Thursday, November 03, 2005

ம்.ம்...ஹூஹூம்!

( தென் இந்திய பெண்களுக்கும் வட இந்திய பெண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெண்கள் சந்திப்பில் வட இந்திய பெண்கள் பெரியவர், சிறியவர் என்ற பேதம் பார்க்காமல் எல்லா விஷயங்களையும் பேசுவார்கள். சொந்த விஷயங்களும் கூச்சமில்லாமல் பேசப்பட்டு அறிவுரைகள், கருத்துக்கள் என்று பேச்சு போகும். ஆனால் தென் இந்தியா பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது.
இன்னும் மனதடைகள் அதிகம். அப்படி ஒரு சந்திப்பில் பெண் மருத்துவர் சொல்ல ஆரம்பித்து பேச்சு திசைமாறி போனது. அப்பொழுது கேட்ட விஷயத்தை கதையாக்கியுள்ளேன்.)

ம்.ம்...ஹூஹூம்

வீட்டில் என்னமோ நடக்குது என்ற சந்தேகம் எழுந்தாலும், ஆனால் என்னவென்றுதான் காவேரியால் கண்டே பிடிக்க முடியவில்லை. "இது என்ன கண்ராவி! பையனுக்கு இந்த வயசுல புத்தி இப்படி போறதே?" என்று அவளால் தலையில்தான் அடித்துக் கொள்ள முடிந்தது.

நேற்றும் சரியாய் காலை பதினோருமணி வாக்கில் மகன் குண்டுராவ்விடமிருந்து போன் வந்தது. மாட்டுப்பெண் ருக்குமணி போனை எடுத்தவள், ஆமாம், சீக்கிரம், உம் ஆகிய மூன்றே வார்த்தைகளைச் சொன்னாள். ஐந்தே நிமிடத்தில், அடுத்த தெருவில் ஹோட்டல் வைத்திருக்கும் மகன், வந்தவன் நேராக மனைவியை அழைத்துக் கொண்டு போய் அறை கதவை சாத்திக் கொண்டான்.

சத்தமொன்றும் அறையில் இருந்து வராததால், புது கல்யாணமா என்ன? வேளைக் கெட்ட வேளையில் அறையை சாத்திக் கொள்ள என்று மனத்திற்கு சால்ஜாப்பு சொல்லிக் கொண்டு, அறை வாசலில் நின்றுக் கொண்டு, " இட்லிக்கு ஊறப் போட்டிருக்கியே, கிரைண்டர் போடட்டா?" என்று சாதாரணமாய் கேட்டாள்.

சில நிமிடத்தில் அறை கதவு திறக்கப்பட்டு, ருக்கு வீர் என்று சமையலறைக்கு சென்றாள்.

இன்றைக்கும் அதே கதை என்றால் காவேரியால் தாங்கமுடியவில்லை. காதை கூர்மையாக்கிக் கொண்டு ஏதாவது கேட்கிறதா என்று கூர்ந்து கவனித்தாள். ஜன்னல் ஸ்கிரீன் துணி இழுக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான், சஸ்பென்ஸ் தாங்காமல் , டீவி சத்தத்தையும் கொஞ்சம் பெரியதாக்கிவிட்டு, இளையமகள் கங்காவிற்கு போன் செய்து விஷயத்தை ரகசியமாய் சொன்னாள்.

"என்னம்மா இது கேக்கவே அசிங்கமா இருக்கு?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் மகள்.

"கல்யாணம் ஆயி பத்துவருஷமாச்சு. ஒரு புழுபூச்சிக்கூட இல்லே. இவளுக்குதா புத்தி எங்கப்போச்சு? நா ஒருத்தி குத்துக்கல்லுமாதிரி இருக்கேன்னு நெனப்பு வேண்டாம்!" என்று மருமகளை திட்டிவள், "கொழந்த இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி வெளையாடறான் போல இருக்கு" என்று சொல்லி சிரித்தாள்.

உள்ளே குண்டுராவ், " ஐயய்யோ" என்று அலறினான். "எங்கம்மா போன்ல யாரோடையோ பேசறா" என்றான்.

