Saturday, May 20, 2006

யோகா குருக்களின் மாயா லோகம்

(படித்ததில் பிடித்தது வரிசையில், கீற்று டாட் காமில் ஆர். பிரேம் குமார் என்பவரால் எழுதப்பட்டது. வெறும் சுட்டியைக் கொடுத்தால் எத்தனை பேர்கள் படிப்பார்கள் என்று தெரியாததால், கட்டுரையை எடுத்துப் போட்டுள்ளேன்)

ஆத்ம யோகத்தின் மூலம் நோயைக் குணமாக்குவார் என்று உறவினர் கூறியதையடுத்து கணவனுக்கு சிகிச்சை பெற ஆஸ்ரமத்துக்குச் சென்ற பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற ஆஸ்ரம நிர்வாகி சுரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்... கடை வராந்தாவில் உட்கார்ந்து பக்கத்தில் நிற்பவர் செவிகளில் விழும்படி பேப்பர் படித்துக் கொண்டிருந்த தங்கப்பனை அதட்டியபடி வந்தார் சொக்கலிங்கம்.

என்ன நீட்டி முழக்கிப் படிக்கிறே... அது வேற முந்தா நாளுப் பேப்பரு...! உனக்கென்ன யோகின்னா ரொம்ப நிசாரமாகப் போச்சோ? யோகா பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? முன்னே பின்னே யோகா பண்ணி இருக்கியா?

"கோபப்படாதீங்க சொக்கண்ணே... எனக்கு என்னண்ணே யோகா பற்றித் தெரியும்? ஏதோ பேப்பரில் செய்தி போட்டிருக்கான்... மார்ச் மாசம் 21ம் தேதி செய்தி... நம்ம ஊருக்குப் பக்கத்து ஊரிலதான் நடந்திருக்கு... அதான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன்...!

"இப்பதான் ஊருக்கு ஊரு மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கில்லே... அதான் எங்கே பார்த்தாலும் யோகா சொல்லிக் கொடுக்கிறாங்க... அதில ஒன்றிரண்டு பேரு தப்புத் தண்டா பண்ணினா, ‘குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் மூத்தவனும் உதவாது என்கிற மாதிரி பேசுறதா? கண்டுக்காமப் போக வேண்டியதுதானே...!

சொக்கலிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் கடைக்காரர் நாராயணன் சிரித்து விட்டார். "என்ன, சொக்கண்ணே, இப்படிச் சொல்லிட்டீங்க! நானும் தான் ஊரு உலகத்தில யோகா பற்றி விளம்பரங்கள் வரத்தொடங்கின காலத்தில் இருந்தே பேப்பர் படிச்சிட்டிருக்கேன். ஒரு பேப்பருக்கு நாலு பேப்பர் வாசிக்கிறேன்... காலம் காலமாக யோகாசனத்தின் மகிமை பற்றிப் பேசுகிற மர்மயோகிகள் பற்றி வெட்கப்பட வைக்கிற செய்திகள்தான் அதிகம் வருது... கூர்ந்து கவனிச்சீங்கன்னா தெரியும்...!

சொக்கலிங்கத்துக்கு கோபம் வந்தது. "அப்படி எல்லாம் கிடையாது! அதெல்லாம் திட்டமிட்டச் சதி!

"யாருண்ணே யாருக்கு எதிராகச் சதி செய்றாங்க? கொஞ்சம் புரியம்படியாச் சொல்லுங்களேன்...தங்கப்பன் கெஞ்சுகிற பாவனையில் கேட்டார்.

" நம்ம பாரதக் கலாச்சாரத்தின் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து யோகிகள் மேல அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள்! கொஞ்ச நாள் முன்னாடி கூட, பிருந்தா காரட் என்றொரு பொம்பளை கம்யூனிஸ்ட் சுவாமி பாபா ராம்தேவ் மேல பொய்க் கேசு போட்டிருக்கு... பாபா ராம்தேவ் எப்படிபட்ட ஆள் தெரியுமா? வாரணாசியில் யோகா ஆசிரமம் வைத்து ஆயுர்வேத மருந்து தயாரிக்கிறார்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்... அவருடைய சொத்து மதிப்பு 100கோடியைத் தாண்டும் என்கிறார்கள்... அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும் தினமும் 7 கோடி பேருக்கு டி.வி. சேனல்கள் மூலம் யோகா கற்றுத் தருகிறார்... நடிகர்கள் வாறாங்க-கிரிக்கெட் வீரர்கள் வாறாங்க - அரசியல்வாதிகள் வாறாங்க... எல்லோரையும் ஆசிர்வதிக்கிறார். அப்படிப்பட்ட யோகி மேல குற்றச்சாட்டுன்னா பூமி பொறுக்குமா?"

