Wednesday, April 04, 2007

வாழ்க்கை நம் கையில்

இம்மாத , ஏப்ரல் கலைமகள் இதழில் இக்கதை வெளியாகியுள்ளது என்ற செய்திக் கிடைத்தது. இதை எப்படி எடிட் செய்து இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், ஓரிஜினல் வடிவம் இதோ உங்கள்பார்வைக்கு!

வாழ்க்கை நம் கையில்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மிக முக்கிய சந்திப்பு. அறைக் கதவைத் திறந்துக் கொண்டு எட்டிப்பார்த்த காரியதரிசி ஜெயா மீது எல்லார் பார்வையும் படிந்தன.

"சாரி, சாரி" என்று சொல்லிக் கொண்டே, என்னைப் பார்த்துக் கொண்டே வந்தவள், "சுபாமேடம். வந்து.. வந்து உங்க செல் போன் சைலண்டுல இருக்கா, உங்க ஹஸ்பண்ட், மிஸ்டர் பாஸ்கர், ஆபிஸ் நம்பருக்கு போன் செஞ்சி, உங்களை உடனே காண்டாக்ட் செய்ய சொன்னார்"

அவள் சொன்ன செய்திக் கேட்டதும், உடலே மறத்துப் போனதுப் போல இருந்தது. எதிர்ப்பார்த்த செய்திதான் என்றாலும், இழப்பு தரும் தாக்கத்தை தாங்க முடிவதில்லை.

ஒவ்வொருவராய் ஆறுதல் சொல்ல ஆரம்பிக்க, மனம் உள்ளே புலம்ப ஆரம்பித்தது. அம்மா! ஏழு வயதில், ராஜி டீச்சரிடம் எங்கம்மா டீச்சர் என்று பெருமையுடன் அம்மாவைப் பார்த்துக்கொண்டே அறிமுகப்படுத்திக் கொண்டது, பத்து வயதில் அம்மா கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டு அம்மா தைத்த ரோஸ் கவுனை போட்டுக் கொண்டது, பதிமூன்று வயதில் பயமாய் இருக்கு என்றுக் கட்டிக் கொண்டது, சி.ஏ முடித்த அன்று அம்மாவின் பூரித்த முகம், முதல் மாச சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்தது. ஒவ்வொரு அம்மா முகமாய் கண்முன் வந்துப் போனது.

.சட்டென்று எழுந்து, பாத்ரூமிற்குப் போய் கதவை சாத்திக் கொண்டேன். கண்கள் பொழிந்தன. குழாயைத் திருப்பி, நீரை முகத்தில் அடித்துக் கொண்டாலும், கண்ணீர் நிற்கவில்லை.

ஜெயா கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு கதவை திறந்து, அவள் கொடுத்த செல்லை வாங்கிக் கொண்டேன்.

பாஸ்கர்!

"சுபா, உங்கம்மா... இப்பத்தான் அரைமணி நேரம் ஆச்சு சாரி. எப்படியோ ரொம்ப அவஸ்தைப்படாம போயிட்டாங்க.. நாம அடுத்த பிளைட் பிடிச்சிப் போய்ட்டு நைட்டே திரும்பிடலாம். காரியத்துக்கு எல்லாம் வர முடியாது, சந்தோஷ்க்கு எக்சாம் இருக்குன்னு சொல்லிடு. அப்பாவும் வரேன்னு சொன்னார். ஜெட் ஏர்வேஸ்ல மூணு டிக்கெட் சொல்லிடு. உங்க கம்பனி டிராவல் ஏஜண்ட்னா ஈசியா கிடைக்கும் இல்லே? உங்கக்கா கைல அஞ்சாயிரம் ரூபா கொடுத்தா போதாது? ஹாஸ்பிடல் செலவுக்கு வேற பத்தாயிரம் கொடுத்திருக்கே.." எல்லா முடிவும் எடுத்தாச்சு. நான் சொல்ல என்ன இருக்கு? சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

ஜெயாவிடம் மூணு டிக்கெட் புக் செய்ய சொல்லிவிட்டு, அக்கா வீட்டுக்கு போன் செய்து வரும் விஷயத்தை சொன்னேன். மாமனாரும் உடன் வருவதால், பணம் காசு பற்றி எதுவும் பேசாதே, பாஸ்கர் பணம் கொடுத்தால் வேண்டாம் என்று எச்சரித்துவிட்டு போனை கட் செய்தேன்.

அன்றைய மீட்டிங், தொடர்ந்து நடக்க, ப்ராஜெட் மேனேஜரிடம் பொறுப்பைத் தந்தேன்.

மீண்டும் பாஸ்கரின் போன்! நேராக ஆபிசுக்கே வந்து பிக் அப் செய்துக் கொள்கிறேன் என்று!

