்சம், மடம், நாணம் இத்தியாதி குணங்கள் பெண்ணை போற்றுதலாய் சொல்லப்படுகிறது. என் பெண் ரொம்ப சென்சிடீவ், ஒரு வார்த்தை, ஒத்த சொல் தாங்கமாட்டாய் என்றெல்லாம் இன்றும் சொல்லப்படுகிறது.

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

இலவசமாக விஷயத்தைப் பெற்று கோடி கணக்கில் சம்பாதிக்கும் பத்திரிகைகளிடம்
சன்மானம் கேட்பதில் தப்பே இல்லை.

சமீபத்தில் ஒரு வலைதளத்தில் ஒரு பெண்மணியின் ரவாதோசை போட்டோவை
தமிழ் முரசு திருடி வெளியிட்டதாக எழுதியிருந்தார். இவர்களிடம் பணமா இல்லை?

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

உஷா,

//ஒரு பெண் எப்பொழுது சமையலறையை விட்டு, வெளியுலகில்
காலடி எடுத்து வைக்கிறாளோ.. அப்பொழுதே, பிறர் சொல்லும்
விமர்சனங்களை அலட்சியப்படுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும்.//

என்ன நீங்க இப்படிச் சொல்றீங்க? சமையலறையிலேயே இருந்தாலும்
சமையலைப் பத்தி வீட்டாளுங்க சொல்ற விமரிசனத்தையும் அலட்சியப்
படுத்திக்கிட்டு இருக்கேனேங்க நான்:-)))

 
At Thursday, 27 July, 2006, சொல்வது...

துளசி, சமையலறையில் என்னத்தான் வடிச்சிப் போட்டாலும் எந்த பாராட்டும் கிடைக்காது :-)

ஆதிரை, மாயவரத்தான்! ( சென்னை முகவரியுடன்) ஒரு மெயில் விகடனுக்குப் போட்டுவிட்டேன், பார்க்கலாம் :-)
இதோ அனுப்பிய மெயிலின் காப்பி-

மதிப்பிற்குரிய விகடன் ஆசிரியர் குழுவிற்கு,
வணக்கம். இந்த வார 4-0 8- 06 அவள் விகடனில் பாலோப்- அப் என்ற பகுதியில் வெளியான "தொட்டார்சிணுங்கிதனத்துக்கு நோ போடுங்கள்" கட்டுரையைப் படித்ததும் நான் உங்களுக்கு அனுப்பிய கட்டுரை போல் இருக்கிறதே என்ற சந்தேகத்தின் பேரில், சுவடுகளை தேடியதில் ஜூன் 23ம் தேதி அவள் விகடன் இதழில், மம்மீஸ் கிளப் என்ற பகுதியில் "வேண்டாமே இந்த தொட்டார்சிணுங்கிதனம்" என்ற் கட்டுரை என் எழுத்து பெயரான ராமசந்திரன் உஷா என்ற பெயரில் வெளி வந்துள்ளது என்பதைக் கண்டேன்.

இணையம் மூலமாய் அனுப்பப்பட்ட இக்கட்டுரைக்கு, பிரசுரமானதைக் குறித்து எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாம் என்பதே என் கோரிக்கை. விஷயம் தெரிந்திருந்தால் சென்னை முகவரியும் கொடுத்திருப்பேன். எழுத்தாளர்களுக்கு ஒரு தொகையும், அவ்விதழை இலவசமாய் கொடுப்பது வழக்கில் இருக்கும் விஷயம்தானே? இவை படைப்பாளிக்கு தரப்படும் ஒரு அங்கீகாரம் மற்றும் மரியாதை.

ஆனால் அவை மிக பிரபலமான விகடன் நிறுவனத்தில் கடைப்பிடிக்காதது வருத்தத்திற்குரிய விஷயம். இனியும் இந்த தவறு நேராமல் இருக்க, தக்க நடவடிக்கை எடுக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
திருமதி.உஷா

 
At Friday, 28 July, 2006, சொல்வது...

ஏங்க....தினத்தந்தியில் வரும் வாசகர் வாய்ஸ் - அல்லது தினமலரில் வரும் இது.உங்கள்.இடம் மாதிரி பகுதியா இருக்கப்போகுதுங்க...

