Thursday, June 15, 2006

மஞ்சூர் ராஜா கேட்ட கதை

மெல்ல வரும் மாற்றங்கள்-சிறுகதை

பக்கத்தில் படுத்திருந்த சுபா நல்ல தூக்கத்தில் இருந்தாள். நேரம் பார்த்தேன். எட்டை தாண்டியிருந்தது. லலிதாவின் நினைவு மீண்டும் ஞாபகம் வந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. இது என்ன சிறுபிள்ளைதனம் என்றுத் தோன்றினாலும் நேற்று மாலை துபாயில் இருந்து கிளம்பியதில் இருந்து லலிதாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவலே மனம் முழுதும் வியாபித்திருந்தது.

பல்துலக்கும் பிரஷ், சுபா எங்கே வைத்திருக்காளோ தெரியவில்லை. தூங்குபவளை எழுப்ப வேண்டாம் என்று அவள் தம்பி சுதாகரைக் கேட்டு பல்பொடியால் பல்விளக்கிவிட்டு வந்தா, "சுபா, இன்னுமா எழுந்துக்கலை?" என்றுக் கேட்டுக் கொண்டே அத்தை காபியைக் கொடுத்தார்.

"இப்ப எழுந்து என்ன செய்யணும்?" என்று மாமா பெண்ணுக்கு பரிந்துப் பேசியதைக் கேட்டு முகத்தில் புன்னகை மலர்ந்தது.

" இன்னைக்கு என்ன பிரோக்கிராம்? ஒரு மாசம் லீவுன்னு பேரு இப்ப ஓடிடும். ஒரு வாரமாவது இங்க இருக்கணும்" மாமா சொல்லும் பொழுது பதில் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே, சுதாகரைப் பார்த்து, " வேளசேரில தண்டீஸ்வரம் ஏரியா எங்க இருக்கு?" என்றுக் கேட்டதும், " நா அந்த பக்கம்தான் போறேன். உங்களை டிராப் பண்ணரேன். பிரண்டா?" என்று அவனும் கேட்டதும், "தெரிஞ்சவங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே போனேன்.

படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்த சுபாவைப் பார்த்து, " சுபா, லலிதான்னு சொன்னேனே, அவங்க வீட்டுக்கு வரியா?" என்றதும், "லலிதான்னா லேடியா? இல்ல லேடில பேர்ல இருக்கிற ஆம்பளையா? உங்களுக்குத்தான் இப்ப உலகம் எல்லாம் பிரண்டாச்சே! இவங்க யாரு?"

"சுபா! இந்த கிண்டல்தானே வேண்டாங்கரது. லலிதான்னு ஒரு மேடம், கவிதை நல்லா எழுதுவாங்கன்னு சொல்லியிருக்கேனே. எங்க குரூப் பிரண்ட். இங்க வேளசேரிலத்தான் இருக்காங்க" என்றதும்,

டப் பென்று கும்பிட்டு, " ஆளவிடுங்க சாமி. உங்க நெட்டு பிரண்டா? நீங்க தமிளு, பாரதி அப்படி இப்படின்னு பேசுவீங்க. எனக்கு ஒண்ணும் புரியாது. நீங்களே போயிட்டு வாங்க" என்றாள்.

ஹாலில் இருந்த தொலைபேசியில் லலிதா வீட்டுக்கு போன் செய்தால், ஓரே மாதிரி சத்தம். சுதாகரிடம் கேட்டதும், அவனும் கேட்டுவிட்டு, அவுட் ஆப் ஆர்டர் என்றான். மாமாவும், அத்தையும் தண்டீஸ்வரத்துல யாரு, ஒறவுக்காரங்களா என்று ஆரம்பித்ததும், இல்லை பழைய பிரண்டு என்று சொல்லிவிட்டு மடமடவென்று குளித்துவிட்டு, அத்தை கொடுத்த பலகாரத்தை தின்றுவிட்டு, சுதாகரிடம் இடம் விசாரித்து விட்டு, ஆட்டோ பிடித்து போகிறேன் என்று சொல்லி வெளியே வந்தேன்.

கிட்டதட்ட இரண்டு வருட நட்பு. ஆளை நேரில் பார்க்காவிட்டாலும், தினமும் ஏதாவது இலக்கியம், சினிமா, வாசிப்பு என்று கதைத்துக் கொண்டு, ஒருவகையில் பிசிராந்தையார், சோழமன்னன் நட்பு மாதிரி. அந்த சோழ மன்னன் பேரு.. யோசித்து ஞாபகம் வரவில்லை. நாளை எங்கள் குழுவில் ஒரு வரி போட்டு விட்டால் போதும், மறு நிமிடம் விடை வந்துவிடும். எங்கெங்கு இருந்து நட்புகள்! ஆண், பெண், சிறியவர், பெரியவர், மெத்த படித்தவர், என்னை போன்று வெறும் தமிழ் ஆர்வலர் என்று எந்தவித பாகுப்பாடும் இல்லாமல், நினைக்க நினைக்க மனம் பெருமிதத்தில் நிரம்பி வழிந்தது.

