Monday, October 08, 2007

10/6/2005

தாமதமாய் ஒரு பிறந்தநாள் நினைவுகள். காலையில் குமரனின் இரண்டு வருடம் ஆயிற்று என்ற பதிவைப் பார்த்ததும், அட நாமும் இந்த மாதம்தானே ஆரம்பித்தோம் என்று நினைவு வந்தது. ஒரு திருத்தம் அதற்கு முன்பு அந்த மே மாதம் ஆரம்பித்து, பின்பு ஆகஸ்டில் மூடு விழா செய்துவிட்டேன். மாடரேஷன் இல்லாததால் வந்த பிரச்சனையை எதிர் கொள்ள முடியவில்லை.

அதற்கு முன்பு "தோழியர்" கூட்டு வலைப்பதிவில் எழுதிக் கொண்டு இருந்தேன். அதுக்கும் முன்பு ஒன்லி பின்னுட்டம். அதிலும் யூனிகோர்டில் போட தெரியாமல், கல்வெட்டு கணக்காய் எழுத்தால் உருமாறி, பதிவாளர்களை கடுப்பேற்றியது ஒரு கதை. ஆளுஆளுக்கு டியூஷன் எடுத்து தட்டு தடுமாறி பின்னுட்டம் போட கற்றுக் கொண்டேன். பிளாக் ஆரம்பிக்கவில்லையா என்று நாலு நல்ல உள்ளங்கள் கேட்க, நட்புக்களை பிடிங்கி எடுத்து "நுனிப்புல்" ஆரம்பித்து நடுவில் நிறுத்தி பிறகு அக்டோபர், 2005ல் இருந்து தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

எழுத விரும்புபவர்களுக்கு வலைப்பதிவுகள் ஒரு வரப்பிரசாதம் என்பது மிகையில்லை. அருமையான நட்புகள், அழகான கருத்து மோதல்கள் மட்டுமில்லாமல், மனதிற்கு இனிய தனிப்பட்ட நட்பு வளையம் என்று வாழ்க்கை இனிமையாய் போய் கொண்டு இருக்கிறது.

பிரச்சனைகள் இங்கும் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் பிரச்சனை இல்லாத இடம்தான் எது? எதிர்வினைகள், கருத்து மோதல்களாய், அதாவது கருத்துக்கு மட்டும் மாற்று கருத்து சொல்வது போய் தனிப்பட்ட தாக்குதல் செய்யும்பொழுது மனம் அலுத்து போகிறது. இதனாலேயே பின்னுட்டம் இடுவதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் பதிவு நன்றாக இருந்தால், அதிலும் புதியவர்கள் என்றால் ஒரு பின்னுட்டம் இடுவதை வழக்கமாய் கொண்டு உள்ளேன்.

ஆரம்ப காலங்களில் சில சமயங்களில் மனம் சலித்துப் போனதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஏன் யாரோ ஏதோ சொன்னால், நாம் ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்ற கேள்வி தோன்றி, இப்பொழுது எல்லாம் இந்த கேள்வியே எழுவதில்லை :-) எழுத முரசு எடிட்டரோ, உழுவதற்கு ஈ கலப்பை கிடைத்ததும், நம் எழுத்தையும் நாலு பேர்கள் படிக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்ற பரபரப்பு தந்த புது மோகம் வடிந்துவிட்டது. எழுதுவது ஒரு பழக்கமாய் மாறிவிட்டது.

பிளாக் ஆரம்பித்ததில் கற்றதும், பெற்றதும் மிக அதிகம். எழுத்தாளராக என்னை நிலைநிறுத்த பயிற்சிக்களமாகவும், குறைநிறைகளை சுட்டிக்காட்டப்படும் தளமாகவும் பிளாக் விளங்குகிறது. புது புது விஷயங்கள், இது நாள்வரையில் என் கருத்து என்று நினைத்துக் கொண்டிருந்ததை, மாற்றி புது எண்ணங்களை விதைத்தவை மிக அதிகம். திருத்திக் கொண்ட தவறுகளும் உண்டு.

