Tuesday, June 27, 2006

குஸ்கா

அந்த பிள்ளை சிரித்தது. ராஜசேகர் தன்னையறியாமல் முருகா என்று கையெடுத்து கும்பிட்டான். என்ன சிரிப்பு இது? உச்சந்தலையில் சீலீர் என்று ஐஸ்தண்ணிக் கொட்டுவது மாதிரியில்ல இருக்கு? எல்லாம் ஒரு விநாடிதான். மறுகணம் பழையபடி தலையை சாய்த்துக் கொண்டு கோணவாயில் ஜொல்லு வழிய ஓரப்பார்வைப் பார்த்தது அந்த பிள்ளை குஸ்கா.

ரஜினிபடம் அண்ணாமலையா? இல்லையே அது பால்காரன் கதை, ஆங்! அருணாசலம், அதுல ஒரு முருகன் படம் காட்டுவார்களே, ஏனோ அந்த முருகன் முகம் கண் முன்னால் வந்தது. கொஞ்சம் மரியாதையுடன் குஸ்காவைப் பார்த்தான்.

பார்க்க, ஆறேழு வயசுதான் சொல்லலாம், ஆனா பதினெட்டு வயசாச்சுன்னு நேத்து பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது. நல்லவேளையாய் பொட்ட புள்ளையாய் இல்லாமல் போயிற்றே என்று நினைத்துக் கொண்டான் ராஜசேகர். லேசாய் சிரிப்பு வந்தது அது என்ன குஸ்கான்னு பேரு. சில படாவதி ஹோட்டல், டீகடை வாசல்ல இவ்விடம் குஸ்கா கிடைக்கும்னு போர்ட் இருக்கும், ஆனா தின்னுப் பார்த்ததில்லை. ஒருக்கா திண்ணுப் பார்க்கணும்.

உப்பிலியப்பன் கோவில் உள்ளே சென்றவர்களைக் காணவில்லை. இன்னைக்கு விசேஷ நாளு போல இருக்கு, ஓரே கூட்டம் நெரிச்சல். புழுக்கம் தாங்காமல், குஸ்கா கத்த ஆரம்பித்ததும் அவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டான் ராஜசேகர்.

குஸ்கா அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது. ராஜசேகர் புசுபுசு மேல் சட்டையை எடுத்து அதன் கன்னத்தில் தேய்த்து ஜூஜூ என்றான். அதன் முகமெல்லாம் சந்தோஷம். திரும்ப அந்த பிள்ளை சிரிக்குமோ என்றுப் பார்த்தான், ஆனால் சிரிக்கவில்லை.

சுனிதாவை சின்ன பிள்ளையாய் இருக்கும்பொழுது ஜூஜூ என்றுக் கொஞ்சியது ஞாபகம் வந்தது. உடனே இரண்டாயிரம் ரூபாய் தேவை மனதில் பாரமாய் அழுத்தத்தொடங்கியது. பாவம் அருணா! காசு இல்லாத கொடுமை, கைய ஓங்கினது தப்புத்தான். அருணாவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதேயில்லை. சுனிதா முழுபரிட்ச்சை லீவுக்கு நாகர்கோவிலுக்கு போயிருந்தப் பொழுதே வயசுக்கு வந்து, அங்கியே சீர் செஞ்சாச்சு. திரும்ப ஊருக்கு திரும்பியதும் இங்கத்து மனுசங்களை அழைச்சி இன்னொரு தடவ கூத்தடிக்கணுனா காசுக்கு எங்கப் போறது? புத்திக்கெட்ட பொம்பள.

ஜூஜூ என்று குழறிய சத்தம். "வெளையாடணுமா ஒன்னோட" என்றுக் கேட்டவாறு திரும்ப அந்த சட்டையை எடுத்து மீண்டும் அதன் கன்னத்தில் தேய்தான். காலையில் ஆடுதுறையில் மினரல்வாட்டர் வாங்க வண்டியை நிறுத்தியப் பொழுது, ஒருவன் ஒடபெல்லாம் புசுபுசு பொம்மைகளை மாட்டிக் கொண்டு வாங்கிக் கொள் என்று ஓரே உபத்திரவம். அதே புசுபுசு துணியில் தைத்த சின்ன கோட் போன்ற சட்டையை குஸ்காவிடம் நீட்டியதும், அதுவும் வாங்கிவைத்துக் கொண்டு அதையே அணைத்துக் கொண்டிருந்தது.

