Monday, February 13, 2006

எனக்கு கிடைத்த காதலர்தின பரிசு

முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். என் கணவருக்கு செண்டிமெண்ட்ஸ் பார்க்க மாட்டார் என்று! பிறந்தநாள்,
கல்யாண நாள் என்றாலும் அதுவும் மற்றொரு நாளே. என்னவேண்டுமோ வாங்கிக் கொள் என்று சென்னையில் இருக்கும்பொழுதே, பதினாலு வருடங்களுக்கு முன்பு கிரெடிட் கார்ட் வாங்கி தந்த மகானுபாவர்.

என் சொந்த, நட்புகளின் வயிற்றிரிச்சலைக் கிளப்பி, நீங்க எனக்கு வாங்கி தந்தீர்களா என்று அவர்கள் குடும்பத்தில்
குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும், ஒரு சாமான் வாங்க,
நாலு முறை யோசிப்பவளிடம் எத்தனை கார்ட்டுகள் இருந்தென்ன லாபம்? இப்பொழுது டெபிட் கார்ட், ஏடிஎம் உட்பட
ஏழெட்டு உண்டு.

ஆக, இந்த கார்ட்டு, ரோசாபூ வகையறா காதலர்தின கொண்டாட்டங்கள் எனக்கு பிராப்தம் இல்லை. பார்த்து செய்யப்பட்ட
கல்யாணம் என்றாலும், அந்தப்பக்கம் பிடித்த பிடிவாதத்தால் கல்யாணம் நடந்தது என்ற விஷயமே பிறகுதான் தெரிந்தது. ஆனாலும் மனுஷன் மகா அழுத்தம். அவ்வளவு சுலபமாக உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். எனக்கு எல்லா விஷயத்திலும் நேர் எதிர். ஆனால் எதிர் எதிர் சுபாவங்களே வாழ்க்கையை இனிமையாக்கும் என்பது சத்தியமான வார்த்தைங்க.

நான்கு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பிரச்சனை. இது "போலி"யின் காப்பி, பேஸ்ட் அல்ல. மிக நேர்மையாய் என்னை குறிவைத்து எறியப்பட்ட ஆபாச மொட்டை கடிதாசி. என்னசெய்வது, படித்ததும் ஆத்திரம் வந்தது. காலையில் என் முகம் போன போக்கைப் பார்த்து விசாரித்தவரிடம் விஷயத்தை சொல்லி, இனி பிளாக்ஸ் எழுதப் போவதில்லை என்று அறிவித்துவிட்டேன்.

இரண்டு நாட்களாய் எதிலும் என்னால் முழு மனதுடன் ஈடுப்பட முடியவில்லை. ஆரம்பம் முதலே தனிப்பட்ட நட்பு வட்டம்
என்று எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. சாட் யாருடன் செய்வதில்லை. சில தோழிகளுடான மெயிலும் மிக குறைந்தளவு. அதுவும் ஆடிக்கு ஒரு நாள்தான். வாழ்த்தை மடல்கள் பரிமாறிக் கொள்வதையும் தவிர்த்துவிடுவேன். என்னுடைய பதிவில் விரும்பிப்படிக்கும் தளங்கள் என்று எந்த பட்டியலும் கிடையாது. அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாசிப்பு அனுபவத்தில் ஓரே இடம்தான்.

இப்படி இருக்க, நேரத்தை செலவழித்து ஒரு ஆவலில் எழுத முற்படும்பொழுது, கோழை ஒன்று மறைந்து நின்று கல்லெறியும்
பொழுது, அந்த ஜென்மத்தை அருவருத்து ஒதுங்கியே போகிறேன்.

மாலை நடைபயிற்சியில் மனசு சரியாகிவிட்டதா என்று அவரே ஆரம்பித்தார். என்னால் முடியவில்லை, திரும்ப திரும்ப
அவமானப்பட முடியவில்லை. எழுத ஆரம்பித்தது வெறும் விபத்தே, எதையும் புரட்ட வேண்டும் என்று நினைத்து எழுதவும்
ஆரம்பிக்கவில்லை. எந்த குருவின் அருளாசியோ, உபதேசமும் செய்யப்படவும் இல்லை. பிளாக் எழுதுவதை நிறுத்திவிட்டு, வேறு இடங்களில் எழுதப் போகிறேன் என்றேன்.