"ஆத்திரப்படாதீங்க சொக்கண்ணே... இப்ப நான் பேசல்லேன்னா தட்டிப் பேச ஆளிள்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்கிறது மாதிரி ஆயிடும். அந்தம்மா இருக்காங்களே, பிருந்தா காரட், அவங்ககிட்ட பாபா ராம்தேவோட திவ்ய யோகா பார்மசியில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 112 தொழிலாளர்கள் போய் முறையிட்டாங்க. அந்தத் தொழிலார்கள்தான், ஆயுர்வேத மருந்தில் எலும்புத் துண்டுகளைச் சேர்க்கிறாரு; எலும்புத் துண்டுகளைக் கையாள முடியாது என்கிறதால வேலையை விட்டு நீக்கிட்டாரு என்று அவர்மேல் குற்றம் சாட்டினார்கள். பிருந்தா காரட் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; அதோடு கூட, ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் விலங்கு மற்றும் மனித எலும்புகள் சேர்ப்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறினார். சர்ச்சை உருவான உடனேயே உத்தராஞ்சால் மாநிலத்தின் தொழிலாளர் அமைச்சகம் திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளைக்கு குறைந்த பட்ச ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. குலியா பஸ்பம் என்ற வலிப்பு நோய் மருந்தும், யவ்வனாம்ருதி பதி என்ற ஆண்மை வீரிய மருந்தும் ஆயுஸ் (AYUSH) ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்த, ஹோமியோபதி) ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில் விலங்கினத் துணுக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... உண்மை இப்படி இருக்க, நீங்க தீவட்டக்காரனுக்கு கண் தெரியாது’ என்கிற மாதிரி பேசினா எப்படி?"

"கடைக்காரரே... நீங்க பேசுறதில உள்ள நியாயத்தை ஒத்துக்கிறேன். ஆனா பாபா ராம்தேவ் சாதாரண மக்களும் கடை பிடிக்கிற மாதிரி பிரணயாமம் சொல்லிக் கொடுக்கிறதைப் பார்த்திருக்கிறீரா...

"சொக்கண்ணே, நீங்க பார்த்திருங்கீங்களா...?" திடீர் எனத் தங்கப்பன் கேட்டார். சொக்கலிங்கத்துக்கு தர்ம சங்கடமாகி விட்டது என்றாலும் சாமாளித்தார்.

"நமக்கெல்லாம் அதெல்லாம் பார்க்க எங்கே நேரம் இருக்கு? எதாயிருந்தாலும் இன்னும் 5 வருடங்களில் சுமார் 10 கோடிப்பேர் டி.வி. பார்த்து யோகாசனம் செஞ்சு நோய் நொடிகளிலிருந்து விடுபடுவார்கள் என்று சொல்கிறார். இது நல்ல விஷயம் இல்லையா?

"இந்தியாவில் சொந்தமா டி.வி. உள்ளவங்ளே 10 கோடிப்பேர் தேறுவாங்களா என்பது சந்தேகம்...! சொக்கண்ணே... இந்த யோகாசனம் என்கிறது டு மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரிப்பட்ட சமாச்சாரம் இல்லை. . ! ஆனா இப்ப சில உலகமயமாகிவிட்ட குருக்கள் தாங்களே ஸ்பெஷலா ஒரு ஸ்டைலை அறிமுகம் செய்கிறாங்க... தெருவுக்குத் தெரு ஒரு கராத்தே கிளப் இருக்கிற மாதிரிதான் யோகா படிப்பகங்களும் அமைஞ்சிருக்கு... அதான் நாகர்கோவிலில் ஒருவர் ஆத்மயோகம் மூலம் அற்புதம் செய்கிறார் என்றால் ராம்தேவ் பிரணாயாமம் என்கிறார்... ரவிசங்கர் சுதர்ஸன கிரியா என்கிறார்... பலயோகேஸ்வரர், நான் உடல் சார்ந்த யோகத்தை (ஹத்த யோகா) அல்ல; மனம் சார்ந்த (ராஜ யோகா) யோகத்தினைப் போதிக்கிறேன் என்கிறார்; ரஜனீஷ் தியான யோகாவை கடை பிடிப்பதாகக் கூறுகிறார்; மகிரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான முறையை’ (Transcendental Meditation) உலகமெங்கும் பரப்பி வருகிறார்...

