Sunday, May 28, 2006

விடைக்கு அலைந்த கேள்விகள்

என் இளமை பருவம் மிக மோசமாய் இருந்தது. பல்வேறு வகையான கேள்விகள் மனதில் கனக்க, பதில் சொல்ல ஆளில்லாமல் தவித்திருக்கேன். என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வரும் அனைவரும் திகைத்தனர். அப்பாவோ, ஒரு இளம் மேதையின் அறிவின் விசாலத்தைப் புரிந்துக் கொள்ளாமல் லொட்டைக் கேள்விக் கேட்டால், முதுகை பெயர்த்துவிடுவேன் என்று பயமுறுத்தினார். சின்னஞ்சிறு பேதை என் செய்வேன் நான்! என் சந்தேகங்களை நிவர்த்திய செய்ய ஆளில்லாமல் இளம் மேதையான என் திறனை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்கள். பிறகு என் சந்தேகங்களுக்கு நானே விடை தேடியும் அலைந்துள்ளேன்.

சில சந்தேகங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு இப்போது சொல்கிறேன். சென்னை தொலைக்காட்சி ஆரம்பித்த பொழுது சனிக்கிழமையானால் தமிழ்ப் படமும், ஞாயிறு அன்று ஹிந்திப் படமும் போடுவார்கள். ஞாயிறு காலையில் அனைத்திந்தியமொழிகளில் வெளியான ஆர்ட் படங்கள் போட்டால் அதையும் பார்ப்பேன். ஒரு மலையாள படம், ஹீரோ பீடியை எடுத்து, இப்படி அப்படி பார்த்துவிட்டு, வீடெல்லாம் தேடி வத்திப் பெட்டி எடுத்து அதை பற்றவைக்க முயன்று, சில குச்சிகளை வீணாக்கிய பிறகு பீடியைப் பற்ற வைத்து அதை இழுத்து, இழுத்து வானத்தையெல்லாம் சோகமாய் பார்த்துவிட்டு பீடியைக் குடித்து முடித்து எழுந்துப் போவான். இதற்கு பிறகு ஏதோ வரப்போகிறது என்று இந்த இருபது நிமிட காட்சியை நகம் கடித்துக் கொண்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ஆனால் அடுத்த காட்சி அதற்கு சம்மந்தமேயில்லாமல் இருந்தது. என்ன இது என்று கேட்டதற்கு, அண்ணா ஆர்ட் பிலிம் என்றால் அப்படித்தான் இருக்கும் ஒற்றை வரியில் சொல்லி முடித்து விட்டான். அதற்கு பிறகு இன்றும் சில புரியாத நவீன கவிதை மற்றும் கதைகளை இலக்கிய இதழ்களில் பார்க்கும் பொழுது அந்த பீடி குடித்த தாடி வைத்த ஆள் என் நினைவில் இன்றும் நிழலாடுவான்.

சினிமாவில் எல்லார் வீட்டிலையும் பாத் டப் இருக்கும். முக்கியமாய் வில்லனின் காதலி மற்றும் ஹீரோவுக்கு உதவும் பெண் அதில் வழக்கமாய் கொலை செய்யப்படுவாள். இந்த பாத்டப் பற்றி பலரிடமும் விசாரித்தும் யாருக்கும் தெரியவில்லை. அத்தகைய சாதனம் இந்தியாவில் புழக்கத்திலேயே இல்லை என்றார்கள்.

பிறகு தூங்கும்பொழுது யாராவது பெல் அடித்தால் எழுந்து -சட்டை , பைஜாமா அணிந்திருக்கும் ஹீரோ உட்பட அனைவரும் கோட்மாதிரி ஒன்றை அணிந்துக் கொண்டே வெளியே வருவார்கள். இப்படி நம் வீட்டில் இல்லையே, அப்பா வேஷ்டி - பனியன் அணிந்திருப்பார். அப்படியே போய் வாசல் கதவு திறப்பார், சில சமயம் துண்டை மேலே போட்டுக் கொள்வார். பிறகு தெரிந்தது, இது ஆங்கில படத்தின் காப்பி என்று. அங்கு குளிர் அதிகம் என்பதால் இரவு உடைக்கு மேலே ஒன்றைப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வருவார்களாம். சிவாஜி, எம்ஜிஆர் முக்கியமாய் மேஜர் ஆகியோர் செய்வார்கள்.

