Tuesday, March 07, 2006

பெண்கள் இன்று

ஞாநீ அவர்கள் எழுதிய "தவிப்பு" என்ற நாவல் கையில் கிடைத்தது. ஆனந்தவிகடனில் வந்த தொடரின் கதை சுருக்கம்- "தவிப்பு" என்ற பெயரில் செயல்படும் புரட்சியாளர்கள் குழு ஒன்று, அரசு அதிகாரிகளைக் கடத்தி அவரை விடுவிக்க கோரிக்கைகளை எழுப்புகிறார்கள். ஊடகத் துறையை சார்ந்த நாயகனை அரசு பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறது. மறைமுகக் காரணம் புரட்சியாளர்களில் ஒரு பெண், நாயகனின் கல்லூரி தோழி.

பொதுவாய் எழுத்துமொழி என்பது ஆணின் பார்வையாகவோ அல்லது பெண்ணுரிமை பேசும் மொழியாகவோ வெளிப்படுத்தப்படுகிறது. பெண் எழுத்துக்கள் ஆண்குலத்தை விமர்சிப்பதாய் இருக்கும். ஆண் எழுத்தாளர்களில் சிலரின் எழுத்து அதீத பெண்மையைப் போற்றுதலாய் இருக்கும். இல்லை என்றால் திரைப்படங்களைப் போல கதாநாயனுக்காக பெண் பாத்திரங்கள் படைத்திருப்பார்கள். ஆனால் பெண்ணை, சக ஜீவராசியாய்/ மனுஷியாய் பார்க்கும் எழுத்தாளர்கள் மிக குறைவு.

கதையை விட நாவலில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்-, பல இடங்களில் பெண்களின் பிரச்சனைகளை அழகாய் வெளிக் கொண்டு வந்துள்ளார். உதாரணமாய் இன்னும் நம் மண்ணில் கை குலுக்குவதில் உள்ள சங்கடங்கள், ஆண்களுடன் கை குலுக்குவதுப் பற்றி என் தோழி ஒருவர் சொல்லியிருக்கிறார். நல்ல வேலையில் உள்ள அவர், சிறு வயதினரையோ அல்லது வெளிநாட்டினரையோ கைக் குலுக்குவதில் பிரச்சனையில்லை, ஆனால் சில பெருசுகளிடம் வணக்கம் சொல்லுவதே சால சிறந்தது என்றாள்.

இன்று இளைய சமுதாயத்தினரின் மனோபாவங்கள் ஆரோக்கிமான முறையில் மாறிவருகின்றன. பெண்களை பெண் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் நட்பாய் பாவிக்கும் எண்ணங்கள் வலுத்துவருகின்றன. அதற்கு காரணம் இன்றைய சமுகத்தில் வேலைக்குப் போகாத பெண்கள், அதாவது ஹவுஸ் ஒய்ப் என்ற பெயரே மறைந்து வருகிறது. பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் எல்லா சாதி, சமயத்தினரிடமும் உள்ளது. இளைய சமுகத்தினர் ஆணும், பெண்ணும் இணைந்துப் படிக்கிறார்கள். அனைத்து பணியிடங்களிலும் கணிசமான அளவு பெண்களும் இருக்கிறார்கள்.

வீட்டில் வேலைக்குப் போகும் தாய் இருக்கிறாரோ இல்லையோ, சகோதரிகள், மனைவி என்று ஆணின் பெண் உறவுகள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். கூட இருந்து பார்ப்பதால் அவர்களின் பிரச்சனைகள் பெரும்பாலான ஆண்களுக்கு புரிகிறது. பெண்ணை
கேவலமாக பேசுவதோ, நடத்துவதையோ அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. குழந்தை வளர்ப்பில் இருந்து, வீட்டு வேலைகள் வரை இருவரும் சேர்ந்து வேலை செய்வதை பல குடும்பங்களில் காணலாம். இன்னும் மாறாத ஆண்கள் இல்லையா என்றுக் கேட்காதீர்கள்!

