Wednesday, June 27, 2007

தேடிப் பிடித்து 8 தற்புகழச்சிகள்

முதல் முறையாய் என்ன, எப்படி எழுதுவது என்று என்னை மிகவும் யோசிக்க வைத்த பதிவு இது. நம்மை பற்றி நாமே பெருமையாய் நினைப்பது ஒருவகையான ஈகோவின் வெளிப்பாடுதானே? அப்படி பெருமைப்பட்டுக் கொள்ளும்படி வாழ்க்கையில் என்ன சாதித்தேன்
என்று என்னையே நான் கேட்டுக் கொண்டால், ஒன்றுமே இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, வெகு சாதாரணமாய் படித்து, அன்றைய வழக்கப்படி டிகிரி முடித்ததும் கல்யாணம் செய்து, அதன் அடையாளமாய் இரண்டு பிள்ளைகளும் பெற்று, சாதாரணமாய்
வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும், ஒரு மத்திய வர்க்க பெண் நான்.

ஆட்டம் ஆரம்பித்தவரிடம் ஒரு கேள்வி, ஏங்க, ஒருவரின் அருமை பெருமைகளை மற்றவர் எடுத்து சொன்னா எப்படி இருக்கும்? நமக்கே தெரியாத நம் பெருமைகளை
இன்னொருவர் சொன்னால், செல்லமா அலுத்துக்கொண்டு ஏற்றுக் கொள்ளலாம் இல்லையா? அதுக்காக அடுத்த ஆட்டம் என்று ஆரம்பிச்சிடாதீங்க :-)

இலவசம் கூப்பிட்டாஹ, இப்ப கவிதா கூப்பிடராஹான்னு கரக்காட்டக்காரனில் கோவை சரளா பீற்றிக் கொண்டா மாதிரி நானும் ஆரம்பிக்கிறேன். ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டையாய் தேடிப்பிடித்து என் பெருமைகளை பறை சாற்றுகிறேன்.

1- சென்ஸ் ஆப் ஹூமர்
அவ்வப்பொழுது நகைச்சுவை, நக்கல் எல்லாம் பீறிட்டுக் கொண்டு வரும். அதனால் சிலருக்கு கோபம் கூட வந்திருக்கலாம். போன வாரம், ஏதோ அலுத்துக் கொள்ள, நம்மாளு ஒழுங்கா பூஜை, விரதம்னு செய்திருந்தா நல்ல புருஷனா கிடைத்திருப்பான் என்று சொல்ல, அதெல்லாம் நம்ப முடியாதுப்பா. நீங்கக்கூட சின்ன வயசில் இருந்து பக்தி பழமா இருக்கீங்க. டெய்லி சாமி படத்துக்கு முன்னாடி அரை மணி நேரம் உட்காரீங்க. என்ன பலன்? உங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிதா? என்று கேட்க, ஐயா, ஒரு செகண்ட் சைலண்ட் ஆகிவிட்டார்.

2- கடவுள் நம்பிக்கை இன்மை.
உலகில் இன்று நிலவும் பல பிரச்சனைகளுக்கு இந்த கடவுள் என்ற கான்செப்ட் இருக்கிறதே
அதுதான் என்று தீர்மானமான நம்பிக்கை. சாதி, மதவுணர்வுகளுக்கும் இந்த கடவுள் காரணம் என்பதால் கடவுளை என் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏன் எனக்கு இந்த நம்பிக்கை வரவில்லை என்று என்னையே கேட்டுக் கொள்வேன். வாழ்க்கையை
நிர்ணயிப்பது நம் எண்ணங்களே என்பதில் திடமான நம்பிக்கை இருந்தாலும், சில ஏன்கள் உண்டு. அந்த ஏன்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. கேட்டால் கர்மா என்பார்கள். முற்பிறவி, அடுத்த பிறவி, சொர்க்கம், நரகம் போன்றவைகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டு,
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. என்றுப் போய் கொண்டே இருக்கிறேன். இதில் விசேஷம் என்னவென்றால் சிறுவயதில் இருந்தே, பக்தி வரவில்லை, வயதாக ஆக, நம்பிக்கை இன்மை கூடுகிறதே தவிர, வர மறுக்கிறது. ஒரு வேளை அனைத்து மார்க்கத்தின் பக்தி ரச காவியங்களையும், புனித நூல்களாய் கொண்டாடப்படுவதை படித்ததன் காரணமோ தெரியவில்லை.

