Wednesday, March 14, 2007

15-3-2007 - மாறாதது

நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கிறேன். பெரும்பாலான "பெண்ணீய கவிதைகள்" அதாவதுபெண்களின் சோகங்கள், வேதனைகள் கவிதையாய் பெண்கள் பக்கத்தில் இருந்து வந்தால் இது ரொம்ப ஓவர் என்று தோன்றும். அதையே ஆண்கள் எழுதினால் கொஞ்சம் காமடியாய் தோன்றும். (வேணாம்.. வாயைக் கொடுத்து மாட்டிக்காதே- இப்படிக்கு மனசாட்சி).

இந்தக்கதையை நேற்று தட்டிப் போட்டது. போட்டிக்கு எல்லாம் இல்லை. இணையம் என்பது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஒரு எழுத்து பட்டறை. உடனுக்கு உடன் வரும் விமர்சனங்களை எழுத்தை சரிப்படுத்திக் கொள்ள உதவும்.அதனால் எழுத்தாளர்/ளி என்று ஆக நினைப்பவர்கள் இத்தகைய போட்டிகளில் பரிசுக்காக இல்லை, ஒரு பயிற்சியாய் நினைத்துக் கலந்துக் கொள்ளுங்கள்.

http://neyarviruppam.blogspot.com/2007/03/blog-post_11.html
கதைக்கு சர்வேசன் கொடுத்த ரூல்ஸ் இதுதாங்க.
1) mini-கதைல காலைல யாராவது தூங்கி எழுந்துக்கர மாதிரி ஒரு சீன் இருக்கணும். காலைல வீட்ட விட்டு வெளியில போகிற மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். மதியானம் லஞ்ச் சாப்பிடர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி வர மாதிரியும் ஒரு சீன் இருக்கணும். ராத்திரி தூக்க‌ப் போற‌ மாதிரியும் ஒரு சீன் இருக்க‌ணும்.

இது நான் எழுதியது.

மாறாதது

காலையில் எழுந்ததும், மெயில் பாக்சை திறந்த அசோக்கிற்கு ஆச்சரியங்கள் பொங்கி வழிந்தன. அவன் எழுதிய கவிதைக்கு தமிழ் இணைய உலக பெருசுகள் பலரிடமிருந்து பாராட்டு மடல்கள், பின்னுட்டங்கள். வலைப்பதிவு ஆரம்பித்த சில வாரங்களிலேயேஇத்தகைய வரவேற்பா?

பிள்ளைகள் இரண்டும் அப்பா டாட்டா என்றுச் சொல்லி விட்டு பள்ளிக்கூடம் போவதை கண்கள் கவனித்தாலும், மனம் கவிதைக்குக்கிடைத்த பாராட்டுகளில் ஆழ்ந்திருந்தது. படிக்க ஆரம்பித்தவன் காதில், மனைவி கலா கத்துவது கேட்டது.

"மணி பார்த்தீங்களா? ஏழே கால் ஆச்சு. ஆபிஸ் வண்டி எட்டு மணிக்கு வந்துடும். அது என்ன எழவோ பொழுதுக்கும் கம்ப்யூட்டரைக்கட்டிக்கிட்டு அழ வேண்டியது. வீட்டுல பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கிற நெனப்பே இல்லே" அவள் கத்துவதில், மணி ஏழே கால்என்பது மட்டும் காதில் விழுந்து, கணிணியை அணைத்துவிட்டு, குளிக்க ஓடினான்.

"கலா, பொட்டு கடலை சட்னியா? சாம்பார் இல்லையா? இப்ப எல்லாம் வீட்டு வேலை செய்யவே உனக்கு அக்கறை இல்லே" இட்லியை வேண்டாவெறுப்புடன் வாயில் போட்டுக் கொண்டே முணக்கினான்.

"இன்னைக்கு ஒரு நாளு அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அல் மதினா சூப்பர் மார்கெட் பில்டிங்ல, இன்னைக்கு வெளக்கு பூஜை. எனக்கு நேரமாகுது. ஸ்பேர் கீல பூட்டிக்கிட்டு கெளம்புங்க. நா குளிக்க போறேன்" என்றுச் சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் கலா.

