ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை - 3
முன்னுரை எழுதாமல், "ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை" யை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இது பலமுறை எழுத வேண்டும் என்று நினைத்த மேட்டர்தான். அவ்வப் பொழுது, அங்கங்கு தொட்டு விட்டு, "தேவை ஒரு அவள் விகடன்", கழுதைகள் மற்றும் எருமைமாடுகள்" போன்ற பதிவுகளில் நகைசுவை கட்டுரை என்று மேம்போக்காய் ( இது மட்டும் என்ன வாழுது என்று சொல்ல வேண்டாம்) எழுதியதுதான்.
இளவஞ்சி http://ilavanji.blogspot.com/2006/05/blog-post.html இதை ஆரம்பித்ததும், அவர் எழுதுவதற்கு பதில் என்று எழுதாமல் ஏன் இருபக்க பிரச்சனைகளையும் பேச கூடாது என்ற கேள்வியில் எழுந்த வினை இது.
நாலு பெண்கள் சேர்ந்தால், குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேச்சு ஆரம்பித்துவிடும். சின்னவயதில் இருந்தே, கதைக் கேட்பதில் ஆர்வம் அதிகம் என்பதாலும், நடுவில் சில கேள்விகளை எழுப்பினால் போதும் மேட்டர்கள் மழையென கொட்டும். தவறு இரண்டு பக்கமும்தான் என்றும் தோன்றும். பிரச்சனையின் மூலக்காரணத்தைக் கொஞ்சம் விலாவாரியாய் பார்ப்போமா?
நம் இந்திய குடும்ப வாழ்க்கையில் நான் பார்த்த தம்பதியர் மூன்று வகைகள்.
1- கணவனே கண் கண்ட தெய்வம் டைப்- இது இப்பொழுது வெகு அரிதாய் கண்ணில் படும். நான் பார்த்ததில்லை. பாட்டிகள் காலத்தில் இருந்தது என்று சொல்ல கேள்வி. ஆனால் அவர்களும் வேறு வழியில்லாமல், வாயை மூடிக் கொண்டு இருந்ததாய் நான் நினைக்கிறேன்.
2- மனைவி சொல்லே மந்திரம் - இதுவும் கொஞ்சம் அபூர்வ வகைதான். ஆனால் மேற் சொன்ன, மனைவி வகையில்லாமல், மனம் உவந்து மனைவி சொல்லே வேதம் என்று ஏற்றுக் கொள்ளும் கணவனை அடைந்த மனைவி, போன ஜென்மத்தில் மிகப் பெரிய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லையும், செயலையும் மனைவி மனம் கோளாமல் நடந்துக் கொள்வது என்பது மிகப் பெரிய தியாகம். இவர்கள் வீட்டில் எந்த பூசலோ, சண்டை சச்சரவோ அறவே இருக்காது. என்ன ஒன்று, கணவன் வீட்டார், இவர்கள் வீட்டில் மறந்தும் கால் வைக்க மாட்டார்கள்.
3- ஆடு புலி ஆட்டம்- நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது குடும்பங்கள் இந்த வரிசையில் வரும். பல ஆண்கள் பிறர் முன்னிலையும் நான் எது செய்தாலும் என் மனைவி சொல்படிதான் செய்வேன். அவள் விருப்பம்தான் என் விருப்பம் என்ற வசனத்தையும், பயந்தார்போல ஒரு ஆக்ட்டும் கொடுப்பார்கள். ஆனால் அந்த வசனமும், நடிப்பும் அவனுடைய வீட்டார் முன்னிலையில் இருக்காது. காரணம் அவர்கள், மனைவியின் முந்தானையைப் பிடித்து நடப்பவன் என்று சொல்லி விடுவார்களே என்ற பயம். அதேசமயம், மாமியார் வீட்டார் முன்பு
ஓவராய் மனைவி மேல் அன்பு காட்டுதல் நடக்கும். ( இங்கு ஒரு ரகசியம் சொல்லி விடுகிறேன் எல்லா வீட்டு ஆண்களையும், அவர்கள் பிறந்த வீட்டில் மனைவிக்கு அஞ்சியவன் என்றே நினைப்பார்கள்). டாம் அண்டு ஜெரி, உதாரணம் தந்தேனே, அதுப் போல மனைவிகளும்
கணவன் ஒழுங்காய் இருந்தாலும் சும்மா இருக்க மாட்டார்கள். மனைவி பரிமாறும்பொழுது எப்பொழுதும் தாய் சமையலுடன் ஒப்பிட்டுப் பார்கும் கணவன், வழக்கத்துக்கு விரோதமாய் மூன்றாவது நாளாய் மனைவி சமையலை புகழ்ந்ததும், மனைவி இடுப்பில் கை வைத்து, என்ன சமாச்சாரம் என்று கேட்டதும், இவரூ ஆடியில்ல போயிட்டாரூ. பாவம், திருந்தலாம் என்று
நினைத்தவனைக்கூட திருந்த விடாதது, யார் தவறு? ஆடு, புலியாக மாறும். புலி என்று நினைத்துக் கொண்டிருந்தது ஆடாகவும் மாறும் என்பது தாம்பத்திய சூத்திரம்.
