Tuesday, April 04, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : சொர்க்கமே என்றாலும்

ஒரு அவசர பயணமாய் ஊருக்கு பத்து நாட்கள் சென்று வந்தேன். இன்னும் தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. சுவரொட்டிகளில் விஜயகாந்தும், திருமாவும் அதிகம் கண்ணில் பட்டார்கள். அரசியல்வாதி அல்லாமல் சுவரொட்டிகளில் சிரித்துக் கொண்டு அருள்பாலித்துக்கொண்டு இருந்தவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (மூன்று ஸ்ரீ தானே?) இம்முறை அதிக வேலை என்பதால், வாங்கிய புத்தகக்கட்டு வெகு குறைவு. கோவை ஒடிசியில் கண்ணில் பட்டது "கி.ராவுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள்" இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

ஆர்.எஸ்.புரம் தெருவோர பழைய புத்தக குவியலில் சில புத்தகங்கள் கிடைத்தன. உலகிலேயே உனக்கு பிடித்த விஷயம் எது என்று என்னக் கேட்டால், பழைய புத்தகங்களை புரட்டுதல். அதில் இருந்து ஒரு மணம் வரும் பாருங்கள்.... ஆஹா! பைண்ட் செய்த பத்திரிக்கை தாள்கள் என்றால் அதில் இருக்கும் துண்டு செய்திகள், விளம்பரங்கள் படிக்க சுவையாய் இருக்கும். ஆனால் இம்முறை கிடைத்தவை பழைய்ய்ய்ய புத்தகங்கள்.

வெகு சுவாரசியமாய் இருந்ததால், அவசரமாய் படித்தது " நவீன ஒப்பாரிகோவை" "ஜெகமெங்கும் புகழ் பெற்ற இன்பகான கீதமணி திரிசிரபுரம் ஸ்ரீமான் ஆர்.டி.தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றியது"

அனைத்திலும் மாமியார் - உறவுமுறையில் தந்தையின் சகோதரியாக இருந்தாலும் மாமியாரின் சாவு முதல் கணவன் மற்றும் மற்ற உறவு இழப்பிலும் மாமியாரின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது. அடுத்த சுவாரசியம், கணவனுக்கான ஒப்பாரியில் அவன் தாசி வீட்டுக்கு சென்ற விஷயத்தையும், பிற பெண்களை சைட் அடித்ததையும் சொல்லி ஒப்பாரி வைப்பது. அது என்ன அந்தக்காலத்தில் ஆண்களின் ஒழுக்கம் என்பது இவ்வளவு மோசமாய் இருந்ததா?

முன்பு அட்டை படத்தை எடுத்துவிட்டால், ஆனந்தவிகடனுக்கும் குமுதத்திற்கு வித்தியாசம் தெரியாது என்பார்கள். ஆனால் இப்பொழுது பெரிய முன்னேற்றம். அட்டை இருந்தாலும் வித்தியாசம் தெரியாது. அது என்னவோ ஆவியில் எப்பொழுதும் நமீதா படம் :-) ஆனால் கல்கி ஓரளவு நன்றாக இருக்கிறது. தினகரன் விற்பனை சூப்பர் என்றார் ஆட்டோ ஓட்டுனர். ஒரு ரூபாய்க்கு தரமான தாளில், பதினாறு பக்கங்கள், வண்ணப்படங்கள் என்று இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகு விலை ஏறிவிடும் என்ற உண்மையை எல்லாரும் தெளிவாய் உணர்ந்தே இருக்கிறார்கள். சூரிய குடும்பத்தின் பல மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்ணில் பட்டன. ஜெயாவில் குஷ்பூ ஆரம்பித்த கோடீஸ்வரியைப் பார்த்து அதே போன்ற ரிடையர்ட் ஆன நடிகைகளை வைத்து மலையாள, தெலுங்கில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள்.

