Tuesday, February 28, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : முத்துக்கள் மூன்று

என் அம்மாவைப் பெற்ற பாட்டிக்கு திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று தீராத ஆசை. அவர் வாழ்கை கொங்கு மண்டலத்திலேயே கழிந்தது. இருமுறைகள் சென்னைக்கு வந்தாலும் திருப்பதிக்கு யாரும் அழைத்துப் போகாமலேயே அவர் காலம் முடிந்தது. எல்லோருக்கும் அப்படி ஏதாவது ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கட்டாயம் இருக்கும். லடாக், நாகாலாந்து உட்பட இந்தியாவில் பல இடங்களும் பங்களாதேஷ், பாக்கிஸ்தானின் புராதன கோவில்களும், கம்போடியா அங்கோர்வாட் கோவிலும் என் பட்டியலில் உண்டு.

பக்தி மார்கத்தை விடுத்து, பழங்கால கோவில்கள் நம் நாட்டின் சிறப்பையும் செழுமையையும் பறைச் சாற்றுகின்றன என்பது என் எண்ணம். சென்ற ஜூலை மாதம் குஜராத் போக வேண்டும் என்றதும் சோமநாதர் நினைவுதான்.

சின்ன வயதில் படித்த தமிழ் மொழிப்பெயர்ப்பு நாவலான எம்.கே. முன்ஷி எழுதிய குஜராத்தி நாவல் "ஜெய் சோமநாத்", படித்ததில் இருந்து சோம்நாத் கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆவல்.

கஜினி முகமதில் இருந்து, ஒளரங்கசீப் வரை, கோவிலில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தும், கோவிலை பலமுறை அழிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்தெழுந்தது ஜோதிலிங்க வடிவில் காட்சியளிக்கும் சோமநாதர் கோவில். கடைசியாய், லிங்கமும் இடிக்கப்பட்டு இஸ்லாமிய வழிப்பாட்டு தலமாகவும் மாற்றப்பட்ட இக்கோவில் சுதந்திரம் கிடைத்ததும், வல்லபாய்பட்டேல் அவர்களின் முயற்சியில் முழுக்க முழுக்க பொது மக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டு புதியதாய் கட்டப்பட்டது.

நாங்கள் போய் சேரும்பொழுது இருட்டிவிட்டது. ஹோட்டலில் சாமான்களைப் போட்டுவிட்டு வெளியே வந்தால் மின் விளக்குகளில் கோபுரம் பளிச்சிட்டது. கூட்டம் குறைந்திருந்தது. நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள். உள்ளே போய் சோம்நாத்ஜிக்கு வணக்கம் சொல்லி விட்டு, வெளியே வந்தால் அலைக்கடல் அடித்துக் கொண்டிருந்தது. கஜினி முகமதில் இருந்து எத்தனைப் பேர்கள் இந்த செல்வத்தை கொள்ளை அடிக்க இந்த மண்ணில் கால் வைத்திருப்பார்கள்? அலைகள் பேசும் மொழி நமக்கு புரிந்தால், எத்தனை உண்மைகதைகள் தெரிந்திருக்கும்?

அப்படியே சுற்றிவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். திரும்ப காலையில் இன்னொரு விசிட். உள்ளே நுழையும்பொழுது இன்னொரு பக்கத்தில் நிறைய புகைப்படங்கள் கண்ணில் பட்டன. வேண்டிக் கேட்டுக் கொண்டு அந்த பக்கம் போனோம். அனைத்தும் பழைய புகைப்படங்கள். பேப்பர் கட்டிங்குகள். இவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கும்படி வைக்கக்கூடாதா என்ற ஆதங்கம் எழுந்தது.

கோவிலுக்கு பின்புறம், பழைய கோவிலின் இடிப்பாடுகளை வைத்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு அப்படியே மணலில் உட்கார்ந்துவிட்டேன். எத்தனை ரத்தம் சிந்திய இடம்? காலசக்கரத்தின் துணைக் கொண்டு பின்னால் போனதுப் போல இருந்தது.