அதற்கு பிறகு அன்றைய சினிமா நட்சத்திரங்கள் வெய்யிலில் காலில் செருப்புக்கூடப் போடாமல் ஆடுவதைப் பார்த்து கண்ணீர் உகுத்திருக்கேன். என்ன பார்வை உந்தன் பார்வை என்று காஞ்சனா சென்னை கடற்கரையில் பன்னிரண்டு மணி வெய்யிலிலும், கண்ணன் என்னும் மன்னன் பெயரை சொல்ல சொல்ல என்று நம் முதல்வர் அதே கொளுத்தும் வெய்யிலில் பாறை மீது குதிப்பதைப் பார்த்து அன்றே பெண்கள் சமூகத்தில் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று மனம் கொதித்துப் போயிருக்கிறேன்.

அதைவிட சின்னஞ்சிறு பெண்ணான என் மனதில் கூட தோன்றிய விஷயம், கற்பழிப்பு காட்சிகளில் ஹீரோயின்கள் ஏன் புடைவை முந்தானியை முதலில் இழுத்து சொறுகாமல் தரை எல்லாம் தேய தேய ஓடுகிறார்கள்? ஸ்ரீவித்யா நடித்த படம், விஜயகுமார் ஹீரோ அதில் இப்படிதான் கடைசிக் காட்சியில் ஸ்ரீவித்யா வில்லனிடம் தப்பிக்க முயற்சிக்கும் பொழுது "முதலில் புடைவையை இழுத்து சொருகுடி முண்டம்" என்றுக் கத்திவிட்டேன். இந்த பேசிக் நாலேஜ் கூட இல்லாமல் என்ன படம் பிடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது.

சரித்திரம் பல வருடங்களுக்குப் பிறகு திரும்பியது.

"அம்மா! ஒரு டவுட்?" மகன் ஆரம்பித்ததும் லேசாய் தூக்கம் கண்ணை சுழற்ற, " மூன்று கேள்விகள்தான் கேட்க வேண்டும்" என்ற அக்கிரீமெண்டை ஞாபகப்படுத்தினேன். இது சமீபக் காலத்தில் எனக்கும் என் மகனுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாடு. இல்லை என்றால் பதில் சொல்ல சொல்ல புதிய கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருக்கும்.

"ஏம்மா! எல்லா சினிமாவிலும் பேய்ங்க பழி வாங்கிக் கொல்லுதே, அப்படி பேயால செத்தவங்களும் பேயா மாறி, மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்யக்கூடாது?" என்றவனிடம், " பேயீ, கீயீ எல்லாம் ஒண்ணுமில்ல! நீ கண்ணை மூடிக்கிட்டு தூங்கு" என்றேன்.

தீடீரென்று, " ஏம்மா! சரோ மாமியார் இவ்வளவு பேட் லேடியா இருக்காங்க? " என்றவனிடம் " அது சும்மா, சீரியல்டா கண்ணா!" என்றேன்.

"அப்ப, நிஜ மாமியார் எல்லாம் குட் லேடிசா?" என்றான். அந்த பக்கம் இருந்த கணவர் தொண்டையைக் கனைத்தார்.

"உம்!" என்று உம் கொட்டினேன். " உனக்கு மாமியார் இருக்காங்களாமா?" அடுத்தக் கேள்வி ஆரம்பித்தது.

"பாட்டிதாண்டா என் மாமியார்" என்றதும் " அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா?" கேள்வி தொடர்ந்தது.

ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு " தெரியலையே கண்ணா" என்றேன் நாயகன் கமலைப் போல!

http://www.tamiloviam.com

37 பின்னூட்டங்கள்:

At Sunday, 28 May, 2006, சொல்வது...

