Friday, February 24, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : தீதும் நன்றும் பிறர் தர வாரா

வாராந்திர சாமான்களை வாங்கி வண்டியில் வைத்துவிட்டு, அப்படியே கடற்கரைக்கு வந்து நடக்க தொடங்கினோம். இங்கு ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டும் கடல் ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி இருக்கும். ஒரு நாள் குட்டை போல அமைதியாய் இருக்கும், சில நாட்கள் சின்ன சின்ன அலைகள் எழும்பி எழுப்பி மறையும். சிலசமயம் சாதாரணமாய் அலை அடிக்கும்.

ஆனால் சில நாட்களோ அலைகள் பெரியதாய் எழும்பி நடைப்பாதை, அதற்கு அடுத்த புல்வெளியையும் தாண்டி, இருநூறு மீட்டர் தொலைவில் உள்ள சாலையையே முழுக அடிக்கும். அதைக் கட்டுப்படுத்த பெரிய கற்களை அரணாய் போட்டு இருக்கிறார்கள். இன்று சாதாரணமாய் அலைகள் புரண்டுக் கொண்டு இருந்தன.

பேசாமல் வேகமாய் கால்கள் நடந்துக் கொண்டிருந்தாலும், அரைமணிநேரத்திற்கு முன்பு சந்தித்தவருடன் நடந்த உரையாடல்கள் மனதில் திரும்ப வந்தன. ஒவ்வொரு மனுஷ பிறவியும் ஒவ்வொரு தினுசு. வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானத

அந்தம்மாள் சாதாரண பழக்கம் மட்டும்தான். பெரிய பெண்ணுக்கு நல்ல படிப்பு, வேலை. கல்யாணமும் நல்ல இடமாய் அமைந்துவிட்டது. அடுத்த பிள்ளை, அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்கிறான். பெற்றோர்களுக்கும் அங்குப் போய் செட்டில் ஆகும் எண்ணம் உண்டு.

வெகு சாதாரணமாய் நலம் விசாரித்ததும் ஆரம்பித்துவிட்டார். என்ன வியாதி என்றே புரிப்படாமல், உடல் உபாதைகளால் அவதிப்படுவதாகவும், பல்வேறு சோதனைகள் செய்தும், மருத்துவராலேயே கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றுவர் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் உறவினர்களின் கண் திருஷ்டி என்றவர், அதற்கும் பரிகாரமும், ஊரில் ஹோமமும் செய்யப்பட்டுவிட்டது என்றார். அவர் சொல்ல சொல்ல அவருடைய பிரச்சனை என்னவென்று ஓரளவு புரிந்தது. இவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இந்த நோய் உள்ளது. இவர்களின் ஓரே பிரச்சனை, கவலையில்லாத வாழ்வு. பொழுது போகாமல் கவலையை உருவாக்கி, இல்லாத நோயை கற்பனை செய்துக் கொள்கிறார்கள்.

தினமும் பூஜை, சுலோகங்கள் மற்றும் பாகவதம், சுந்தரகாண்டம் படிப்பதாகவும், ஆனாலும் பகவான் ஏந்தான் இப்படி சோதனை செய்கிறாரோ என்று தெரியவில்லை என்று புலம்பினார். இதற்கே காலையில் கணிசமான நேரமாகிவிடுவதால், சமையலுக்கு என்று ஒரு பெண்ணை ஊரில் இருந்து அழைத்து வந்துவிட்டதாகவும் கூறினார். சாதாரண பழக்கமானவர்களிடம் வீட்டு விவகாரங்கள் அனைத்தையும் ஒப்பிப்பது, பல பெண்களின் வழக்கம் என்றாலும், தோன்றும் புன்னகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

தொலைக்காட்சியில் காட்டப்படும் ஜாதகம், ஜோசியம் நிகழ்ச்சிகள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். போதாதற்கு அவருடைய தந்தை மிக சிறந்த சோதிடராம். இவருடைய உடன்பிறப்புகள் அனைவருக்கும் வாழ்நாள் பலன் கணித்து எழுதிவிட்டுப் போய் சேர்ந்து விட்டாராம். ஒவ்வொன்றும் அவர் எழுதி வைத்தப்படியே நடக்கிறது என்றார். ஒருவேளை தந்தை எழுதியதைப் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டார்களா என்றுக் கேட்ட தோன்றியும் கேட்கவில்லை.