பெங்களூர்- சென்னைக்கு போக வர பயணத்துக்காக செலவை ஆபிஸ் தந்துவிடும் என்று எம்.டி சொன்னது, பெரிய கவலை விட்டதுப் போல இருந்தது. அதற்குள் வண்டி வர பின் சீட்டில் ஏறி அமர்ந்தேன்.

சமையல்கார மாமியை இன்று முழுவதும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வந்தேன், சந்தோஷ் ஸ்கூலுக்குப் போன் செய்து செய்தியை சொல்லிவிட்டேன் என்று மாமனார் வீட்டு விஷயங்களைச் சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் ஆபிஸ் சம்மந்தமான போன் கால்கள். சொந்த, அவசர விஷயமாய் சென்னை போகிறேன் என்று சொல்லும் பொழுது, விமானநிலையம் வந்து விட்டது. ஜெட் ஏர்வேஸ் கவுண்டரில் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, உள்ளே சென்றோம்.

விமானம் மேலே சீராக பறக்க ஆரம்பித்ததும், விமான பணிபெண்கள் உணவு டிராலிகளை தள்ளிக் கொண்டு வர ஆரம்பித்தனர்.

சக்கரை வியாதி மீது பழியைப் போட்டு விட்டு மாமனார் சாப்பிட ஆரம்பிக்கவும், பாஸ்கரையும் சாப்பிட சொன்னேன். எனக்கு தண்ணி பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டேன். இருக்கையில் உட்கார முடியவில்லை. சாப்பாட்டு கடை முடிந்ததும், பாத்ரூமை நோக்கி சென்றேன்.

கதவை சாற்றிக் கொண்டதும், காத்திருந்த கண்கள் நீரை சொரிந்தன. செய்தி கேட்டதில் இருந்து, இந்த நிமிடம்வரை பல வேலைகளை செய்தாலும், ஒவ்வொரு கணமும் மனம், அம்மா, அம்மா என்று அழுதுக் கொண்டு தானே இருந்தது? உயிர் போகும் கடைசி நிமிடங்களில் அம்மா என்ன நினைத்திருப்பாள்? அந்த உயிர் என்னைத் தானே தேடியிருக்கும்? அந்த எண்ணங்கள், நினைவுகள், ஆன்மா எல்லாம் காற்றோடு கலந்துப்போனதோ.. அப்படி என்றால் காற்றில் கலந்த அந்த உயிர் இப்பொழுது என் பக்கத்தில்... கண்ணீரோடு, கண்கள் சுற்று முற்றும் பார்த்தன. வாயை விட்டு அம்மா என்றேன்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு., திரும்ப முகத்தை அலம்பிக் கொண்டு கதவைத் திறந்தேன்., சீட்டில் அமர்ந்தால், சென்னை நெருங்குகிறது என்ற அறிவிப்பு.

வீடு நெருங்க, நெருங்க மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. பார்க்காமலேயே திரும்பிவிடலாமா என்றுக் கூட யோசித்தேன். அப்பார்ட்மெண்டின் முதல் மாடி.

வாசலிலேயே கூட்டம். அக்கா கணவர் குமார் வா என்பதுப் போல தலையை ஆட்டினார். அக்கா அழுதுக் கொண்டே வந்து கட்டிக் கொண்டாள். அக்காவின் முதுகு வழியாய் பார்த்தால், அம்மா படுத்திருந்தது தெரிந்தது.

இது.. இது.... அம்மாவே இல்லை. முகம் வீங்கி பெருத்திருந்தது. பெரிய பொட்டு, பட்ட பட்டையாய் மஞ்சள் பூச்சு. ரோஜாமாலை என்று அம்மா போலவே இல்லை. ஒரு செகண்டுக்கு மேல் பார்க்க முடியவில்லை. வயிற்றை ஏதோ செய்தது. அப்பாவை கண்கள் தேடின. உள் அறையில் படுத்திருந்தார்.

"பாவம், அம்பது வருஷ உறவு. போயிட்டான்னா மனசு தாங்குமா? தவிச்சிப் போயிட்டார். டாக்டர் ஊசி போட்டிருக்கார். அரைமணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவார்" சொல்லிக்கொண்டிருந்த அக்காவிடம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய் வைத்திருந்த கவரை கையில் அழுத்தினேன். மறு நொடி மடியில் சொறுகிக் கொண்டாள். எவ்வளவு நாள் பழக்கம்?

"அக்கா, அவர் பணம் தந்தால் வாங்காதே. இன்னைய செலவு, காரியத்துக்கு வெச்சிக்கோ. சரியா?" என்றதும் தலையை ஆட்டிவிட்டு சென்றாள்.