அடுத்து சென்றது துவாரகா. பகவான் கிருஷ்ணன் உருவாக்கிய நகரம் என்றுச் சொல்லப்படுவது. ஊர் நெருங்க, நெருங்க வெறும் உப்பரித்த நிலங்கள். துர்வாசர் சாபம் என்று படித்த நினைவு. வழக்கப்படி ஹோட்டலில் சாமான்களை வைத்துவிட்டு நகர்வலம் ஆரம்பித்தால், ஊர் மிக வித்தியாசமாய் இருந்தது.

மறுநாள் அதிகாலையில் மீண்டும் கிருஷ்ணன்கோவிலுக்குப் போகும்பொழுது, தெருக்களும், கட்டிடங்களும் கோட்டையும் மதில்களும் கோவிலும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆயர்பாடி கதைகளில் வருமே அதுப் போல ஆண்கள் பளபளப்பான அந்தக்கால கோபாலன் உடையில்! பெண்கள் வழக்கமான குஜராத்தி பாணி உடையில், கையில் பால் சொம்புடன் கோவிலை நோக்கிப் போய் கொண்டு இருந்தார்கள். கடற்காற்றால் அரிக்கப்பட்ட மிக பழைமையான பிரமாண்ட கோவிலும் கோபுரமும். கோலாட்டம் நடந்துக் கொண்டிருந்தது. கைட், ஐந்தாயிரம் வருடம் பழைமையானது என்றார்.

துவாரகாவிற்கு அருகில் "பேட் துவாரகா" என்று கடலில் ஒரு தீவு. இன்னொரு கோவில் ராதாவிற்கு. இவை இரண்டும்கூட மிக பழையவை. அபூர்வ சிற்பங்கள். நின்று நிதானமாய் பார்க்கத்தான் நேரமில்லை.

அடுத்து சென்றது மவுண்ட் அபு. ஊர் முழுக்க எங்கு பார்த்தாலும் ஹோட்டல்கள். கூட்டமான கூட்டம். ஆனால் பார்க்க விசேஷமாய் ஒன்றுமில்லை. ஆனால் குளிர் சுகமாய் இருந்தது. ஜெயின், ராஜஸ்தானி உணவு வகைகள் தரமாகவும் சுவையாகவும் இருந்தன. நான்கு நாட்கள் ஊர் சுற்றியதில் இந்த ஓய்வு தேவையாய் இருந்தது.

மறுநாள் பிரம்மகுமாரிகள் சங்கத்திற்கு ஒரு விசிட், பிறகு அவர்களின் பிரமாண்டமான செயற்கையான பூங்கா. பல வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள். அங்குள்ள வாலண்டியர்களில் பல இளைஞ, இளைஞிகள். சங்கத்தை நிறுவியவரின் புத்தகங்கள், கீ செயின், படங்கள் விற்பனைக்கு இருந்தன. ஒரு ஒளி ஒலி காட்சி வேறு!

மவுண்ட் அபுவில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது "தில்வாரா கோவில்" என்ற ஜெயின் கோவில். கி.முவில் கட்டப்பட்ட, முழுக்க முழுக்க சலவைகல் அற்புதம். பூஜிக்கும் இடம் என்பதால் கேமிராவுக்கு அனுமதியில்லை. ஜைனர்களின் கோவில் என்றாலும் இந்து கடவுள்களே எங்கும். தாமரையும், விதவிதமான மிருகங்களும், பறவைகளும், சக்கரங்களும், கோல வடிவங்களும் ராஜஸ்தானின் சலவைகல்லால் இழைத்திருக்கிறார்கள்.

சில உள்ளறைகளில் ஜைனர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. சிறு பிள்ளைகள் முதற்கொண்டு, பெரியவர்கள்வரை வாயில் துணியைக் கட்டிக் கொண்டு நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.

சுற்றுலா முடிந்து திரும்பும்பொழுது சோமநாத்தும், துவாராகாவும், தில்வாரா கோவிலும் நினைவில் இருந்து நீங்க மறுத்தன. சோமநாத் கோவிலைப் படையெடுத்தவர்களின் கவனம் இந்தக் கோவில்கள் மேல் ஏன் திரும்பவில்லை? படையெடுப்புக்கு முக்கிய காரணம், லிங்கத்தின் அடியில் புதைக்கப்பட்ட செல்வம். " படையெடுப்பின் நோக்கம் கொள்ளை அடித்தல். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இந்து மன்னர்களே இந்து கோவிலை கொள்ளை அடித்தும் உண்டு " சரித்திர பேராசிரியர் ஒருவர் சொன்னது இது.