அலுவலகத்தில் வேலை ஓடினாலும், அவ்வப்பொழுது பின்னுட்டங்களைப் படிப்பதிலும், தனிமடல் பாராட்டுகளை கண் பார்த்துக்கொண்டு இருந்தது. கூட பணியாற்றும் இரண்டு தமிழர்களிடம் தன் பெருமையை, மெல்ல சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வெகு சாதாரணமாய் அப்படியா பாராட்டுகள் என்றதும் அவனுக்கு சப் என்றுப் போய்விட்டது.

வீட்டுக்கு சென்று கலாவிடமாவது படித்துக் காட்ட வேண்டும் என்று மதிய உணவு வேளைக்கு ஆவலுடன் காத்திருந்தான். போன்அடித்தது. கலா!

" உங்களுக்கு சாப்பாடு மேஜைல வெச்சிருக்கேன். பூஜையில பிரசாதம்னு நிறைய குடுத்துவிட்டிருக்காங்க" என்று கலாஆரம்பித்ததும், அசோக் தான் அலுவலகத்தில் இருப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து, குரலை தாழ்த்திக் கொண்டு, "கலா, இது நல்லா இல்லே சொல்லிட்டேன். புருஷனுக்கு சாப்பாடு போடக்கூட உனக்கு நேரமில்லாம போச்சா? அப்படி என்னஅரட்டை அங்க? நான் இன்னும் அரை மணில வீட்டுல இருப்பேன். நா வரத்துக்குல நீ வீட்டுல இருக்கணும்" என்றுச் சொல்லி போனை கட் செய்தான்.

எதுவும் பேசாமல் , மனைவி போடுவதைச் சாப்பிட்டான். கலா செய்த குழம்பு, பொரியல் அல்லாமல் புளியோதரை, சக்கரை பொங்கல், வடை என்று சாப்பாடு வயிறு நிரம்பியதும், "நீ சாப்பிட்டியா?" என்று மெல்ல கேட்டான். உம் உம் என்று பதில் வந்தது.

இருக்கும் பத்து நிமிஷ அவகாசத்தில் கணிணியை உசுப்பியதும், மேலும் பல பின்னுட்டங்கள். ஒவ்வொன்றாய் படித்து அவைகளை பதிவில் ஏற்றினான். மணி ஆகிறது என்ற நினைவு வர, மாலை வந்து பின்னுட்டங்களுக்கும், தனி மடலுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று மனமில்லாமல் இடத்தை விட்டு எழுந்தான்.

மாலை திடீர் ஏற்பாடாய் ஒரு கிளைண்ட் மீட்டிங். அங்கேயே சாப்பாடும் ஆகிவிட்டது. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியதும், உடையை மாற்றிக் கொண்டு கணிணி முன்னால் உட்கார்ந்தான்.

"இன்னைக்கு பூரா எனக்கு வேலை அதிகம். முதுகு வலிக்குது. மாத்திரைப் போட்டுக்கிட்டு படுக்கிறேன். பிளாஸ்குல பால் வெச்சிருக்கேன். குடிச்சிடுங்க"

"கலா, வர வர உனக்கு வீட்டு வேல செய்ய சோம்பல் அதிகமாயிடுச்சு. அந்தக்காலத்துல எங்கம்மா விறகு அடுப்பு, அம்மி, ஆட்டுக்கல்லுன்னு எப்படி வேல செய்வாங்க தெரியுமா? வேல செஞ்சா உனக்கே நல்லது. சும்மா வீடு வீடா போயி என்ன வம்பு?"

