Friday, February 17, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க- உலகின் மிகப் பெரிய சேரி

விமானம் தரையிறங்கும்பொழுது சன்னல் வழியாய் எட்டிப் பார்த்தால் பொதுவாய் பச்சை சதுரங்கள், நீர் நிலைகள், கடலை ஒட்டிய நகரமென்றால் தென்னை மரங்கள், அங்கங்கு அடர்ந்த காடுகள், நடுவில் நகரம் என்று இருக்கும். எல்லா நகரங்களும் இப்படித்தான் இருக்கும். ஆனால் மும்பை மட்டும் வித்தியாசமாய் இருந்தது. எங்குப் பார்த்தாலும் நீல நிற பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட குடிசை தொடர்கள் வளைந்து வளைந்துப் போய் கொண்டிருக்க சம்மந்தமேயில்லாமல் நடுவில் உயரமான கட்டிடங்கள்.

ஊரில் டாக்சியில் வலம் வரும்பொழுது நீக்கமற நிறைந்த குடிசைகள் மற்றும் இடிந்து விழம் நிலையில், எந்த வித பராமரிப்பும் இல்லாத விக்டோரியா மகாராணி காலத்து கட்டிடங்கள். அதிலும் குடியிருப்பவர்களின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். மறுநாள் ஒருநாள் சுற்றுலாவாக மும்பையை சுற்றி வந்தோம். பஸ்ஸில் கைட் என்ற கணக்கில் அரைகுறை ஆங்கிலமும், ஹிந்தி/மராத்தி கலவையில் நேரடி ஒலிப்பரப்பு தொடங்கியது. அந்த பதினைந்து வயது பயலுக்கு சினிமா மோகம் அதிகம் போல. குமார்கள், கான்கள், கபூர்கள் என்று மலபார் ஹில்ஸ் பகுதியில் நுழைந்ததும், திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளைப் பார்க்கவே வந்துப் போல, சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

அனைத்தும் பிரமாண்ட மாளிகைகள் அல்லது வானை தொடும் அடுக்குமாடி குடியிருப்புகள். அடிக்குமாடி குடியிருப்பின் விலையும் பல கோடிகள். பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு நடிகரின் பங்களா. தோட்டமும், துறவுமாய் மும்பையா இது என்று ஆச்சரியப்படும்பொழுது, முறன்பட்ட நகைச்சுவையாய் அவர் வீட்டு கம்பவுண்ட் சுவரை ஒட்டி நீள குடிசை வீடுகள். அங்கு குடியிருப்பவர்களும் அந்நடிகரின் படங்களை சில நூறு ரூபாய்கள் செலவழித்துப் பார்த்திருப்பார்கள்.

ஆனந்தவிகடனில் முன்பு நடிக, நடிகையின் வீடுகளில் பற்றி எழுதிக் கொண்டு இருந்தார்கள். எல்லாமே பங்களாக்கள். ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டுவதுப் போல என்று சொல்லப்பட்டாலும், தயாரிப்பு செலவில் பெரும்பகுதி நடிகர்களுக்கே போய் விடுகிறது. உயிரை பயணம் வைத்து சண்டைக்காட்சிகளில் தோன்றும் ஸ்டண்டு நடிகர்களுக்கு தரப்படும் ஊதியமும் வெகு குறைவுதான். படப்பிடிப்பின் போது, அடிப்பட்டால், அவர்கள் கதி அதோகதி. படத்தில் சம்மந்தப்பட்ட உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள் உட்பட, அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஊதியம் சில ஆயிரங்களாம்.

மும்பையில் பார்த்த இன்னொரு விஷயம், ஊர் எங்கும் கண்ணில் பட்ட குழந்தை தொழிலாளர்கள். பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் இருந்து பிழைக்க வந்த சிறுவர்கள். பதினெட்டு மணிநேரத்திற்கு குறைவில்லாமல் உழைத்து அவர்கள் அனுப்பும் பணத்தை எதிர்ப்பார்த்து ஊரில் காத்திருக்கும் உறவுகள். தமிழ்நாட்டில், சிறுநகரமான சீர்காழியில் கூட இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை என்ற பலகையை ஒரு ஹோட்டலின் வெளியே பார்த்து அந்த உரிமையாளரிடம் கேட்டேன். பலரும் இப்பொழுது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்றார்.

ஆனால் இந்த விஷயத்தில் இன்னொரு பரிமாணம், நீங்களே பார்த்திருக்கலாம். ஒவ்வொருமுறையும் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கி பல ஏழை மாணவர்கள், பள்ளிக்கூடம் போக மற்ற நேரங்களில் வேலை செய்து தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துக் கொண்டதாக சொல்வார்கள். பல்வேறு பிரச்சனைகளால் இவர்களுக்கு பெற்றோர்களின் பண உதவி கிடைப்பதில்லை. ஆக படிப்புக்கு ஒதுக்கிய நேரம் போக, வேலை செய்வது சம்பாதிப்பதை தடை செய்வது சரியில்லை.