தமிழகம் போகிறேன் என்றால், சினேகிதிகளை பார்ப்பது கட்டாயம் உண்டு. . இம்முறை சென்னையில் இருந்தது முன்றே நாள் - அதில் ஒருநாள் பந்த்- திடீர்பயணம் என்பதால் பொதுவில் சொல்ல முடியவில்லை. இம்முறை புதுமுகங்களாய் லஷ்மியும், வல்லியும் வந்திருந்தனர். அடுத்த முறை டெல்பின் மேடத்தைக் கூப்பிட வேண்டும். கீதா, பொன்ஸ் ஊரில் இல்லை. இன்னும் யார் யார் என்று தெரியவில்லை. அது என்ன பெண்கள் மட்டும் என்றுக் கேட்காதீர்கள். வலைப்பதிவர் மாநாடு என்றெல்லாம் இல்லாமல், இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருப்போம். எந்த தயக்கமும் இன்றி- இது மிக முக்கியம் இல்லையா :-))))

இந்த பதிவில் மட்டும் அனானிமஸ், மற்றும் அதர் ஆப்ஷனை அனுமதிக்கலாம் என்று இருக்கிறேன். நுனிப்புல் சம்மந்தமாய் உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை எழுதுங்கள். ஆக்கப்பூர்வமாய் எழுத்து, படைப்பு சம்மந்தமான எதிர் வினைகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.
பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள், தாக்குதல்கள், கும்மிகள் தயவுசெய்து வேண்டாம்.இதைத் தூக்கியாச்சு

37 பின்னூட்டங்கள்:

At Monday, 08 October, 2007, சொல்வது...

//அதில் ஒருநாள் பந்த்-//

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதோ.
:)))

அப்புறம் நீங்க உங்களுக்காக எழுதுங்க. அப்பப்போ வர விமர்சனத்தை நாங்க உடனேயே சொல்லிடுவோம். இந்த மாதிரி தனியா எல்லாம் சொல்ல மேட்டர் ஒண்ணும் இல்லை.

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

இலவசம், பத்து நாளு ஊர்ல இல்லையா, வூடு தலை கீழா கிடக்கு. எல்லாத்தையும் எடுத்து சரிசெய்துக் கொண்டே, இரண்டுவருடத்தில் "கற்றது என்ன பெற்றது என்ன" வென்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அப்படியே தட்டச்சு செஞ்சி போட்டுட்டேன்.
அது சரி, அது என்ன பூனைக்குட்டி? புரியலையே????

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

உஷா, வாழ்த்துக்கள். நீங்க, துளசி,அருணா இன்னும் மற்றவர்கள் எல்லாம் நல்ல பண்பட்ட எழுத்துக்கு உதாரணம். படிக்கப் படிக்க(என்னை மாதிரி)புதுசா


எழுதுபவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைக்கும்.

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

உஷா ரொம்ப நாளா உங்க எழுத்த படிக்கரேன்......பிடிச்சது என்னன்னா தெளிவான சிந்தனை, நகைச்சுவை.மத்தபடி இரண்டு வருடம் ரொம்ப இடைவெளியில்லாம(ஊர் மாறின போது மட்டும் சின்னதா ஒரு காப் விட்டீங்க!!) எழுதியதற்க்கு ஒரு பெரிய பூங்கொத்த பிடியிங்க!! வாழ்த்துக்கள்!!

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

கருத்து சொல்ல என்ன இருக்கு?
நல்லா எழுதறீங்க. நல்ல விஷயங்களை எழுதறீங்க. இதுக்கு ஏன் எல்லார்கிட்டயும் கருத்து கேட்கணும்? பதிவுங்கறது உங்க தனிப்பட்ட சொத்து.ஒ.கே.வா. தொடருங்க மேடம்.

