Saturday, May 06, 2006

சாமியாரும், சம்சாரியும்

நேத்து நம்ம தோழி ஒருத்தங்க ஒரு சின்ன விஷயத்துக்கு இல்லாத சோகப்பாட்டு பாடினாங்க. ஆனா பாருங்க, வயசான ஒருத்தர் கதையைக் கேட்டுட்டு, சே என்ன வாழ்க்கை இது, கடவுள்ன்னு
ஒருத்தன் இருந்தா இப்படியா சோதனை செய்வான்னு கடவுளை நல்லா திட்டீட்டேங்க!

நீங்களே, சொல்லுங்க. பாவம் அவரூ! மூத்த பொண்ணை கட்டிக் கொடுத்தாரா, அதுக்கு
கல்யாணம் கட்டி ஆறேழு வருசமாயும் குழந்தை, குட்டி ஒண்ணுமில்லை. புருஷங்காரன் நல்லவன்
தான், ஆனா வாச்ச மாமியாகாரியோ பஜாரி.

அடுத்து ஒரு மகன். ஒத்த கொழந்த. அதுக்கு கேன்சராம். அடுத்த மகன், செய்யாத குத்தத்துக்கு
ஜெயில்ல போட்டுட்டாங்க.

அடுத்த மகன், வீட்டுல இருக்கிற அறியா பொண்ணு கைய பிடிச்சிட்டான். நல்ல வேளையா அந்த
பொண்ணையே கல்யாணம் செஞ்சி வெச்சாலும், வேல பார்க்கிற எடத்துல மொதலாளி பொண்ணை டாவடிக்கிறான்.

ஆச்சா, அடுத்து கடைசி பொண்ணு. அதுங் கதைய கேக்காதீங்க. சோமாறி பையனோட வூட்ட வுட்டு ஓட பார்த்துச்சு. நல்ல வேளையா அவன் சாயம் வெளுத்துப் போச்சு. சரின்னு வூட்டுல பார்த்து கல்யாணம் கட்டி வெச்சா, அதுக்கு மேலே சொல்ல, எனக்கு நாக்கு எழலைங்க. தாலி கட்டின மறு நிமிசம், மாமனார் எறந்துட்டாரூன்னு சேதி வருது.

பாரூங்க, பெத்தவரூக்கு எப்படி இருக்கும்? நம்ம வாழ்க்கையில இதுமாதிரி சோகத்தப் பார்த்திருக்கீங்களா? என்னமோங்க, தெனமும் இங்கத்து நேரம் ஆறு மணிக்கு இந்த சோகத்தப்
பார்த்துக்கிட்டே, டிரெட் மில்லுல்ல ஒடுவனா, அந்த கதைய உங்க கிட்ட சொன்னேன் :-)

அப்படியே இதையும் படிச்சிடுங்க.

சாமியாரும்,சம்சாரியும்

காட்சி-1
இடம்- நடுத்தரவர்கத்தின் சாதாரண வீடு

பாத்திரங்கள்- ராகவன்(ஐம்பது வயது), அவன் மனைவி மாலா(நாற்பத்திஐந்து வயது)
ராகவனின் தாயார் லஷ்மி அம்மாள் (சுமார் எழுபது வயது)

நேரம்- மாலை

(வேலையில் இருந்து களைப்புடன் வீடு திரும்புகிறான் ராகவன். வீடு அமைதியாய்
இருக்கிறது. அவன் மனைவியும்,தாயாரும் சோகமாய் அமர்ந்து இருக்கின்றனர்)

ராகவன் -என்ன மாலா? சண்முகம் வரலை?

மாலா- (சோகத்துடன்)- அவன் பாண்டிசேரி போயிருக்கானாம். நாயித்து கிளம காலைலதான் வருவானாம்.

ராகவன் -வேற யாரும் கிடைக்கலையா?அம்மாவ பாத்தா சகிக்கலை.

மாலா- ஆமாங்க. அத்தையோட புலம்பல் தாங்கலை. யாருக்கு என்ன ஆச்சோன்னு
கவலை பட்டே ஒடம்புக்கு வந்துடுமோன்னு பயமா இருக்கு!

லஷ்மி -நானாவது பொலம்பி எம் மனச ஆத்திக்கிறேன். ஆனா மாலாவ நெனச்சாதா பாவமா இருக்கு. மனசுலேயே வெச்சிக்கிட்டு வேல செய்ஞ்சிக்கிட்டு இருக்கா...