"பெண்கள் முன்னேற்றத்தை தாங்க முடியாதவர்கள் செய்யும் வழக்கமான செயல் இது. இதை எல்லாம் பெரியதாய் எடுத்துக் கொண்டால், அப்படியே முடங்கிப் போக வேண்டியதுதான். எவனோ ஒரு பொட்டைக்கு பயந்து நீ ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும்? கொஞ்ச நாள் ஒத்துப் போடு, ஆனா திரும்ப எழுத ஆரம்பி" என்றார்.

இதெல்லாம் உனக்கு தேவையா என்ன? நிம்மதியா இருப்பதைவிட்டு விட்டு, எழுதி என்ன கிழிக்கப் போகிறே என்று சொல்லியிருந்தால் போதும். அனைத்தையும் ஏறக்கட்டியிருப்பேன்.

வாழ்க்கையில் பலவித பிரச்சனைகளை சந்தித்தப் பொழுதும் அழுகை, கண்ணீர் என்பது மிக குறைவே. இந்த ஆறுதலான
வார்த்தைகள் எதையும் சாதிக்கலாம் என்ற மிகப் பெரிய பலத்தை தந்தது. ஆண்கள் சொல்லலாம் என் மனைவியிடம்
எதையும் மறைக்க மாட்டேன் என்று! ஆனால் பல பெண்கள், கல்யாணம் ஆகி பல வருடமானாலும் தங்கள் பிரச்ச்னைகளை
கணவனிடம் பகிர்ந்துக் கொள்ள தயங்குவார்கள். ஆனால் எனக்கு வந்த ஆபாச மெயிலை காட்டி படியுங்கள் என்று
சொல்லும் அளவு இருக்கும் இந்த புரிதலையும், சிநேகிதத்தையும் நினைத்து மனம் நிறைந்து என் கண்கள் கலங்கின. இதைவிட சிறந்த காதலர்தின பரிசு உண்டா என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்பு போட்ட கருத்துகணிப்பில் எனக்கு கிடைத்தது அனைத்தும் "ஆம்". மதிப்பெண்கள் 0. பின்னுட்டத்தில் கொஞ்சம்சூசகமாய் என் நிலைமையையும் சொன்னேன்.

என்னுடைய பிளாக்கின் பெயரே "நுனிப்புல்"தான். மிகப்பெரிய சிந்தனாவாதியாய் என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. எழுத்தில் மேம்போக்கானது, நுனிப்புல் மேய்க்கிறீர்கள், என்னத்த எழுதுகிறீங்க என்று சொன்னால், எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொள்கிறேன்.

இதை ஏன் பொதுவில் சொல்கிறேன் என்ற கேள்வி எழலாம். முதலில் நானும் அதை ஒதுக்கி தள்ளினேன். ஆனால் நேற்று வேறு சில சந்தேகங்கள் தோன்றின. இப்படி காயப்படுத்தினால் மனதில் வைத்துக் கொண்டு மெளனமாய் அழுதுக் கொண்டிருப்பேன் என்று "தைரியசாலிகள்" நினைக்கலாம். அதனால் மிகவும் யோசித்தே பொதுவில் என் பிரச்சனையை வைத்துள்ளேன்.

பி.கு கட்டாயம் திரும்ப வருவேன். ஆனால் தற்சமயம், என்னுடைய பதிவில் எழுதவோ அல்லது பிறருக்கு பின்னுட்டம் இடும் மனநிலையில் நான் இல்லை. வேறு இடங்களில் எழுதுவதைப் போடும் இடமாய் மட்டுமே என் பதிவு தற்சமயம் இருக்கும்.

26 பின்னூட்டங்கள்:

At Monday, 13 February, 2006, சொல்வது...

//"பெண்கள் முன்னேற்றத்தை தாங்க முடியாதவர்கள் செய்யும் வழக்கமான செயல் இது. இதை எல்லாம் பெரியதாய் எடுத்துக் கொண்டால், அப்படியே முடங்கிப் போக வேண்டியதுதான். எவனோ ஒரு பொட்டைக்கு பயந்து நீ ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும்? கொஞ்ச நாள் ஒத்துப் போடு, ஆனா திரும்ப எழுத ஆரம்பி" //

இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் வாலண்டைன்ஸ் டே பரிசும். இடையே கண்மணி பொன்மணி எதுவும் சேர்க்க வேண்டாம்.