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

ரெண்டு வருஷ வாழ்த்து(க்)கள் உஷா

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

வல்லி, ராதா, துள்சி நன்றி

ஆடுமாடு, பிளாக் நம்ம இடம் (சொத்து) என்றாலும் பொதுவில் வைக்கிறோமில்லையா? கருத்து
சுதந்திரத்தை மாடரேஷனும், அனானிமஸ் மற்றும் அதர் ஆப்ஷன் தடை செய்துவிட்டது. ஆனால்
இந்த சுதந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. படைப்பில் நிறைகுறைகளை அலச அந்த சுதந்திரம் தேவையில்ல்லையா?

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

//அது சரி, அது என்ன பூனைக்குட்டி? புரியலையே????//

அட இது வேறயா!!

நடக்காத பந்தை நடந்ததாகச் சொல்லி அதன் காரணமாக இந்த அரசு டிஸ்மிஸாகி அதன் பின் ஒரு பெண் தலைமையில் ஆட்சி பெற உழைக்கும்..... :))

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

இலவசம், நீர் இன்னும் கவிதை எழுத ஆரம்பிக்கவில்லையா? கற்பனைகள் தலைவிரித்து ஆடுகின்றதே அதுக்காக கேட்டேன்
நறநறநற....

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

'பிலாக்கோ போபியா'தானுங்க உங்க பதிவுல நான் படிச்ச மொத பதிவு

அதுல இருந்து ஒவ்வொரு பதிவு போடறப்பவும் சரி அதுமாதிரி முழு நீள நகைச்சுவை பதிவாக இருக்கும்னு வந்து வந்து ஏமாந்து திரும்பி போகிறேன்.

அதுக்காக மத்த பதிவெல்லாம் நல்லா இல்லைன்னு நீங்க அர்த்தம் பண்ணிகிட்டு என்னைய தாளிச்சிட கூடாது

2 ஆண்டுகள் 20 ஆண்டுகளாக வாழ்த்துக்கள்

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

கருத்து சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரலை, நான் ஒரு குட்டி ஆண் குழந்தை அவ்ளோ தான்! :p

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

நன்றி மங்களூர் சிவா, நக்கல், நையாண்டி என ஓரிஜினல் சுத்தமான நகைச்சுவை எழுதுவது சுலபமான விஷயம் இல்லை.

அம்பி குழந்தாய் நன்றி.

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

where is my comment mam?

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

லஷ்மி, வேற எந்த கமெண்ட்டும் இல்லையே?
அது சரி அது என்ன மேம்மு? இதெல்லாம் நல்லா இல்லே சொல்லிட்டேன். போதாக்குறைக்கு அம்பி வேற வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்னு எனக்கு வயசான மேக்கப் போடுகிறார் :-)

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

ஒஹோ. வந்தே சேரலையா? இதோ மறுஒளிபரப்பு செஞ்சுட்டாப் போச்சு.


பந்த் மாதிரின்னு சேத்துக்குங்க - இல்லைன்னா சூரத்க்கே ஆட்டோ வந்தாலும் வரும்.

// இது நாள்வரையில் என் கருத்து என்று நினைத்துக் கொண்டிருந்ததை, மாற்றி புது எண்ணங்களை விதைத்தவை மிக அதிகம். திருத்திக் கொண்ட தவறுகளும் உண்டு. // பச்சாக்கள் எல்லாம் தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு வரட்டுத் தனமாய் கத்தித் திரியுமிடத்தில் நீங்கள் இப்படிப் பேசுவதே உங்கள் தரத்தைக் காட்டுகிறது. பொதுவா உங்க எழுத்து எனக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும். அதுனால அப்பப்ப வர்ர சின்ன சின்னக் குறைகளை இ.கொ சொன்னா மாதிரி அங்கங்கயே பிரிச்சு மேஞ்சுடறோம். அதுனால ஒட்டுமொத்தமா நீங்க மாத்திக்க வேண்டிய விஷயமா எதுவும் தோணலை... தொடருங்கள் உங்கள் எழுத்துப் பணிகளை.. வாழ்த்துக்கள். (அந்த மேம் இங்கிலிபீசுல அடிக்கையில் அப்படியே அனிச்சையா வந்துட்டுது. மாப்பு)

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

//போதாக்குறைக்கு அம்பி வேற வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்னு எனக்கு வயசான மேக்கப் போடுகிறார்//

பாருடா! ஒரு நாள் வல்லி சிம்ஹன் மேடத்தை பார்த்ததுக்கே இவ்ளோ மாற்றம். இன்னும் கீதா பாட்டியை வேற பாத்து இருந்தா அவ்ளோ தான்! :p

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

வாழ்த்துக்கள்...உஷா..

