Thursday, November 10, 2005

தர்ம சங்கடங்கள்.

நேற்றுப் போட்ட பதிவின் காரணம் திசைமாறிப் போய்விட்டதுப் போல தோன்றுகிறது. தினமலர் வாசகர்கள்
பல நாடுகளிலும் இருப்பதால் தமிழ் பிளாக்ஸ்/வலைப்பதிவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும், இதை ஆரம்பிப்பதும், தமிழ்
தட்டச்சும் கடினமில்லை என்பதையும் எடுத்து சொல்ல வேண்டும் என்பது என் எண்ணத்தில் இட்டேன்.

மேலும் புது வாசகர்கள், தளத்தைப் பற்றி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துமாறும் வேண்டுகோள் வைத்தேன். தினமலரில் பல நாட்களாய் இப்பகுதி வருகிறது. ஆகவே வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி சொல்ல கூச்சமாய் இருக்கிறது. வேறு வழியில்லாமல் சொல்லிக் கொண்டும் இருக்கிறேன்.

இந்த பொதுவில் வாழ்த்துவதில் எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இதன் தொடர்ச்சியாய் நல்லநாள் வாழ்த்துக்கள் அதிலும் எஸ்.எம்.எஸ் மற்றும் ஈ கார்ட் அனுப்புவதும், வந்ததை திறந்துப் பார்ப்பதும் இல்லவேயில்லை. அப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் பர்சனல் டச் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

காரணம் என்னவென்று பார்த்தால், சின்ன வயதில் எங்கள் வீட்டில் பிறந்தநாள், விழாக்கள், பூஜைகள் என்று எதுவுமே செய்ததில்லை. அதே போல என் கணவருக்கும் இதில் விருப்பமிருப்பதில்லை. என் மகளுக்கு முதல் பிறந்தநாள் மட்டும் கொண்டாடினோம். என் மகனுக்கு மூன்றாவது பிறந்தநாள் சென்னையில் இருந்ததால் கொண்டாடினோம். திருமணநாள், எங்கள் நால்வரின் பிறந்த நாட்களை நினைப்படுத்திக் கொள்வதுடன் முடிந்துவிடும். மற்ற பிள்ளைகளின் பிறந்த கொண்டாட்டங்களுக்கு கலந்துக் கொள்ளும் எங்கள் குழந்தைகளிடம், உங்களுக்கும் எல்லாரையும் அழைத்து கொண்டாடலாமா என்றால் இருவருமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். காலையில் எழுப்பும்பொழுது, கொஞ்சம்
அதிகமாய் கொஞ்சுவது மட்டுமே! கோவில் இல்லாத ஊரில் இருப்பதால் கோவிலுக்கு போவது, புதுசு அணிவதும் அவர்களுக்கு பழக்கமில்லாமல் போனது.

எங்கள் கல்யாண நாளுக்கு ஒருமுறை என் கணவர் இரண்டு கார்டன் புடைவைகள் வாங்கிதந்தார். பிறகு ஒரு முறை கடை வாசலில் நிறுத்தி, பிளாட்டின பிரேஸ்லெட் வாங்கிதந்தார். இன்னொரு முறை பிள்ளைகளுடன் சர்ப்ரைசாய் பிறந்த நாள் கேக் வந்தது. அவ்வளவு தான். அதிசயமாய் இருந்ததால், மறக்க முடியவில்லை.

பொதுவாய் பிறந்தநாள் அன்று வயதாகிவிட்டது என்று ஒரு கமெண்ட் வரும். நானும், ஆனாலும் உங்களைவிட நாலு வயசு
சின்னவள் என்பேன். என்ன செய்ய கிழவியானாலும் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்று பெரூமுச்சு விடுவார். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. வேறு நல்ல பெண்ணாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்பேன். ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்ய மாட்டேன் என்பார். அவ்வளவுதான் விசேஷ நாள் கொண்டாட்டம் முடிந்தது. இப்படி குண்டக்க மண்டக்கவென்று பேசிக் கொண்டு இருப்போம்.

சில சமயம் என் உறவினர்கள் போன் செய்து என்ன வாங்கிக் கொண்டாய், சினிமா போகவில்லையா, ஹோட்டலுக்கு போய் சாப்பிடவில்லையா என்றுக் கேட்பார்கள். இல்லை என்னும் பொழுது அவர்கள் நம்ப மறுப்பார்கள் கொண்டாடுபவர்களை குறை சொல்லவில்லை, ஏனோ எங்கள் இருவருக்குமே பழக்கமில்லாமல் போய்விட்டது.

என் அம்மாவும், மாமியாரும் வெட்டிங் டே புடைவை என்று வருடாவருடம் காட்டும்பொழுது, எனக்கு வயதானதும் இப்படி வாங்கிக் கொள்வேனா என்று தோன்றும். அந்த காலத்தில், மிக பெரிய குடும்ப பசுமையில் முழ்கியிருந்த அவர்கள் இருவருமே "வெட்டிங் டே" கொண்டாடியது இல்லை என்பது எனக்கு தெரியும்.

