Sunday, May 14, 2006

என்றுமே பாராட்டு கிடைக்காத பணி

காலை பலகாரமாய் இட்லியும் கூட கொத்தமல்லி சட்னி மற்றும் வழக்கமான மிளகாய் பொடியையும் தட்டில் வைக்கும்பொழுது, காதில் விழுந்த வசனம்- " பொண்ணு லீவுக்கு வந்திருக்கான்னு, டிபன் தூள் பறக்குது?"

"அது சரி, தினமும் பிரட்டும், கார்ன் பிளேக்சும்தானே தின்னுட்டுப் போறீங்க? இட்லி தோசை எல்லாம் நான் செஞ்சிப் போட்டு இருக்கேனா?" என்றதும். "அப்படியில்லே, இட்லி செஞ்சு ரொம்ப நாளு ஆனா மாதிரி தோணிச்சு" குரல் கொஞ்சம் தாழ்ந்திருந்தது.

"வாரம் ஒரு முறை இட்லிக்கு அரைக்கிறதில்லையா? போன வாரம் இட்லி, தோசை செய்யலை?நடுவுல மிக்சி ரிப்பேர்ன்னு அரைக்கலை. நேத்தி காலைல என்ன சாப்பிட்டீங்க? முந்தா நேத்து?" என்றதும், " சரி, சரி, நேரமாச்சு, இன்னும் கொஞ்சம் பொடி போடு. பொடி காரம் போறலை. சாம்பார் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" என்ற வழக்கமான வசனத்தை அன்றும் கேட்டேன்.

மதியம், அக்காளுக்கும் தம்பிக்கு வழக்கமான குடுமி பிடி. நானும் வழக்கப்படி கண்டுக் கொள்ளவில்லை. மகன் ஏதோ சொல்ல வர, "என்னவோ செஞ்சிக்குங்க, நா உங்க விஷயத்துல தலையிட மாட்டேன்" என்றதும், "அதுதானே, உனக்கு மகள் என்றால் உசத்தி, என்னை என்னிக்காவது கொஞ்சியிருக்கியா? அவ கேட்டது எல்லாம் வாங்கி தருவே" என்று பட்டியல் நீண்டதும், "ஆமாம், அப்படித்தான். அவதான் எனக்கு ஒசத்தி. போதுமா?" என்றதும்,
" எனக்கென்னவோ, நா அடாப்டட்ன்னு நெனைக்கிறேன்" என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனான்.

விளக்கை அணைத்துவிட்டு, காமடி ஷோ பார்க்கும்பொழுது, நீண்ட சோபாவில் உட்கார்ந்திருந்த என் பக்கத்தில் இருந்த சின்னதை கொஞ்சம் அதிகமாய் கொஞ்சி விட்டேன். போதாதற்கு சின்னது, பெருசை வெறுப்பேற்ற, கொஞ்சம் ஓவராய் செல்லம் கொஞ்சியிருக்கிறது.

நானும் அப்பொழுது கவனிக்கவில்லை. திடீரென்று எழுந்த பெருசு, "என்னைக் கண்டாலே உனக்கு பிடிக்கவில்லை. நானும் வந்ததில் இருந்துப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று கோபமாய் கத்திவிட்டு, தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது.

சமாதானப்படுத்திவிட்டு, தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.

.ஹாப்பி மதர்ஸ் டே சொல்லிட்டேன், பதிவும் போட்டுவிட்டேன்.

19 பின்னூட்டங்கள்:

At Sunday, 14 May, 2006, சொல்வது...

அன்பு உஷஅ,
ஹாப்பி மதர்ஸ் டே டு யூ டூ.
இது தான் எல்லா வீட்டிலும் நடப்பது.கதவு சார்த்தும் வழக்கம் மட்டும் இல்லை என்றால் நம் பசங்க என்னதான் பண்ணுமொ?
எங்க வீட்டு ரூம் கதவு உடையாமல் இருக்கே என்று நான் ஆச்சர்யப் பட்ட நாட்கள் பல. நல்ல போஸ்ட். குட் டே.

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

ஹூம்................ இட்டிலியும், கொத்துமல்லிச் சட்டினியுமா?

இங்கத்துக் குளிருலே மாவு புளிக்காம இட்டிலி செய்யறதே 'எப்பவோ'ன்னு ஆகிப்போச்சு.

