Monday, June 12, 2006

..25, ..50, ..75, ..00, ..25

..25, ..50, ..75, ..00, ..25

(வளர்சிதை மாற்றம்-தாயின் பார்வையில் தேன்கூடு போட்டிக்கு)


1925... களில்

நாழி ஆகிறதே என்று வாசல் பக்கம் எட்டிப் பார்த்தாள். ஆற்றில் தண்ணீர் எடுக்க தோழிகளுடன் போன மகளை இன்னும் காணவில்லை. திண்ணையில் உட்கார்ந்து, எதையோ வாசித்துக் கொண்டிருந்த கணவனின் எதிரில் போய் நின்றாள்.

அந்நேரம், அவளின் மூத்தமகன் வேகமாய் உள்ளே நுழைந்தான். "காமுவை வெளியே அனுப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் நோக்கு புத்தி வரலைடியம்மா" என்று கோபமாய் சொன்னான்.

"என்ன ஆச்சு?' பதற்றத்துடன் பெற்றவர்கள் கேட்கும்பொழுது, இடுப்பில் குடத்துடன் உள்ளே நுழைந்தாள் காமு.

"அந்த வரதனோட பேசிண்டு இருந்தாளாம். என் சிநேகிதன் சொன்னான்" என்றதும், "நா இல்லேமா. கோமுதான் வரதன் மாமாகிட்ட, மாமி ஊர்ல இருந்து எப்ப வரப்போறான்னு கேட்டா" என்றாள் பயந்துக் கொண்டே.

சரி சரி உள்ளே போ என்று பெற்றவன் சொன்னதும், குடத்தை வைக்க உள்ளே போனாள் காமு. பதிமூணு வயசு, இன்னும் பெரியவள் ஆகவில்லை. ஆனால் முகத்தின் பளபளப்பும், உடம்பின் பூரிப்பும் அதிக நாள் தாங்காது என்று தெளிவாய் காட்டின.

" என் பெரியப்பா சொன்னாரே, அந்த சீரங்கம் வரன் என்னவாயிற்று?" என்றுக் கேட்டாள்.

உச்சுக் கொட்டிவிட்டு, " ஒங்க சீட்டாட்ட கும்பலுக்கு எம் பொண்ண தரமாட்டேன். சீமாச்சு சொன்ன வரனைப் பாரூன்னு அப்பா சொல்லிவிட்டு இருக்கார். பையன் பட்டணத்துல பீஏ கொடுத்துண்டு இருக்கான். ஆனா ஆஸ்தி, பாஸ்தி ஒன்னும் சொல்லிகிரா மாதிரி இல்லையேன்னு பாக்கரேன்?" என்றதும், "தோ பாருங்கோ, ஏதோ அஞ்சுக்கு மூணு பழுதில்லைன்னா போதும்மா எங்கம்மா. ஜாதகமும் பொருந்தி இருக்கு. நல்லா மனுஷா மாதிரி தோணர்த்து. நாலே கொழந்தைகள். ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணி அனுப்பியாச்சு. பெரியவன் நாக்பூர்ல வேலையாய் இருக்கான். இவன்தான் கடைசி. பிக்கல் பிடுங்கல் இல்லை...." அவள் முடிக்கும் முன்பு, "பாக்கலாம் பாக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே கொல்லைப் பக்கம் போனார்.

அவர் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தவள், பேசாம ஊருக்கு கடுதாசிப் போட்டு மாமியாரை வரச் சொல்லணும். அவர் வந்து எடுத்து சொன்னாத்தான், இந்த மனுஷன் கேப்பார், மனதில் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தவள் முன்னால் "சுப்பு பாட்டி தந்தாம்மா" வாயில் எதையோ அரைத்துக் கொண்டே நீட்டிய மகள் கையில் எள்ளுருண்டை
.
பயத்தில், மகளை எட்டிப் பிடித்து துப்புடி, துப்பு என்று கத்த, காமு பயந்துப் போய் முற்றத்தில் துப்பினாள். அவள் கையில் இருந்ததையும் பிடிங்கி வீசியவள், 'கெழத்துக்கு என்ன திரிசமன் பாரு. எத்தன தின்னு தொலச்ச?" என்றுக் கேட்க, "இல்லேடிமா, அதுதான் துப்பிட்டேனே"
என்றாள் காமு.

காலம் மாறிண்டு இருக்குன்னு சொல்லத்தான் சொல்லரா. ஆனா, கல்யாணம் ஆறதுக்குள்ள பொண்ணு தெரண்டுட்டா! நினைக்கே பயத்தில் வயிற்றை பிசைந்தது அவளுக்கு.


1950... களில்

வனஜா முகத்தில் எதையோ தடவிக்கொள்வதைப் பார்த்து என்னவென்று விசாரித்தாள் தாய். "சுனோமா. கோமதியத்த வந்திச்சே, அவ பூசிக்கிட்டு இருந்தா. போம்போது, குடுத்துட்டு போனா" என்றாள் வனஜா.

பதினாறு வயசாச்சு. பொண்ணு கேட்டு வர ஜனங்களை ஏதாவது சொத்தை, சொள்ளை என்று காரணம் கண்டுப்பிடிக்கிறது. கேட்டா, படிச்ச மாப்பிள்ளையா வேணுமாம். முணுமுணுத்துக் கொண்டே வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், காமிரா உள்ளில் மடித்த துணியை வைக்க போனால் , வனஜா கையில் வார பத்திரிக்கை.