3-ஏற்றுக் கொண்ட காரியத்தை ஒழுங்காய் செய்வது.
நம்மாளுக்கு ராகவேந்திரர் என்றால் மிகவும் பக்தி. அதனால் மந்திராலயத்தில் இருந்து, மண் (பிருந்தாவன மிருத்திகை என்பார்கள்) கொண்டு வந்து, தினமும் பூஜை செய்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால், அவருக்கு வெளியூர் போக வேண்டி வந்தால், தலைக்கு குளித்துவிட்டு, மடியாய் சாதம் (அதுக்கு தனி குட்டி ரைஸ் குக்கர் இருக்கிறது) செய்து, படத்தின் முன்னால் வைப்பது என் வேலை. என்னடா, சாமி, பூதம் இல்லை என்று சொல்லிவிட்டு இதென்ன என்கிறீர்களா? இது எனக்கு தரப்பட்ட வேலை. அதை செய்வனே செயவது என் கடமையில்லையா :-)

4- பயமின்னை.
இது ஒரு பிறவி குணம் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவு பெரிய மனிதர்கள் என்றாலும் மரியாதை இருக்குமே தவிர,படபடப்பு, வாய் உலர்த்தல் போன்றவை வராது. சொல்ல நினைப்பதை, செய்ய நினைத்ததை பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும்,
சரி என்று மனதிற்கு பட்டதை செய்துவிடுவது. பல பிரச்சனைகளில் முதல் எதிர்ப்பு குரல் என்னிடமிருந்து வந்துள்ளது என்பதை இணைய உலகம் அறியும்.!!!

5- நம்மால் முடிந்ததைப் பிறருக்கு செய்வது
ஒருமுறை துபாயில் இருந்து மஸ்கட் வழியாய் சென்னை செல்கிறேன். கூட ஏழாவது
படிக்கும் மகளும், மூன்றாவது படிக்கும் மகனும். மஸ்கட்டில் பாதிராத்திரியில் செக் இன் ஆனதும், விமானம் வரவில்லை என்று உட்கார்ந்து இருக்கிறோம். அப்பொழுது பக்கத்தில் ஒரு பெண் இருபது வயது இருக்கலாம். கண்ணில் நீருடன் பயந்து உட்கார்ந்து இருந்தாள். விமான சிப்பந்திகள் வந்து வந்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

என்னவென்றுக் கேட்டதும், விமானம் ஓவர் புக்கிங் ஆகிவிட்டது. இன்று இரவு ஹோட்டலில் இருந்துவிட்டு, காலை அடுத்த விமானத்தில் இடம் தருகிறோம் என்கிறார்களாம். கேட்கும்போதே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது. முதல் வேலையாய் செக் இன் ஆகிவிட்டது, எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே போகாதே என்று சொல்லிவிட்டு, அந்த பெண்ணை அழைக்க வந்த ஆளிடம், இது சரியில்லை, ஆண்கள் யாரையாவது கேளுங்கள் என்று கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னதும், எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அதற்குள் அந்த பெண் அழ ஆரம்பிக்க கூட்டம் கூடிவிட்டது. பிறகு யாரும் விமானம் ஏறக்கூடாது என்று வேறு ஒருவர் சொல்ல, இது ஒரு மாதிரி தர்ம அடி சித்தாந்தம். கூட்டம் சேர்ந்தவுடன் எல்லாரும் வீரமாய் கத்தத் தொடங்கினர்.