ஆசிரியை, செவிலியர் மற்றும் அரசு பணியில் ஆரம்பித்து அறிவியல், சட்டம், மருத்துவம், வங்கி, தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் பிரகாசிக்க ஆரம்பித்தவர்கள் இன்று ராணுவத்தில் கமாண்டோ படைவரை பெண்களும் ஆண்களுக்கு இணையாய் பணி புரிகிறார்கள்.
சில இடங்களில் சில பிரச்சனைகள் வந்தாலும், பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும், சமாளிக்கவும் பழகிக் கொண்டு விட்டாள் பெண்.சொந்த தொழில் செய்யும் பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது.

இது பெண்களின் வாழ்க்கை கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் என்றுச் சொல்லப்பட்டாலும் இன்னொருபக்கம் பிரச்சனைகள் நாடு முழுவதும் இருக்கின்றன. கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிந்ததும் அழிக்கப்படுவதும், சிசு கொலைகளும் படிப்பறிவின்மை, சிறுவயது திருமணம் ஆகியவைத் தொடர்ந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன.

மத்தியவர்க்கப் படித்த பெண்களின் நிலைமை முன்னேறி வந்தாலும் இன்னும் முறைசாரா பணிகளில் பெண்களின் நிலைமை மோசமே! குறைந்த கூலி, நிரந்தரமில்லாத பணிகள், பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால், படிப்பறிவில்லாத பெண்கள் அவதிப்படுகிறார்கள்.

சென்ற தலைமுறைகளில் பெண்களில் சில சதவீதத்தினரே வேலைக்கு சென்றாலும், உடன் வேலை செய்பவர்களால் பல்வேறுவகையில் விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் சகிக்க முடியாத ஆண்கள், அவளை பல்வேறு விதமாய் அவளை ஒடுங்கிப் போக செய்ய முயன்றார்கள். அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். தங்களின் பெண் உறவுகள் படி தாண்டா பத்தினியாய் வீட்டில் பூட்டி வைத்தவர்களே பெண்களை கேவலமாய் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் இன்று பொருளாதார பிரச்சனையாய் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால். தன் வீட்டு பெண்களை மதிக்கும் ஆண்களில் பலரும் பொது வாழ்வில் இருக்கும் பெண்களை கேவலமாய் பேசுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

திரைப்பட துறையும் அரசியலும் இன்று குலத் தொழிலாய் மாறிவிட்டது. திரைப்படங்களில் பெண்களின் நிலைமையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. முறைசாரா பணி செய்யும் பெண்களுக்கு உண்டாத அனைத்து பிரச்சனையும் திரையுலக நடிகைகளுக்கு உண்டு. வெள்ளி
திரையைத் தாண்டி, திரையுலகில் வங்கு வகிக்கும் பெண் கவிஞர்கள், நடன இயக்குனர்கள் வெகு சிலரே. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் வரிசையில் பெண்கள் பங்கு இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

சின்ன திரைவட்டத்தில் பெண்கள் பங்கு கணிசமாய் இருந்தாலும், அனைவருமே ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளைத் தருவதில்லை. திரும்ப திரும்ப கண்ணீர் பெருகும் பெண்கள், அடிமை அல்லது வில்லிகள் அல்லது கணவனுக்கே இன்னொரு திருமணம் செய்து வைக்கும் பத்தாம்பசலிதனமான கதைகள் என்று பெண்களை சிறுமைப்படுத்திக்காட்டும் பெண் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள். விளம்பர உலகிலோ பெண் என்பது கவர்ச்சி பொருளாகவே காலக்காலமாய் காட்டப்பட்டு வருகிறாள்.