-நண்பர்களும் பரிசுகள் வழங்கிக்கலாம் :) -

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

//"பெண்கள் முன்னேற்றத்தை தாங்க முடியாதவர்கள் செய்யும் வழக்கமான செயல் இது. இதை எல்லாம் பெரியதாய் எடுத்துக் கொண்டால், அப்படியே முடங்கிப் போக வேண்டியதுதான். எவனோ ஒரு பொட்டைக்கு பயந்து நீ ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும்? கொஞ்ச நாள் ஒத்துப் போடு, ஆனா திரும்ப எழுத ஆரம்பி" என்றார்.
//

தங்கள் கணவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியே! சரியான புரிந்து கொள்ளல் இருக்கும்போது தங்களுக்கேன் தயக்கம்!
முன்பை விட இன்னும் நிறைய தொடர்ந்து எழுதுங்கள்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உங்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் இன்னொரு முறை மனநிறைவுடன் எழுத வாருங்கள். அதுவரைக்கும் காத்திருக்கிறோம்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

Usha ,

happy valentine's day!!!!!! c'mon cheer up....Usha what else can i say??....You are an awesome writer who si able to put her thoughts in simple words. I think many have been able to relate to what you say...i just reiterate what your "VALENTINE" said. Iknow how it feels to be targeted with cruel intentions all the time...try to shrug off,go for a drive,listen to Hari Prasad chaurasia,eat a lot of chocolate(mood enhancer!!)and do come back.....

love

Radha

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உஷா உங்க மனசு எந்த அளவு புண்பட்டு இருக்கும் என்று நான் உணர்கிறேன். ஆனா வாழ்க்கையில் மறக்க முடியாதது எதுவும் இல்லை. அது இது போன்றவற்றை விரைவில் மறந்து சீக்கிரமா எழுத வாங்க. இல்லாட்டி உங்களை புண்படுத்தியவின் எண்ணம் ஈடேரிவிடும் அபாயம் இருக்கிறது அப்புறம் இதையே அவன் ஆயுதமாக எல்லாரிடமும் அவன் பயன்படுத்தக்கூடம்.. திரும்பிவாங்க வருவிங்க என்று நம்புகிறேன்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

I am regular visitor of ur blog..Romba arumaiyaai ezhuthukireerkal..Thirumbavum vaanga..Vaazthukkal!

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உஷா அவர்களே,
பெண்களில் மிகப்பெரிய பலவீனம் எது என்று தெரிந்து வைத்திருந்து சரியாகக் குறிபார்த்து அடித்துவீழ்த்தி கர்வப்பட்டுக்கொள்பவர் சிலருண்டு. சிலசமயம் வீழ்த்துவதாய் நினைத்துக் கரைஉடைத்துக் காட்டாற்று வெள்ளம்போல் பொங்கிஓடச்செய்வதும் நிகழ்வதுண்டு. இன்னும் பல சமயம் அவர்கள் வீசும் கற்கள் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கற்களாய்ப் போவதுமுண்டு, நீங்கள் அனுமதியாமல் உங்கள் மனத்தை எவராலும் காயப்படுத்த இயலாது. வழக்கம்போல் தொடருங்கள்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உஷா,

உங்களுக்கேற்பட்ட இந்த அனுபவத்துக்காக வருந்துகிறேன். பழுத்த மரம்தான் கல்லடி படும். கல்லடி பட்டதால் மரம் காய்ப்பதை நிறுத்திவிடலாமா? நீங்கள் ஒதுங்கிவிட்டால் அந்த கேடுகெட்ட ஜென்மத்துக்கு அது வெற்றியல்லவா? தொடர்ந்து எழுதுங்கள்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உஷா

