இமை மூட மறுக்கும் இரவுகள்
”இரவு” என்ற தலைப்பில் மதுமிதா அவர்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்துள்ளார்.இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்' சந்தியா பதிப்பக வெளியீடாக ஜனவரி 2011, புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
1. லதா ராமகிருஷ்ணன்
2. அ.முத்துலிங்கம்
3. அசோகமித்திரன்
4. ந. தேவி
5. குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம்
6. நாகூர் ரூமி
7. ச. விஜயலட்சுமி
8. வைதீஸ்வரன்
9. க. மோகனரங்கன்
10. தி. சுபாஷினி
11. கலாப்ரியா
12. எம். ரிஷான் ஷெரீப்
13. உமா ஷக்தி
14. ராஜ்ஜா
15. இந்திரா பார்த்தசாரதி
16. சக்தி ஜோதி
17. பாவண்ணன்
18. நரசய்யா
19. இளம்பிறை
20. சித்தன் ப்ரசாத்
21. எஸ். ஷங்கர நாராயணன்
22. தமிழ்நதி
23. நாஞ்சில் நாடன்
24. இரா. முருகன்
25. அரங்கமல்லிகா
26. தமிழ்மகன்
27. பூ.அ. ரவீந்திரன்
28. ஜெயந்தி சங்கர்
29. ஆல்பர்ட்
30. சேவியர்
31. ராமச்சந்திரன் உஷா
32. நாகரத்தினம் கிருஷ்ணா
33. ச. தமிழ்ச்செல்வன்
34. கவின் மலர்
35. பாஸ்கர் சக்தி
36. அண்ணாமலை
37. மதுமிதா
அதில் நான் எழுதியது.
இமை மூட மறுக்கும் இரவுகள்
இரவு நேரங்களில் ஜன்னல் ஓர இருக்கையில் எதிர்காற்று முகத்தில் சிலுசிலுக்க பேரூந்து பயணங்கள், அந்த இருளில் தூரத்தில் தெரியும் சிறு மின்விளக்குகள், எந்த செயற்கை வெளிச்சமும் படாத பாலைவன கரிய இருளில் ஆகாயத்தில் ஒளிவிட்ட கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள், தெருவிளக்கில்லாத மலைப்பாதையில் முழு நிலவொளியில் அனைத்தும் கருப்பு வெள்ளையாய் கண்ட காட்சிகள், தூக்கம் வரும்வரை காதருகில் ஒலிக்கும் இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்கள், அமைதியான இரவில் மனத்துக்கு பிடித்தவர்களுடன் மெல்லிய குரலில் இனிய பேச்சுக்கள், பனி விழும் இரவுகளில் யாருமற்ற தெருக்களில் ஒரு சிறு நடை, நிலா வெளிச்சத்தில் அலை கடல் என்று இரவின் அழகையும், அமைதியையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிற்றின்ப போதையில் இன்பம் களிக்கும் போகிக்கும், உடல் உபாதையில்
அவதிப்படும் ரோகிக்கும், தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என எண்ணும் யோகிக்கு இரா தூக்கம் கிடையாது என்பார்கள் ஆனால் சாதாரணர்களின் வாழ்க்கையிலும் தூக்கம் வராத இரவுகள் சகஜம்.
உறவுகளில் சலசலப்பு, பொருளாதார நெருக்கடி, குழந்தைகளின் நோய்,
நட்பு உறவுகளுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தீடீர் சோகங்கள் , மனதைப் பாதித்த திரைப்படம் , செய்திதாளில் வாசித்த கொடூர சம்பவங்கள் என இராதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன.
தலைக்கு மேல் பிரச்சனை வந்தால் நாத்திகனும் கடவுளை தேடுவான் என்றாராம் கவிஞர் கண்ண தாசன். கடவுள் என்ற கருத்தாக்கத்திலேயே நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் என்ற சொல் பிரச்சனைகள் தலைக்கு மேல் போகும் போது நினைவுக்கு வரத்தான் செய்யும். ஆனால் என்ன வேண்டுவது, யாரை வேண்டுவது என்று மனம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும்.
அப்படி கடவுளை நம்பி வேண்டுதல், பிராத்தனை செய்பவர்களுக்கு நினைத்தது நடந்து விடுகிறதா என்ன என்று குதர்க்கமாய் தோன்றும்.