"ஏண்டி, இந்த குமுதம் எல்லாம் வாசிக்க வேண்டாம்னு எத்தினி தபா சொல்லறது. ஒங்க நைனா நல்லா செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காரூ. ஆமா, இந்த பொஸ்தகம் எல்லாம் ஏது?" என்றதும், "பக்கத்து வூட்டு மாடில குடியிருக்காரே அவரூ வாங்குவாராம். ஆச்சி வூட்டுல கெடந்தது, படிக்கலாம்னு கொணாந்தேன்" என்றாள்.

அந்நேரம் மதிய சாப்பாட்டுக்கு உள்ளே வந்த கணவனைப் பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

"நைனா" என்று செல்லம் கொஞ்சிய மகள், "பக்கத்து வூட்டு ஆச்சி, ஐயிரூ வூட்டு உமா, வாத்தியாரூ பொண்னு காந்திமதி எல்லாரும் மலைக்கள்ளன் படத்துக்கு போராங்க நைனா. நானும் போகட்டா?" என்றதும், "சட்ட பைல அரையணா இருக்கும் எடுத்துக்க. பத்திரமா போயிட்டு வா கண்ணு. குதிர வண்டிலதானே போறே?" என்றதும், "அடி ஆத்தாடி" என்று கூவிய தாய், "நாளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு, கண்ட பொஸ்தகத்த வாசிக்கிறதும், படத்துக்கு போறதும் நல்லா இருக்குடிம்மா" என்றாள்.

"சொம்மா வீட்டுலையே எத்தினி நாழி இருக்க முடியும்? படத்துக்குதானே, ஆச்சி பத்திரமா பாத்துப்பாங்க. நீ சோத்த போடு.நேரமாகுது" என்றான்.

அவருக்கு சாப்பாடு போட்டு முடிக்கவும், மகள் தயாராய் கிளம்பவதும் சரியாய் இருந்தது. அவளுடன் பக்கத்து வீட்டுக்கு சென்று ஆச்சியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்தவள், கணவன் தாம்பூலம் போட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

"எங்க சின்ன தொத்தா மவனுக்கு நம்ம வனஜாவை கேட்டாங்களே?' ஆரம்பிக்க, நிறுத்து என்பதைப் போல சைகை காட்டினார். அதற்குள் குதிரை வண்டி வர, படத்திற்கு போகும் பட்டாளம் ஏறியது. குதிரை வண்டி, தெரு திரும்ப, அதே பக்கமாய் பக்கத்துவீட்டு மாடியில்
குடியிருக்கும் வாலிபனும் சைக்கிளில் ஏறிப் போனான்.

இவன் எதுக்கு பின்னாடியே போறான், இவனும் படத்துக்கா? அதை கணவனிடம் சொல்ல, "ஒம்புத்திய... " வசவு சொல்லை உதிர்த்துவிட்டு, குடையை விரித்துக் கொண்டு தெருவில் இறங்கினார்.

மனதில் ஓடும் கற்பனை பயத்தைக் கொடுக்க, அப்படியே உட்கார்ந்திருந்தாள் தாய்.


1975...களில்

சாந்தியின் தந்தைக்கு பெருமை பிடிப்படவில்லை. மகளுக்கு பீ.காமிற்கு இடம் கிடைத்துவிட்டது. வங்கி தேர்வு எழுதி வேலை கிடைத்துவிட்டால் போதும், அவர் லட்சியம் நிறைவேறிவிடும்.

"ஏங்க, அந்த காலேஜூ ஆம்பள புள்ளைங்களும், பொம்பள புள்ளைங்களும் சேர்ந்து படிக்கிற காலேஜாச்சே. பொட்ட புள்ளைங்க மட்டும் படிக்கிற எடமா பாருங்க"

"அடியே கூறுக்கெட்டவளே! பீ.காம் சீட்டுக்கு ஊரே அல்லோலகல்லோல படுது. மூணு காலேஜூக்குப் போட்டதுல இங்கத்தான் பீகாம் கெடச்சிருக்கு. பாங்கு வேலையும் கெடைக்க சான்சு இருக்கு. அந்த காலம் மாதிரி இல்லை. பொம்பள புள்ளைங்களும் வேலைக்கு போய் அவுங்க காலுல நிக்கணும். இதுல இவளுக்கு பொம்பளங்க காலேஜா பார்க்கணுமாம். போ போயி, முந்திரி பருப்பு போட்டு ஜவ்வரிசி பாயாசம் வையீ."

" போயிட்டு வரேமா" என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறி, ஷார்ட் ஹேண்ட், டைப்பிங் கற்க செல்லும் சாந்தியைப் பார்த்தாள் அவள் தாய். காதுக்கு பக்கத்தில் ஸ்பீரிங்காய் தோள்வரை குதிக்கும் கற்றை குழல்கள். காதோரத்தில் ஒற்றை ரோஜாபூ. ஜார்ஜெட் தாவணி, தரை புரளும் பாவாடை. ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், கணவன் அருகில் இருக்கிறான், என்ன சொன்னாலும் எடுக்காது என்று உள்ளே போனாள்.

ஜவ்வரிசியை எடுத்து வறுக்கத் தொடங்கினாலும் மனம் அலைப்பாயத் தொடங்கியது. ஒத்த பொண்ணு, ஏதோ படிக்க வெச்சி, கட்டிக்கொடுத்துவிட்டா ஆச்சு. வேலைக்கு அனுப்பி, இவ சம்பாதிச்சி ஆவப்போறது என்ன? ஒரு வயசுக்கு மேலே ஆம்பளைங்களும். பொட்ட பசங்களும் சேர்ந்து படிச்சா நல்லாவா இருக்கும்? சாதி ஜனங்க ஏதாவது சொல்ல மாட்டாங்களா? ஊர்ல வேற காலேஜா இல்லே? ஜவ்வரிசி வறுப்படபட , கவலையில் அவள் மனமும் வறுப்பட தொடங்கியது.

