Thursday, July 06, 2006

ஆன்மா சாந்தியடையுமா?

தேன்கூடு போட்டி- மரணம் என்ற தலைப்பிற்கு

இன்னும் விடியவில்லை. குக்கரை வைத்துவிட்டு காப்பியை மோகனிடம் நீட்டும்பொழுது மொட்டை மாடி ஒற்றை அறையில் அப்பா வசிக்கும் தளத்தில் இருந்து மாணிக்கம் கூப்பிடுவது கேட்டது.

"பாப்பா, சீக்கிரம் வாயேன். சார் ஒரு மாதிரியா இருக்காரூ"

மோகனைப் பார்த்து அடுப்பை அணைத்துவிட்டு வாங்க என்று கத்திக் கொண்டே மேலே ஓடினேன். படுக்கையில் அப்பா இருக்கும் நிலை சந்தேகத்தை தந்தாலும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை உலுக்கத் தொடங்கினேன்.

"மாணிக்கம், குமார்அண்ணனைக் கூப்பிடுங்க" என்றதும், "பெல் அடிச்சிப் பார்த்தேன் . கதவு தெறக்கலை பாப்பா" என்றார் மாணிக்கம்.

மோகன் மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் டாக்டரை போன் செய்து வர சொன்னார். பத்து நிமிடத்தில் உள்ளே நுழைந்த டாக்டர், பரிசோதித்துவிட்டு உதட்டை பிதுக்கினார். செய்வதறியாது அப்படியே உட்கார்ந்து அப்பாவின் கையில் முகத்தை புதைத்துக் கொண்டு தேம்ப ஆரம்பித்தேன்.

கீழ்தளத்திலிருந்து அண்ணி அலறிக் கொண்டு வந்து அப்பாவின் காலில் விழுந்து பெரியதாய் அழ ஆரம்பித்தாள். அண்ணனும் அப்பாவின் அருகில் உட்கார்ந்தான்.

நான் கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து, மோகனிடம், 'சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிடுங்கள். முதலில் ஆண்டாள் அத்தைக்கு சொல்லிடுங்க. " என்றேன்.

ஆண்டாள் அத்தை, அவர் மகன் ரமேஷ், சொந்தங்கள் என சிலரும் வர, அக்கம் பக்க கூட்டமும் மெல்ல மெல்ல சேர ஆரம்பித்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்பாவின் பழைய மாணவர்கள், நண்பர்கள் இருந்தாலும், அண்ணி வகையறா உறவே அதிகம். அண்ணியின் அம்மா, அழுதுக் கொண்டிருந்த மாணிக்கத்திடம் பால் வாங்கி வரும்படி சொல்லும்பொழுது, நடுவில் புகுந்து தடுத்தேன்.

"அவரூக்கிட்ட இப்ப வேல சொல்லாதீங்க. ரொம்ப வருஷம் அப்பாக்கூடவே இருந்தவரூ, நம்ம விட அவருக்குத்தான் துக்கம் அதிகம்." என்றதும், வழக்கப்படி அந்த அம்மாள் முகத்தை சுறுக்கிக் கொண்டு ஏதோ முணங்கினார்.

அழுதுக் கொண்டு இருந்த மாணிக்கம் எழுந்து நின்று, "பாப்பா, குமாரூ! நம்ம சார் பத்தி உங்களுக்கு தெரியும். இப்படி ஒரு நிலைமை வந்தா நா என்ன செய்யணும்னு சொல்லியிருக்காரூ. பீரோ லாக்கரூல உங்க ரெண்டு பேரூ போட்ட கவரூல எல்லா விஷயமும் எளுதி வெச்சிருக்காரூ. பாப்பா, வூட்டு சாவிய உன்னாண்ட கொடுக்க சொல்லியிருக்காரூ. கொடுத்துட்டேன்" மாணிக்கம் கொடுத்த சாவி கொத்தை மோகனிடம் கொடுக்க, அவர் அதை சட்டை பையில் போட்டுக் கொண்டார்.

"தேன் மொழி, என்னா கவரூ? பெரியவர் என்னா எளுதியிருக்காரூன்னு படிச்சித்தான் பார்ப்போமே" இது அண்ணியின் அம்மா குரல். அண்ணியின் குணம் தெரிந்து, மோகனைப் பார்த்தேன். அவர் பீரோ அருகில் போக, அண்ணியும் அண்ணனும் பின்னாலேயே போனார்கள்.