"தோ பாருங்க, வம்படிக்க ஒண்ணும் நா போகலை. பர்வீன் வீட்டுல கம்ப்யூட்டர் கத்துக போறேன். ஒங்கள கத்துக்குடுங்கன்னு கேட்டுகேட்டு அலுத்துப் போச்சு. பிள்ளைங்க கிட்ட கேட்ட, நக்கல் அடிக்குதுங்க"

கண்கள் கணிணியைப் பார்த்துக்கொண்டு இருக்க, மனம் குளிர்ந்து இருந்ததால், "கலா, நான் எளுதின கவிதைக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள். உனக்கு படிச்சிக்காட்டட்டா?" என்றதும்,கலா பரபரப்பான குரலில், " இன்னைக்கு பூஜைக்குப் போயிருந்தேன் பாருங்க. அங்க லீலான்னு, கரோமா ஆஸ்பிடல்ல கைனகாலஜிஸ்டா இருக்காங்களாம். அவங்களுக்கு கவிதை, கதை எல்லாம் நீங்க சொல்லுவீங்களே பிலாக்குன்னு அதுலையும் எளுவாங்களாம். நானும் நீங்க எளுதுவீங்கன்னு சொன்னேன். நீங்க என்ன பேர்ல எழுதுறீங்க? அவங்க தமிழ் மகள்ங்கர பேர்ல எளுதுவாங்களாம்" அவள் சொல்ல சொல்ல அசோக் அப்படியே உட்கார்ந்து விட்டான்.

திரையில், தமிழ் மகள் அனுப்பிய கமெண்ட்டில் " கவி சிறுக்குயில் அவர்களே! பெண்களின் போராட்டங்களையும், சிரமங்களையும் ஆவணப்படுத்தியுள்ள உங்கள் கவிதைத்தான் மகளீர்தின படைப்புகளில் முதலிடத்திற்கு தகுதியானது" என்ற வரிகள் அவனைப் பார்த்து சிரித்தன.
தன்னை சமாளித்துக் கொண்டு, "மாத்திர போட்டுக்கிட்டே இல்லே. போய் படு, காலைல பேசலாம்" என்றான் அசோக்.

கணிணியை அணைத்துவிட்டு, பாராட்டுகளில் கிடைத்த உற்சாகம் மொத்தமும் வடிந்துப் போய், தமிழ் மகள் போன் செய்தால் என்ன சொல்வது, கலாவிடம் எப்படி மாற்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டே புரண்டு புரண்டு படுத்தான் அசோக் என்ற கவிஞன் கவி சிறுக்குயில்.

20 பின்னூட்டங்கள்:

At Wednesday, 14 March, 2007, சொல்வது...

உஷா மேடம்! ரொம்ப சரி. நான் தங்கமணிகிட்ட "எனக்கு 14 வது பதிவிலே 134 பின்னூட்டம் வந்துது"ன்னு ஆசையா சொன்னப்ப "யாருக்குமே இந்த உலகத்தில வேலையே இல்ல போலயிருக்கு"ன்னு பதில். அதுக்கப்புரம் நான் பிளாக் பத்தி பேசுவதேயில்லை. நச்சுன்னு இருக்கு கதை. சூப்பர் மேடம். இதுக்கு பரிசு கண்டிப்பா உண்டு!

 
At Wednesday, 14 March, 2007, சொல்வது...

அபி அப்பா, உங்க பதிவுக்குக் கிடைத்த பாராட்டுகளை யாரிடமாவது சொன்னீங்களா? சொன்னா இந்த ரியாக் ஷன் தான்கிடைக்கும். அதனால நான் பிளாக் எழுதுவதைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. இதைச் சொல்றீங்களே, பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது என்றாலும் யாரும் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. எல்லாருக்குமே நானே ஏதோ வேலைத்த வேலை செய்யரோம்னு நெனப்பு :-)

 
At Wednesday, 14 March, 2007, சொல்வது...