2000...களில்

இரண்டாவது செமஸ்டர் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி தொடங்குகிறது. தனியாய் போய் கொள்ளுவேன், கூட படிப்பவர்கள், சீனியர்கள் என்று இருபது பேர்களாவது வருவார்கள் , பயமில்லை என்று சொன்னதால், நிஷிதாவை ரயில் ஏற்றிவிட தாயும் தந்தையும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

நிஷிதா பெற்றவர்களைக் கண்டுக்காமல், மற்றவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பெண் பிள்ளைகள் எல்லாருமே, முடியை குட்டயாய் வெட்டியிருந்தார்கள். சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கூட இல்லை. பேண்டு, முக்கால் பேண்டுதான். சில பெண்களின் இறுக்கமான சட்டைகள் கண்ணை உறுத்தியது.

அப்பொழுது பெர்மூடாஸ் அணிந்து ஒருவன், வர ஓவென்று கூப்பாடு. ஆண்களும் பெண்களுமாய் ஓடிசென்று அவனை பிடித்திழுத்துவர, இரண்டு பெண்கள் அவன் கையை முறுக்கி, பின்னால் வைத்து, ஆளை குனிய வைத்து முதுகில் அடிக்க தொடங்கினர். சிரிப்பும்
கும்மாளமுமாய் அவர்கள் போட்ட சத்தம் போகிற வருபவர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்தன.

நிஷிதாவை அருகில் அழைத்து என்னவென்று கேட்க, அந்த பையன் எப்பொழுது கேட்டாலும் படிக்கவேயில்லை என்று சொல்வானாம். ஆனால் எல்லா சப்ஜெட்டிலும் முதலாம். அதுக்கு உதை விழுகிறது என்றாள்.

"திஸ் இஸ் டூ மச் நிஷி" என்று தாய் மெல்ல சொன்னதும், "ஓ கமான்மா" என்று கன்னத்தில் தட்டியது பெண்.

அதற்குள் ரயில் கிளம்ப, எல்லாம் ஓடி சென்று ஏறின. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்பொழுது, " நான் கூட அந்த காலத்துல கோ எட்ல படிச்சேன். பாய்ஸ்கூட பேசவே மாட்டோம். இப்ப என்னான்னா, ஒண்ணுக்கு ஒண்ணு தொட்டு பேசுதுங்க. ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம், இங்கேயே படிக்கட்டும்ன்னா, நீங்க நா சொன்ன பேச்ச எப்ப கேட்டீங்க?' என்றாள் ஆற்றாமையுடன்.

"ஆல் இண்டியா என்ட்ரன்ஸ்ல நிஷிதா டூவண்டியத் ராங்க். மெரிட்ல இந்த காலேஜ்ல சீட் கெடச்சிருக்கு. படிச்சி முடிக்கிறதுக்குள்ள காம்பஸ் இண்டர்வியூல வேல கெடச்சிடும். பா·ரீன் யூனிவர்சிட்டில பி.ஜி கிடைக்கிறதும் ஈசி. இந்த காலத்து பிள்ளைங்க, வித்தியாசம் இல்லாம பழகுறத தப்பா பாக்காதே" என்றார்.

என்னவோ போங்க என்று வாய் முணுமுணுத்தாலும், பார்த்தவைகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர நீண்ட பெருமூச்சுவிட்டாள்.


2025...களில்

மகள் அனுப்பிய ஈமெயிலைப் படித்துவிட்டு, அப்படியே உட்கார்ந்திருந்தாள். படிக்கிறேன் என்று இந்தியா போனவள், ஒரு சீனாக்கார பையனுடன் லிவ்விங் டூ கெதர் செய்யப் போகிறேன் என்று மெயில் அனுப்பியிருப்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு, ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கிறாளாம். ஸ்கூல் பைனல் கூட முடிக்காமல் குடும்பம், குழந்தை என்று ஆரம்பிக்கும் வயதா இது என்று மனம் அடித்துக் கொண்டது.

தந்தைக்கும் மகளுக்கு நல்ல உறவு உண்டு என்பது அவளுக்குத் தெரியும். சிங்கப்பூரில் இருக்கும் முன்னாள் கணவனுடன் பேசினால்! செல் நம்பரை தேடி எடுத்து தொடர்ப்பு கொண்டாள்.

அவன் குரலே மறந்துப் போயாச்சு.

"ஹலோ" என்று உற்சாகமாய் அவளை விசாரிக்க ஆரம்பித்தான். மெல்ல மகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், அவன் சிரிப்பது கேட்டது.

"எல்லாம் தெரியும். இதெல்லாம் இப்பொழுது சாதாரண விஷயம். எல்லா பிரச்சனைகளையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். போன வீக் எண்டுக்கு ரீதுவும் அவளோட பாய்பிரண்டும் இங்க வந்திருந்தாங்க. கவலைப்படாதே, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு, டேக் கேர்!" என்று சொல்லி வைத்து விட்டான்.

இவனுக்கும் தெரியுமா? ரீது ஏன் என்னிடம் இதை சொல்லவில்லை. நான் ஒத்துக் கொள்ளமாட்டேன் என்றா? பாய் பிரண்டு என்று அந்த பையனை அழைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு போயிருக்கிறாள்.