"ஹால்ல பேசுறது இங்க கேக்குதா? போதாதற்கு டிவி வேற அலர்றது. நல்ல பாம்பு காது ஒங்க வம்சத்துக்கு.." என்றவாறு எழுந்து உட்கார்ந்த ருக்கு, " வேற யாரு, உங்க அம்மாவுக்கு குரு ஒங்க தங்கைதானே?" என்றவள் தலையில் அடித்துக் கொண்டு, "ஒண்ணுக்கு ரெண்டா அர்த்தம் பண்ணிண்டு ,என்ன என்ன சொல்லி வெக்கறாளோ? விஷயத்த உங்கம்மா கிட்ட சொல்லிடுங்கன்னு சொன்னேனில்லையா? வம்புக்கே அலையிர ஜென்மம்!"

பொதுவாய் மனைவி பெற்றதாயை ஏதாவது சொன்னால், உடனே புரட்சிதலைவராய் மாறி தாயின் தியாகங்களை வரிசைப் படுத்தும் குண்டுராவ் இன்று பேசாமல் இருந்தான்.

"நா சொல்லதான் போறேன். இல்லாட்டி கண்ணு, காது, மூக்கு வெச்சி ஊரு பூரா ஒங்கம்மாவும், தங்கையும் தண்டோரா போட்டு விஷயத்த நாஸ்தி ஆக்கிடுவா" என்றாள் ருக்கு.

பாத்ரூம் போய்விட்டு வந்த குண்டு " இப்ப சொல்ல வேண்டாம்." என்றவன், "சரி! நா கெளம்பரேன். ராகவேந்திரா நீயே கதி " என்று சாமி அலமாரியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு ஹோட்டலுக்கு கிளம்பினான்.

மகன் வெளியேறியதும், மருமகள் காதில் விழும்படி, " ஸ்ரீனிவாச பிரபோ! இந்த வயசான காலத்துல இன்னும் என்ன என்ன பாக்கணும்னு தலைல எழுதி வெச்சிருக்கோ?" என்று புலம்பினாள்.

மாமியாரின் டபிள் மீனிங் புலம்பல் கேட்டு, சர் என்று கோபம் ஏறத்தான் செய்தது அவளுக்கு. ஆனால் இனியும் சொல்லாவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்ற கட்டாயத்தினால், நேராய் மாமியாரிடம் போய் உட்கார்ந்தாள் ருக்கு.

"அத்தே! வந்து.. யாருகிட்டையும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க" என்றாள்.

"அப்படி என்னடிமா ரகசியம்?" என்று முகத்தை சுளித்துக்கொண்டுக் கேட்டாள்.

"அத்தே! எங்களுக்கோ கல்யாணம் ஆயி பத்து வருஷமாச்சு... .அக்கா, தங்கைன்னு அவள் ஒரு தொடர்கதை சுஜாதா மாதிரி எல்லாரையும் கரையேத்திட்டு, அவர் கல்யாணம் பண்ணிண்டதே லேட்டு.." சமயம் கிடைக்கும் பொழுது வதவதவென்று பிள்ளைகுட்டிகளைப் பெற்ற மாமியாரையும், மாமனாரையும் குத்திக்காட்ட சான்ஸ் கிடைத்தது ருக்குவிற்கு.

"அதுக்கு ...?"

" அதனால.... போன மாசம், டாக்டர் விஜிதாமஸ், டீவில எல்லாம் வராளே, அவளப் போயி பார்த்தோம். பெரிய இடமா, அப்பாய்ண்மெண்ட் வாங்கவே ஆறுமாசமாச்சு. அவ எங்க ரெண்டுபேரையும் டெஸ்ட்டு பண்ணிட்டு, மருந்து மாத்திர கொடுத்து இருக்க..." என்று நிறுத்தியவள், கொஞ்சம் சங்கடத்துடன், " அந்த மாத்திரை... நா தீட்டு குளிச்சி ஒரு வாரம் ஆனதும் சாப்பிடணும். அந்த டேப்ளெட்ஸ் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சி, ஒடம்பு சூடாக ஆரம்பிக்கும் அப்ப....வந்து அவர்...நாங்க... " முடிக்காமல் தவித்தாள்.