தமிழில் ரம்யாகிருஷ்ணன் போல மலையாளத்தில் ஊர்வசி, தெலுங்கில் ராதிகா. வயதுக்குப் பொருந்தாத அதீத அலங்காரத்துடன், அனைவருமே அந்த கால திமிர் பிடித்த பணக்கார மாமியார் கோலத்தில்! பார்க்க சகிக்கவில்லை.

இணையம் மூலம் அறிமுகமான நண்பர்கள் சிலருடனே தொடர்ப்பு கொள்ள முடிந்தது. அதுவும் தொலைபேசியில் மட்டுமே. இரண்டு நபர்களுடனான உரையாடல்கள், அவர்கள் ஏன் தங்கள் அனுபவங்களை இன்னும் அதிகம் எழுதுவதில்லை என்ற எண்ணத்தை தோற்று வித்தது.

ஒருவர், பழைய தோழி. சமஸ்கிருதம் அறிந்தவர். வேதத்தைப் பற்றி அவர் சொன்ன விஷயங்களை அவரே எழுத முன் வர வேண்டும். வேதங்கள் ஆகாயத்தில் ஒலியாய் உலாவருகிறது என்று மெய்சிலிர்ப்பவர்களும், அவைகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் என்று இரண்டே கட்சிகள். தோழியின் எழுத்து நடுநிலைமையுடன் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் மதுமிதா. அவரின் வலைப்பதிவு http://madhumithaa.blogspot.com

அடுத்து அறிவொளி இயக்கத்தில் இருந்து பல சமூக பணிகளும், பத்திரிக்கை இலக்கிய அனுபவம் மிக்கவர். அவரும் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அவர் ஒரு புத்தகம் எழுத முனைந்துள்ளர். புத்தகம் சொல்வது அரவாணிகளின் அவலங்களை. இது அதிகம் தமிழில் பேசப்படாத விஷயம். அவர்களுடனே வாழ்ந்து, செய்திகள் பலவற்றை படாத பாடுப்பட்டு திரட்டியுள்ள பாலபாரதி விரைவில் எழுதி முடிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை. அவர் எஸ். பாலபாரதி அவரின் வலைப்பதிவு http://piditthathu.blogspot.com/

பத்து நாட்களுக்கு முன்பு கல்ப் நியூஸ் பத்திரிக்கையில் படித்த செய்தி பெங்களூரை சேர்ந்த ஜரீனா தன் தாய்மொழியான மலையாளத்தில் "ஒரு அரவாணியின் வாழ்க்கை வரலாறு"
( Autobiography of a Hijra (eunuch) by Jereena) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பிறவி குறையால் அவதியுறும் இவர்களின் வலிகளை யாரும் கவனிப்பதில்லை. ஜரீனா சொல்வது, "இளமையில் பாலின தொழிலாளி, சிறிது வயதானதும் வட இந்தியரின் திருமணங்களில் பாடுவது, குழந்தை பிறந்தால் ஆசிர்வதிப்பது என்று பணம் சம்பாதிப்பது. இவையும் விரும்பி யாரும் தருவதில்லை. குழுவாய் வலுக்கட்டாயமாய் வீட்டில் புகுந்து பேரம் பேசி பணம் வாங்குவது. முப்பது வயதுக்குள் வியாதியால் பீடிக்கப்பட்டு பிச்சை எடுத்து சில காலம் வாழ்ந்து இறந்துப் போவது என்பதே அரவாணிகளின் வாழ்க்கை" என்கிறார்.

பிகு
மாமியாரின் சாவுக்கு மருமகள் பாடும் ஒப்பாரி. இதோ சாம்பிளுக்கு சில வரிகள்

நான் வுளுத்தவடையறியேன் என்னைக் கொண்டவுதாரி முண்டை
அத்தையாரே உன் வாசலிலே நான் ஒரு கரண்டி நெய்யறியேன்
இந்த ஊரார் மதிப்பாரென்று என் தகப்பனுடன் பிறந்த
அத்தையாரே நான் ஒப்புக்கு மாரடித்தேன்
நான் மஞ்ச: குளித்தறியேன் என்னைக் கொண்ட மகாபாவி
அத்தையாரே உன் வாசலிலே ஒரு மருக்கொழுந்து மணமறியேன்
இங்கு வந்த ஜென்மந்தான் மதிக்க என் வாயாடி அத்தையாரே
நான்வோடி வந்து மாரடித்தேன்.