எதற்கும் துபாயில் மிகப்பிரபலமான வெல்கேர் ஹாஸ்பிடலில் ஒருமுறை மாஸ்டர் செக்கப் செய்துக் கொண்டுவிட்டால் நல்லது என்று முடிவெடுத்ததாய் சொன்னார். வெல்கேரில் மருத்துவம் என்பது இங்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல்.

"ஐசுக்குட்டி" என்ற சிறுகதையை எழுதிய மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வந்து சிரித்துவிட்டுப் போனார்.

ஐசுக்குட்டி படிப்பறிவில்லாத கிராமத்து பெண். அவளுக்கு தன் அண்டை அயல் மற்றும் உறவினர்களைப் போல, டாக்டரை வைத்து குழந்தை பிரசவிக்க வேண்டும் என்ற ஆவல். அவளைப் பொருத்தவரையில் மருத்துவச்சி வீட்டில் பிரசவம் பார்ப்பதைத் தவிர்த்து, டாக்டரிடம் குழந்தை பெறுவது ஸ்டேடஸ் சிம்மலாய் நினைத்தாள்.

ஆனால் டாக்டரை அழைத்து வரும் அளவு வருமானமில்லாத கணவன். பிரசவ வலி வந்தும், மருத்துவச்சி பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை சுலபமாய் பிரசவம் நடந்துவிடும் என்ற உறுதியாக சொன்னாலும் "லாக்கோட்டரை கொண்டா" என்று பிடிவாதமாய் கத்துகிறாள். பெரிய உயிருக்கு ஆபத்துவந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துப் போன உறவினர்கள், கணவனை டாக்டரை அழைத்து வர சொல்கிறார்கள். பிறகு என்ன டாக்டர் வர, பிரசவம் நடக்கிறது. ஆனால் ஊரில் ஐஷ¥க்குட்டியைக் கிண்டல் அடிக்க, "லாக்கோட்டரை கொண்டா" என்று ஊரே கேலி செய்கிறது. ஆனாலும் ஸ்டேடஸ்ஸை கட்டிக் காப்பாற்றிக் கொண்ட ஐஷ¥க்குட்டி அதை கெளரவமாகவே நினைக்கிறாள்.

சாதாரண பெண்ணின் மன இயல்புகளை நகைச்சுவை மிளிர சிறுகதையாய் வடித்திருப்பார் பஷீர்.

ஞானபீடம், சாகித்ய அகாதமி பரிசு பெற்றவைகள் மற்றும் பிரபல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு அரசு நூலகங்களில் கிடைக்கும். மராத்தி, மலையாளம், கன்னடம், வங்கம், குஜராத்தியின் மூல கதைகள், மொழிபெயர்ப்பாளர்களின் திறமையில் மொழி மாற்ற கதைகள் என்ற எண்ணமே தோன்றாமலும் வாசகரின் படிப்போட்டத்திற்கு எந்த தடையும் இல்லாமலும் இருக்கும்.

ஐசுக்குட்டியின் நினைவில் திளைத்துக் கொண்டிருந்த என்னை நலம் விசாரித்தார். எல்லாரும் நலம் என்று சொல்லிவிட்டு, நகரலாம் என்று முயற்சிக்கும்பொழுது, "உங்களுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனீர்களாமே? என் பிரச்சனையில் உங்களை விசாரிக்கக்கூட மறந்துவிட்டேன்" என்றார்.

ஒரு நிமிடம் நமக்கு என்ன உடம்புக்கு என்று குழம்பும்பொழுதே, " நீங்க வேற! அது போன செப்டம்பர்ல. எனக்கே மறந்துப் போச்சு" என்றதும், "மஞ்ச காமாலைனா ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி அலட்சியமா இருக்கீங்களே?" என்றவர், கடைசியாய் பணம் காசு பார்க்காமல், வெல்கேர் ஹாஸ்பிடலில் எல்லா செக்கப்பும் செய்துக் கொள்ளும்படி அட்வைசும் சொன்னார்.

