Thursday, July 20, 2006

வெள்ளை காக்கைகள் மற்றும் கிருதயுகம் எழுக

வெள்ளை காக்கைகள் மற்றும் கிருதயுகம் எழுக ! - கண்ணன் மகேஷ்... சில நினைவுவலைகள்

என் அப்பாவுக்கு நாலு தங்கைகள், அந்த கால வழக்கப்படி தாத்தாவுக்கு பொறுப்பு இல்லை. நாலு தங்கைகளுக்கும், இரண்டு தம்பிகளின் உதவியுடன் தன்னுடைய சொற்ப சம்பளத்தில் மிச்சம் பிடித்து, லோன் வாங்கி கல்யாணம், வளைகாப்பு, பிள்ளை பிறப்புவரை ஒப்பேற்றினார். ஆனால் பெரிய சீர்வரிசை பட்டியல்களோ, ஆடம்பரமோ எங்களுக்கு வழக்கம் இல்லாவிட்டாலும், சொத்து, பத்து ஒன்றும் இல்லாமல், மாத சம்பளக்காரர் நாலு கல்யாணம் செய்துவது என்றால் சுலபமில்லை.

ஆபிசில் லோன் போட்டு, தெரிந்தவர் உறவினரிடம் கைமாத்து வாங்கி- கடனில்லை, கடன் என்றால் வட்டி கட்ட வேண்டுமே?, அம்மாவின் வழக்கமான ஒரு சங்கிலி பாங்கில் அடகுக்கு போக, நண்பர்கள் எங்கு எதை வாங்கினால் விலை குறைவு, கடனுக்கு வாங்கலாம் என்று உதவி கரம் நீட்ட ஒரு வழியாய் அத்தைகள் கழுத்தில் தாலி ஏறும்.

அடுத்து வளைகாப்பு எங்கள் வீட்டில் வழக்கம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் பிள்ளை பிறப்பு? போடு அடுத்த லோன்! கல்யாணம் என்றதும் அம்மாவின் தாய்மாமன் பொறுப்பு எடுத்துக் கொள்வார். மளிகை சாமான்களை விணாக்காமல் உபயோகப்படுத்துகிறார்களா என்று கண்காணிப்பது அவர் வேலை. சாமான்கள் மிச்சமானால், கொஞ்சமாய் இருந்தால், தனிதனியே பொட்டல் கட்டப்பட்டு எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். அதிகமாய் இருந்தால், அப்படியே மளிகை கடைக்கு திருப்பப்படும்.

இதை தவிர உறவினர்களில் இளைஞர்கள், நாலு பேர்கள் சைக்கிளில் பறந்துக் கொண்டு இருப்பார்கள். சத்திரத்தில்தான் சமையல்காரர் சமைக்க வருவார். மற்றப்படி வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பே வரும் கும்பலுக்கு சமைக்க, எல்லா பெண்களும் ஆளுக்கு ஒரு வேலை செய்வார்கள். பாத்திரம் கழுவுவதில் இருந்து, காய்கறி நறுக்குவதில் இருந்து கதையளந்தப்படி செய்ததது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மூன்றாவது அத்தைக்கு இரண்டாவது படிக்கும்பொழுது, நாலாவது அத்தைக்கு ஆறாவது படிக்கும்பொழுது பார்த்தவைகள்தான்.

இதில் என் அம்மா வீட்டு வேலை செய்ய முடியாதளவு பிசியாய் இருப்பார். வெளியே போகும் வேலையும், கல்யாணத்துக்கு அழைக்க வேண்டிய பொறுப்பும் இருப்பதால் சமையலறையிலேயே நுழைய மாட்டார். உறவினர்கள் வேலை செய்வதில் ஈகோ பார்க்க மாட்டார்கள். உடல் வணங்கி வேலை செய்வதும் அன்றைக்கு புதியதில்லை. ஆனால் இன்று?

கூட்டு குடும்பங்களே இல்லை. யாருக்கும் உடல் வணங்கி வேலை செய்வது என்ற பழக்கமே இல்லை. காசை விட்டெரிந்தால் எல்லாம் கிடைக்கும் என்று ஆகிவிட்டது.