அஸ்சு, புஸ்சூ என்ற சத்தத்துடன் பெரியவரும், அவங்க மனைவியும் கதவை திறந்து உட்கார்ந்தார்கள்.

"ஏ.சிய ஹைல வைப்பா.. என்னா வெய்யிலு, புழுக்கம்... " கிழவி சொன்னதும் ராஜசேகர் வண்டியின் ஏ.சியை அதிகமாக்கினான்.அந்த பிள்ளைகுஸ்காவுக்கு குளிருமோ என்று புசுபுசு சட்டையை அதற்கு மாட்டினான். திரும்ப, மனம் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தது. ராஜசேகர் முன் பக்கம் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

சுவாமிமலைமுருகனை மட்டும், இன்றைக்கு தரிசிக்க முடிந்தால் பணம் எப்படியாவது கிடைத்துவிடும். முருகா என்று ராஜசேகர் வாய்விட்டே சொல்லிவிட்டான்.

"என்ன இன்னும் வரக்காணோம்?" என்று பெரியவர் சொல்வதுக் கேட்டது. "மகராசி, புள்ளை நாளைக்கே சீராகி, அப்பனோட பிசினெசு பாக்கணும்னு வேண்டிக்கினு இருப்பா" என்று சொல்லிவிட்டு, கிளுகிளுவென சிரித்தாள். கெழவனாரும் கூட சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். குஸ்காவிடமிருந்து ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தான் ராஜசேகர்.

தலையை வேகமாய் ஆட்டிக் கொண்டிருந்தது. பிறகு தலையில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. கக், கக் என்று சத்தம் மட்டும் வந்தது. ராஜசேகர் சட்டை வேர்க்கிறதோ என்று கழட்டப் போனான். ஆனால் அவன் கையை தூர தள்ளியது. ராஜசேகர் பின் பக்கம் திரும்பி சொன்னதும், கிழவி அலட்டிக் கொள்ளவேயில்லை.

கிழவனார் முன் பக்கம் எட்டிப் பார்த்து, " நீ போயி அவங்கள வர சொல்லு" என்றார். ராஜசேகர் இறங்கும்பொழுது, சின்ன பொண்ணை தூக்கிக் கொண்டு அவர்களே வருவது தெரிந்தது. சைகை காட்டியதும் வேகமாய் ஓடிவந்தனர்.

புருஷனும், மனைவியும் சேர்ந்து பிள்ளையின் டிரவுசரைக் கழற்றி சுத்தம் செய்து வேறு அணிவித்தார்கள்.

"எடிஎம் கும்பகோணத்துல இருக்குமா? கொஞ்சம் கேஷ் கொறையுது" சங்கர் கேட்டதும், " இருக்கும் சார். அங்கேயே வெங்கட்ரமணா லாட்ஜ்ல சாப்பிட்டுட்டு திருவையாறு போகலாம். அங்க ஒன் அவர் ரெஸ்ட் எடுத்துட்டு ஆலங்குடிக்கு போகலாம். மத்தியானவேளை எல்லா கோவிலும் சாத்தியிருக்கும்" என்றவாறு வண்டியை கிளப்பினான் ராஜசேகர்.

"சாமிமல?" கிழவிக் கேட்டது.

" மணி பன்னிரண்டரை ஆவுது. சீக்கிரம் லஞ்சு மூடிச்சீங்கன்னா பார்க்கலாங்க! ஆலங்குடில குரு பகவானப் பார்த்தா நவகிரக யாத்திர முடிஞ்சிது. ஏழுமணிக்கு திரும்ப கும்மோணத்துல ஒங்கள சென்னைக்கு பஸ் ஏத்திடரேன் சார். வரும்போது கணபதிஅக்ரஹாரத்துல அய்யிரு ஹோட்டல் ஒண்ணு இரூக்கு, ராத்திரிக்கு டிபன் பார்ச்சல் அங்க வாங்கிக்கலாம்"

வெங்கடரமணா லாட்ஜில் சாப்பிட்டுவிட்டு, சதீஷ் ஏடிஎம்மில் பணம் எடுத்ததும், வண்டியைக் கிளப்பினான் ராஜசேகர். பேண்டு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தார் சதீஷ். ஓரக்கண்ணால் பார்க்கும்பொழுது அத்தனையும் ஆரஞ்சு வண்ண ஆயிரம் ரூபாதாள் என்பது தெரிந்தது .

