Wednesday, April 26, 2006

மனிதன் ஒரு சமூக விலங்கு

பத்து நாள் கழித்து அலுவலகத்தில் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்ததும், பார்க்க வேண்டிய அவசர வேலைகள் தலையை சுற்ற வைத்தன. இதில் ஒவ்வொருவராய் வந்து எட்டிப் பார்த்து விசாரிப்பது வேறு! வீட்டில் மனைவி சித்ராவுடன் நடந்த வாக்குவாதம் ஞாபகம் வந்து தலைவலியை அதிகப்படுத்தியது பிரகாஷ்க்கு.

தேடினாலும் தலைவலி மாத்திரை கிடைக்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்தான்.

"பிரகாஷ், பங்கஷன் நல்லப்படி ஆச்சா? ஏன் மொகம் ஒரு மாதிரி இருக்கு? " என்றக் குரலைக் கேட்டு கண்ணை திறந்தால் அருண்! அவனிடம் தலைவலி மாத்திரைக் கேட்டதும், மறு நிமிடம் மாத்திரை தண்ணீருடன் வந்து நின்றான் அருண்.

மாத்திரையை முழுங்கிவிட்டு " சாரி அருண். ஒய்ப்பும் பசங்களும் வேகேஷனுக்கு பொள்ளாச்சி போயிருந்தப் போது, அப்பாவுக்கு ஐடியா தோணி செய்யலாமான்னு போன் செஞ்சார். எங்கக்கா பேமிலியும் ஸ்டேட்ஸ்ல வந்திருக்காங்க. எங்க இன்லாஸ்ஸ¥ம், மச்சினனும் கோயம்பத்தூர்ல இருக்கிறதால அவுங்களும் சரினுட்டாங்க. ஆனா ரெண்டு நாளுக்கு முன்னால சொன்னதால நம்ம கலீக்ஸ் யாராலும் வர முடியலை"

"அவ்வளவுதானே இங்க ஒரு பார்ட்டி கொடுத்திடு" என்றான் அருண்.

" அருண், சித்ரா பார்ட்டினா லீ மெரிடியன்ல வெக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறா. டெரஸ்ல ஷாமியானா போட்டு, சரவணபவன்ல மீல்ஸ் அரேஞ்ச் பண்ணிடலாம்னா ஒத்துக்க மாட்டேங்கரா"

" நீ டாட்டா இண்டிகா வாங்கியப் போதே பார்ட்டி கொடுக்காம ஏமாத்திட்ட.. நம்ப பாரின் டெலிகேட்ஸ் வந்தா தங்க, லீ மெரிடியன்ல ரெண்டு ரூம்ஸ் பர்பனண்டா ரிசர்வ் செய்து வெச்சிருக்கிறது ஒனக்கு தெரியாதா? நம்ம பீ.ஆர்.ஓ நாயர்ரோட அண்ணன் பொண்ணு அங்கத்தான் ரிசப்ஷனிஸ்டா இருக்க. நா கேட்டு சீப்பா முடிச்சி தரேன்" என்றான் அருண்.

"பெருசா இழுத்துவிட்டுடுமோன்னு பயமா இருக்கு. கைல பெருசா ஒண்ணுமில்லை" என்றுச் சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்த அருண் குரலை தாழ்த்திக் கொண்டு, " மாமா ரெண்டு நாளுக்கு முன்ன நாலு காண்டிராக்ட் சைன் பண்ணிட்டு வந்திருக்கார். இப்ப போயி இண்டரஸ்ட் ப்ரீ லோன் கேளு. ஒடனே சரின்னுடுவார்" என்றான்.

ஆபிஸ் வேலை சொன்னா செய்ய வராது. ஆனா ஆபிஸ்ல அங்க இங்க நடக்குற அத்தன அக்க போர்களும் விரம் நுனில! இந்தமாதிரி விஷயம் சொல்லுவதால, சீனியர் மேனேஜர் சங்கர் சிபாரிசுல நெதர்லாண்ட்க்கு நாலு வாரம் சாப்டுவேர் டிரெயினிங். ஆனா போய்ட்டு வந்து ரெண்டு மாசமா அத வெச்சிக்கிட்டு, தடவிக்கிட்டு இருக்கான் என்று நினைத்துக்கொண்டே ,பிரகாஷ் எழுந்து மாமா என்று அழைக்கப்படும் எம்.டி கிருஷ்ணாராவ் அறை பக்கமாகப் போக, அருண் நாயரைத் தேடிப் போனான்.