//அப்ப, நிஜ மாமியார் எல்லாம் குட் லேடிசா?" என்றான். அந்த பக்கம் இருந்த கணவர் தொண்டையைக் கனைத்தார்.

"உம்!" என்று உம் கொட்டினேன். " உனக்கு மாமியார் இருக்காங்களாமா?" அடுத்தக் கேள்வி ஆரம்பித்தது.

"பாட்டிதாண்டா என் மாமியார்" என்றதும் " அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா?" கேள்வி தொடர்ந்தது.

ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு " தெரியலையே கண்ணா" என்றேன் நாயகன் கமலைப் போல!
//

:-)

 
At Sunday, 28 May, 2006, சொல்வது...

:-D முதன் முதலில் உங்களின் வலைப் பதிவிற்கு வருகை புரிகிறேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.

 
At Sunday, 28 May, 2006, சொல்வது...

//

ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு " தெரியலையே கண்ணா" என்றேன் நாயகன் கமலைப் போல!
//

நல்ல காமெடி போங்க. :-)))

 
At Sunday, 28 May, 2006, சொல்வது...

ஹிக் ஹிக் ஹிக்...சிரிப்புத்தான் வருது..........நானும் இப்பிடிக் கேள்வி கேட்டு.....வயசுக்கு மீறிப் பேசுறன்னு திட்டு வாங்கீருக்கேன்.

வேலைக்காரன் படத்துல அமலா ஏன் கால்ல செருப்பே போடாம ஆடுறா...பக்கத்துல சும்மா நடக்குற ரஜினி எதுக்கு ஷூ போட்டிருக்காருன்னு கேட்டதுண்டு.

ரொம்ப நாளா, சிவாஜி-கே.ஆர்.விஜயா, ரஜினி-ஸ்ரீபிரியா, கமல்-ஸ்ரீதேவி, மோகன் - நதியா எல்லாரும் புருஷன் பொண்டாட்டீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்படியில்லைன்னு அப்புறந்தான் தெரிஞ்சது. அதுவும் எப்பிடீங்குறீங்க...எம்.ஜீ.ஆர் மறைவுக்கு நடிகர் திலகம் துணைவி கமலாவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்னு பேப்பர்ல இருந்தது. அப்பாகிட்ட போயி....கமலான்னு போட்டிருக்கே....இது சின்ன வீடான்னு கேட்டேன்...என்ன நடந்திருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

நல்லா எழுதியிருக்கீங்க! ஏனோ பானுமதியின் அத்தகாரு கதைகள் நினைவில் பளிச்சிட்டன.:)

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்!

விடைக்கு அலைந்த கேள்விகள்,
வடைக்கு அலைந்த எலிகள் போல
எப்போதும் இருக்கும்! இருக்கும்! இருக்கும்!

:-))

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

//ஓரு இளம் மேதையின் அறிவின் விசாலத்தைப் புரிந்துகொள்ளாமல்//
என்ன உணர்வில் இந்த வரியை எழுதினீர்களோ..அது கசப்பான உண்மைதான்..'ஒரு இளம் மேதை
உருவாவதைப் புரிந்து கொள்ளாமல்'
எந்றிருந்தால் மிகச்சரியாக இருந்திருக்கும்...கூட்டுக்குடும்ப முறையைத் தொலைத்ததிற்கு நாம் கொடுக்கும் விலை இது
உங்கள் தொடர்கட்டுரை என்ன ஆனது?
ஆமா.. என்னை பெண் என்றா நினைத்திருந்தீர்கள்?....அய்யோடா

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

விடைகள் கிடைக்கலாம்! வடைகளும் கிடைக்கலாம்!!

ஆனால்,

கேள்விகளோ, எலிகளோ தீரப்போவதில்லை!!

