Wednesday, April 19, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : சில செய்திகள் மற்றும் முடிவுரை

ஒரு வழியாய் பெங்களூரில் கலவரங்கள் ஓய்ந்து, அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. தலைவர்களின் இயற்கையான மரணமோ அல்லது கைது போன்று எதுவானாலும் இத்தகைய கலவரங்கள் வரும் என்பதை வெகு யதார்த்தமான விஷயமாய் ஏற்றுக் கொள்ள நம் மனது பழகிவிட்டது. ரசிகர்கள் எம்.ஜி.ஆர் தலைவனாய் ஏற்றுக் கொண்டார்கள், என்.டி.ஆரோ கலியுக தெய்வம். ஆனால் ராஜ்குமாரை, தன் குடும்பத்தின் மூத்த அண்ணனாய் அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும், மொழிக்கு அவர்தந்த முதலிடமும் கலவரங்களுக்கு காரணமா? அல்லது இதுவும் ஒரு அரசியலா? இதுநாள்வரை மனிதமனத்தில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் வெளிவர இது ஒரு வாய்ப்பா? பளபளக்கும் வண்டிகளும், அதன் உள்ளே இருக்கும் பணம்படைத்தவர்களும், மாதாந்திர சம்பளமாய் லட்சங்களை சம்பளமாய் அளிக்கும் நிறுவனங்களும், ஏழ்மையில் வாழ்பவனின் இயலாமையின் ஆத்திரம், குரூர வெறி தாக்குதலாய் வெளிப்படுகிறதா? எல்லாமே கலந்து கலவரமாய் வெடிக்கிறது.

ஆனால் இந்த இடத்தில் ஒரு மிக நல்ல விஷயம். ராஜ்குமார் அவர்கள் தன் இரு கண்களையும் தானமாய் வழங்கியுள்ளார். இந்த நல்ல விஷயத்தை அவரின் ரசிகர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படிக்கத் தொடங்கிய, "கு.அழகிரிசாமி கடிதங்கள். கி.ரா.வுக்கு எழுதியது" புத்தகத்தை முடித்துவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், சில இடங்கள் திரும்ப திரும்ப படிக்க வேண்டியுள்ளது. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முதல் இடம் வகிக்கும் கி.ரா அவர்களின் இசை முயற்சிகள், இலக்கிய ஆர்வங்கள் வியக்க வைக்கின்றன. கடிதங்களைப் படிக்கும்பொழுது, இது நண்பர்களுக்கிடையேவான கடிதமா அல்லது காதலர்கள் எழுதிக் கொண்டதா என்ற எண்ணம் தோன்றும் விதம் அன்பு வார்த்தைகளில் பிரவாகமாய் பொங்கி வழிகிறது.

கி.ரா.வுக்கும், அழகிரிசாமிக்கும் தாய்மொழி தெலுங்கு. அதை அவர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் "லிபி அழிந்து, ஏட்டின் பலமில்லாத, தொய்ந்துப் போன தெலுங்கு". தாய்மொழி என்பதால் ஏதோ ஒட்டிக்கொண்டு இருக்கிறதே தவிர, எழுத படிக்க இலக்கிய தீனி கிடைக்காதததால், மொழியின் மீது பிரேமை கிடையாது.

இதை நான் சொல்ல காரணம், எனக்கும் தாய்மொழி என்று சொல்லப்பட்டது கன்னடம். பல நூற்றாண்டுகளாய் தமிழகத்தில் வசிப்பதால், பேச்சு மொழியில் தமிழ் அதிகமாய் கலந்திருக்கும். ஒருமுறை பெங்களூரில் நாங்கள் பேசுவதைப் பார்த்து, 'நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள்? கன்னடம் போல இருக்கிறது. ஆனால் கன்னடம் மாதிரி இல்லையே" என்றார். முன்பு வீட்டில் பெரியவர்கள் கண்டிப்புக்கு இணங்க பேசப்படும் மொழி, சினிமா, புத்தகம், வம்பு,தும்பு என்றால் சாதாரணமாய் தமிழே புழங்கும். (இன்று இது ஆங்கிலமாய் மாறி
விட்டது வேறு கதை).



--------------------------------------------------------------------------------


"கொஞ்சம் கதைக்கலாம் வாங்க" முன்னுரையும் சேர்ந்து இந்த வாரத்துடன், பன்னிரண்டு வாரம் ஆகிவிட்டது. இத்துடன் முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.