அட நாராயணா... நீங்களும் பேசாம ஒரு யோகா ஸ்டைல் தொடங்கிடலாம் போலிருக்கே... தங்கப்பன் வியப்புடன் கேட்டார்.

யோகசனம் படிக்கிறது என்கிறது பறையாட்டம் படிக்கிறது மாதிரி கண்ணும் கருத்துமா படிக்க வேண்டிய விஷயம். தொடர்ந்து பயிற்சி செய்தால் உடம்பை ரப்பராக வளைக்கவும், பலூனாக மாற்றவும் முடியும். ஜிம்னாஸ்டிக்ஸ், சர்க்கஸ் போன்ற கலைகளில் ஈடுபாடு உள்ளவர்களும் பல தினுசுகளில் உடம்பை வளைக்கிறாங்க. படிப்பும், ஊளைச் சதையும் வாய்க்கப் பெறாத கழைக் கூத்தாடிகளும் உடம்பை வளைச்சு தெளிக்கத்தான் செய்றாங்க. அதனால உடம்பை காட்டி வித்தை காட்டுறது யோகா படிச்சவங்க மட்டும் தான் செய்ய முடியும்னு இல்லை... ஆனா, என்ன, இந்த குருக்களெல்லாம் உடம்பை வச்சு வித்தை காட்டினாலும், அதுக்கு மேல், ஆன்மாவின் பேரானந்தம் என்று தத்துவச் சரடு விடுகிறார்! இப்படி எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக கஷ்டப்பட்டு வாழ்வது எதற்காக என்று கோடிக்கணக்கான ஏழைகள் குமுறிக் கொண்டு இருக்கும்போது வாழும் கலை பற்றி வகுப்புகள் நடக்கிற நாடு இது என்பதுதான் வேடிக்கை. ..! நாராயணன் ஏக்கப் பெருமூச்சுடன் பேச்சை நிறுத்தினார். அப்போது யாரோ கடையில் பொருள் வாங்க வரக் கவனம் அவர்பால் திரும்பியது. அந்த நேரம் பார்த்து சொக்கலிங்கம் கிசுகிசுத்தக் குரலில் தங்கப்பனிடம் சொன்னார்:

தங்கப்பா, நம்ம ஊரில சில பேரு மகான்களைப் பற்றிச் சரியா புரிஞ்சுக்காமப் பேசறாங்க... வறுமை பெருசு இல்லை; மனநிம்மதி தான் பெருசு! அதைப் புரிஞ்சுகிட்டதாலதான் 144 நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் கடந்த பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தினங்களில் பெங்களூர் அருகே உள்ள ஜக்கூர் விமானத்தளத்தில் சங்கமித்து இருக்கிறார்கள். அங்கே நடந்த மகான் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 50வது பிறந்தநாள் விழாவும், அவரது வாழும் கலை அமைப்பின் (Art of Living) வெள்ளி விழாவும் பெங்களூரையே ஒரு ஆன்மீக நகரமாக மாற்றிவிட்டது தெரியுமா? நமது ஜனாதிபதி, வாஜ்பேயி, அத்வானி உட்பட பல மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏறுமடைக்கு நீர் பாய்ச்சுவது போல, இந்தக் கடைக்காரரைப் போலச் சில பேருக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது...!