இனிமே மேடம் சொல்றவங்கல எல்லாம் dis qualify
பண்ணனும்..:-))

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

பச்சாக்கள் எல்லாம் தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்னு வரட்டுத் தனமாய் கத்தித் திரியுமிடத்தில் நீங்கள் இப்படிப் பேசுவதே உங்கள் தரத்தைக் காட்டுகிறது//
ஆஹா, இதுதான் உள்குத்தா? பச்சாக்கள் என்றால் என்னை மூத்த பதிவாளர் லிஸ்டில சேர்த்தாச்சா? நல்லவேளை ரிடையர் ஆக சொல்லலையே :-)

அம்பி, கீதாவை அடுத்த மீட்டிங்குல இஸ்துக்கிட்டு வந்துட மாட்டோம் !

மங்கை அதுதானே :-)

 
At Tuesday, 09 October, 2007, சொல்வது...

வாழ்த்துக்கள். தொடரட்டும் எழுத்துப் பணி.

 
At Friday, 12 October, 2007, சொல்வது...

நானும் பச்சாதான். பால்மனம் மாறாத பச்சா. கூட்டத்துல சேர்த்துக்குங்க.

 
At Friday, 12 October, 2007, சொல்வது...

நான் என்னங்க சொல்லப் போறேன் (சன் டிவி உமா போல் சொல்லிப் பார்க்கவும். :-)) தொடர்ந்து எழுதுங்க. எப்பவும் போல நாங்க படிப்போம். கருத்து இருந்தா சொல்லுவோம். இல்லாட்டி மௌனமா இருப்போம். அம்புட்டுத் தான். :-)

 
At Friday, 12 October, 2007, சொல்வது...

சர்வேசன், ஆடுமாடு, குமரன் நன்றி

 
At Friday, 12 October, 2007, சொல்வது...

வாழ்த்துகள் உஷா

விகடனில் வந்ததுக்கெல்லாம் பீலா விட்டுக்கறாங்க; உங்கள் பதிவு கலைஞர் வரை போயிருக்கிறதே :)

MSN INDIA - கருணாநிதி பதில்: "இனிமேலாவது நுனிப்புல் மேயாமல் திருத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக என்று கருணாநிதி அக்கடிதத்தில் கூறியுள்ளார்."

 
At Monday, 15 October, 2007, சொல்வது...

இந்த சில வருடங்களில் நல்ல முதிர்ச்சி ...எழுத்தில் தான் சொன்னேன்.
:))

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

where is my comment mam?

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

In my previous comment I wrote
இந்த சில வருடங்களில் உங்களிடம் நல்ல முதிர்ச்சி !!!



உங்கள் எழுத்தைத் தான் சொன்னேன்...

:))

 
At Tuesday, 16 October, 2007, சொல்வது...

ரவியா, உங்க "வரலையே" கமெண்டைப் பார்த்ததும், மாரரேஷனுக்கு போகிறேன் ஐந்து கமெண்டுகள் உட்கார்ந்திருந்தன :-)
நன்னி.
முதிர்ச்சிதானே தினமும் கண்ணாடியைப் பார்த்தாலே தெளிவா தெரியுதே :-)))

பாபா, அதுதானே? இட்லிவடைக்கு பார்வோர்ட் செய்யுங்க, ரொம்பதான் அலட்டிக்கிறாங்க :-) (புளூரலுங்க)

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

வாழ்த்துக்களை பிடியுங்க..