20 பின்னூட்டங்கள்:

At Tuesday, 04 April, 2006, சொல்வது...

வாங்க உஷா,

பயணத்தின் நோக்கம் நல்லபடி முடிஞ்சதா?

ரொம்ப ஷார்ட் & ஸ்வீட்டா எழுதிட்டீங்க பத்துநாள் பாரதத்தையும்!

ஒப்பாரி நல்லாதான் இருக்கு.

ஒருதடவை, பாட்டி வீட்டுப் பரணில் ஒரு தமிழ்புத்தகம் (பாதி தான் இருந்துச்சு) கிடைச்சது.
அதுலே ஒரு கல்யாண வீட்டுலே சாப்புடறவனைப் பத்தி எழுதுனது நினைவுக்கு வருது.
'ஒரு முறம் சோத்தை இலையிலே போட்டு'ன்னு வரும்.
இப்படி ப்ளொக் எழுதப்போறேன்னு அப்பத் தெரிஞ்சுருந்தா, அதைப் பத்திரப்படுத்தி இருப்பேன்:-)

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

welcome back Usha

Radha

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

ஊருக்கு நல்லபடியா போயிட்டு வந்தாச்சா உஷா?

பழைய பைண்டிங் புத்தகங்கள். சென்னை தெற்கு உஸ்மான் ரோட்டில் ஒரு சின்ன லைப்ரரி இருக்கிறது. காந்தியடிகள் வறுகடலை நிலையத்துக்குக் கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது. இங்கு பழைய தமிழ்ப் புத்தகங்கள் (வார இதழகளில் வந்தவை) பைண்டிங்கில் இருக்கின்றன. மாடியில் குப்பல் குப்பலாகக் கிடக்கின்றன. முப்பது நாப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. நான் இரண்டு முறை சென்று அள்ளிக் கொண்டு வந்தேன். என் நண்பன் இரண்டு முறை அள்ளிக் கொண்டு வந்தான்.

மாமியாக் கொடுமையும் ஒப்பாரியும்...நல்ல தலைப்பா இருக்கே....முழுக்கப் படிக்கக் கெடைச்சா நல்லாயிருக்கும்.

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

துளசி, உங்கள் கேள்விக்கு பதில் ஆம். அதனால் மீண்டும் மே முதல் வாரம் ஊரூக்கு செல்லும் உற்சாகத்தில் இருக்கிறேன்.
நானும் பல முறை, இப்படி பிளாக் எல்லாம் எழுதுவேன்னு நினைக்கவேயில்லையே என்று பல விஷயங்களில் நினைத்திருக்கிறேன்.

ராதா, நீங்க பிளாக் ஆரம்பித்தாயிற்றா?

ஜிரா, உங்களை அட் ரஸ் கேட்டேனா? சும்மா இல்லாம, அந்த குப்பையை என்னையும் அள்ள வைப்பது ஞாயமா :-)))
புருஷங்காரன் செத்ததுக்கு அந்தாளோட சின்ன வீடுகளுக்கு கிடைத்த அர்ச்சனைகள் வேண்டுமா?

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

ஒன்றை தெளிவுப்படுத்த மறந்துவிட்டேனே! இந்த "சொர்க்கமே என்றாலும்" தலைப்பு கனடா வெங்கட் அந்த பாட்டை எடுத்துப் போடுவதற்கும் முன்பும், மூக்கு சுந்தர் தன் சுந்தர குரலில் பாடுவதற்கு முதல்நாள் தட்டச்சி தமிழோவியத்துக்கு அனுப்பியது.
ஆக், அறிவாளிகள் மட்டுமே ஓரே மாதிரி சிந்திப்பார்கள் என்று யாரும் தவறாய் நினைக்க வேண்டாம் :-)

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

மீடியாக்களில் இவர்களைப் பத்தி கொஞ்சம் நல்ல விதமா,நையாண்டி செய்யாம இவர்களும் நம்ம சக மனிதர்கள் தா என்ற கருத்தை முன்னிறுத்தலாம்.
எனக்குத் தெரிஞ்சு அரவாணிகளை ஒரு சக மனிதர்களா மதிச்சு மீடியாவில் காண்பிக்கப்பட்ட இடம் தற்போது சன் டீவியில் வரும் "சிதம்பர ரகசியம்" தொடர் தான்.

