Tuesday, May 09, 2006

தேர்தல்- 2060 சரித்திரம் திரும்புமா?

அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கலாம். ஒல்லியான, ஆனால் உறுதியான உடல் கட்டு. கையில் ஊன்றுக்கோலுடன் நடந்துக் கொண்டு இருந்தார். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. ஏதோ கோபம், யார் மீதோ எரிச்சல். அவ்வப்பொழுது காறி உழிந்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்.

நகரத்தின் விளிம்பில் இருந்து மெல்ல காட்டு பகுதி ஆரம்பித்தது. காடு வளர்ப்பு திட்டத்தின் படி, மழைக்காடுகள் நாடெங்கும் அரசால் வளர்க்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் நுழைவு பகுதியில் நின்றிருந்தன. கையில் கட்டியிருந்த, கடிகாரம் போன்ற கருவியில் ஒரு பட்டனைத் தட்டியதும் உள்ளே நுழைய அனுமதிக் கிடைத்தது.

மாலை நேரம், சுகமாய் காற்று வீசியது. அதையெல்லாம் கவனிக்காமல், அவர் நடை வேகத்தைக் கூட்டியது.

"எதுவுமே செய்ய முடியவில்லை" ஆத்திரத்தில் அவர் வாய் முணுமுணுத்தது.

"வாழ்ந்தது போதும், நான் சாகப் போகிறேன்"

அவர் திடுக்கிட்டார். குரல் வந்த திசையைப் பார்த்தால், புதருக்கு பின்னால் ஒருவன் முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

மெல்ல அவன் அருகில் சென்றதும், காலடி ஓசைக் கேட்டு அவன் நிமிர்ந்தான்.

"அட நீங்க நடிகர் ஜிஜா இல்லை?" கிழவர் கேட்டதும், "போ, போ இங்கிருந்து" அவன் கத்தினான்.

பெரியவர் ஒன்றும் பேசாமல் பேசாமல் நின்றார். அழுவதால் அவன் முதுகு குலுங்கியது. பெரியவர் அவன் அருகில் உட்கார்ந்து, "நானும் சாகத்தான் வந்தேன். வாழ்க்கை அலுத்துவிட்டது" என்றார் மெல்ல.

அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

"தனிமை, வயதும் ஆகிவிட்டது. வாழ்ந்ததுப் போதும் என்று இந்த காட்டில் கடைசியில் இருக்கும் மலையின் மீது இருந்து குதித்து உயிரை விடலாம் என்று வந்தேன். ஜிஜா, உனக்கோ சிறு வயது, புகழின் உச்சியில் இருக்கிறாய். நீ என்று அழைக்கலாம் இல்லையா?"

அவன் பதில் சொல்லவில்லை.

"சரி வா, நடந்துக்கொண்டே பேசலாம். காட்டின் கடைசி பகுதிக்குப் போக வேண்டும். இருட்டினால் பாதை தெரியாது. உள்ளே நுழைய தானியங்கி காவலை ஏமாற்ற, நான் இருக்குமிடம் பிறருக்கு தெரியாமல் இருக்க செய்தவை நான்கு மணி நேரத்தில் செயலிழந்து விடும்" எழுந்தார்.

ஜிஜாவும் எழுந்தவாறு, "என்னுடைய செயலிழப்பு இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கும்" என்றான்.

"அவ்வளவு பணத்திற்கு நான் எங்குப் போவேன்" என்று கிழவர் முணங்கினார். இருவரும் பேசாமல் நடந்தனர். ஜிஜா, கையில் கட்டியிருந்த கடிக்காரத்தைத் திருகினான். சின்ன திரை ஒன்று வெளியே வந்து விரிந்தது.

" ஓட்டுப் போட மறக்காதீர்கள். ஓட்டளிப்பது உங்கள் கடமை" என்ற செய்தி ஒலித்தது.

" தயவு செய்து அதை நிறுத்துகிறாயா?"