உங்களுக்கு மோசமான பின்னூட்டங்கள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தன என்பதறிய வருத்தப்படுகிறேன்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் ப்ளாக்ஸ்பாட் இல்லாத வேறு இடங்களிலிருந்து பதிவு செய்யலாம். ப்ளாக்ஸம் ல் இன்னும் உறுதியாக தணிக்கை செய்யலாம். பின்னூட்டங்களின் படிகள் ஜீமெயில் முகவரிக்கு அனுப்பவும் வழியுண்டு. அவற்றின் மூலம் மின்னஞ்சல்கள் எங்கிருந்து புறப்பட்டன என்பதை கண்டுபிடிக்க முயலலாம்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

காதலர்(களுக்கு) தின நல்வாழ்த்துக்கள்

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கொரு பின்னூட்டம் வந்தது. முதல் நான்கைந்து வார்த்தைகளைப் படித்ததுமே தெரிந்தது - சாக்கடை கையில் தெரித்தது விட்டது என்று. அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட வாசிக்காது delete செய்தேன். யார் பெயரில் வந்தது என்று கூட பார்க்கவில்லை.

சாக்கடை பட்டதற்காக என்ன செய்வது. சுத்தமாகக் கழுவிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருந்தது -அதை முற்றிலுமாக சட்டை செய்யாதது - திருப்தியாயிருந்தது. அவன்/ அவர்கள் மாறுவார்களோ இல்லையோ நாம் மாறிக்கொள்ள வேண்டியதுதான்.
வாருங்கள்; தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் தயக்கங்கள் அவனுக்கு/ அவர்களுக்கு வெற்றி. அவனை வெற்றியடையச் செய்வதா? வேண்டாமே!

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உங்கள் மனம் புண்பட்டிருப்பதை அறிகிறேன்.வருந்துகிறேன்.காலம் அதற்கொரு மருந்தாகும். உங்கள் எழுத்தும் எண்ணங்களும் சிறப்பானவை. நிறுத்தாதீர்கள்.அதனை வேறிடங்களில் வெளியிட்டு இங்கு மறுபதிவு செய்வதாக இருக்கிறீர்கள். அந்தளவில் நன்றி.

வாசன் கூறுவதுபோல வேண்டுமானால் wordpressக்கு மாறிப் பாருங்களேன். யாரோ ஒருவருக்காக ஆயிரம் பேரை இழக்க வேண்டுமா ?

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

சகோ.உஷா,

போலியின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்மணம் மற்றும் மட்டுறுத்தல் கட்டுப்பாடுகளால் உண்மையில் மணம் பிறழ்ந்து இருக்கிறார்.

நேற்று திரு.டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிட்டதற்காக எனக்கும் ஒரு எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆபாச பின்னூட்டம் இட்டிருந்தார். அவரின் சொற்பிரயோகங்கள் பெரும்பாலும் வீட்டுப் பெண்களை இழிவு படுத்தியே இருந்தன. இதுபோன்ற வசவுகளைப் பொருட்படுத்தினால் நாமும் மனம் பிறழ வேண்டியிருக்கும். ஆகவே பொருட்படுத்தாதீர்கள்.

//எவனோ ஒரு பொட்டைக்கு பயந்து நீ ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும்? //

கோழைத்தனமான ஆண்களை, பெட்டை (பெண்) என்று மெட்ராஸ் பாஸையில் கேள்விப்பட்டிருக்கிறேன்!:). ஆணாதிக்க சொற்பிரயோகமல்ல என்று நம்புவோமாக!

உங்கள் கணவருடனான புரிந்து கொள்ளல் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

சிறில், ( இந்த பெயருக்கு பொருள் என்ன? கிறிஸ்துவ பெயர் என்று தெரிகிறது), நாமக்கல் சிபி, மோகன் தாஸ், நிலா, ராதா, thangs, டி.ராஜ், முத்து, சிங், தருமி சார், சத்தீஷ், சந்தோஷ், மணியன், வாசன், நல்லடியார் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்


வாசன், ஏதாவது செய்து ஆக வேண்டும். முன்பே நீங்கள் சொன்ன யோசனையை நடை முறைப்படுத்தாதது என் தவறு.


நல்லடியார், சென்னை தமிழில் பொட்டை என்ற சொல் ஆணை மட்டுமே குறிக்கும். கோழை/ பயந்தாங்கொள்ளி ஆகிய சொற்கள் இணையாய் சொல்லலாமே தவிர, இதன் பொருள் வேறு. அதே சென்னை தமிழில் பொதுவாய் பெண் என்பதைக் குறிக்க பொட்ட பசங்க, பொட்ட பொண்ணு என்று குழந்தைகளை சொல்வார்கள். இதில் இழிவான பொருள் ஒன்றுமில்லை.