ஒப்பாரி நல்லாதான் இருக்கு.

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

//வயதுக்குப் பொருந்தாத அதீத அலங்காரத்துடன், அனைவருமே அந்த கால திமிர் பிடித்த பணக்கார மாமியார் கோலத்தில்!

உண்மையான மாதர் சங்கம் சார்பாக கண்டனத்தை தெரிவிச்சுகிறோமுங்கோ!

 
At Tuesday, 04 April, 2006, சொல்வது...

நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்ததில் மகிழ்ச்சி அக்கா...
அடுத்த பயணத்திலாவது சந்திக்க முயல்வோம்.

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

உஷா
வந்து விட்டீர்களா! வாழ்த்துக்கள்.
போன விடயம் நல்லபடி அமைந்ததில் சந்தோசம்.
எளிமையாகவும் இயல்பாகவும் பல விடயங்களைச் சொல்லி விடும் உங்கள் எழுத்தை ரசித்துப் படித்தேன்.

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

உங்கள் பயணம் நல்லபடி முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி. நீங்கள் சென்றது சென்னையா கோவையா? அதைப் பற்றி ஒன்றும் எழுத வில்லையே?

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

Usha,how is UAE weather?namma oorai vida coolaaga thaan irukkum. phone seythatharku many many thanks.oru comment pottatharku oru ugly (very)comment vanthathu.adhanaal peyar podavillai.

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

சுதர்சன கோபால், அந்த தொடரை சில முறையே பார்த்துள்ளேன். முதல் முறையாய் இந்த ஜரீனா
தன் வலிகளை பொதுவில் சொல்லியுள்ளார். இதற்கு முன்பு சுயசரிதம் எழுதியவர் கூட பிரச்சனைகளை சரியாய் சொல்லவில்லை. ஆங்கில மொழிப்பெயர்ப்பு வந்தால் வாங்க வேண்டும். அரசு இவர்களுக்கு ஏதாவது செய்ய முன் வர வேண்டும்.

எழுத்தாளர் ரஜினி ராம்கி, லேசா மாத்திடலாமா? "அந்த கால நாகரீக லேடீஸ் கிளப் மெம்பர்கள் என்று பொருந்தாத தலையலங்காரம், உடையலங்காரத்துடன் வயசான பெண்களை படங்களில் காட்டுவார்கள்.
அப்படி இருந்தார்கள்". சரியா?

எஸ்.பாலபாரதி, கோரிக்கை கண்ணில் விழுந்ததா? அடுத்த முறை வரும்பொழுது ஒரு இணைய எழுத்தாளர் மாநாடு போட்டுடுவோம்.

சந்திரா, நன்றி

கீதா, என்னுடைய எப்பொழுது "இந்திய" பயணம் :-)

அனானிமஸ், நீங்க யாரு என்று தெரிஞ்சிடுச்சு. ஆனா, நீங்க டோண்டு சாருக்கு வாழ்த்து சொல்லியிருந்தா,
அது காரணமாய் "செந்தமிழ்" வாழ்த்து கிடைத்திருக்கும்.