நாராயணன் திரும்பிக் கொண்டார். அண்ணே... நீங்க சொன்னது காதில விழுந்தது. ஏறுகிறவன் இடுப்பை எவ்வளவு தூரம் தாங்கலாம்ணே? குருக்கள் எல்லாம் இப்படி படைபலம் திரட்டிக் காண்பிக்கிறதாலதான் சில அரசியல் தலைவர்கள் அருள்வாக்கு கேட்கும் சாக்கில் வாக்கு சேகரிக்க ஆஜராகி விடுகிறார்கள். இந்தியாவில் கூட்டம் சேர்க்கிறது பெரிய விஷயமில்லை அண்ணே... ஆனா கூட்டத்தில் பெரும் பகுதி விமானத்திலயும், சொகுசு கார்களிலும் பயணம் செய்து வந்தவங்க என்பதை மறந்து விட்டுப் போகக்கூடாது. ஆந்திராவில் காடுப் பிரதேசங்களில் சட்டையணியாமல் நின்று கத்தார் என்கிற இசைக் கலைஞன் பாடுவதைக் கேட்க கட்டை வண்டிகளிலும் கால்நடையுமாக இலட்சத்துக்கும் மேல் மக்கள் கூடி விடுகிறார்கள்; கோல்கட்டாவில் ஜோதிபாசு பேசுகிறார் என்றால் கூட்டம் பல லட்சத்தைத் தாண்டி விடுகிறது. இதையும் நாம மனசுல வச்சுகிட்டுப் பேசணும். சொக்கண்ணே 25 லட்சம் என்று சொன்னதெல்லாம் தலையெண்ணுவதில் உள்ள தப்புக் கணக்கு. ஆன்மீகம் பேசுறவங்க கணக்கில வீக்காகிப் போயிடறாங்க... அதுசரி; ஆன்மீக ஜோதியில் கரைய வேண்டி ஆயிரக்கணக்கில் வந்து இறங்கின வெளிநாட்டுப் பக்தர்கள் எல்லோரும் உண்மையிலேயே யோகாசனத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்கள்தானா? அவர்களில் சிலரது வருகையிலாவது உள்நோக்கம் எதுவும் இல்லையா? கோவாவிலும் கோவளத்திலும் சுற்றியலையும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் கந்தல் கோலமும் கசங்கிய விழிகளுமாய் காட்சியளிப்பது அவர்கள் பாரதத்தின் இயற்கை அழகை ரசித்துப் பருகியதால் மட்டும் தான் என்று சொல்வதை நம்புவது போல்தான் பக்தி மார்க்கம் தேடி இந்தியாவுக்குள் நுழைபவர்களையும் கருத வேண்டு உள்ளது என்பது என் அபிப்ராயம்... இன்னொரு கேள்வி, சொக்கண்ணே... கடல் தாண்டிப் போவது கலாச்சாரத்துக்கு எதிரானது என்று காந்தியடிகளுக்கே தடை விதித்த கதை கேட்ட ஞாபகம் இருக்கு! அப்போ நம் குருக்கள் கடல் தாண்டிப் போவதும் வருவதும் எப்படி நியாயம்?

காலத்திற்கேற்ப மாறணும். மகேஷ்யோகி 1970களில் உலகமெங்கும் ஆழ்நிலைத் தியானம் பற்றிப் பறந்து பறந்து பயிற்சி அளித்தார். அதனால் உலகம் எங்கும் அவருக்குச் சீடர்கள் உருவானார்கள். குரு தட்சணை கோடிக் கணக்கில் வசூல் ஆனது. அதனால் அவரால் அமெரிக்காவிலேயே ஒரு பழைய விமானத் தளத்தை விலைக்கு வாங்க முடிந்தது. அவரைப் பின்பற்றி, அவருடைய பிரதான சீடராய் முதலில் இருந்த ரவிசங்கர் பெங்களூருக்கு அருகில் 60ஏக்கர் பரப்பளவில் வேத விஞ்ஞான மகாவித்யா பீடத்தை அமைத்து இருக்கிறார். இதற்கு எல்லாம் பெரும் செலவு ஆகிறது. அதற்கு வெளிநாட்டிலிருந்து டாலர்களில் தட்சணை செலுத்துகிற பக்தர்கள் இருந்தால் தான் ஈடுகட்ட முடியும்...! எல்லாமே உலகமயமாகும் போது யோகா மட்டும் விதிவிலக்கா, என்ன?

கடைக்காரர் குறுக்கிட்டார். நீங்க சொல்றதில ஒரு சின்னத் திருத்தம் அண்ணே... எல்லாமே விலைக்கு விற்கப்படும் போது யோகா மட்டும் விதிவிலக்கா என்ன?... இப்படி யோகாவை விற்றுக் காசாக்குவது பற்றி உண்மையிலேயே யோகாசன நிபுணர்களாய் இருக்கின்ற பலரும் கவலை தெரிவிக்கின்றனர்... இலவச அறிமுக உரை என்று வெற்றிலை-பாக்கு வைத்துக் கூப்பிடுகிறார்கள். சரி; என்னதான் நடக்கிறது என்று அரங்கத்துக்கு உள்ளே சென்று உட்கார்ந்தால், நகரத்தில் வாளிப்பான உடல்வாகும், வளம் கொழிக்கும் வாழ்வும் உள்ள ஒன்றிரண்டு பேர் அறிமுக உரையில், இதுவரை வாழ்ந்த வாழ்க்கை பயன் இல்லாதது; இனிமேல்தான் பயனுள்ள வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்” என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒரு விதமாக மனதைப் பதப்படுத்துதல் (Conditioning) நடைபெறுகிறது. பிறகு இதற்கு முந்தையப் பயிற்சியில் பங்கு பெற்று பங்கு பெற்றோர் ஒன்றிரண்டு பேர் சிரித்துச் சிரித்துப் பேசுகின்றனர்... சற்றும் தாமதிக்கமால் ஒருவர் எழுந்து, 16 நாட்கள் தினசரி 2 மணி நேரம் வைத்து யோகா வகுப்பில் கலந்து கொண்டதனால் எனக்கு ஆஸ்த்மா குணமாச்சு என்பார்; வேறொருவர் எழுந்து எனக்கு இரத்த அழுத்தம் குறைந்தது என்பார்; வேறொருவர் எனக்கு முதுகு வலி போயே போச்சு என்பார்... யாரும் எனக்கு டி.பி.இருக்கு; கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வருகிறது என்று சொல்லி கைக்குட்டை வைத்து வாயை மூடாமல் நான்கு முறை இருமுவது இல்லை. இந்தியாவிலேயே அதிகப்பேரைப் பாதித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள் யாரும் யோகா வகுப்பில் வந்து சாட்சி சொல்வதில்லை!