இந்த மூன்றாம் வகைக்கு தாங்க அனைத்து பிரச்சனைகளும். அதற்காக கல்யாணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை ஓட்டி விட முடியுமா? சமூகம் ஏதாவது பேசும். நமக்கே வாழ்க்கை போர் அடிக்கும்.
இப்பொழுது எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன மறு நாளே, மாமியார் வரப் போகிறவரை அம்மா என்று அழைக்கத் தொடங்குவதும், அந்த குடும்பமும் என் குடும்பம்தான் என்று சொல்லிக் கொண்டு திரிவதும் மிக அதிகம். அதைத்தான் கல்யாணத்துக்கு முன்னால் உள்ளங்கையில் இருந்தவன் என்றுக் குறிப்பிட்டேன். அப்பொழுது, அந்த பெண்ணைப் பார்க்க வேண்டுமே, கழுத்து தலையில் நில்லாது. பெண்ணைப் பெற்றவளும் தன் மகளின் பாக்கியத்தை வர போகிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பாள்.
ஆனால், அங்கு பையன் வீட்டில் அவனை பெற்றவள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டு இருப்பாள். அவளுக்கு மனதில் மலரும் நினைவுகள் ஓட ஆரம்பிக்கும். ஒரு முழம் பூ வாங்கி தர கூட, கூச்சப்பட்ட கணவன் எங்கே, மாமியாராய் வரப் போகிறவளுக்கு மதர்ஸ் டேக்கு பரிசு பொருள் வாங்கிக் கொடுக்கும் மகன் எங்கே என்று மனம் அழும். அவ்வப் பொழுது மெல்ல ஊசி ஏற்றத் தொடங்குவாள். மனைவி பேச்சைக் கேட்டு மானமிழந்து நிற்பவர்களின் பட்டியலை சொல்லுவாள். பையன், கேட்டால்தானே? அவளுக்கும் தெரியும் இப்பொழுது பேசினால் எதுவும் எடுக்காது என்று!
ஒரு சின்ன சம்பவம் சொல்கிறேன். கல்யாணம் நிச்சயம் ஆனது. இரண்டு பேருக்கும் நல்ல வேலை, கை நிறைய சம்பளம். இப்பொழுது தான் பாங்கில் வேண்டிய லோன் கொடுக்கிறார்களே என்று பையன், பெண்ணிடம் கன்சல்ட் செய்து, அவள் ஆபிசுக்கு அருகில் பிளாட் புக் செய்தான். பிறகு பார்த்து, பார்த்து வீட்டு பிளானில் திருத்தம் செய்வதும், அனைத்து டைல்ஸ், பெயிண்டிங், பர்னீச்சர் என்று எல்லாம் பெண்ணின் விருப்பம்.
அதற்குள் கல்யாணம் ஆனது, கல்யாணம் ஆன மூணாம் மாதம் கிருகப்பிரவேசம். அன்று வெடித்த பிரச்சனை, வருடம் இரண்டு ஆகியும் தீரவில்லை. வேறு ஒன்று இல்லை, கிருகப்பிரவேசத்தை தன் பெற்றவரை உட்கார வைத்து செய்துவிட்டான் புது கணவன்.