சென்னை கடற்கரையில் பூ விற்கும் சிறுமிகள், சுண்டல், முறுக்கு விற்கும் சிறுவர்கள் அனைவரும் சொல்லும் ஓரே விஷயம், தந்தை சரியில்லை, தாய்க்கு உதவியாய் மாலை நேரம் வேலை செய்கிறோம் என்று. ஆனால் அனைத்து பிள்ளைகளும் பள்ளியில் படிப்பதாகவே சொல்வார்கள்.

டைரக்டர் கிஷன் ஸ்ரீகாந்த், இயக்கும் கேர் ஆப் பு·ட் பாத் ( பிளாட்பாரம்) படத்தின் கதையும் இதுதான். பிளாட்பாரத்தில் வளரும் அனாதை சிறுவன், படித்து முன்னேறுவதை சொல்கிறது இப்படம். கன்னடத்தில் தயாராகும் இப்படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்திய மொழிகளில் டப் செய்யப்படப் போகிறது. ஆகஸ்ட் 2006 கின்னஸ் சாதனையில் பெயர் பெறப்போகும் இப்படத்தில் நடிக்க விருப்பப்பட்டதால் ஜாக்கி ஷராப் அவர்களுக்கு கதையில் வரும் ஒரு பாத்திரம் சரியாய் இருக்கும் என்று நினைத்து டைரக்டர் வாய்ப்புக் கொடுத்துள்ளார். நடிகருக்கு பாத்திரம் உருவாக்கப்படவில்லை, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்.

காமிரா கோணங்கள், அதற்கு தேவையான பிலிம் ரோல் போன்ற தொழில் நுட்பங்களை வெகு சாதாரணமாய் சொல்லும் அப்படத்தின் கதாநாயகனும் டைரக்டருமான கிஷன் ஸ்ரீகாந்துக்கு வயது ஒன்பது.

tamiloviam.com
2/13/06

14 பின்னூட்டங்கள்:

At Friday, 17 February, 2006, சொல்வது...

மும்பையில் நான் கண்ட இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும்.

சில உணவுவிடுதிகளின் வாசலை ஒட்டிப் பலர் உட்கார்ந்திருந்தார்கள். எங்கும் போகாமல். ஏன் அப்படி உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நண்பனைக் கேட்டேன்.

யாராவது சாப்பாடு தானம் செய்வார்களாம். பத்து பேருக்கு எட்டு பேருக்கு என்று சாப்பாட்டுதானம் செய்கின்றவர்கள் பணத்தை உணவுவிடுதிக்காரரிடம் கொடுத்து விடுவாராம். அத்தனை பேருக்குச் சாப்பாடு போடப்படுமாம். எட்டு பேரென்றால்...எந்த எட்டைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரியவில்லை.

 
At Friday, 17 February, 2006, சொல்வது...

நல்ல முயற்சி. கொஞ்சம் focussedஆ இருந்திருக்கலாம். பல விஷயங்களைத் தொட முயன்று, அதுவே spreading too thin ஆகி விட்டதைப் போலிருக்கிறது. இறுதியில் என்ன கூற வருகிறீர்கள் என்பது தெளிவாகப் புரியாமல் போகிறது.

 
At Friday, 17 February, 2006, சொல்வது...

ஏற்கனவே படித்த ஞாபம் இருக்கே இந்த பதிவை

 
At Friday, 17 February, 2006, சொல்வது...

வாய்ஸ்! மும்பையில் இருந்தது ஒன்றரை நாட்கள்தான். கண்ணில் பட்டதை எழுதினேன். மேலும் இந்த வாரம் எழுதவே மனம் ஒத்துழைக்க மறுத்தது. தமிழோவியத்தில் தொடர் எழுத ஒப்புக் கொண்டுள்ளதால், ஏதோ எழுதி அனுப்பினேன். வெகு சுமார் என்று தெரிந்து, சென்ற செவ்வாய் அன்று போட்டதை இன்றுத்தான் மீள் பதிவு செய்தேன்.

ஜிரா, ஊர் முழுக்க அகதிகள் கும்பல். டாக்சிகாரர் நிறைய கதை சொன்னார். ஆனால் மராத்தி கலந்து இருந்ததால், ஓரளவே புரிந்தது. நீங்க சொன்ன கதை புதுசா இருக்கு. பணக்கார சேட்டுகளின் தர்ம சிந்தனை என்றாலும், சிலருக்கு மட்டும் என்றால் காத்திருக்கும் மற்றவர்கள் கதி????