வீட்டுலே பசங்க சண்டைக்கு அர்த்தமே கிடையாது. அப்பப்ப வந்து 'போயிரும்'

சொல்ல மறந்துட்டேனே....
ஹேப்பி மதர்ஸ் டே!

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

அக்காவுக்கு இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள்!!

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

இது எல்லா வீட்டிலும் நடப்பது

 
At Sunday, 14 May, 2006, சொல்வது...

இளவஞ்சி க்ளாஸுக்கு போட்டி வகுப்பா? :) அப்படியே என்னோட சின்ன வயசுக் காட்சிகளா இருக்கு.. :)


அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா:)

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

பாராட்டு கிடைக்காத பணி என்பதற்காய் என்றேனும் வருத்தப்பட்டதுண்டா நீங்கள்????

இருக்காது - அது தான் "அம்மா"

இதே சிறுசு தான் பின்னாளில் சொல்லும் " என்ன தான் இருந்தாலும் எங்க அம்மா பண்ற டேஸ்ட் எதிலும் வராதுன்னு"

இது தான் பிள்ளை. இது தான் வாழ்வின் ருசி.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

மனு, இது ஆளுக்கு ஒரு தனியறை என்றுக் கொடுப்பதால் வரும் வினை. நேற்று இந்த டமாருக்கு பிறகு சமாதப்படுத்த பேசிக் கொண்டு இருந்தேன். சின்ன வயசிலேயே இந்த கதவைச் சாத்தும் வழக்கம் உண்டு. பொதுவாய் இப்படி மூடிக் கொண்டால், நான் சொல்லும் வசனம்-
" இப்ப மூணு எண்ணுறதுக்குள்ள கத தொறக்கிறீயா, இல்லே உள்ள வந்து நாலு வெக்கட்டுமா?" என்று! கதவோ மூடியிருக்கு, நான் எப்படி உள்ளே வந்து அடி வைக்க முடியும் என்று தெரியாமல் கதவை உடனே
திறப்பார்கள். இத்தனைக்கும் அடி என்பதெல்லாம் வெகு அபூர்வம். அப்படி ஒன்று வைத்தால் வலிக்காது. இதை சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தோம்.

டே தி டிரீமர், இந்த மலரும் நினைவுகளுக்கு மேல் என்ன மதஎ டே கொண்டாட்டம்? குழந்தைகளை திட்டுவது, கோழி மிதித்து குஞ்சு சாகுமா என்றாலும், மென்மையான மனசு, வாய்க்கு வந்ததை திட்டுவது, அடிப்பதும் கூடாது. என் பெற்றோர், மற்றும் என் இன் லாசும் பிள்ளைகளை அடித்ததில்லை. அப்படியிருக்க, என் கணவர் அடித்ததே இல்லை, நான் வீட்டில் மேய்ப்பதால், சில சமய்ம் குறும்புதனம் தாங்காமல் ஒரு அடி கொடுப்பதுண்டு. இரண்டும்
அறுத்த வால்கள். இதில் அவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்து, "உஷா பொறுமையின் பூஷணம்" என்று சொந்தங்கள் பட்டம் தந்திருக்கிறார்கள்.

துளசி, உங்க ஊரூ அளவு குளிர் இல்லாவிட்டாலும், இங்க குளிர்காலத்தில் மாவை புளிக்க வைக்க, வீட்டில் பிரத்தியோக கம்பளி ஷால் ஒன்று உண்டு :-)

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

சந்திரா, பொன்ஸ் வீட்டுக்கு வீடு கதைதான்.

மனசு ஐயா! "எங்கம்மா போல வருமா?" இந்த டயலாக்ஸ் தானே தினமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. என்னத்தான் பார்த்து பார்த்து செய்தாலும்.. ஹூம்... ( இந்த பாடம் பொன்சுக்கு)

பாலபாரதி, பிறந்தநாள் வாழ்த்தா? என்ன சொல்றீங்க?

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

நேத்து ஒரு நண்பனிடமிருந்து எஸ்.எம்.எஸ். அன்னையர் தினமான இன்று உன்னுடைய அம்மாவுக்கு என்னுடைய சார்பில் நன்றி சொல். அவர் இல்லையென்றால் இப்படி ஒரு நண்பன் எனக்குக் கிடைத்திருக்க மாட்டான் அல்லவா.