“சுபா, இங்க ஒண்ணும் சரியில்லே” மாமனார் முணுமுணுக் கொண்டே, பால்கனி பக்கம் போனார்.பாஸ்கர், சைகை செய்து அழைப்பதைப் பார்த்து அருகில் சென்றேன்.

“. எல்லா ரிலேஷன்ஸ் வந்ததும் ஆரம்பிப்பாங்களாம். நாம காத்திருக்க முடியாது. மணி நாலாகுது. ஆறு மணிக்கு பிளைட் அரைமணி நேரத்துல கிளம்பிடணும். அப்பாவேற சும்மா இல்லாம, உங்கக்கா, மாமாக்கிட்ட பேச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கார். வயசானா புத்தி கெட்டுப் போகுது” பாஸ்கர் சொல்லும்போதே, குமார்மாமா அங்கு வந்தார்.

அவருடன் பேச பிடிக்காமல், வாசலுக்குப் போனேன். மாடிப்படியில் அமரும்பொழுது, அம்மாவின் மஞ்சள் பூசிய கால்கள் மட்டும் தெரிந்தது.

" படிச்சவங்க. தைரியமா இருக்கீங்க” காப்பியை நீட்டிய பக்கத்து வீட்டுக்காரி, “சரசு எல்லா விஷயமும் சொல்லியிருக்கா. உங்கள படிக்க வெச்சா மாதிரி அவள படிக்க வைக்கலைன்னு அவளுக்கு குறை பாவம்"

என்ன.. அக்காவை படிக்க வைக்கவில்லையா? மாமா பையன் ஜெயகுமாருடன் பிளஸ் டூ படிக்கும்போதே காதல். பேருக்கு எஸ் எல் சி முடிச்சதும் பதினெட்டு வயதில் கல்யாணம். அப்பாவும், நானும் எவ்வளவு முட்டிக் கொண்டோம், கேட்டாளா? இப்ப இப்படி சொல்லிக்கிட்டு அலையராளா? அம்மாவோ அண்ணா பையன் , கடைசி காலத்தில் போய் இருக்க செளகரியாய் இருக்கும் என்று கணக்கு போட்டாள்.

"இப்பவே கிளம்புறீங்களாமே? ஒவ்வொரு மொறையும் உங்க கூட பேசணுன்னு நெனைப்பேன். நா மதுரைல இருந்து சாரி வரவழைச்சி விக்கரேன். எல்லாம் தறி வெலை. பட்டு, காட்டன் ரெண்டு இருக்கு. காரியத்துக்கு வருவீங்க இல்லே, அப்ப பாருங்க. மாசாமாசம் பணம் கொடுத்தா போதும். சரசு சிஸ்டர் ஆச்சே, பணத்த பத்தி கவலையே பட வேண்டாம். இந்த களேபரத்துல, இன்னைக்கு சீட்டு பணம் கட்டணும் ஞாபகம் வெச்சிக்கிட்டு டாண்ணு பிடிங்க மாமின்னு, ரெண்டாயிரம் ரூபாய கைல வெச்சிட்டாளே"

காப்பி நன்றாகவே இருந்தது.

பாஸ்கர் என்னைப் பார்த்து, கை கடிகாரத்தைக் காட்டி சைகை செய்தார். அப்பா இன்னும் எழுந்துக் கொள்ளவில்லையே,என்ற எண்ணம் மனதைக் குடைய, ஏதும் சொல்ல இயலாத நிலையில் பேசாமல் வீட்டினுள் போனேன்.

" ஆறுமணிக்கு பிளைட், இப்ப கிளம்பினா சரியாய் இருக்கும்" என்றேன்.

"போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாது" என்ற அக்கா, "காரியத்துக்கு... " என்று இழுக்க, குமார் மாமா "பாஸ்கர் சொல்லிட்டார். சும்மா போய்ட்டு போய்ட்டு வர முடியுமா? லீவும் கிடைக்குமா? நீ கிளம்பு சுபா, சார் இப்ப கிளம்பினா பிளைட்டுக்கு சரியா இருக்கும். மாமா எழுந்த நாங்க சொல்லிக்கிறோம்" என்றார்.

பேச்சில் என்ன மரியாதை, பாஸ்கர் ஏதாவது பணத்தை தந்திருப்பார்!

மாமா எந்திரிச்சிட்டார் என்ற குரல் எழுந்தது. திரும்பிப் பார்க்க, அறை வாசலில் அப்பா!

ஒன்றுமே தோன்றவில்லை. ஓடி சென்று அப்பாவை அணைத்துக் கொண்டேன். நரம்பும், தோலும் மட்டும் தெரிந்த எலும்பு கைகள். அப்படியே தூக்கிக் கொண்டு என்னோடு கொண்டு போக வேண்டும் என்ற வேகம் தோன்றியது. கிளம்பும் சமயம், வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். அப்பாவின் கைகள் முதுகை தடவின.