ராகவன் -அடடா! மாமியாரும் மருமகளும் என்ன அன்னியோயம். கடவுளே! என் கண்ணே படாமல் இருக்கணும். சரி, சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ண போறீங்க?

மாலா- நானும் அத்தையும் பக்கத்து வீட்டுக்குப் போறோம். நீங்களும் வரீங்களா?

ராகவன் - நா வரலை. நீங்க போங்க. நா நம்ப சதீஷ்க்கு இஞ்சீனிரீங் காலேஜ்ல சீட் கிடைச்சா பெருமாளுக்கு அர்ச்சனை செய்யறதா வேண்டிக்கிட்டு இருக்கேன். நா கோவிலுக்குப் போய்ட்டு வரேன்.

மாலா- நாடார்கடைல தேங்காய், கற்பூரம், வெத்தலபாக்கு வாங்கிக்குங்க. கோவில் வாசல்ல வாங்காதீங்க. அன்னியாய வெல சொல்லுவாங்க. நம்ப சதீஷ் படிச்சி முடிச்சி, வேலைலகூட சேர்ந்துட்டான். நீங்க வேண்டுதல இன்னும் நிறைவேத்தலையா?

லஷ்மி - (நடுவில் குறிக்கிட்டு)-அவன ஏதாவதுக் குத்தம் சொல்லாட்டி உனக்கு சரிப்படாதே! நீதான் பார்க்கிறீயே, அவனுக்கு நேரம் எங்க இருக்கு?

மாலா- உங்க பிள்ளைய சொன்னா, ஒடனே வந்துடுவீங்களே! அது என்ன சோம்பேறிதனமோ? நல்லா வளர்த்து இருக்கீங்க. ஏங்க! நீங்க நடந்தே கோவிலுக்கு போங்க. பத்துநிமிஷ நடைதானே...
பெட்ரோல் விக்குற வெலைல, சும்மா எதுக்கு ஸ்கூட்டர்?

லஷ்மி (கோபமாய்)- ஏண்டி அவனோட எல்லா விஷயத்துலையும் இப்படி மூக்க நூழைக்கிற? அவனும் சம்பாதிக்கிற ஆம்பள.

மாலா- அத்தே.. நீங்க இதுல தலையிடாதீங்க. இது எங்க ரெண்டு பேருக்குள்ள.

லஷ்மி - அவன் ஒனக்கு புருஷனா இருக்கலாம். ஆனா அவன் எனக்கு மொதல்ல பிள்ளை.

மாலா- ஒங்க அரும பிள்ளைக்கு நீங்க ஏன் கல்யாணம் பண்ணினீங்க? பேசாம ஒங்களுக்கு மகனாவே இருந்திருக்கலாம்.

(லஷ்மி அம்மாள் கோபமாய் ஏதோ சொல்ல முற்படும்போது, பயத்துடன் நடுவில்
குறுக்கிட்ட)

ராகவன் - மணி ஆறு ஆயிடுச்சே, நீங்க கொளம்பல?

மாலா- வாங்க அத்தே, நாம்ப போகலாம்! ஏங்க ஒரு சாவி எங்கிட்ட இருக்கு. நீங்க உங்ககிட்ட இருக்கிற சாவீல வீட்ட பூட்டிட்டு போங்க.

(என்றவாறு மாமியாரும் மருமகளும் ஓடுகின்றனர்)

ராகவன் உள்ளே போகிறார்.



காட்சி-2இடம்- கோவில் மண்டபம்

பாத்திரங்கள்- ராகவன், சாமியார், போலிஸ்காரர்

நேரம்-முன்னிரவு

ராகவன் கோவில்மண்டபத்தில் அமருகிறான்.கைக் கடிகாரத்தில் நேரம் பார்க்கிறான்.

அவனை அறியாமல் பெருமூச்சு வருகிறது. கவலை+யோசனையுடன் தூணில்
சாய்ந்து உட்காருகிறான்.

பக்கத்தில் யாரோ உட்காருவதைப் பார்த்து நிமிர்கிறான். தாடி, மீசையுடன் காவியில்
ஒருவர்.

சாமியார்- சிவஹோம்! என்ன மகனே கவலையாய் உள்ளாய்?

ராகவன் - சாமி இது பெருமாள் கோவில். இங்க வந்து சிவநாமம் சொல்றீங்களே..

சாமி- அப்பனே! அரியும் சிவனும் ஒண்ணு. நமக்கு பரம்பொருள் ஒருவனே.