சாட்சியங்கள் முடிவதற்குள்ளாகவே நமது கரங்களில் ஒரு விண்ணப்பப் படிவம் இருக்கும். இன்றைக்கு 500ரூபாய் கொடுத்துச் சேர முடியாதவர்கள் பயிற்சி துவங்கும் நாளன்று ரூபாய் கொண்டு வந்தால் போதும்! எல்லோரும் நிரப்பின விண்ணப்பப் படிவங்களை உங்களருகே (பவ்வியமாக, புன் சிரித்தபடி...) வந்து கை நீட்டும் வாலண்டியரிடம் கொடுத்து விடுங்கள்! நாங்கள் தொடர்பு கொள்வோம்! என்று நளினமாக குரலில் ஒருவர் அறிவிப்பார். தேர்ந்தெடுத்த சொற்களிலான வியாபாரப் பேச்சு...! படிவம் நிரப்பிக் கொடுக்காமல் அரங்கத்தை விட்டு வெளியேறுவது தர்ம சங்கடத்தை உருவாக்கி விடும். 30 பார்வையாளர்களில் ஒரு ஆளை வாடிக்கையாளர் ஆக்கிவிடலாம் என்பது ஒரு கணக்கு...

எல்லாமே ஒரு வித சங்கிலித் தொடர் விற்பனை (Multi-level Marketing) மாதிரித் தோன்றுகிறது...!

நாராயணா... ரொம்ப வெறுத்துப் போய் பேசாதீங்க... ஆளு சேர்க்கிறதுன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்... 500 ரூபாய் போனால் என்ன...? தீரா வினை தீர்ந்திடுச்சுன்னா சந்தோஷம்தானே...! அப்பாவியாய் கேட்டார் தங்கப்பன். தங்கப்பா, யோகா பயிற்சி பண்றதினாலே சில உடல்நலக் கோளாறுகள் கட்டுப்படுது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அது ஒரு இணை சிகிச்சை முறை (complimentary). எடுத்துக்காட்டாக சர்க்கரை நோய் இன்சுலின் என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்டது; ஆஸ்த்மா நுரையீரல்களின் மூச்சுக் குழாய்கள் வீக்கமடைவது சம்பந்தப்பட்டது. இரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்றவை மனநிலை சார்ந்த பிரச்சனைகள்... இன்னும் சொல்லப் போனால் உயிருக்கு ஆபத்து எற்படுத்தும் நுண்ணுயிரித் தாக்குதல் இல்லாத உடல் பலவீனங்களை மனசை உற்சாகப் படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்... யோகா பயிற்சிக் கூடங்கள் சில ஒழுக்கங்களை (!) வலியுறுத்துகின்றன...!

சாதாரண கதியில் சிகரெட் இழுப்பதை கைவிட முடியாத சிலர், யோகா வகுப்பில் சேர வேண்டுமானால் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுவும் உடல் இயங்கியலில் கண்ணியமான மாற்றத்தைக் கொண்டு வரும்! ஆனால் உலகம் முழுவதும் பெருவாரியான மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கும், நொறுக்குத் தீனிகளை மேய்ந்து, உடல் உப்பி, நோய்களின் வாழ்விடமாய் உடலென்னும் ஆலயத்தை மாற்றுவதற்கும் காரணமான சுரண்டல் பற்றி இந்தக் குருக்கள் வாய் திறப்பது இல்லை! உலகமெங்கும் கிளைகள் திறக்கும் யோகா விற்பனர்கள் சோமாலியா மாதிரி நாட்டில் என்ன செய்ய முடியும்? ஒரு வேளை அங்கே ஒரு கிளை துவங்கினால் அதிலும் ஆளும் வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கமும்தான் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் எதுவும் இருக்கப் போவது இல்லை!