"தேர்தல்... ஹூம்! அந்த காலத்தில் எப்படி கோலாகலமாய் இருக்கும் தெரியுமா? என் தாத்தா காலத்தில். தேர்தல் அறிவித்த நாள் முதல் இரண்டு மாதத்திற்கு எல்லாரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்போம். ஆனால் இப்பொழுது என்ன வாழ்க்கை இது? எல்லாமே இயந்திரமயம். கட்சி, தேர்தல் இவைகளில் யாருக்கும் அதிகம் விருப்பமில்லை. தேர்தலில் நிற்க ஆட்களை தேடுப் பிடிக்கிறார்கள். பேசாமல், நாடாளவும் இயந்திரத்தைக் கொண்டு வந்துவிடலாம்"

"மனிதர்களே இயந்திரம் போல அல்லவா வாழ்கிறார்கள்?" ஜிஜாவின் குரல் மெல்ல ஒலித்தது.

"ஆம், வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. பெயர் முதற்கொண்டு அரசின் ஆணைப்படி. சுதந்திரம் என்ற வார்த்தையே அர்த்தமிழந்துவிட்டது"

"சுதந்திரம்... அது கிடைக்காமல்தான் நான் தற்கொலை செய்துக் கொள்ள வந்தேன். என் விருப்பப்படி எதுவுமே செய்ய முடியவில்லை" என்றான் ஜிஜா.

கிழவர் பேசாமல் நடந்தார். ஜிஜா ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அவனை பேசாதே என்று சைகை செய்தார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, " ஒரு சின்ன யோசனை. முதலில் நான் பேசுவதைக் கேள். நடுவில் பேசாதே" என்றார் கிழவர்.

"ஜிஜா, நீ நாடறிந்த முகம். இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கிறது. இன்றிரவே ஒரு கட்சி ஆரம்பிக்கப் போவதாய், அனைத்து ஊடகங்களிலும் செய்தி குடு. மக்கள் அனைவரும் பலவித சட்டங்களால் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். மக்களுக்கு சுதந்திர வாழ்க்கை அளிப்பேன் என்ற உறுதி மொழி கொடு போதும். நீ வெல்வது உறுதியாகிவிடும்"

ஜிஜா, சுவாரசியம் இல்லாமல் உச்சுக் கொட்டியவன், " ஆமாம் இப்படி அறிவித்தால், மறு நிமிடம் நான் கைது செய்யபப்டுவேன்" என்றான்.

கிழவர், " தெரியும். சுதந்திர வாழ்க்கை தருகிறேன் என்ற உறுதிமொழியை கடைசி நிமிடத்தில்
அறிவிக்க வேண்டும். இப்பொழுது அறிவித்தால், நாட்டின் நலத்திற்கு ஊறு விளைவிக்கிறாய் என்று உன் கட்சி தடைப்படலாம், நீ கைது செய்யப்படலாம். அரசு இயந்திரம் யோசித்து முடிவெடுப்பதற்கு முன்பு, ஆட்சியை நீ பிடிக்க வேண்டும் .உன்னிடம் பணமும், புகழும் இருக்கலாம். ஆனால் செல்வாக்கு, அரசியல் பலம் என்பது வேறு. நீ என்ன நினைக்கிறாயோ அதை செய்யலாம். எல்லாரும் உனக்கு அடிப்பணிந்து நிற்பார்கள். அரசியல் பலம் என்ன என்பதை நான் அறிவேன்" அவர் குரல் ஓங்கி ஒலித்தது.

ஜிஜா முகம் யோசனையில் ஆழ்ந்தது.

"ஜிஜா, எனக்கு ஓரே பிரச்னை. வாழ்க்கை அலுத்துவிட்டது. உனக்கோ சுதந்திரமாய் இருக்க முடியவில்லை என்ற குறை. நம் இருவர் பிரச்சனையும் தீர ஓரே வழி, நீ தேர்தலில் நிற்பது. கட்சி. தேர்தல், ஆட்சி அனைத்திலும் உதவ நான் இருக்கிறேன்" கிழவர் சொல்ல, சொல்ல ஜிஜா முகம் மாற ஆரம்பித்தது.