"இதுதாம்பா ஆயிரம் ரூபா" என்று தலையை பின்புறமாய் திருப்பி, தந்தையிடம் நீட்டும்பொழுது பொழுது, குஸ்கா கையை நீட்டியது. அப்படியே அனைத்தையும் அதனிடம் கொடுத்தார். சிலதாளை எடுத்து தன் சட்டை பையில் வைத்துக் கொண்டது.

இதுல ஒரு ரெண்டு நோட்டு கெடச்சா போதுமே.. வெளிநாட்டு பார்ட்டி, அமெரிக்கால இருந்து சாமி கும்பிட வந்திருக்காங்க..என்ன ஒரு நூறு ரூபா டிப்சா கொடுத்தா அதிகம் என்று நினைத்தவாறு, முன்பக்க கண்ணாடியை சரி செய்யும் பொழுது, பின்னால் இருந்தவளின் கண்களுடன் மோதியது. எந்த உணர்வும் காட்டாமல் வெறுமையாய், குளம் போல கண்ணு! மனதினுள் முருகா என்று முணங்கினான்.

நாப்பது வயசு இருக்கும். ஆனா என்ன அழகு, டான்ஸ் ஆடுற பொம்பளைங்களப் போல, ஒசரமும், இடுப்பும்! கையும் வெரலும் நீளநீளமாய், மேலே இருந்து கீழ்வரை சாட்டையாய் தொங்கும் ஜடை.! ! யப்பா என்று பெருமூச்சுவிட்டான் ராஜசேகர்.

வழியில் வந்த சுவாமிமலை முருகன் கோவில் மூடியிருந்ததைப் பார்த்த ராஜசேகருக்கும் ஏமாற்றமாய் இருந்தது. கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டனர்.

கிழவர். "திருபுவனத்துல பொடவ வாங்குரேன்னு நேரமாகிட்டீங்க" என்று முணுமுணுத்தார்.

சிரிப்பு வந்தது ராஜசேகருக்கு. காலையில் புடைவைகடையில் கிழவி காணாததைகண்டா மாதிரி நாலு புடைவைகளை எடுத்து வைத்துக் கொண்டது. மகன் பணம் குறைகிறது என்று முணுமுணுத்தும் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. கிழவிக்கு பனியன் போட்டா போதும், பட்டுபுடவ எதுக்கு என்று கிழவன் மெதுவாய் சொன்னது பக்கத்தில் நின்றிருந்த ராஜசேகர் காதில் நன்றாக விழுந்தது.

கிழவியின் உருவம் அப்படிதான் இருந்தது. ஒட்டட குச்சியாய், உடம்புக்கு சம்மந்தமேயில்லாமல் பின்பக்கம் மட்டும் ஒரு அடிக்கு நீட்டிக் கொண்டு! கடைக்காரன் புதுடிசைன் என்றுக் காட்டியதை எடுஎடுன்னு கிழவன் மருமகள் கையில் வைக்கும் பொழுது, ஓரே உதறலுடன் அவள் வெளியே போனாள். எல்லாம் பெரிய எடத்து விவகாரம். பாவம்! பிள்ளைக்கு இப்படின்னா, மாமனாரும் சரியில்லே. மாமியாரும் சரியில்லே. ஆனா புருஷன் நல்லாத்தான் வெச்சிருக்காரு போல. அதுவும் நல்ல படிச்ச பொம்பள மாதிரி தெரியுது.

உண்ட மயக்கம் எல்லாரும் கண் அயர்ந்தப் பொழுது, பின்னால் இருந்து சின்ன பெண், பாத்ரூம் போகணும் என்று சிணுங்க ஆரம்பித்தது.

"திருவையாறு போயிடலாம். அங்க சுத்தமான பாத்ரூம் இருக்கும் " ராஜசேகர் சொல்லும் பொழுது, அந்த பெண்ணின் சிணுங்கல் அதிகமாயிற்று. நேற்றிலிருந்து இந்த பெண் இதே பிரச்சனை செய்துக் கொண்டு இருக்கு. எந்த பாத்ரூம் காட்டினால் சுத்தமாய் இல்லைங்கும், மரத்துக்கு பின்னால் போ என்றால் ஐயே என்று சிணுங்கும். வண்டியை நிறுத்தினான் ராஜசேகர்.