மீண்டும் கோவை, சென்னைப் போக வேண்டிய வேலை வந்துள்ளது. அப்படியே ஈரோடு, நாமக்கல் என்று ஒரு ரவுண்ட் அடிக்க உத்தேசித்துள்ளேன். கொங்கு மண்டலத்தை சேர்ந்த என் பாட்டி தன் வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அவை பாட்டியின் சொந்தகதை மட்டுமில்லாமல் ஒருவகையில் அக்காலச் சரித்திரம் என்று சொல்லலாம். முன்பு பொதுவில் லேசாய் சொன்ன விஷயத்தை, இன்று விலாவாரியாய் சொல்லுகிறேன். பாட்டி மற்றும் வீட்டின் பெருசுகள் சொன்னதை நாவலாய் எழுத வேண்டும் என்ற பேராசை, ஒரு வருடத்திற்கு மேலாய் மனதின் ஒரு ஓரத்தில் உழன்றுக் கொண்டு இருக்கிறது.

ரூட்ஸ், தலைமுறைகள் படித்ததின் தாக்கமோ என்னவோ! கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு கதை மனதில் உருவமாய் வந்துவிட்டது. இன்னும் எழுத தொடங்கவில்லை. எப்படி வரும், எதிர்கால திட்டம் என்ன? புத்தகமாய் வருமா என்றெல்லாம் கேட்டவர்களுக்கு, கேட்க இருப்பவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. எழுதப் போகிறேன், அவ்வளவே :-)

இப்பொழுது தற்செயலாய் நாமக்கல் போக வேண்டும் என்றதும், செண்டிமெண்ட்ஸ் பார்க்க மாட்டேன் என்று சொல்லிக் கொள்பவள், கொஞ்சம் கிறுகிறுத்துப் போனேன். பாட்டியின் தந்தைக்கு சொந்த ஊர் நாமக்கல். நாமகிரி அம்மன் குலதெய்வம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, என் அப்பாவின் மாமாவுக்கு இன்றும் மண்டகப்படி உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஊரில் இருந்து வந்ததும், எழுதத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

சொந்த விளம்பரம் போட்டுக் கொண்டதற்கு தமிழோவிய ஆசிரியர் குழு மன்னிக்கவும். இந்த பன்னிரண்டு வார தொடரை என் என் சொந்த பதிவில் http://nunippul.blogspot.com/ மறுபதிப்பாய் போட்டதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. விவாதங்கள், எதிர்வினைகள், மறுமொழிகள் என்று பல நட்புக்கள் இட்ட பின்னூட்டங்கள், என்னைப் போன்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு மிக நல்ல ஊட்ட சத்து.

எழுத வாய்ப்பு தந்த தமிழோவிய ஆசிரியக்குழுவிற்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். எழுத விழைபவர்களுக்கு இன்று இணையம் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை. எழுத்தை உடனுக்குடன் பாராட்டவோ அல்லது தவறுகளை சுட்டிக்காட்டவோ, திட்டவோ வாசகர் குழு. இதைவிட, எழுத்துக்காரர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

தமிழ் இணையம் என்பது சிறு வட்டம்தானே. எங்காவது என் எழுத்துக்கள் உங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். படித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளன்(ளி)க்கு வாழ்க்கை ஏது?

நன்றி! வணக்கம்!

http://www.tamiloviam.com/unicode/main.asp

16 பின்னூட்டங்கள்:

At Wednesday, 19 April, 2006, சொல்வது...

அது என்ன கர்நாடாகம் என்றால் கலக நாடா? எது எதற்குத்தான் போராட்டம் , விவஸ்த்தைகிடையாதா?

 
At Wednesday, 19 April, 2006, சொல்வது...

ஊருக்கு போயிட்டு வந்து பாட்டி சொன்ன கதை எழுத போறீகளா? வாழ்த்துக்கள்! பயணங்கள் முடிவதில்லை-:)

 
At Wednesday, 19 April, 2006, சொல்வது...

உஷா
கதைக்கிறதை அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணுன்னு நுனிப்புல்தான் மேய்ந்திருக்கிறேன். தொடராக ஒருநாள் உட்கார்ந்து வாசிக்கணும்.
கொங்குநாட்டுக் கதை கொங்கு தமிழிலேயே இருக்குமா?
வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறேன்

 
At Wednesday, 19 April, 2006, சொல்வது...