(என்றவர், பையில் இருந்து விபூதியை எடுத்து தருகிறார்)

சாமி- நாம் இன்றுதான் கயிலையில் இருந்து வந்தோம். இந்தா!

(ராகவன் அந்த விபூதியை வாங்கலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்துவிட்டு,அதை வாங்கிக்கொள்கிறான்)

சாமி- நாம் தமிழகத்தைவிட்டு, வடக்கே சென்று பல வருடங்கள் ஆகி விட்டன. இன்றோ வெள்ளிக்கிழமை.கோவிலில் கூட்டத்தையே காணோமே!

ராகவன் -என்னத்த சொல்றது, யாருக்கு என்ன ஆச்சோன்னு மனசு கெடந்து துடிக்குது. வெள்ளிக்கிழமை யாரும் கோவிலுக்கு வர மாட்டாங்க சாமி.

சாமி - விளக்கமாய் சொல் மகனே!

ராகவன் - அஞ்சு பொண்ணுங்க சாமி! நாலுக்கு எப்படியோ கல்யாணம் பண்ணிட்டாரு! ஆனா நாலும் படற பாடு சொல்லிமாளாது சாமி. இது இப்படினா இன்னொரு பொண்ணு அப்பன், அண்ணன், கட்டினவன் ஒண்ணும் சரியில்ல ,மாமனார் கொஞ்சம் அன்பா இருந்தா அத
தப்பா பேசுது ஒலகம். அண்ணாமல பாவம் அவளுக்கு நாளும் பிரச்சனைதா!
ஊரே கண்ணீர் சிந்துது சாமி.

(நடுவில் குறுக்கிட்ட சாமியார்)- நில் அப்பனே! அண்ணாமலை என் அப்பன் பெயர் அல்லவா? பெண்பிள்ளை என்று சொல்கிறாயே, ஒரு வேளை உண்ணாமலையாய் இருக்கும்.

ராகவன் -இல்ல சாமி! அண்ணாமலை பொம்பள பேருதான். அண்ணாமலைனு ஒரு சினிமா வந்தது.நல்லா ஓடிச்சு. செண்டிமெண்டலாய் இந்த பேரு வச்சிருப்பாங்க!

சாமி- இருக்கும்! இருக்கும்! அந்த காலத்தில் பராசக்தி என்ற படம் வந்தப் பொழுது தெருவெங்கும் பன்னீர்செல்வம், குணசேகரன்கள். பெண்களுக்கு சரோஜா என்று பெயரும் அதிகம் வைக்கப்பட்டது. பராசக்தி அற்புதமானபடம். கலைஞசர் சிறந்த வசனகர்த்தா. ஆனால் நாஸ்திகர், பகுத்தறிவாளர். அவர் நலமாய் உள்ளாரா?

ராகவன் -நன்றாக இருக்கிறார்.பகுத்தறிவாளர் இன்னைக்கு மஞ்சள் துண்டு....

(என்று ஆரம்பித்தவன் எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொள்கிறான்)

சாமி - இப்போது நாட்டை ஆள்வது யார்?

(ராகவன் சொல்கிறான்.)

சாமி - அந்த பெண்மணியா? அவர் படங்கள் நானும் பார்த்து இருக்கிறேன்.

ராகவன் -சாமி! தயவுசெஞ்சி கொஞ்சம் மெதுவா பேசுங்க! அப்புறம் அரசியலும் வேண்டாம் சாமி!

சாமி- நான் என்ன தவறாய் பேசிவிட்டேன், எம்பெருமான் ஈசன் ஒருவனுக்குதான் நான் பயப்படுவேன்.

(என்று உணர்ச்சி பெருக்கெடுக்க,பாடத்தொடங்குகிறார்)

சாமி- பொன்னார் மேனியனே! புலிதோலை அரைக்கசைத்து...

ராகவன் (வெலவெலத்து)- சாமி!சாமி! நிறுத்துங்க. ஏன் சாமி வெவகாரமான பாட்ட பாடுறீங்க?

(அதே நேரம் ஒருவர் அவர்களிடம் வருகிறார்.அவரைப் பார்த்தாலே போலீஸ்காரர் என்று தெரிகிறது ராகவனுக்கு)

போலிஸ்- தடைசெய்யப்பட்ட இயக்கத்தை பற்றி இங்கே கூட்டம் போடுகிறீர்களா?நீங்க யாரு? உங்க பேரு என்ன?