"யாராவது ஒருவர் முதலில் போக வேண்டியதுதானே" அப்பா குரல் அசாதாரணமாய் ஒலித்தது.

" ஆறு மணிக்கு பிளைட். எல்லாம் முடிஞ்சதும், நீங்க பெங்களூர் வந்து இருங்க. அப்பத்தான் சுபா மனசு சரியாகும்" பாஸ்கரின் மேலோட்டமான சம்பிரதாய பேச்சு எரிச்சல் ஊட்டியது.

"சொல்லிட்டு போகக்கூடாது சார்" மாமாவின் குரல். இதை எல்லாரும் ஒரு முறை சொல்லியாச்சு.

.அம்மாவின் முகத்தை கடைசியாய் பார்த்துக் கொண்டு நின்றேன். இறுக பிடித்துக் கொண்டிருந்த அப்பாவின் கையை விலக்க முடியாமல், ஏறெடுத்துப் பார்த்தேன். காட்ராக்ட் படர ஆரம்பித்து, பஞ்சடைந்த, கலங்கிய கண்கள்.

குபுக்கென்று கண்கள் பொங்கின. தோளை ஆதரவாய் தட்டிய பாஸ்கர் , “என்ன செய்ய, மனசைத் திடப்படுத்துக்கோ”” சொன்னதும், “நான் அழுவது செத்துப் போனவளுக்காக இல்லை.” ஆற்றாமையில் வார்த்தைகள் வேகமாய் வந்தன.

பாஸ்கர் பதில் சொல்லாமல், “கிளம்புங்கப்பா, நேரமாகிறது “ என்றார்.

“சுபா, பாஸ்கர்! ஒரு நிமிஷம்” கணீர் என்ற மாமனார் குரல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. “சுபா, இப்ப நீ எங்களோட பெங்களூர் வர வேண்டாம்”

“அப்பா, சந்தோஷ்க்கு எக்சாம் டைம்” பாஸ்கர் ஆரம்பிக்க, “ அதெல்லாம் நாம ரெண்டு பேரும் பார்த்துப் போம். மனைவியை இழந்த வேதனையை அனுபவிச்சவன் சொல்லரேன். இந்த நேரம் சுபா அவ அப்பாவோட இருப்பதுதான் முறை ” கண்டிப்பான குரலில் பேச்சை தடுத்தவர், “சார்! இவ்வளவு வருஷம் மூத்த பெண்ணோட இருந்தாச்சு. சுபா சம்பாதிக்கிறா, அந்த வீட்டில் எனக்கு இருக்கும் உரிமை உங்களுக்கும் இருக்கு”

அப்பா ஏதோ சொல்ல ஆரம்பிக்க, “ இதுல என்னோட சுயநலமும் இருக்கு. ஆச்சு இன்னும் சில மாசம்தான். சந்தோஷ் பிளஸ் டூ முடிச்சானா, காலேஜ், ஹாஸ்டல்லுன்னு போயிடுவான். இப்பவே இவங்க ரெண்டு பேரும் காலையில எட்டு மணிக்கு போனா, திரும்ப ராத்திரி எட்டு மணி ஆயிடுது. அவங்க அவங்க வேலை, டென்ஷனு என்னோட பேச கூட யாருக்கும் நேரமில்லை. வீடு என்னோடது, அந்த உரிமையிலும் கூப்பிடரேன். நீங்க பெங்களூர் வந்துடுங்க. கோவில், லைப்ரரி, வாக்கிங், மெடிட்டேஷன் கிளாஸ்னு வயசானக் காலத்துல என்ககும் ஒரு துணை வேணும்” என்று வார்த்தைகள் தெளிவாய், தீர்மானமாய் வந்தன.

நான் மாமாவை வியப்புடன் பார்க்க, எதுவும் பேசாதே என்பதைப் போல சைகை செய்துவிட்டு பாஸ்கரின் கைப்பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

Labels:

33 பின்னூட்டங்கள்:

At Wednesday, 04 April, 2007, சொல்வது...

அருமை அருமை அருமை.
உஷா என்னமா எழுதிட்டீங்க.

என் மரண சந்திப்புகள் ஒரு சேர நினைவுக்கு வந்துவிடன.

சுபா மாமனார் பாத்திரப் படைப்பு சூப்பர்.

கை கொடுங்க.!!!
மரணத்தில் அப்பா வாழ்வு ஆரம்பிக்கிறது அற்புதம்.

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

நல்ல யதார்த்தமான கதை. தட்டுத் தடுமாறாம கோர்வையா படிக்க முடிஞ்சது. சுபா மாமனார் கூப்பிட்டது அழகு. அதிலும் தன் சுயநலம் இருப்பதை மறைக்காமல் சொன்னது இன்னுமே அழகு.