இந்திய அரசியலில் பிரமதரில் இருந்து முதலமைச்சர் வரையிலான பதவிகளில் வகித்த பெண்கள் அனைவருக்கும் காட்பாதர்களின் உதவி இருந்ததை மறுக்க முடியாது. அதேப் போல கணவன் அல்லது பெற்றோர்களின் கைப்பாவையாய் பெண்கள் கிராம பஞ்சாயத்து தலைமைகளில் பங்குப் பெற்றாலும், காலப்போக்கில் அவர்கள் தன்னிச்சையாய் செயல்பட ஆரம்பிக்கிறார்கள் என்பது செய்தி. கிராமம் மற்றும் சிறுநகர அரசியலில் மகிளிர்குழுக்கள், பஞ்சாயத்துக்களிலும், பெண்களின் பங்கு உயர்ந்துக் கொண்டே வருகிறது. ஆனால் மற்ற கட்சிபணிகளில் பின்புலம் இல்லாமல் பெண்கள் அரசியலில் நுழைவது என்பது இயலாத காரணம். இன்னும் அனைத்து
தேசிய கட்சிகளிலும் பெண்களின் பங்கு ஒற்றை இலக்க சதவீதமே! ஆனால் அரசியலில் முப்பத்திமூன்று சதவீத ஒதுக்கீடு தேவை என்ற கருத்தைப் பலரும் சொன்னாலும், நடைமுறையில் சாதாரண படித்த பெண்கள் அரசியலில் நுழைவது என்பது இயலாத காரியம். வரும் ஆண்டுகளில், படித்தப் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் நிலைமை வரலாம்.

ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பழைய பழமொழி. ஆனால் பொறுப்பான உயர் பதவிகள், தொழில், இலக்கியம், ஊடகதுரை, அரசியல் ஆகிய அனைத்து துறையிலும் ஈடுப்படும் பெண்களுக்கு கணவன் உட்பட அனைத்து குடும்பத்தினரும் உதவினால்தான் அவளால் பிரகாசிக்க முடியும் என்பது உண்மை.

http://www.thisaigal.com/march06

11 பின்னூட்டங்கள்:

At Wednesday, 08 March, 2006, சொல்வது...

கட்டுரை சிறப்பாக வந்துள்ளது, வாழ்த்துக்கள்.

இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி இவ்வாறு கூறுவார்கள்: if India has progressed even to this extent, it is not because of its governments, but despite them. இதே போலத்தான் பெண்கள் விஷயத்திலும் கூற வேண்டும். அவர்கள் இவ்வளவாவது முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களென்றால், அது அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களின் தயவால் அல்லாது, அவர்களையும் கடந்தே இம்முன்னேற்றம், என்பதே உண்மை.

அவர்களது முன்னேற்றத்திற்கு எவ்வாறு அவர்களது சொந்த முயற்சியே காரணமோ, அவ்வாறே, சில சமயம் அவர்களது பின்னடைவுகளுக்கும் அவர்களே காரணமாகி விடுகிறார்கள். பெண்களுக்கிடையே ஒற்றுமை, நட்புணர்வு ஆகியவை இல்லாமல் ஒரு போட்டியுணர்வே நிலவுவதாகப் படுகிறது. வரதட்சிணை கொடுமை, பெண் சிசு அழிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்தேறுவதில், பெண்களுக்குள்ள பங்கையும் ஈடுபாட்டையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

your last para is so true. women need the support of all in the family to make progress in any field of her choice.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

வாய்ஸ் ஆப் விங்ஸ், உங்க ஒவ்வொரு வரிகளையும் அலச இன்னொரு பதிவு வேண்டும் :-)

ஆனால் மிக முக்கியமாய் நினைப்பது, பல விலங்குகள் நாங்களே போட்டுக் கொண்டதுதான். அதை எடுக்க முயற்சிக்க வேண்டியதும் நாங்களேதான். பல பெண்களிடம் காண்பது இல்லாத மாயையை
உருவாக்க்கிக்கொண்டு, அவதிப்படுவது. அதே சமயம் ஆணை எதிர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை, இருவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்டு வர வேண்டும்.