அரை மணிநேரத்தில் பிரகாஷ் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும் அருண் வெற்றி என்று சைகை காட்டினான்.

"நா பேசிட்டேன். அந்த பொண்ணு சனிக்கிழமை ஹால் கிடைக்கும்னு சொல்லுது. இன்னைக்கு புதன் கிழம, இன்னும் மூணு நாளுதான் இருக்கு, நீ ஒன் ஒய்ப்புக்கு ஓகேவான்னு கேளு. அப்படியே சுமாரா எத்தன பேரு வருவாங்க, மெனு , ஸோ அன் ஸோ" என்று கண் அடித்தான்.

" வெளையாடாதே, இதுக்குப் போயி டிரிங்ஸ் பார்ட்டி வைக்க முடியுமா?" என்றதும், அருண், " பின்ன? நம்ம ஐ.டி கம்பனில இருபத்திரெண்டு பாரினர்ஸ் இருக்காங்க. அவுங்கள கூப்பிட்டா நான்வெஜ்ஜீம், டிரிங்ஸ்சும் இல்லாம எப்படி? வீட்டுலனா முடியாது. ஹோட்டல்ல யாருக்கும் தெரியாம நா பாத்துக்கிறேன். ஆனா ஒண்ணு, போன மாசம் நம்ம அக்கவுண்டட் சீனிவாசன் பொண்ணு கல்யாண ரிசப்ஷனுக்கு கோல்டுல நல்ல வெயிட்டான கிப்டு தந்தாங்க. டாலர்ல சம்பளம் வாங்குறாங்க, ஆளுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் போட்டாக்கூட எவ்வளவு தேறும்னு யோசி! அப்புறம் ஒன் இஷ்டம்" என்றான் அருண்.

பிரகாஷ், சித்ராவுக்கு போன் செய்தது விஷயத்தைச் சொன்னதும் சனிக்கிழமைக்கு சரி என்று சொன்னாள். ஆனால் இந்த பாரினர்ஸ் பார்ட்டி என்றால் யோசனையாய் இருக்கிறது என்று கவலையுடன் பிரகாஷ் சொன்னதும், " அதெல்லாம் ஒண்ணும் பிராப்ளமேயில்லை ஜி! அத்தனை பேரும் அத்தன பேரும் பேரும் பிரண்ட்ஸ்தானே? அசத்திடலாம். போன மே மாசம், உங்க கலீக் ஜேம்ஸ்செல்லதுரை பையனுக்கு பேப்டிசம் பார்ட்டி சோழால நடந்துச்சே, அப்ப அவனோட ஒய்ப் ரோசிலீனா என்ன அலட்டு அலட்டிக்கிட்டா! அப்பவே நா
தீர்மானம் செஞ்சிட்டேன், நம்ம வீட்டுல அடுத்த பங்ஷன் லீ மெரிடியன்லதான்னு. எல்லாம் நல்லப்படியா நடக்கணும்" என்று பெருமூச்சு விட்டவள், " ஜி, ஒரு சின்ன ஆப்லிகேஷன், போட்டோல, விடியோல திரும்ப திரும்ப உடுத்தின சாரி, அதே நகைனா நல்லா இருக்காது. எனக்கு புது சில்க் சாரி, பிள்ளங்களுக்கு டிரஸ், உங்களுக்கு ஷேர்ட் எடுத்தக்கூட போதும். பழைய ஜீவல்ஸ் கொடுத்துட்டு, புதுசு எக்ஸ்சேன்சு செஞ்சிக்கிட்டா?"என்று பவ்யமாய் கேட்டாள்.

அதற்குள் அருண் எட்டிப் பார்க்க," ஓ.கே. ஓ.கே. சித்து, இண்டரஸ் ப்ரீ லோன் சாங்ஷன் ஆயிடுச்சு. ஆனா புதுசா கோல்ட் வாங்க முடியாது. என்ன வெல விக்குது? " என்று சொல்லிக் கொண்டே போனை வைத்தான். அதற்குள் "தாங்ஸ் ஜி!" சித்ரா காதலுடன் கத்திய சத்தம் வெளியே வழிந்தது.

"ஏன் பிரகாஷ், சித்ரா நார்த்துல இருந்தாங்களா? ஜி, ஜி ன்னு கூப்பிடராங்க" சந்தேகம் கேட்டவனையே சந்தேகத்துடன் பார்த்தான் பிரகாஷ்.

