Monday, October 31, 2005

பட்..பட்.டு தீபாவளி

இன்றைய நாளில் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் எங்கு நோக்கிலும் பட்டுபுடைவைகளுக்கான விளம்பரங்கள். ஆரெம்கேவியில் எந்த நிறத்திலும் புடைவை உண்டு என்கிறாள் ஜோதிகா. போத்தீஸீல் பட்டு பாவாடை வாங்க, வாங்க என்று அழகாய் அழைக்கிறது குட்டி ஒன்று. இன்னொரு குட்டி கார்ட்டூன் கேரக்டர்கள் பாவாடையில் இருக்கிறது என்கிறது. இதை தவிர கோபிசெட்டிபாளைய கடையில் பட்டு வாங்க கூட விளம்பரங்கள்.

முன்பு பட்டுப்புடைவை என்பது பொதுவாய் கல்யாணத்துக்கு மட்டும்தான் வாங்குவார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் என்றால் தலை தீபாவளிக்கு, சீமந்தம், வளைகாப்புக்கு எடுப்பார்கள். ஆனால் இன்று தீபாவளி போன்ற பண்டிக்கைகளுக்கு கூட பட்டுபுடைவைதான் என்று சட்டமாகிவிட்டது. விலையைப் பார்த்தால் தலையை சுற்றுகிறது. அதே சமயம் ஆயிரம் ரூபாயிலிருந்து மலிவான பட்டுகளும், மூந்நூறு ரூபாய்க்கு போலி பட்டுகளும் கிடைக்கின்றன. இந்தியாவில் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது!

பழைய தீபாவளி மலர்களைப் பார்த்தால் நல்லி, சாரதாஸ் மற்றும் குமரன் சில்க்கின் விளம்பரத்தில் அன்றைய தேதி பிரபலங்கள் கையில் மத்தாப்பூடன் விசித்திரமான பட்டு புடைவை டிசைனில் காட்சி அளிப்பார்கள். ஆனால் அந்த டிசைகளில் புடைவையை யாரும் வாங்கி நான் பார்த்ததில்லை. அடர்ந்த நிறத்தில் நேவீ ப்ளூ அல்லது பொடி கலர் பார்டரில்தான் புடைவை இருக்கும். பார்டர் நிறம் கருப்பில் கிடைத்தாலும், கருப்பு என்று பலர் ஒதுக்குவார்கள். புடைவையின் பார்டர் ரெட்டை பேட்டு, உடம்பில் சரிகை, புட்டா என்று சில டிசைகள் கிடைக்கும் அவ்வளவுதான்.

என் அம்மாவிடம் மூன்று புடைவைகள் இருந்தன. எந்த கல்யாணம், விசேஷங்களுக்கும் அதுதான். நாங்கள் யூனிபார்ம் என்று கிண்டல் செய்வோம். என்னிடம் கல்யாண புடைவைகள், அண்ணன், நாத்தனார் கல்யாணத்தில் எடுத்தது என்று ஆறேழு இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் இனி பட்டு வேண்டாம் என்று முடிவெடுத்தேன். காரணம் சின்ன வயதில் படித்தது அப்பொழுது கல்கியில் காஞ்சி பெரியவரின் அருள்வாக்கு வரும். பக்தி எல்லாம் இல்லாவிட்டாலும், அவர் சொன்னது நெற்றியில் அடிப்பதுப் போல இருந்தது.

எத்தனை பட்டு புழுக்களைக் கொன்று ஒரு புடைவை தயாராகிறது, பிராமணாள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பட்டு உடுத்தலாமா என்று கேட்டிருந்தார். இது அகிம்சையை விரும்பும் அனைவருக்கும் பொருந்தும்தானே? அது ஆழ் மனதில் சுற்றிக் கொண்டேயிருந்தது. என் கணவரிடம் இதை சொன்னதும், ரொம்ப நல்ல காரியம் என்றார். எந்த ஆணுக்கு பட்டில் ஆயிரக்கணக்கில் பணம் போட மனம் வரும்?