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

//உலகிலேயே உனக்கு பிடித்த விஷயம் எது என்று என்னக் கேட்டால், பழைய புத்தகங்களை புரட்டுதல். அதில் இருந்து ஒரு மணம் வரும் பாருங்கள்.... ஆஹா//

கரப்பான் பூச்சிகள் வந்ததைதான் இப்படிச் சொல்றீங்களா.. :)

வாங்க உஷா

பயணம் எல்லாம் சிறப்பாக அமைந்ததா..வந்தவுடனையே ஆரம்பிச்சிட்டீங்க..
வாழ்த்துக்கள்

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

----மாமியாரின் சாவுக்கு மருமகள் பாடும் ஒப்பாரி. இதோ சாம்பிளுக்கு சில வரிகள்----

இந்தப் பதிவை படித்துவிட்டு குடும்பத்தில் குழப்பம் உருவாகாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் :P ;-)

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

ஞானியாரே! பழைய பைண்ட் புத்தகத்தைப் பிரித்ததும் வரும், மக்கல் வாசனை ( நீங்க வேணா நாற்றம்
என்று சொல்லிக்குங்க :-) எனக்கு பிடிக்கும் என்றேன். பயணத்தின் நோக்கம் நிறைவேறியது.

சதயம், இது முழுக்க முழுக்க சொந்த விஷயமாய் போன அவசரபயணம். வருடாந்தர விடுமுறை பயணம்
இல்லை. குழப்பங்கள், அலைச்சலில் தமிழ் மணம், பிளாக்கு , இணைய நட்பு எதுவுமே ஞாபகம் வரவில்லை. கடைசி இரண்டு நாள் சென்னைக்கு வந்தப் பிறகே இணையம் ஞாபகம் வந்தது. துளசி மாதிரி ஜாலியா என்சாய் செஞ்சிருந்தா விலாவாரியாய் எழுதலாம் :-)

துளசி, இணைய மாநாட்டுக்கு முதலை படம் போட்ட சல்வார் எங்காவது கிடைக்குமா :-)

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

// அறிவாளிகள் மட்டுமே ஓரே மாதிரி சிந்திப்பார்கள் என்று யாரும் தவறாய் நினைக்க வேண்டாம் :-) //
இதில் உள்குத்து எதுவும் இல்லைதானே ?
:-)))

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

Usha nanRi.ARIVAALI pada paattu thaan ninaivu vanthathu."vaazhum nerimuraikke ilakkanam aanathu.
manam mozhi meyyinikka saappitta thenithu" enRu. Ivvalavu nalla mozhiyil ithhanai VERA words irukkum yena therikirathu.old books patri sonnavarukkum nandri.Udane poga vendiyathuthaan.

 
At Wednesday, 05 April, 2006, சொல்வது...

பாபா, யார் குடும்பத்துல :-) ஆனா, நான் சென்னைக்கு வருவதற்கு இரண்டு நாள் முன்பு நீங்க வந்துப் போனது கேட்டு ரொம்ப வருத்தமா இருந்தது. ஒரு இலக்கியவாதியை சந்திக்கும் பாக்கியம் கை நழுவிப் போனதே என்று. (நோ ஸ்மைலி)

லதா, இதுல என்ன உள்குத்து :-(

ஐயா/அம்மா அனானிமஸ், நானும் அந்த அறிவாளி பாடலை எழுத்துக்கூட்டி படித்தும், பொங்குதமிழில் காப்பி பேஸ்ட் செய்து மொழிப் பெயர்க்கப்பார்த்தும் ஒன்றும் விளங்கவில்லை. தயவுசெய்து இங்கிலீபீசுல வேணா எழுதுங்க. இந்த தங்கீலீசு வேண்டாங்க. தமிழில் அடிப்பது (தட்டச்சுவது) ஒன்றும் கடினமில்லை. தவறாய் நினைக்காதீங்க. உங்கள் மறுமொழிக்கு நன்றி

 
At Friday, 07 April, 2006, சொல்வது...

sorry usha.am trying to download tamil fonts.this is thuzhaai. forgot to tell you we had the good fortune of sri.Ki.rajanarayanan and his dear wife Kanavathi ammal visit us.It was a wonderful 2 hours we had with them.

 
At Saturday, 08 April, 2006, சொல்வது...

//ஆனால் கல்கி ஓரளவு நன்றாக இருக்கிறது.//

:-)))

 

Post a Comment

<< இல்லம்