பெண்களுக்கான பத்திரிக்கைகள் தேவையா
எனக்கு நினைவிருந்தவரையில் பெண்களுக்கு என்று தமிழில் ஆரம்பிக்கப்பட்டு சக்கைப் போடுப் போட்ட முதல் பத்திரிக்கை "மங்கை". (இப்பொழுது வருகிறதா என்ன?) என் அம்மா அதை விரும்பி வாங்குவார். போதாதற்கு அம்மா எழுதி அனுப்பிய மூன்று பக்க சிறுகதை சுருக்கி ஒரு பக்க கதையாய் வந்தது. அதுவே முதலும் கடைசியுமான படைப்பு. இல்லை இல்லை அதற்கு முன்பு அம்புலிமாமாவில் அரைப்பக்க கதை. அப்பொழுது இணையமில்லை, இப்பொழுது இருக்கிறது. பிளாக் ஆரம்பித்து எழுதி தள்ளலாம் என்றால் அம்மாவுக்கு எழுத்தார்வம் எல்லாம் நீர்த்துப் போன வயது ஆகிவிட்டது.
படிக்க தெரிந்த நாள் முதலாய் வெள்ளை காகிதத்தில் எறும்பு ஊறினாலும் அதை எடுத்துப் படித்த எனக்கு மங்கையும், ஆனந்தவிகடனும் ஒன்றாகவே தோன்றியது. ஆனால் வீட்டுக்கு வரும் என்னுடைய வயதை ஒத்த உறவு பையன்கள் மங்கை மற்றும் அம்மா வாங்கும் கலைமகள் பத்திரிக்கைளை நான் படிப்பதைப் பார்த்து கிண்டல் அடிப்பார்கள்.
பிறகு வாழ்க்கை ஓட்டத்தில் இந்தியாவில் பல இடங்களில் குடியேறியப் பொழுது அச்சில் தமிழ் எழுத்தை காண்பதே அபூர்வம் என்ற நிலையில் எப்பொழுதாவது கிடைக்கும் பத்திரிக்கைகளில் மங்கையர்மலர் கட்டாயம் இருக்கும். அப்பொழுதும் தமிழ் படிக்க கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அச்சிட்டவர் முதல் கடைசி பக்கங்களில் வரும் திருமணமலர் வரை மேய்வேன்.
பிறகு வெளிநாட்டில் குடிபெயர்ந்து, இணையத்தில் தமிழும் படிக்க ஆரம்பித்ததும், தமிழ் பத்திரிக்கைகளைத் தேடி அலைவது குறைந்தது. மங்கையர் மலரின் அதீத விளம்பரங்களும் மற்றும் என் ரசனைக்கு ஒத்துவராத அம்சங்களும் அதிகம் இருந்ததால், வலுவில் கிடைத்தாலும் ஒரு புரட்டு புரட்டிவிட்டு திரும்ப தந்து விடுவேன்.
அவள் விகடன் ஓரளவு பரவாயில்லை என்று தோன்றும். ஞாநீ எழுதிய போராட்ட பெண்களின் சரித்திரமும், மகளிர் சுயநிதி குழுக்கள் போன்ற பெண்கள் முன்னேற்றம் பற்றிய விஷயங்கள் நன்றாகவே இருக்கும். பெண்ணே நீ என்ற பத்திரிக்கை டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகளால் நடத்தப்படுவது, இணையத்தில் சில முறை கண்ணில் விழும். குமுத குழுவின் சிநேகிதி பார்த்ததில்லை. ஆனால் எழுதுகிறேன் என்றதும், பலரும் சொன்னது "மங்கையர் மலருக்கு எழுதுவதுதானே என்று?" இந்த ஆணாதிக்க மனோபாவ கேள்வியின் அர்த்தம்
தெளிவாய் விளங்கும். இன்னும் பெண்கள் எழுத்து என்பது சமையலறையைத் தாண்டி வரவில்லை என்பதுதானே!