அடுக்கு மாடி குடியிருப்பில் அந்த வீட்டை கண்டுப் பிடித்ததும், இருப்பார்களோ இல்லையோ என்ற பயத்துடன் அழைப்பு மணியை அழுத்தியதும், கதவை திறந்தவரிடம் நான் யார் என்று சொல்லும் பொழுது, வாங்க, வாங்க என்று உற்சாக குரல் எழுந்தது. போட்டோவில் பார்த்த முகம் என்றாலும் மனதில் பதியவில்லையாததால், அவரை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

வரவேற்பு அறையில் காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த கிழவர் என்னை கொஞ்சம் விரோதமாய் பார்த்தார். பக்கத்தில் இருந்த கிழவியின் பார்வை தொலைக்காட்சியிலேயே நிலைத்திருந்தது.

என்னை உட்கார சொல்லிவிட்டு லலிதா டீவி சத்ததை குறைத்தார், கிழவி ஏதோ முணுமுணுத்தவாறு உள்ளே சென்றார். பொதுவாய் என்னையும், சுபாவையும் விசாரித்தார். சுபாவை பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். கிழவரின் பார்வை என்னையே ஆராய்ந்துக் கொண்டிருந்தது. லலிதா, உங்க ஓய்ப்பையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம் என்று திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

லலிதாவின் கணவர் சாதாரணமாய் என் வேலையைக் குறித்துக் கேட்டார். கிழவர் நடு நடுவில் நான் யார் என்பதை தெரிந்துக் கொள்ள கேள்வி எழுப்பிக் கொண்டேயிருந்தார்.

லலிதா, " நாங்க எல்லாரும் கம்ப்யூட்டர் மூலமாய் பழக்கமானவங்க. என் தம்பி மாதிரி மாமா! இவங்க ஓய்ப்பும் எனக்கு நல்ல பழக்கம்" என்றார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இது எனக்கு இணையம் மூலம் பழக்கமான முகமேயில்லை. தம்பி, அண்ணன் என்ற உறவு முறையில் அழைப்பதையே கூடாது என்பவர் வார்த்தைக்கு வார்த்தை என்னை தம்பி என்று சொன்னது உறுத்தலாய் இருந்தது. வயது வித்தியாசம் இல்லாமல் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு, ஆரோக்கியமான நட்பை வளர்த்தவரா இது என்று ஆயாசமாய் இருந்தது.

ஏதாவது பேச வேண்டுமே என்று மேடத்தோட ரைட்டிங்கு நான் தீவிர ரசிகன் என்று ஆரம்பித்தேன்.

" ஏதோ பிள்ளைங்களும் பெரியவங்க ஆயிட்டாங்க. அவளுக்கும் பொழுது போகணும் இல்லே. நா பொறந்து வளர்ந்தது எல்லாம் மும்பைல. அதனால ஏதோ பேசுவேனே தவிர, தமிழ் படிக்க தெரியாது" என்றவர், "நீங்க பேசிக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். லலிதா குடிக்க காபி எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளேப் போனார்.

கிழவர் வெற்று வாயை அசைப் போட்டுக் கொண்டு, காலை ஆட்டிக் கொண்டே என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்ற சங்கடத்துடன், அங்கிருந்த வார பத்திரிக்கையை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

உள்ளே சமையலறையில் கிழவி என்னைப் பற்றி விசாரிக்கிறார் போலிருந்தது. லலிதா மெதுவா பேசுங்கமா என்று அடக்குவது தெரிந்தது. உள்ளேயிருந்து காபி டம்பளருடன் வந்த லலிதா, சுபாவுடன் ஒருநாள் சாப்பிட வர வேண்டும் என்றதும் நான் தலையை ஆட்டினேன். காபியை குடித்துவிட்டு எழுந்தேன்.

"நேத்துதான் வந்தேன். சும்மா உங்களப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சாரிடம் சொல்லிடுங்க" என்றவாறு செருப்பை அணிந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

மனம் வலித்தது. என் முட்டாள்தனம், நல்லவேளை சுபா வரவில்லை.

வெளியே வந்து லிப்ட் அருகில் போய் பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்கும்பொழுது, என் தோளை தொட்டது ஒரு கரம், லலிதா!