எதிர்பார்த்ததை போல, அனைத்து சொத்தும் எங்கள் இருவருக்கும் சரிசமமாய் பிரித்திருந்தார். வங்கியில் இருக்கும் ரொக்கம் இருபத்தி ஐந்தாயிரம் மாணிக்கத்துக்கு. அம்மா காலமானதுமே நகைகளை எனக்கு அண்ணிக்கும் கொடுத்துவிட்டதால், அப்பாவிடம் அசையும் சொத்துக்களாய் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவைகளை அவர் பணியாற்றிய பள்ளிக்குக் கொடுத்துவிடும்படியும் , மற்ற சில்லரை சாமான்களை மாணிக்கத்துக்கு என்று விவரமாய் எழுதியிருந்தார்.

கடைசியாய் தனக்கு எந்தவித மத சம்பிரதாய, சடங்குகளும் செய்யக்கூடாது என்றும், தன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்யவும், உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன் படுத்திக்கொள்ளவும் முறையாய் பத்திரங்களையும் ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். இந்த விஷயத்தை அப்பா என்னிடமும் குமாரிடமும் முன்பே சொல்லியிருக்கிறர். அம்மாவுக்கு காரியம், தெவசம் எதுவும் அப்பா செய்யாததால், யாருக்கும் இந்த விஷயம் புதியதாய் இருக்காது என்று நான் நினைக்கும்பொழுது, மெல்லியதாய் பேச்சு சத்தம் ஆரம்பித்தது.

அண்ணியின் அண்ணன் குரல் பெரியதாய் ஆரம்பித்தது.

"நம்ம பெரியவங்க தெரியாமையா சாஸ்திரம், சம்பிரதாயம்னு உருவாக்கியிருக்காங்க. அவரூக்கு என்ன, சொல்லிட்டு போயிட்டாரூ. நீங்க வாழ வேண்டியவங்க. இப்படி ஒண்ணும் செய்யாம இருந்தா குடும்பத்துக்கே ஆவாது" பொதுவாய் சொல்வதுப் போல ஆரம்பித்தார்.

நான் கோபமாய் வாய் எடுக்கும் பொழுது, மோகனின் கை தடுத்தது.

ஆண்டாள் அத்தை "இதோ பாருங்க. எங்கண்ணனுக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்" என்றதும், அண்ணியின் அனைத்து உறவினர் பட்டாளங்களும் கத்த ஆரம்பித்தன. அண்ணன் பேசாமல் இருப்பதைப் பார்க்க ஆத்திரமாய் வந்தது. மற்றவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை.

"குமார், நீயாவது எடுத்து சொல்லக்கூடாதா?" அழுகையுடன் கேட்டேன்.

அதற்குள் அண்ணி, "தோ பாரூ தேன்மொழி, இதுனால பாதிக்கப்பட போவது நானும் எம் புள்ளைங்களும் தான். உங்க அண்ணனுக்கு பிசினஸ்ல நஷ்டம், கொழந்தைக்கு ஒடம்புக்கு வந்தது எல்லாத்துக்குமே காரணம் உங்கம்மாவுக்கு தெவசம் செய்யாததுதான்னு ஜாதகம் பார்த்து சொன்னாங்க. ஊர்ல குறிப்பார்த்தப்போதும் அதையேதான் சொன்னாங்க. அத்தை சுமங்கலியா போயிட்டாங்க. இப்ப மாமா. தெவம் செய்யாட்டா ஆத்துமா அலையுமாம். அந்த பாவம் ஒங்கண்ணணுக்கு வேணாம். ரெண்டு பேரூக்குமே நல்லா செலவழிச்சி செய்யரா நாங்க முடிவு பண்ணிட்டோம். நீ இதுல தலையிடாதே" அண்ணியின் குரல் ஆணையிட்டது.

ஜோசியம், குறிப்பார்க்கிறது! இதெல்லாம் என்ன புதுசா இருக்கு? வியப்புடன் அண்ணனைப் பார்த்தால், அவன் தலை நிமிரவில்லை.

"சரியான பொட்டைபய" கெட்ட வார்த்தைகள் வாயினுள் புரண்டன. ஆண்டாள் அத்தையின் கைகள் என் தோளைப் பற்றின.

"எப்படி அத்தே, அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அண்ணி செய்யரது சரியில்ல"

"தேனு, அவங்க கூட்டமா பேசும்போது நாம ஒண்ணும் செய்ய முடியாது. அண்ணனோட பொணம் கெடக்குர இடத்துல இப்படி ஆளு ஆளுக்கு பேசரதும் சரியில்ல. அவருக்கு தருகிற மரியாதையா இது?" என்று மெல்ல சொன்னர், "தோ பாரூங்க, எங்கண்ணனுக்கு
சாமி, பக்தி எதுவும் கிடையாது. கோவில் குளம்னு போனதும் இல்லே. புள்ளைங்களுக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சரூ. அப்படிப்பட்டவரூ வேணாம்னு சொன்னப்பிறகு செஞ்சித்தான் ஆவேன்னு பிடிவாதம் பிடிச்சா, இனி உங்க விருப்பம்"

திரும்ப ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்தனர்.

