Wednesday, March 15, 2006

நாலே நாலுதானா & ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்!

"கிடக்கிறது எல்லாம் கெடக்குது கிழவிய தூக்கி மணையில வையீ" இதுக்கு மீனிங் எல்லாம் கேட்காதீங்க. எங்கப்பாட்டி ஆ, ஊன்னா பழமொழியா சொல்லுவாங்க. அடுத்த திங்கட்கிழமை ஊருக்குப் போக மூட்டைக் கட்டிக்கிட்டு இருக்கேன். இது வழக்கமாய் ஜூலை
ஆகஸ்டு மாதம் செல்லும் விடுமுறை பயணமில்லை. ஏகப்பட்ட குழப்பங்களுடன் ஒரு மாதமாய் பல முறைதள்ளிப் போட்ட அவசர பயணம்.(!) நேராய் கோவைக்குப் போய்விட்டு, பிறகு சென்னை.. அதற்கு பிறகு ஏப்ரல் முதல்வாரம் திரும்புகிறோம். இரண்டு வாரமானாலும் இரண்டு மாத சுற்றுலா என்றாலும் எல்லாமே சுறாவளி பயணம்தான். இந்த இரண்டு வார பயணத்துக்கு பத்து இடங்களுக்கு பட்டியல் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இப்ப எல்லாம் வயசாகுது இல்லையா, வெள்ளைக்காரங்க மாதிரி, கடலோரம் (கஷ்டகாலம் .... இங்கிட்டு பிகினி உடையை மட்டும் மறந்துடுங்க) கைல லெமன் ஜூஸ், புத்தகம், கூலிங்கிளாஸ்ஸோட அக்கடான்னு டெஸ்ட் எடுக்கணும் என்று ஆசை...ஹீம்! பெரூமூச்சு! இது ஒரு திடீர் பயணம் என்பதால் ஏகப்பட்ட குழப்பங்கள், அதனால ஒரு பதிவாவது போடலாம் என்று.... பழமொழியை ஒரு தடவை ஞாபகப்படுத்திக் கொண்டு படிக்க ஆரம்பிங்க.

முதலில் அழைத்த பூங்குழலிக்கு நன்றி. ஆனால் இந்த நாலு விஷயங்கள் எனக்கு ஒத்து வராது. காரணம் விருப்பங்களை நாலில் அடக்க முடியாது. மேலும் விருப்பங்கள் மாறலாம். ஆனால் மனதிற்கு இனியதோ அல்லது பாதிப்போ ஒன்றுதானே இருக்க முடியும். வேற என்ன நான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுதான்.

பிடித்த நடிகர்- எம். ஆர். ராதா ( சீனில் பக்கத்தில் யார் இருந்தாலும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்)

நடிகை- நந்திதா தாஸ் (அவரின் நிறமும், முக அழகும். எந்த மொழி படமானாலும் பொருந்துவருவது ஆச்சரியமான விஷயம்)

பார்த்ததில் பிடித்தது- நல்ல சினிமா மட்டுமே பார்க்க விருப்பம். பல மொழிகளின் படங்களின் பெரிய லிஸ்ட் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். அதில் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை.இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது ஈரானிய படங்கள்.

பிடித்த நகைச்சுவைப் படம்- கலாட்டா கல்யாணம் ( சிவாஜி, நாகேஷ், ஜெ.லலிதாவில் இருந்து தங்கவேலு, சோ, எஸ். கோபாலகிருஷ்ணன் வரை நடிப்பில் அனைவரும் வெளுத்துக் கட்டியிருப்பார்கள். எத்தனை முறை பார்த்திருக்கேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு காட்சியோ வசனமோ தென்படும்)

பிடித்த அரசியல்வாதி- நல்லகண்ணு ஐயா ( அரசியலில் அனைவரும் ஓரே குட்டையில் ஊறிய மட்டைத்தான். ஆனால் இவரின் எளிமையும், நேர்மையை வெளிப்படுத்தும் முகமும் சிரிப்பும் கையெடுத்துக் கும்பிட தோன்றும் ஓரே பெரிய மனிதர்.