ஜிஜா, "கேட்பதற்கு சுவாரசியமாய் இருக்கிறது" என்றவன், "நீங்களே தேர்தலில் நின்றிருக்கலாமே" என்றதும், கிழவர், " வயதாகிவிட்டது. மேலும் எனக்கு யார் ஓட்டளிப்பார்கள். நீயோ பிரபலமான முகம்.. சரித்திரம் படித்ததில்லையா?" என்றவர், மேலும் சொல்ல ஆரம்பித்தார்.

ஜிஜா, "பார்க்கலாம், வாழ்க்கையில் நான் தேடிய த்ரில் கிடைக்கும்போல இருக்கிறது. நான் ரெடி. ஆமாம் உங்கள் பெயர் என்ன?"

"நிதி " என்றார் கிழவர்

30 பின்னூட்டங்கள்:

At Tuesday, 09 May, 2006, சொல்வது...

நல்லா இருக்கே கதை.

இச்சிறுகதை (இயந்திரங்கள் ஆளுதல்)ஏனோ "என் இனிய இயந்திரா" என்ற தொலைக் காட்சித்தொடரை நினைவூட்டி விட்டது.

என் புனைப் பெயரின் இன்ஸ்பிரேஷனும் அதொல் வரும் ஒரு பாத்திரமே.

"நான் சிபி..நீ நிலா" என்ற வசனமும் நினைவுக்கு வருகிறது.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

உஷா கதை நன்றாக இருக்கிறது. தற்காலத்தில் இருபத்தைந்து வயது காளையாக உலவிக்கொண்டிருக்கும் அந்த நிதி யார் என்றுதான் தெரியவில்லை.
என் பதிவில் நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். கதை எழுதி முடித்தவுடன் பெண்ணுரிமை பற்றி அதிகம் எழுதும் உங்கள் நினைவு வந்தது.
நடராஜன்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

சூப்பர்.
நிதி புரியுது
ஜிஜா?

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

அதுசரி கோவைக்கு எப்போது வருவதாக உத்தேசம்?

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

உங்கள் கற்பனைக் குதிரைக்கு நல்ல ஓட்டம்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

வாவ்.... ஒரு வழியா நீங்களும் அரசியல் பதிவு போட்டாச்சா?

சிபி நீங்க அந்த சிபி யா.... கல்யாணம் பண்ண அரசிடம் அனுமதி எல்லாம் வாங்கினிங்களா?

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

ஷார்ட் & ஸ்..

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

இதுவும் பத்து வருடம்் முன்னர் எழுதிய கதை ரிபீட்டோ ?

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//கல்யாணம் பண்ண அரசிடம் அனுமதி எல்லாம் வாங்கினிங்களா?//

முதலில் புரியவில்லை என்றாலும் பின்னர் ஒருவாரு புரிந்து கொண்டேன், நீங்கள் என்ன கேட்கிறீர் என்று!

:-)

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

ஜிஜா = JJ

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

உஷா,

போட்டீங்களே ஒரு போடு!

அதுவும் தேர்தல் முடிஞ்சு எல்லோரும் 'பக்பக்'ன்னு உக்கார்ந்திருக்கறப்ப!

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

ஓகை, நாமக்கல் சிபி, மனசு, துளசி, மணியன், பாபா, கால்கரி சிவா, பிரதீப், சாம் என்கின்ற தருமி
சார் அனைவருக்கும் நன்றி.

ஓகை ( என்ன பேரூங்க இது- லேசா பயமா இருக்கு), நீங்க எழுதியதைப் படித்தேன். கொஞ்சம் பத்தியாய் பிரித்துப் போட்டிருந்தால் படிக்க செளகரியமாய் இருக்கும். பெண்ணுரிமை என்றதும்,
என் ஞாபகம் வந்ததா? என்னத்த சொல்ல :-))))))))

நாமக்கல் சிபி, "என் இனிய இயந்திரா" பார்த்தீங்களா? கடவுளே என்ன கொடுமை இது :-)
இதுப் பார்க்கிற மேட்டரா? படிக்கிற விஷயம் ஐயா! தேடிப்பிடித்து படியுங்க. ஆனா இதுல வர
"ஜினோ" தாங்க ரொம்ப பேமஸ்.