அப்புறம் என்ன? சமாதான பேச்சு ஆரம்பித்தது. பிறகு பார்த்தால் அந்த பெண் பிசினஸ் கிளாசில் உட்கார்ந்திருந்தாள். அதற்காக அவள் என்னிடம் ஓடோடி வந்து நன்றி சொல்லி, என் முகவரி, போன் நம்பர் கேட்டாள் என்றெல்லாம் கற்பனை செய்யாதீர்கள். அப்படி
எல்லாம் யதார்த்த உலகில் நடக்காது. வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நாம் தன்னலம் இல்லாமல் செய்யும் நல்ல காரியத்தின் பலன் வேறு உருவில் நமக்கு கிடைக்கும். ஒருமுறை என் உறவினர் ஒருவள், என்னுடன் வந்தால் அன்றைய அனைத்து காரியங்களும் நன்றாக நடப்பதாய் சொன்னாள். அதன் பொருள் இதுதாங்க.

6- கொள்கைகள்
சில கொள்கைகள் உண்டு. கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நோ காம்பரமைஸ். என்னுடைய கொள்கைகள் யாரையும் பாதிக்காது என்றால் ஏன் தயங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஒன்றில் இறங்கினால் விட்டேனே பார் என்று முழு மூச்சுடன் ஒரு கைப் பார்ப்பது. இணையத்தில் எழுத ஆரம்பித்து இன்று அச்சு ஊடகத்திலும் வெற்றிக் கொடி நாட்டிய ஓரே எழுத்தாளன்/ளி என்று பெருமையாய் சொல்லிக் கொள்கிறேன்.

7- விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனம்.
சமீபத்தில் பரிசு வாங்கிய கலைமகள் நாவலைப் படித்த நண்பர் சொன்னது, நன்றாக இருக்கிறது. ஆனால் பெண்கள் சப்ஜெட், நடுவர்கள் சிவசங்கரி, திலகவதி (திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும் உண்டு) அதனால் பரிசு தந்துவிட்டார்கள் என்றார். யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். நான்கு வருடங்களுக்கு முன்பு எழுத ஆரம்பித்தப்பொழுது விதவிதமான நக்கல்கள்,
நையாண்டிகள் என் எழுத்து மேல் வைத்தப்பொழுது முதலில் கோபம் வந்தது. ஆனால் ஏன் என்னை மட்டும் இப்படி விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தேன். அதுவே என்னை மேல் மேலும் எழுத தூண்டியது என்றால் மிகையில்லை.

8- சந்தோஷமான மனம்
சின்ன சின்ன சந்தோஷங்கள் போதும், அதிலேயே மனம் நிறைந்துவிடும். இந்த குணம் மட்டும் கொஞ்சம் குறைந்துக் கொண்டு இருக்கிறது. ப்ரீ மெனோபாஸ் பிரச்சனைகள், இட மாறுதல்களால் சில குடும்ப குழப்பங்கள் என்று மனம் சோர்வு அடைகிறது. எல்லாம் சரியாகிவிடும். வாழ்க்கை வாழ்வது நம் கையில் அல்லவா இருக்கிறது!

பி.கு இவை எல்லாம் தற்புகழ்ச்சி, பெருமைகள் என்பதைவிட, என் குணாதிசியங்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நான் அழைக்க விரும்புவது (இவர்கள் எல்லாம் இந்த தொடர் விளையாட்டில் எழுதவில்லை என்று நினைக்கிறேன்)
1. ஜோசப் சார்
2- கானாபிரபா
3- அருள் செல்வன் கந்தசாமி
4- யோகன்
5- சுரேஷ் பாபு
6- மங்கை
7- ராமநாதன்
8- மதுமிதா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Labels:

31 பின்னூட்டங்கள்:

At Wednesday, 27 June, 2007, சொல்வது...

DHOOL!!!!

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

உஷா, இந்த எட்டும் தற்புகழ்ச்சி என்று நான் பார்க்கவில்லை.

தன்னிலை விளக்கம்னும் சொல்ல முடியாது.
சுய அலசல்னு ஏத்துக்க முடியாது.
சுய விளம்பரமாகவும் இல்லை.
அதனால் இது ஒருவிதமான பகிர்ந்துகொள்ளுதல்னு நான் நினைக்கிறேன்.
உண்மையா மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எழுதிப் பதிவிட்டிருக்கீங்க.