"வெல்கேரில் அனைவரும் ஐரோப்பிய மருத்துவர்கள், எல்லாம் லேடஸ்ட் டெக்னாலஜி. உங்க பிரச்சனையை மிக சரியாய் கண்டுப்பிடித்துவிடுவார்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்றதும், அவர் முகம் பூவாய் மலர்ந்தது. வெல்கேரில் காலடிவைத்து, சில ஆயிரங்களை செலவழித்தால் அவர் குணமாகிவிடுவார்.

வழக்கமான தூரம் நடந்துவிட்டு திரும்பும்பொழுது, சுள் என்று இடது காலின் பாதத்திற்கு மேல் வலி. அதிகமில்லை. ஆனால் காலை தூக்கி தூக்கி வைத்து மிச்ச தூரத்தை கடக்கும்பொழுது, வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. இது என்ன புது தொல்லை, நாளைக்கு முதலில் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா என்று நினைக்கும்பொழுதே, மாற்று மருத்துவ குறிப்பு ஒன்று ஞாபகம் வந்தது.

மணலில் புதைய புதைய நடந்தால் கால்வலி குணமாகுமாம். முயற்சித்துப் பார்த்துவிடலாம் என்று செருப்பை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு நாலடி வைப்பதற்குள் வலி குறைய தொடங்கியது. கடல் அலைகள் வா வா என்று அழைப்பதுப் போல இருந்தது. பாதம் மட்டும் நனையும்படி நடக்க தொடங்கினேன். இருண்ட வானம், தூரத்தில் வெளிச்ச புள்ளிகளைக் கொண்ட கப்பல்கள். வாய் வழக்கப்படி படகோட்டி பாடலான "தரை மேல் பிறக்க வைத்தான்" பாடலை முணுமுணுக்க, அலை தோழிகள் ஓடி ஓடி உடன் வர கடல் காற்றின் சிலுசிலுப்பும் உடன் சேர எல்லாமே சுகமாக இருந்தது.

http://www.tamiloviam.com/unicode/02160603.asp

9 பின்னூட்டங்கள்:

At Friday, 24 February, 2006, சொல்வது...

ஒரு புன்னகையோடே முழுப்பதிவையும் படித்து முடித்தேன்.

நீங்கள் சொல்வது போல...பிரச்சனை இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதனால்தான் இந்த மாயமான்கள் வந்து மிரட்டுகின்றன.

எங்கள் நண்பர்கள் வட்டத்திலும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் உண்டு.....ஹே! நீ ஃபைவ் பாயிண்ட் சம் ஒன் படிக்கலையா...மொதல்ல அதப் படி.....Lord of the rings is the best. But read hobbit before that. u'll enjoy both the books for sure. I am just waiting for the next harry potter book. It was around 6"O clock when I bought the last book during itz release....இதுல நம்மளும் கொஞ்சம் உண்டு. ஹி ஹி.

 
At Friday, 24 February, 2006, சொல்வது...

ஜிரா,
இந்த மேனியா வயசானா சரியாயிடும் :-) ( சிலருக்கு வயசாக ஆக, அதிகமும் ஆகலாம்)

சதயம்,
என்னமோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க, ஏதோ எழுதுகிறேன் அவ்வளவுதான். ஆனாலும் சொல்லிய வார்த்தைகள் ஜில்லுன்னு இருக்கு :-) அதுக்கு ஸ்பெஷல் நன்றி.

 
At Friday, 24 February, 2006, சொல்வது...

முன்பு ஒரு முறை படித்த சிறுகதைதான் நினைவு வருகிறது.

ஒருவர்,நீங்கள் சொன்ன அம்மாள் மாதிரி, (அம்மா என்று சொன்னால் அர்த்தாமே வேறாகிவிடுகிறது இப்போது) ஹெல்த் செக் அப் செய்ய போகிறார். ரூ.10000, 15000 க்கு எல்லா சோதனைகளும் முடிந்த பின்னால் மருத்துவர் (இந்த சொல்லும் இப்போது ஒருவரை மட்டும் குறிப்பதாய் மாறிக்கொண்டிருக்கிறது) சொல்கிறார், எல்லாம் நார்மல் ஒரு பயமும் இல்லை என்று.