படித்ததில் பிடித்தது- மகாபாரதம் (எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. நீதி உபதேசங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பாத்திரங்கள் அனைத்தும் அருமை)

எழுத்தாளர்- கி.ரா ( இதிலும் நிறைய பேர் இருந்தாலும், எதிரில் உட்கார்ந்து பொறந்த கதை, வளர்ந்த கதையை சொன்ன பாட்டியை ஞாபகப்படுத்துபவர். கோபல்லகிராமம், சிறுகதைகள், அந்தமான் நாயக்கர்.... அனைத்துமே எழுத்தாளர் நடுவில் வராமல், பாத்திரங்களுடன் வாசகர்களை ஒன்றிவிட செய்தவர்)

இணைய எழுத்து- நம்ம ஞான்ஸ். என்னத்த எழுதுகிறார் என்றே புரியாது. ஆனா படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டு இருப்பேன். அதுக்கு பின்னுட்டம் விடும் கேஸ்கள் அடிக்கும் லூட்டி :-)))))

பிரமிக்க வைத்த சாதனை - என் சரித்திரம் எழுதிய உ.வே. சாமிநாதய்யரின் அயராத உழைப்பு.

ஆங்கில எழுத்தாளர் - ரோல்டால் ( குழந்தைகளுக்கான கதைகளைப் படிக்க ஆரம்பித்து இவரின் சிறுகதைகள், ஆட்டோபயாக்ரபி என்று தேடி தேடி படிக்க வைத்தவர்)

மொழி பெயர்ப்பு நாவல்- "மூக்கஞ்சிய கனசுகளு" சிவராமகரந்த் எழுதிய கன்னடநாவல். ஞானபீட விருது கிடைத்தது. விவரமாய் பிறகு எழுதுகிறேன். படமாகவும் பார்த்துள்ளேன். (இங்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல் வரும். ஒரு காலத்தில் தமிழில் நாவல்களைவிட தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விருதுகள் வாங்கிய இந்தியமொழி நாவல்களைத் தேடி தேடிப் படித்தேன்)

பிடித்த உறவு - அப்பா (வேறு எந்த உறவும் பிறகுதான்)

ஆச்சரியமூட்டும் விஷயம்- கடவுள் என்ற கான்செப்ட். உலகம் முழுதும் உள்ள மனிதர்களைப் பயமுறுத்துகிறதே அது. அந்த ஒரு சொல்லுக்கு விதவிதமான பெயர்களில் உலகெங்கும் நடக்கும் லாபகரமான வியாபாரங்கள்!

போக ஆசைப்படும் இடம்- இமாலயம் ( ஆனா போனா திரும்புகிற எண்ணம் இல்லை. இது என்ன மொதல்ல கடவுள் உண்டான்னு சந்தேகம் கேட்டுவிட்டு, இமயமலை போக ஆசைப்படுகிறாளேன்னு குழம்புறீங்களா? அதுதாங்க என் கேரக்டர், இல்லாவிட்டால் இந்த இடத்தில் எதுவேணா போட்டுக்குங்க :-)

பார்த்த இடங்களில் பிடித்தது- நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இருந்து பெர்கனுக்கு போன ரயில்பயணம். பச்சை பசுமை, ஒரு இடத்தில் காட்டு குதிரைகள் கூட்டம், ஆறு என்று ஆரம்பித்து முதல்முறையாய் பார்த்த பனிபடந்த இடங்கள், உறைபனி, சூரியகிரணங்கள் பட்டு பனி கட்டிகள் காட்டிய கண்ணை கூச வைத்த (வைர) ஜொலிப்பு.

நட்பு- நாளும் செய்யும் தவறுகளை இடித்துக்காட்டும் கண்ணாடியில் தினமும் பார்க்கும் உருவம்.