**********************

http://www.tamiloviam.com

22 பின்னூட்டங்கள்:

At Tuesday, 28 February, 2006, சொல்வது...

"கஜின் முகம்மது சோம்நாத் போன்ற இடங்களில் தான் கொள்ளையடித்த செல்வங்களை ஒரே பயணத்தில் தனது நாட்டிற்குக் கொண்டு செல்ல இயலவில்லையாம். அதன் காரணமாகவே, வருடா வருடம் இந்தியா வந்து படையெடுத்துக் கொண்டிருந்த்தான்" என்று எங்கோ படித்த ஞாபகம். மதனின் "வந்தார்கள், வென்றார்கள்" என்று நினைக்கின்றேன்.

 
At Tuesday, 28 February, 2006, சொல்வது...

சிமுலேஷன், மதனின் தொடரைப் படிக்கும்போது, பல இடங்களில் குஷ்வந்த் சிங்கின் "டெல்லி" ஞாபகம்
வந்ததால் தொடர்ந்து படிக்கவில்லை. சோமநாத்தின் செல்வத்தைப் பற்றி கேள்விப்பட்டது பிரமிப்பை
தந்தது. அந்நாளைய மன்னர்களுக்கு தங்களிடம் இருந்த விலைமதிக்க முடியாதவைகளை சோமநாதருக்கு
காணிக்கையாக்குவதே வழக்கமாய் கொண்டு இருந்தார்கள்.

 
At Tuesday, 28 February, 2006, சொல்வது...

உஷா, நானும் சோமநாதர் கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தரையைத் தொடாத லிங்கம் என்று கேள்வி. அது எப்படிச் சாத்தியம் என்று அறிவியல் விளக்கம் குடுக்க முடியவில்லை. ஆனால் தரையைத் தொடாது...விட்டத்தைத் தொடாது தொங்கும் தூணொன்று பத்மனாபபுரத்தில் உண்டு. அதே போல ஒற்றைக்கல் கரும்பின் நடுவில் ஊசிநுழையும் துளை மேலிருந்து கீழ்வரை உண்டு. இதை நான் கிருஷ்ணாபுரம் கோயிலில் (திருநெல்வேலி அருகில்) பார்த்திருக்கிறேன். இரண்டாம் முறை போன பொழுது...பாதிக்கரும்புதான் இருந்தது. அடப்பபாவிகளா!

தமிழகத்தில் வேறு மாதிரி கதை. மாலிக்காபூர் வந்த பொழுது...கல்யானை கரும்பு தின்றதால் கோயிலை இடிக்காமல் விட்டு விட்டாள் மாலிக்காபூர். ஆனால் கோயில் பூட்டப்பட்டது. பின்னால் விசுவநாத நாயக்கர் காலத்தில் திறக்கப்பட்டது என்று கேள்வி.

எனக்கும் ராஜஸ்தான் குஜராத் சுற்றுலா போக ஆசையுண்டு. ஜூலை மாதத்தில் ருத்திரப்பிரயாகை, வேலி ஆஃப் பிளவர்ஸ் எல்லாம் சுத்திப்பாக்க நண்பர்கள் அழைக்கிறார்கள். இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

 
At Tuesday, 28 February, 2006, சொல்வது...

ஜிரா, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமாய் சோமநாதர் லிங்கம் தரையில்தான் இருந்தது. பயணம் என்பது ரொம்ப யோசிக்கக்கூடாது, யோசித்தால் கிளம்ப முடியாது. நாங்கள் ஒரு விடுமுறை கழிந்ததும் அடுத்த விடுமுறைக்கு பிளான் செய்ய ஆரம்பித்துவிடுவோம் :-)
இந்த முறை தென் தமிழகம், இன்னும் மதுரையே பார்த்ததில்லை. மதுரை திருநெல்வேலி,ராமேஸ்வரம்,கன்னியா
குமரிவரை திட்டம் உண்டு.

 
At Tuesday, 28 February, 2006, சொல்வது...