இனி நேரில் பார்த்து பேசினால்தான் சரிப்படும். எக்கேடோ கெட்டுப் போகட்டும். ஆனால் படிப்பைவிடாதே என்றாவது சொல்ல வேண்டும். அவளுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது.

62 பின்னூட்டங்கள்:

At Monday, 12 June, 2006, சொல்வது...

அங்க வந்து A+ போட்டுட்டு, இங்க வந்து இந்த பின்னு பின்னியிருக்கீங்களே.. கொஞ்ச நேரம் நான் கூட சந்தோஷப்பட்டுட்டேன்..

வாழ்க.. :)

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

ராசா, வசிஸ்டரூ வாயால பிரம்மரிசி பட்டம் கெடச்சாமாதிரி இருக்கு :-)
இந்த தடவை போட்டி விருவிருப்பா போகுது. வவ்வாலின் கவிதைகூட நல்லா வந்திருந்தது.

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

அட்டகாசம்ங்க, காலத்துகேத்த மாதிரி கதை சொன்ன விதமும் அதற்கான சூழ்நிலை உருவாக்கமும் அருமை.(அதுவும் தண்ணி குடம் to இமெயில்). போட்டி கடுமையா இருக்குங்க. அங்கே A+ போட்டுட்டு கமுக்கமா இப்படி கதை எழுதுறது, வலைப்பதிவுக்கு நல்ல முன்னோடியா இருக்குங்க, அதே மாதிரி ராசா பாராட்டும் கவனத்துக்கு உரியது. எப்படியோ வாசகர்கள் காட்டுல மழை.
மறுபடியும் பாராட்டுக்கள்

 
At Monday, 12 June, 2006, சொல்வது...

கதை நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

தலைப்பைத் தமிழ்மண முகப்பில பார்த்த உடனே கொஞ்சமாக் குழம்பிப் போனதென்னமோ வாஸ்தவம் தான்.

ச்சும்மா சொல்லக்கூடாது...கலக்கீட்டீங்க போங்க.

வெற்றி பெற வாழ்த்துகள்...

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

A+ :)))

உஷா, ராசா, சுதர்சன்...

இப்படி ஒருத்தரை ஒருத்தரு மாத்திமாத்தி பாராட்டுனீங்கன்னா, வெயிட்டு ஓட்டுப்போடற எங்களுக்குதான் ஏறப்போகுது! :)

சரி...சரி... லட்டுக்குள்ள மூக்குத்தியோ..ப்ளாஸ்டிக் கொடமோ... என்னன்னு காதோட 20ம்தேதிக்குள்ள சொல்லிமுடிங்கப்பு! :)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

//லட்டுக்குள்ள மூக்குத்தியோ..ப்ளாஸ்டிக் கொடமோ... என்னன்னு காதோட 20ம்தேதிக்குள்ள சொல்லிமுடிங்கப்பு! :) //

ஹி..ஹி...கொஞ்சம் வித்தியாசமா ஒரு மரியாதைக்குரிய மயிலைத்(அதாம்பா ஜீ-மயில்) தரலாம்னு இருக்கேன்.

உஷாஜீ,உங்கள் பின்னூட்டப் பெட்டியில் புகுந்து விளையாடுவதற்கு மன்னிக்கவும்.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

இளவஞ்சி, சுதர்சனம்! பொதுவாக தமிழ் பதிவர் வட்டத்தில் பதில் மரியாதை செய்வது என்பது பின்னுட்ட பெட்டியை நிரப்புவதுதானே? மூக்குத்தி, பிளாஸ்டிக் குடம் எல்லாம் இங்க வழக்கமில்லை :-)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

இளா, மணியன், இளவஞ்சி, சு.கோபால் நன்றி நன்றி, அப்படியே வோட்டும் போட்டுவிடுங்கள்.

இளா, போட்டி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.பார்க்கலாம் பரிசு கிடைக்கிரதோ இல்லையோ, உங்களைப் போன்றோரின் பாராட்டிலேயே மனசு நிறைந்துவிடுகிறது.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

வெற்றி பெற வாழ்த்து(க்)கள் உஷா.

எல்லோருக்கும் இதையே சொல்லி இருக்கேன்:-))))

'பாலங்கள்' ஞாபகம் வந்தது.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

Nicely written Usha. I am yet to read others posts. good luck

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

கதை மிக அருமையாக இருக்கிறது என்று ஒரு வரியில் விமர்சனம் செய்துவிட்டு போவதற்கு மனம் வரவில்லை. விமர்சனம் செய்யாமல் போகவும் மனம் வரவில்லை.

வளர்சிதை மாற்றம் என்ற தலைப்புக்கேற்ற ஆழமாய் சிந்தித்து எழுதிய கதை. நன்றாக மிக நன்றாக இருக்கின்றது.

இதோ இப்பொழுதே வாங்கிக்கொள்ளுங்கள் தேன்கூடுவின் முதல்பரிசை.
தயாராக இருங்கள் தமிழோவியத்தின் ஆசிரியராக மாறுவதற்கு.

வாழ்த்துக்கள்

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

உஷா
படைப்பு நன்றாக இருக்கிறது - பீரியட் மூவி பார்ப்பது போல.

ஆனால் போட்டியின் கரு 'பை பை அடலசன்ஸ்' அல்லவா?

இங்கே நீங்கள் 'பை பை' மிஸ் பண்ணிவிட்டீர்களோ?

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நிலவு நண்பன், நீண்ட விமர்சனத்திற்கு மிக்க நன்றி. அரவிந்தன் உங்களுக்கும்.