வேறு வழியில்லாமல் அவசரமாய் வண்டியில் இருந்து இறங்கி தாயும் மகளும் மரத்திற்கு பின்னால் ஓடினர். திரும்பிய பேத்தியை ஏதோ சொல்லி சிரித்தவாறு கிழவன் கையை பிடித்து அழைத்ததும், வாடி இங்க என்று பெண்ணை இழுத்துக் கொண்டு மருமகள் காரை சுற்றிக் கொண்டு போய் மறுப்பக்கம் அமர்ந்தாள்.

பணம் இருந்தா போதுமா மனம் கேள்விக் கேட்டாலும், எண்ணம் முழுவதும் அந்த புசுபுசு சட்டையில் இருந்த ரூபா நோட்டிலேயே இருந்தது.

ஆலங்குடிக்கு போகிற வழியெல்லாம் ரோட்டில் ஓரே வைக்கோல். மெதுவாய் டயரில் சிக்காமல் பார்த்து வண்டியை ஓட்டி, கோவிலுக்கு போய்விட்டு, திரும்ப கும்பகோணம் வரும்பொழுது நேரமாகிவிட்டது. வழியிலேயே கணக்குப் பார்த்து பணத்தை செட்டில் செய்துதாகி
விட்டது. டிப்ஸ் என்று இருநூறு ரூபாய் கிடைத்தது. கேபிடிகாரன் வண்டியை எடுத்துக் கொண்டு இருந்தான். ஹாரன் அடித்ததும் பஸ் நின்றது.

கார் நின்றதும் இறங்க எல்லாரும் ஆயுதமாகும் பொழுது, ராஜசேகர் இடது கையால் பக்கத்தில் இருந்த புசுபுசு சட்டையை கீழே தள்ளிவிட்டான். பின்பு காலால் எத்தி, அதை சீட்டின் கீழே தள்ளினான். புருஷனும், மனைவியும் குஸ்காவை முதலில் தூக்கிக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினார்கள்.

மற்றவர்கள் அரக்க, பரக்க சாமான்களை தூக்கிக் கொண்டு ஓடி வண்டியில் ஏறினர்.

குஸ்கா திரும்ப, திரும்ப ஜூஜூ என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அவசரத்தில் யாரும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. ராஜசேகர் பேசாமல் நின்றிருந்தான்.

ஜன்னல் வழியாய் அவனைப் பார்த்து திரும்ப ஜூஜூ கையையும், தலையையும் ஆட்டியவாறு கதறலாய் கத்தியது குஸ்கா. எல்லாரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர்.

அதற்கு மேல் மனம் தாங்காமல், ராஜசேகர் பஸ்சின் பக்கவாட்டில் நிற்க சொல்லி தட்டிவிட்டு, சட்டை எடுக்க காருக்கு ஓடினான்.

சட்டையை எடுத்துக் கொண்டுப் போய் பஸ் ஜன்னல் வழியாய் நீட்டும்பொழுது, குஸ்கா சிரித்தது. அதே தெய்வீக சிரிப்பு. முருகா என்று வாய் முணுமுணுக்கும் பொழுது சட்டை பையில் துருத்திக் கொண்டு இருந்த ரூபாய் நோட்டுகளில் அவன் விரல்கள் பட்டன.

*******************

நிலாசாரல் இணைய இதழில் வெளியானது

17 பின்னூட்டங்கள்:

At Tuesday, 27 June, 2006, சொல்வது...

உஷா: உங்கள் கதைகளை அவ்வப்போது படித்துக்கொண்டு வருகிறேன். இந்தக் கதை நன்றாக வந்துள்ளது. எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இப்பொழுதுதான் நிஜமான எழுத்தாளராக ஆரம்பித்திருக்கிறீர்கள்:-) ஆனால் எழுத்துப்பிழைகள் இப்பொழுதும் எக்கச்சக்கமாக வருகின்றன. கொஞ்சம் அதையும் கவனியுங்களேன்!

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

முருகா! அருமையான மனதை நெகிழ வைக்கும் கதை.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நல்லா இருந்துதுங்க.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

தமிழோவியத்துல சிறப்பு ஆசிரியரா போகனுமேன்னு பயந்தா மாதிரி இருந்துது.. இதுக்கு மேல என்னங்க வேணும்.. ம்ம் கலக்குங்க..