கொஞ்சம் இலக்கியவாதிகள் நட்பு, இலக்கியம் என்றால் என்ன போன்ற அறிதலில் (!) இந்த பத்திரிக்கைகள் குறித்து ஓரளவு அலட்சியம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த எண்ணமும் முழுக்க முழுக்க தவறு என்பதை உணர்த்த ஒரு நிகழ்ச்சி,.
ஒருமுறை என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தப் பொழுது, பேசிவிட்டுக் கிளம்பும்பொழுது, அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் ஒரு பேப்பர் கட்டிங்கை காட்டினார். அதில் நடிகை ஜெயபிரதாவிடம் பெரிய ஷீல்டு வாங்குவதைப் போல ஒரு படம் இருந்தது. என்னவென்று விசாரித்தால், பலகைத் தொழில் திறமையைக்கு அந்த பரிசு என்றார். ஏதோ பெண்களுக்கான சங்கமோ, பத்திரிக்கையோ ஏற்படுத்திய விழாவில் அவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை யாரும் பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர் தயக்கமே காட்டியது. அவரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாராட்டி பேசியதும், பெரிய பைலைக் கொண்டு வந்தார். அதில் அவர் பல பெண்கள் பத்திரிக்கைகளில் எழுதிய குறிப்புகள், கோலங்கள், கைத்தொழில்கள், சமையல்குறிப்புகள். அவைகளைப் பாராட்டி பலர் எழுதிய வாசகர் கடித வரிகள் என்று ஏராளமாய் இருந்தது. அவர் அதிகம் படித்தவர் இல்லை. ஆனால் தன் திறமை என்பதை நீரூபிக்கவும், ஒரு அங்கீகாரத்தை தேடும் ஏக்கமும் அவர் செயலில்
வெளிப்பட்டது. இது இலக்கியம், ஓவியம், நடனம் மற்றும் அனைத்து திறமையை நீருபிக்க மற்றும் அங்கிகாரத்தை நாடும் அனைவரின் எண்ணம்தானே? இதில் அவருடையது தாழ்ந்தது, மற்றவை சிறந்தது என்ற எண்ணம் தவறு என்பதை அன்று உணர்ந்தேன்.
பெண்கள் பத்திரிக்கை என்றால் கேவலம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. எந்த விஷயம் யாருக்கு தேவையோ, அது அவர்களுக்கு! அவரவர் அறிதலும் புரிதலும் வைத்து ரசனையும் படைப்பும் இருக்கின்றன. அதற்கேற்ற வாசகர் வட்டமும் இருக்கிறது. இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வது நாம்தானே!
எனக்கு தெரிந்த இரண்டு மங்கையர்மலர் வகையறா குறிப்புக்கள்.
1) குக்கர் போன்றவைகளில் இருக்கும் கைப்பிடியில் இருக்கும் ஸ்க்ரூக்கள் அடிக்கடி லூஸ் ஆகிவிடும். super glue போன்ற பசை ஒரு சொட்டு ஸ்க்ரூவில் இட்டுவிட்டு முடுக்கினால், நன்கு பிடித்துக் கொள்ளும்.
2) காலை அவசரத்தில் உள்பாவாடை, சல்வார்கம்மீசின் நாடா ஒரு பக்கம் உள்ளே போய் பேஜார் செய்யும். சுண்டு விரலை உள்ளே நுழைத்து எடுக்க முயற்சித்து, கடைசியில் முழுவதும் உருவி, பின்னை தேடி நாடாவில் இணைத்து மீண்டும் நுழைப்போம். இந்த பிரச்சனையில் இருந்து மீள ஒரு வழி. நாடாவை உள்ளே நுழைத்தப் பிறகு, நடுவில் பாவாடை/ சல்வாரில் ஒற்றை தையல் தைத்துவிட்டால், (மிக சரியாய் பின் பக்கத்தின் மேல்) உருவிக் கொண்டு வெளியே வராது.