தேன் துளி, எனக்கு பிடித்த மூன்றை குறிப்பிட்டு இருக்கிறென், படித்துப்பாருங்கள்.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நிலா,
இது மகளின் இந்த ரெண்டும்கட்டான் வயதில் தோன்றும் இனகவர்ச்சியை நினைத்து பயப்படும் தாயின் மனநிலையை கருவாக எடுத்துக் கொண்டேன். இந்த காலக்கட்டத்தை தாண்டிவிட்டால், ஒரு அளவு தெளிவு வந்துவிடும். மனதைக்கட்டுப்படுத்தும்
வலிமை வரும்.
1925- பெற்றவன், தாத்தா மற்றும் சகோதர உறவுகளுடன் மட்டுமே பெண்கள் பேச அனுமதிக்கப்படுவார்கள். யாரோ ஒரு
வரதனிடம் பெண் பேசியிருக்கிறாள்.
1950- பக்கத்துவீட்டு வாலிபன் தூண்டில் போடுகிறான் என்று தாய்க்கு சந்தேகம். குமுதம் போன்ற மோசமான :-) பத்திரிக்கைகளை வயசு
பெண்கள் படிக்க அனுமதியில்லை
1952 ல் வந்த மலைக்கள்ளன் போன்ற படங்களை வயது பெண்கள் பார்க்கலாமா :-)
சினிமாவே கூடாது. ஏதோ புராண படங்கள் என்றால் பராயில்லை. டூயட் பாடும் எம்.ஜி.ஆர், பானுமதியைப் பார்ப்பது எவ்வளவு தவறு????
1975- டைப் அடிக்க செல்லும் பெண்ணின் அலங்காரம்.
2000- சக வகுப்பு தோழர்களுடன் ஆண்,பெண் பாகுப்பாடு இல்லாமல் பழகுவது
2025- அதே அடலசன்ட் வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, சேர்ந்து வாழும் மகள்.

ஆக, அனைத்து தாய்களும் இந்த வயதில் மகள்கள், புரியாமல் தெரியாமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் என்ன
செய்வது என்று பரிதவிக்கிறாள். தமிழில் கொடுத்த தலைப்பு- வளர்சிதை மாற்றம். ஆங்கிலத்தில் பை பை அடலசன்ஸ் என்று
தப்பாய் மொழி பெயர்த்தால் நான் என்ன செய்ய முடியும் :-)))

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

இப்பவே விளக்கம் கொடுத்தால் வசதியா இருக்கும்னு கொடுத்துட்டீங்க போல.

கடைசியா ஒரு வரி சொல்லி போட்டி நடத்தறவங்களுக்கு எதோ சொல்ல வர்றா மாதிரி தெரியுது:-))

படைப்பு சுவாரசியமா இருக்குங்க.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் உஷா.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நன்றி ராமச்சந்திரன் உஷா!

தங்களைப் போன்ற எழுத்தில் முத்திரை பதித்த வலைப்பதிவர்களிடம் இருந்து பாரட்டுப்பெறுவது ஞானபீடம் வாங்குவது போல் உள்ளது. ஏதோ எனது கிறுக்கல்களும் அர்த்தமுள்ளதாக இருப்பதாக தாங்கள் கருதுவது எனக்கு மகிழ்ச்சியே!

தாங்கள் சரளமான நடையில் அருமையான கதை படைத்துள்ளீர்கள்,வாசிக்கும் போது என் காது வழியே புகை வந்தது :-)) (மெய்யாலுமே தாங்க ,ச்சும்மா பாராட்டாக இதை எடுத்துகொள்வீர்கள் எனத்தெரியும்)

வெற்றிப்பெற வாழ்த்துகள்!

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நன் மனம் இல்லையா பின்ன? பரிசு கிடைக்குமோ என்ற நப்பாசையில் இருக்கும்பொழுது, நிலா இப்படி குண்டை தூக்கிப்
போட்டா எப்படி :-)

மதி, பாராட்டுக்கு நன்றி

//தங்களைப் போன்ற எழுத்தில் முத்திரை பதித்த வலைப்பதிவர்களிடம் இருந்து பாரட்டுப்பெறுவது //
வவ்வால் என்ன பேரூ இது????- இப்படி எல்லாம் முத்திரை குத்தாதீங்க :-)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

உஷா
விளக்காமலே நீங்கள் சொல்ல வந்திருப்பது புரிகிறது.

ஆனால் பினாத்தலார் குறிப்பிட்டுள்ள 'மாறுதல் ஏற்படும் தருணம்' இந்தப் படைப்பில் மிஸ்ஸிங் என்றுதான் இன்னும் நினைக்கிறேன்: (அவருடை அறிவிப்பின் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தந்துள்ளேன்)

//அதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.

இத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.

இத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு.

எனவே, நான் தேர்வு செய்திருக்கும் தலைப்பு:

வளர் சிதை மாற்றம்
bye-bye adolocense

இந்தத் தருணத்தை, படைப்பாக்கி //

இதனால் படைப்பில் குறை இருப்பதாக அர்த்தமில்லை. அவசரத்தில் போட்டியின் கருவைத் தவறவிட்டுவிட்டீகளோ என எண்ணினேன். சுட்டிக்காட்டியது தவறாக இருப்பின் மன்னிக்கவும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

போட்டிப் படைப்பெல்லாம் படித்தபின் எனக்கும் கூட ஏதாவது எழுதவேண்டுமென்ற இன்ஸ்பிரேஷன் வந்திருக்கிறது :-)

'குறை கண்டுபிடித்தே பேர் வாங்கும் பெண்கள் இருக்கிறார்கள்' என்று யாராவது சொல்லுமுன் முந்திக் கொண்டுவிடலாமா என்கிற யோசனைதான் :-)))

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

கதை நல்லா வந்திருக்கு உஷா அக்கா.