பிடித்த பாடல்- மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா?

பிடித்த பாடகர் - ஜெயசந்திரன்

பாடகி- ஜென்சி

பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி- டாம் அன் ஜெர்ரியில் வரும் நாய் ஸ்பைக் (அப்பா), டைக் (மகன்) பாத்திரங்கள் வரும் கார்ட்டூன் தொடர்.

பிடித்த உணவு - தாளித்த தயிர் சாதமும், மாங்காஇஞ்சி ஊறுகாயும் (மாங்காஇஞ்சி என்பது இஞ்சிப் போல இருக்கும், ஆனா மாங்காய் வாசனை அடிக்கும்)

பலம் அல்லது பலவீனம்- யார் சொல்வது என்று பார்க்க மாட்டேன். என்ன சொல்லப்படுகிறது அதில் எனக்கு சரிப்பட்டு வருவதை மட்டும் ஏற்றுக் கொள்வேன். அதன் காரணமாய் பெரியாரின் சிந்தனைகளுக்கும், காஞ்சி பெரியவரின் அருள்வாக்குக்கும் ஓரே இடம் தரமுடிந்தது. இது சரியில்லை என்று நீங்கள் நினைக்கலாம். "நான் சொன்னதால அப்படியே ஏத்துக்காதே! நீ சிந்திச்சிப்பாரு" என்றாரே பெரியார் அதுதாங்க இது :-)

பிடித்த காமடி - முகஸ்துதிகள்.

செய்த தப்புக்கள்- எதுவும் இல்லை

செய்த தவறுகள்- நாளும் செய்துக்கொண்டு இருக்கிறேன் ( தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது)

மறக்க முடியாத விஷயம்- மூன்று வயதில் மகனுக்கு பிளட் கான்சர் என்று சந்தேகப்பட்டு, போன்மேரோ டெஸ்டு உட்பட பல சோதனைகள் செய்து, ஒன்றுமில்லை என்று சொல்லப்பட்ட அந்த மூன்று மாதக் காலம். அப்பொழுது ட்ரீட்மெண்டுக்கு வந்த என் மகன் வயதே ஆன, ஒரு தெலுங்கு குழந்தை. தாய்க்கு தெலுங்கு தவிர எதுவும் தெரியாது. ஏகப்பட்ட தாயத்துடன் சோர்வாய் காட்சியளித்த அந்த குழந்தை இறந்துப் போனது. அன்று கொஞ்சம் நஞ்சம் ஒட்டியிருந்த கடவுள் நம்பிக்கையும் நீர்த்துப் போனது. காரணம், அந்த தாய் பேசும்போது எல்லாம் இந்த சாமி, அந்த பூஜை என்று முழுக்க நம்பியிருந்தார். ஏனோ மனதில் அந்த பிள்ளை பிழைத்தால் என் பிள்ளையும் பிழைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அது நாள்வரை நானாக எந்த வேண்டுதலும், பூஜையும் செய்யாதவள் என் மகனைக்காப்பாற்று என்றுக் கேட்பது சுயநலமாய் இருக்கிறது என்று மனதில் புலம்பினேன். உண்மையில் என்னால் முடியவில்லை. என் குழந்தை பிழைக்க அது ஏன் இறந்தது? இந்த கேள்விக்கு எந்த பதிலும் யாராலும் கொடுக்க முடியாது. வெகு சுலபமாய் போன ஜென்ம புண்ணியம், கர்மா, என்றால் அதையும் ஏற்க முடியவில்லை. வாழ்க்கை என்பது எல்லாம் சுக, துக்கங்களைக் கொண்டது. இரண்டையும் ஓரே மாதிரி பாவிக்க மனம் பழகிக் கொண்டது. ஆனால் இன்றும் என் மகனுக்கு பதினைந்து வயதாகிறது, இன்றும் அந்த நைட் மேர் வந்து பயத்தைத் தரும். ( நடுவில் புதுவை ஆஸ்ரமம், அன்னை மீது பார்வை திரும்பியது. ஆனால் அங்கு பார்த்த ஆடம்பரம், பத்திரிக்கை செய்திகள் சீக்கிரமே புத்தியை சரியான பாதையில்ம்திருப்பியது) இங்கு இன்னொரு விஷயமும் சொல்லிவிடுகிறேன். கடவுளைப் பற்றி எனக்கு எந்த உணர்வும் இல்லை. சின்ன வயதில் இருந்தே கேட்பது என்பது கடவுளிடமானாலும் பிடிக்காது. ஆனால் குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றாலும், நானும் கலந்துக் கொள்வதிலும், வீபூதியும் குங்குமம் தந்தால் வைத்துக் கொள்ளுவதிலும் எனக்கு எந்த குற்றவுணர்ச்சியோ தவறோ என்ற எண்ணம் ஏற்படுவதில்லை.