சோமநாதபுரம் பற்றி சரித்திரம் படித்ததோடு சரி. ஆனால் சரித்திர சிறப்பு வாய்ந்த இடங்களில் நின்றுகொண்டு அதன் பழைய வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது ஒருவிதமான உணர்வு தோன்றுவதுண்டு. உங்களுக்கு அப்படி ஏதாவது தோன்றியதா?
தென் தமிழகம் வரும்போது ஈரோடும் உண்டு என்று கொள்கிறேன்!!

 
At Wednesday, 01 March, 2006, சொல்வது...

நான் சமீபத்தில் அலுவல்காரணமாக ஜாம்நகர் சென்றபோது துவாரகை,பேட் துவாரகை சென்றுவந்த அனுபவங்கள் நினவுக்கு வருகின்றன. பழைய துவாரகை கடலில் முழுகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று துவாரகையில் உள்ளது.

//அதுப் போல ஆண்கள் பளபளப்பான அந்தக்கால கோபாலன் உடையில்!//
ஆம், ஜாம்நகரில் கூட பால்காரர்களை அந்த உடையிலேயே காணலாம்.

 
At Wednesday, 01 March, 2006, சொல்வது...

தாணு. அதுதான் "காலசக்கரத்தின் உதவியால் பின்னோக்கி பயணித்த உணர்வு" என்று சொல்லிட்டேனே :-)
ஆனா, ரெனவேஷன் செய்கிறேன் என்று பழமையைக் கெடுக்கிற மனோபாவத்தை என்ன சொல்ல?
சபர்மதி ஆசிரமம், டைல்ஸ்சும், மார்பிளும், கிரானைட்டுமாய் ஜொலிக்கிறது. பச்சை புல்வெளி,
குரோடன்ஸ், கத்தரிக்கப்பட்ட செடிகள் மற்றும் நட்ட நடுவில் நீச்சல் குளம் போல ஒன்று கட்டிக்
கொண்டு இருந்தார்கள். என்னவென்று விசாரித்தால் அங்கு செயற்கை நீரூற்று வரப் போகிறதாம் :-(

ஈரோடு, கோவை பயணம் கட்டாயம் உண்டு.

மணியன், முக்கியமானதை விட்டு விட்டேன். என்பீல்டு புல்லெட் போன்ற மோட்டார் பைக்கில் பின் சீட் கழற்றப்பட்டு, அதில் பத்து இருக்கை கொள்ளளவில் சின்ன வண்டிப் போல செய்து, கனம் தாங்காமல், முன் பகுதி குதிரை போல தூக்கிக் கொண்டு, கடகடவென்று சத்தமிடும் விசித்திர வண்டி. பேரூ என்ன மறந்துப்போய் விட்டேன்?
துவாரகை கிருஷ்ணர் கோவில் மிக பழையதாகதானே இருந்தது?

 
At Wednesday, 01 March, 2006, சொல்வது...

படங்கள் ஏதாவது இனைத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உஷா!

 
At Wednesday, 01 March, 2006, சொல்வது...

வண்டி பெயர் "பட் பட்டி" என்று நினைக்கிறேன். இன்னும் மதுரை பார்க்கலயா? மலயாளத்தில் சொல்வார்கள் "முற்றத்து முல்லைக்கு மணமில்லை" என்று.

எங்க மீனாட்சி அம்மன் கோவிலை பாருங்க முதல்ல.

எனக்கும் அப்படி தோன்றுவதுண்டு-பக்தி விட்டு- ஒரு ஒரு கோவில் பார்க்கும் போதும்.

கிரேன் இல்லை,சிமென்ட் இல்லை,பம்ப் இல்லை எப்படி இவ்வளவு உயர கோபுரங்கள் கட்டினார்கள் என்று.

சிமுலேஷன் அது மதனின் வந்தார்கள் வென்றார்கள் தான். 16 முறை தோற்று 17வது முறை வென்றான் கஜினி என்பது தவறு, அத்தனை முறையும் செல்வத்தை கொள்ளை அடிப்பதே அவனது குறிக்கோளாய் இருந்தது என்று சொல்லியிருப்பார்.

 
At Wednesday, 01 March, 2006, சொல்வது...

சதயம், படங்கள் இருக்கிறது, போடுகிறேன்.