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க
http://www.tamiloviam.com
25 பின்னூட்டங்கள்:
வலை ஏற்றிவிட்டு, திரும்ப வந்துப் பார்த்தால் தலைப்பு இருக்கிறது. உள்ளே ஒன்றையும் காணோம்.
அதனால் இந்த மீள் பதிவு.
உண்மை தான். பெண்கள் பத்திரிக்கை என்று சொன்னாலும், அதிலும் நிறைய விஷயங்கள் பொதுவாகத் தானே இருக்கிறது.. எனக்கும் மங்கையர் மலர் பிடிக்காது. எல்லா பக்கத்திலும் சமையல் குறிப்பும், குழந்தை வளர்ப்புமாக இருக்கும் அந்த 'மகளிர்' புத்தகத்தை விட, அவள் விகடன் எவ்வளவோ மேல். விளம்பரங்களில் சொல்வது போல் நல்ல தோழியாகத் தான் 'அவள்' இருக்கிறது.
இன்றைய பெண்களுக்குத் தேவை சமையல் குறிப்புகளும், அழகுக் குறிப்புகளும், கோலம் போடும் பாடங்களும் மட்டும் இல்லை என்று புரிந்து கொண்டதற்காகவே எனக்கு 'அவள்' பிடிக்கும்.. பெண்களுக்கான பத்திரிக்கை தேவையா என்றால், தேவை என்று தான் சொல்லத் தோன்றுகிறது..
usha snehithi is also good. selfhelp groups are highlighted.magalir mattum magazines are needed. but they will not come out of the same formula.cooking,knitting,embroidery tips.If you are not equipped in any of thiese arts you do not belong.Manu
உஷா
பெண்களுக்கான பத்திரிகை தேவைதான்.
பல பெண்களை எழுதத் தூண்டியதே பெண்களுக்கான பத்திரிகைகள்தான்.
ஆனால் பெண்கள் பத்திரிகைகள் எல்லாம் சமையலும், சாப்பாடும், கோலமும், தையலும்... என்றிராது பெண்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடிய பத்திரிகைகளாக இருக்க வேண்டும்.
சமையலும் சாப்பாடும் கோலமும், தையலும்.. தேவையில்லையென்று நான் சொல்லவில்லை. அவைகள் பெண்கள் பத்திரிகையில்தான் வரவேண்டும் என்றில்லை. சுவையான நளபாகம் எமக்கெல்லோருக்கும் வேண்டும். அழகிய கோலத்தை எவரும் ரசிக்கலாம். அவைகள் எந்தப் பத்திரிகையிலும் வரலாம். அதை நாம் வரவேற்கலாம்.
அதற்காக பெண்கள் பத்திரிகை என்ற உடன் சமையல், தையல், கோலம்.. என்று வருவதுதான் பிழை.
ஆஹா.... எழுத்தாளர் குடும்பமா? அதானே பார்த்தேன்.......:-))))
உஷா,
நீங்க சொல்றது போல எல்லாவகைக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கத்தானே செய்யும்?
ரசனைன்றது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு.
நம்ம மொழிகளிலெதான் இப்படின்னு நினைச்சுக்காதீங்க. இங்கே எல்லா லேடீஸ் பத்திரிக்கைகளிலும்
ஹோம் டிப்ஸ், சமையல், சைக்கிக் ரீடிங், டாக்டர் கேள்விபதில், டிவி/சினிமாக்காரங்களுடைய
மிரக்கிள் எஸ்கேப் இல்லேன்னா மிரக்கிள் பேபி அப்புறம் காஸிப் இப்படி முப்பது வருசமா
மாறாம இருக்கு.
முக்கியமானதை விட்டுட்டேன் பாருங்க.
தனிப் பத்திரிக்கை தேவை இல்லை
'பெண்களுக்கென்று எதுவுமே தேவையில்லை எனும்போது பத்திரிக்கை மட்டும் எதற்கு?' என்று தேவையில்லாமல் எழுதி மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டுமென்று எனக்கு ஏதாவது தேவையா என்ன?