"தேன்மொழி, உங்க அண்ணி பயப்படுவதையும் யோசிச்சிப்பாரூ. அப்பாவோட கண்ணை மட்டும் டொனேட் செய்துடலாம். ப்ளீஸ் மோகன், நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க" குமார் சொன்னதும், மோகன் வெளியே போனார்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை. குமார், ஐ பேங்குக்கு போன் செய்ய, டாக்டர்களும் அவர்கள் உதவியாளர்களும் வந்தார்கள். அறை கதவை மூடிக்கொண்டு, தங்கள் வேலையை முடித்துவிட்டு, பார்க்க எந்த விகாரமும் இல்லாமல், இமையை தைத்துவிட்டுப் போனார்கள்.

அப்பொழுது வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து அண்ணியின் மாமாவுடன் வந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் புரிந்துப் போனது.

"வேணாம் குமாரூ" அலறிக்கொண்டே, அண்ணனிடம் ஓடினேன்.

மோகன் என் கையைப் பிடித்திழுத்து, "தேனு பேசாம இரு" என்று அதட்டினார்.

அப்பாவின் உடல் கீழே இறக்கப்பட்டு அண்ணனின் வீட்டு கூடத்தில் கிடத்தப்பட்டார். நடைப்பவைகளைப் பார்க்க சகிக்காமல், பின் பக்கம் போய் அமர்ந்தேன். அத்தையும் பக்கத்தில் அமர்ந்தார்.

அத்தை மடியில் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

"எப்படி அத்தே, அப்பாவுக்கு விருப்பமில்லாததை அண்ணனால செய்ய முடியுது? ஐய்யோ என்னால நெனச்சிக்கூட பார்க்க முடியிலையே..." புலம்பிக்கொண்டே இருந்தேன்.

அத்தை , " இங்க கதை இப்படின்னா, எங்க வூட்டுல அவரூ கடைசி காலத்துல சாமியார் கணக்கா இருந்தாரூ. அவரூக்கு வருசா வருசம் தெவசம் செய்ய எம் மருமவளுக்கு விருப்பம் இல்லே. கேட்டா உதவும் கரங்களுக்கு நூறு ரூபாய் அனுப்பிட்டா போதும்னு சொல்லுவா" சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே, மந்திரங்கள் சத்தமாய் சொல்லும் ஒலி கேட்டது.

"சிரிக்கிறதா அளுவுறதான்னு தெரியலே. ஆத்துமான்னு இருந்தா ரெண்டுக்கும் திருப்தி இருக்காது இல்லே?" அத்தைக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும்பொழுது, உள்ளிருந்து கோவிந்தா என்ற சத்தம் பெரியதாய் கேட்டது.

"என்ன அத்தை இது?"

அத்தை ," நாம பெருமாள கும்புடுரவங்க. ஒன் வூட்டுக்காரரூ கூப்பிடுராரூ. எந்திரி" என்றார்.

அத்தையுடன் உள்ளே நுழைந்தேன். வாய்க்கரிசி போடுங்க என்று அழைக்க, திரும்பிய என் கண்ணில் அப்பாவின் நெற்றில் பளிச் சென்று இடப்பட்டிருந்த நாமம் வந்து மோதியது. அதிர்ந்துப் போன நான், அப்படியே நின்றேன்.

39 பின்னூட்டங்கள்:

At Thursday, 06 July, 2006, சொல்வது...

நல்ல முடிவு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

ஒருத்தரே தொடர்ந்து மூணு தடவை பரிசு வாங்க கூடாதாம்.. ஞாபகத்துல வச்சுக்கங்க.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

It is a nice story, but not written as well as the prior ones Usha.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

இளா, முடிவு எழுதின எனக்கே வருத்தமாய் இருந்தது. நீங்க நல்ல முடிவுங்கிறீங்க :-))

ராசா, பொறந்த வூட்டு ஜனங்க வந்தா ஒரு சந்தோஷம்தான்.

பத்மா, இந்த கதையின் நாட் பெருசா இல்லை. இதற்கு மேல் டெவலப் செய்யவும், அதாவது இழுக்கவும் முடியாது.பார்க்கலாம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று :-)

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

//இந்த கதையின் நாட் பெருசா இல்லை//

கதையின் நாட் பெருசாக இல்லை என்பதை விட கதையின் நாட் போட்டிக்கு பொருத்தமாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து!