பெங்களூரில் இன்று பசவன்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மாலை ஐந்து முதல் ஒன்பது வரை இருக்குமென்று எங்களுக்கு அலுவலக மெயில் வந்தது. காரணம் ராஜ்குமார் ரசிகர்கள் இரங்கல் கூட்டம் போடுகிறார்கள்.

உஷா, கிரா ஒரு அற்புதமான எழுத்தாளர்.
அவரைத் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனாக இருக்க முடியாது.

பிறப்பால் சாதி மதம் மட்டுமல்ல மொழியும் வருவதில்லை என்பது என் கருத்து.

 
At Thursday, 20 April, 2006, சொல்வது...

சதயம் நன்றி. தன்னடக்கம் என்ற பெயரில் நம்மை அதீதமாய் தாழ்த்துக் கொள்வதும் கொஞ்சம் அபத்தமாகவே தோன்றும். ஆனால் "வளரும் எழுத்தாளர்" என்றுப் போட்டுக் கொள்ளலாம் இல்லையா?
ஆனா, நுனிப்புல், நுனிப்புல்தான் அதை மாற்றும் எண்ணம் இல்லை :-)

என்னார், மனுஷ மனசுல ஒளிஞ்சிருக்கிற வன்முறை, சான்சு கிடைச்சா, வெளிய வரும். நம்ம ஊர்ல
மட்டும் வருவதில்லையா?

வெ. நா பாட்டி சொன்ன கதைன்னா யாரும் படிக்க மாட்டாங்களே! ஹூம்! வாழ்க்கை பயணம் முடிவதில்லை.

தாணு, நல்லா இருக்கு :-) இங்க வந்து படிக்கவில்லை என்று சொல்லுகிறீங்களா? கொங்கு தமிழா
இல்லை எங்க தமிழில் இருக்கும்.

ஜிரா, தாய்மொழி பற்றி நிறைய எழுதலாம். பத்தாவதுவரை தமிழ் மீடியம். பிறகு பிளஸ் டூவில் இரண்டாவது மொழி. ஆனால் அதற்கு பிறகு வணிகவியலில் மொழி கிடையாது. பிறகு கல்யாணம்
ஆனதும், பல வருடங்கள் தமிழ் படிப்பு, பேச்சு மிக அருகிவிட்டது. ஆனால் மூன்று வருடத்திற்கு
முன்பு தமிழ் இணையம் மீண்டும் உயிர் கொடுத்தது. ஆனால் ஆரம்பத்தில் வாக்கிய அமைப்பில்
தடுமாட்டம் இருந்தது. எழுதி பழக்கமில்லாததால் இந்த பிரச்சனை. இப்பொழுது கூட, அவசரத்தில்
எழுதினால், கொஞ்சம் தடுமாறும். இன்று தமிழகத்தில் அரைகுறை ஆங்கில, தமிழிலில் கதைக்கும்
பிள்ளைகளை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.

 
At Thursday, 20 April, 2006, சொல்வது...

// ஆரம்பத்தில் வாக்கிய அமைப்பில் *தடுமாட்டம்* இருந்தது. எழுதி பழக்கமில்லாததால் இந்த பிரச்சனை. இப்பொழுது கூட, அவசரத்தில் எழுதினால், கொஞ்சம் *தடுமாறும்*. //

:-)))

 
At Thursday, 20 April, 2006, சொல்வது...

அட ஏம்பா சதயம், அவங்களே எப்பவாவது வெளிப்படையா உண்மையை பேசுவாங்க. நீங்க வேற, அவங்களுக்கும் எலக்கியவியாதி, இலக்கியவாதின்னு எழுதி போரடித்திருக்கும். :-)

தொடரை நல்லபடியாய் முடிக்க ஏகவல்லோன் எல்லோருக்கும் பொதுவான இறைவன், போதுமான மனவலிமையை தரமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

 
At Friday, 21 April, 2006, சொல்வது...

Usha,KI.RAA's words are so earthy and all of us in the family identify with him.and he is such a happy person to meet too.thank you for a very nice post.

 
At Saturday, 22 April, 2006, சொல்வது...

//ரூட்ஸ், தலைமுறைகள் படித்ததின் தாக்கமோ என்னவோ! கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு கதை மனதில் உருவமாய் வந்துவிட்டது. இன்னும் எழுத தொடங்கவில்லை//

ஒரு நூற்றாண்டு கதையா... சீக்கிரம் ஆரம்பிங்க, மேயறதுக்கு காத்திருக்கேன்..