"ஜி பார் குரு பிரகாஷ். என்னோட புல் நேம்" என்றான் எரிச்சலுடன். அருண் சிரிப்பை அடக்கிக் கொள்வது நன்றாக தெரிந்தது. இனி இந்த ஜோக் எல்லார் வாயிலும் நுழைந்து வரும். பேசாம, சித்ரா நார்த் இண்டியால இருந்தவ என்றே சொல்லியிருக்கலாம் என்று தன்னையே நொந்துக் கொண்டான் பிரகாஷ்.

அதற்குள் அருண், அழைப்பிதழை கணிணியில் தட்டச்சு செய்து காண்பித்தான். "சரியா இருக்கு. நம்ம ஸ்டாப்ஸ் அத்தனைப் பேருக்கும் அனுப்பிடு. எதுக்கும் காப்பி எடுத்து சேவ் செஞ்சிடு" என்றவன், " அருண்! ரெண்டே மணி நேரத்துல மடமடன்னு அத்தனையும் செஞ்சி முடிச்சிட்டே. தேங்ஸ். அடுத்த போர்ட் மீட்டிங்க ஒன்னோட பிரமோஷன் பத்தி கட்டாயம் பேசரேன்" என்றான் நன்றி பொங்கும் முக பாவனையுடன்.

" சே! சே! என்ன பிரகாஷ் இது, அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? நீ மொதல்ல மாமாவுக்கும், அந்த பாரீனர்ஸ்க்கும் நேர்ல ஒரு வார்த்தை சொல்லிடு" என்றான் அருண்.

போன வருஷம் பிரமோஷனுக்கு சங்கர் சிபாரிசு செஞ்சும், இவந்தான் கெடுத்தான். இந்த வருஷமாவது கிடைக்கணும். திருப்பதி வெங்கடேச பெருமாளே, சாலரி ரைஸ் கிடச்சா மொத மாசம், அப்படியே உண்டியல்ல போடரேன் என்று பெருமாளை பிராத்தித்துக் கொண்டே தன் இடம் நோக்கி சென்றான் அருண்.

பிரகாஷ் அழைப்பிதழைக் காப்பி எடுத்துக் கொண்டு, அஷிமோட்டோவின் அறையை எட்டிப் பார்த்தப் பொழுது அங்கு சிறு கும்பலே இருந்தது.

எல்லாரும் உற்சாகத்துடன் வரவேற்று, இப்பொழுதுதான் மெயில் பார்த்தோம் என்று சொல்லி அவன் கையை குலுக்க ஆரம்பித்தனர்.

கொஞ்சம் வயது முதிர்ந்த அஷிமோட்டோ "இது என்ன கொண்டாட்டம்?' என்று ஆரம்பித்ததும், " ஆண் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் செய்ய வேண்டிய சடங்கு இது" என்றதும், "கொஞ்சம் விளக்கமாய் சொல்லு. இந்திய பாரம்பரியம், விழாக்கள், சடங்குகள் பற்றி என்னுடைய பிளாக்சில் எழுதுகிறேன். ஜப்பனீஸ்லதான். இன்றைக்கு என்ன எழுதுவது என்று யோசிக்கும் பொழுது, நீ மாட்டிக் கொண்டாய்" என்றார் மழலை ஆங்கிலத்தில்.

உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பிக்கும்பொழுது, அறைக்கு வெளியே சீனியர் செந்தமிழ் செல்வன் , " வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?" என்று தன் வழக்கமான லண்டன் ஆங்கில உச்சரிப்பில் கடுப்பாய் கேட்டார்.

வேற வினையே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, "இல்லை இதைப் பற்றி எல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு எந்த சடங்குகளிலும் நம்பிக்கையுமில்லை, கடைப்பிடிப்பதுமில்லை. ஆனால் வீட்டில் மனைவி மற்றும் பெரியவர்கள் சொல்லுவதைக் கேட்டு ஆக வேண்டி இருக்கு. மனிதன் ஒரு சமூக விலங்கில்லையா?" என்று குரலை உயர்த்தி சொல்லி முடித்தான்.

" உண்மை! உண்மை" என்று அந்த ஜப்பானிய முகம் கவலையுடன் தலையை ஆட்டியது.

"வந்து.. வந்து. நீங்கள் கூகுளில் சர்ச்சில் போட்டு பாருங்கள். நிறைய கிடைக்கும். பேப்பர் கொடுங்கள். எழுதி தருகிறேன்" என்றவன், யூ பி எ என் எ ஒய் எ என் எ எம்" என்று ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் கொட்டையாய் எழுதிக் கொடுத்தான் பிரகாஷ் என்னும் குரு பிரகாஷ்.