காவேரிக்கு புரிந்துவிட்டது. மனதில் கொப்பளிக்கும் சிரிப்பை உள்ளுக்குள் முழுங்கிவிட்டு, " என்னடி இது கூத்து? கொழந்த பொறக்கலைன்னா கோவில் கொளம்னு போவா! ஜாதகம் பாத்தி தோஷ நிவர்த்தி, பூஜை, புனஸ்காரம்னு செய்வா. இது என்ன புதுசா இருக்கு? காலம் கலி காலம்னு சரியாதான் சொல்லியிருக்கா!" என்று முகவாயில் கையை வைத்து ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"அத்தே! ராத்திரின்னா ஒங்க மகனுக்கு தூக்கம் வந்துடரது. ஹோட்டலுக்கு காலைல போனா பாதி ராத்திரிதானே வரார். இதுக்காக ஒக்கார வெச்சாலும், வந்து... அவரால முடியர்துலே.. என்ன பண்ணறதுன்னே புரியலை. எப்படியோ ஒங்க வாரிச ஒங்க மடியில போடணும். கல்யாணம் ஆயி இத்தன வருசமாச்சு. என்னைக்கு அந்த பெருமாள் அனுக்கிரகம் கிடைக்குமோ?" ருக்கு கண் கலங்கி தேம்ப ஆரம்பித்தாள்.

"எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போயி கொஞ்ச நேரம் அப்படியே படுத்திண்டிரு. நா சமையலை முடிக்கிறேன்" என்று சொன்னாள்.

பெருமூச்சுடன் எழுந்துப் போய் படுத்தாள் ருக்கு. நேத்து எல்லா ஏற்பாடும் செய்து காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது உடம்பு சூடு குறைந்துவிட்டது. இன்னைக்கோ மாமியார் அடித்த கூத்தில் ஒன்றும் ஓடவில்லை இருவருக்கும். இன்னும் ஐந்து நாளுக்கு மருந்து இருக்கு, அதற்குள்.... உடுப்பி கிருஷ்ணா என்று மீண்டும் நெடிய பெருமூச்சு கிளம்பியது அவளிடமிருந்து.

சமையலறையிலோ காவேரிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இவ ரெடின்னாதும் அவன் ஓடிவரானா என்று மனக்கண்ணில் காட்சியை ஓடவிட்டு சிரிப்பு தாங்காமல், இந்த சமாசாரத்தை சிறியமகள் கங்காவிடம் மட்டும் யாரிடம் சொல்லாதே என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

மறுநாள் அதே பதினோருமணி. குண்டு வீட்டில் நுழையும்போது, வாசலில் நின்றிருந்த அவன் தாய் " ராகவேந்திரா" என்று கூரையைப் பார்த்து கைக் கூப்பினாள். பிறகு மகனை அருகில் அழைத்து " கவலையே படாதேடா குண்டு! ... உடுப்பிக்கு வரேன்னு வேண்டிண்டு இருக்கேன். ஒங்க அப்பாவே வந்து பொறப்பார் பாரு" என்று தைரியம் சொல்லி, தலையில் கைவைத்து ஆசிர்வதித்து உள்ளே போக சொன்னாள்.

கூச்சத்துடன் தலையை நிமிர்த்தாமல் அவன் உள்ளே போகும்பொழுது, அவள் மருமகளையும் அழைத்து கழுத்தில் கைவைத்து பரிசோதித்தவள், " கணகணன்னு இருக்கு. போடிம்மா!" என்று அவளையும் ஆசிர்வதித்தாள். ருக்குவும் பவ்வியமாய் மாமியார் காலில் விழுந்து வணங்கிவிட்டு அறைக்குள் சென்றாள்.

கதவை தாளிட்ட மனைவியைப் பார்த்து, "ஏண்டி, அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீயா?" என்று கோபமாய், மிக மெல்ல பல்லைக்கடித்தான்.