யாருக்கு எதையும் நான் நிரூபிக்க தேவையில்லை என்றாலும், நடந்தது என்ன என்று எல்லாரும் தெரிந்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு போட்டேன். இப்பொழுது இங்கு எழுத முடியாமல் ஒரு சோர்வு. கட்டாயம் மீண்டு(ம்)வருவேன்.

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

அந்த மனம் பிறழ்ந்த போலி டோண்டுவின் செயலால் எல்லாம் அதைரியம் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு கிடைத்தற்கரியக் கணவர் கிடைத்திருக்கிறார். அவர் உங்களுக்கு கொடுத்த வாலெண்டின் பரிசு நிஜமாகவே அற்புதம்தான். அவருக்கும் உங்களுக்கும் என் மனப்பூர்வ ஆசிகள். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான்.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுவாகிய நானே இட்டேன் என்பதற்கு சான்றாக போலி டோண்டுவைப் பற்றிய என் தனிப்பதிவிலும் நகலிடுகிறேன், பின்னூட்டமாக.

பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

மீண்டு(ம்) வருக!

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

உஷா, இந்த மாதிரியான நிகழ்வுகள் யாருக்கும் வருத்தம் தருபவைதான். கவலைப்படாமல் தோன்றுகிறபோது எழுதவும். இவர்களை அலட்சியப்படுத்துவதே எல்லோருக்கும் நல்லது.

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

செலக்ட் பண்ணி குப்பைக்கு அனுப்பிட்டு, சூடா ஒரு டீ அடிச்சுட்டு அடுத்த பதிவு எழுதுவீங்களா.. இதுக்கு போயி..

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

//செலக்ட் பண்ணி குப்பைக்கு அனுப்பிட்டு, சூடா ஒரு டீ அடிச்சுட்டு அடுத்த பதிவு எழுதுவீங்களா.. இதுக்கு போயி.. //

நானும் இதையே சஜஸ்ட் பண்றேன்...ஃபீல் ஆகாதீங்க.....
முன்னாடி வந்தவர் ஜெர்மன் முத்து

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

நீங்கள் மீண்டு(ம்) எழுதுவது தான் உங்கள் கணவருக்கு நீங்கள் திருப்பி கொடுக்கும் காதலர் தின பரிசாய் இருக்கும்.

பொதுவாய் பெண்களுக்கு பிரசவம் தான் இரண்டாம் ஜென்மம் என்பார்கள். ஆனால் நல்ல துணை கிடைப்பது தான் இரண்டம் ஜென்மம் என்று தோணுது.

அதுவே கிடைத்த பின்னால் எதற்காய் கவலை?

(என்னமோ நிறைய கார்டு use பண்ணாம இருக்கதா சொன்னீங்களே.....இங்க வேணா ஒண்ணு அனுப்பி விடுங்க pin நம்பரோட)

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

உஷா., என்னாச்சு? உங்கள் மெயிலில் இதைத்தான் குறிப்பிட்டு இருந்தீர்களா?. எதைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் அல்லது அது பொதுவான அறிவுரை என நினைத்தேன். ஒதுக்கிவிட்டு எழுத வாருங்கள்.

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

ராமச்சந்திரன்உஷா,

இவ்வளவு பேர் உங்கள் வலைப்பதிவில் ஆர்வமாக இருக்கும்போது, நீங்கள் ஒரு மொட்டைக் கடிதத்துக்கு முக்கியம் கொடுப்பது எனக்கு வியப்பு.
மெஜாரிட்டி தான் ஜெயிக்க வேண்டும்.

ஒரு மாற்றத்துக்கு எனது சில கண்டுபிடிப்புகள்.
(நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்).

வாஸ்துபடி,

1.முதலை வாயில் தலை வைப்பது ஒரு கெடுதலான முகப்பு. அதை பூவில் தலை வைக்கும் வண்டாக மாற்றவும்.