பாஸ்கர் ஏன் அப்படி பாசமில்லாம இருக்கார் அப்படிங்கிறது புரியலை.

//மாமா பையன் ஜெயகுமாருடன் பிளஸ் டூ படிக்கும்போதே காதல். பேருக்கு எஸ் எல் சி முடிச்சதும் பதினெட்டு வயதில் கல்யாணம்.//

எதோ சொதப்பலை?

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

அட்டகாசம். மிக அருமையாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

//எதோ சொதப்பலை?

மாமா பையன் +2 படிக்கும்போது, அக்கா கேரக்டர் எஸ்.எல்.சி படித்திருக்குமோ? :-)

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

வல்லிம்மா நன்றி!

இலவசம், சொதப்பியதை நானும் இப்பத்தான் பார்த்தேன். பத்தாவது படிக்கும்போது காதல், பிளஸ் டூ முடிச்சதும் கல்யாணம் என்று இருந்திருக்க வேண்டும்.

கதையைக் குறித்து, கணவனின் சுயநலம் இது, பணம் கொடுத்தாச்சு, அனாவசியமாய் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும் என்ற எண்ணம். இது பல வீடுகளில் பார்த்த கேரக்டர்தான். அதே போல, மாமனார் கேரக்டர், யதார்த்தமாய் பேசுவது, வலிந்து பிறருக்கு உதவுவது இதுவும் அபூர்வமாய் கன்ணில் பட்ட இன்னொரு கேரக்டர்.
தடுமாற்றமில்லாத நடை என்று வசிஷ்டர் வாயில் கிடைத்த பாராட்டுக்கு நன்னி

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

நன்றி குறைக்குடம்

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

சுயநலக் கணவன் / எதிர்க்க தைரியமில்லாத மனைவி என்று ஒரு வழக்கமான பாதையில் போகிறதே... என்ன மாதிரி திருப்பம் வரும் என்று யோசித்துக் கொண்டே படித்தேன். ஏமாற்றவில்லை. சுபா மாமனார் பாத்திரம் ஒரு சுவாரசியமான, அதே சமயம் ரொம்ப contemporary character. வாழ்த்துக்கள் உஷா. வழக்கம்போல் அருமையாக எழுதியிருக்கீங்க.

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

நல்லா எழுதிருக்கீங்க!
சுபாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்!
ஒவ்வொருவரின் character வெளிப்பாடு அருமை.

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

கதை நல்லா இருந்தது. எனக்கும் "மரண சந்திப்புகள்" (அங்க வந்து புடவை விக்கிறது பத்தி எழுதிருந்தீங்க / என் கிட்ட சம்பளம் என்னான்னு கேட்டாங்க:-)) நினைவுக்கு வந்து விட்டன.

இ.கொ.: //மாமா பையன் ஜெயகுமாருடன் பிளஸ் டூ படிக்கும்போதே காதல். பேருக்கு எஸ் எல் சி முடிச்சதும் பதினெட்டு வயதில் கல்யாணம்.

எதோ சொதப்பலை? //

நான் என்னா புரிஞ்சுக்கிட்டேன்னா: மாமா பையன் பேருக்கு எஸ் எல் சி முடிச்சதும், தான்
பிளஸ் டூ படிக்கும்போதே அந்த பையனை காதல் செய்த அக்கா கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்கன்னு நினைச்சேன்;-))))

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

உஷா,

ச்சும்மா சொல்லக்கூடாது.

அதி சூப்பர்!

ரொம்ப நல்லா வந்துருக்கு. வாழ்த்து(க்)கள்.

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

உஷாக்கா யதார்த்தமானப் படைப்பு..அருமையான் நடையில் கிட்டத்தட்ட ஒரு குறும் படம் பார்த்த எபெக்ட்.. வாழ்த்துக்கள்

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

அருணா, சுயநலம் என்று ஒரு வார்த்தையில சொல்லிட்டீங்க. ஹை மிடில் கிளாஸ் மெண்டாலட்டி இது. அதிகம் சொந்த பந்தங்களுடன் பட்டுக்க மாட்டாங்க. அடுத்து தைரியமில்லாத மனைவி, சம்பாதிப்பவள் என்றாலும் மாமனார் மாமியார் இருக்கும் வீட்டில் தன் பெற்றோர்களை விருந்தாளியாய் கூட கூப்பிட முடியாதே :-(

தென்றல் நன்றி.