தாயின் பார்வையில் எழுதக்கூடாதுன்னு யாரும் சொல்லலியே..

ஆனா, சும்மா இல்லாம இது என்ன உள்குத்து? ட்ரேன்ஸ்லேஷன் தப்பு அது இதுன்னு? ஓட்டு வோணுமா வாணாமா?

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நிலா, என்ன இது? மன்னிப்பு அது இது என்று? சீரியசான விஷயங்களைக்கூட சாதாரணமாய் எடுத்துக் கொள்ளும் வீக்ன்ஸ்
எனக்கு உண்டு :-), அப்படி இருக்க, இதுக்கெல்லாம் தவறாய் நினைப்பேனே என்ன? உண்மையில் சுரேஷ் போட்டி
அறிவித்ததை முழுக்க நான் படிக்கவேயில்லை. இது சாதாரணமாய் ஆண்கள் சாமாசாரம். நமக்கு (பெண்களுக்கு) இப்படி ஜொல்லு விடுகிற மேட்டர் எல்லாம் இருக்காது என்பதை, வந்த பதிவுகளும் சொல்லியது. நேற்று மாலையில் பாட்டி அம்மா சொன்ன,கதைகள் நினைவுக்கு வர, ஏன் புது மாதிரி எழுதக்கூடாது என்று இரவு பன்னிரண்டு வரை தட்டிக் கொண்டு இருந்தேன்.

எப்படியோ தலைவரே, ஓ.கேனுட்டார். பினாத்தலார் வாழ்க, வாழ்க.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நல்லவேள....நான் போட்டீல கலந்துக்கல....தப்பிச்சேன். :-)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

Excellent flow! I was hoping you'll close the full circle - meaning back to "balya vivaham". Good luck in the contest!

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

கதை நல்லா வந்திருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள். கடைசி நாள் என்றைக்கு? நானும் முயற்சிக்கலாம்னு நினைச்சேன்

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நல்லா கால வித்தியாசங்களை (பெயர்கள் முதற்கொண்டு) காட்டியிருக்கீங்க. என்னதான் காலம் மாறினாலும், கவலைப்படறது அம்மா கண்டுக்காம இருக்கறது அப்பாங்கறீங்களா ;-)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. துளசி சொன்ன மாதிரி படிக்கும் போது பாலங்கள் ஞாபகம் வந்தது.

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

நல்லா இருக்கு உஷா,
// என்னதான் காலம் மாறினாலும், கவலைப்படறது அம்மா கண்டுக்காம இருக்கறது அப்பாங்கறீங்களா ;-) //
இதே தான் என் கேள்வியும் :) என்னவோ அப்பாக்களுக்குக் கவலையே இருக்காதுன்னு சொல்லிட்டீங்க :)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

ராகவா, ராம் ரவிந்தர், வெங்கட்ரமணி, WA, பொன்ஸ், தாணு அனைவருக்கும் நன்றி.

தாணு, நிலா! இன்னும் நாள் இருக்கே, சீக்கிரம் எழுதுங்க.

ராம்ரவிந்தர், அதேதான் அதனாலேயே 1925 இல் ஆரம்பித்து 2025ல் முடித்தேன்.

வெங்கட்ரமணி, பொன்ஸ், மொதுவாய் மகளைக் குறித்த தவிப்புகள் அப்பாக்களுக்கு என்றுமே புரியாது :-)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

// G.Ragavan said...
நல்லவேள....நான் போட்டீல கலந்துக்கல....தப்பிச்சேன். :-)//


நான் போட்டியில கலந்து கொள்ளாததால் உஷா தப்பிச்சாங்க ராகவா..

எப்போதுமே நான் விட்டுக்கொடுத்திடுவேன்..
:)

 
At Tuesday, 13 June, 2006, சொல்வது...

ராகவா, நிலவு நண்பனே! நான் மட்டும் அல்ல, தமிழ் இணைய உலகமே உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இம்முறை போட்டி பயங்கரமாய் சூடு பிடித்துள்ளது. இதுவரை எழுதியதிலேயே ஆளு ஆளுக்கு எதுக்கு ஓட்டுப் போடுவது என்று மண்டையை பிய்த்துக் கொண்டு
இருக்கிறார்கள். போதாதற்க்கு நிலாவும், தாணுவும் கோதாவில் குதிக்கப் போவதாய் சொல்லியாகிவிட்டது. முடிவு தேதி நெருங்க,
நெருங்க இன்னும் பதிவுகள் வரத் தொடங்கும். அதனால,நீங்க இரண்டு பேரூம் உங்க சூப்பர் பதிவுகள் போடாமல் இருப்பதே நீங்கள் செய்யும் உத்தமமான காரியம் :-)

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

எல்லோரும் இப்படி அடிச்சு ஆடுறிங்க. பேசாம வெளியிலே இருந்து வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான் போல!!!