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தில் எதுவும் புரியாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் கழித்த இரவுகளில் தான் வாழ்க்கையின் நிலையாமை, அபத்தங்கள் புரிய தொடங்கும். மனம் உள் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்
ஆனால் இன்றுவரை மறக்க முடியாத இரவு ஒன்று உண்டு. குழந்தையின்
உயிருக்கே ஆபத்தான நோய் என்றுச் சொல்லப்பட்ட அந்த நாள். தூங்க வேண்டும் என்ற நினைவே இல்லாமல், அழவும் திரணியற்று அப்படியே அமர்ந்திருந்தேன்.
நல்ல வேலையை விட்டு விட்டு, பொருளாதார மேம்பாடுக்காக வெளி நாட்டு
வேலைக்கு கணவர் சென்று ஒரு மாதம்தான் இருக்கும்.
பக்கத்தில் என் குழந்தை ஆழ்ந்த தூக்கத்தில் ! சிகிச்சையின் வீரியத்தை மூன்று வயது குழந்தை எப்படி தாங்கும்? நோயில் இருந்து மீள எந்த கடவுளுக்கு எப்படி பிராத்திப்பது ? மகன் ஹூமாயூன் உயிர் காக்க, பாபர் தன் உயிரை தருவதாய்
பிராத்தித்தாராம். என் கடமைகள் பாக்கி இருக்கிறதே , என் உயிரை விட
முடியாது. அதற்கு பதில் எனக்கு விருப்பமான ஒன்றை விடுகிறேன், குழந்தை
பிழைத்து வர வேண்டும். நாலா பக்கங்களிலும் கன்னா பின்னாவென்று
எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன.
அன்று காலையில் பார்த்த நோயின் தாக்கத்தில் சோர்ந்திருந்த எல்லா குழந்தைகளின் முகங்களும் வரிசையாய் நினைவுக்கு வந்தது. எப்படி என் குழந்தை மட்டும் பிழைக்க வேண்டும் என்று வேண்டுவேன். பால் கன்னம் மாறாமல், கையில் கழுத்திலும் பலவித வேண்டுதல் கயிறுகள் கட்டப்பட்ட அந்த தெலுங்கு குழந்தை என் மகன் போலவே இருந்தான். கண்ணீர் ததும்பிய அத்தாயின் முகம் நினைவு வந்தது. அந்த குழந்தையும் நோயில் இருந்து மீள வேண்டும். இல்லை இல்லை காலையில் பார்த்த எல்லா குழந்தைகளும் பிழைத்தெழ வேண்டும். இப்படி வேண்டுவது எல்லாம் அந்த துக்க நேரத்திலும் அபத்தமாய் தோன்றியது.
கேள்விகள் தந்த குழப்பங்களில் அந்த ராஜகுமாரன் நினைவுக்கு வந்தான்.
நோய், துர்மரணம், வறுமை , முதுமை இவற்றை எல்லாம் பார்த்து வாழ்வில்
நிலையாமை புரிந்து தன் சுக வாழ்வை துறந்தானே, அவன் சொன்னதுதான். ஏற்றுக் கொள் வாழ்க்கை என்றால் இன்பமும், துன்பமும் சேர்ந்ததுதான் !
அவனின் அமைதியான முகம் மனக்கண்ணில் தோன்றியது. மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்தது. யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொண்டது. ஒரு வார விடுமுறையில் குழந்தையைப் பார்க்க சென்னைக்கு வருகிறேன் என்ற கணவரை குழந்தை இன்னும் ஏங்கி போய் விடுவான் வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன் .
மருத்துவரோ எனக்கு இருக்கும் அனுபவத்தில் நோய் வாய் பட்ட குழந்தைகள் சோர்ந்து போகும் உன் மகனோ சுறுசுறுப்பாய் இருக்கிறான், நன்றாக சாப்பிடுகிறான் அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று தைரியம் கொடுத்தார்.
அடுத்து எடுக்கப்பட்ட சோதனைகளில் என் மகனுக்கு பயப்படும்படி எந்த நோயும் இல்லை என்று தெரிய வந்தது. ஆனால் கண்காணிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்பொழுது, அந்த தெரு வந்ததும் குழந்தை அழ ஆரம்பித்து விடுவான் மூன்று மாதங்களுக்கு பின்பு சென்றப்பொழுது அந்த தெலுங்கு குழந்தை இறந்துப் போனது தெரியவந்தது.
வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை.
கண்ணதாசன் சொன்ன அந்த வரிகள் என்வகையில் பொய்த்துப் போயின. அவ்விரவில் இருந்து மெல்ல மெல்ல முழு நாத்திகவாதியாய் மாறத் தொடங்கினேன்.
---------------------------------------------
ராமசந்திரன் உஷா
சென்னை
Labels: நான் எழுதியவை
14 பின்னூட்டங்கள்:
//வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை//
ரொம்ப சரி..
//வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை//
ரொம்ப சரியான வார்த்தைகள்..
http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
உஷா நீங்களா இது ? புனைப் பெயரா ? :))
நன்றி அமைதிசாரல்.
ரவியா, இப்படித்தான் இருக்க வேண்டுமா பெண்கள்? அதையா குறிப்பிடுகிறீர்கள்? நான் அவள் இல்லை:-) தலைப்பை கிளிக்கினால் தமிழ் சுஜாதான்னு வரும் பாருங்க. கி.பவின ஆஸ்தான பெண் எழுத்தாளர்
//இப்படி வேண்டுவது எல்லாம் அந்த துக்க நேரத்திலும் அபத்தமாய் தோன்றியது.//
உன்மையிலேயே வேண்டவில்லையா ?
//அதற்கு பதில் எனக்கு விருப்பமான ஒன்றை விடுகிறேன், குழந்தை
பிழைத்து வர வேண்டும்..//
அப்ப...... விட்டது கடவுளையா உஷா?
அவர் வேண்டுதல் வேண்டாமை இலன்.
நல்லா வந்துருக்கு உங்க இரவு.
ரவியா, பெருமாள் முருகன் பிள்ளையார் போன்றவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பதில்
உறுதியாய் இருந்தேன், இருக்கிறேன். நடுவில் கொஞ்சம் பாண்டிசேரி மதர் மீது “பக்தி” வந்தது. விரைவில் அது நீர்த்துப் போய்விட்டது. அவ்விரவில் திரும்ப திரும்ப மனசு புலம்பிக் கொண்டு இருந்ததேதவிர, எந்த கடவுளையும் வேண்ட தோன்றவில்லை என்றே நினைக்கிறேன். அப்பொழுது என் மகனுக்கு மூன்று வயது. இன்று பத்தொம்பது ;-)
துளசி, நன்றி
//வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை//
உண்மையான வரிகள்
நன்றி ஆயிஷா
நல்ல படைப்பு உஷா....நெகிழ வைத்தன சில வரிகள்...
வாழ்க்கையில் கஷ்டத்தின் உச்சம் வரும்போது அனைவரும் கடவுளைக் கட்டாயம் நினைப்பார்கள் என்று சொல்வார்கள்...அப்படி இல்லையென்று அனுபவங்கள் சொன்னதுண்டு என் வாழ்விலும்....same blood...
கையைக் கொடுங்கள் ...கொஞ்சம் குலுக்கிக் கொள்கிறேன்...வாழ்த்துகள்!
இந்திய தேசத்தின் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்ட எங்கள் வலைப்பூ! உங்கள் ஆதரவு மிக முக்கியம் >> வருக வருக
http://sagamanithan.blogspot.com/
எங்கள் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை அங்கே எழுதவும், நன்றி!
http://sagamanithan.blogspot.com/
வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற சில கேள்விகளுக்கு விடையே இல்லை//
மனம் நெருடிய அனுபவ பூர்வமான வார்த்தைகள்.
பாசமலர், நானும் கை குலுக்கிவிடுகிறேன். கடவுள் என்ற கருத்தாக்கத்தை மறுத்து நிறைய
எழுதலாம். நாத்தீகம் என்பது நம்பிக்கையை கிண்டல்/ நக்கல் அடிப்பது இல்லை. இது ஒருவகையான
தன்னம்பிக்கை, வாழ்க்கையை புரிந்துக் கொள்ளுதல், நடப்பதை ஏற்றுக் கொள்ளுதல். நீங்களும்
உங்கள் கருத்தை, அனுபவங்களை பதிவிடுங்கள்.
நன்றி ராஜராஜேஸ்வரி
சகமனிதன், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
Its all fate.. Ethuvum namma kaila illa....
vaithee.co.cc
Post a Comment
<< இல்லம்