"சொல்லாம? ஒங்கம்மா கொணம் ஒங்களுக்கு தெரியாதா? வாய வெச்சிண்டு சும்மா இருப்பாளா? நேத்திக்கு நீங்க அப்படி போனதும் ஆரம்பிச்சூட்டா. அதுக்குதான் விஷயத்த சொல்லிட்டா பேசாம இருப்பாளேன்னு சொல்லிட்டேன். மத்தவா விஷயம்னா தொக்கு " என்றாள் அவனைவிட சின்னக் குரலில்.

அப்படியே உட்கார்ந்திருந்தவன், " சே! நேத்திக்கு நீ பேசியே காரியத்த கெடுத்த. அதுக்கு மொதல்நாள் ஆரம்பிக்கும்போது, எங்கம்மா கதவ தட்டினா. இன்னைக்கு இப்படி... மூடு ஸ்பாயில் ஆயிடுச்சு. ஒண்ணா, ரெண்டா அந்த லேடி டாக்டருக்கு மருந்து மாத்திரைக்கே பத்தாயிரம் ரூபாக்கு மேலே ஆயிருக்கு" என்றவன் சிறிது யோசனைக்குபின், பேசாமல் நின்றுக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, "தலைக்கு மேல போயாச்சு. சாண் போனா என்ன? மொழம் போனா என்ன? இங்க ஒண்ணும் சரிபடாது. சாயந்தரம் ரெடியா இரு. நாம ஊட்டிக்கு போயிடலாம். கூட ஏழெட்டாயிரம் செலவாகும், பரவாயில்லை. இன்னும் அஞ்சு நாளுக்கு மருந்து இருக்குல்லே" என்றான்.

ஊட்டி என்றதும் ருக்குவும் சந்தோஷமாய் தலையை ஆட்டினாள்.

தாயாரிடம் சில சால்ஜாப்புகளைச் சொல்லிவிட்டு, அன்றே ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் பிடித்தனர்.

அவர்கள் வேண்டுதல் பலித்து அந்த மாதமே பிள்ளை வயிற்றில் தங்கியது. பிறகு பார்த்தால் மருந்தின் வீரியத்தில் இரட்டை ஆண் குழந்தைகள்.

ருக்குமணிக்கும், குண்டுராவுக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. ஒவ்வொரு வேண்டுதலாய் நிறைவேற்ற லிஸ்டு போடும்பொழுது, குழந்தைகள் பிறந்த மூணாம் மாதமே மீண்டும் கருவுற்றாள் ருக்கு. டாக்டர், குழந்தை பெற்ற உடம்பு வீக்காய் இருக்கிறாய், கருவை கலைத்துவிடலாம் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. குண்டு எடுத்து சொல்லியும், " அந்த பாவத்தமட்டும் செய்ய மாட்டேன், ஒரு கொழந்த தங்காதான்னு நா பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்" என்று உறுதியாய் மறுத்தவள் அழகான பெண் குழந்தையைப் பெற்றறெடுத்தாள்.

கணக்கில் இரண்டாவது, எண்ணிக்கையில் மூன்றாவது குழந்தையும் சுக பிரசவத்தில் பிறந்தாலும், அவள் உடம்பு மிகவும் பலவீனமாய் இருந்ததால் குடும்பக்கட்டுபாடு ஆபரேஷன் செய்ய முடியாமல் அவளையே ஜாக்கிரதையாய் இருக்க சொல்லிவிட்டாள் டாக்டரம்மா.

குண்டு பயந்துப் போய் மனைவி பக்கம் கண் கொண்டு பார்ப்பத்தைக் கூட விட்டான். ருக்குவுக்கும் வரிசையாய் பிறந்த மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாய் இருந்தது.

ஒருநாள் அறையில் படுத்திருக்கும்பொழுது, உள்ளே போர்வை எடுக்க வந்த மனைவியைப் பார்த்ததும் ஆசை துளிர்விட்டது. நல்ல ஊட்டமான சாப்பாடு, தாய்மையின் மெருகு எல்லாம் சேர்ந்து நன்றாக உடம்பு வைத்திருந்தது ருக்குவுக்கு. அவள் கையை பிடித்து இழுத்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் பாட்டியுடன் ஹாலில் படுத்திருந்தன.