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

// ramachandranusha said...
ராகவா, நிலவு நண்பனே! நான் மட்டும் அல்ல, தமிழ் இணைய உலகமே உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இம்முறை போட்டி பயங்கரமாய் சூடு பிடித்துள்ளது. இதுவரை எழுதியதிலேயே ஆளு ஆளுக்கு எதுக்கு ஓட்டுப் போடுவது என்று மண்டையை பிய்த்துக் கொண்டு
இருக்கிறார்கள். போதாதற்க்கு நிலாவும், தாணுவும் கோதாவில் குதிக்கப் போவதாய் சொல்லியாகிவிட்டது. முடிவு தேதி நெருங்க,
நெருங்க இன்னும் பதிவுகள் வரத் தொடங்கும். அதனால,நீங்க இரண்டு பேரூம் உங்க சூப்பர் பதிவுகள் போடாமல் இருப்பதே நீங்கள் செய்யும் உத்தமமான காரியம் :-) //

அடடே! ரொம்ப சூடு பிடிச்சிருச்சி போல போட்டி.....அப்ப நைசா அப்படியே நீங்க குடுத்த நன்றிகள வாங்கிக்கிட்டு உத்தமாமா ஒதுங்கிக்கிறதுதான் நல்லது. நிலவு நண்பா, நமக்கு இந்தப் போட்டீல நன்றிகள் நெறைய கெடைச்சிருக்கு. :-)

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

அப்பிடி போடு அருவாள...ரொம்ப நல்லாயிருக்கு...உஷா வாழ்த்துக்கள்...

நானும் இப்போதான் ஒரு பதிவு போட்டிருக்கேன்....
இன்னாங்கடா டேய்..இந்த முறையும் கவுத்திருவீங்க போல இருக்கே...சொக்கா சொக்கா...ஒன்னா ரெண்டா....ஆயிரம் பொற்காசுகள்.....

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

கே.வி.ஆர், டுபுக்கு மிக்க நன்றி.

இங்கு பாராட்டிய அனைவரும் தேன்கூட்டு பதிவுகள் திரட்டிக்கு சென்று மறக்காம ஓட்டும் போட்டுடுங்க. இங்கத்தாங்க,
http://www.thenkoodu.com/

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

ஒவ்வொரு கால கட்டத்தையும் மிக தத்ரூபமாக படம் பிடித்துக் கொடுத்திருக்கிறீர்கள்!
வெற்றி பெற வாழ்த்துகள்!

 
At Wednesday, 14 June, 2006, சொல்வது...

நன்றி எஸ்.கே

 
At Thursday, 15 June, 2006, சொல்வது...

வித்தியாசமான முயற்சி.. வழக்கம் போல நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..

 
At Friday, 16 June, 2006, சொல்வது...

கதை பிரம்மாவுக்கு, இந்த படைப்பு நல்லது, அது சொத்தன்னு எதுவும் சொல்ல முடியுமா? எல்லாம் கதை எழுதுறாங்களேன்னு நானும் ஒன்னை எழுதிப் போட்டேன், எதுக்கு வெளிகண்டா உனக்கு இந்த வம்புன்னு, உங்க கதையை படிச்சோன, உள் மனசு இப்ப சொல்லுது-:)

 
At Friday, 16 June, 2006, சொல்வது...

கதையிலும்,கதைக்கான தலைப்பிலும்
தனித் தன்மையுடன் உஷா தெரிகிறார்!! :)

வாழ்த்துகள் உஷா..!

 
At Friday, 16 June, 2006, சொல்வது...

+ குத்திட்டேன். மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

 
At Saturday, 17 June, 2006, சொல்வது...

மனதின் ஓசை, மீனா, கெ.பி ( சுருக்கிட்டேன்) நன்றி. கெ.பி +எங்க குத்துனீங்க?
இன்னும் தேர்தல் ஆரம்பிக்கவில்லை, இங்க என் பதிவில் வாசகர் பரிந்துரை + - கிடையாதே!

வெளிகண்டரே, இந்த பிரம்மா சரஸ்வதி பட்டம் எல்லாம் வேண்டாங்க. இவைகளில் கொஞ்சம்
ஒவ்வாமையே இருக்கு, அதுக்குமேலே, பட்டம் சூட்டிக் கொண்டவர்களை எவ்வளவு கேலி செய்திருக்கிறோம் என்ற நினைப்பு+ பயமும் வருது
இப்ப கதைகளை அலச வேண்டுமா என்று தோன்றுகிறது. உங்க கதையின் விமர்சனத்தை தனிமடலில்
சொல்லட்டா?

 
At Saturday, 17 June, 2006, சொல்வது...

ஏங்க தேன் கூட்டுல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை/வாய்ப்பு உள்ளதா?

இப்படிக்கு,
அப்பாவி பொது ஜனம்.

 
At Saturday, 17 June, 2006, சொல்வது...

உங்கள் படைப்பு அருமையாக இருக்கிறது உஷா அவர்களே!

(போட்டி சூடு பிடித்துதான் உள்ளது. இந்த நிமிடம் வரை உங்களோடு சேர்த்து 22 பேர் களத்தில் குதித்துள்ளோம்)

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

ஆப்பரேஷன் சக்ஸஸ்.........
வளர் சிதை மாற்றமா?

 
At Monday, 19 June, 2006, சொல்வது...

சிவஞானம்ஜி, ஆபரேஷன் சக்சஸ், ஆனா பேஷண்ட் டெட்ன்னு ஆக்கிடாதீங்க, அப்படியே ஓட்டும் போட்டுடுங்க :-)

சிபி, சொல்ல முடியாது, வளர்சதை மாற்றம் வெல்ல வாய்ப்புகள் இருக்கின்றன

 
At Tuesday, 20 June, 2006, சொல்வது...