முதலிலேயே படித்துவிட்டேன்.
மரணம் என்ற ஒன்றை எப்படி அணுகி இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

மரணத்திற்குப் பின்னர் குடும்ப நிகழ்வுகளைப் பற்றியும், இறந்தவரின் விருப்பங்களைப் பற்றியும் பேசுகிறீர்கள்.

(இதனை வெளியிட வேண்டாம். எனது பின்னூட்டம் படிப்பவர்கள் மனதில் ஒரு கோணத்தை உருவாக்கி விடக் கூடும். வெளியிட விரும்பினாலும் இப்போது வெளியிட வேண்டாம். தங்களை டிஸ்கரேஜ் செய்வதாக தயவு செய்து எண்ண வேண்டாம். இப்பின்னூட்டம் எனது கருத்து மட்டுமே. தங்கள் படைப்பும் வெற்றிபெற வேண்டுமே என்ற அக்கறையின் வெளிப்பாடு)

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

அருமையான கதை. இன்னும் கொஞ்சம் துணிச்சலாக விளக்கு மாற்றால் அண்ணன் அண்ணி வகையறாக்களை விரட்டிப் அனுப்பியதாக முடிந்திருக்கலாம் :-(

ஒருவரின் சாவிலும் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தேடும் மாக்களின் அசிங்கத்தை அழகாக வடித்து விட்டீர்கள். தனி மனித அளவில் மட்டும் இல்லாமல், அரசியல் தலைவர்கள் சாவுகளின் போதும், தொண்டர்களின் தற்கொலைகளின் போதும் ஆதாயம் தேடும் அரசியல்களும், வியாபாரம் தேடும் ஊடகங்களும் இதே அண்ணி வகையறா போன்றவர்கள்தானே!

அன்புடன்,

மா சிவகுமார்

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

மரணம் உண்டாக்கும் இழப்புகளையும், மாற்றங்களையும், சிக்கல்களையும், விளைவுகளையும், உணர்த்தும் செய்திகளையும் இந்த மாதம் அலசிப் பார்ப்போமா? நவரசம் கொண்ட மரணத்தின் முழூவீச்சை கண்டறிய முயல்வோமா?

அவ்வளவுதான் மேட்டரு! புகுந்து வெளையாடுங்கப்பு!! :) //

சிபி, இளவஞ்சி மரணம் என்ற தலைப்புக்கு கொடுத்த இந்த கடைசி வரிகள் இந்த கதையை எழுத வைத்தது. பொருத்தமாய்
இருக்கும் என்ற நினைத்து எழுதினேன்.
நீங்கள் உங்கள் கமெண்ட்டை போட வேண்டாம் என்று சொன்னாலும் போட்டதற்கு மன்னிகவும். இன்றுத்தான் இக்கதையை வலை ஏற்றிவிட்டு, எழுத நினைப்பவர்களுக்கு இது எழுத்துபட்டரையாக உதவும். பின்னுட்டங்கள் தரும் உற்சாகமும்,
விளக்கங்களும், திருத்தங்களும் நம் முயற்சிக்கு மிக உதவியாய் இருக்கும் என்றி நினைத்தேன்.
எழுதுவதுடன் என் பொறுப்பு தீர்ந்தது. அதை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க வாசகர்களுக்கு முழு உரிமை உண்டு.
அதாவது கதையை மட்டும் :-)

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

சிவகுமார், பிராக்டிகலாய் பார்த்தால் அதெல்லாம் நடக்காது. மேலும் சாவு நடந்த இடத்தில் பிரச்சனை செய்ய நாகரீகமானவர்கள் தயங்குவார்கள். இக்கதையின் கரு நடந்த உண்மை சம்பவம்.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

//விமர்சிக்க வாசகர்களுக்கு முழு உரிமை உண்டு.
அதாவது கதையை மட்டும் //

:))
எல்லாரும் ரொம்ப பயப்படுறாங்களே!
ரொம்ப ஓவராத்தான் போறமோ!
போவமே இப்ப என்ன?

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

உஷா,

ஆத்திகமோ நாத்திகமோ, வாழ்ந்த வரைக்கும்தான் போல! :( போட்டிக்கு என்றவகையில் கதை நன்றாக வந்திருக்கிறது.