பெருமை- என் மகனும், மகளும் என்ன தேர்வு, பிரச்சனை என்றாலும் கடவுளை கும்பிடாதது. அவர்கள் இந்த சுயசிந்தனை எனக்கு பெருமைதான். கடவுள் நம்பிக்கையை கேலி செய்ய நான் சொல்லிக் கொடுக்கவில்லை. நம்பிக்கை இல்லை என்பது வெறும் பேஷன் இல்லை. இந்த உறுதியைக் கடைப்பிடிப்பது மிக கடினம். பதினைந்து வயது மகனுக்கு ஏன் உபநயனம் செய்யவில்லை என்று கேட்டால், நாம் பிறந்த சாதி உயர்ந்த சாதி என்பதை பறை சாற்றுவதாக இந்த சடங்கு உள்ளது என்று அவன் மறுக்கும்பொழுது, இது போதும் என்று பெற்ற மனம் நெகிழ்ந்துப் போகிறது. நாளை அவர்கள் மாறினாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். இவைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகள் என்று நினைக்கிறேன்.

பிடித்த ஒரே மதவாதி- கெளதம புத்தர். அவனுக்கு தோன்றிய அனைத்து கேள்விகளும் எனக்கு தோன்றியது. அவன் விடையைத் தேடி அலைந்தான். ஆனால் இது விடையில்லாத கேள்விகள் என்று எனக்கு புரிந்துப் போனது.

மனதைப் பாதித்த விஷயம்- பதினெட்டு வயதில் சொன்ன காதலை அலட்சியப்படுத்தியது. காரணம் நான் பார்த்த காதல்கள் எல்லாம் காதலாகவே தோன்றவில்லை. வீட்டில் பெரியவர்களால் கணக்குப் பார்த்து உண்டாக்கிய காதல், வயது கோளாறு காதல், பொழுதுப் போக்கு காதல், ஒருதலைக்காதல், இரண்டு தற்கொலைகள் என்று எல்லா காதலும் அபத்தமாய் இருந்தன. "காதலர்களை உலகமே காதலிக்கிறது" என்று அமரகாதல்களை போற்றுபவர்கள், நடைமுறை காதல்களை அசிங்கப் படுத்தினார்கள். ஆக காதல் என்பது பெரியதாய் தோன்றவில்லை. பெற்றோர்கள் பார்த்து, கிடைத்த இடைவெளி மாதங்களில் பேசி சண்டைப் போட்டு கல்யாணம் செய்துக் கொண்டு, புது மோகத்தில் மூழ்கி, வருடங்கள் செல்ல செல்ல ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை என்ற பந்தமும் அழகான புத்திசாலி குழந்தைகளும், சுகமான வாழ்க்கையுமாய் நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் பல வருடங்கள் கழித்துப் பார்த்தப் பொழுது தவித்த தவிப்பு, புரியாத புதிர் .அப்பொழுதும் பரிதாபப்படவே முடிந்தது. இப்பொழுதும் குற்றவுணர்ச்சி எதுவும் இல்லை. ஞாபகமும் வராது. ஏனோ இன்று இதை எழுத ஆரம்பிக்கும்பொழுது, உள்ளேன் ஐயா என்று அட்டனஸ் கொடுத்தது.