தேவையானதை தேவையான நேரத்தில் தேவையில்லாமல் சொல்வதில்லை என்ற தேவையான தீர்மானத்துக்கு நான் வந்து பலநாளாகிறது. அட தேவுடா!! பெண்களாம் பத்திரிகையாம் ஆணாதிக்க்மாம். திருந்தவே மாட்டீங்களா? :-)
சாத்தான்குளத்தான்
பெண்களுக்கான பத்திரிகை தேவைதான். அதே போல ஆண்களுக்கும் பத்திரிகை நிச்சயமாகத் தேவையான ஒன்று. பொதுப்பத்திரிகைகள் பொதுவாகவே இருக்க வேண்டும்.
மங்கை இப்பொழுது வருவதில்லை என்று நினைக்கிறேன். மங்கையர் மலர் முன்பெல்லாம் மிகவும் நன்றாக இருந்ததாம். இப்பொழுது சரியில்லை என்று எனது அம்மா சொன்னார்கள். அவள் விகடன் படிக்கிறார். கலைமகளும் மிகச்சிறந்த பத்திரிகையே. ஆனால் என்னளவில் அது பொதுப்பத்திரிகை. ஆனால் நானும் படித்து நாளாகிறது.
பெண்கள் பத்திரிகையில் வீட்டுக்குறிப்புகள் வருவது தவிர்க்க முடியாது. ஆண்களுக்கான பத்திரிகைகள் தமிழில் இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் உண்டுதானே. அதில் ஷேவிங் செட் உடைந்து போனால் செய்ய வேண்டியவைகளும், பெல்ட்டில் ஓட்டை பெரிதானால் என்ன செய்ய வேண்டும் நிச்சயம் இருக்கும்.
Usha, what I meant in my earlier mail was,
If you are not good in any artistic tendenceies you do not belong ennum "Ennam " thaan vendaam.My mother used to love Aval Vikatan.She was so good in Croche and embroidery.
thank you for a very good thought and post,. Manu
ராகவன்
ஜேர்மனிய மொழியில் ஆண்களுக்கான மகசின்கள் வருகின்றன.
ஒவ்வொருவாரமும் அதில் ஒன்றைப் படிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கும்; கிடைக்கிறது.
பெண்களைக் கவருவது எப்படி என்பதிலிருந்து ஆண்களின் உடல்நலம் வரை நிறைய ரிப்ஸ் கொடுக்கிறார்கள்.
தமிழில்தான் ஆண்களுக்கான பத்திரிகை சஞ்சிகைகளை நான் காணவில்லை.
Have you read or heard of Manushi.If not try at
www.indiatogether.org
FYKI AIDWA publishes a Tamil
Monthly Mahalir Sinthani.
தனி பெண்களுக்கான பத்திரிக்கை இருக்கின்ற காரணத்தால், அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வு கிடைப்பதாக இருக்கலாம். கோலம், சமையல் என்பதெல்லாம் மாடெர்ன் மங்கையர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக இருக்கலாம்.
ஆசிப்,
பெண் பத்திரிக்கைக்கும் பெண் விடுதலைக்கும் என்ன தொடர்பு? it is a type of magazine aimed at one particular market. it does have interesting informatoin. I does have useful tips.. what is wrong with that?
movie magazine இல்ல? சினிமா பைத்தியம் அப்படின்னு category இருக்கா? அவங்களுக்கு யார்கிட்டயிருந்தாவது விடுதலை தேவைப் படுதா?
//"மங்கையர் மலருக்கு எழுதுவதுதானே என்று?" இந்த ஆணாதிக்க மனோபாவ கேள்வியின் அர்த்தம்
தெளிவாய் விளங்கும்//
LOL.