சோதனை செய்யா வந்தவருக்கு வருத்தாமாய் போய் விடுகிறது ச்சே.... இவ்வளவு செலவழிச்சு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாரே என்று. அது போல அந்த அம்மவிற்கும் வெள்ளைக்கார டாக்டர் nothing to worry என்று சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்.

(ரெண்டு நாளைக்கு முன்னே உங்களையும்,வூட்டுக்காரரையும் வெல்கேர் ஹஸ்பிடல் பக்கம் பார்த்ததா சொன்னாங்க!!!! இதானா சங்கதி.)

 
At Saturday, 25 February, 2006, சொல்வது...

மனசு, இந்த வியாதி சரியானாலும் அடுத்த வியாதியை உருவாக்கிக் கொள்வார்கள். உடல் உழைப்பு
இன்மை, தேவைக்கு அதிகமான பணம், பிரச்சனை இல்லாத வாழ்க்கை ஆகியவையுடன் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் மனதைத் திருப்பாமல், தொலைக்காட்சியே கதி என்று கிடப்பவர்களுக்கு இந்த வியாதி உண்டு.
இன்சூரன்ஸ்கார்ட், அலுவலகத்தில் தந்திருந்தாலும் இன்னும் "வெல்கேரில்" கால் வைக்கும் பாக்கியம்
கிட்டவில்லை :-)

 
At Saturday, 25 February, 2006, சொல்வது...

என்ன உஷா, திரும்ப வர இவ்வளவு லேட்டாயுடுத்து! புதமணல்ல காலபதிச்சா, கால்வலி போவும்னு சின்ன வயசில சொல்லகேட்டிருக்கேன். நான் திருவல்லிக்கேணில, ரத்னா கபே பக்கத்தில, மேன்சன்ல தங்கி இருந்தப்ப,பெரும்பாலும் ராத்திரி கடலோரக்கவிதை பாட புதமணல்ல அப்படி காலாற நடக்கிறதுண்டு! அதான் பழயநினப்பு தான் வந்திச்சு, இதை படிச்சோன!

 
At Saturday, 25 February, 2006, சொல்வது...

மருத்துவ உலகில் சிலர் இல்லாத நோய்களை கற்பனை செய்து கொண்டு hypochondric ஆக இருந்தால் மனநல ரீதியில் குணப்படுத்துவதுண்டு. ஆனந்த் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் இதேபோல ஒரு வியாபாரி, பணக்கார பெண் பாத்திரங்கள் உண்டு.

 
At Saturday, 25 February, 2006, சொல்வது...

வெ. நா! கணிணி தகராறு. பழைய நினைப்பை எழுத ஆரம்பிச்சா வயசாச்சுன்னு பொருள் :-)

பத்மா! பழைய நினைவுகளை கிளறிட்டீங்க! "ஆனந்த்" ராஜேஷ் கன்னாவும், அமிதாப்ப்பும் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள் :-)))))
பாடல்கள்.. ம்ம்ம்ம்ம் , இசை சலில் சவுத்ரி என்று நினைக்கிறேன். அது ஒரு காலம் டி.டில நல்ல படமாய் போடுவார்கள். இயக்கம் ரிஷிகேஷ்முகர்ஜிதானே? கூகுளில் பார்க்க வேண்டும்.

 
At Sunday, 05 March, 2006, சொல்வது...

'iru kodugal' thaththuvam dhan nyabagam varugiradhu

 
At Tuesday, 07 March, 2006, சொல்வது...

அத்துழாய் (மீண்டும்), இன்சூரன்ஸ் கார்ட் எங்களிடம் இருந்தாலும், சில சதவீத கட்டணம் கட்ட
வேண்டும். நீங்க சொன்ன ஆஸ்பத்திரிகளிலும் இன்னும் கால் வைக்கும் பாக்கியம் கிட்டவில்லை :-)

ஆதிரை வருகைக்கு நன்றி

 

Post a Comment

<< இல்லம்