நாராயணன்... நீங்க ஓவராய் பேசறீங்க! யோகாவால நன்மைகள் இருக்குது என்கிறீங்க. அனால் குருக்கள் வழி காட்டுதலில் கட்டணம் வசூலித்து நடத்தப்படும் யோகா வகுப்புகளில் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும் என்கிறீங்க...! கோபத்தோடு குறுக்கிட்டார் சொக்கலிங்கம்.

ஆத்திரப்படாதீங்க...! இந்த நாட்டில வசதி இல்லாதவங்க என்கிறது பணத்தைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கப்படுறது இல்லை. எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் நீங்கள் ஒரு தலித் என்றால் ஒரு மக்கள் அரங்கத்தில் உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பின் அடிநாதமாக முணு முணுப்புகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். ரவிசங்கரிடம் தலித்துகள் பற்றிக் கேட்டால் அது பற்றி யாம் ஒரு நூல் இயற்றியுள்ளோம் (Heritage of Dalits). அதில் நிறைய முனிவர்கள் தலித்துகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டது பற்றி எழுதி உள்ளோம். அந்த உண்மைகள் மக்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அம்பேத்கர் மட்டும்தான்... வேறு ஒரு மதத்துக்கு மாறிச் செல்வது எளிது. அப்படிப் போனால், படிக்க’வேண்டியவர்களுக்கு ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய பாடத்தைக் கற்பிக்க முடியாது. ஆனால் நீங்கள் நிலைத்து நின்று மக்களை மாறச் செய்ய வேண்டுமானால் உங்களிடையே வித்தியாசமான போர்க்குணம் இருக்க வேண்டும். ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்; உரிமைகளுக்காகப் போராட வேண்டும்... என்று பேசுகிறார். அவரது பேச்சிலிருந்து அடக்கு முறைகளைச் சகித்துக் கொண்டு தலித்துகள் வாழ்கின்ற காலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கணிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ரவிசங்கர் உயர் ஜாதியில் பிறந்ததனால் அவருடையப் பேச்சை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டும்போது ஓர் உள்நோக்கம் பொதிந்திருக்கிறது என்று தோன்கிறது. ஆனால் யாதவ குலத்தில் பிறந்த ஒரு சாதாரண விவசாயியின் மகன்தானே ராம்தேவ்... அவரையும் குற்றம் சாட்டித்தானே பேசுகிறீர்கள்?

நான் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வரவில்லை... ஒவ்வொரு யோகியும் கொடுக்கிற போஸ் பார்த்திருக்கிறீங்களா? இந்த ஃபோட்டோவில் தெரிகிற மாதிரி காந்த விழிகளும், களையான முகமும், அலைபாயும் சிகையலங்காரமும் நேரில் பார்த்தால் தெரிவது இல்லை. ஆனால் அருகில் அண்டவிடாத பாதுகாப்பு வளையம்தான் இவர்களது புனிதத்தையும், கடவுளின் அவதார உருவம் என்ற கட்டுக் கதையையும் கட்டிக் காக்கிறது.

அவர்களுடைய பேச்சின் ஒழுக்கில் சக்தி மண்டலங்கள் (Energy Fields), சக்தி ஊடுருவல்கள் (Energy Flows), சக்திக் கற்றைகள் (Energy Blocks), தீர்க்க ரேகைகள் (Meridians), விசைகள் (Forces), நறுமணங்கள் (Auras), சந்த நயங்கள் (Rhythms) என்ற ஆங்கில வார்த்தைகள் அவற்றின் வழக்கமான அர்த்ததிலிருந்து வழுவி மொழியின் மாறுபட்ட உச்சரிப்புகளாலும், ஜன்னி வெட்டி மேற்சொருகும் கண்களின் உடல் மொழியாலும் ஒரு மர்மக் குகையில் இருப்பது போன்ற உணர்வை வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தி விடும்...

கடவுள் ஒரு பிரச்சனை அல்ல; ஒரு தீர்வும் அல்ல என்று சொல்வதைக் கேட்டு அமைதியாக தலையாட்டும் நாற்காலிப் பட்டாளம். இந்த சொற்றொடரின் பொருள் என்ன என்று யாராவது கூட்டத்தில் எழும்பி நின்று கேட்டால் வெளியே போகவேண்டியதுதான்.

