Monday, May 08, 2006

தொலைக்காட்சி தொடர் எடுக்கப் போகிறீர்களா?

கோலாகாலமாய் ஆரம்பித்துள்ள இவ்வருட புத்தக சந்தையில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், வடக்கு பதிப்பகம் வெளிட்ட " தொலைக்காட்சி தொடர் எடுக்கப் போகிறீர்களா?". அப்புதகத்தில் இருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எடுத்தவுடன் , பிரபல தொடர் எழுத்தாளர் தேவபாலனும், தயாரிப்பாளர் நடிகை ராசிகாவும் முன்னுரை நம் கண்ணை கவருகிறது.

" தொலைக்காட்சி தொடர்கள் நான்கு வகைப்படும். ஒன்று, காலை வேளைக்காட்டப்படும் தொடர். கதாபாத்திரங்கள் ஆணோ, பெண்ணோ முழுக்க முழுக்க அழுமூஞ்சிகளாய் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆண் பாத்திரங்களும் ஓவென்று அழ தயாராய் இருக்க வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.யாரைப் போல் முகத்தை திருப்பிக் கொண்டு அழாமல், "வாலி" அஜீத் போல காமிராவைப் பார்த்து கண்ணில் நீர் வழிய அழவேண்டும். கதை, லாஜிக் என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். சாதாரண பழி வாங்கும் மற்றும் மோசமான மாமியார், தெய்வீக மருமகள், அடுத்து கெடுத்தல், பில்லி சூன்னியம் வைத்தல். பொய் கேஸ் போடுதல் என்று சொன்ன கதையையே திரும்ப திரும்ப அரைத்து நைசாய் தரலாம்.

அடுத்து, மாலை தொடர். அதிலும் பீக் டைமான ஏழரை மணி ஸ்லாட் புது தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. நிறைய பணம் போட்டு, நாலைந்து வருடம் முன்பு கொடிக்கட்டி பறந்த நடிகையைப் பிடித்துப் போட்டால், ஒரு வேளை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு, வாரம் ஒருமுறை வரும் தொடர்கள், இவை பொதுவாய் சாமி, பூதம், பேய், பிசாசு, மாந்ரீகம் போன்றவை இருக்க வேண்டும். இதையே சாதாரண கதையாகவோ, மாந்ரீக யதார்த்தமாகவும் எடுக்கலாம். மா.யதார்த்தம் என்பது மாயமந்திரமும் இருக்கவேண்டும், அதே சமயம் நாகரீகமாக கம்ப்யூட்டரும், ஹ¥மன் சைக்காலஜி மற்றும் ஓலைசுவடிகளும் சேர்ந்து வரவேண்டும். இன்னொரு வாரம் ஒருமுறை சீரியல், சாமி, பூதம் என்று இஷ்டத்துக்கு, கம்ப்யூட்டர் கிராப்ஸ் வைத்து எடுக்கலாம். ஏதாவது சின்னபெண்ணை ஆத்தா என்றும் அருள்வாக்கு, மாயம், மந்திரவாதி என்று எடுக்கலாம்."

நகைச்சுவை தொடர் எடுப்பது மிக கடினம், அழுமுஞ்சி தொடர் எடுப்பது சுலபம் என்று பலர் சொல்கிறார்கள். அது தவறு. நகைச்சுவை தொடர் எடுப்பது மிக சுலபம். நகைச்சுவை என்பது ஆபாச திட்டு, செய்கைகள்தான். பக்கத்து வீட்டுக்காரனுடன் மனைவி ஓடிப்போவது, சம்மந்தி, சம்மந்தியம்மாவை சைட் அடிப்பது, வழக்கில் இல்லாத கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பெற்றவர்களைத் திட்டுவதுத்தான் நகைச்சுவை தொடரின் இலக்கணம். ஆனால் முக்கியமாய் பின்னால் பலர் சிரிக்கும் ஒலியை அவ்வப்பொழுது ஒலிபரப்பிக் கொண்டேயிருக்க வேண்டும். கதையில் சிரிப்பு வராத கட்டமானாலும் பரவாயில்லை"