//இது இலக்கியம், ஓவியம், நடனம் மற்றும் அனைத்து திறமையை நீருபிக்க மற்றும் அங்கிகாரத்தை நாடும் அனைவரின் எண்ணம்தானே? இதில் அவருடையது தாழ்ந்தது, மற்றவை சிறந்தது என்ற எண்ணம் தவறு என்பதை அன்று உணர்ந்தேன்.//
good one.
//பெண்கள் பத்திரிக்கை என்றால் கேவலம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. எந்த விஷயம் யாருக்கு தேவையோ, அது அவர்களுக்கு! //
I certainly like சமையல் குறிப்புகள். particularly like the திடீர் பிரியாணி I prepared yesterday. wanna know? LOL.
//1) குக்கர் போன்றவைகளில் இருக்கும் கைப்பிடியில் இருக்கும் ஸ்க்ரூக்கள் அடிக்கடி லூஸ் ஆகிவிடும். super glue போன்ற பசை ஒரு சொட்டு ஸ்க்ரூவில் இட்டுவிட்டு முடுக்கினால், நன்கு பிடித்துக் கொள்ளும்.//
LOL.
washer போடணும்.
எப்பவுமே tester ஒண்ணு kitchen drawerல வைச்சுக்கணும்.
2nd is not relevant for me anymore. :)
Women magazine more important these days than ever before. many girls are living away from their families. many girls go to hostel for their studies.. There are many "women things" they cannot discuss with others. Awareness will not come if they don't know even that "there are things they have to know".. Women magazines are certainly important. Particularly dealing with psychological aspects..
நாகு,
//தனி பெண்களுக்கான பத்திரிக்கை இருக்கின்ற காரணத்தால், அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்வு கிடைப்பதாக இருக்கலாம். //
how generous of you!
//கோலம், சமையல் என்பதெல்லாம் மாடெர்ன் மங்கையர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக இருக்கலாம். //
ஏன் ஞாபகம் வைச்சுக்கணும்?. நீ கத்துக்கயேன். உன் இனத்துக்கு சொல்லிக்கொடேன்.
மாடர்ன் மங்கையரா? யாரு? மாடர்ன் இல்லாதவங்க யாரு?
அய்யோ ராமா!
usha, read my blog when you have time. premalathakombaitamil.wordpress.com
I have been writing a series called "four girls".. I have written 4 chapters so far. they are not very descriptive type.. hope you like it.
ஆண்களுக்கு மங்கையர் மலர் ஆற்றிய தொண்டு என்ற பரிமாணம் ஒன்று உண்டு. குடும்பப் பத்திரிக்கையான மங்கையர் மலரை ரெண்டும் கெட்டான் வயதில் வீட்டிற்குள்ளேயே படித்து, பெண்மை குறித்த எத்தனை சந்தேகங்களை, பிரச்சனைகளை, தீர்வுகளை விடலைப்பையன்கள் அறிய முடிந்தது தெரியுமா? இப்போது நிலை வேறாயிருக்கலாம். ஆனால் அறியாமை இருளில் இருந்து விடுபட மங்கையர் மலர் அன்று விடலைப்பையன்களுக்குச் செய்த சேவை மகத்தானது. :)
thani pathrigai thevaidhan
thani pathrigai illadhirundhal
ivvalavu per ezhdhave thuvangi irukka mattargal
pazhzya thalaimurai arinthirukkum pala vishayangal pudhiya thalai murayai sendru adahvadhu eppadi?
சென்னை மகளீரைப் பற்றிய(குறிப்பாக மாடர்ன் பெண்கள்) எனது மதிப்பீட்டினை, மறுமதிப்பீடு செய்ய வைத்தது Deccan Chronicle -chennai edition (see Party Whril)
அனைவரும் மன்னிக்க. தாமதமாய் நன்றி சொல்கிறேன்.