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

//சிவாஜி, எம்ஜிஆர் முக்கியமாய் மேஜர் ஆகியோர் செய்வார்கள்.
:-) full formla irukkenga polirukku.. keep it up! :-)

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

:)

உஷா,

இப்ப லேட்டஸ்ட் படத்துலயெல்லாம் ஹீரோ ஏன் கேமராவையே பார்த்து பஞ்ச் டயலாக் பேசுறார்ன்னு யோசிச்சதுண்டா..

பஞ்ச் டயலாக் கேட்டு வில்லன் என்ன ஆகறானோ இல்லையோ .. லேட்டஸ்ட்டா திருப்பதி ஒரு 20 நிமிசம் பார்த்ததுல பஞ்ச் வாங்கி வாங்கி என் முகமெல்லாம் வீங்கி போயிடுச்சு ;(

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

//அதைவிட சின்னஞ்சிறு பெண்ணான என் மனதில் கூட தோன்றிய விஷயம், கற்பழிப்பு காட்சிகளில் ஹீரோயின்கள் ஏன் புடைவை முந்தானியை முதலில் இழுத்து சொறுகாமல் தரை எல்லாம் தேய தேய ஓடுகிறார்கள்?//

சினிமாவில் வன்புணர்வு காட்சிகள் வைப்பது மனிதனின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் அமைக்க தான். இதிலே எங்கே நம்ம இயக்குநர்கள் முந்தானையை மூடச் சொல்லப் போகிறார்கள்.

வன்புணர்வுக்கு ஒருவன் வந்தால் முட்டிக்காலால் கொடுக்க வேண்டிய இடத்தில் ஒரே இடி. பிறகு ஜென்மத்திற்கும் அதை பற்றி அவனால் யோசிக்க கூட முடியாது. ஆனால், அப்படியான காட்சியை பெரும்பாலான படங்களில் பார்க்க முடியாது. வில்லனோ ஹீரோவோ துரத்த நாயகி (அல்லது எதோ ஒரு துக்கடா) அலறிக்கொண்டே ஓடுவார். கடைசியில் மாடியில் இருந்து குதித்தோ, வில்லனின் அறையில் இருக்கும் கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டோ உயிர் விடுவார். கேப்டன் பிரபாகரன் படத்தில் தான் சரத்குமாரின் தங்கையாக நடித்த நடிகை நான் சொன்னதுபோல செய்வதாக காட்சி அமைத்திருப்பார்கள்.

என்னுடைய சிறுவயது கேள்விகளுக்கு எனது பெற்றோர் முடிந்த அளவு பதில் அளித்திருக்கிறார்கள். சில சமயங்களில் சமாளிப்பான பதில்களும்.

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

நாமக்கல் சிபி, குமரன் எண்ணம், பிரபுராஜா நன்றி!

பிரபு ராஜா, மூக்கும் முழியுமாய் கண்ணாடி போட்டுக்கொண்டு அம்சமாய் இருக்கீங்க.

ஜிரா, சின்ன வீடான்னு கேக்க தெரியுதுன்ன்னா, முதுகு பேந்து இருக்குமே!

வரதன் நீண்ட அனுபவ பகிர்த்தலுக்கு நன்றி. புதுசா தெரிகிறீர்கள்?
இந்த லெதர் ஜாக்கெட், பட்டு சாரி, கோட்டு சூட்டு, பனியில் அரைகுறை உடையில் ஆடும் ஹிரோயினி,
பாவம் இல்லே நடிகர்கள், நடிகைகள். பனியில் உடல் விரைத்துப் போகும் என்றால், கோடையில் இந்த
லெதர் ஜாக்கெட் :-)
ஹிந்தி படத்திலும் அசோக்குமார், கிஷோர்குமார் இன்னும் சில வழக்கமான பணக்கார தந்தை
நடிகர்கள் இந்த பணக்கார நைட் டிரசில், வாயில் பைப்புடன் வருவார்கள்.
சோவின் நாடகம் ஒன்றே ஒன்றுதான் பார்த்திருக்கிறேன். சோ போலீஸ்காண்டபிளாய் வருவார்.
பெண் வேடம் கூட போடுவார். அதில் நீலு தூள் கட்டியிருப்பார். நாடகத்தின் பேர் ஞாபகமிருக்கா?