"எல்லா தொடருக்கும் முக்கிய தேவைகள் கிளிசரின் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சில வஸ்துக்கள் இருக்கிறது. எல்லா தொடரிலும் ப்ளேபேக்கில் குணு, குணு என்று அழும் பெண் குரல்கள் பதிவு செய்து ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கேசட் அதிக விலை. நீங்கள் புது முகங்களை வைத்து பதிவு செய்தால் அவ்வளவு நன்றாய் வராது. இதற்கு என்று புகழ் பெற்ற அழுகுரல்கள் உண்டு. அதேப்போல பழிக்கு பழி வாங்குவது, சோதிடம் போன்றவை எல்லா தொடரிலும் மிக முக்கியம். சோதிடம், சோழி, நாடி ஓலைப் பார்த்தல் இவைகளில் கதை எப்படி போகும் என்று சூசகமாய் காட்டிவிட்டு, பின்பு அதற்கு சம்மந்தமேயில்லாமல் ஆண்டி கிளைமாக்ஸ் வைக்கலாம். கதாபாத்திரங்கள் நல்லவர்களாய் இருந்தால் பொதுவாய் கேனையனாய் இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் திரும்பதிரும்ப திட்டு வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். பணக்காரர்கள் பொதுவாய் கெட்டவர்கள். வீட்டிலும் முழ அளவுக்கு பட்டுபுடைவையும், நிறைய நகைகளும் அணிந்திருக்க வேண்டும். கதாநாயகிகள் புடைவை மட்டுமே அணிந்து சிம்பிளாய் பட்டும், நகையும், தலைநிறைய மல்லிகை பூவும். நீண்ட பின்னலுமாய் காட்சி அளிக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு சுடிதாரோ, ஜீன்ஸ் பேண்டோ போட்டு விட வேண்டாம். இந்த உடைகள் அணிந்த நாகரீக பெண்கள், மிகவும் மோசமாகத்தான் தொடரில் காண்பிக்கப்பட வேண்டும். முக்கியமாய் நாயகியை , மற்ற கதாப்பாத்திரங்கள், அடிக்கடி முகஸ்தூதி வார்த்தைகளால் போற்றும் பொழுது, நாயகிகள் தெய்வீக புன்னகை பூத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்"

"குடும்ப கெளரவம், நாலுபேர் பார்த்தால் என்ன சொல்வார்கள், பெண்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும், குடும்பம் என்றால் அப்படிதான் இருக்கும் போன்ற வசனங்களை அடிக்கடி சொல்ல வேண்டும். பணக்கார ஆண் பாத்திரங்களுக்கு கட்டாயம் சின்ன வீடு இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ்காரர்கள் எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் காட்டலாம்.

மாமியார் நாத்தனார்கள், மருமகளை எப்படியெல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இதை படித்துவிட்டு, தன் திறமையை வளர்த்துக் கொண்ட "கணவனே கண் கண்ட தெய்வம்" புகழ் மாமியார் சரஸ்வதி அவர்கள் தான் பாத்திரமாகவோ மாறி, அதே தொனியில் தன் சொந்த மருமகளிடம் பேசப்போய் அவளிடம் செருப்படி வாங்கியதையும், மகன் தன்னை வீட்டை விட்டு ஓட்டி விட்ட சொந்தக் கதையை கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.

கதாபாத்திரங்கள் இறந்துப் போகும்படி வந்தால், ஒவ்வொரு சாதி, மதம், ஊர் சம்பிரதாயம் படி, பிணத்துக்கு செய்ய வேண்டிய சடங்குகளை விவரமாய் தந்துள்ளார்கள். புத்தகத்தில் குறிப்பிட்டப்படி அப்படியே யதார்த்தமாய் மூக்கில் பஞ்சு வைத்து, ஒப்பாரி, நீர்மாலை என்று சுடுகாடு வரை எடுத்துப் போய் தவறுதலாய் நெருப்பு வைக்கும் அளவு காட்சியில் ஒன்றிப்போன "தாலிபாக்கியம்" தொடர் எடுத்த இயக்குனர் திரு.விநாயகம் மெய்சிலிர்க்க தன் அனுபவங்களை விவரிக்கிறார்.