இதெல்லாம் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஆன்மீக அராஜகம் அல்லவா?

நாராயணன்... நீங்க விபரமான ஆளாத்தான் இருக்கிறீங்க. நம்ம நாட்டில எல்லா வித மத நம்பிக்கை உள்ளவங்களும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற மதச்சார்பற்ற சிந்தனையோடு, உலக சமாதானம் பேசி உலக மனிதாபிமானி விருது கூடப் பெற்றவர் ஸ்ரீஸ்ரீ என்பதை மறந்துவிடாதீங்க...!

குருக்கள் தங்கள் பெயரில் நடக்கும் இயக்கங்களுக்கு ஆள் திரட்ட வேண்டியே எம்மதமும் சம்மதம் என்கிற ரீதியிலே பேசுகின்றனர். உலகம் முழுவதும் இந்து தர்மத்தையும், பாரதத்தின் சிறப்பையும் பறைசாற்றி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்து தர்மத்துக்கு எதிராக மாற்று மதத்தினரும், அதிகார வர்க்கமும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உறுதியாகக் கண்டித்து வருகிறார். மசூதி, சர்ச்சுகளின பணம் அவர்களின் மதப்பணிக்காகப் பயன்படும் போது இந்து ஆலயங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அரசிடம் சேர்வது எப்படி நியாயம் என்று கேட்கிறார். மதமாற்றத்தைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழ் ஒன்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருப்பதை வாசிச்சிருக்கீங்களா..

சொக்கலிங்கம் பதில் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு நின்றார். தங்கப்பன் தெண்டையை இருமிக் கொண்டு கடைசியாய் ஒரு கேள்வி என்ற தொனியில் கேட்டார்.

கடைக்காரரே... இவ்வளவு பேசறீங்களே... நீங்க எப்பவாவது வாழ்கிற கலை பற்றி படிக்கப் போயிருக்கீங்களா?

அதெப்படி போகாம இருக்க முடியும்?... 500 ரூபாய் கட்டுற வசதி உள்ள ஆள்னு அறிஞ்சா விட்டு வைப்பாங்களா? என்னுடைய கணக்கு உள்ள பாங்கில் வேலை பார்க்கிற ஒருத்தரு என்னையும் கூட்டிட்டுப் போனரு... டவுனுக்கு நடுவில இருக்கிற திருமண மண்டபத்துல மேல் மாடியில வச்சு அறிமுக உரை. சில பேர் குடும்பத்தோட வந்திருந்தாங்க. கூட்டம் துவங்குறதுக்கு முன்னாடி அமைதியானச் சூழலை உருவாக்கணும் என்கிறதுக்காக குழந்தைகளை சிறிது நேரம் அரங்கத்துக்கு கீழே காவலாளி பொறுப்பில் விளையாட விட்டுட்டாங்க... மாடிக்குப் போற ஒரே கதவையும் ஜன்னல்களையும் அடைச்சிட்டாங்க... முற்றிலும் நிசப்தம்! அரங்கத்தின் முன், மேடையில் விலை உயர்ந்தக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

அறிமுக உரை நிகழ்த்துபவர் 120அடி கிணற்றில் விழுந்தவர் பேசினால் என்ன தொனி வருமோ அந்த தொனியில் பேசத் துவங்கினார்... 5 நிமிடம் ஆகி இருக்கும்... திடீரென மேடையில் புகை படர்ந்தது... ஒரு நிமிடம் யாருக்கும் எதுவும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது. கம்பளத்தின் அடியில் கிடக்கும் மின்சார வயர்களிலிருந்து மின்சாரம் கசிந்து கம்பளம் தீ பற்றுகிறது என்று... மக்கள் திகைத்துப் போய் வாசலை நோக்கி ஓடினார்கள்... ஏதோ ஒரு சுட்டிக் குழந்தை வாசல் வெளியிலிருந்து தாழ்ப்பாள் போட்டிருக்கிறது போலும்... ஒரே கூச்சல்..!

என் நண்பர் என்னைப் பார்த்தார்... நான் எம்பிச் சாடினால் எட்டும் உயரத்தில் இருந்த ஜன்னலைப் பார்த்தேன். அவரிடம் கேட்டேன்: என்னை அறிமுகக் கூட்டத்துக்கு அழைத்து வரும்போது என்ன சொன்னீர்கள்...? இதுவரை நான் வாழ்ந்த 40 வருடங்களும் வேஸ்ட். பாதி வாழ்க்கையை வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க; மீதி உள்ள பாதியையாவது எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தருவார்கள் என்று சொல்லித்தானே கூட்டி வந்தீர்கள்? ஆம் என்று தலையாட்டினார்.