கெக்கே பிக்குணி (ஸ்பெல்லிங் கரீட்டா) இல்லை, பத்தாவதில் ஆரம்பித்த காதல், தட்டு தடுமாறி பன்னிரெண்டு முடித்ததும் கல்யாணம் என்று நான் மனதில் நினைத்தது.வயசானங்க சாவு என்றால் பெற்ற பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் பெருசா கண்டுக்க மாட்டாங்க.அதனால்தான் "கல்யாணசாவு" என்பார்கள் போல :-) கல்யாண சம்மந்தம் பேச்சு கூட நான் கேட்டு
இருக்கேன் :-))))

துளசி, அதி சூப்பர் என்றதற்கு அதி நன்றி:-)

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

தேவ், நன்றி

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

உஷா அருமையான கதை. என்னதான் பெண்கள் சம்பாதித்தாலும் கடைசி காலத்தில் பெற்றோர்களை பார்த்துக் கொள்ளவும், ஆதரவாக இருக்கவும் கணவரின் உதவி, சம்மதம், உத்தரவு என்று எல்லாவற்றையும் சார்ந்திருக்கிறது. அலுவலகம் என்றுக் கூட யோசிக்காமல் கதைப் படித்து கன்னங்கள் நனைத்துக் கொண்டேன். நிறைய எழுதுங்கள்.

 
At Wednesday, 04 April, 2007, சொல்வது...

சுயநலவாதிகள் பாத்திரப்படைப்பு மற்றும் // அடுத்து தைரியமில்லாத மனைவி, சம்பாதிப்பவள் என்றாலும் மாமனார் மாமியார் இருக்கும் வீட்டில் தன் பெற்றோர்களை விருந்தாளியாய் கூட கூப்பிட முடியாதே // இதெல்லாம் ஓரளவு நிஜத்தைப் பிரதிபலிக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை உஷா. ஆனால் அந்த மாமனார் போன்ற பாத்திரங்களும், இரண்டு மாமியார்களும் மாமனார்களும் சேர்ந்து இருக்கும் குடும்பங்களும், மனைவியையும் மனைவியைச் சேர்ந்தவர்களளயும் தன் குடும்பம்போல் மதிக்கும் சமமாக /அனுசரணையாக மதிக்கும் குடும்பங்களும் இன்று கண்களில் படுவதால் - இவர்கள் எண்ணிக்கை வரும் நாளில் இன்னும் அதிகம் ஆகலாம் என்றும் எனக்குத் தோன்றுவதால் - சுபா மாமனார் ஒரு contemporary character என்று என் எண்ணத்தை எழுதினேன். மற்றபடி அருமையான கதை என்பதில் எனக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இல்லை.

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

ஜெஸிலா, உங்கள் விரிவான விமர்சனத்துக்கு நன்றி. மனதின் வலிகளை, ஏக்கங்களை இப்படி எழுதித் தீர்த்துக் கொள்கிறோம் :-)

அருணா, மகன்/ மகள் அமெரிக்காவில் இருக்க சம்மந்திகள் சேர்ந்து ஒரு வீட்டில் வசிப்பது கேள்விப்பட்டு இருக்கிறேன். அபப்டியே மனைவியின் பெற்றோர்களை தன் வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கும் வீடுகளும் நிறைய இருக்கின்றன. ஆனால் ஓரே வீட்டில் சம்மந்திகள்? கட்டாயம் பெண்ணுக்கு தலைவலிதான், சான்சே இல்லை, இந்த மாமனார் காரக்டர் என் ஆசை, கற்பனை மட்டுமே :-) மற்ரப்படி கதை நல்லா இருக்கு என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம் :-) எழுதுபவர்களுக்கு தன் எழுத்தை பிறர் அலசுவதைப் பார்க்க பார்க்க சந்தோஷமே!

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

உஷா..நேத்தே படிசுட்டேன்...ஆனா பின்னூட்டம் போட முடியாத அளவிற்கு மனச பாதிச்சுறுச்சு... ரொம்ப நல்லா வந்து இருக்கு..

கணவனை இழந்த பெண்ணை விட, மனைவியை இழந்த கணவன் சமாளிப்பது கஷ்டம்.. மனைவியை இழந்தவங்க ஏதாவது தேவைனா மத்தவங்கள அவ்வளவு சீக்கிரமா கேக்ககிறதில்லை உஷா...மனைவி கிட்ட வெளிப்படையா பேசறமாதிரி மத்தவங்ககிட்டே அவங்க பேசரதில்லை

என்னதான் படிச்சு, சம்பாதிச்சு மேல வந்தாலும், பெத்தவங்கள பக்கதுல ஆசையா வச்சுக்குற பாக்கியம் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்குறதில்லை.. அந்த பாக்கியத்த தர்ர ஆண்களை பார்த்தா கால்ல பூ போட்டு கும்பிடனும் போல இருக்கும் எனக்கு..

கண்ணீரே வருது நினச்சு பார்த்தா...