மனசு, சில சமயம் அப்படி ஆகிவிடுகிறது. ஏனோ மதுரை பக்கம் போகமுடியவில்லை. அந்த பக்கம் உறவுகளும் இல்லை என்பதாலும் இருக்கலாம். மற்றப்படி மதுரை மல்லியின் மணம் நினைவில் வந்து வந்து போவதுதான்.
கஜினி முகமது அள்ளிக் கொண்டுப் போவதற்கே பதினெட்டு முறை வந்தது. சோமநாதர் கோவில் சுபிட்சியத்துக்கு அடையாளமாம். அத்னால் ராஜபுத்திரர்கள், குஜராத்தியர்கள் விலைமதிப்பில்லாத காணிக்கைகளை தந்தால் இன்னும் வளம் பெறுவோம் என்று நம்பினர்.

அந்த வாகனத்தின் பெயர் வேறு என்னவோ என்று நினைவு!

 
At Thursday, 02 March, 2006, சொல்வது...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

 
At Thursday, 02 March, 2006, சொல்வது...

That modified bullet vehicel is called Chakada, if I am right. I used to travel in that to go to the remote ports like Mundra, Dahej during my visit to Gujarat.

 
At Tuesday, 07 March, 2006, சொல்வது...

that dress you described was the traditional dress of Gujarathi maldhari people, and they are very much devoted to Bagvan Sri Krishna. In Gujarat people used to say Jai Krishna as we used to say hello to new people. In each and everything they used to call Jaikrishna, as the Jairamjiki used to tell by most of the North Indian people. In my view it seems to be a good omen,and a good habit also which we also learn from them.

 
At Tuesday, 07 March, 2006, சொல்வது...

just now i remembered about the Bhet Dwaraka, which I forgot to say in the previous comments. Aactually it is SriKrishna and all his family members' summer resort. From there you can identify the Archeological Department's work about the original Dwaraka. There is no Radha Mandhir in Dwaraka instead there is one Rukmini Mandhir where you can get pure and sweet drinking water. Rukmini got some sabam from Durvasar so she came alone for some days to spend her days without Krishna and for her drinking purpose Krishna pressed his foot in the sand and get pure water and the other places in Dwaraka will not get that type of water due to Durvasar's sapam.You can see Radha's Mandhir in Mathra and Brindhavanam only.Bet Dwaraka used to call his Rajasaba and the Darshan there used to call Raja Dharsanam.

 
At Tuesday, 07 March, 2006, சொல்வது...

செந்தில், "சக்கடா" தான். எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.

கீதா, நாங்கள் வட இந்தியாவில் சில வருடங்கள் இருந்திருக்கிறோம். ஆனால் பொதுவாய் பெரும்பாலோர் "நமஸ்தேஜி" மட்டுமே சொல்ல கேட்டிருக்கிறேன். மற்ற விவரங்களுக்கு நன்றி.

துவாரக கோவில் நிர்வாகிகள், (சிதம்பரகோவிலைப் போல) குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே
நிர்வாகிப்பதால், கோவில் வளாகத்தில் சீருடைபோல அந்த பளபளா உடையை அணிவார்கள் என்று
ஹோட்டலில் சொன்னார்கள்.

மறுமொழி தமிழ்மணத்தில் தெரிய மிகுந்த தாமதமாகிறது. ஏன் என்று தெரியவில்லை.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

we used to live in Rajasthan and Gujarat for 13 to 14 years and so we are very much associated to the culture and habits of both the states.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

கீதா, உங்கள் அனுபவங்களை உங்களுடைய பதிவில் விவரமாய் எழுதுங்களேன். நாங்கள் துவாரகையில் இருந்தது, ஓரே ஒருநாள் மட்டுமே!
விசிட் அடிப்பவர்களுக்கும் அங்கேயே இருந்துப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது இல்லையா?

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

I am trying my blog to change into tamil. After thaat i'll write it in Tamil lbecause it will be easy for me to express my feelings.

 
At Thursday, 09 March, 2006, சொல்வது...

dwaraka paarthadhillai. aanal mount abu vil oru ambaji kovil (gugai kovil) romba arpudhamaaga irukkum. neengal sonnadhu pol Dilwara vum kannukulle nirkiradhu. Nadh dwara poi irukireergala... Srinathji endru krishnan nai sollvaargal.. kaiyil saatayudal romba cute aa iruppar krishnar... udaipur ilirundu kitta... malai mel irukkum kovil.