ராகவன் - சார்! இவரு சாமியாரு. சாமி பாட்டு பாடினார். நீங்க நெனக்கிறா மாதிரி ஒண்ணும் இல்ல சார். நா கவர்மெண்ட் சர்வெண்ட்.

(போலீஸ்காரர் சமாதானம் அடைந்து கிளம்புகிறார்)

சாமி- என்ன நடந்தது இங்கே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே! என் அப்பனை பாட தடையா!
பொன்னார் மேனியனே! பு....

(என்று சொல்லும் பொழுது அவர் வாயை பொத்துகிறான் ராகவன்)

ராகவன் -சாமி!அந்த பாட்ட பாடினா உங்கள பொடா சட்டத்துல ஜெயில்ல போட்டுடு வாங்க! அந்த பேரையே உச்சரிக்கக்கூடாது.

சாமி- என்ன உலகம் இது! (பெருமூச்சுடன்) சரி! சரி! உன் கவலையைக் கேட்டு மனம் நொந்தேன் மகனே! நாடு இவ்வளவு மாறிவிட்டதா? பெண்கள் இப்படி பாடுபட்டு கண்ணீர் சிந்துவது நாட்டுக்கு நல்லது இல்லையே!

(ராகவன் சிரிக்க தொடங்குகிறான்.சாமியார் முழிக்கிறார்)

ராகவன் -சாமி!எங்க வீட்டு பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க! நா சொன்னது டீவி நாடகத்துல வர கதைய பத்தி!

சாமி - விளக்கமாய் சொல் மகனே!

ராகவன் -சாமி! இப்போ டீவின்னு ஒரு பொட்டில சினிமா, நாடகம் எல்லாம் வீட்டுலையே பார்க்கலாம். அதுல எல்லாத்துலையும் பொண்ணுங்க கண்ணீர் சிந்துற கதைதான். அதுதான் எல்லாருக்கும் பிடிக்குதான்.

சாமி- சந்தோஷம் மகனே! அப்படி என்றால் நம் வீட்டு பெண்கள் எப்படி உள்ளனர்?

ராகவன் -சாமி! அந்த டீவி பொட்டியால வீட்டு பிரச்சனை அறவே இல்லாம நாங்க எல்லாரும் சொகமாய் இருக்கிறோம்.

சாமி- என்ன? என்ன? வீட்டில் பிரச்சனையே இல்லையா? எப்படி?

ராகவன் -சாமி! காலைல ஆரம்பிச்சா ராத்திரி படுக்கிறவர டீவில சீரியல் அதாவது நாடகம்னு வச்சிக்குங்களேன் வருது! அதனால நடுவுல கிடைக்கிற அவகாசத்துல சுறுசுறுப்பா வீட்டு வேலைங்க நடக்குது! என் அம்மா, மனைவிக்கு சண்ட போட நேரமே இல்ல. அதுல காட்டுற
பிரச்சனைங்கள பார்க்கும்போது நம்ப பிரச்சன எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற தன்னம்பிக்கை வருது! புரியுதா சாமி!

சாமி (பெருமூச்சுடன்)- இந்த மாதிரி அந்த காலத்தில் இல்லாமல் போனதே. நான் சன்னியாசி ஆனதே வீட்டு பிரச்சனையை சமாளிக்க முடியாமல்தான்.

ராகவன் -என்ன சாமி இப்படி சொல்லிட்டீங்க! வாழ்க்கை இப்போ எல்லாம் நல்லாதான் போகுது. வீடு பிரச்சனை இல்லாம, நிம்மதியா இருக்கு! கொழந்தைங்களும் எல்லாருக்கும் ஒண்ணு இல்லாட்டி ரெண்டுதான். நிறைய லேடீஸ்சும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க! வீடு
கட்ட லோன் கிடைக்கிறதால, எல்லாரும் சொந்த வீடு வாங்கிடறாங்க! பிள்ளைங்க படிப்பு இப்போ கவலையே இல்ல! எல்லாருக்கும் இன்சிரீங்க் காலேஜ்ல சீட் கிடைக்குது. அதுங்களும் படிச்சி எப்படியோ அமெரிக்காவுக்கு போயிடுதுங்க! எம் பையனும் அங்காள பரமேசுவரி பொறியியல் கல்லூரில பி.ஈ படிச்சி இப்போ அமெரிக்கா போக டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்.
பிரச்சன இல்லாத வாழ்க்கை சாமி!