2. நுனிப்புல் என்பது ஒரு வளர்ச்சியடையாத நிலைக்கு அடையாளம். எனவே, அதை நாணல் என்று மாற்றிவிடவும்.

3. ராமச்சந்திரன் என்ற பெயருக்குப் பின் வரும் உஷா - சந்திரனின் ஒளியைக் குறைக்கிறது. உஷா என்பதற்கு dawn - (noun)The first light of day and (verb)Appear or develop எனப் பொருள் படுகிறது. எனவே உஷாராமச்சந்திரன் என்று மாற்றிக்கொள்ளவும்.

இந்த வாஸ்து ஆலோசனைக்குத் தட்சிணையாக தினமும் ஒரு பதிவு எழுதவும்.

:-)))

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

சிறில் ஒரு கத்தோலிக்க புனிதரின் பெயர்.

கிரிக்கெட் அம்பயர் ஒருத்தரும் உண்டு.

Lordly என்பது பொருள்

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

Hello Usha,

I am a fanatic Thamizh rasigan. But since I never learnt Tamizh formally, my source of literature, reading, enjoyment -- everything to do with Tamizh is reading Tamizh blogs like yours and Aruna's. I am not particularly a fan of Tamizh magazines because I like to read opinions than "kisu kisu". You have been a prolific writer, and should continue to be one.

Not everyone has the abitlity to write and attract so many readers. This innate quality of yours should not be squandered.

Dont heed to the cowardly acts of people who know only to be disruptive and destructive.

The least and most I can do is to request you to start filling your blog with entries. Please...do!

Thanks,
Karthik

 
At Tuesday, 14 February, 2006, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. இம்முறை பின்னுட்டங்களை பப்ளிஷ் செய்ய தயக்கமாய் இருந்தது. என் ஈகோவை வெளிப்படுத்திக்கொள்கிறேனோ
என்றும் தோன்றியது. சதயம் சொல்லியதுப் போல, பிரசவ வைராக்கியமோ அல்லது சொரி பிடித்த கையோ, எழுதுவது என்பதை நிறுத்த முடியாது :-)

ஆனால் பொதுவில் என் பிரச்சனையை வைத்தப் பிறகு என் மனதிற்கு நிம்மதி வந்தது. வாழ்க்கை பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது . ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிப்பதுப் போல காரியங்கள் செய்தேன்.

என்னைக் குறித்து நானே எழுப்பிக் கொண்ட பிம்பங்கள் தவிடிப்பொடியாகி கண் முன்னால் காட்சி தந்தது. உள்மன பயணத்தில், பல கற்றுதல் இன்னும் தேவை என்று எடுத்து சொன்னது.

அனாமசாய் ஒரு கார்த்திக் எழுதும் மடலுக்கு தரும் இடத்தை ஏன் அதற்கும் தரவில்லை என்ற கேள்வியை எழுப்பியது. பதில் தெரிந்தது, மனம் அமைதியாய் சலனமற்று நிற்கிறது.

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்கள்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியுண்டு"

டோண்டு சார், தங்கமணி, ஜோ, சதயம், கார்திக், முத்து (தமிழினி & ஜெர்மன்), அப்படிப்போடு, ராசா, மனசு, பச்சோந்தி அனைவருக்கு நன்றி (யாரையும் விடவில்லை என்று நினைக்கிறேன்)

சதயம், உங்கள் பதிவைப் படித்துவிட்டு, சொல்கிறேன்.

பச்சோந்தி, நுனிப்புல்லை என்றைக்கும் மாற்றமாட்டேன். முதலைக்கு பதில் மலைப்பாம்பு, புலிகளுடன் இருக்கும் படங்கள் இருக்கு
எடுத்துப் போடட்டா :-))))) ராமசந்திரன் அப்பா பெயர். பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் ராமசந்திரன் உஷா, அதையே எழுத்து பெயராய் வைத்துக்கொண்டேன்.

பர்சனலாய் மெயில் அனுப்பிய நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 
At Friday, 24 February, 2006, சொல்வது...

பிரசன்னா!
பின்னுட்டத்துக்கு நன்றி :-))))
கணிணி சில நாளாய் தகராறு. தாமதமான பதிலுக்கு மன்னிக்க.

 

Post a Comment

<< இல்லம்