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

மணியன், அத்தக்காரு படிச்சிருக்கேன், ஆனா சரியா ஞாபகமில்லை.

ஞான்ஸ், வடை என்றால் துளசி ஞாபகம்தான் வருகிறது. அது என்ன பின்னாலேயே இன்னொரு
பின்னுட்ட வாலு. கேள்வியும், எலியும் தீராது என்று? இப்படி எதையாவது நீங்க கேட்டு வைக்க,
நானும் சிரித்து வைக்க, வேண்டாம் சாமி. வந்தோமா, எனக்கு புரிகிறாமாதிரி நல்ல பதிவு,
சூப்பர்ன்னு எளுதிட்டு போய்கிட்டே இருங்க. சரியா :-)))

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

சிவஞானம்ஜி, அது என்ன கூட்டு குடும்பம் என்ற கொக்கி? இந்த காலத்தில்தான் அம்மாக்களால் பிள்ளைகளுடன் பேச நேரம் இருக்கிறது. அந்த காலத்தில் எங்கம்மா எப்பொழுதும் சமையலறையிலேயே இருப்பார்.
இன்றோ தந்தையோ, தாயோ எந்த சப்ஜெட்டையும் பிள்ளைகளுடன் அலசிவது அதிகமாகி வருகிறது
என்று நினைக்கிறேன்.

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

ரஜினி ராம்கி, உற்சாகத்துக்கு என்றுமே குறைவில்லை :-))

அரவிந்தன், உங்க பிளாக்கை ஏன் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை?

சுகா, கேமிராவைப் பார்த்து சவுண்ட் விடுவதுதானே, நிறைய பேசியாச்சே! சிம்பு, விஜய், அஜீத், தனுஷ் வேற யாரூ, எல்லாரும் ரஜினி போட்ட பாதையில் போய் கொண்டு இருக்கிறார்கள் :-)

கே.வி. ஆர், அந்த படத்தின் பெயர் நினைவில்லை. ஏண்டி முத்தம்மா என்று ஒரு பாடல் வரும்.
கடைசி காட்சி, ஸ்ரீவித்யா என்று நினைக்கிறேன். புடைவையை தேச்சிக்கிட்டு அங்க இங்க ஓடுவாங்க.
தலையில் அடித்துக்கொள்ளலாம் என்று இருக்கும்.

வன் புணர்ச்சி மேட்டரை கொஞ்சம் சீரியசாய் பேசலாம் என்றால் பிறகு வருகிறேன்.

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

அக்கா, இப்போ எனக்குப் புதுசா ஒரு கேள்வி வந்திடுச்சுக்கா.. "நான் ஏன் இப்படி யோசிக்கலை " (நன்றி பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் :) )

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

:-)
:-)
:-)
:-)
:-)


மகனுடன் போட்டிருந்த மூன்று கேள்வி அக்ரீமெண்டை எப்பொழுதும் இப்படி தான் மறந்து விடுவீர்களா?


:-)
:-)
:-)
:-)
:-) (இது எதற்கு என்று யோசிக்க வேண்டாம். தலைப்பை நகைச்சுவையில் போட்டிருக்கிறீர்களே அதற்காகத் தான்)

 
At Monday, 29 May, 2006, சொல்வது...

பொன்ஸ், ரொம்ப யோசிக்காதீங்க :-)

சாணான், கேள்விகள் மூன்று மட்டுமே, மற்றவை அவைப் போட்ட
குட்டிகள் :-)

 
At Tuesday, 30 May, 2006, சொல்வது...