என்னார், இந்த கட்டுரை தமிழோவியம் டாட் காமில் போன செவ்வாய் வலை ஏறியது.

 
At Friday, 17 February, 2006, சொல்வது...

உஷா,

தாராவி குடிசைப்பகுதியை ஒரு முறை பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அதைவைத்து பத்து பதிவு போடலாம். தகர கொட்டாயில் இரண்டு மாடி கட்டியிருப்பார்கள்.நான் இரண்டு வருடம் மும்பயில் இருந்தேன்.

ஒரு கணிசமான சதவீதத்தினர் ரோட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

 
At Saturday, 18 February, 2006, சொல்வது...

சதயம், நற்சான்றிதழுக்கு நன்றி :-))))

முத்து (தமிழினி) பெரும்பாலான குடிசைகள், ட்யூப்ளக்ஸ் பாணியில் இருந்தது. வாசலில் ஒரு சின்ன ஏணி. மேலே ஏற! வேறு எங்கும் இப்படிப் பார்த்ததில்லை. பெரும்பாலருக்கு ஓட்டு இல்லாததால், இவர்களை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்வதில்லை என்ற தகவல் டாக்சிகாரர் சொன்னது. உங்களுக்கு தெரிஞ்சத உங்க பதிவுல போடுங்களேன். நீங்கள் சொன்னதைப் போல, நீள் மதில்சுவர் இருந்தால், குடிசைகள் கட்டாயம் உண்டு. மிக விசித்திரமாய் இருந்தது.

 
At Monday, 20 February, 2006, சொல்வது...

மும்பையை மற்ற மாநகரங்களுடன் ஒப்பிடும் போது... 100% தேவலாம் என்பேன். அதே போல 50% மோசம் என்றும் கூறலாம்.
நான்கு சாலைகள் சந்திக்கும் ஒவ்வொரு சாலையிலும் "சவ்ச்சாளா" (பெருவாரி இலவசம்)இருக்கும். சென்னையில் அவசரமாக ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல்.. வாகனங்களுக்கு பின்னால் போய் இடம் தேட வேண்டியிருக்கிறது.
சென்னையில் சாதாரணமாக ஆட்டோக்கள் ரூ.25/க்கு குறைவாக எங்கும் வருவதில்லை. மும்பையில் மினிமம் மீட்டர் சார்ஜ் ரூ.9/- தான்.
இப்படி மற்ற மாநகரங்களுடன் ஒப்பிடும் போது மும்பை 100% ஓ.கே.
சரியான மனிதபிமானத்தை அங்கு தேடுவது அறிது என்பதால் 50% மோசம்.
மும்பையின் பெருமைகளையும் பரபரப்புகளையும் பதிவு செய்து கொண்டே போகலாம்.
அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு.

 
At Monday, 20 February, 2006, சொல்வது...

உஷா! நான் மும்பைக்கு போனதில்லை..சென்னையிலேயே சேரி மக்கள் வாழ்க்கை இப்படித்தானே இருக்கிறது. ஆனால் மும்பையில் நீங்கள் சொல்வது போல ரொம்பவே இருக்கும் போல..இந்த கொடுமைகளை பார்த்துத்தான் நண்பர்கள் சிலர் DreamIndia2020 என்று தொடங்கி முடிந்த அளவு அந்த மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஏற்கனவே நானும் குமரனும் சொல்லி உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்த லிங்க் உங்கள் பதிவுக்கு உண்மை நிலவரத்தை காட்ட உதவும் என்று சொல்கிறேன். இதை பாருங்கள்.

http://dreamindia2020.freehomepage.com/23_01_2005/Peopleamgus.html

 
At Monday, 20 February, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Tuesday, 21 February, 2006, சொல்வது...

பாலபாரதி, ஓரளவு இந்தியா முழுவதும் சுற்றியிருந்தாலும் மும்பை கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. ஆட்டோ கிடையாது,
அனைத்து டாக்சிகளும் ப்ரீமியர் பத்மினி கார்கள். நீங்கள் குறிப்பிட்டதுப் போல மீட்டர் சரியாய் இருந்தது. மனிதர்களை
சொல்வதுப் போல, எல்லாவற்றிலும் நல்லது உண்டு கெட்டது உண்டு. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா, மும்பையில் பிறந்து
வளர்ந்தவர்களுக்கு தங்கள் ஊரைப் பற்றிய விசேஷ அபிமானம் உண்டு :-)

சிவா, சென்னை வந்தால் உங்களை சந்திக்க வேண்டும் என்ற பிளான் உண்டு. சென்னையில் பல ஏழை மக்கள் மற்றும்
தாழ்த்தப்படவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வசிக்கும் இடங்களையும் பார்த்ததும் உண்டு. மும்பையின் சேரி எனப்படும் இடங்களில் வசிப்பவர்களுக்கு ஓட்டு இல்லையே? ஆனால் நம் ஊரில் அப்படி இல்லையே?