(சாமிக்கு மனைவி,மக்கள் ஞாபகம் வருகிறது. தன்னை சமாளித்துக்கொண்டு, வீபூதியை அள்ளி பூசிக்கொண்டு வாயிலும் போட்டு கொள்ளுகிறார்)

ராகவன் -சரி சாமி!வீட்டுக்கு போய் இன்னைய கதைங்கள கேட்டுட்டு தூங்கணும். நமஸ்காரம் சாமி! வரட்டா!

(வணங்கிவிட்டு வீட்டுக்கு புறப்படுகிறான் ராகவன்.)

சாமியார் மலரும் நினைவுகளில் முழ்கியவர், மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

(முற்றும்)

இ. சங்கமம் இணைய இதழ்

8 பின்னூட்டங்கள்:

At Sunday, 07 May, 2006, சொல்வது...

உஷா,

நல்லவேளை. நான் பொழைச்சேன். இங்கே டிவி தமிழ் சீரியல் வர்றதில்லை:-)))

ஆமாம். சங்கமம்தான் நின்னு போச்சே. இது எப்ப வந்தது?

என்னமோ ரெண்டு பகுதியா வந்திருக்கே.

 
At Sunday, 07 May, 2006, சொல்வது...

உஷாக்கா, இது ஆண்களுக்கான மனை மாட்சி க்ளாஸா? :) :)

 
At Sunday, 07 May, 2006, சொல்வது...

துளசி, அது என்ன சீரியல்ன்னா அத்தினி கேவலம்? பண்பாடு, கலாசாரம், பேஷன், மருத்துவம்
( ஆத்தா கான்செப்ட்), குடும்ப நலன்
( மாமியார் அல்லது மருமகளை டார்சர் செய்து எப்படி போன்று), வாழ்க்கை கல்வி ( பழி வாங்குவது) , அறிவியல் ( மந்திர மாந்தீரீகம்) போன்று எத்தினி விஷயம் கற்றுக் கொள்ளலாம் :-))

சங்கமம் இணைய இதழ், 2004ல் வந்தது என்று நினைக்கிறேன். இப்பொழுது வருவதில்லை
போல!

 
At Sunday, 07 May, 2006, சொல்வது...

பொன்ஸ், ஓவரா கவிதைகளைப் பிரிச்சி மேஞ்சா இப்படிதான் கன்னாபின்னாவென்று பொருள்
தோன்றும் :--------------)

 
At Sunday, 07 May, 2006, சொல்வது...

அடேடே ஏமாற்றி விட்டீர்களே உஷா அவர்களே. சாமியார் ராகவனின் ஓடிப்போன அப்பா என்றும், அவர் பல வருஷங்களுக்கு முன்னால் ராகவனின் அம்மா தந்த ரவுஸைத் தாங்காது ஓடிப்போனவர் என்றும், தற்சமயம் டி.வி.சீரியல்களால் பெண்கள் மனம் திசைதிரும்பி தத்தம் கண்வரை தொந்திரவு செய்வதில்லை என்பதைத் தெரிந்து கொண்டு வீடு திரும்பினார் என்றும் கூறி "அப்பா - மகனே" என்று ராகவனையும் சாமியாரையும் சேர்த்து வைப்பீர்கள் என்று நினைத்தேனே. அவ்வாறு செய்திருந்தால் பார்த்தால் பசி தீரும் படத்தை பார்த்து இதை எழுதினீர்களா என்று கேட்டு பின்னூட்டம் போடலாம் என்றிருந்தேனே. இப்படி ஒரு பின்னூட்டம் வீணாகி விட்டதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Sunday, 07 May, 2006, சொல்வது...

டோண்டு சார், கமலஹாசன் சின்ன பிள்ளையாய் வருவாரே அந்த "ப" படம்தானே? அதுதான்
என்றால் மாமியார், மருமகள் பிச்சைகாரனுக்கு பிச்சை போடும் காமடி சீன் மிக நன்றாக இருக்கும்.
உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் :-)))

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

"நல்லவேளை. நான் பொழைச்சேன். இங்கே டிவி தமிழ் சீரியல் வர்றதில்லை:-)))" - துளசி//

ச்சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும்...?

 
At Tuesday, 09 May, 2006, சொல்வது...

நானும் டோண்டு சார் மாதிரிதான் நினைச்சேன். இப்படி ஏமாத்திட்டீங்களே. :(

 

Post a Comment

<< இல்லம்