கிருகப்பிரவேசத்துக்கு புடவை என்ன டிசைன் என்று ஜோ மாதிரி, அதையும் டிசைன் செய்தவளால், இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் முதலில் செய்தது அதீதம், என்றாலும் கடைசியில் செய்தது அதைவிட தவறு. பெரியோர்களை உட்கார வைத்து செய்தது
தவறில்லை, அனைத்தையும் வரப் போகிறவளிடம் முழுப் பொறுப்பையும் தந்தவன், இருந்தார்போல, அவளிடம் சொல்லாமல் முடிவெடுத்தது தவறில்லையா?
இதில் இந்த காலத்து மாமியார்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். இவர்களுக்கு அந்தக்கால மாமியார்கள் போல கொடுமைப் படுத்தவும் இயலாது, அதற்காக மேல் நாட்டினர் போல கல்யாணம் முடிந்ததும் டாடா காட்டிவிட்டுப் போகவும் முடியாது. அதனால் சமயம் வாய்க்கும்பொழுது தன் இருப்பைக் காட்டாமல் விட மாட்டார்கள். மகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பழைய நினைவுகளை எழுப்பும். இப்பொழுது, என்ன சொன்னாலும் கேட்கும் கணவன் இன்று இருந்தாலும், அந்த காலத்தில் தான் பட்ட பாடுகள் அவர் மனதில் மாறாவடுவாய் இருக்கும். இதில் நாத்தனார் கேரக்டர் ஒன்று. துப்பறியும் நிபுணர் போல, சதியாலோசனையில் முக்கிய பங்கு. அனைத்தையும் கண்காணித்து, போட்டுக் கொடுப்பது.
இப்பொழுது மனைவியாய் ஆனவளுக்கு விரக்தியும் வெறுப்பும் ஏற்படும். கணவனுக்கோ அம்மா சொல்வது இப்பொழுது சரியோ என்ற யோசனை ஓடும். என்னத்தான் தனிக்குடித்தனம் அமெரிக்காவில் இருந்தாலும், ரிமோட் கண்ட்ரோலில் போதனைகள் நடக்கும்.
வாரம் ஒரு முறை ஊருக்கு போன் செய்தால் போதாதா? இப்படியே வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கும். அதைத்தான் மோகம் முப்பது நாள், ஆசை அறுபதுநாள் என்று அன்றே சொல்லிவிட்டார்கள்.
இவள் ஆண்களை மட்டும் குறை சொல்கிறாளே என்றுப் பார்க்கிறீர்களா? உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொன்னேன். பார்த்ததெல்லாம் கேட்பது, தம்முடைய நிலைமையை மறந்து ஆடம்பரம் செய்வது, உடன் பிறப்புகள், வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டு நோக்குவது, கணவன் வீட்டார் யாரையும் வீட்டில் சேர்க்காமல் இருப்பது, அவசர உதவிக்குக்கூட அவர்களுக்கு உதவி செய்யவிடாமல் கணவனை தடுப்பது என்று பெண்கள் மீதும் தவறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி மனோதத்துவமோ, கவுன்சிலிங்கிலோ சரி செய்ய முடியாத பிரச்சனைகள் ஆண்கள் மீதும் வேண்டியது இருக்கிறது.
இவ்வளவு கதை சொன்னீர்களே, தீர்வு எங்கே என்றுக் கேட்கிறீர்களா? இந்த விஷயத்தில் தீர்வே கிடையாது. ஆரம்பத்தில் இருக்கும் தாங்க முடியாத பிரச்சனைகள் நாளாவட்டத்தில் நீர்த்துவிடும் என்ற உறுதி மொழியைத் தருகிறேன். அதாவ்து நீங்கள் பிரச்சனையுடன் வாழ பழகிவிடுவீர்கள் மற்றும் பிரச்சனைகளை கையாளும் விதத்தையும் இந்த பல வருட தாம்பத்தியத்தில் கற்றுக் கொண்டு விடுவீர்கள். என்னடா இவள் இப்படி சொல்கிறாளே என்று நினைக்கிறீர்களா? அதுதாங்க உண்மை!
நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். மனுஷ மனசுக்கு திருப்தியே கிடையாது. எப்படிப்பட்ட உத்தமர் அல்லது உத்தமி வாய்த்தாலும் அப்படி இல்லையே, இப்படி இல்லையே என்று பிறருடன் ஒப்பிட்டு மனதை குழப்பிக் கொள்ளும். ஆக, இந்த சின்ன
விஷயத்தை எல்லாம் பெரியதாய் நினைக்காமல் சம்சார சாகரத்தில் குதித்து, யாம் பெற்ற இன்பம், நீங்களும் பெற பிரம்மசாரி, பிரம்மசாரிணிகளை கேட்டுக் கொள்கிறேன்.
முடிவுரை- நான் மனித மனங்களை அறிந்த எழுத்தாளரோ, அபூர்வ பிறவி சீரியல் ஹிரோயினியோ இல்லை. இது கவுன்சிலிங்கும் கிடையாது. நானும் சம்சார சாகரத்தில் அனு தினமும் மூச்சு திணறி அல்லல் படும் சாதாரணி ( இதையே என் கணவரும் இங்கு பதிய சொன்னார்) நான் எழுதியதில் தவறோ, சந்தேகமோ இருந்தால் கேளுங்கள். சொல்கிறேன்.
10 பின்னூட்டங்கள்:
குடும்பத்தில் அனைவரும் சிறிது விட்டுக் கொடுத்து, அடுத்தவர் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தாலே எந்த பிரச்சனையும் ஏற்படாது. பிரச்சினை ஏற்பட்டாலும் சுலபமாக சமாளித்து விடலாம்.
என்னத்தை பேசி, என்னத்தை தயார் பண்ணினாலும்.. நடக்கறது நடந்தே ஆகும்ங்கரீங்க.. ம்ம் சரி.. நடக்கட்டும்
//யாம் பெற்ற இன்பம், நீங்களும் பெற பிரம்மசாரி, பிரம்மசாரிணிகளை கேட்டுக் கொள்கிறேன்// :) நல்ல் ஆசை!
பொன்ஸ் எனக்கு உங்கள் நினைச்சாதான் பாவம இருக்கு...
ரொம்ப குழப்பிகாதிங்க ஏண்டா அக்கா ஸ்கூல்ல சேர்ந்த்தோம்னு
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்த்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
"எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்."
(உங்களுக்கென்ன அதான் ஒரே தங்கமா கொட்டுதே)
ராசா, கையக் குடுப்பா! 100/100 வாங்கிட்ட! என்னத்தான் டீச்சருங்க, உயிரக் கொடுத்து சொல்லிக் கொடுத்தாலும் ஒன்னு ரெண்டு ஸ்டூடண்ட்ஸ்தான், வண்டூகளா இருக்குதுங்க. சரியாக, சம்சார சாகரத்தின் தாத்பரியத்தைப் புரிஞ்சிக்கிட்டீயே!
டிஸ்டிகிஷந்தான் :-))))
கனவு,
60/ 100 மார்க். பரவாயில்லை, அங்கங்கே முக்கிய பாயிண்டுகளைப் பிடிச்சாலும், அதி முக்கியத்தை விட்டுடீயேபா.
நாகை சிவா,
ஜஸ்ட் பாஸ் போட்டுட்டேன். இந்த கறிக்கு உதவாத நீதிகள் எல்லாம் வாழ்க்கை வாழ உதவாது. விட்டுக் கொடுத்தல் என்றால் யார், எவ்வளவு என்ற கேள்வி முதலில் எழும். வி.கொவும் சில சமயம் கேனயன் அல்லது கேனச்சி பட்டத்தை தரும். மற்ற உறவுகளுக்கோ கேட்கவே வேண்டாம், குட்ட குட்ட குனிவான்/ள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.
சினிமா பாடல்கள் எடுத்துப் போடுவது இன்னொரு சிவா இல்லையா? ஒரு நேயர் விருப்பம்
"சம்சாரம் என்பது வீணை" போடுங்கப்பா.
டிஸ்டிங்க்ஷனா?? அய்யோ எனக்கு ஒரே பப்பி ஷேமா இருக்குதே :)
போன எபிஸோட் வரை ஏதோ புரிகிற மாதிரி இருந்தது... இப்படி திடுதிப்னு ஆரம்பிச்சி, அதே மாதிரி முடிச்சிட்டீங்களேக்கா!!