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

வாழ்க்கை யார் கையில் எனத் தெரியவில்லையே ? நல்ல கதையோட்டம். வாசகரே உடன் சென்றதைப் போன்ற மயக்கம். வாழ்த்துக்கள்!!

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

உஷா மேடம், அருமையான கதை. கொஞ்சம் கூட தடங்கல் இல்லாமல் போகிறது. சாவு வீட்டில் சாரி விற்ப்பவர்கள் மாதிரியான கேரக்டர்கள் சத்தியமாக இருக்கிறார்கள். நான் விடுமுறையில் ஊருக்கு போகும் சமயத்தில் ஏதாவது சாவு வீட்டுக்கு போகும் போதெல்லாம்"என் பையன் ஒழுங்கா படிக்காம ஊரை சுத்துரான் ஒரு விசா எடுப்பா"ன்னு கேக்கம்போது எரிச்சலா இருக்கும்.

நல்ல கதை!

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

மாமனார் மாமியார் இருக்கும் வீட்டில் தன் பெற்றோர்களை விருந்தாளியாய் கூட கூப்பிட முடியாதே :-(

இதுவும் உண்மை,.

அருணா சொல்வதுபோல இங்கே நாலைந்து வீட்டில் ரெண்டு அம்மாக்கள் அப்பாக்களும் இருப்பதைப் பார்க்கிறேன்.
சந்தோஷமா இருக்காங்களா தெரியாது.

சிட்சன்ஷிப் கிடைத்தே இருக்காங்களாம்.

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

மங்கை, அவ்வளவு சுலபமா நம்மாளுங்க அட்ஜஸ்ட் செஞ்சிக்க மாட்டாங்க. எனக்கு தெரிந்தவளின் தந்தை தனியாய் இருக்கிறார்.
அவளுக்கு தந்தையை அழைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை பாவம்! ஆனால் வந்தால் பாலிடிக்ஸ் செய்வார், என்று அவளே சொல்கிறாள்.

மணியன், இவை எல்லாம் மனத்தடைகள்.அதனால்தான் வாழ்க்கை நம் கையில் என்று தலைப்பு வைத்தேன்.

அபி அப்பா, விமர்சனத்துக்கு நன்றி. எல்லா கதைளின் சம்பவங்களும், பாத்திரங்களும் உண்மை இல்லாமலா என்ன :-)

வல்லிம்மா, இங்கே என்பது அமெரிக்காவா? நீங்க சொல்லுகிறா மாதிரி சதோஷமா இருக்காங்காளா என்பது சந்தேகம்தான். அவ்வளவு சுலபமா ஈகோவை விட்டு விடுவாங்களா? எம் புள்ளை வீடு, என் மகளும் சம்பாதிக்கிறா என்ற ஈகோ கிளாஷ் இல்லாட்டி எவ்வளவு நல்லா இருக்கும்?

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

ம்...அவரா சொல்லும்வரை அவளுக்கு சங்கடம் தான்.அவளா முடிவெடுத்தா தப்பு இல்லாட்டியும் பிரச்சனை வர வாய்ப்புண்டு...பிரச்சனை எங்கிருந்து வரலாம் என்ற இடத்தில் நீங்க யதார்த்தமான கேரக்டரை வச்சு நல்லதொரு முடிவு கொடுத்திட்டீங்க.
சுபம் _/\_

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

முத்து லட்சுமி, இந்த கதையை முதலில், இறந்தவளை நினைத்து அழாமல், இருப்பவரை (தந்தை) நினைத்து அழுகிறேன் என்று முடிவு வைத்திருந்தேன். மா. சிவகுமார் ஒரு முறை, சில ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கதையின் முடிவில் சொல்லலாம் என்று ஒரு கருத்து சொல்லியிருந்தார். அதனால் மாமனார் கேரக்டர், இறந்த வீட்டின் சூழ்நிலையை ஆராய்ந்து, பிறரிடம் பேச்சுக் கொடுத்து நிலைமையை புரிந்துக் கொண்டு, தனக்கு அதனால் செளகரியமே என்பது போல, கதையை மாற்றி அமைத்தேன்.

 
At Thursday, 05 April, 2007, சொல்வது...

மிகச்சரியான முடிவெடுத்து இருக்கிறீர்கள்
புலம்புவதை அழுவதை எழுதுவதை விட அதற்கு என்ன செய்யலாம் என்று எழுதுவதும் ...என்ன செய்தால் எல்லாரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று எழுதுவதும் நிச்சயமாக நல்ல விஷயம்தான்.

 
At Friday, 06 April, 2007, சொல்வது...

நல்லா வந்திருக்கு உஷா. சல்லுன்னு போய் அழகா முடிஞ்சிருக்கு.