ராகவேந்திரரும்,
மஸ்கட் பொண்ணும் டாப் க்ளாஸ்.:))))

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

வணக்கம் உஷா


சும்மா பட்டு பட்டுனு உடைச்சிட்டீங்க ;-)

கண்மணி அக்கா, சந்தோஷ் தம்பி, இப்ப நீங்களா, எஸ்கேப் ஆக முடியாது போல

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

adaaa.

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

மாமி, தூள்.!!!!!

அது சரி, உங்களுடைய அபாரமான, அபரிமிதமான தன்னம்பிக்கையை விட்டுட்டீங்களே. உங்க பயமின்மை இதோட விளைவுதான்.

கலக்குங்க..

 
At Thursday, 28 June, 2007, சொல்வது...

//நீங்கக்கூட சின்ன வயசில் இருந்து பக்தி பழமா இருக்கீங்க. டெய்லி சாமி படத்துக்கு முன்னாடி அரை மணி நேரம் உட்காரீங்க. என்ன பலன்? உங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிதா? என்று கேட்க, ஐயா, ஒரு செகண்ட் சைலண்ட் ஆகிவிட்டார்.//

இது நகைச்சுவையா.... சோகம் இல்லை திகில் (ஹாரர்)ன்னு வேணா வகைப்படுத்தலாம். பாவம் அவரு :))

 
At Thursday, 28 June, 2007, சொல்வது...

அப்பாடா!!! ஒரு 8 பதிவு வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு!!! நல்ல வேளை 8 பதிவு வாங்குறது ரொம்ப கஷ்டம் அப்படீங்கறதை எட்டு விஷயத்தில் ஒண்ணா சேர்க்காம விட்டீங்களே!!

நல்லாத்தானே எழுதி இருக்கீங்க!! இது போயி அலட்டிக்கலாமா? :))

நன்றி உஷாக்கா!!

 
At Thursday, 28 June, 2007, சொல்வது...

உள்ளத்திலிருந்து நேரே வந்த பதிவு.
மஸ்கட் சம்பவம் - பாராட்டுக்கள்!
நமக்கு கொள்கைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லேங்கம்மணி, மனம் போன திசைதான். தளையறு சுதந்திரம் வேண்டும்.எந்த cult உம் வேண்டாம், அது சமயரீதியானாலும் சரி, சமூகரீதியானாலும் சரி.

 
At Thursday, 28 June, 2007, சொல்வது...

நான் படித்தவற்றிலே நல்ல பலமான, அழுத்தமான எட்டு...

//வாழ்க்கையை
நிர்ணயிப்பது நம் எண்ணங்களே என்பதில் திடமான நம்பிக்கை இருந்தாலும், சில ஏன்கள் உண்டு//

அந்த "ஏன்"கள் என்ன என்று விரிவாக எழுதலாமே..

 
At Thursday, 28 June, 2007, சொல்வது...

ஒரு எட்டு எட்டிட்டீங்க போங்க. வாழ்த்துக்கள்

 
At Friday, 29 June, 2007, சொல்வது...

கமணட் எழுத முடியாவிட்டாலும் ரெகுலரா வந்து படிக்கிறேன்.. எனக்கு
1,7,8 தான் உங்களிடம் ரொம்ம்ம்ம்ப பிடிக்கும் உஷா!!

Keep it up !!

அது என்ன கலைமகள் நாவல் ??
நான் சொன்ன மாதிரி எங்கேயோஓஓஓஓஓ போயிட்டிங்க பாத்தீங்களா !!

 
At Friday, 29 June, 2007, சொல்வது...

ரொம்ப நல்லாவே இருக்கு உஷா...

என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி..

அதுசரி.. ஏன் எந்த பின்னூட்டத்துக்குமே பதில் போடலை.. பிசியோ?

 
At Friday, 29 June, 2007, சொல்வது...

எல்லாருக்கும் நாளைக்கு வந்து நிதானமாய் பதில் சொல்கிறேன்:-)

 
At Friday, 29 June, 2007, சொல்வது...

உஷா எங்கேயோ போயிட்டீங்க போங்க
ரொம்ப நல்லா இருக்கு.