நான் அழைக்க விரும்பும் ஓரே நபர்- நா. கண்ணன். நடுவில் மறைந்துப் போன கண்ணன், திரும்ப காட்சியளிக்க ஆரம்பித்துள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றையே யோசிக்கும் மனதை திசை திருப்ப, பதிவு போடக்கூடாது என்ற விரதத்தை தளர்த்திக் கொண்டுப் போட்டுவிட்டேன். ஊருக்குப் போவதால், நம்ம பிரண்ட்ஸ் போன் நம்பர் தந்தால் அடிக்கிறேன். நம்ம தயாநிதி மாறன் அவர்களின் தயவில் ஒத்தை ரூபாயில
இந்தியா முழுவதும் பேசலாமே என்று நெனச்சிக்கிட்டு இருக்கேன். போன் நம்பர் வரும் பின்னுட்டத்தை, பப்ளிஷ் செய்ய மாட்டேன் . சரியா? வரட்டா!

20 பின்னூட்டங்கள்:

At Wednesday, 15 March, 2006, சொல்வது...

கலக்கீட்டிங்கள் உஷா.
அவசரமாய் எழுதிய பதிவிலேயே இத்தனை விடயங்கள்.
சுவாரஸ்யமாக இருந்தது.
நல்லபடி பயணத்தை முடித்து வாருங்கள்.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

எஸ்.பாலபாரதி has left a new comment on your post "நாலே நாலுதானா & ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்!":

வாங்கோக்கா.. எனக்கும் கூட பிடித்த நடிகர்களின் பட்டியலில்(தமிழ்) எம்.ஆர்.ராதாவுக்கு முதல் இடம்...

இஜடாக்களின் வாழ்வை மையமககொண்ட நாவல் மீண்டும் எழுத தொடங்கி விட்டேன்.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

i DONT KNOW HOW TO TYPE IN TAMIL. NICE ARTICLE INDEED. WISH U HAPPY AND SAFE VACATION

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உஷா,
நல்லதொரு பதிவு.

பயணம் இனிமையாகவும், நலமாகவும் அமைய வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உங்கள் பிடித்தவைகள் நீங்கள் நுனிப்புல் மேய்வதில்லை, ஆழமான அறிதலில் ஆர்வமுள்ளவர், சமுகாயத்தில் சலனம் ஏற்படுத்தாதவர் எனக் காட்டுகின்றன. தங்கள் பாரத விஜயம் வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

bon voyage சொல்லலாம்; bon trip..?

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

நாமக்கல் சிபி, மடல் கிடைத்தது.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உஷா,

//ஒரு மாதமாய் பல முறைதள்ளிப் போட்ட அவசர பயணம்.(!) //

சந்தோஷமாப் போயிட்டு வாங்க. தமிழ்நாட்டுலே எக்கச்சக்கமா 'வலைஞர்கள்' இருக்காங்களே.
நீங்க 'பிஸி'யாத்தான் இருக்கப்போறீங்க.

ஆமாம்,//லெமன் ஜூஸ், புத்தகம், கூலிங்கிளாஸ்ஸோட அக்கடான்னு டெஸ்ட் எடுக்கணும் என்று ஆசை...//
டெஸ்ட் க்ட்டாயம் எடுக்கணுமா?:-))) என்ன சோதனை?:-))))

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உஷா - இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்.