 
At Sunday, 09 April, 2006, சொல்வது...

"" படையெடுப்பின் நோக்கம் கொள்ளை அடித்தல். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இந்து மன்னர்களே இந்து கோவிலை கொள்ளை அடித்தும் உண்டு " சரித்திர பேராசிரியர் ஒருவர் சொன்னது இது".

"கடைசியாய், லிங்கமும் இடிக்கப்பட்டு இஸ்லாமிய வழிப்பாட்டு தலமாகவும் மாற்றப்பட்ட இக்கோவில்..."

இரண்டு கேள்விகள்:

1. நோக்கம் கொள்ளை மட்டும் என்றால், லிங்கம் இடிக்கப்பட்ட காரணம் என்ன? (அத்ற்குப் பிறகு அந்த லிங்கத்திற்கு என்ன ஆயிற்று என்று அந்த சரித்திரப்பேராசிரியர் சொன்னாரா?)

2. இந்து மன்னர்களே இந்துக்கோவில்களைக் கொள்ளையிட்ட சரித்திர நிகழ்வுகளையும் வெளியிட்டு அதே சமயம், இந்து மன்னர்கள் கோவிலையும் வழிபாட்டுக் குறியீடுகளையும் இடித்தார்களா எனவும், மற்றும் அதனை சமயக் கடமையாகப் பெருமை பீறிட பதிவு செய்தார்களா என்பதையும் கூட அந்த சரித்திரப் பேராசிரியர்டம் கேட்டுச் சொன்னால், இந்த ஒப்பு காணலுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

ஒரு கருத்து:

இரண்டாம் உலகப்போரில் யூதர்களின் படுகொலைகளை இன்னமும் மறக்காமல், anti-semitic கிறித்துவர்களுக்கோ, nationalist ஜெர்மானியர்களுக்கோ சங்கடம் தரும் என்று இருட்டடிப்பு செய்யாமல், அந்த நினைவுகள் கவனமாகத் திரட்டப்பட்டு, படிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. பாடத்திட்டதிலும் சேர்க்கப்படுகின்றன. இதனைப்போன்ற தவறுகள் இனியும் நிகழாமல் இருக்க, holocaust நடந்த இடங்கள் நினைவகங்களாகக் காக்கப்படுகின்றன. நம் நாட்டிலோ சரித்திரப்பூசணிக்காயை போலி மத சார்பின்மை என்ற பிடி சோற்றில் மறைப்பது fashionable முற்போக்குப் பொழுதுபோக்காகி விட்டது. Those who forget history are condemned to repeat it என்பது நினைவுக்கு வருகிறது.

 
At Tuesday, 11 April, 2006, சொல்வது...

நண்பர் அருணகிரி ஒரு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். குஜராத்தில் நாங்கள் பார்த்த சரித்திர பேராசிரியர் சொன்னதைக் கேட்டு, பிறகு கூகுளிலும் ஆராய்ந்து கிடைத்த விஷயங்களை வைத்தே, "இந்து மன்னர்களும் கோவில்களை இடித்துள்ளார்கள்" என்ற வரிகளை எழுதினேன்.

தென் நாடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலும் ஜைனமும், பெளத்தமும் அழித்தொழிக்கப்பட்டது. துறவிகள் கழுவேற்றிய, தலை துண்டித்த சம்பவங்கள் நாடெங்கும் நடைப்பெற்றன. விகாரங்கள், இந்து கோவிலாய் மாற்றப்பட்டதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதற்கு காரணம் முழுக்க முழுக்க மதவெறியாகவே தோன்றியது.

ஆனால் இந்து மன்னர்கள், இந்து கோவிலை அழிக்க காரணமாய் சொல்லப்ட்ட கருத்து கொள்ளையடித்தல். படையெடுப்பின் வெற்றி என்பது கொள்ளையடித்தும், எதிரி நாட்டை தீக்கிரையாக்கியும் தன் பலத்தை நிரூபிப்பது. கோவிலில் மூல விக்கிரங்களின் கீழ் பொன்னும் மணியும் இடுவது வழக்கம்,
அதை கொள்ளையடித்துவிட்டு சிலைகளை வழிப்பாட்டுக்கு தங்கள் நாட்டுக்கு கொண்டுவருவதும் உண்டு. நம் பல்லவ மன்னன் நரசிம்மன், வாதாபிகணபதியை தூக்கிக் கொண்டு வந்த கதை தெரியும்தானே! மற்றும் சிலைகள் பொன்னால் வடிக்கப்படுவது உண்டு. கூகுளில் கிளிக்கி பாருங்கள், கதைகள் கிடைக்கும்.