///டெய்லி சாமி படத்துக்கு முன்னாடி அரை மணி நேரம் உட்காரீங்க. என்ன பலன்? உங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிதா? என்று கேட்க, ஐயா, ஒரு செகண்ட் சைலண்ட் ஆகிவிட்டார்.///

:-)
:-)
:-))))))))))))))))))))))


///இணையத்தில் எழுத ஆரம்பித்து இன்று அச்சு ஊடகத்திலும் வெற்றிக் கொடி நாட்டிய ஓரே எழுத்தாளன்/ளி என்று பெருமையாய் சொல்லிக் கொள்கிறேன்.///

ஆமாமாம். வாழ்த்துகள் உஷா


///வாழ்க்கை வாழ்வது நம் கையில் அல்லவா இருக்கிறது!///

தத்துவவாதி உஷாவுக்கு ஜே!


8 ம் நல்லா இருக்கு உஷா.

நம்மால ஒண்ணு கூட போட முடியாது போலிருக்கே. நிர்மலா வேற எட்டை
எட்டச் சொல்லியிருக்கிறாங்க.

///நமக்கே தெரியாத நம் பெருமைகளை
இன்னொருவர் சொன்னால், செல்லமா அலுத்துக்கொண்டு ஏற்றுக் கொள்ளலாம் இல்லையா?///

இது ரொம்ப நல்லாயிருக்கு. இப்படியே தோணுது இந்த நிமிஷம்.

சோர்வை அடுத்த நிமிஷம் தூக்கி எறிஞ்சிட்டு, எதனாலும் மனதை உழப்பிக் கொள்ளாமல், இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி, தைரியமா தெனாவட்டா சவாலை எதிர் கொள்கிற உங்க குணாதிசியமும் உங்களுக்கு தெரிஞ்சது தானா. தெரியாததுன்னா செல்லமா அலுத்துக்கோங்க உஷா இப்போ:-)

 
At Sunday, 01 July, 2007, சொல்வது...

துளசி,பிரபா ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் மிக அதிகம். இன்னும் எட்டுப் போடாம இருக்கீங்களே :-)

வல்லிம்மா, நீங்க, துளசி போன்று ஆன்மீகத்தில் ஊறியவர்களும் பாராட்டுவதைப் படித்ததும் இதைக் குறித்து விவரமாய் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

நளாயினி முதல் வரவா? வாங்க வாங்க

மூக்கரே, ஊர்லதான் இருக்கீங்களா? தன்னம்பிக்கைன்னு பெருமையா சொல்லிக்க்கொள்ளலாம். ஆனா இதெல்லாம் பிறவி குணம்.

சின்ன பையன் பிரசன்னா, தாம்பத்தியம் என்பது நவரசங்களும் கொண்டது என்றாலும், நகைச்சுவை கொண்ட, எதிர் பாராத திரும்ப்பங்கள் நிறைய கொண்ட திகில் படம்தான்:-)

 
At Sunday, 01 July, 2007, சொல்வது...

உங்க ரங்கமணியின் பூஜை புனஸ்காரங்களுக்கு நல்ல பலன் இருந்திருக்கிறதே... !

 
At Monday, 02 July, 2007, சொல்வது...

உஷா,
வாசிக்க சுவாரசியமாக இருந்தது! பாராட்டுக்கள்

நீங்கள் குறிப்பிட்டுள்ள எட்டில், ஏழு குணாதிசயங்கள் (கடவுள் நம்பிக்கையின்மை தவிர!) "உயிருள்ளவரை உஷா"வுக்கு அமைய இறைவனைப் பிராத்திக்கிறேன் :)

ஒரு உபரி தகவல், நானும் இராகவேந்திரரை, பல காலமாக வணங்கி வருபவன் !

எ.அ.பாலா

 
At Monday, 02 July, 2007, சொல்வது...

இலவசம், சிறில்,ஜோசப் சார் நன்றி.