நானும் ஊருக்குப் போகும் பொழுது வண்டிவண்டியாய்த் திட்டங்களைக் கொண்டு போனேன். போக வேண்டிய இடங்கள் பல இருந்தன. கடைசியில் மூன்று வாரங்கள் மூன்று நொடிகளாக ஓடிப்போயின. ஒரே ஒரு திருப்தி, அந்த மூன்று வாரங்களை என் பிள்ளைகள் இருவரும் ந்ன்றாக அனுபவித்தார்கள். இப்பொழுது அவர்களுக்குள்ளே அதைப் பற்றி பேசிக்கொள்வதைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

Interesting post Usha. did you see my mail

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உஷா! அவசர பதிவுன்னு சொல்லிட்டு கலக்கலா எழுதி இருக்கீங்க. நிறைய இடங்களில் ரொம்பவே மனச தொட்டுடுச்சி..ஊருக்கு போய்ட்டு வாங்க.

 
At Wednesday, 15 March, 2006, சொல்வது...

உஷா....ஜெயச்சந்திரன் எனக்கும் மிகப் பிடித்த பாடகர். அவருடைய பாடல்கள் என்றால் உயிர்.

உங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள்.

 
At Friday, 17 March, 2006, சொல்வது...

அன்பின் உஷா..
நன்றாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்..

உங்கள் எழுத்தின் ஒரு பகுதியை இங்கு பயன் படுத்திக் கொண்டுள்ளேன்..
http://seemachu.blogspot.com/2006/03/18.html

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

 
At Friday, 17 March, 2006, சொல்வது...

சந்திரா, பாலபாரதி, நாமக்கல் சிபி, முத்துகுமரன், மணியன், வெளிகண்ட நாதர், ஸ்ரீதரன், துளசி, தருமி, வெங்கட், ஜிரா, பத்மா, சிவா, திருதுழாய் அனைவருக்கு நன்றி. ஊர் கதை வந்து எழுதுகிறேன்.

ஜிரா, யாருமே "ஜென்சி"யைக் கண்டுக் கொள்ளவில்லையா? மாங்கா இஞ்சி அபிமானிகளும் யாரும் இல்லையா?

துளசி, ரெஸ்ட் டெஸ்ட் ஆகிவிட்டது.
பத்மா மடல் கிடைத்தது.

மணியன் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :-)

வெங்கட், கல்யாணம் ஆனதில் இருந்தே சகட யோகம் ஆரம்பித்துவிட்டது. ஆனா பக்காவா பிளான் போட்டுவிடுவோம். ஜூரம் வந்தால் கூட மாத்திரைப்
போட்டுக் கொண்டு "ரெஸ்டாய்" காரில் பயணிப்போம் :-) ஆனா ஊருக்குப் போகும்போது ஒரு நிறத்திலும்
வரும்பொழுது ஒரு நிறத்திலும் வருவோம். ஹோட்டல் ரூம் என்பது இரவு தூங்க மட்டுமே! அதன்
வாடகையும் மூவாயிரமும் இருக்கும், முன்னூறு ரூபாயாகவும் இருக்கும்.
ஹளபீடு (அரசு விடுதி) இருந்த அறை... மழை ஒழுகி பச்சை பூத்த சுவர்கள்.

சோமநாத்தில் அதைவிட திராபையாய் ஒரு அறை. அன்று கூட்டம் அதிகம் என்பதால் வேறு ஹோட்டல்கள்
எல்லாம் நிரம்பிவிட்டன. ஆனால் இந்த சுத்து சுத்தினால் படுத்தால் அடுத்த நிமிடம் உறக்கம்தான். ஊர் சுற்றல் குழந்தைகளுக்கும் நல்ல பழக்கமானதால் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளுவார்கள்.

சீமாச்சு, நீங்க எழுதியதைப் படித்தேன். ஆனால் இரண்டு பதிவுக்கும் உள்ள தொடர்ப்பு புரியவில்லை.

 
At Friday, 17 March, 2006, சொல்வது...

aththuzhaai has left a new comment on your post "நாலே நாலுதானா & ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்!":

Hi Usha, chennai vanthaal phone pannavum. have a peaceful trip. ungal sindhanai valam melum melum adhikarikka vaazhthukkal.Nunippul meyvathu maadu matra jeevan kalukku kaattum karunai.illiyaa?arogyamaanathu kooda

 
At Friday, 17 March, 2006, சொல்வது...