இன்னும் ஒரு விவாதத்துக்குரிய விஷயம்.பெண்களின் ஒற்றுமை. இதிலும் நான் கண்டது, சாதி, மத, இனம், கல்வி ஏற்றத்தாழ்வு பார்க்காமல் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சமயத்தில் கைக் கொடுப்பது. எனக்கு அதிக அறிமுகம் கூட இல்லாமல் பல முறை பல பெண்கள் சிறு விஷயத்தில் இருந்து பெரிய விஷயம்வரைதானே உதவியிருக்கிறார்கள். பொறாமை என்பது ஆணுக்கு ஆண் மட்டும் கிடையாதா என்ன :-)))


பாவை, அதேதான். குடும்பம் என்ற அமைப்பில் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருந்தால்தான் சாதனை என்பது சாத்தியம்.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

//பொறாமை என்பது ஆணுக்கு ஆண் மட்டும் கிடையாதா என்ன :-)))//


கண்டிப்பாய் இருக்கிறது....அளவு தான் வேறுபாடு.

வரதட்சிணையை ஒழித்துவிட்டால்(!!!!!!!!!!) பெண் சிசு கொலையும் தானாய் நின்றுவிடும்.

மற்ற ஒன்று கற்பு.இதை சொல்லிதான் நிறைய விஷயங்களில் பெண்கள் அடக்கபடுவதாய் தோன்றுகிறது.

கற்பு என்ற ஒன்று உண்டு எனில் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் (சொன்னது யாருங்க... பாரதியா இல்ல வைரமுத்து ஏதோ ஒரு சினிமா பாட்டிலா) என்ற வரிகள் உண்மையாக வேண்டும்.

கற்பு என்பது கர்ப்ப பையில் இல்லையடி அது மனதில் உள்ளது கண்மணியே என்ற வரிகளும்தான்.

அதற்காய் யர் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் என்பதில்லை.

தெரியாமல், தவறாய், நடந்துவிட்ட நிகழ்வுகளுக்கு பெண் மட்டுமே தன் வாழ்க்கயை இழந்துவிடகூடாது.

பெண்களுக்கு பெண்களே எதிரிகள் என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை.

( ஏதேனும் தவறாய் இருந்தால் எடிட் செய்துவிடுங்கள் உஷா. சாரி. before publishing)

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

உங்கள் என்ணங்களை தெளிவாக பதிந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் என்பது அலங்கார வார்த்தையன்று. எப்படி எம்.எஸ்ஸின் பின்னால் சதாசிவம் என அறியப் படுகிறதோ அவ்வாறே எம். ஜி .ஆரின் வளர்ச்சிக்கு அவர் தாயின் பங்கு குறைந்ததில்லை.ஆனால் சதாசிவம் ஆயிரத்தில் ஒருவராக அறியப் படுகிறார். சத்தியாக்கள் கடமையை நிறைவேற்றியவர்களாக காட்டப்படுகிறார்கள்.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

மனசு,
ஆபாசம் மற்றும் மத,சாதி பெருமை, காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும் மடல்கள் மட்டுமே நிறுத்தப்படும்.
மற்றப்படி, முழுகட்டுரையும் அபத்தம் என்று நீங்கள் சொன்னாலும் போட்டுவிடுவேன் :-)
ஆணின் பொறமையின் அளவு மிக குறைவா? அப்படியா? பங்காளி காய்ச்சல் என்று மகாபாரதத்து
போருக்கு காரணம் சொல்வார்கள். அதற்கு இதுதாங்க பேரூ!
மற்றப்படி, தனிமனித ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் குடும்பம் இருக்கும். ஆனால் கற்பூ...... சாமி! நா ஆரம்பிக்க மாட்டேன் :-)))))