அன்னைக்கே, அதுவும் சில மணிநேரத்திலேயே திரும்புவது கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை! இப்படியெல்லாம் mechanical ஆ நடக்க ஆரம்பித்துவிட்டதா?! i really have no idea!

 
At Saturday, 07 April, 2007, சொல்வது...

இன்னொரு நல்ல கதை!

நிர்மலா சொன்னது போல அம்மா இறந்ததற்கு போய் விட்டு அன்றைய விமானத்திலேயே திரும்புவதாக திட்டம் போட்டுக் கொள்வது நடக்கும் என்பது நம்ப முடியாததாக பிரமிப்பாக இருந்தது. அப்படி சுயநலமி கணவன் திட்டம் தீட்டினாலும் குறைந்தது மாமனாராவது முன்பே மறுகருத்து தெரிவித்திருப்பார் என்பது நடந்திருக்க வேண்டுமே!

ஏற்கனவே ஒரு தடவை நாம் பேசியது போல கதையில் பாத்திரத்தின் இயல்பு திடீரென்று மாறுவது என்று காட்டாமல் மாமனார் இப்படிப்பட்டவர் என்று இடையிலேயே ஒரு கோடி காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கதை சொல்லும் பெண் தனது துக்கத்தில் அதை கவனிக்கத் தவறி விட்டாள் என்பதையாவது கடைசி வரிகளில் அழுத்திக் காட்டியிருக்கலாம்.

நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

பின்குறிப்பு : ஜான் ஓ ஹாரா என்ற அமெரிக்க கதையாசிரியரின் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? போன வாரம் ஒரு தொகுப்பு நூலகத்தில் கிடைத்தது. இது வரை நான் படித்த சிறுகதை உத்திகளைத் தூக்கிச் சாப்பிட்ட பாணி. உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

 
At Sunday, 08 April, 2007, சொல்வது...

சிவா, நிர்மலா விமர்ச்னங்களுக்கு நன்றி. ஸ்டேடஸ் வித்தியாசம் இருக்கும் இடங்களில் இந்த ப்ளையிங் விசிட் உண்டு. மேலும்
பணங்காசு குறைவான இடம் என்றால் எதுக்கு வம்பு என்று அட்டணட்ஸ் கொடுத்துவிட்டு ஓடி விடுவார்கள். பார்ப்பவர்களும் பெருசா
எடுத்துக் கொள்ள மாட்டார்கள், காரணம் பணம் படைத்தவர்கள் ஒரு பிளெனில் வந்து அடுத்த பிளேனைப் பிடிப்பதும் பெருமைக்கு
உரிய விஷயமே :-)

சிவா, மாமனார் கேரக்டர் பற்றி முத்துலட்சுமிக்கு சொன்னதை ஒருமுறை படித்துவிடுங்கள். ஹை மிடில்கிளாசில் உறவுகளிடம் ஒரு ஒட்டாத தன்மை இருக்கிறது. திடீர் பணக்கார குணம் என்றும் சொல்லலாம், ஒரு சின்ன வட்டத்தில் ஒருவர்மட்டும் உயர்ந்த நிலைக்குப் போனால், சொந்த பந்தங்களுடன் அதிகம் ஒட்டுவதில்லை
நீங்கள் குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் தொகுப்பு தேடிப் பார்க்கிறேன். தற்சமயம் மனம் முழுக்க நாஞ்சில் நாடனின் படைப்புகள்
ஆக்ரமித்து உள்ளன. யாராவது அவர் எழுத்துக்களைப் பற்றி ஆரம்பிங்கப்பா :-)

 
At Monday, 09 April, 2007, சொல்வது...

ரொம்ப அருமையான கதை. மனதை பாதித்துவிட்டது..என்ன எனவோ சொல்லனும்னு தோனுது...எழுத முடியவில்லை....

 
At Monday, 09 April, 2007, சொல்வது...

நன்றி அபர்ணா

 
At Sunday, 13 May, 2007, சொல்வது...

இந்தியா வந்ததும் எழுத நேரம் கிடைக்கலியோ? ஒண்ணுமே காணோமே?

 
At Tuesday, 22 May, 2007, சொல்வது...

//கீதா சாம்பசிவம் said...
இந்தியா வந்ததும் எழுத நேரம் கிடைக்கலியோ? ஒண்ணுமே காணோமே? //

அதே அதே!!

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

I am visiting your blog for the 1st time today and was pretty impressed with your story. Maamanaar Charecter Super. Good work.Keep it up

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

என் மனதில் பட்டதை ஏற்கெனவே முந்தைய comment களில் கூறி விட்டார்கள். அருமையான இயல்பான கதை.

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

மணிப்பயல், பிபட்டியன் படித்துவிட்டு, இரண்டு வரி கமெண்ட் போட்டீர்களே, மிக்க நன்றி

 

Post a Comment

<< இல்லம்