//கே.வி. ஆர், அந்த படத்தின் பெயர் நினைவில்லை. ஏண்டி முத்தம்மா என்று ஒரு பாடல் வரும்.
கடைசி காட்சி, ஸ்ரீவித்யா என்று நினைக்கிறேன். புடைவையை தேச்சிக்கிட்டு அங்க இங்க ஓடுவாங்க.
தலையில் அடித்துக்கொள்ளலாம் என்று இருக்கும்.
//

படம் ஆறு புஷ்பங்கள். பார்த்ததில்லை. ஸ்ரீவித்யா எப்படி வேணா ஓடட்டும், எனக்கு அவங்களை பிடிக்கும்.

 
At Tuesday, 30 May, 2006, சொல்வது...

major sundarrajanin 'pugai pipe' ai marandhuviteergale!

:)

 
At Tuesday, 30 May, 2006, சொல்வது...

ஆதிரை, மேஜரைவிட, ஒரு சினிமா அப்பா, பெயரெல்லாம் தெரியாது. எல்லா பழைய படத்திலும்
பளபளவென்ற இரவு உடையில், கையில் மன்னிக்க வாயில் பைப்புடன் அதை மென்றுக்கொண்டே
பேசுவார் :-)

யோகன் நன்றி. ஒரு பிரபல டயலாக்- காதலி மனைவியாகலாம், ஆனால் மனைவி காதலியாக முடியாது என்று. அதுப் போல , ஒரு அம்மா மாமியார் ஆகலாம், ஆனால் மாமியார் அம்மா ஆக முடியாது-
தெய்வமே!! இது எங்க போய் முடியுமோ :-))))))))))))))

 
At Tuesday, 30 May, 2006, சொல்வது...

கே.வி. ஆர்! நம்ம வாத்தியார், இருபத்திநாலு ரூபாய் தீவு என்று நினைக்கிறேன். ரிப்போர்டரின்
தங்கை, பாவம் அறியா பெண்! அவள் அறியாமையை, புரியாத பயத்தை, அவள் மீது நடத்தப் பட்ட கொடுமையை மிக அழகாய் சொல்வார். அல்ப சமாசாரத்துக்கு உபயோகப்படுத்துவதை.....
மற்ற வரிகள் ஞாபகமில்லை. மிக நாசுக்காய் சொல்வார்.
படிச்சவங்க சொல்லுங்கப்பா!

 
At Tuesday, 30 May, 2006, சொல்வது...

ஆதிரை சொல்லாமல் விட்டது. ஹிந்திபட அப்பா. ஆஷாபரேக், சாதனா, ஷர்மிளா டாகூர் போன்ற நடிகைகளுக்கு அப்பாவாக வருவார்.

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

ஏ சரியாத்தான் சொல்லிருக்கிய. உங்க மவன் உங்கட்ட கேள்வியா கேட்ட மாரி ஒரு தடவ என் அக்கா மவளும் டிவில கதாநாயகனும்,கதாநாயகியும் நெருக்கமா இருக்குத காதல் காச்சிய பாக்கும் போது ஒரு கேள்வி கேட்டா.. மாமா அவங்க என்ன பண்னுதாங்க...? உடனே நான், உங்க அம்மா உன்ன கொஞ்சுற மாதிரி அந்த அங்கிள், ஆன்டிய கொஞ்சுதாருன்னேன். அதிலேருந்து எப்ப இந்த மாரி காச்சி வந்தாலும் வீட்ல இருக்க எல்லாரயும் கூப்டு, கொஞ்சுதாங்க பாருன்னு காட்டுவா. இதயெல்லாம் நாந்தான் சொல்லிக் கொடுத்தேன்னு எல்லார்ட்டயும் அவ விளம்ப, எனக்கு நல்லா கொட கெடச்சுது...

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

:-))). நல்லா எழுதி இருக்கீங்க உஷா. பையன ரொம்ப சீரியல் பாக்க விடறீங்க போல..பார்த்து.. :-)

//நம் முதல்வர் அதே கொளுத்தும் வெய்யிலில் பாறை மீது குதிப்பதைப் பார்த்து அன்றே பெண்கள் சமூகத்தில் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று மனம் கொதித்துப் போயிருக்கிறேன்.
// மனம் கொதித்து போய்ட்டீங்களா..ஹா ஹா ஹா..நல்ல வேலை..கால்ல கெடக்குற செருப்ப தூக்கி 'போட்டுக்கோங்க மேடம்' அப்படின்னு வீசாம இருந்தீங்களே :-))

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

"பாட்டிதாண்டா என் மாமியார்" என்றதும் " அவங்க நல்லவங்களா இல்ல கெட்டவங்களா?" கேள்வி தொடர்ந்தது.