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

திருட்டுத்தனத்தால் கிடைக்கும் 2000 ரூபாய்களை விட, தப்பு செய்ய விடாமல் திருத்திய முருகன், அதனால்தான், கோயிலைப் பூட்டிக்கொண்டு தரிசனம் தராமல் உணர்த்தினானோ!

நல்ல பயணக்கதை!

நவக்ரக தரிசனத்துக்குப் போகும்போது, எங்கெங்கு சாப்பிடலாம்,, எங்கு பணம் எடுக்கலாம்,
எப்போது கோயில் மூடும் என்றெல்லாம் வேறு சொல்லியிருக்கிறீர்கள்!!

:))

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நல்ல கதை...நன்றி..

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

Nalla arumaiyaana ezhuthu nadai.
romba pidichuthu

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

பத்ரி, என்னுடைய மொழி அறிவை வளர்த்துக் கொள்ள ஓரே வழி, சென்னையில் செட்டில் ஆகி, இலக்கணம் படிக்க வேண்டும், ஹூம்! பார்க்கலாம்.
எழுத்தாளர் பட்டத்துக்கு நன்றி :-)

மணியன், செந்தழல்ரவி, இ.கொ, டுபுக்கு, ராசா, நன்றி. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இந்த கதை எனக்கு பிடித்த கதைகளில் முதலாவது. சென்ற வருட கல்கி சிறுகதைப் போட்டியிலும், நிலாசாரல் சிறுககதைப் போட்டியிலும் பரிசு பெறாத கதை :-)

எஸ்.கே, முடிவை இன்னும் ஒரு முறை படித்துப்பாருங்கள். அவன் விரல்களில் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்ட்டன என்று
முடித்திருக்கிறேன். பணத்தை எடுத்தானா இல்லையா என்பதை நான் சொல்லவேயில்லையே :-) பாவம் ஏழைக்கு, முருகன் கொடுத்ததாய் வைத்துக்கொள்ளலாமே :_))

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

உஷா

இலக்கியவாதி ஆகிட்டீங்க போலிருக்கு... பயமா இருக்கு :-)))

விமரிசனம் தனிமடலில் தருகிறேன்

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நிலா தெளிவாய் சொல்லிவிடுகிறேன்
:-) நான் ஒரு எழுத்தாளரே தவிர இலக்கியவாதியில்லை :-)

கதையைப் பொறுத்தவரையில் காக்கைக்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு கதைத்தான். ஏன் பரிசு கிடைக்கவில்லை என்றெல்லாம்
கேள்வி எழுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. நிலா, விமர்சனத்தை, எதிர் வினையை, குறைகளை பொதுவிலேயே
சொல்லுங்கள். அவை என் எழுத்தை இன்னும் மேம்படுத்தும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
காட்டமான விமர்சனம் எழுத்துக்கே தவிர அவை நம் நட்பை என்றும் பாதிக்காது, இது உங்களுக்கு மட்டுமல்ல :-)

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

உஷாஜி,

நல்லா இருக்கு.

ஆரம்பமும் நல்லா இருக்கு. "உச்சந்தலையில் சீலீர் என்று ஐஸ்தண்ணிக் கொட்டுவது மாதிரியில்ல இருக்கு? எல்லாம் ஒரு விநாடிதான். மறுகணம் பழையபடி தலையை சாய்த்துக் கொண்டு கோணவாயில் ஜொல்லு வழிய ஓரப்பார்வைப் பார்த்தது அந்த பிள்ளை குஸ்கா." போன்ற வரிகள் எழுத்தாளராக உங்கள் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

வெட்டி வெட்டி ஓடும் நடை. அதனால் கதையும் வேகமாகப் போகிறது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நான் ஒத்துக்கொள்ள மாட்டேன், உஷா.ரா.
அவன் எடுக்கவேண்டும் என நினைத்திருந்தால், பதறிப்போய் அந்தச் சட்டையைத் திருப்பிக் கொடுத்திருக்க மாட்டான்.

அவன் விரலில் தட்டுப்பட்ட ரூபாய் நோட்டுகள் அவனது ஏமாற்றத்தைக் காட்டும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.
இல்லையெனில், சீட்டுக்கு அடியில் தள்ளிய சட்டையை வெளியெடுத்து ஓடிப்போய் எதற்குக் கொடுக்க வேண்டும்?
ஏனென்னில், அப்போது, "எல்லோரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர்."..."ஜன்னல் வழியாய் நீட்டும்போது, குஸ்கா சிரித்தது."..."அவன் விரல்கள் பட்டன".
எல்லோரும் பார்க்கும்போது ருபாய் நோட்டுகளை ராஜசேகர் உருவினான் எனச் சொல்ல வருவது சரியாக இல்லை.