பெண் குழந்தைக்கு முதல் பிறந்தநாளுக்கு அம்மா பட்டு பாவாடை எடுத்து தந்ததுதான். பிறகு அவளுக்கும் நாங்கள் வாங்கவில்லை. எங்கள் வீட்டு கிரஹபிரவேசம், கல்யாணங்கள், போன வருஷம் அப்பாவின் எண்பதாவது பிறந்த நாள் விழா செய்தப் பொழுதுகூட எல்லாரும் பட்டில் மின்னும் பொழுது, நான் சாதாரண புடைவையில் இருக்கும்போது, பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்தது. இல்லாதவர்கள் பட்டு உடுத்தாவிட்டால் ஒரு மாதிரி கேலி, இருப்பவர்கள் உடுத்தாவிட்டால் வேறு மாதிரி கேலி. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும். கண்ணதாசன் சொல்லி விட்டார் இல்லையா? டூப்ளிகேட் பட்டு, காதியில் அகிம்சா பட்டு கிடைக்கும் வாங்கலாமே என்று அறிவுரைகள் கிடைக்கும். அதெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வது இல்லை.

திட்டு எப்பொழுது விழும் தெரியுமா? பாவம் நெருங்கிய சொந்தங்கள் ஏதாவது விசேஷங்களுக்கு எல்லாருக்கும் பட்டு
புடைவைகளை எடுத்துவிட்டு, எனக்கு மட்டும் என்ன எடுப்பது என்று திண்டாடிப் போவார்கள்! கையில் இருக்கும் ஆறேழு புடைவைகள் பத்திரமாய் என் அம்மாவின் பீரோவில் தூங்கிக் கொண்டிருந்தன. அம்மாவை கேட்டால், உன்னுடையது
எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள், யாருக்கு தருவது இதனால் என்ன பிரச்சனை ஏற்படுமோ என்று யோசிக்கும்பொழுது, திருடன் வீட்டு பூட்டை உடைத்து சொல்லி வைத்தார் போல என் புடைவைகளை அள்ளிக் கொண்டு போய் விட்டான். பெரிய தலைவலி தீர்ந்தது என்று நிம்மதியடைந்தேன். கூட அம்மாவின் சில வெள்ளி பாத்திரங்களும், அப்பா வைத்திருந்த மூன்னூறு ரூபாய் பணமும் போயிற்று.

இனி வரும் காலத்தில் தன் கல்யாணத்தில் கூட பட்டு கட்ட மாட்டேன் என்று சூளுரைக்கிறாள் என் மகள். ஆனால் அப்படி நான் அன்று சொல்லியிருந்தால், என் அப்பாவின் சுமை எவ்வளவோ குறைந்திருக்குமே?

3 பின்னூட்டங்கள்:

At Monday, 31 October, 2005, சொல்வது...

//நாங்கள் யூனிபார்ம் என்று கிண்டல் செய்வோம்.// என்ன என்று? என்ன என்று?

 
At Monday, 31 October, 2005, சொல்வது...

உஷா,

நல்ல தீர்மானம்தான். ஆனா எனக்கு இன்னும் 'ஆசை'விடலையேங்க(-:

ரங்காச்சாரீஸ் புடவைகளில் நல்ல காட்டன் புடவைகளே பட்டு ரேஞ்சுக்கு ஜொலிக்குது. அதுதான் சமீபத்துலே ரெண்டு வாங்கினேன். அதை ஒருக்கா சென்னைபோகும்போது பாருங்க.

ஹேப்பி தீபாவளி.

 
At Tuesday, 01 November, 2005, சொல்வது...

----எந்த ஆணுக்கு பட்டில் ஆயிரக்கணக்கில் பணம் போட மனம் வரும்---

:-)))

----வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்---

தத்துவத்துக்கு போயிட்டீங்களே !

 

Post a Comment

<< இல்லம்