இந்திய பயணம், தேர்தல் காரணமாய் ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. விவரமாய்
மெயில் அனுப்புகிறேன். ஆனால் பயணம் கட்டாயம் உண்டு.

மணியன், பத்து வருஷத்துக்கு முன்னாடி, இப்படி தேர்தல்- 2060 என்று போட்டி எல்லாம் இருக்கும்
என்றளவுக்கு ஞானதிருஷ்டி எல்லாம் கிடையாது :-) நேற்று மாலை எழுதீ, சுட சுட போட்டாச்சு

கால்கரி சிவா, ப்ரதீப் இதெல்லாம் ஓவர் :-))) , நா யதார்த்தமா ரெண்டெழுத்து பேராய் தேடிப்
போட்டால், இப்படி உள்ளர்த்தம் பார்ப்பது சரியில்லை :-))))))))))))))

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//நா யதார்த்தமா ரெண்டெழுத்து பேராய் தேடிப்
போட்டால், இப்படி உள்ளர்த்தம் பார்ப்பது சரியில்லை//

நானும் நிதி, ஜிஜாவிற்கு அவர்கள் கூறியது போல்தான் நினைத்தேன். பின்னர் லாஜிக்காக இல்லையே என்று கேட்காமல் விட்டுவிட்டேன்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//இதுப் பார்க்கிற மேட்டரா? படிக்கிற விஷயம் ஐயா! தேடிப்பிடித்து படியுங்க//

படிக்கிற விஷயமா!
நான் அதைத் தொலைக்காட்சித் தொடராகத்தான் பார்த்திருக்கிறேன்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

சிபி,
சுஜாதாவின் மிக பிரபலமான தொடர் இது. ஆவியில் வந்தது. இரண்டு பாகம் என்று நினைவு. அதில் வந்த ஜினோவைப் போலவே ஒரு நாய் பொம்மை, பல வருடங்கள் கழித்து என் அம்மா எங்கோ பார்த்துவிட்டு, எனக்காக வாங்கி வைத்திருந்தார். அந்தளவு ஜினோ என் மனதைக் கவர்ந்திருந்தது. நானும் திரும்ப படிக்க வேண்டும், சென்னையில் தேடிப்பார்கிறேன் கிடைத்தால், கோவை வரும்பொழுது வாங்கி வருகிறேன். இது தேர்தல் வாக்குறுதி இல்லை :-)

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

பரவாயில்லை.. 2060 ல காடெல்லாம் இருக்கும்னு சொல்லி இருக்கீங்களே.. ரொம்ப பாஸிடிவ் சிந்தனை தான். :)

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

//சென்னையில் தேடிப்பார்கிறேன் கிடைத்தால், கோவை வரும்பொழுது வாங்கி வருகிறேன். //

ஆஹா! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி. கிடைத்தால் வாங்கி வாருங்கள்.
இது சராசரி பொது ஜனத்தின் மனுவும் அல்ல!

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

"History Repeats"ன்னு சொல்லுங்க :)

//அதில் வந்த ஜினோவைப் போலவே ஒரு நாய் பொம்மை, பல வருடங்கள் கழித்து என் அம்மா எங்கோ பார்த்துவிட்டு, எனக்காக வாங்கி வைத்திருந்தார்.//

wow...நல்ல அம்மா. Deserving daughter-ம் கூட :)

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

அய்யோ உஷா, தேர்தல் 2060 ன்னு மட்டும் படிச்சிட்டு முழு தலைப்ப பாக்காமலேயே கதைய படிச்சதால, பெரிய இவன் மாதிரி உங்க தலைப்பையே ஆங்கிலத்தில கமெண்டா போட்டுட்டேன். மன்னிக்கனும்...

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

சிபி, உஷா 'ஜெ' மாதிரி.
சொல்றதையும் செய்வாங்க
சொல்லாததையும் செய்வாங்க...

சொன்னது- கோவை வரும்போது புக் வாங்கிவருகிறேன் என்பது.