:))

 
At Friday, 28 July, 2006, சொல்வது...

உஷா,சன்மானம் கண்டிப்பா அனுப்புவாங்க..ஆனா 3 மாதம் மேல் ஆகும்.. நானும் வராது என்று நினைத்திருந்த போது வந்தது.. உங்களை போன்று எழுதவில்லை.. சும்மா ஏதோ கிறுக்கினேன்..

 
At Sunday, 30 July, 2006, சொல்வது...

வெளியாளுங்க என்ன சொன்னாலும் காதில போட்டுக்காம போய்கிட்டேயிருக்கலாம், ஆனா துளசி சொல்ற மாதிரி வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு நம்ம பாடுப்பட்டு கஷ்டப்பட்டு செஞ்ச சமையலை விமர்சிக்கிறவுங்களை தான் என்ன பண்றதுன்னு தெரியலை.

கட்டுரை நல்லா இருக்கு, சன்மானம் வந்த உடனே மறக்காம ட்ரீட் :D

 
At Sunday, 30 July, 2006, சொல்வது...

உஷா,
முன்பு என்னுடைய 'வியட்நாமில் மதுரை வீரன்' பதிவை அவள் விகடனில் பிரசுரம் செய்த போது ,எனக்கு மெயில் அனுப்பியிருந்தார்கள். உங்களுக்கு அனுப்பாதது ஆச்சரியம் தான்.

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

//துளசி சொல்ற மாதிரி வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு நம்ம பாடுப்பட்டு
கஷ்டப்பட்டு செஞ்ச சமையலை விமர்சிக்கிறவுங்களை தான் என்ன
பண்றதுன்னு தெரியலை.//

என்ன தெரியலையா? அதைத்தான் கஷ்டப்பட்டுச் சாப்பிட வைக்கிறோமே. அதைவிட
வேற தண்டனை தேவையா அவுங்களுக்கு ? :-))))

 
At Monday, 31 July, 2006, சொல்வது...

ரவி, ஜோ! இந்த கட்டுரையை எழுதி அப்படியே அவள் விகடனுக்கு அனுப்பினேன். இணையத்தில் போட்டதில்லை. விகடன்
இணைய இதழ்களில் சந்தா கட்டியிருப்பதால், அங்குப் பார்த்தப்பொழுது ஸ்பெஷல் வரிசையில், மம்மீஸ் கிளப் என்பதில்
வெளியாகியிருந்தது. அச்சில் பத்திரிக்கை இங்கு கிடைப்பதில்லை.

துளசி, WA, அதெல்லாம் நிறைய பேசியாகிவிட்டது. நல்லா இருக்கா என்று நாமே ரெண்டு முறை கேட்டா, நல்லா இருக்கு போதுமா
என்று கடுப்பாய் பதில் வரும். அதைவிட கேட்காமல் இருப்பதே உசிதம் :-)

 
At Tuesday, 01 August, 2006, சொல்வது...

I never received any message from Vikatan for my Aval vikatan, Not even a reply for my thanks mail:-((

Browsing using a dokku PC, cant afford the time of suratha loading, sp inglipich:-)

 
At Tuesday, 01 August, 2006, சொல்வது...

உஷா,

ரொம்ப ஸந்தோஷம். என் அம்மாவையும் பார்க்கச் சொல்லுகிறேன்.

இருந்தாலும் ஒரு ஸந்தேகம். அது ஏன் பெரும்பாலான பெண்கள் பத்திரிக்கைகள் ஆண்களை குறை சொல்லுகின்றன?

நீங்கள் குறிப்பிடும் அதே இதழில் ஆண்கள்தான் பெரும்பாலும் விபத்திற்குக் காரணம் என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது. நான் கேள்விப்பட்டவரை (பெண்களிடமிருந்தும்) பெண்கள் அவ்வளவு நல்ல ட்ரைவர்கள் இல்லை. (எனக்குத் தெரியாது. இதுவரை என்னை இடித்த ட்ரைவர்கள் அனைவருமே ஆண்கள்தான். ஹ்ம்ம்ம்ம்ம், எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும் !!!)

 

Post a Comment

<< இல்லம்