ஆசிப்ஜி, தங்கள் பதில் பின்நவீனத்துவ/ யாதார்த்த மாந்தீரிக்வாதம் வகையறாவில் வருமா? காரணம், மிக
அதிகமாய் "தேவை"களை அடுக்கியதால் சரியாய் புரியலை :-)
நாகு, அப்படியே மாடர்ன் ஆண்களும் காளையடக்குதல், சிலம்பம் இத்தியாதிகளை கற்றுக்கொண்டு, நம்
பாரம்பரிய பெருமைகளை விடாமல் காப்பற்ற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அருணகிரி, பதிமூன்று வயதில் கிளுகிளுப்பாய் இருந்தவை முப்பத்திமூன்று வயதில் மனைவி
படும் வேதனையும், துன்பமும் பார்த்து, படித்தவைகளை நினைக்கூர்ந்தால் சரி.
சிவஞானம்ஜி, நீங்கள் சொல்லியது மிக சரி. பாட்டிகளின் பழைய வாழ்க்கையைப் படிப்பொழுது
காலம் எவ்வளவு மாறிக் கொண்டு இருக்கிறது என்பது புரியும்.
அனானிமஸ், மனுஷி சுட்டிக்கு நன்றி
சந்திரா, அவன் விகடன் வந்துடும் போல இருக்கே :-) ஆனா, இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரத்தில் கோலம் போட ஏது இடம்?
மனு, சிநேகிதி படித்துப் பார்க்கிறேன். ஆனால் கோலம், கை வேலை, சமையல் குறிப்புகள் போன்றவைகளை தவிர்க்கலாம். சுலப சமையல், மற்றும் சமையலறை/ வீட்டு குறிப்புகள் அவசியம்.
இதில் ஆண் என்ன பெண் என்ன? நம்ம ஜிரா சொல்வதுப் போல, அவை இருவருக்கும் தேவையானவையே!
ஜிரா, இந்த பதிவு எழுதும்பொழுது இன்றைய தலைமுறையான நீங்கள் எழுதும் சமையல் குறிப்புகள் ஞாபகம் வந்தது.
பொன்ஸ், நீங்க சொன்னதைப் போல அவள் விகடனில் பல பக்கங்கள் பெண்களுக்கு மட்டுமானது என்று இல்லாமல் இருப்பதாலேயே படிக்கலாம் என்று தோன்றும்.
துளசி, விமன்ஸ்ஹிரா பார்த்திருக்கீங்களா? சற்றேரக்குறைய மங்கையர்மலரை ஆங்கிலத்தில் படிப்பதுப்
போல இருக்கும். பெமீனா, அதீத பெண்ணுரிமை பேசுவதும், ஆண்களை வக்கிரமாய் சித்தரிப்பதுமாய்
இருந்தது. இவற்றை எல்லாம் கையில் தொட்டே பல வருடங்கள் ஆகின்றன.
ஆஹா! பிரேமலாதா! வாங்க வாங்க! போடு போடுன்னு போட்டு தாக்கிட்டீங்க. நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் படித்துவிடுவது. கமெண்ட் போட வேண்டும் என்று நினைத்தாலும்.
பிறகு என்று ஒத்திப் போட்டு அப்படியே விட்டுப் போய்விடுகிறது.
// ராகவன்
ஜேர்மனிய மொழியில் ஆண்களுக்கான மகசின்கள் வருகின்றன.
ஒவ்வொருவாரமும் அதில் ஒன்றைப் படிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கும்; கிடைக்கிறது.
பெண்களைக் கவருவது எப்படி என்பதிலிருந்து ஆண்களின் உடல்நலம் வரை நிறைய ரிப்ஸ் கொடுக்கிறார்கள்.
தமிழில்தான் ஆண்களுக்கான பத்திரிகை சஞ்சிகைகளை நான் காணவில்லை. //
ஓ அதுவும் அப்படியோ! நல்ல தகவல் சந்திரவதனா...ஆண்களுக்கென்று வரும் மேலைப் பத்திரிகைகள் எல்லாம் அந்த மாதிரிப் புத்தகங்கள் என்றே நினைத்திருந்தேன். அப்படியில்லை போலிருக்கிறது. ஆண்களுக்கும் இந்தியாவில் பத்திரிகை வேண்டும்தான். உண்மையிலே தேவைப்படுகிறது.