இப்புத்தகம் தமிழ் பல்கலைகழகங்களில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்யும் முனைவர் பட்டம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிழைத் திருத்தங்களுடன், மூன்றாம் பதிப்பு கண்ட இப்புத்தகத்தின் விலை ரூபாய் நூறு. இப்புத்தகத்தை எழுதிய நாலு இல்லத்தரசிகளான மாலா, லீலா, அம்புஜம், பாக்கியம் ஆகியோர் பல ஆண்டுகளாய் தொலைக்காட்சி தொடரைப் பார்த்தே உயிர்வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

மொத்தத்தில் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பது மிகையில்லை.
****************************

Jan 13, 2005- Tamiloviam.com

18 பின்னூட்டங்கள்:

At Monday, 08 May, 2006, சொல்வது...

ஜனவரி 2005. இப்ப ஒன்னேகால் வருசத்துக்குமேலாகியும் இன்னும் நிலமை அப்படியேத்தான் இருக்கு.ம்ம்ம்ம்ம்ம்
போட்டும், நீங்க எடுக்கப்போற சீரியலுக்கு இங்கே ஒரு நடிகை தயார். பட்டுப்புடவையில் முழ நீள ஜரிகைக்குக்
கொஞ்சம்கூட குறைவில்லாமல் பார்த்துக்குங்க.

எப்பன்னு சொல்லிட்டீங்கன்னா டிக்கெட் புக் பண்ண வசதியா இருக்கும்:-))))

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

துளசி, "சாமியாரும் சம்சாரியும்" ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதியது. இப்ப சன் டீவில
இருந்து, ராடன் போயிடுச்சு இல்லையா? பாக்யராஜ்க்கு அதிருஷ்டம் அடிச்சிருக்கு. அவரோட படமா தூசி தட்டு எடுத்துப் போட்டுக்கிட்டு இருக்காங்க. அப்படியே, தொடர் இயக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
அழு மூஞ்சியைவிட, நக்கல், குசும்பு, நகைச்சுவை அவரோடதுல அதிகம் இருக்கும் என்று நம்புகிறேன்.

அப்புறம் என்ன கேட்டீங்க, சீரியலா.........? நா எடுக்கப் போறேனா...........? எனக்கு எந்த கட்சி ஆளுங்க யாரையும்
தெரியாதுங்க :-))))))))))))))))

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறவில்லை எனத் தெரிகிறது.

புத்தகம் சந்தையில் கிடைக்கமாட்டேனெங்கிறதே, மறு பதிப்பு வருமா :)))

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//ஜனவரி 2005. இப்ப ஒன்னேகால் வருசத்துக்குமேலாகியும் இன்னும் நிலமை அப்படியேத்தான் இருக்கு.ம்ம்ம்ம்ம்ம்
போட்டும், //
துளசி அக்கா, சீரியல் நிலைமை மட்டுமில்லை.. அப்போ வந்து கிட்டு இருந்த தொடர்களும் அதே நிலையில் தான் இருக்கும்.. என்ன, இவருக்குப் பதில் இவர்னு டைட்டில் கார்டு போட்டு ஆள் மாத்தி இருப்பாங்க... :)

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//கதாபாத்திரங்கள் நல்லவர்களாய் இருந்தால் பொதுவாய் கேனையனாய் இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் திரும்பதிரும்ப திட்டு வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும்//

நீங்க உண்மையிலயே சீரியல் எடுக்கப் போறீங்களா? எனக்கு ஒரு சான்ஸ் குடுங்களேன்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

உஷா,

நல்ல காமெடி பதிவு:

ஒரு சோதிடம்:

திமுக வென்றால் பாக்யராஜ் சன்டிவி புண்ணியத்தில் விசுவரூபம் எடுப்பார்

இன்னொறு தகவல்:

வீட்டுக்கு வீடு லூட்டி, ரமணி வெஸ்ஸஸ் ரமணி ஆகிய நகைச்சுவை தொடர்கள் நன்றாக இருந்தன


நோ கமெண்ட்ஸ் எப்வுட் சிதம்பர ரகசியம்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

ஒரு வருங்கால இயக்குனர் ( எதுக்கும் உருப்படாத என்னை மாதிரியான ஆளுங்கள்ளாம் வேற எங்க போறதாம் :-)) என்கிற வகையில் எமக்கு அறிய பல கருத்துகளை தந்த உமக்கு நன்றி.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

பெண்கள் விட்டுகொடுத்து வாழும் முறை, கண்ணீர் விடாமல் தன்னம்பிக்கையுடம் பிரச்சினைகளை எதிர்நோக்குவது, மாமியார் மருமகள் நாத்தனார் பிரச்சினைகள், கள்ளத்தொடர்பு போன்றவற்றை காட்டாமல் இருப்பதே போதும். வேற என்ன வேணும் சொல்லுங்க

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//பெண்கள் விட்டுகொடுத்து வாழும் முறை, கண்ணீர் விடாமல் தன்னம்பிக்கையுடம் பிரச்சினைகளை எதிர்நோக்குவது, மாமியார் மருமகள் நாத்தனார் பிரச்சினைகள், கள்ளத்தொடர்பு போன்றவற்றை காட்டாமல் இருப்பதே போதும். வேற என்ன வேணும் சொல்லுங்க
//

இளா, இங்க வெற்றி பெறக்கூடிய சீரியல் எடுப்பது எப்பசி என்று பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்க ஃபிளாப் சீரியலுக்கு ஐடியா குடுக்கறீங்க!

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

பிளாக்கில் புத்தகம் எக்கச்சக்க விலை விக்குது. ஆனாலும் பரவாயில்லைனு வாங்கிட்டேன்,
துளசி, சிபி,
நிச்சயம் சான்ஸ் உண்டு.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//பொதுவாய் கெட்டவர்கள். வீட்டிலும் முழ அளவுக்கு பட்டுபுடைவையும், நிறைய நகைகளும் அணிந்திருக்க வேண்டும்.//

என்ன யக்காவ் சேம் சைடு கோல் மாதிரி தெரியுதே ;-)) ஆமாம் நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?

டிவி சீரியல்களை ரொம்ப சீரியஸாய் பாத்த மாதிரி தெரியுது. என்னடா அக்கா ஒரு மாதிரி (புரியாதவங்க மாதிரி) இருக்காங்களே'ன்னு நினைச்சேன். இதுதானா விஷயம்? :-)

ஒரு நிமிடம் முறுவலித்த பின்னரும் ஞாபகத்தில் இருக்கும் பதிவு (நன்றி தேன்கூடு விமர்சனம்)

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

மணியன், கீதா சொன்னதுப் பார்த்தீங்களா? பிளாக்குல கெடைக்குதான்.

பொன்ஸ், வேற என்ன அரைத்த மாவையே பாவம் திரும்ப திரும்ப அரைச்சிக்கிட்டு இருக்காங்க.
ஆனால் பார்க்கிறவங்க பொறுமையை மெச்சித்தான் ஆகணும்.

முத்து, காமடி சீரியல்னா, எனக்கு "மனைவீஈஈஈஈ"தான். அந்த அபத்தத்தைப் பார்த்தால் வரும் சிரிப்பு
காமடி என்ற பெயரில் வருவதில் இல்லை. அப்புறம், சில பெண்கள் கோலங்களில் ஆட்டோ டிரைவரை
கல்யாணம் செய்யும் அபியின் தங்கை, மனைவியில் வரும் உமா கேரக்டர் அழவே பிறவி எடுத்துப்
போல, எல்லாத்துக்கும் ஒரு அழுகை. நேற்று கடன் கேட்க வந்தவன் போனதும், மலர்கள் சீரியலில்
கோலங்கள் சிஸ்டர் ஓவென்று அழுகிறது.