// பின்னுட்டங்கள் தரும் உற்சாகமும்,
விளக்கங்களும், திருத்தங்களும் நம் முயற்சிக்கு மிக உதவியாய் இருக்கும் என்றி நினைத்தேன்.
எழுதுவதுடன் என் பொறுப்பு தீர்ந்தது. அதை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க வாசகர்களுக்கு முழு உரிமை உண்டு. // அருமைங்க! :)))

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

சிபி, எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதைதான். வாங்கிய விழுப்புண்கள் கொஞ்சமா
என்ன :-))))))

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

உஷா,
கதை நல்லா இருக்கு.. ஒரு மரணத்துக்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளையும் விவாதிக்க வேண்டியது தான்..

ஆனா பத்மா சொல்வது போல், குஸ்கா பாணியிலிருந்து கொஞ்சம் தாக்கம் குறைகிறது..

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

கதை நன்றாக இருக்கிறது உஷா.

கேள்வி: De ja vu என்றால் என்ன?

பதில்: உஷா ஒரு பதிவு போடுதலும், தலிப்புடன் ஒத்துவரவில்லை என்று ஒரு பின்னூட்டமும் அதைத் தொடர்ந்து தலைப்பளித்தவரே வந்து சரிதான் என்று சொல்வதும் ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு தோற்றம் de ja vu எனப்படும்:-))

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

//உஷா ஒரு பதிவு போடுதலும், தலிப்புடன் ஒத்துவரவில்லை என்று ஒரு பின்னூட்டமும் அதைத் தொடர்ந்து தலைப்பளித்தவரே வந்து சரிதான் என்று சொல்வதும் ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு தோற்றம் de ja vu எனப்படும்//

:))

ஏற்கனவே போன முறையும் நடந்ததுதான்.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும் சொத்து சண்டையை கருவாக எடுக்காமல் இது புதுமாதிரி உள்ளது. நடத்துங்க.

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

பெனாத்ஸ்..

//உஷா ஒரு பதிவு போடுதலும், தலிப்புடன் ஒத்துவரவில்லை என்று ஒரு பின்னூட்டமும் அதைத் தொடர்ந்து தலைப்பளித்தவரே வந்து சரிதான் என்று சொல்வதும் ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு தோற்றம் de ja vu எனப்படும்//

கூடவே, பரிசு வாங்கறதையும் சேர்த்துக்கிடுங்க! :)))

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

//பரிசு வாங்கறதையும் சேர்த்துக்கிடுங்க//

அதான! கரெக்டா சொல்றீங்க!

யப்பா! யாராச்சும் நம்ம பக்கமும் வந்து தலைப்போட பொருந்தலைன்னு சொல்லுங்களேன்.சொல்றது யாருங்கோ! தலைவரு வாத்தியார் இளவஞிதானுங்கோ!

:))

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

உண்மைச் சம்பவம் என்னும் பொழுது மேலும் சிந்திக்க வைக்கிறது... போட்டிக்கு வாழ்த்துக்கள்...

 
At Thursday, 06 July, 2006, சொல்வது...

மரணத்திற்கு பின் ஆசைகள் நிறைவேறுவது அடுத்தவர்கையில் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

 
At Friday, 07 July, 2006, சொல்வது...

பொன்ஸ், வெங்கட்ரமணி,

கோவி கண்ணன், கண்ணை தானமாய் தர எழுதி வைத்திருந்தாலும், உடனே நடவடிக்கை எடுக்க சொந்தங்கள்
முன் வர வேண்டுமே?

குமரன் எண்ணம், மாமனார் அவருடைய பெற்றோர்களுக்கு தெவசம் செய்யாததால், தன்னுடைய
குடும்பம் அல்லல் படுகிறது என்று இரண்டு தெரிந்த பெண்கள் சொன்னதையும், கடைசி காரியம்
வேண்டாம் என்று சொன்னவருக்கு மிக பெரிய முறையில் நடந்தவைகளையும் சேர்த்து கதையாக்கினேன்.

சிபி, நெனப்பு பொழப்ப கெடுக்குதுன்னு சும்மாவா சொன்னாங்க :-)

இளவஞ்சியாரே, நாலரை கழுதை வயதில் முதல் முதலாய் வாங்கிய இரண்டாவது பரிசு என்று
உங்க பதிவுல தெளிவா சொல்லியிருக்கேன் இல்லே??? அட கடவுளே! முதல், மூன்றாவது பரிசு எல்லாம் எக்கசக்கமாய் வாங்கி குவித்து வைத்திருக்கிறேன் என்று பொருள் கொண்டீர்களா?

பினாத்தல், என்ன மொழி இது?

 
At Saturday, 08 July, 2006, சொல்வது...