// நாகு, அப்படியே மாடர்ன் ஆண்களும் காளையடக்குதல், சிலம்பம் இத்தியாதிகளை கற்றுக்கொண்டு, நம்
பாரம்பரிய பெருமைகளை விடாமல் காப்பற்ற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். //
அதே அதே உஷா....யாருக்கு என்ன தேவையோ....அதப் பாக்குறதுதான் நல்லது. பண்பாட்டைக் காப்பாத்துறத ஆண்கள் ரொம்ப எளிமையா பெண்கள் தலைல கட்டீர்ராங்க. பெரும்பாலான பெண்களும் உச்சி குளுந்து ஏத்துக்கிறாங்க...கஷ்டம்டா சாமி.
// ஜிரா, இந்த பதிவு எழுதும்பொழுது இன்றைய தலைமுறையான நீங்கள் எழுதும் சமையல் குறிப்புகள் ஞாபகம் வந்தது. //
உண்மைதான் உஷா. இன்றைய நிலையில் சமையல் என்பது இருபாலாருக்கும் பொது என்ற நிலையை நோக்கிப் போகிறது. இன்றைக்கும் வேலைக்குப் போகும் பெண்டாட்டிதான் வீட்டில் சமைத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிற ஆண்கள்தான் பெரும்பான்மை என்று இருந்தாலும் சமையல் தெரிந்திருக்கும் ஆண்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனாலும் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம். இதற்குப் பெண்களிடமும் விழிப்புணர்ச்சி வேண்டும்.
ஜிரா, கடைசிவரி சத்தியம். கையில் போட்டிருப்பது விலங்கு என்பதே தெரியாமல் நைன் ஒன் சிக்ஸ்ஸா,
பிளாட்டினமா, ஒயிட் கோல்டா என்று பெருமையளிந்துக் கொண்டிருக்கிறோம்
"பதிமூன்று வயதில் கிளுகிளுப்பாய் இருந்தவை முப்பத்திமூன்று வயதில் மனைவி படும் வேதனையும், துன்பமும் பார்த்து, படித்தவைகளை நினைக்கூர்ந்தால் சரி".
Definitely. Infact college-இல் படிக்கையிலேயே பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய சில மாணவர்களை எதிர்த்துப் பேசி கேலிக்குள்ளானவன்தான் நான்.
நன்றி அருணகிரி. பல பதிவுகளில் உங்கள் பதில்களில் உள்ள எழுத்தின் வல்லமையை அவதனித்துவருகிறேன்.
உங்களுக்கான வலைப்பதிவு "முதல் முதலாய்" என்று வருகிறது. ஆனால் கிளிக்கினால் not found" என்றும்
வருகிறது. இதுவரை எழுத ஆரம்பிக்கவில்லை என்றால், விரைவில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
மிகவும் மகிழ்ச்சி சகோதரி (சக யாத்திரி). எழுத வேண்டும் என்றுதான் தொடங்கினேன். முதன் முதலாய் எழுதுவதால் அப்படி ஒரு பெயரையும் வைத்தேன். தொடந்து எழுதாததற்குப் பல காரணங்கள்.
- நன்றாக எழுத முடியுமா என்ற தன்னம்பிக்கையின்மை; எழுத எழுத இது மறைந்து வருகிறது.
- பின்னூட்டங்களிலேயே நேரம் போய் விடுகிறது. (எனது பின்னூட்டங்களை வலைப்பதிவாகத் தொகுத்தாலே போதும் என்று தோன்றுகிறது).
- வலையில் 'விழுந்ததில்' இருந்து என் முதல் காதலான படிப்பதில் கவனம் குறைந்து விட்டது. இது வலைப்பக்கம் என்ற புதிய committment தேவையா எனக் கேட்க வைக்கிறது.
இருந்தாலும் முயற்சிப்பேன். நன்றி.
Post a Comment
<< இல்லம்