தூள் "-)))))))))))))

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

//அபி அப்பா, உங்க பதிவுக்குக் கிடைத்த பாராட்டுகளை யாரிடமாவது சொன்னீங்களா? சொன்னா இந்த ரியாக் ஷன் தான்கிடைக்கும். அதனால நான் பிளாக் எழுதுவதைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. இதைச் சொல்றீங்களே, பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது என்றாலும் யாரும் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. எல்லாருக்குமே நானே ஏதோ வேலைத்த வேலை செய்யரோம்னு நெனப்பு :-)//

சரியா சொன்னீங்க.. சேம் ப்ளட் (same blood) :))

சென்ஷி

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

துளசி, சிரிப்பாணிக்கு நன்றி :-)

//சரியா சொன்னீங்க.. சேம் ப்ளட் (same blood) :))
சென்ஷி //

சென்ஷி, இதுக்குதாம்பா இங்கிலீஸ்ல எளுதி பளகணும். எங்குட்டோ போயிடுவோம்ல :-)

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

//இதைச் சொல்றீங்களே, பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது என்றாலும் யாரும் பெரிசா கண்டுக்க மாட்டாங்க.//

மேடம் ஆ.வி ல நீங்க எழுதின லிங்க் இருந்தா குடுங்க. {அது போல நான் ஆ.வி ல எழுதின லிங்க் இதோ! :-)))))(ஹி ஹி..)}

http://abiappa.blogspot.com/2007/02/blog-post_15.html

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

கொடுத்த வரிகளில் பாடுபவரை ஆசு கவி என்பதுபோல் ஆசு கதாசிரியர் தான் நீங்கள்! நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். Topical ஆகவும் உள்குத்துடனும் முடித்திருக்கிறீர்கள்.

பதிவர்களின் உற்றமும் சுற்றமும் ஒரேபோல் தானோ ?!

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

மணியன், நிர்மலாவின் லேட்டஸ்ட் கவிதை "கயிறு" மற்றும் ஆசிப் அண்ணாச்சியின் சமீபத்து சிறுகதையும் அதில் படித்த பின்னுட்டங்களே இக்கதைக்கு இன்சிபிரேஷனுங்க.

//Topical ஆகவும் உள்குத்துடனும் முடித்திருக்கிறீர்கள்.//

நீங்களாவது சொன்னீங்களே :-)

அபி அப்பா, தேடி எடுத்துப் போடுகிறேன். அந்த கதையின் தலைப்பில் இருந்து ஏகத்துக்கு எடிட் செய்தது மட்டுமில்லாமல்,
இஷ்டத்துக்கு மாற்றியதால், என் கதை என்பதே மறந்துப் போனேன். கணையாழியில் வெளியான கதைகள் இரண்டு இருக்கு அதைப் படித்துப் பாருங்கள்.

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

//எல்லாருக்குமே நானே ஏதோ வேலைத்த வேலை செய்யரோம்னு நெனப்பு :-)////

:-(((

ரொம்ப சரி..நானும் சொல்வதில்லை.. தமிழ்மணம் படிக்கிறதே வேலையத்த வேலைன்னு சொல்லீட்டு இருக்காங்க...ஹ்ம்ம்ம்....

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

சூப்பர். சேம் பிளட் இங்கும் :)

நல்ல கதை உஷா.. நல்ல உள்குத்து.. வாழ்க ஆசுகதையாசிரியை உஷா :))

 
At Thursday, 15 March, 2007, சொல்வது...

உஷா.. நான் இப்படி ஒரு கவிதை எழுதிப் போட்டதே எங்க வீட்ல யாருக்கும் தெரியாது! :-)))))

அண்ணாச்சி கதை இன்னும் படிக்கலை.. வரிசையா எழுதிப் போட்ட எதிர்கவிதைகள் மட்டும் தான் படித்தேன்!

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

அபி அப்பா, முதலில் இவற்றை வாசிங்க. ஆ.வி. மற்றும் கணையாழிக்குப் பிறகு போகலாம் :-)

மரத்தடி குழுவில் ராமச்சந்திரன் உஷா அவர்களின் படைப்புகள்:

http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=11

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

பொன்ஸ், இல்லாத உள்குத்து எல்லாம் கண்டுப்பிடிக்காதே :-)

மங்கை, நிர்மலா! வீட்டுல, சொந்தம் எல்லாம் படிக்காதவரையில் நிம்மதி. படிச்சா அட்வைஸ்கள் வரும் இல்லையா?