"இப்ப நீ பாக்குற லலிதாவுக்கும், எழுதுகிற லலிதாவுக்கும் நெறைய வித்தியாசமில்லே? எழுத்து, வாசிப்புன்னு பேச வந்திருப்பே. ஏமாத்தமா இருக்கு இல்லே? என்ன செய்ய, இடம், பொருள் பார்த்துத்தான் பேச முடியும்! அத்தை, மாமா வயசானவங்க, அவுங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. நீ வரேன்னு தெரிஞ்சிருந்தா, வெளிய எங்காவது சந்திக்கலாம்னு சொல்லியிருப்பேன்"

என்ன சொல்வது என்று என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

"எத்தனை வயதானாலும் நான் பெண், நீ ஆண். மாமனார், மாமியார், கணவன் இருக்க, நீயும் நானும் நடு ஹாலில் உட்கார்ந்துக்கூட சகஜமாய் பேச முடியாது. அதுதான் உண்மை. இப்ப ஆண்,பெண் நட்பு என்பதையே கொஞ்சம் சங்கடத்தோட ஏத்துக்கிறாங்க. என் கணவருக்கு என்னைப் பற்றி தெரியும். ஆனால் மத்த சொந்தக்காரங்களுக்கு இது புரியாது. இன்னும் ஒரு அம்பது வருஷம் போனால், அடுத்த தலைமுறைன்னு வெச்சிக்கோயேன் எல்லாமே மாறிப் போகும்" என்றார்.

"வரேன் லலிதா" என்றதும், அவரின் கை நீண்டது. அந்த கையைப் பிடித்து குலுக்கிவிட்டு , லிப்டில் நுழைந்தேன். மனம் சந்தோஷப்படுகிறதா இல்லை பாரமாய் இருக்கிறதா என்று தெரியவில்லை.

6 பின்னூட்டங்கள்:

At Thursday, 15 June, 2006, சொல்வது...

எத்தனை..?

 
At Thursday, 15 June, 2006, சொல்வது...

ராசா, புரியலையே????

 
At Thursday, 15 June, 2006, சொல்வது...

//இன்னும் ஒரு அம்பது வருஷம் போனால், அடுத்த தலைமுறைன்னு வெச்சிக்கோயேன் எல்லாமே மாறிப் போகும்//
- இப்போவே மாறவில்லைங்கறீங்களா?

ராசா, இது அந்தக் கணக்குல வராது.

 
At Thursday, 15 June, 2006, சொல்வது...

அட இந்த அருமையான கதையை நிறையபேர் படிக்கலை போலிருக்கே.. பின்னூட்டமே வரல!
ஆண்-பெண் நட்பு.. தேன்கூடு மாதாந்திர போட்டிக்கு நல்ல தலைப்பு. இன்னும் இந்தியர்கள் இதுக்கு ரெடி ஆகலைன்னே தோணுது. என் வீட்டிலயே நிறையதடவை சமாதானங்கள் சொல்லவேண்டி இருந்திருக்கு. எல்லாம் பழைய தலைமுறை ஆண்கள் செஞ்ச தவறுகள்னால.

 
At Friday, 16 June, 2006, சொல்வது...

கதை நல்லா இருந்திச்சு உஷா, மொத்ததிலே இந்த நண்பர்கள்ங்கிற விஷயம், ஆப்போஸிட் செக்ஸ்ல பொதுவா, சரியா சமூகம் புரிஞ்சுக்காத ஒன்னு! நான் இதை அப்ப அனுபவிச்சது தான் அரிதாரத்தோட பதினாலாம் பகுதிலே போட்டேன்!

நான் அப்ப நடந்ததை அனுபவம்னு நேரா எழுதிட்டேன், நீங்க கதையா எழுதிட்டீங்களோ-:) எந்த வடிவம்னா என்னா, சில விஷயங்கள் எழுத அனுபவம் தேவையாத்தான் இருக்கு-:)

 
At Friday, 16 June, 2006, சொல்வது...

படிக்கிறதுக்கும், பின்னூட்டம் இடுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு, அந்நியன்!

வீட்டிலயும் இதையெல்லாம் படிப்பங்க, நம்ம கருத்தையெல்லாம் சொல்லி ஏன் மாட்டிக்கணும்னு கூட இருக்கலாம்!!
:)))))

இது சகஜமாக இருபாலருக்கும் நடக்கும் நிகழ்வே!

மனப்பிம்பங்கள் [மீண்டும் பிம்பம்; சகுனமே சரியில்லை!!] உடைவது போன்ற சோகம் வேறு எதிலுமில்லை!

தலைமுறை தவறுகள் புதிய, புதிய வடிவிலே நடந்து கொண்டுதானிருக்கிறது!

நல்ல மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது!

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது>

 

Post a Comment

<< இல்லம்