"எல்லாம் மறந்துப் போச்சு இல்லே?" என்று மனைவியின் முழங்கையை தடவினான்.

"இன்னும் என்ன? அதுதான் மூணு ஆச்சே! இது மூணையும் படிக்க வெச்சி, கல்யாணம் பண்ணி... ராகவேந்திரா! மனசுலையும், ஒடம்புலையும் திடத்தக் கொடுப்பா!" என்றாள் அவன் கையை தள்ளியப்படி.

"பாத்தீயா? கொழந்த வந்ததும் என்னை கழட்டிவிட்டுட்ட..." என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

"என் ராஜாவுக்கு கோவம் வந்துடுச்சா?" என்று கொஞ்சலுடன் மூக்கை கிள்ளியதும், கிரீன் சிக்னல் கிடைத்த குண்டு சந்தோஷமாய் கதவைத் தாழிட்டு விளக்கை அணைத்தான்.

ஆனால் அடுத்த நிமிடத்தில், " என்னன்னா?... வயசாயுடுத்துல்லையா?" என்று ருக்கு சாதாரணமாய்தான் சொல்லிவிட்டு எழுந்துப் போனாள். ஆனால் அவனுக்கு முகத்தில் அடித்தாற் போல் ஆயிற்று.

அவள் குழந்தைகளுடன் படுக்கப் போனதும் அவனால் தூங்க முடியவில்லை.

ஒருவாரம் கழித்து காலை டிபன் சாப்பிடும்போது, அக்கம்பக்கம் பார்த்து மனைவியை அருகில் அழைத்தான் குண்டுராவ்.

"இன்னைக்கு ராத்திரி சரியா?" என்றுக் கேட்டான். அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவன் கன்னத்தை கிள்ளியதும் அவளுக்கு புரிந்துப் போனது.

"போதுமே! அதுக்கு இப்ப என்ன?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

கிசுகிசுப்பான குரலில், " மூணு நாளுக்கு முன்னால, இதுக்குனே இருக்குர ஸ்பெஷல் டாக்டரப் பார்த்து விஷயத்த சொன்னேன். அவரும் டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு, மருந்து கொடுத்திருக்கார். டாக்டர் பீஸ், மருந்து எல்லாம் சேர்ந்து ஆயிரத்தி ஐநூறு ரூபாய் ஆச்சு. இந்த மாத்திரை என்னைக்கு வேணுமோ அன்னைக்கு காலைல போட்டுக்கணும். அப்புறம் அரைமணி நேரத்துக்கு முன்னால இந்த மாத்திரைய போட்டுக்கணும். அதுதான் இன்னைக்கு நீ ரெடியான்னு கேட்டேன்." என்றான்.

ருக்கு முகம் சிவந்தது. தலையில் அடித்துக் கொண்டு " என்ன கிரகசாரமோ? எல்லாத்துக்கும் மருந்து, மாத்திரை? அந்த காசுல பொண்ணுக்கு கால் சவரமாவது வாங்கியிருக்கலாம்" என்று கோபமாய் சொன்னவள் மாத்திரை கவரை பிடுங்கி அங்கிருந்த பரணில் வீசிட்டு, " கெடந்து அலையாதீங்கோ!" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் போனாள்.தமிழோவியம் தீபாவளி மலர்-2005

13 பின்னூட்டங்கள்:

At Thursday, 03 November, 2005, சொல்வது...

உஷா,

முந்தியே படிச்ச கதைன்னாலும் இன்னொருக்காப் படிச்சேன்.

ரொம்ப நல்லா யதார்த்தமா எழுதியிருக்கீங்க.

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

கதை நல்லாவே இருக்கு! என்னதான் ஹோட்டல் வச்சு பொழச்சாலும், அதுக்கு நேரமில்லாம முடியரதில்லன்னா, எங்கயோ உதைக்கதே! மொத்தத்திலே ஏதோ பாலசந்தர் படம் பாத்த மாதிரி இருக்கு.