அவருக்கு ஆன்மாவில் நம்பிக்கை இருந்ததா ? கதாசிரியரே அவரது நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுக்காதது போல் இருக்கிறதே :)

 
At Saturday, 08 July, 2006, சொல்வது...

உஷா, கதையிலே ஒரு சின்ன விஷயம் இடிக்கிது (கதைக்கான முக்கிய விஷயமே இதான்னு நினைக்கிறேன்).

உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் அந்த தானத்திற்கான படிவங்கள் நிரப்பும்போது மனைவி அல்லது மக்கள் இந்த தானத்திற்கு சம்மதம் தெரிவித்தோ என்னவோ கையெழுத்துப் போடுவாங்களே. இன்னார் இறந்த பிறகு இன்னார் தான் அதற்கு பொறுப்பெடுத்து செய்றது மாதிரி.

கமல் உடலை தானமாக கொடுத்தபோது அவரது மகள் சாட்சி கையெழுத்து ஒப்பிட்டார். அப்படி பார்க்கையில், அந்தப் பெரியவர் உடல் தானம் செய்ய முன்வரும் போது அவரது மகன் ஒப்பு கையொப்பம் இட்டிருக்க வேண்டுமே!

இடிக்கிதுல்ல?

போட்டியிலே நானும் கலந்துக்கிறதால குத்தம்குறை கண்டுபிடிக்க வரலைப்பா :-)). நெஜமாவே அப்படி ஒரு சந்தேகம் வந்ததாலே சொன்னேன்.

 
At Saturday, 08 July, 2006, சொல்வது...

//தன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்யவும், உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளவும் முறையாய் பத்திரங்களையும் ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். இந்த விஷயத்தை அப்பா என்னிடமும் குமாரிடமும் முன்பே சொல்லியிருக்கிறர்//

கே.வி. ஆர்! பிள்ளைகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்ட செய்கை என்பதற்கு இந்த வரிகளில் சொல்லியிருக்கிறேன். பிள்ளைகள் கையெழுத்து இட வேண்டும் என்பது எனக்கு தெரியாதது. சுட்டிக்காட்டியதற்கு
நன்றி.


மணியன், கதை நான் என்றால் அது நானில்லை. மகளுக்கு நம்பிக்கையிருக்கிறா என்ற கேள்வியே
இங்கு இல்லை, தந்தையின் நம்பிக்கை நிறைவேறாமல் போகிறதே என்று தவிக்கிறாள்.

 
At Saturday, 08 July, 2006, சொல்வது...

1)."நாகரீகமானவர்கள் செய்யமாட்டார்கள்..." என்பதுதான்
அநாகரீகமானவர்களின் பலமே.

2)அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்;சட்ட சம்பிரதாயங்கள்
அனைத்தையும் செவ்வனே செய்து
முடித்திருப்பார்.எனவே அவருடைய
உடலுக்கு சட்டப்படி உரிமை உடையவர்கள் அரசுதான்.உறவினர்கள்
சமயச்சடங்குகளை ஆற்றிய பின்னர்
உடலை அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்

 
At Saturday, 08 July, 2006, சொல்வது...

சிவஞானம்ஜி, நீங்கள் சொன்னது பிராக்டிக்கலா நடக்குமா? கண் தானம் செய்தவரின் கண்னை எடுக்கக்கூடாது என்று தடைப் போட்ட, உறவினர்கள் உண்டு. இது உறுதியான தகவல்.
நிறைய பேரூக்கு, காரிய்ம, தெவசம் போன்றவை செய்யாமல் இருப்பது அச்சத்தை தரும் சங்கதி.
அநாகரீகமாய் சாவு வீட்டில் நடப்பது சர்வ சாதாரண விஷயம்.

 
At Sunday, 09 July, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள். Usha.
எல்லோர் மனசிலும் ஓடும் அச்சம் பித்ரு கடன்கள்தான்.
இதைப் பண்ணாவிட்டால் அது நடக்காது. என்று முடிச்சுப்போட்டே நம்மை வளர்த்து விட்டார்கள்.
இப்படியும் ஒரு முனைப்பு இருக்கிறது என்று இப்போது தெரிகிறது. மீண்டும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

 
At Sunday, 09 July, 2006, சொல்வது...

உஷா

மரணம் என்றால் துக்கம், பிரிவு போன்ற வழக்கமான களங்களாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் எழுதியிருக்கிறீர்கள்... நன்று. வாழ்த்துக்கள்

படிக்கும் போது எழுத்துப் பிழைகள் கதை ஓட்டத்தை மட்டுப்படுத்துகின்றன. நண்பர்களின் உதவியையாவது எடுத்துக் கொள்ளுங்களேன்.