மணியன், கொள்கையே வேண்டாம் என்பதும் சிறந்த கொள்கை :-)

ரவியா இதைப் பாருங்க
.http://nunippul.blogspot.com/2006/12/blog-post.html
பின்னுட்டம் போடுவதில்லை, ஆனால் எல்லாவற்றையும் படித்து வருகிறேன் என்று வேறு சொல்கிறீர்கள். :-))

பிபட்டியன்! கட்டாயம் எழுதுகிறேன்

மது, கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டாகிவிட்டது. போன வாரம் வீட்டுக்கு போன் அடித்தேன். நீங்க ஊருக்குப் போய் விட்டீங்கன்னு உங்க மகன் நம்பர் தந்தார். ஆனால் தொடர்ப்பு கிடைக்கவில்லை. அன்னைக்கு மட்டும் நீங்க மாட்டியிருந்தா "ஓ" வென்று சோகக்கதையை சொல்லி ஒரு பாடு அழுதிருப்பேன்.

தருமி சார், ஏதோ பெரியவங்க சொன்னா பெரூமாளே சொன்னது மாதிரி. ஆனால் இதை என் ரங்கமணி சொல்லணுமே :-)

பாலா, ஏனோ இன்னைக்கு காலைதான் உங்க நினைவு வந்தது. என்னடா ஆளை காணோமே, கிராமத்து அனானியும் என்ன ஆனோரோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், பார்த்தால் உங்க கமெண்ட். பார்க்கலாம், மிச்சமிருக்கும்
ஒண்ணு என்ன ஆகிறது என்று :-))))

 
At Monday, 02 July, 2007, சொல்வது...

என்ன ஆச்சு உஷா
நலம்தானே
இராஜைக்கு ஒரு போன் அடிங்க

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

ரொம்ப நாள் கழிச்சு ஒங்க பதிவைப் படிக்கிறாப்புல உணர்வு. நேரங்கிடைக்குறப்போ ஏதாவது எழுதுங்க.

எட்டு போட்டு நீங்களும் பாஸாயிட்டீங்க. வாழ்த்துகள்.

கடவுள் நம்பிக்கை இல்லாமை என்பது தவறல்ல. நாம நல்லவங்களா இருந்தாப் போதும். எத்தன பூஜை செஞ்சோம் அப்படீங்குற கணக்குக்கு மதிப்பு பூஜ்யந்தான்னு நெனைக்கிறேன்.

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

//பாலா, ஏனோ இன்னைக்கு காலைதான் உங்க நினைவு வந்தது. என்னடா ஆளை காணோமே, கிராமத்து அனானியும் என்ன ஆனோரோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்,
//
நன்றி! So, எழுத்தாளர் மேடம் நம்ம வலைப்பதிவு பக்கம் வராங்கன்னு புரியுது, பின்னூட்டம் எப்பவாச்சும் இட்டாலும் :)

கி.அ.அ.அனானி கொஞ்ச நாள் பிரேக் விட்டிருக்கார்னு தோணுது, மெயில் ஒண்ணும் வரலை!!! சிவாஜி பார்த்துட்டு ஒரு சின்ன விமர்சனம் எழுதியிருக்கேன், பாருங்க.

எ.அ.பாலா

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

மது, மெயில் வருது பாருங்க.

ராகவா, சின்ன மாற்று கருத்து. நல்லவங்கன்னு யாரை சொல்வது? எல்லாரும் சதவீத மாறுபாடு இருந்தாலும், சுயநலமிகளே!
பிறகு எல்லாருக்கும் நல்லவங்களா திகழுவது முடியாத செயல். நம்ம மனசுக்கு சரின்னு பட்டது, அதனால பிறருக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா... ரைட்டு அவ்வளவே. நீயும் சொல்லிட்ட இல்லே, நான் ஏன் ஏத்திஸ்ட் ஆனேன் என்று ஒரு பதிவு
போட்டு விட வேண்டியதுதான் :-)

பாலா, "சி" ல ஆரம்பித்து "ஜி" ல முடிகிற எதையும் படிப்பதில்லை என்பது சமீபத்திய விரதம் :-)

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

http://manggai.blogspot.com/2007/07/blog-post_03.html

நானும் 8 போட்டுச்சுபா....நன்றி


எல்லாமே அருமையானவை.. 4 எனக்கு ரொம்ப பிடிச்சது உஷா..