ஒரு நிமிட மெளனத்துக்குப் பிறகு " தெரியலையே கண்ணா" என்றேன் நாயகன் கமலைப் போல!"

அதுசரி, 'நான் ஒரு முட்டாள்' என தன்னைத்தானே ஒருவர் நொந்து கொள்வதற்கும் "நீ ஒரு முட்டாள்" என அடுத்தவர் சொல்வதற்கும் உள்ள வேறுபாடு போல, நாயக்கர் தன்னைப்பற்றி இவ்வாறு சொல்வதற்கும் நீங்கள் மாமியார் பற்றி இவ்வாறு சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா? உங்கள் கணவரிடத்தில் போட்டுக்கொடுக்க வேண்டும் :)

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

நெல்லைகிறுக்கன், சிவா, அருணகிரி நன்றி.
அருணகிரி, வந்து, வந்து... இது சிறுகதை. கதைக்கும் எழுத்தாளருக்கும் முடிச்சு போடாதீங்க. இது கதையில் ஒரு சம்பவம், அதன் வசனம். அதற்கும் எழுதிய எனக்கும் என்ன சம்பந்தம் :-)

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

கதையா? எழுத்தாளரா? அதுசரி.

"உங்கள் மாமியாரைப் பற்றி..." என எழுதிய யோகனுக்கு நன்றி தெரிவிக்கையிலேயே இதனைச் சொல்லியிருந்தால் ஓரளவாவது நம்பியிருக்கலாம், அத விட்டிட்டு இப்ப இதுபோல சமாளிபிகேஷன் செய்வதெல்லாம் சுத்த டகால்பாய்ச்சி வேலைதான்.

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

அருணகிரி, யோகனுக்கு சொன்னது பொதுவான கருத்து என்று கொள்க
( கடவுளே! கடவுளே!)

 
At Wednesday, 31 May, 2006, சொல்வது...

பழைய படங்களில் பார்த்தோமென்றால் கதாநாயகனுக்கும் வில்லன் ஆட்களுக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருக்கும். சண்டை முடிகின்ற கடைசித்தருவாயில் டவுசரோடு காவலர்கள் சில கூட்டங்களோடு ஓடிவருவார்கள். அது மலை உச்சியிலோ இல்லை அடர்ந்த காட்டுக்குள்ளே நடந்தாலும் சரி சரியாக கண்டுபிடித்து வந்துவிடுவார்கள்.

தலைமைக்காவலர் மட்டும் பேண்ட் அணிந்திருப்பார். அவர் வானத்தை நோக்கி டமீல் என்று சுட அனைவரும் அப்படியே கையை தூக்கி கொண்டு நின்றுவிடுவார்கள்.

காவலர்கள் சரியாக வில்லன் ஆட்களை மட்டும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.

காவலர்களை அழைத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கும்.

ரவுடிகளின் முகத்தில் பெரும்பாலும் ஒரு கறுப்பு நிற மச்சம் இருக்கும். கழுத்தில் ஒரு கைக்குட்டை. நெற்றியில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும் ( ஆனால் இப்பொழுது ரவுடிகள் எல்லாம் டை கட்டித்தான் திரியுறாங்க )
:)

 
At Thursday, 01 June, 2006, சொல்வது...