 
At Sunday, 09 July, 2006, சொல்வது...

//விமர்சிக்க வாசகர்களுக்கு முழு உரிமை உண்டு.
அதாவது கதையை மட்டும் :-) //

நச்சுன்னு சொன்னீங்க, குருவே :-)

நீங்க சொன்ன மாதிரி படைப்பை விமரிசிக்க வாசகருக்கு முழு உரிமை உண்டு. ஆனா படைப்பை வைத்து படைப்பாளியை உருவகப்படுத்தி விமரிசிப்பது சிறுபிள்ளைத்தனம்; அநாகரீகமும் கூட. அதை ஏனோ மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க.

 
At Sunday, 09 July, 2006, சொல்வது...

மனு நன்றி

நிலா, பேச்சு வழக்கு எழுத்துபிழையாய் தோன்றிகிறதா? உதாரணம் தனிமடலில் அனுப்புங்களேன் ப்ளீஸ்,

குருவா??? சரிதான் :-))))

 
At Sunday, 09 July, 2006, சொல்வது...

"அநாகரீகமாய் சாவு வீட்டில் நடப்பது சர்வ சாதாரண விஷயம்."

உஷா அவர்களே,

அடாவடி செய்பவர்கள் அநாகரிக நடத்தைக்கு அஞ்சுவதில்லை. நல்லது செய்பவர்கள் இறந்தவரை உண்மையாக நேசிப்பவர்கள் அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பதுதான் நாகரீகம் என்று இருந்து விடுகிறோம். அநாகரீகத்தை எதிர்ப்பது நிச்சயம் அநாகரீகம் இல்லை.

படைக்கும் போது கொஞ்சம் இலக்கிய உரிமைகள் எடுத்துக் கொண்டு துணிச்சலான முடிவுகளைத் தாருங்களேன் :-). அதைப் படித்தாவது ஓரிருவருக்கு துணிச்சல் வரலாம்.

(நீங்கள் அனுமதித்தால் இதே கதையை ஒரு சில வரிகள் மாற்றி உங்களுக்கு அனுப்புகிறேன்.)

அன்புடன்,

மா சிவகுமார்

 
At Monday, 10 July, 2006, சொல்வது...

சிவகுமார்,
உங்கள் பரவலான விமர்சன பார்வைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.
சிறுகதை எழுத ஆரம்பித்தது முதல், கதைகளில் சில விஷயங்களைத் தவிர்த்துவருகிறேன். அறிவுரைகள், கடைசி வரியில் மனமாற்றம், திருந்துதல், யதார்த்தத்தை மிஞ்சிய
நாடகதன்மை, மெலோ டிராமா போன்ற உணர்ச்சிகள் மேல் ஓங்கியிருக்கும் பாத்திரபடைப்புகள் போன்றவைகள். கதையில் பகுத்தறிவுவாதியான தந்தை நெற்றியில் நாமத்தைப் பார்த்து நாயகி அதிர்ந்தாள் என்னும்பொழுது, படிப்பவர்களில் மனதில் அதே அதிர்ச்சியில் சில துளிகள், கேள்விகள் எழுந்தால் எழுத்து வெற்றி என்று நினைக்கிறேன்.
கதையில் கூடியிருக்கும் கூட்டத்தில் அண்ணியின் உறவினர்கள் அதிகம் இருக்கிறார்கள். அண்ணியின் மாமா அழைத்துவந்த புரோகிதர்களைக் கண்டதும் வேண்டாம் குமாரூ என்று தடுக்க ஓடியவளைப் பிடிக்கும் கணவன் மோகன், பெரும்பான்மைகூட்டத்தில் நாயகி குரல் கேட்காது, அவமானப்படுத்தப்படுவாள் என்று அஞ்சி தடைப் போடும் அத்தை. இது போதும் என்று "அதிர்ந்து நின்றாள்" என்று முடித்துவிட்டேன்.
இனி அவள் என்ன செய்வாள் என்பது வாசகர் கற்பனைக்கு விட்டு விட்டேன் ;-)))

 
At Monday, 10 July, 2006, சொல்வது...

"கதையை எழுதி முடிக்கும் வரைதான் அது எழுத்தாளரின் கையில். அதன் பிறகு படிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் தமக்குப் புரிந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். தன்னுடைய படைப்பை அலசி ஆராய்வது என்பது எளிதான ஒன்றல்ல!"
சொன்னது யார் என்று நினைவில்லை.