சொல்லாதது-அய்யோ மறந்த்துட்டேனே....:-))))))))

அதுவரைக்கும் காத்திருக்காம தேடிப்புடிச்சு படிங்க... ரொம்ப நல்லா இருக்கும். மீண்டும் ஜுனோ என்று இரண்டாம் பாகம் வந்ததாக நினைவு.

உஷா UAE ல எந்த எமிரேட்...
நான் இப்ப அபுதாபில.

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

//சொன்னது- கோவை வரும்போது புக் வாங்கிவருகிறேன் என்பது.

சொல்லாதது-அய்யோ மறந்த்துட்டேனே....:-))))))))//

:-))

ச்சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது! நான் அப்படியெல்லாம் கமிட்மெண்ட் குடுக்கவே இல்லையே! இப்படித்தான் சொல்வாங்க!

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

பொன்ஸ் நன்றி

டிரீமர், படிச்சி, பின்னுட்டமும் போடறீங்க. நீங்க ஸ்பானிஷ்ல போட்டா கூட நன்னி. அப்புறம் அந்த பொம்மை, என்ன செய்ய
நம்ம விருப்பங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். அதை போகிற நாட்டுக்கு எல்லாம் தூக்கிக்கிட்ட்டு போகிறேனே :-)
சாதா பீங்கான் பொம்மைதான், படம் எடுத்துப் போடுகிறேன்.

மனசு, மெயில் அடிக்கிறேன்.

சிபி, புக்கு வருது வருது வருது போதுமா :-))))))))))))))))))))))))))))

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

சிபிக்கு மட்டும்தான் புக் கிடைக்குமா?

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

//சிபி, புக்கு வருது வருது வருது போதுமா :-)))))))))))))))))))))))))))) //

அட! உங்களை நாங்கள் நம்புகிறோம்.நம்புகிறோம். நம்புகிறோம்.

அதுக்கு இத்தனை வருது தேவையா.

(என்ன அதுக்கப்புறம் ஒரு பெரிய சிரிப்பு சிரிச்சிருக்கீங்க, அதான் கொஞ்சம் டௌட்டா கீது)

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

நிதியா? உதயமாகுமா? வாய்ப்பில்லைனுதான் தோணுது.

ஜிஜாவா? இதுக்கும் ஜிராவுக்கும் சம்பந்தம் இல்லைதானே உஷா?

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

என் இனிய இயந்திரா.. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் அந்த காலத்துல. சிபி, நல்ல புனைபெயர் வெச்சிருக்கீங்க. நிலாங்கற பேர் கூட ரொம்ப அழகா வெச்சிருப்பார் சுஜாதா..

உஷா, கதை ஒரு ரகமாவே இருக்கு..

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

என் இனிய இயந்திரா.. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் அந்த காலத்துல. சிபி, நல்ல புனைபெயர் வெச்சிருக்கீங்க. நிலாங்கற பேர் கூட ரொம்ப அழகா வெச்சிருப்பார் சுஜாதா..

உஷா, கதை ஒரு ரகமாவே இருக்கு..

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

சிபி,
அத்தனை ஸ்மைலி, கடுப்பின் விளைவு :-)

கட்டதுரை மேற் கூறிய பதிலைப் படிக்கவும். (நுணலும் தன் வாயால் கெடும்)

ஜிரா,
சே, சே இல்லவே இல்லை.

வெங்கட் ரமணி,
யாருமே ஜினோ பற்றி பேசவே இல்லையே?

அனைவருக்கும் நன்றி. போட்டிக்கதை என்பதால், கதையைக் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

சிபி என் இனிய இயந்திரா புத்தகம் கோவை மணிக்கூண்டு அருகே உள்ள் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கிறது.
படித்து பாருங்கள் உங்கள் கண் திரையில் தொலைக்காட்சியில் பார்த்தது எல்லாம் நினைவுக்கு வரும்.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

அக்கா,
என் இனிய இயந்திரா, நான் கூடப் படிச்சதில்லைக்கா.. எப்போ வருவீங்க ? :)
சிபி, அக்காவோட முதல் மாணவி நான் தான்.. எனக்குத் தான் புஸ்தகம்.. ஆமாம் சொல்லிட்டேன் :).

 

Post a Comment

<< இல்லம்