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

Hi Usha,

interesting one!!!! but seriously you know what? one of my friend, they were trying for a baby for long and asusual ended up in a fertility clinic.....but the whole thing turned out to be so traumatic for them. In the process of their treatment....they lost the natural libido for each other...and finally decided to stop the whole chaos. Really sad!!

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

இயற்கையா நடக்காத பொழுது இது போன்ற செயற்கையான சிகிச்சைகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. ஆனால் முடிவு சுகமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி. என் தோழி ஒருத்திக்கு ட்ரிப்லெட்ஸ் பிறந்தார்கள். இப்பொழுது குழந்தைகளுக்கு 8 வயது!

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

goodone.thanks.

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 03 November, 2005, சொல்வது...

//"அத்தே! ராத்திரின்னா ஒங்க மகனுக்கு தூக்கம் வந்துடரது. ஹோட்டலுக்கு காலைல போனா பாதி ராத்திரிதானே வரார். இதுக்காக ஒக்கார வெச்சாலும், வந்து... அவரால "முடியர்துலே".. என்ன பண்ணறதுன்னே புரியலை. எப்படியோ ஒங்க வாரிச ஒங்க மடியில போடணும்.//

வெளிகண்டநாதரே, "முடியர்தில்லே" இப்ப புரியுதா? கஷ்டம்...:-) ஏதோ இயக்குனர் சிகரம் ரேஞ்சுக்கு பாராட்டிய்தற்கு நன்றி
துள்சி, இந்த கதையை எழுதி சிலருக்கு அனுப்பியது ஞாபகம் இருக்கு. ஆனந்தவிகடனுக்கு அனுப்பி திரும்பிவந்துவிட்டது :-)
ரம்யா, செயற்கையாக கருத்தரிப்பில் எனக்கு தெரிந்த ஒருவருக்கு கூட இரட்டை பிள்ளைகள்.
ஈனோமீனோ, வருகைக்கு நன்றி
ராதா ஸ்ரீராம், நம்முடைய தனியார் தொலைக்காட்சி புண்ணியத்தில் பணம் பறிக்கும் டூபாக்கூர் டாக்டர்கள் காட்டில் மழை.
குழ்ந்தையிள்ளாதவர்களுக்குதான் அந்த வலி புரியும். எழுதிய பிறகு சென்சிடிவீவ் மேட்டரை கிண்டல் அடிக்கிறோமோ என்று கொஞ்சம் யோசனையாய் இருந்தது.

 
At Friday, 04 November, 2005, சொல்வது...

உஷா
சமீபத்திய காலங்களில் இத்தைகைய விஷயங்கள் அத்தியாவசியம் ஆகிவிடுகிரது. ஜனத்தொகை கூடும் அளவு மலட்டுத்தன்மையும் அதிக அளவில் உள்ளது. மாத்திரை கொடுத்து கருமுட்டை கனிந்து வரும் நேரம், சில நேரங்களில் அகாலமாக இருக்கும். அதைப் பொறுத்து உடலுறவு கொள்ள வேண்டிய நேரத்தையும் , எத்தனை மணிக்கொருதரம் சேரவேண்டும் என்பதையும் விளக்கி நடைமுறைப் படுத்துவதும் உண்டு. குடும்ப சூழல் தர்ம சங்கடத்தை உண்டாக்குவதுபோல் இருக்குமிடங்களில் அதற்கேற்ப மாற்று யோசனைகள் சொல்வதும் தவிர்க்கமுடியாதது. பெண்களின் நிலைமை பரவாயில்லை. ஆனால் ஆண்களின் மனோபாவம் சிறிதளவு சீண்டப்பட்டாலும் அந்த முயற்சி தோல்வியடையும்.
Infertility clinic இல் ஏற்படும் சின்ன நிகழ்ச்சி மூலம் அழகான கதை வடிக்க முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.

 
At Saturday, 05 November, 2005, சொல்வது...