(கதை என்பது கற்பனையும் யதார்த்தமும் சேர்ந்தது என்றாலும் விகிதாசாரங்கள் இங்கு எவ்வளவு என்பதைப் படித்த நீங்கள்தான் சொல்ல வேண்டும். இக்கதை தமிழோவியத்தில் வெளியானது.)

8 பின்னூட்டங்கள்:

At Wednesday, 26 April, 2006, சொல்வது...

உபநயனம் மாதிரி வீட்டோடு கொண்டாடும் விழாக்களுக்கு இத்தனை பெரிய அளவில் பார்ட்டீ ஏற்பாடு செய்வது மட்டும் சமூகத்துக்காக இல்லையா... ?!!!

அருமையாக படம்பிடித்திருக்கிறீர்கள், தேவையில்லா செலவுகளையும் வறட்டு டாம்பீகத்தையும்..

 
At Wednesday, 26 April, 2006, சொல்வது...

பொன்ஸ், சடங்குகள் என்பதே "ஷோ" என்று ஆகிவிட்டதே :-)

 
At Wednesday, 26 April, 2006, சொல்வது...

உஷா,

இங்க இதவிட பெரிய கூத்து....sweet sixteen
பார்டி தான்.படிக்கற பசங்களுக்கு இது ஒரு பெரிய்ய social/peer ப்ரெசெர் தான்.

good one!!!
RaDHA

 
At Thursday, 27 April, 2006, சொல்வது...

ஒரு மினி 'எங்கே பிராமணன்' படித்தது போல இருக்கிறது, அதிலும் இப்படித்தான், அர்த்தத்தை விட்டு விட்டு அடையாளங்களுக்காக மட்டுமே நடக்கும் அலட்டலை வெளிச்சம் போட்டிருப்பார். ப்ரிட்டிஷ் உச்சரிப்பில் அதட்டுபவர் செந்தமிழ்ச்செல்வன் என்பதை இன்னும் கொஞ்சம் subtle-ஆகச் சொல்லியிருக்கலாமோ? (சிறுகதையில் ஒருவரியில் இது கஷ்டமே என்றும் தோன்றுகிறது)

 
At Friday, 28 April, 2006, சொல்வது...

ராதா கூத்தடிக்க ஒரு சான்ஸ், இதுல விருப்பமில்லாத மாதிரி திட்டிக்கிட்டே பங்குப் பெறுவது வீட்டு தலைவரின் சாமார்த்தியம் :-)

d the dreamer, ஏதோ உங்களுக்கும் சில புரிதலுக்கு என் எழுத்துக்கள் உபயோகப்படுகிறதே :-))

ஆஹா, அருணகிரி, எழுத்தின் சந்தோஷம் எது தெரியுமா? எங்கோ ஒரு இடத்தில் அனுபவித்து
எழுதியதை, வாசகர்களும் படித்து பாராட்டும்பொழுது, என்ன சொல்ல நன்றி நன்றி நன்றி
அது சரி,

//சீனியர் செந்தமிழ் செல்வன் , " வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?" என்று தன் வழக்கமான லண்டன் ஆங்கில உச்சரிப்பில் கடுப்பாய் கேட்டார்.

வேற வினையே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு, // இதை விட்டு விட்டீங்களே! முதல் வரிக்கும் இதற்கும் நடுவில் இருக்கும் பொருள்கள் :-))))))))))))))))))

 
At Saturday, 23 April, 2016, சொல்வது...

என்ன ஒரு எழுத்துத் திறமை. அந்த flow! உங்களுக்குள் இருக்கும் கதாசிரியை என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள், உஷா. மற்ற கதைகளையும் ஒவ்வொன்றாக பேஸ்புக்கில் போடுங்களேன். பாராட்டுக்கள்!

 
At Saturday, 23 April, 2016, சொல்வது...

இது எப்படி என் கண்களில் அப்போ படாமப் போயிருச்சு ?

 
At Saturday, 23 April, 2016, சொல்வது...

நல்லா தான் இருக்கு உஷா. அப்பப்போ இது போல
,புதுசா எழுதினாலும் சரி ,பழசாக இருந்தாலும் சரி படிக்கக் கொடுங்கள்.

என்ன ஆடம்பரம்.அதுக்குள்ள இத்தனை நெளிவு சுளிவு. சூப்பர்.

 

Post a Comment

<< இல்லம்