மணியன்,
எம்.எஸ் கதை வேறு. முழுக்க முழுக்க சதாசிவம் ஆட்டிவைத்த பொம்மை அவர் என்று சொல்லப்படுகிறது. மேடையில் பாடும்பொழுது, அடுத்தப்பாட்டு என்னவென்று சைகை செய்வாராம். எம்.எஸ் பாடுவாராம். ஒருவகையான டிவோடட் ஓய்ப் என்று சொல்லலாம். ஆனால் இன்று பல
துறைகளில், தன்னுடைய சுயத்தை நிரூபிக்கும் பெண்ணை எம். எஸ்ஸூடன் ஒப்பிட என்னால்
முடியவில்லை.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

நல்ல பதிவு உஷா. காலம் மாறி வருது. இன்னும் முன்னேற்றம் வேணுமுன்னாலும்
முன்னைக்கு இப்ப எவ்வளவோ தேவலை. மெதுவாத்தான் மாற்றங்கள் வரும், வரணும். இது ஒரே நாளில்
அதிரடியா வந்துராது.

 
At Wednesday, 08 March, 2006, சொல்வது...

அந்த கற்பூ.... விஷயத்துக்கு தான் நானும் பயந்த்தேன்.அதை தான் தேவையென்றால் எடிட் செய்துவிடவும் என்றும் சொன்னேன்.(குஷ்பு மாதிரி உங்க blog ம் கொஞ்சம் famous தானே, யாரவது செருப்பு, விளக்குமாறு போராட்டம் நடத்திட்டா)

மீண்டும் அதையே தான் சொல்கிறேன். பங்காளி சண்டை அதிகமா.... மாமியார் மருமகள் சண்டை அதிகமா???

மகாபாரதம் சரி....அப்ப இராமாயணம்?

 
At Thursday, 09 March, 2006, சொல்வது...

துளசி, பெண்களீடம் மாற்றங்கள் எல்லா மட்டத்திலும் வந்துக் கொண்டே இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

மனசு, பெண்களின் குணங்களாக மட்டும் சொல்லப்படும் ஒற்றுமையின்மை, பயம், பொறாமை, வம்பு பேசுதல் போன்றவை ஆண்களிடம் இல்லை என்று சொல்வது ஆணாதிக்க மனாப்பான்மை.குறைவாக உள்ளது என்று சொல்வது சப்பைகட்டு
:-))
மனைவி, தாயின் நடுவில் மாட்டிக் கொண்டு ஒருவன் தவிப்பதற்கு காரணம் அது உரிமை போராட்டம். பொறாமையில்லை.
மகாபாரதம் கவர்ந்த அளவு ராமயணம் என்னை கவர்ந்ததில்லை. காரணம், ம.பா அனைத்தும் யதார்த்தமான பாத்திரங்கள்.
ராமாயணத்தில் அனைத்தும் எடுத்துக்காட்டுகள் சிறந்த மகன், மனைவி, நண்பன், வேலைக்காரன், தம்பி.....

//குஷ்பு மாதிரி உங்க blog ம் கொஞ்சம் famous தானே// :-))))))

 
At Thursday, 09 March, 2006, சொல்வது...

///மனசு, பெண்களின் குணங்களாக மட்டும் சொல்லப்படும் ஒற்றுமையின்மை, பயம், பொறாமை, வம்பு பேசுதல் போன்றவை ஆண்களிடம் இல்லை என்று சொல்வது ஆணாதிக்க மனாப்பான்மை.குறைவாக உள்ளது என்று சொல்வது சப்பைகட்டு
:-))///

என்று சொல்லிவிட்டு எதற்கு ஸ்மைலி.

சரி சரி ஒத்துக்கொள்கிறேன்.
உங்களிடம்(பெண்களிடம் )பேசி ஜெயிக்கமுடியாது.

அம்மா காலில் விழுந்த அமைச்சர் மதிரி சரண்டர்.

 
At Thursday, 09 March, 2006, சொல்வது...

Vanakam Usha Madam:-)Nalama?

\\ஆனால் சில பெருசுகளிடம் வணக்கம் சொல்லுவதே சால சிறந்தது என்றாள்.\\ hmm sarithane avanga sonathu!

 

Post a Comment

<< இல்லம்