"என்னுடைய கதைகளில் கதாபாத்திரங்கள் தங்களை தாமே நடத்திக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு நிகழ்வது அவர்களது குணம் நடத்தையை ஒட்டியதே, நான் நினைத்தாலும் முடிவை மாற்றி விட முடியாது." என்று ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்களில் கங்காவை வாழ வைத்து விடுங்கள் என்று கேட்டவர்களுக்கு சொன்னாராம்.

அது மாதிரி உங்கள் பாத்திரங்களின் குணம் உங்களுக்குத்தான் தெரியும் :-) அவர்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று நீங்கள்தான் தீர்மானிக்க முடியும்.

இங்கு கதையில் நாயகியின் அடங்கிப் போகும் தன்மையை முதலில் இருந்தே கோடி காட்டிக் கொண்டு போகிறீர்கள். எனவே முடிவும் ஏற்புடையதே, நாயகி இதைத்தான் செய்ய முடியும் என்று நீங்கள் கதை முழுதும் விவரித்துக் கொண்டு போகிறீர்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

"என்னுடைய கதைகள் எல்லாம் நான் சந்திக்கும் பெண்களின் வாழ்வில் நடப்பவைதான். முடிவை மட்டும் எனக்குப் பிடித்த நல்ல தீர்வை அளித்து கதையிலாவது அந்தப் பெண்களுக்கு நல்ல வாழ்வை அளிக்கிறேன்." என்று லட்சுமி என்ற டாக்டர் திரிபுரசுந்தரி அம்மா எழுதியிருந்தார்கள். அதைப் போல, நீங்கள் பார்த்த நிகழ்வுகளில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு காரத்தை ஏற்றி, மிக அதிகமாக செயற்கைப் பட்டு விடாமல், கொஞ்சம் நல்ல திருப்பங்களை அளிக்க முயலலாமே என்பதுதான் நான் சொன்னது.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At Tuesday, 11 July, 2006, சொல்வது...

சிவகுமார்,
மீண்டும் ஒரு விரிவான விமர்சனத்துக்கு நன்றி. மீண்டும் மீண்டும் உங்கள் கருத்தைப் படித்துப் பார்த்ததில் ஜெ.கே சொல்லியதையே நானும் சொல்ல விருப்பப்பட்டாலும், எழுத்தில் படைப்பாளியின் எண்ணங்கள், நோக்கங்கள், குணாதிசியங்கள் (எல்லாம் ஒன்றுதானே:-) வெளிப்பட்டுவிடுகின்றன. சரிதானே !

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

நல்ல கதை உஷா. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

முப்பெருந்தேவியர் படை கிளம்பிவிட்டதா? நிலா, பொன்ஸ், நீங்கள் என்று அம்மணிகள் அருமையா கதை எழுதுறீங்க.

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

இது என்ன ஆரம்பமும் புரியவில்லை, முடிவும் புரியவில்லை.

எனக்கெல்லாம் ஒரே ஒரு ஊரிலே என்று ஆரம்பித்து ... அப்படியாக இவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். ... என்று முடித்தால்தான் புரியும்.

இந்த ஏதோ போட்டி என்று ஒன்று சொல்கிறார்கள். அது வந்தாலும் வந்தது எல்லா பதிவிலும் ஒரே காட்சி - பிணத்தை போட்டுவிட்டு எல்லோரும் மாத்தி மாத்தி பேசுவது.

ஆனா, ஆளாளுக்கு தன் மன விகாரங்களை இதில் கொட்டுகிறார்களோ!!

வீட்டுக்கு போய் (இப்போ ஆபீஸில்) நன்னா ஸ்னானம் பண்ணி விபூதி இட்டுண்டாதான் இந்த கதை படித்த தீட்டு போகும். :-)

நன்றி

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

ஜயராமன் ஐயா. கொஞ்சம் 'நெருப்பு'ன்னு சொல்றீங்களா?

என்ன சொல்லிட்டீங்களா?

'ஐயோ. ஐயோ. வாய் வெந்திருச்சே. வாய் வெந்திருச்சே. யாராச்சும் தீயணைப்பு நிலையத்துக்குப் போன் போடுங்களேன். ஐயோ. ஐயோ'

என்ன பாக்கிறீங்க? ரொம்ப அலட்டிக்கிறேன்னா? :-)

அப்படித் தான் எனக்கும் தோணிச்சு உங்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததுல. :-)

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

குமரன்,

///ஜயராமன் ஐயா. கொஞ்சம் 'நெருப்பு'ன்னு சொல்றீங்களா? ///

Thanks for your sarcastic comments. I liked it.

I think you've completely missed the subtle point I thought I made. Would you like to try once again?

Thanks

Jay

 
At Wednesday, 26 July, 2006, சொல்வது...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< இல்லம்