அப்போது எடுத்தானோ எனச் சொல்வது சரியாகப் படவில்லை.... எனக்கு.
நானும் கதையை ஒன்றுக்கு இருமுறை படித்த பின்னரே அந்தப் பின்னூட்டம் இட்டேன்.

அப்படி சொல்ல நீங்கள் நினைத்திருந்தால், "ஜன்னல் வழியாக அவனைப் பார்த்து குஸ்கா சிரித்தவாறே கையையும் தலையையும் ஆட்டியது"என்று முடித்திருப்பீர்கள்.


//காட்டமான விமர்சனம் எழுத்துக்கே தவிர அவை நம் நட்பை என்றும் பாதிக்காது, இது உங்களுக்கு மட்டுமல்ல :-) //

இப்படி எல்லாரும் நினைப்பதில்லை, உஷா. நீங்கள் நினைக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நல்ல கதை உஷா. குஸ்கா மாதிரி சிறுவர் சிறுமியர்கள் நிறைய பேரை இங்கே அமெரிக்காவில் பார்க்கிறேன். நம் ஊரிலும் அந்த அளவு எண்ணிக்கையில் இருப்பார்களா என்று தெரியவில்லை; ஒரு வேளை கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

நிலாச்சாரல்லயே படிச்சிட்டேன் உஷா.. முதல் முறை படித்தபோதே ஒரு மாதிரி நெஞ்சைத் தொட்டது.

என் கஸின் ஒருத்தன் இப்படித் தான் , குஸ்கா மாதிரி.. ஆனா, அவன் இத்தனை சின்னவனா இருந்தப்போ நான் பார்த்ததில்லை.. நல்ல கதை.. நல்ல நடை

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

உஷா,

'அருமை'

வேற ஒண்ணும் சொல்லத்தோணலை.

குஸ்கா............ ரெண்டுதடவை படிச்சேன்.

பாவம், அந்த குஸ்காவின் அம்மா.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

எஸ்.கே! எல்லோருடைய மனதில் தெய்வமும் இருக்கிறது, சாத்தானும் இருக்கிறது என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு. சாத்தானும் தெய்வ குணங்களும் எத்தனை சதவீதம் என்பது ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும்.
குஸ்கா சட்டையைக் கேட்டு கதறும்பொழுது, அதில் உள்ள ரூபாய் நோட்டுகளை அவன் மறந்து, அதை
எடுத்துக் கொண்டு ஓடினான். அப்பொழுது குஸ்காவின் தெய்வீக சிரிப்பில் அவன் மெய்மறந்தான். ஆனால் சில நொடிகளில் அவன் விரல்களில் நோட்டுக்கள் பட்டதும், அவன் யதார்த்த உலகிற்கு வந்தான். அந்த நோட்டுகளை ராஜசேகரின் விரல்கள் உருவினவா இல்லையா
என்பதை வாசகர்கள் முடிவெடுக்க விட்டுவிட்டேன்.

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

பி.கே.எஸ். துளசி, பொன்ஸ், குமரன், நன்றி. இந்த பிள்ளைகளின் கள்ளமில்லா சிரிப்பை பலமுறை நான் கவனித்து உள்ளேன். அந்த பிள்ளைகளின் மீது பெற்றோர் காட்டும் அதீத பாசமும், (சிலரின் அதீத வெறுப்பையும்) நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பச்சிளங்குழந்தைகளின் கண்கள் பால் வெள்ளையாய் இருக்கும். மனதில் அழுக்கு சேர சேர அந்த நிறம்
மாறிவிடும். ஒரு முறை எங்கோ பார்த்த ஒரு சிறுவன், வயது பதினைந்து என்று சொன்னார்கள். கண்ணில் அதே பால் நிறம், வாயில் ஜொல்லு வழிய மனதைக் கொள்ளைக் கொள்ளும் சிரிப்பு. மனதில் அழியா இடம் பெற்ற அச்சிறுவனின் நினைவே இங்கு ஒரு பாத்திரமாய் வருகிறது.

 

Post a Comment

<< இல்லம்