சரி.. ஏதோ.. கொங்கு ராசாவுக்கு இப்போ 'ஏற்பட்டிருக்கும்' தெளிவு இல்லைன்னாலும், பாக்கலாம் ஒரு கைன்னு தோணிடிச்சு.. பாக்கலாம் :)
ராசா,எப்படியோ நல்லா இருந்தா சரி
பொன்ஸ், வீட்டுல உங்கம்மாகிட்ட இந்த நாலு வரிகளைப் படித்து காண்பி, என்ன சொல்றாங்கன்னு, இங்கையோ அல்லது தனி மடலோ போடு
//ஆரம்பத்தில் இருக்கும் தாங்க முடியாத பிரச்சனைகள் நாளாவட்டத்தில் நீர்த்துவிடும் என்ற உறுதி மொழியைத் தருகிறேன். அதாவ்து நீங்கள் பிரச்சனையுடன் வாழ பழகிவிடுவீர்கள் மற்றும் பிரச்சனைகளை கையாளும் விதத்தையும் இந்த பல வருட தாம்பத்தியத்தில் கற்றுக் கொண்டு விடுவீர்கள்//
கணவன், மனைவி இரண்டு பேருக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் தான் பிரச்னையே ஆரம்பம் ஆகும். பிரச்னையின் தீவிரத்தை உத்தேசித்து இரண்டு பேருமே மனம் விட்டுப் பேசிக்கொண்டு அந்த நேரம் யாருடைய முடிவு சரிஎன்று இருவருக்கும் படுகிறதோ அதை ஏற்று அதன் விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இதில் அடங்குதல், என்பதோ அடங்காமை என்பதோ கிடையாது. இருவரும் தம் தம் "சுயம்" இழக்காமல் இருந்தாலே போதும். ஒருவர் குறைகளை மற்றவர் ஏற்றுக் கொள்ளவும் பழக வேண்டும்.
உஷாக்கா
நீங்க குறிப்பிட்டது எல்லாமே நம்ம வாழ்க்கையிலும் நடந்ததுதான்.
அதிலும் குறிப்பா முக்கியமா சொல்ல மறந்தது என்னவென்றால் TV சீரியல்களுக்கு முன் தம்பதியர் வாழ்க்கை முறை ,TV சீரியல்களுக்கு பின் தம்பதியர் வாழ்க்கை முறை .
இதை அலசி ஆராஞ்சி பீராஞ்சி நீங்க எழுதியே ஆகணும். வாழ்க்கையிலே இதனால் பாதிக்கப்பட்டவங்க நிறைய பேர்.
அதே மாதிரி கலப்பு திருமணங்கள்,வட்டார வழக்குகள்
இதுனால என்ன மாதிரி ஆதாயங்கள், பாதிப்புகள்
அப்படிங்கறதையும் எழுதுங்க.
நமக்கு இதைப்போல நிறைய எழுதணும்னு ஆசைதான்.
நம்ம பதிவ பாத்தீங்கன்னா எல்லாம் சின்னப்புள்ளத்தனமா
இருக்கும்.
நேரந்தான் கிடைக்கமாட்டேங்குது
கீதா, நீங்கள் சொல்லும் அறிவுரை அனைத்தும் மகிளிர் மலரில் வருவதுப் போல இருக்கு :-)
உட்கார்ந்து பேசி பிரச்சனையை தீர்க்கலாம் என்ற மனம் உள்ளவர்கள் வீட்டில் பெரிய பிரச்சனையே வராதுங்க.
அருவி, இது எனக்கு தெரிந்து நடந்த சம்பவம். ஆனா உங்க வீட்டு கதையில்லைங்க :-)
ஆண்களின் பிரச்சனையே இந்த பயம் தான். அந்த காலம் மாதிரி அடக்கியாளவும் வராது, தெரியாது.
ஈடாய் படித்து, சம்பாரிப்பவள், ஆனால் அவ்வப்பொழுது "மனைவி" என்பவள் எப்படி நடந்துக்
கொள்ள வேண்டும் என்ற உபதேசங்கள் படித்து தானும் குழம்பி, அவளையும் குழப்புவதால் ஏற்படும்
பிரச்சனையே அதிகம்.
பெருசு, நன்றி. கருத்துக்கள் தோன்றும்பொழுது கட்டாயம் எழுதுகிறேன்.
Post a Comment
<< இல்லம்