உஷா. நான் சாதாரணமாகவே போட்டிக்கதை, கவிதைகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த முறை உங்களைப் போன்றவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்து நான் போட்டியில் கலந்துகொள்ளவில்லையே என்று இன்னும் அதிகம் மகிழ்கிறேன். இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் எத்தனை பேர் இதில் எழுதப் போகிறார்கள் என்று நினைத்தது உண்மை. ஆனால் போட்டிக்கு வந்திருக்கும் இடுகைகளைப் பார்க்கும் போதும் அவை எவ்வளவு நன்றாக இருக்கின்றன என்று பார்க்கும் போதும் இந்தத் தலைப்பு நம் மக்களின் கற்பனையை எப்படித் தூண்டிவிட்டிருக்கிறது என்று நன்றாகப் புரிகிறது. :-)

இப்ப உங்க இடுகையைப் பத்தி... ஒவ்வொரு காலகட்டத்தைப் பற்றியும் நீங்கள் அழகாக எழுதியிருந்தாலும் 2025களில் என்று வருங்காலத்தைப் பற்றிய கற்பனையில் எழுதியிருக்கிறீர்களே, அது தான் எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு தலைமுறையிலும் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகளைத் தாயின் பார்வையிலிருந்து மிக நன்றாகக் கொடுத்திருக்கிறீர்கள். மிக நல்ல பதிவு.

 
At Tuesday, 20 June, 2006, சொல்வது...

குமரன், அம்மாவுக்கு மகளின் மீதான கவலை, பரிதவிப்பு, ஆதங்கம் போன்றவைகள் அதிகம்தான்.
பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தி காதில் விழுந்ததும், சந்தோஷத்தை மீறி ஒரு துக்கம் வரும்.
அதே போல, பெண் பெரியவள் ஆனாள் என்ற செய்தியும், மனதில் துக்கத்தையே தரும். தன் பெண் அழகு என்று யாராவது சொன்னால், சந்தோஷத்தை மிஞ்சி, மனதில் ஓரத்தில் திக் என்ற உணர்வு வரும். மகன் வளர்ந்து விட்டான் என்பது பெருமை, மகளின் வளர்ச்சி தாய்க்கு உள்ளூர பயத்தையே தரும். இதனால் வரும் புலம்பல்களை வழக்கமாய் எல்லா தாய்களிடமும் பார்க்கலாம்.
தந்தைகளுக்கு பொறுப்பு இருந்தாலும், வெளி காட்டிக் கொள்ள மாட்டார்கள். இந்த தாயின் பயம் அவர்களுக்கு பொதுவாய் புரியாது. இந்த வரிகளை வீட்டுல சொல்லி, சரி பாருங்க :-)

குமரன், பரிசு கிடைக்கும் மகிழ்ச்சியை உங்களைப் போன்றோர் போட்ட விரிவான விமர்சனம் தந்துவிட்டது. மீண்டும் நன்றி

 
At Wednesday, 21 June, 2006, சொல்வது...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

தமிழ் அட் தமிழா, யாத்ரீகன் பாராட்டுக்கு நன்றி.

யாத்ரீகன், படித்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்.

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

உஷாஜி,

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
ஆசாத்

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

போட்டியில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

2வது பரிசுக்கு வாழ்த்துக்கள்.

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா :)

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

முதல் வாழ்த்து சொன்ன ஆசாத்துக்கும், தமிழா அட் தமிழ், மனதின் ஓசை, நன்மனம், பொன்ஸ் நன்றி, நன்றி நன்றி

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

மனமார்ந்த வாழ்த்துக்கள் உஷா மேடம் :)

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா மேடம்

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

இப்பதான் படிச்சேன் !
ரொம்ப நல்லாயிருக்கு...உஷா வாழ்த்துக்கள்...

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

2-ம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...நெக்ஸ் டைம் முதல் பரிசு வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

 
At Monday, 26 June, 2006, சொல்வது...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.... இந்த கதைக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு தலைமுறை இடைவெளியுள்ளது... :-) இந்த கதையில் 1975ல் கல்லூரி படிக்க கிளம்பினார்கள் எங்க வீட்டில் பெண்கள் 1995ல் தான் கல்லூரிக்கு கிளம்பினார்கள் இத்தனைக்கும் எங்கள் சொந்தங்களில் கல்லூரிக்கு கிளம்பிய முதல் தலைமுறை எங்கள் அக்கா தங்கைகள், ம்... மற்றவர்கள் அனைவரும் கல்லூரிக்கு போக எத்தனை தலைமுறையோ?!

 
At Tuesday, 27 June, 2006, சொல்வது...

அருட்பெருங்கோ, ரவியா,அருள்குமார், நாமக்கல் சிபி,ஷியாம், குழலி வாழ்த்துகளுக்கு நன்றி.

குழலி, எங்கள் வீடுகளில் சென்னை என்பதால் பத்துவருடம் முன்னால் பெண்கள் கல்லூரிக்குப் போனார்கள். ஆனால் இந்த தலைமுறைதான் பையன்களும், பெண்களும் பி.ஈ படிக்கிறார்கள். மருத்துவமும், ஐ.ஐ.டிகளும் இன்னும் எட்டா கனவாய் உள்ளது.
என் கணவர் பி.ஈ மெக்கானிகல், என் தம்பியும் அதே. பிறகு அவன் ஐ.ஐ.எம் கல்கத்தாவில் எம்.பி.ஏ படித்தான். ஐ.ஐ.எம் பட்டியலில் இன்று வரை அவனே முதலும் கடைசியுமாய் இருக்கிறான். எனக்கு கல்யாணம் ஆகும்பொழுது, எங்கப்பா
பி.ஈ மாப்பிள்ளையாய் தேடினார். சமுகத்திலேயே ஐந்தாறு, பி.ஈ க்கள்தான் :-)

 

Post a Comment

<< இல்லம்