என்னோட பரிந்துரை புதுவிதமா எழுதிப்பாருங்க..கட்புலனாகாத நுண்ணரசியலை கட்டுடைக்கிறதத்தான் சொல்றேன் :)

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

அய்யனார்! ஏன் இப்படி பயமுறுத்துறீங்க :-)))))))))))))))))))))

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

20-20 வாழ்த்துக்கள் உஷாக்கா

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

உஷா, இது அம்பிக்கு.
அம்பி,
என்னைப் பார்த்தா வயசாயிடும்னு சொல்ல வந்ததைப் பயங்கரமாகக் கண்டிக்கிறேன்:)))
அன்னிக்கு வந்ததிலேயே நாந்தான் ரொம்பச் சின்னக் குழந்தை. தெரியுமா:)))))

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

ரெண்டு வருஷ வாழ்த்து(க்)கள் உஷாக்கா!!!!

 
At Thursday, 18 October, 2007, சொல்வது...

பிரபா, இளா வாழ்த்துக்கு நன்றி

வல்லிம்மா, ஆமாம் லஷ்மி பாட்டியை விட நீங்க சின்னவங்கன்னு நான் சாட்சி. அம்பி கேட்டியோ!!!!

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

வலைப்பதிவில் உள்ள சிரமங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். உண்மை. கட்டற்ற சுதந்திரம் பதிவருக்கும் கருத்தருக்கும் ( பதிவு போடுபவர் பதிவர் - கருத்து போடுபவர் ??) இருக்கிறது. விமர்சனக்களைத் தாங்கும் / தள்ளும் வலிமை பதிவருக்கு வேண்டும். ஆனால் இங்கு கருத்துகளை மட்டுறுத்தும் வீட்ட்டோ பவர் உங்களுக்கு உண்டே !

எனினும் வரவு நல்வரவாகுக - வாழ்த்துகள் - என்னுடைய முதல் பின்னூட்டம் இது தங்கள் பதிவில்

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

சீனா அவர்களே, தமிழ் இணையப்பதிவுகளில் சில வருடங்களுக்கு முன்பு, அப்பொழுது மாடரேஷன் இல்லாத சமயம், ஆபாச தாக்குதலாய் பெரும்பாலான பதிவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்பு
மாடரேஷனும் வந்தது. அதர் ஆப்ஷன் மற்றும் அனானிமஸ் பின்னுட்டங்களையும் தடை செய்தப்
பிறகு பல தொல்லைகள் தொலைந்தன.
வருகைக்கு நன்றி

 
At Saturday, 20 October, 2007, சொல்வது...

வாழத்துக்கள்....

திண்ணையில் பின்னிக்கொண்டும் இருக்கிறீர்கள்....

அய்யனார் கூறியதுபோல்.. நுண்ணரசியல் கட்டுடைப்பெல்லாம் எப்பொழுது.

தொடர்ந்து உங்களை வாசிக்கிறேன் என்றாலும்... உங்கள் நகைச்சுவை உணர்ச்சி அலாதியானது.

பி.கு.: எழுத்தாளர் ஏகாம்பரிக்ககு ஒரு வேண்டுகோள்.. நாளை நான் நட்சத்திரமானால் உங்கள் பின்னோட்டம் வேண்டிப் போடப்பட்டதல்ல இது. அந்த ஆட்டத்திற்க நான் வரல...

 
At Sunday, 21 October, 2007, சொல்வது...

நன்றி ஜமாலன், பின்னுட்டங்கள் கருத்து பரிமாற்றங்களுக்கு மட்டும் என்ற எண்ணம் தோன்றும்பொழுது, பின்னுட்டங்கள் மேல் இருக்கும் மோகம் குறைந்துவிடும், உங்கள் எந்த பதிவானாலும், சொல்ல ஏதாவது இருந்தால், கட்டாயம் என் பின்னுட்டம்
வரும். சில சமயங்கள், பல அருமையான பதிவுகள் படிக்க தவறிவிடுகிறேன்.

 

Post a Comment

<< இல்லம்