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

// ramachandranusha said...
ராகவா, சின்ன மாற்று கருத்து. //

உஷா, இங்கதான் ஒரு திருத்தம். ராகவான்னு எல்லாரும் கூப்டப்ப ஜிரான்னு கூப்டு பேர மாத்தீட்டு..இப்ப எல்லாரும் அப்படிக் கூப்புடுறப்போ ராகவான்னு கூப்புடுறீங்களே :)

// நல்லவங்கன்னு யாரை சொல்வது? //

அட..அது தெரிஞ்சா நம்ம நல்லவங்களாயிர மாட்டமா?

// எல்லாரும் சதவீத மாறுபாடு இருந்தாலும், சுயநலமிகளே!
பிறகு எல்லாருக்கும் நல்லவங்களா திகழுவது முடியாத செயல். நம்ம மனசுக்கு சரின்னு பட்டது, அதனால பிறருக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா... ரைட்டு அவ்வளவே. நீயும் சொல்லிட்ட இல்லே, நான் ஏன் ஏத்திஸ்ட் ஆனேன் என்று ஒரு பதிவு
போட்டு விட வேண்டியதுதான் :-) //

ஆச்சு. காத்திருக்கோம்.

 
At Wednesday, 04 July, 2007, சொல்வது...

உஷா

எல்லாமே நல்லா எழுதறீங்க. அது சரி்.என்னையும் மாட்டிவிட்டீங்களே. ஒரே வேலை முசுவு. ரெண்டு மூணு நாளுக்குள்ளே ஏதேனும் அவசர சாதனை செய்துட்டு போடரேன்.

அருள்

 
At Wednesday, 04 July, 2007, சொல்வது...

ஜீரா, விரைவில் எழுதுகிறேன் என் நாத்தீக எண்ணங்கள்- நான் நாத்தீகவாதியா என்று எனக்கே சந்தேகம் :-)))

மங்கை வரேன் வரேன்.

அ.செ! மெல்ல எழுதுங்கள். என்ன ஒருத்தராவது கொஞ்சம் பெரிய ஆளாய் இருக்கட்டும் என்று உங்களை பிடித்துப் போட்டேன் :-)))

 
At Wednesday, 04 July, 2007, சொல்வது...

உஷா
பிடித்திருந்தது. அதிலும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், சொன்ன வேலையை செய்யும் சிரத்தை மிகவும் பிடித்திருந்தது. அருணா தன் பதிவில் சொன்னதுபோல செய்யும்வேலை பிடித்து போனால் எல்லாமே இனிமைதான்.

 
At Saturday, 07 July, 2007, சொல்வது...

//உங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிதா? என்று கேட்க, ஐயா, ஒரு செகண்ட் சைலண்ட் ஆகிவிட்டார்.//

சிரித்தேன்.ரசித்தேன்
இணையத்தில் எழுதி அச்சூடகம் சென்றது. இலகுவான சாதனையல்ல!
கலக்குங்க.

 
At Thursday, 12 July, 2007, சொல்வது...

உங்களை அறிய முடிந்தது உஷா.
அந்தப் பெண்ணுக்காக எந்த வித யோசனையுமின்றிக் குரல் கொடுத்தீர்களே.
அதுதான் உங்கள் இயல்பான குணம். பாராட்டுகிறேன்.

 
At Wednesday, 29 August, 2007, சொல்வது...

உஷா,

எதிர்பார்ப்புகள் இல்லாமல் உதவி செய்யும் மனம் இருந்தால் எங்களுக்கும் உதவிகள் தாமாகவே வந்து சேரும்.பல மைல்களுக்கப்பால் இருக்கும் மனவலைகளில் ஒரு சில அதிர்வுகளையாவது இந்த "எட்டு" வெளிக்கொணர்கிறது. இவ் எழுத்தாளர்களை விமர்சிக்கும் அளவுக்கு வளரவிட்டாலும் வாழ்த்துகின்றேன்.

 
At Thursday, 30 August, 2007, சொல்வது...

காரூரன், பதிவுப் போட்டு பல நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் பின்னுட்டம் ஆச்சரியத்தை அளித்தது. படித்து, உங்கள் கருத்தையும் சொன்னதற்கு நன்றி

 

Post a Comment

<< இல்லம்