இப்பொழுது சமீபகாலமாய் காதலர்தினம் கொண்டாடும் பெருசுகளும் உண்டு. கார்ட், ரோஜாபூ கொடுத்தல் இவை எல்லாம்
எனக்கு பிராப்தம் இல்லை. என்ன செய்ய ;-)

16 பின்னூட்டங்கள்:

At Friday, 11 November, 2005, சொல்வது...

உஷா,

இனிமே கொண்டாடினாப் போச்சு.
இதுக்கு எதுக்கு ப்ராப்தம்?

இங்கே மனைவியின் பிறந்தநாளை நினைவில் வச்சுக்காத புருஷன்
கடைசியிலே ஃபேமிலி கோர்ட்டுவரை போகவேண்டியதாப் போச்சு.

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

ஏன் துளசி வருத்தமாய் இருக்குன்னு அர்த்தம் வர மாதிரியா எழுதியிருக்கேன்? நான் கொஞ்சம் செண்டிமெண்ட்ஸ் இல்லாத ஆளுங்க.

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

//கார்ட், ரோஜாபூ கொடுத்தல் இவை எல்லாம் எனக்கு பிராப்தம் இல்லை. என்ன செய்ய ;-)

Attn : Eligible Bachelor Club

Message: Beware of Competitor!

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

ஒரு பிப்ரவரி -14-ல் என் வீட்டம்மாவுக்கு ஹேப்பி வேலண்டைன் டே என்று கூறியதற்கு ஒரு நிமிடம் என்னை விழித்துப் பார்த்து விட்டு, இன்னைக்கு பிரதோஷம், கோயிலுக்குப் போகணும் என்று கூறிவிட்டு எங்கள் ஊர் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுக்கு விரைந்தார்.

அன்று முதல் எங்கள் வீட்டில் பிரதோஷமெல்லாம் வேலண்டைன் டேயாகவும், vice versa ஆகவும் உருவெடுத்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

Madam,

Pl. check ur blog's tamizhmanam rating button. It's not fuctioning well.

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

ராம்கி, "நட்சத்திர குத்து" தானே? எனக்கு எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. அதனால் விட்டு விட்டேன்.
டோண்டு சார், தவறாய் நினைக்காதீர்கள். சிறுவயதில் சரி, வயதானவர்கள் "வாலைண்டைன் டே"க்கு புடைவை, எடுத்தேன் நகை வாங்கிக் கொடுத்தார் என்று காட்டினால் அபத்தமாய் தோன்றுகிறது.

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

உஷா,

எனக்கும் இதில் அதிக ஈடுபாடு கிடையாது. ஆனால் இதுவரை/எட்டுவருடமாக திருமணநாள் அன்று விடுப்பு எடுத்து குடும்பத்தோடு சுற்றுவோம்! குழந்தைக்காக பிறந்தநாள் கொண்டாடுவதுண்டு.

ஆனாலும்,
"சின்னச்சின்ன பரிசுகளால் சிலிர்க்கமுடியுமே அதற்காகவேனும்..."

என்று வசனம் பேசமுடியாது. இந்த கார்ட யாரு கேட்டா... நான் அதை வாங்கிக்கவா வேணாமா என்ற கேள்விக்கணை வரும்! அதனால் பெரும்பாலும் மற்ற நாட்கள் கிடையாது:)

துளசிக்கா,

இங்கே மனைவியின் பிறந்தநாளை நினைவில் வச்சுக்காத புருஷன்
கடைசியிலே ஃபேமிலி கோர்ட்டுவரை போகவேண்டியதாப் போச்சு.


இப்படில்லாம் மிரட்டறது டூ மச்...
இருந்தாலும் ஞாபகம் வச்சுக்க ட்ரை பண்ணறேன்:)

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

எல்லாம் மனசுதான் காரணம். மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்பதுதான் முக்கியம்.பல நேரங்களில்
கொண்டாடுவது வெறும் சம்பிரதாயமாக, பகட்டின் வெளிப்பாடாக மாறிவிடுகிறது.
முதலில் ஐ லவ் யு உனக்கு சொன்ன தினம், முதன் முதலில் நாம் பார்த்துக் கொண்ட தினம்
என்று நினைவு வைத்துக் கொண்டு கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்
பொதுவாக பெண்கள் அறுபது வயது நிறைவடைந்தால் அதை கொண்டாதுவது இல்லை.ஆண்கள் சம்பதி சமேதரராக பெரிய அளவில் கொண்டாடுவதுண்டு. என் அம்மாவிற்கு அறுபது வயது ஆன போது அதை சிறிய அளவிலாவது கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடித்து, உறவினர்களை அழைத்துக் கொண்டாடினோம்.