சென்னை கன்னிகாபுரம் சென்று வந்த என்.ஜி.ஓ தோழி சொன்னது- அனைத்து கட்சி, சினிமா ரசிகர் மன்றங்களும் அபிமானங்களின் கட்டவுட்டுகள் எங்கும் காட்சியளித்தன என்றாள். அவர்கள் நாம் நினைப்பதுப் போல ஏழை இல்லை என்றாள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்னிடம் அவள் தந்த பிராஜக்ட் ரிப்போர்ட் காப்பியும் இருக்கிறது.

 
At Tuesday, 21 February, 2006, சொல்வது...

கல்கத்தா மாநகரிலும் இத்தகைய நிலவரம் நீடிக்கின்றது.. இந்திய கிழக்குப்பகுதியில் பெரும் வளர்ச்சி கொண்ட நகரங்கள் பல இல்லாததால், ஒரிசா,பீகார்,ஜார்கண்ட்,அஸ்ஸாம்,நேபாள் போன்ற பல இடங்களில் இருந்து வறட்சியோ, புயலோ,மழையோ,வெள்ளமோ.. எதுவாயினும் மக்கள் கல்கத்தாவிலே குமிவதும் வழக்கமாகிவிட்டது... அவ்வளவு மக்கள் இருப்பதற்கு திட்டமிடப்படாத நகரம் வளர்ச்சி விகிதம், வந்து சேர்ந்த மக்கள் தொகையின் விகிதத்தைவிட மிகவும் குறைவாக இருந்த காரணத்தால்.. நகரம் இனி ஒன்றும் செய்ய இயலா நிலையில் சென்றுவிட்டது... இங்கே அத்தனை சினிமா பைத்தியங்கள் இல்லை, கொஞ்சம் போதை பழக்கம் உண்டு ஆனால் கடும் உழைப்பாளிகள்.... ஆயினும் அவர்களுள் குறைந்த கூலியில் வேலை யார் செய்வார் என்ற போட்டி உள்ளதால் முதலாளி வர்கத்தினரால் வஞ்சிக்கப்பட்டே உள்ளனர்.. (கம்யூனிஸ்ட் ஆட்சிதான் அங்கு உள்ளதே என்று வியந்திருக்கின்றேன்)....

 
At Tuesday, 21 February, 2006, சொல்வது...

உண்மை அவர்களே, அவர்கள் உழைத்து சம்பாதித்தாலும் ஆண்களின் குடிப்பழக்கம், கூடா நட்பு போன்றவையும், சடங்கு,பக்தி இவைகளுக்கு பெண்களின் மிதமிஞ்சிய கடன் வாங்கும் பழக்கம்
( சேட்டிடம் அடகு வைத்தல்) சிறுபிள்ளைகளின் சினிமா மோகம்(அனைத்து பிள்ளைகளுக்கு ஆதர்ச கதாநாயகன் விஜய்) போன்றவைகளையே அவர்களை முன்னேறாமல் தடுக்கிறது. இதை எந்த தலைவன் வந்து திருத்தப் போகிறான்?

 
At Friday, 24 February, 2006, சொல்வது...

யாத்திரீகன்,
(நான்கு நாட்களாய் கணிணி தகராறு. தாமதமாய் உங்கள் பின்னுட்டம் ஏறியதற்கு அதுதான் காரணம்.)
இதேத்தான் நானும் சொல்வது. சென்னையில் வசிப்பக்கும் இடங்களை சேரி என்ற சொல்ல முடியுமா? நான்
அஸ்ஸாமில் பார்க்க விஷயம், பங்களாதேஷ்ஷீல் இருந்து எல்லைத் தாண்டி தினமும் ஓடிவருபவர்கள்,
மிக குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவார்கள். அதனால் அவர்களுக்கு வேலைகள் சுலபமாய் கிடைக்க,
அஸ்ஸாமிகளுக்கு வேலை இல்லாத திண்டாட்டம். போடோ போராளிகள் குழு ஏற்பட்டு பிரச்சனை வெடித்தது.
யாரை குற்றம் சொல்ல முடியும்? இருவருக்கும் சர்வைவல் பிரச்சனை.
இம்முறையையும் பலத்தரப்பட அலசல்கள் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கையில் ஏதோ நானே மும்பைக்கு பொய்விட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்.

பதிவுக்கு நன்றி.

 

Post a Comment

<< இல்லம்