ம்ம்ம்ம்...வாழ்த்தை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் பார்த்தீர்களா!

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

இது போன்ற நிகழ்வுகளை தந்தையின் கோணத்தில் காண ஒரு தந்தையர் தினத்திற்காக காத்திருக்கிறேன்.:))

குழந்தைகள் குழந்தைகள்தான். ஜுஹி சொல்வதுபோல் (விளம்பரம்) இப்படி ஒரு குடும்பம் என மகிழ வேண்டியதுதான்.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

உண்மை தாங்க,

வெளிலெ வந்து சொந்தமா சமைத்து சாப்பிடுகிறப்ப தான் வீட்லெ சொகமா உக்காந்து குறை சொல்லிகிட்டே சாப்டது ஞாபகம் வருது...என்னெக்குமே பாராட்டுனது கிடையாது.

வஜ்ரா ஷங்கர்.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

உஷா,

//மதியம், அக்காளுக்கும் தம்பிக்கு வழக்கமான குடுமி பிடி//

எங்க வீட்டுலயெல்லாம் 4 டிக்கெட்டு! தெனம் தெனம் பானிப்பட் போரே நடக்கும்! ம்ம்ம்.. எங்கம்மா என்னென்ன பாடுபட்டாங்களோ!? :(

உங்க பதிவின் மூலம் எங்கம்மாவுக்கு ஒரு அன்னையர் தின வாழ்த்து! :)

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

ஹும்...ரெண்டு வருஷமா யார் என்ன சாப்பாடு போட்டாலும் அத பத்தி எந்த குறையும் சொல்லாம உள்ள தள்ளீட்டு பேசாம் எந்திரிச்சு போயிடுவேன்.

இப்ப கிடைக்கிற சாப்பாட்ட திட்டி அப்புறமா ஒன்னும் கிடைக்காம போகும் போது குறைந்தபட்சம் ஒரு குற்ற உனர்வு இல்லாம இருக்குமே. :(

//கதவு சார்த்தும் வழக்கம் //

அந்த வேலையை செஞ்சா வெளிய வந்தப்புறம் எனக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு விழும்! அதனால் என்ன கிடைக்கிதோ அத பேசாம் வாங்கிட்டு போயிடறது நல்லது....

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

நல்ல பதிவு. எங்க வீட்டுல இது நடக்கிறது இல்லை. அம்மா சின்ன வயசிலேயே போயிட்டாங்க. அதனால வீட்டம்மா எப்படி சமைச்சாலும் நல்ல சுவையாத் தான் தெரியுது. :-) என் மகளுக்கு இன்னும் தம்பி, தங்கை வரவில்லை. அதனால் அந்த சண்டையும் இன்னும் இல்லை. எங்கள் வீட்டில் அன்னையர் தினத்தை எப்படிக் கொண்டாடினோம் என்று இப்போது தான் பொன்ஸ் பதிவில் சொல்லிவிட்டு வந்தேன். அதை மீண்டும் இங்கே சொல்வதைவிட அங்கே போய் பார்த்துக் கொள்ளுங்களேன்.

(பொன்ஸ். விளம்பரம் போட்டாச்சு. அனுப்ப வேண்டியதை விரைவில் அனுப்பவும்).

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

ஹஹா அம்மா எப்பவுமே ஸ்பெஷல் தான்! எல்லாருக்கும் அவங்க அவங்க அம்மா! எங்க வீட்ல நான் கோவப்பட்டா சாப்பிடாம உக்காந்துப்பேன். உடனே அம்மா வந்து கெஞ்சி கொஞ்சி சாப்பிட வெச்சிடுவாங்க. இதே யோசனைய நான் என் நட்புக்கு குடுத்தேன். அடுத்த நாளைக்கு அவன் வந்து என் மூஞ்சி மேலயே ரெண்டு குடுத்தான். எதுக்குடானு கேட்டா "நீ சொன்னா மாதிரி சாப்பிட மாட்டேன்னு சொன்னதுக்கு எங்க அப்பா சாப்பாட்ட தூக்கி மாட்டுக்கு வெச்சிட்டர்டா!" அப்போ தான் எங்க அம்மா என்ன எப்படி பாத்துகிட்டாங்கனு புரிஞ்சது.
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! அனைத்து அன்னையருக்கும். உங்கள எல்லாம் புகழணும்னா தனி பதிவு போட்டு பத்து பாகம் குடுக்கலாம். அம்மாக்கள் உயர்ந்தவர்கள் தான்.