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

முதலையின் படத்தை கொஞ்சம் தெளிவாகப் போட்டிருக்கலாம் :) நல்ல வேளை உஷா நுனிப்புல்லை
கையில் வைத்திருப்பது போல் புகைப்படம் போடவில்லை :)

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

அன்பு, வயசாச்சு என்ன செய்துவது வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று வருத்தமாய் சொல்வதாய் செய்யும் பாசங்கும், காதல்
பார்வையும் கடைசி வரை இருந்தால் போதும் என்று நினைப்பேன்.
ரவி, இவை தேவையில்லை சொல்லும் அதே நேரம், வயதானவர்களுக்கு அவர்கள் கேட்காமல் நாம் செய்ய வேண்டும். நீங்கள் சொல்லுவதுப் போல அவருக்கு அவர் பெற்றோரின் விசேஷ
நாளுக்கு போன் செய்யும் படி ஞாபகப்படுத்துவேன். பிள்ளை தன் வாயால் விசாரித்தான் என்பது ஒரு மகிழ்ச்சி பாவம்
அவர்களுக்கு!
அந்த படம் சுமாராய்தான் வந்தது. ஆனால் பொருத்தமாய் இருக்கும் என்று இங்கு போட்டேன். அடுத்து மலைப்பாம்பு, குரங்கு வகையறாக்களை எடுத்துப் போடட்டா?

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

அடுத்து மலைப்பாம்பு, குரங்கு வகையறாக்களை எடுத்துப் போடட்டா?


உஷா, நீங்கள் சொல்லும் மலைப்பாம்பு யார், குரங்கு யார் என்பது புரிகிறது, படம் போட்டுத்தான்
காட்ட வேண்டும் என்பதில்லை :).

நீங்கள் முன் பிறவியில் முதலையாய் இருந்ததாக நாடி ஜோஸ்யத்தில்
சொன்னார்கள் என்பதற்காகத்தான் முதலையும் படத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்
(யார் என்று கேட்கக்கூடாது -:) ), உண்மையா :).

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

எண்ணங்களின் வெளிப்பாட்டை மனதோடு இராமல் மனிதர்களை சந்தோஷ படுத்த விழாக்கள் விருந்துகள், வாழ்த்துக்கள் வலம் வருகின்றன. பொதுவாக அடுத்தவர்களை சந்தோஷபடுத்தி நாம சந்தோஷபடுறோமே அதுக்குதாங்க வாழ்த்துக்கள். என்னோட வாழ்த்துக்கள் உஷாவுக்கு!

 
At Friday, 11 November, 2005, சொல்வது...

ரவி, நாடி சோதிடமா நானா? எனக்கே தெரியாதே ...:-)
ஜெயகுமார், அன்பை வெளிப்படுத்த வழிகள் உண்டு. ஆனால் இந்த மெட்டீரியல் பொருள்களில் ஏனோ எனக்கு விருப்பமில்லாமல்
போய்விட்டது. வாழ்த்துக்கு நன்றி

 
At Saturday, 12 November, 2005, சொல்வது...

இதை இங்கே சொல்லலேன்னா தலை வெடித்தேவிடும் :-)

//பொதுவாக பெண்கள் அறுபது வயது நிறைவடைந்தால் அதை கொண்டாதுவது இல்லை.//

ரவி, நீங்கள் உங்கள் அம்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடியதுபோல,
சமீபத்தில் ஒரு குடும்ப நண்பரது குடும்பத்தில் வீட்டு தலைவியின் 60 வயது நிறைவை - சஷ்டி ஆப்த பூர்த்தி - விழாவை விமரிசையாக ஹோமம் எல்லாம் வளர்த்து கொண்டாடியிருக்கிறார்கள். எங்களுக்கு வந்திருந்த அந்தப் புகைப்படங்களில் 60 வயதான ( அவர் என்னை விட 7 வயது மூத்தவர் :-) ) என் தோழியின் முகத்தைப் பார்த்தேன். அந்தப் புன்னகையில் இருந்தது பெருமிதமா? ஆச்சரியமா என்று தெரியவில்லை. ஆனால் சந்தோஷம் இருந்தது என்னவோ நிஜம். மிகவும் ரசித்தேன். பெண்களின் ஷஷ்டி ஆப்தப் பூர்த்தியும் இன்று சகஜமாகிவிட்டதோ? :-)

 
At Saturday, 12 November, 2005, சொல்வது...

எங்களைப் போன்றோரின் வாழ்வில், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்காகவாவது இது போன்ற நாட்களைக் கொண்டாடுவது அத்தியாவசியம். Effort எடுத்தால்தான் அதுவே சாத்தியம்.

 
At Monday, 14 November, 2005, சொல்வது...

hi usha,
nothing to do with this post!!!!!

thanks for the link......it is working....but i have to get used to it....practice makes perfect right??!!.....so practicing....

cheers
Radha

 

Post a Comment

<< இல்லம்