தாணு, பெண் மருத்தவரான நீங்கள் படித்ததற்கு நன்றி. பிள்ளைக்காக எதையும் செய்ய துடிப்பவள், அடுத்த மேட்டருக்கு
ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சாதாரண பெண்ணின் மனநிலையைக் கதையில் கொண்டு வந்ததை யாராவது கவனீச்சீங்களா?
ஆணுக்குத்தான் உடல், மனம் மிக பிரச்சனை இல்லையா?

 
At Saturday, 05 November, 2005, சொல்வது...

>>>>அக்கா, தங்கைன்னு அவள் ஒரு தொடர்கதை சுஜாதா மாதிரி எல்லாரையும் கரையேத்திட்டு, அவர் கல்யாணம் பண்ணிண்டதே லேட்டு.." <<<<<<


>>>>>அவள் மருமகளையும் அழைத்து கழுத்தில் கைவைத்து பரிசோதித்தவள், " கணகணன்னு இருக்கு. போடிம்மா!" என்று அவளையும் ஆசிர்வதித்தாள்.<<<<<

செம நக்கலுங்கோவ், அனால் முற்றிலும் யதார்த்தம்.எவ்வளவு நல்ல மாமியார் ,மருமகளா இருந்தாலும் இந்த ragging மட்டும் ஓயவே ஓயாது போல இருக்கு.

நல்ல கதை

அன்புடன்...ச.சங்கர்

 
At Sunday, 06 November, 2005, சொல்வது...

சங்கர், சொல்லிக்காட்டுவது குத்திக்காட்டுவது போன்ற பேச்சுக்கள் உறவினர்களிடைய காணப்படும் சாதாரண விஷயம் :-) கதையை ரசித்ததற்கு நன்றி

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

உஷா, மிகவும் அருமையாக இருக்கிறது கதை. மிகவும் இயல்பான நிகழ்வுகள்.

எனக்கு ஒரு பழைய படம் நினைவிற்கு வருகிறது. பாடலுக்காக பார்த்த படம். தொலைக்காட்சியில் வந்தது. பார்த்த பிறகுதான் அந்தப் படத்தில் எவ்வளவு பெரிய விஷயத்தை நாசூக்காய்ப் பதித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

படத்தின் பெயர் குமுதம்...இல்லை...இல்லை. மறந்து விட்டது. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் என்ற பாடல் உள்ள படம்.

இருவருக்கும் திருமணம் ஆகிறது. அவன் விபத்தில் ஆண்மையை இழக்கிறான். அதற்குப் பின்? அதுதான் கதையின் முடிச்சு. அவளும் உப்பைக் குறைத்துப் புளியைக் குறைத்து மனதைக் கட்டுப்படுத்துகிறாள்.

இந்த நிலையைக் காணச் சகிக்காமல் மாமியாரும் கணவனும் பேசுகிறார்கள். அவளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் முடிவெடுக்கின்றார்கள். ஆனால் பேச்சில் அவ்வளவு நாகரீகம். சொல்ல வந்ததை அவ்வளவு தெளிவாக, நாகரீகமாகச் சொல்லியிருந்தார்கள்.

கடைசியில் மறுமண ஏற்பாடுகள் நடக்கும். ஆனால் அவள் தற்கொலை செய்து கொள்வாள். அந்தக் காலத்தில் அவ்வளவுதான் சொல்ல முடியும். இருந்தாலும் துணிச்சலான முயற்சி.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

ராகவன், இந்தப் படத்துக்கு எட்டு ஒம்பது வயசுல அத்தை அம்மாவோட போயிட்டு, நல்லா உதை வாங்கினேன். லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிட்டாள் ஹீரோயின். அது நல்லா புரிஞ்சிது. ஆனா அப்புறம் பிழிய பிழிய அழுதுக்கிட்டு இருந்தா :-)
கேள்வி கேட்டா தலைய குட்டு விழுது. இதை மரத்தடி குழுவில் எழுதினேன். அதே கதை கொஞ்சம் உல்டா பண்ணி "கன்னி பருவத்திலே"

 

Post a Comment

<< இல்லம்