மனசு என்பவர் அனுப்பிய கமெண்ட், சில வரிகளை எடுத்துவிட்டுப் போடுகிறேன்

மாமியாருக்கு "க்" வைக்க இப்படி ஒரு பதிவா???
பையன் கல்யாணத்துக்கு அப்புறம் கேட்கபோறான், ஏம்மா எந்த மருமகளுக்கும் மாமியார பிடிக்க மாட்டேங்குதுன்னு. ( சாமி, உஷாக்காவிற்கு நல்ல மருமகளா கிடைக்கனும்...)
உங்க மாமியாருக்கு எதுவும் ப்ளாக் இருக்கா!!!!! (பதில் எதுவும் சொன்னாங்களான்னு பார்க்கதான், என்ன ஒரு ஆர்வம்.)


ஐயா,
இது ஒரு சிறுகதை என்பதை மீண்டும், மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்துகிறேன் :-)))

 
At Thursday, 01 June, 2006, சொல்வது...

அழகாய் எழுதியிருக்கீங்க உஷா..
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..

அருமை..

 
At Thursday, 01 June, 2006, சொல்வது...

உஷா,
//வடைக்கு அலைந்த எலிகள்// ஞான்ஸ் குறிப்பிட்டது யாரா இருக்குமுன்னு ஒரு யோசனை? :-)))
இதுலே எதாவது உள்குத்து இருக்கா? :-)))))

தெரியலையேப்பா ( நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்)

கூடவே //ஞான்ஸ், வடை என்றால் துளசி ஞாபகம்தான் வருகிறது//
இப்படிவேற நீங்க சொல்லியிருக்கீங்க.

பேசாம, வடை, யானை, பூனை இதுகெல்லாம் காப்பிரைட் வாங்கிரலாமா?:-))))))

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

நிலவு நண்பரே, கடைசி காட்சியில் வில்லனிடம் அகப்பட்ட கதாநாயகி/ தாய், தந்தை இவர்களைக் காப்பாற்ற, நேர் ரோட்டில் கார் ஸ்டியரிங் வீலை கன்னா பின்னாவென்று சுற்றி, ஸ்டூடியோ காரை வேகமாய் (!) ஓட்டும் கதாநாயகனையும் சேர்த்துக்குங்க :-))

துளசி, ஞான்ஸ் சொல்லுவதை எல்லாம் முற்றிலும் புரிந்துக் கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை. ஆனா, (மசால்) வடை என்றது உங்க நினைவு வந்தது என்பது உண்மை.

சிரில், இவ்வளவு அழகான வார்த்தைகளால் உங்களைப் போன்றோர் தரும் ஊக்கமே, எழுத மேலும் மேலும் ஊக்கத்தைத்
தருகிறது என்பதே உண்மை. நன்றி

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு வீட்ல திட்டு வாங்கியிருக்கேன், இப்பதானே புரியுது இதெல்லாம் மேதாவித்தனத்தின் அறிகுறின்னு :)

பி.கு: நீங்க கோச்சுக்குவீங்களேன்னு பயந்து ரொம்ப மெனக்கெட்டு 'tanglish'ல இல்லாம தமிழ்ல கமெண்ட் பண்ணிருக்கேன்.

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

கே.வி. ஆர், அந்த படத்தின் பெயர் நினைவில்லை. ஏண்டி முத்தம்மா என்று ஒரு பாடல் வரும்.
கடைசி காட்சி, ஸ்ரீவித்யா என்று நினைக்கிறேன். புடைவையை தேச்சிக்கிட்டு அங்க இங்க ஓடுவாங்க.
தலையில் அடித்துக்கொள்ளலாம் என்று இருக்கும்.
//

ஸ்ரீவித்யாவை விட கவர்ச்சி ப்ளஸ் இளமையா இருக்கும் தலைவரை கவனிக்கலையா? :-(

 
At Friday, 02 June, 2006, சொல்வது...

உஷா அக்கா, இதயும் சேத்துக்கோங்க...


காரில பிரேக் இல்லாம பாதளத்துலயோ, ரொம்ப தூரம் போயி எதுக்க வர்ற வண்டி மேலயோ மோதுறது ஏன்? வண்டியோட இன்ஜினை ஆஃப் பண்ண வேண்டியது தானே?

 

Post a Comment

<< இல்லம்