உஷா:

எதோ உங்க வலையிலும் விழுந்தாச்சு :-) ஜென்மசாபல்யம் ஆச்சு! என்ன கலக்கு கலக்கறீங்க! அது சரி, அழைக்க விரும்பும் நபர் என்றால்? விருந்திற்கா? மெசென்சர் சாட்டுக்கா? தொலைபேசி அழைப்பிற்கா, இல்லை ஊருக்கு கூட்டிப்போய் உங்கள் உலகைக் காட்ட அழைப்பா? துபாய் எனக்கு பிடித்த ஊர் (நாடு) ஓர் நாள் நீங்கள் அழைக்காமலே வருவேன் :-) மாங்கா இஞ்சி எனக்கும் ரொம்பப்பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். சரி ஊருக்கு பத்திரமா போய்ட்டு வாங்க. ரோட கிராஸ் பண்ணறப்ப இடம், வலம், மேல் என்று எல்லா திசையும் பார்த்துவிட்டு கிராஸ் செய்யுங்கள். வந்து மீண்டும் கலக்குங்கள்!

 
At Saturday, 18 March, 2006, சொல்வது...

// ஜிரா, யாருமே "ஜென்சி"யைக் கண்டுக் கொள்ளவில்லையா? மாங்கா இஞ்சி அபிமானிகளும் யாரும் இல்லையா? //

என்ன உஷா இப்படிச் சொல்லீட்டீங்க. உச்சரிப்பு அப்படி இப்படி இருந்தாலு ஜென்சி பாடிய பாட்டுகள்ளாம் நல்ல பாட்டுகள்.

ஒரு பெண்ணின் புகழை ஒழிக்கச் சிறந்த வழி அந்தப் பெண்ணைப் பற்றித் தப்பாகப் பேசுவது என்று சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக ஜென்சியின் வாழ்க்கையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். புகழில் இருந்தவரை அப்படி இப்படி என்று பேசி மூட்டை கட்டி அனுப்பி வைத்து விட்டார்களாம்.

மாங்காய் இஞ்சியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னுடைய அம்மாவும் தங்கையும் அதை வைத்து ஊறுகாய் செய்வார்கள். மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாங்காய் வாடையும் சுவையும் கலந்து இஞ்சி.....அடடா! மாங்காய் இஞ்சித் தொக்கொன்று இருந்தால் தயிர்ச்சோறு தவிர வேறொன்றும் வேண்டேன்னு புலவர்கள் பாடாமைக்குக் கவலைப் படாதீங்க...இதெல்லாம் உண்டவர் விண்டிலர் சமாச்சாரங்கள்.

 
At Wednesday, 26 April, 2006, சொல்வது...

Dear Madam,

Have a comment to make on your article relating to your son's expression regarding thread ceremony. Even though your stand that you respect his own space of thought is laudable , I feel, as a parent, you also have a responsibility to guide them. At least one correction can be thought on the following lines. No where we ( brahmins) feel that thread ceremony is being done because we are "superior" to others- this is my feeling. Of course, we follow our own traditions which some people call as superstititious/rituals ( that is their opinion ! )- they also follow their own rituals. The point that is being highlighted ( atleast tried !) is that we brahmins do not any longer have the superiority complex where as we are still being targetted in all ways and walks of life. Something needs to be done for that and it is people like you( with your flair for writing and educating others) can help to do that.

Regards

 
At Tuesday, 03 November, 2009, சொல்வது...

Usha Madame,

When I was searching my favourite singer Jency `s songs, I could see your blog.

Your favourites are almost my favourites.

I am impressed with

* Your rail journey
* Your pain about your son and feeling about telugu women`s girl
* Opininon about love etc etc

Thank you.

Best regards......
Kannan
9739020131
subhikanna@yahoo.co.in

 

Post a Comment

<< இல்லம்