நாமக்கல் சிபி, பட்டணத்து ராசா, சீரியல்தானே எடுத்துடலாம். எவ்வளவு போடுவீங்க :-)

நாமக்கல் சிபி, நல்லவேளையாய் இளாவுக்கு பதில் சொன்னீங்க. இளா உங்க பின்னுட்டம் பார்த்ததும்
ஆடிப் போய்விட்டேன். சீரியலின் தாத்பர்யத்தையே மாத்துறீங்களே என்று :-))))))))))))

கீதா, blog ஆ, black ஆ சரியா சொல்லுங்க :-)), blog ல கிடைக்குதுனா, காப்பி ரைட் பிரச்சனை
வரும் :-)

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

//நாமக்கல் சிபி, பட்டணத்து ராசா, சீரியல்தானே எடுத்துடலாம். எவ்வளவு போடுவீங்க :-)
//

//பொதுவாய் கேனையனாய் இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் திரும்பதிரும்ப திட்டு வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும்//

தகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு கோருகிறோம். காசு வேறு போட வேண்டுமா என்ன? எங்களை விட நல்ல நடிகர்கள், இய்ல்பிலேயேயும் அப்படியே இருப்பவர்கள் தேடி நீங்கள் சிரமப்பட வேண்டாமே என்றுதான் நாங்களே முன்வந்திருக்கிறோம்.

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

குசும்பரே, அது என்ன தேன்கூடு விமர்சனம்????

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

சிபி. ஆனானப்பட்ட பெரிய ஆட்களே, சீரியல் நடிக, நடிகைக்கு பெருசா ஒன்னும் தருவதில்லை.
ஒண்ணு பண்ணுங்க, நீங்க சினிமால சேர்ந்து பெரிய ஆளு ஆகி, அப்புறம் மார்கெட் போனதும் சீரியலுக்கு வாங்க, ஒரு எபிசோட்க்கு லட்ச ரூபாய் கொடுக்க ஆள்
இருக்கு :-))))))))))))))))))
(தகவல் - ரோஜா, தேவயானி)

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

//ஆனானப்பட்ட பெரிய ஆட்களே, சீரியல் நடிக, நடிகைக்கு பெருசா ஒன்னும் தருவதில்லை//

அட! உங்ககிட்ட சம்பளம் யாருங்க கேட்டா! சான்ஸ்தான கேட்டோம்!

நாங்க நடிக்க நாங்களே காசு போட முடியாதுன்னுதான் சொன்னேன்!

 
At Wednesday, 10 May, 2006, சொல்வது...

//குசும்பரே, அது என்ன தேன்கூடு விமர்சனம்???? //

என்னங்க இப்பிடி கேட்டுப்புட்டீங்க? இன்றைய வலைப்பதிவர்'ன்னு நம்மளப் போட்டுப்புட்டு "படித்தவுடன் ஒரு நிமிடம் முறுவலித்து பின் மறந்து போய்விடும் பதிவுகள் குசும்பனுடையது" அப்பிடின்னு போட்டுத் தாக்கிட்டாங்களே அக்கா...(கதறல்)

நீங்களே சொல்லுங்க அப்படிப்பட்ட பதிவுகளா என்னது?

சரி அத விடுங்க. உங்கள போட்டாவுல பாத்தா நீங்க சொன்ன "டிவி சீரியல் கெட்டவங்க" டெபினிஷன் ஒத்துப் போற மாதிரி இருக்குதே :-)

 
At Friday, 12 May, 2006, சொல்வது...

நல்ல நையாண்டி....

ஆனா நீங்க சொன்னா மாதிரி சீரியல் நெனப்புல வீட்டுக்குப் போய் நடக்குறது...அது உண்மையிலேயே நடந்துருச்சுங்க.

நாடகத்துல ஏற்கனவே கல்யாணம் ஆன பாத்திரம் ஒரு பொண்ணைக் காதலிக்கிற மாதிரி காட்சி. உண்மையிலேயே அவனும் அவளும் காதலிச்சு...அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகியிருந்து....அந்த நடிகை தற்கொலை பண்ணிக்கிட்டு...முருகா!

 

Post a Comment

<< இல்லம்