பாலராஜன் கீதா சார், ஹூம் (பெரூமூச்சு) மரத்தடியை நினைத்தால்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

அடடா! மேட்டர் புரியலையே. இதுல இந்த பொன்ஸ் வேற உள்குத்தெல்லாம் கண்டுபிடிச்சிருச்சு! இவரு ஆம்பிளைன்னு சொன்னா அவங்க இவர் கவிதையை ஒத்துக்க மாட்டாங்களா?

அல்லது, இவரு வீட்டுல அவங்க தங மணியை பிழிஞ்சு எடுத்துட்டு அப்புறம் பெண் விடுதலை பற்றி எழுதினதுதான் மேட்டரா? அப்போ கதை கவுஜ எழுதறவங்க அவங்க எழுத்துக்களின் படியே நடக்கணுமா?

ஐயாம் தி கன்பியூஷன். அக்கா, உதவி ப்ளீஸ்.

(போன பதிவில் நான் சொன்னதுக்கும், இதுக்கும் கனெக்ஷன் எல்லாம் குடுத்து கன்புயூஸ் ஆகக்கூடாது மக்கள்களா!)

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

//மரத்தடியை நினைத்தால்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...//

அது வந்து இருண்டு போன ராத்திரி, இது வந்து நல்லா பளிச்சுன்னு இருக்கிற பகல் பொழுது அப்படின்னு சொல்ல வறீங்களா? இந்த வெளிச்சம் என்பது எழுதுபவரின் ஞானத்தின் குறியீடா அல்லது படிப்பவரின் புரிதலையா?

(நம்ம பொன்ஸை பார்த்து நானும் உள்குத்து கண்டுபிடிப்பது எப்படின்னு கத்துக்கறேன் அதான் இப்படி....)

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

ஐயா இலவசம், உம்முடைய இரண்டு பின்னுட்டங்களுக்கும் சேர்த்து ஓரே பதில். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன படைப்பு (!). ஆகையாய் உள்குத்து போன்ற விஷயங்கள் உம்முடைய புரிதலுக்கு ஏற்ப. :-)

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

உஷா, நல்ல கதை.

இது வரை 4 கதை தான் வந்திருக்கு :(

 
At Friday, 16 March, 2007, சொல்வது...

உஷா வழக்கம் போல நல்ல எழுத்து நடை..படிக்க சுலபமாய்.....வேர என்ன சொல்ல?/ good one !! :)

 
At Saturday, 17 March, 2007, சொல்வது...

உங்ககிட்ட சொல்லலம்,மற்ற பதிவர்கிட்ட சொல்லலாம்.மத்தவங்க யாருகிட்டேயும் ஒரு பீத்தல் பேச்சு கூட செல்லது. ஓ.ப்ளாக்னு ஒண்ணு இருக்கா.
அப்பனி பதில் வரும்
இந்தக் கதை பிரமாதம். சும்ம அசால்ட்டா எழுதிட்டீங்க. நல்லாவும் இருக்கு.வாழ்த்துகள் உஷா.

 
At Saturday, 17 March, 2007, சொல்வது...

சர்வேசா, இந்த எழுத்துப்பட்டறையில் இன்னும் நிறைய நண்பர்கள் எழுதணும் என்றுதானே இந்த விளம்பரம்?

ராதா ஸ்ரீராம், நீங்க இன்னும் கதை எழுதிப் போடலை போல இருக்கு? கேள்வி எல்லாம் கேட்காமல் தோணியதை எழுதிப்போடுங்க.

வல்லி, சும்மா பிளாக்குன்னு சொல்லக்கூடாது. அடுத்த முறை தமிழில் பிளாக் வைத்திருக்கேன் என்று சொல்லி, கிடைக்கும் ரியாக்ஷனைச் சொல்லுங்க :-)

 

Post a Comment

<< இல்லம்