ராமானுஜர் சோழ மன்னனிடமிருந்து தப்பித்து கர்நாடகாவில் மேலக்கோட்டையில் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இது சைவ, வைணவ சண்டையின் விளைவு.
சோமநாத் ஏழுமுறை அரபியர்களாய் கொள்ளையடிக்கப்பட்டு கோவிலும், லிங்கமும் சின்னாமின்னமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட அக்கோவிலின் பழைய சிதைந்த சரித்திர சின்னங்கள், கோவிலுக்கு பின்னே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு பிறகு அங்கு தொழுகை நடத்தப்பட்ட மசூதியை அப்புறப்படுத்திவிட்டு முழு கோவிலும் வல்லபாய்பட்டேல் அவர்களால் எழுப்பப்பட்டது. இவை எல்லாம் சரித்திரம் என்று பாட புத்தகத்தில் வைத்தால், அதைக் கொண்டு மனிதர்களின் நம்பிக்கையை தூண்டி குளிர் காய்வது நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. சோமநாத்திற்கு சென்றால் அங்கிருக்கும் புகைப்பட கண்காட்சியை கட்டாயம் பாருங்கள். உங்கள் கேள்விகளுக்கு
சரியாய் பதில் அளித்துள்ளேனா?

 
At Thursday, 13 April, 2006, சொல்வது...

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நம் நாட்டு fashionable மதச்சார்பின்மைவாதிக்கு இலக்கணமாக, வாதாபி கணபதியை நரசிம்மன் வழிபாட்டிற்காகக் கொண்டுவந்ததையும், லிங்கத்தை கஜினி சொந்த நாட்டு மசூதியில் படிக்கட்டாக வைத்து அனைவரையும் மிதித்துப் போகச்செய்து அவமதித்ததையும் ஒன்றென்று ஒப்பிடுகிறீர்கள்.

இந்து மன்னர்கள் (நரசிம்மன், மஹேந்திரன், ராஜராஜன் உட்பட) சமண புத்த விஹாரங்களை இடித்து அழித்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இயற்கை அழிவில் சிதிலப்பட்டுப்போன விஹாரங்களைச் சீர் செய்ய பல்லவன் மானியம் வழங்கிய வரலாறு உண்டு.

ஆப்கானிய மற்றும் முகலாய மன்னன் ஒவ்வொருவரது படை எடுப்பிலும், இடிபட்ட வழிபாட்டுத்தலங்களிலும், விளைவித்த அழிவிலும், மத ரீதியான பெருமிதமும் நியாயப்படுத்துதலும் பின்புலமாக இருந்தது அவர்களாலேயே பெருமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஜைனமும் பவுத்தமும் அழித்தொழிக்கப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக எழுதி விடுதல் விளக்கமன்று. ஜைனமும் புத்தமும் கடுமையான லவுகீக மறுப்பு வாழ்க்கை உள்ளிட்ட பல காரணங்களினால் வெகுஜன மதமாக வளர முடியாமல் அரண்மனை மற்றும் விஹாரங்களில் அடையுண்ட மதமாகவே இந்தியாவில் இருந்தது. (சீனாவில் அது வெகு ஜன மதமாக அறிமுகமானது; அரச அடக்குமுறையையும் சந்தித்தது; ஆனாலும் வளர்ந்து, பலவாறு மாறி, வாழ்கிறது- வெகுஜன மதமாக இருந்த காரணத்தால்). மட்டுமன்றி, இந்தியாவின் சனாதன மதம் மக்கள் விரும்பிய புத்த நம்பிக்கைகளை (அஹிம்சை, உயிர்க்கொலை தவிர்த்தல்) மீட்டெடுத்து உள்வாங்கத்தொடங்கியதால், புத்தத்தின் தனித்தன்மை எடுபடாமல் போனது. இந்தியாவில் Royal patronage-ஐ மட்டும் நம்பியிருந்ததால் 8-ஆம் நூற்றாண்டு தொடங்கி நடந்த பல வேற்றுமத படையெடுப்புகளிலும் பாதிக்கப்பட்டு புத்தம் மறையத்தொடங்கியது. மற்றபடி புத்தர் சிலையை உடைத்து இந்துகோவில்களில் படிக்கட்டாகப்போட்டு அவர்கள் வாயில் மாமிஸம் ஊட்டி அவர்கள் மேல் வரி விதித்து இந்து மதம் வளரவில்லை. மிக முக்கியமாக புத்த மதத்தை அழிப்பதை சமயக்கடமையாக எந்த மன்னரும் பெருமை பீறிட பதிவும் செய்யவில்லை.