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

ஜிரா, இதை அந்த பையன் எத்தனைப் பேருக்கு அனுப்பினான் என்றுப் பாருங்கள் :-)

மணியன், எனக்கும் அந்த விளம்பரம் மிகப் பிடிக்கும். "என்ன குடும்பம் இது?" என்ற டயலாக் இங்கும் விடப்படும். ஜூஹியின் சிரிக்கும் கண்கள் எனக்கு மிகப்பிடிக்கும்.

சுரேஷ், அம்மாவின் புகழை போற்றும் வாய், மனைவி சமையலை புகழ்ந்ததாய் சரித்திரமில்லை. அப்படி புகழ ஆரம்பித்தால்
.....எங்களுக்கு சந்தேகமில்லை வரும் :-)))

இளவஞ்சி, உங்க வீட்டுல நாலு டிக்கெட்டா? எங்க வீட்டுல மூணு. வீட்ட சுத்தி சுத்தி அடிச்சிக்கிட்டு ஓடுவோம். எல்லா அம்மாக்களும் இதுக்கெல்லாம் அலட்டிக்க மாட்டாங்க

சமுத்ரா, அது என்ன ரெண்டு வருஷமா? கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமாச்சு என்று அர்த்தம் பண்ணீக்கலாமா?

பாரதி நன்றி. "பாராட்டே கிடைக்காத பணி" என்று சும்மா அலட்டிக்கிறது :-)

குமரன், சீக்கிரம் உங்க மகளுக்கு அந்த நல்வாய்ப்பைக் கொடுங்கள் :-)

பிரசன்னா, ஒரு சின்ன மனோதத்துவம், பாட்டி சொன்னது- அதாவது மிக அம்மா கோண்டுவாய் இருக்கும் பிள்ளைகள், மனைவி சொல்லே மந்திரம் என்று கட்சி மாறிவிடுவார்களாம் :-))))

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

அது ரொம்ப இயற்கை தான! அம்மாக்கு அப்புறம் அம்புட்டு அன்பையும் வாழ்கையையும் நமக்காய் குடுப்பது மனைவி தானே? அவர்கள் சொல்படி நடப்பது தப்பே இல்லை. கருத்துகளை பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லைனு நினைக்கிறேன்.
பிரசன்னா

 
At Monday, 15 May, 2006, சொல்வது...

//சமுத்ரா, அது என்ன ரெண்டு வருஷமா? கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமாச்சு என்று அர்த்தம் பண்ணீக்கலாமா?
//

என்னோட ஹாஸ்டல்வாசி சகா ஒருத்தன் எங்க காலேஜ் மெஸ் சாப்பாட்டை பத்தி சொல்லி அழுது ரெண்டு வருசம் ஆச்சு...

வேற அசம்பாவிதம் ஒன்னும் நடக்கவில்லை.;)

 
At Tuesday, 16 May, 2006, சொல்வது...

// எல்லாருக்கும் அவங்க அவங்க அம்மா! எங்க வீட்ல நான் கோவப்பட்டா சாப்பிடாம உக்காந்துப்பேன். உடனே அம்மா வந்து கெஞ்சி கொஞ்சி சாப்பிட வெச்சிடுவாங்க. இதே யோசனைய நான் என் நட்புக்கு குடுத்தேன். அடுத்த நாளைக்கு அவன் வந்து என் மூஞ்சி மேலயே ரெண்டு குடுத்தான். எதுக்குடானு கேட்டா "நீ சொன்னா மாதிரி சாப்பிட மாட்டேன்னு சொன்னதுக்கு எங்க அப்பா சாப்பாட்ட தூக்கி மாட்டுக்கு வெச்சிட்டர்டா!" அப்போ தான் எங்க அம்மா என்ன எப்படி பாத்துகிட்டாங்கனு புரிஞ்சது. //

அன்புள்ள ப்ரசன்னா,

இரண்டாம் முறை படிக்கும்போதுதான் புரிந்துகொண்டேன்
:-)))

 

Post a Comment

<< இல்லம்