சரி... உங்களில் யாராவது எம்பிச் சாடி அந்த ஜன்னல் மேல் ஏறி வெளியே குதிக்க முடியுமா?என்று உரக்கக் கேட்டேன். ஐயய்யோ... எங்களுக்கு மரம் எல்லாம் ஏறிப் பழக்கம் இல்லீங்கோ என்று கோரஸாகக் கத்தினார்கள்... நானும் பதிலுக்கு, அய்யய்யோ... எனக்குத்தான் இங்கே வந்து வாழ்றது எப்படின்னு படிக்காததால பாதி வாழ்க்கை போச்சு... உங்களுக்கு உயரத்தில் சாடி ஏறத் தெரியாததால முழு வாழ்க்கையும் போச்சே...! என்று கத்தியபடி எம்பிச் சாடி ஜன்னலைப் பிடித்து ஏறி வெளியே குதித்தேன்..

தங்கப்பன் ஆவல் மிகுதியில் கேட்டார்: பேஷ்... அப்படியே தப்பி ஓடிட்டீங்களா?

நாராயணன் அமைதியாகப் பதில் சொன்னார். “அவ்வளவு உயரத்திலேயிருந்து வெளியே சாடினதால ஒரு கால்ல எலும்பு முறிஞ்சு போச்சு... என்றாலும் வேதனையைச் சகித்துக் கொண்டு போய் முன்வாசல் கதவைத் திறந்தேன்... எல்லோரும் சிரித்துக் கொண்டே வெளியே ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்தார்கள்!

நன்றி http://www.keetru.com/

Submit Your Feedback
Name
Email

6 பின்னூட்டங்கள்:

At Saturday, 20 May, 2006, சொல்வது...

excellant observations, thought provoking. It is heartening to know that there are people who can think!
Please keep it up

 
At Saturday, 20 May, 2006, சொல்வது...

வெற்றிமகள், ஆர்.பிரேம்குமார் என்பவரால் கீற்று. காமில் எழுதப்பட்டுள்ளது என்பதை முன்னுரையில் குறிப்பிட்டு
இருக்கிறேனே! பாராட்டுகள் அவருக்கே

 
At Saturday, 20 May, 2006, சொல்வது...

thank you for posting!

 
At Thursday, 25 May, 2006, சொல்வது...

நன்றி உஷஅ. நல்ல பதிவை எடுத்துப் போடுவதற்கும் ஒரு ஊக்கம் வேண்டும் இல்லையா?
நிறைய பேர் ஒரு விஷயத்தை ரொம்ப உயர்த்திப் பேசிக் கொண்டாடும்போது சந்தேகம் எழுவது உண்மை.அதுவும் பல பஜன்கள் கேட்கும்போது சினிமா டியூனில் வேறு பாடுகிறார்கள்.இந்தப் பதிவைப் படிப்பவர்கள் சிலராவது பயன் அடையட்டும்.

 
At Thursday, 25 May, 2006, சொல்வது...

:-)

நல்ல கட்டுரையை எடுத்துப் போட்டதற்கு நன்றி உஷா. இந்தக் கட்டுரைப் படித்தபோது ஒரு கொசுவர்த்தி வந்தது. முதன்முதலாய் நான் உங்கள் பதிவைப் படித்ததும் இதே விதயத்தைப் பத்தி தான். அதனைப் படித்துவிட்டு உங்களைக் கிண்டலாக 'வலைப்பூவின் பெயரைப் பொருத்தமாத் தான் நுனிப்புல்னு வச்சிருக்கீங்க'ன்னு வாய்த்துடுக்காச் சொன்னதும் பின்னர் உங்கள் வலைப்பதிவுகளின் ஆழத்தைப் பார்த்தபின் மன்னிப்பு கேட்டதும் நினைவிற்கு வந்தது. :-)

 
At Friday, 26 May, 2006, சொல்வது...

ஞான்ஸ், இதுக்கெல்லாம் நன்றி எதுக்கு!!

மனு, சாமியார் மேட்டர்ன்னா எங்கிருந்தோ ஒரு உற்சாகம் ஓடி வந்துடும் :-)))

குமரன், அப்படியா? நிஜமாகவே ஞாபகம் இல்லை.

 

Post a Comment

<< இல்லம்