"படையெடுப்பின் வெற்றி என்பது கொள்ளையடித்தும், எதிரி நாட்டை தீக்கிரையாக்கியும் தன் பலத்தை நிரூபிப்பது"

ஆமாம், ஆனால் அந்த நாட்டு வழிபாட்டுத்தலங்களை மதக்கடமையாக இடித்தழித்து, மாட்டு ரத்தம் கொட்டி, வாதாபி கணபதியையோ, போதிசத்துவர் சிலைகளையோ மிதித்து தன் பலத்தை யாரும் நிரூபிக்கவில்லை.

ராமானுஜரை விரட்டிய சதிக்குப்பின் இருந்தது ஒரு வைஷ்ணவ மந்திரி என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

சரித்திரம் சொல்லப்பட்டால் அதை ஒருவிதமாக அரசியல் செய்வார்கள் என்றால் அதை சொல்லாவிட்டால் அதை இன்னொரு விதமாக அரசியல் செய்வார்கள். வரலாறு என்பது உண்மைகளின் பதிவாகத்தான் பார்க்கப்பட வேண்டும். அதற்குத்தான் நான் holocaust-ஐ உதாரணம் காட்டினேன். இதையே வேறு விதமாகவும் பார்க்கலாம். நமது பாடப்புத்தகங்களில் ஆர்கிமிடிஸ் படித்திருக்கிறோம், பாணிணி படித்திருக்கிறோமா? தப்பாய் பிரபஞ்ச விதி சொன்ன டாலமி தெரியும். ஆனால் சரியாய்ச் சொன்ன ஆர்யபட்டரையொ பாஸ்கராச்சாரியாரையோ எவ்வளவு தெரியும்? Newton-கு முன்பே sine and cosine functions சொன்ன மாதவரைப் பற்றி அடிக்குறிப்பாவது உண்டா நம் பாடங்களில்? ஏன் என்று யோசித்துப்பாருங்கள், நீங்கள் சொன்ன அதே காரணம்தான் இதற்கும் சொல்லப்படுகிறது.

ஆக இந்த மண்ணில் தோன்றிய பெருமிதம் கொள்ளவைக்கும் விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, சமூக அவலங்கள் நம் கலாசாரக்கூறாக வெளிச்சம் போடப்பட்டு, பிற கலாசாரப்படையெடுப்புகளின் கொடுமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டால் அது அப்பழுக்கற்ற முற்போக்குவாதம், அரசியலற்ற கல்வி முறை இல்லையா? இது சிறுபான்மையினருக்குச் செய்யும் அநீதி என்றே நான் சொல்வேன். ஆம், பாபரோ தைமூரோ கில்ஜியோ இங்குள்ள மதச் சிறுபான்மையினருக்கு ஆதர்ஸம் அல்ல. அதனை வலியுறுத்தாது அவர்கள் மனம் புண்படும் என ஒரு போலிக்காரணம் காட்டி உண்மையை ஒளிப்பது, அறிவார்ந்த அணுகுமுறை அல்ல, ஓட்டு வங்கியை மனதில் கொண்டு நோட்டுப்புத்தகம் எழுதும் அரசியல் அணுகுமுறை. இந்திய நாட்டை ஒன்றாக இணைய விடாமல் செய்யும் மத அரசியலுக்குத்தான் இது துணை போகிறது.

 

Post a Comment

<< இல்லம்