சென்ற வருடம் ஊரில் என் உறவினர் திருமணம், கல்யாண பெண்ணின் தாய் காப்பி வரவில்லை என்று கத்திக் கொண்டு இருந்தார். சம்மந்தியம்மா, செய்வதறியாமல் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். "பால் வரவில்லை, நாங்க என்ன செய்ய முடியும்?" என்று கறாராய் பேசிவிட்டுப் போனார் கல்யாண காண்டிராக்ட் எடுத்தவர்! கல்யாணத்துக்கு சரியாய் தாலி கட்டும் பொழுது தலையைக் காட்டுவது, இல்லை என்றால், முன்னால் வந்து சடங்குகளில் கலந்துக் கொண்டுவிட்டு, ஹோட்டலில் ரூம் எடுத்து தங்குவது இப்பொழுது வழக்கமாகி
விட்டது. கல்யாணம் என்ற பழைய கலகலப்பு இல்லாமல், ஏதோ நாடகத்திற்கு வந்ததுப் போல இருந்தது. சிறுவயதில் கலந்துக் கொண்ட உறவினர்கள் கல்யாணம் எல்லாம் மலரும் நினைவுகளாய் மனதில் ஓடிக் கொண்டிருந்தப் பொழுது,

கையில் கிடைத்த நாவல்- கண்ணன் மகேஷ் எழுதிய, "கிருதயுகம் எழுக". இதை நாவல் என்று சொல்வதைவிட, அக்கால, கல்யாண வீட்டில் நடக்கும் காட்சிகளை நேர்முக வர்ணனை செய்வதுப் போல இருக்கிறது. ராமசுப்பிரமணியன், தன் அக்காக்கள் மூன்று பேர்களுக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கிறான் என்பதே கதை. பையன் ஒருவன் கல்யாணத்துக்கு இருக்கிறான் என்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு கட்டமாய் சொல்லிக் கொண்டேப் போகிறார். மாப்பிள்ளை வீட்டார்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகள், பேரங்கள், பித்தலாட்டங்கள், பொய்
வாக்குறுதிகள், வரட்டு கவுரவம், உறவினர்களுக்கிடையே நிலவும் பாலிடிக்ஸ், அசட்டுதனங்கள், பொறாமை, கோபம், சிலர் காட்டும் மனிதநேயம், ஏதோ இந்தளவாவது நம் சகோதரன் செய்கிறானே என்று இல்லாமல் பெண்கள் காட்டும் சுயநலம் என்று ஒவ்வொரு மனித குணங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.

கதை முழுவதும் பாவப்பட்ட தம்பி ராமசுப்பிரமணியத்தின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரின் கெடுபிடிகள், மாட்டிக்கொண்டு முழிக்கும் பெண்கள் இவை எல்லாம் பழங்கதையாகிவிட்டன. அந்த காலத்தில் மாமியார் வீட்டில் பாடாய்பட்ட கதைகள் எல்லாம் இன்று ஏது?

கண்ணன் மகேஷ் எழுதிய "வெள்ளைகாக்கைகள்" பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து வியந்திருக்கிறேன். ரேணுகாதேவி தேவஸ்தானம் என்ற கோவிலே களமாய் கதை முழுவதும் பின்னப்பட்டிருக்கும். அறங்காவல்துறையினர், ஊழல், கோவில் பிரச்சனைகள், கோவிலை நடத்தும் சாமியார், தர்மகர்த்தா செய்யும் ஊழல்கள், கோவிலுக்கு வருகை தரும் முக்கியஸ்தர்கள்,..., எந்த கோவில் நினைவுக்கு வருகிறது? உம்ம்ம், அதே தான்! ஸ்தலவிவரிப்பிலேயே இந்த கோவில்தான் என்று பரிபூரணமாய் விளங்கிவிடும், போதாதற்கு நடிகை வந்து கோவில் பிரபலம் ஆனதை விளக்கும்போது, சரிதான் என்று தோன்றும். (பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது)

வெள்ளைகாக்கைகள் - இதுவரை தமிழில் வெளியாகியுள்ள சிறந்த நாவல்கள் பட்டியலில் கட்டாயம் இடம் பெற தகுதியானது என்பதில் ஐயமில்லை.

*************************

2 பின்னூட்டங்கள்:

At Thursday, 20 July, 2006, சொல்வது...

ஊருக்கு போற வரை தினம் இரண்டு பதிவா?

 
At Friday, 21 July, 2006, சொல்வது...

மனசு, தமிழோவிம் லிங்க் கொடுத்திருக்கிறேனே பார்க்கவில்லையா? என்னோட இடத்தில் போட்டு வைக்கலாம் என்ற
எண்ணம் மட்டுமே, பதிவு போட யோசிக்கவும் நேரமில்லை

 

Post a Comment

<< இல்லம்