 
At Sunday, 23 April, 2006, சொல்வது...

லதா, இந்த கிண்டல்தானே வேண்டாம் என்கிறது :-(

ஐயா மோகன் தாஸ், இந்த வரிகளுக்கு என்னய்யா பொருள் :-)))

// அட ஏம்பா சதயம், அவங்களே எப்பவாவது வெளிப்படையா உண்மையை பேசுவாங்க//

வாழ்த்துக்கு நன்னிங்க.

மனு, கி.ரா அவர்களை சந்தித்து மாத்தலாடணும் என்று பல வருடங்களாய் ஆசை. "கோபல்ல கிராமம்" படிச்சிருக்கீங்களா?

பொன்ஸ், சீக்கிரம் ஆரம்பிக்கிறேன். ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி

 
At Sunday, 23 April, 2006, சொல்வது...

நம்ம பேசற கன்னடத்தை பேசாம தன்னடம்னு சொல்லிடலாம்! :)

 
At Sunday, 23 April, 2006, சொல்வது...

பல விஷயங்களை நாம் வெளிப்படையா ஒத்துக்க முடியாதில்லை. :-) அதைதான் சொன்னேன் நீங்க கோச்சுக்காதீங்க.

ச்சும்மா விளையாட்டுக்கு. அங்கேயே ஸ்மைலி போட்டிருந்தேனே.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

//எழுதப் போகிறேன், அவ்வளவே :-)//
காத்திருக்கிறோம்.

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

ரூட்ஸ் கதை எங்கிருந்தோ சுட்டது என்று அதன் எழுத்தாளரே ஒப்புக் கொண்டு விட்டார். அதை விடுங்கள்.

சிவசங்கரி அவர்கள் எழுதிய 'பாலங்கள்' நாவல் கிடைத்தால் படித்துப் பாருங்கள். 1907 முதல் 1992 வரை மூன்று கால கட்டங்களில் அவர் மூன்று செட் கதை மாந்தர்களைப் பற்றி எழுதியுள்ளார்.

1907-1931
1940-1961
1964-1992

நாவல் விகடனில் சமீபத்தில் 1981-வாக்கில் தொடர்கதையாக வந்தது.

வாரா வாரம் அதை நான் படித்தவன் என்ற முறையில் கூறுவேன். நாவல் தூள் கிளப்பியது.

என் போட்டோ பிளாக்கர் எண் இரண்டும் ஒரு சேர வந்தால்தான் இது என்னுடைய பின்னூட்டம். பார்த்து மட்டுறுத்தவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Monday, 24 April, 2006, சொல்வது...

//என்னைப் போன்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு

:-) இன்னும் எத்தனை நாளைக்கு?!

 
At Tuesday, 25 April, 2006, சொல்வது...

அருள் குமரன், இந்த மேட்டரைப் பற்றி நாம் சிங்கப்பூரில் பேசியது ஞாபகம் இருக்கு. மொழியா, மண்ணா எது நம்முடையது? தண்ணியில்லாத திருச்சி காவேரியைப் பார்த்து கர்நாடகாவை திட்ட தோன்றியது எதனால்?

மோகன் தாஸ், நீங்க ஸ்மைலி போடா விட்டாலும் கோபம் எல்லாம் வராது. ( சில சமயம் ஸ்மைலி போட்டாலும் வரும் :-)))

சுதர்சனம் கோபால், பில்ட் அப் பெருசா கொடுத்திட்டேன் போல இருக்கு :-)

டோண்டு சார், ரூட்ஸ் விட நீல பத்மநாபனின் "தலைமுறைகள்" எனக்கு பிடிச்ச டாப் டென்னில் வரும். பாலங்கள் நானும் படிச்சிருக்கேன். அது வேற மாதிரி. காலம் மாறுவதை கதை, பேச்சு, பழக்க வழக்கங்கள் மூலம் சிவசங்கரி சொல்லியிருப்பார். இணையத்திலேயே, தோழியரிலா அல்லது யாஹ¥ குழுவிலோ இதைப் பற்றி பேச்சுக்கள் நடந்தன.

ர.ரா, இனி வளரும் எழுத்தாளர் என்றுப் போட்டுக் கொள்ளட்டா?
( என்னமோ இளைஞரணி தலைவர் ஸ்டாலின் என்ற டைட்டில் ஞாபகம் வருது :-))))))))))))))))))))))))))))))

 

Post a Comment

<< இல்லம்